மனசு…உஷாதீபன் சிறுகதை=பாலமுருகன் லோகநாதன் விமர்சனம்––----------------------------------------
ஜனரஞ்சகமான ஒரு சிறுகதைகளில் இதுவும் ஒன்று என்று கூறினால் அஃது மிகையாகாது. குறிப்பாக ஏன் இந்த கதையானது என்னை நெகிழவைத்தது என்றால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பரவலாகத் தமிழகத்தில் வறட்சி நிலவிய சமயத்தில் பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் மேனுவல் பம்பு செட்டு வைத்திருப்பார். தினமும், அல்லது ஒரு நாள் விட்டு மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் கார்பொரேசனிலிருந்து குடிப்பதற்குப் புழங்குவதற்குக் குழாயின் மூலம் தண்ணீர் விடுவார்கள். அப்போது மேனுவல் பம்பு செட்டை கார்பொரேசன் குழாயிலிருந்து வரும் தண்ணீருடன் இணைத்து மேனுவல் பம்பு செட்டு மூலம் தண்ணீர் அடித்து வீட்டிற்குக் கொண்டு செல்வோம். சில சமயங்களில் அடித்தளத்திலிருந்து மேல் தளத்திற்கு இத்தண்ணீரைக் கையில் கொண்டுசெல்வது வழக்கம். அல்லது இங்கு எழுத்தாளர் கூறியமாதிரி ஊருக்கு இரண்டு மூன்று பொது மேனுவல் பம்பு செட்டு இருக்கும். அங்கு மிதிவண்டியில் இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு போவது வழக்கம். ஒன்று இடப்புறமாகவும் மற்றொன்று வலதுபுறமாகவும் மிதிவண்டியில் தொங்கவிட்டுக்கொண்டு போய் தண்ணீர் எடுத்துவருவது வழக்கமாக வைத்திருந்தோம். மீண்டும் இந்த கதைநின் வாயிலாக எழுத்தாளர் அதை நினைவூட்டுகிறார். இதையே ஆசிரியர் இங்கு மறுபடியும் நம் கண்முன் கொண்டுவந்திருப்பார்.
இங்கு இந்த கதையிலும் கதையின் நாயகன் தண்ணீருக்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான் என்பதை விரிவாக எடுத்துக்கூறியிருப்பார் ஆசிரியர் திரு உஷாதீபன் அவர்கள். இவர் இங்குப் பதிவு செய்த மாதிரி எனது ஊரிலும் ஆற்றங்கரையை ஒட்டி ஒரு பொது கார்பொரேசன் குழாய் மேனுவல் பம்பு செட்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளிலோ அல்லது குறிப்பிட்ட நேரத்திலோ அங்கு கார்பொரேசனிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் அனைவரும் அங்குக் குடங்களுடன் சென்று வரிசை வரிசையாக நின்று ஒருவர் பின் ஒருவராக தங்களது குடங்களை நிரப்பிச்செல்வது வழக்கம். மேலும் ஆசிரியர் இங்குப் பதிந்த மாதிரி சவக்காடு ஒன்றும் இருந்தது அஃது படித்துறைக்கு ஒட்டின மாதிரிதான் அமைந்திருந்தது. நாம் அந்த சவக்காட்டைத் தாண்டி தான் தண்ணீர் எடுக்கச் செல்வேண்டும்.
பெரும்பாலும் அவரவர் குடங்களுக்கு, அவரவர் தண்ணீர் அடித்துக்கொண்டு செல்வது வழக்கம். வயதில் முதிர்ந்தவர்கள், முடியாதவர்களுக்கு வருமர போது. அங்கு ஒரு சிலர் இருப்பார்கள் அவர்ஙள் குடங்களை வாங்கி தண்ணீர் நிரப்பித்தருவர். ஆனால் அதற்கு அவர்கள் காசு கேட்டு வாங்கிக்கொள்வர். இதையும் எழுத்தாளர் அழகாகப் பதிவு செய்திருப்பார்.
ஒரு சில இடத்தில் மற்ற இடங்களைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று ரூபாய் அதிகமாக ஒரு குடம் தண்ணீருக்குக் கேட்பர். உடனே குடம் வைத்திருப்பவர் தண்ணீர் அடித்து கொடுப்பவரிடம் அங்கெல்லாம் ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய் தான். நீங்கள் என்னவென்றால் ஒரு குடத்திற்கு மூன்று ரூபாய் கேட்கிறீர்களே என்று கூறுவர். அதன் பிறகு சிறிது தூரமானால், அதைப் பொருட்படுத்தாமல் ஒரு ரூபாய்க்குத் தண்ணீர் அடித்துத் தருகிறவர்களிடம் செல்வர். ஏனென்றால் நம் மனதில் இவர் நம்மை ஏமாற்றுகிறார் என்று நாம் எண்ணுவதால் தான் இப்படிச் செய்கிறோம்.
ஆழமாகச் சிந்தித்தால் நமக்கு ஒன்று விளங்கும், ஏன் அவர்கள் நமக்குத் தண்ணீர் அடித்துத் தரவேண்டும். ஒன்று அவர்களுக்குக் காசு தட்டுப்பாடு இருக்கும், இல்லையென்றால் அவர் அதையே ஒரு வேலையாக எடுத்துச் செய்து அதன் மூலம் வரும் ரூபாயை வைத்து தினமும் தன் வயிற்றுப் பசியை போக்கிக்கொள்வர். அதுவும் இல்லையேல் அவரது குடும்பத்தில் யாரேனும் உடல் நலம் குன்றி இருப்பார்கள், அவர்களுக்கு மாத்திரை மருந்து செலவுக்கு என்று எண்ணற்ற காரணங்கள் இருக்கக் கூடும்.
கதையாசிரியர் அருமையாக முடித்திருப்பார், நம்மை ஒருவர் ஏமாற்றுகிறார் என்று நினைத்திருந்த தறுவாயில். நம்மை நன்றாக அறிந்தவர் நம்மிடம் வந்து இல்லை அவள் உங்களை ஏமாற்றவில்லை என்று கூறி அவள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைக்கும்போது நமக்கு அதிகமாக விளங்கும், இங்கு நாயகனின் மனைவி தன் கணவனிடம் அந்த அனைவருக்கும் தண்ணீர் அடித்துக்கொடுக்கும் பெண்ணைப் பற்றி எடுத்துக் கூறுகிறாள். உண்மையில் அவளது வீட்டில் இயலாமை அதனால்தான் அவள் உங்களிடம் சற்று அதிகமாக ரூபாய் கேட்டுள்ளாள் மற்றும் உடல் நலம் குன்றி கணவன் இருபதால் அவள் அப்படிச் செய்திருப்பாள் என்று எடுத்துரைக்கும் போது. நாம் கூட தண்ணீர் அடிக்க முடியும் ஆனால் நாம் அதைச் செய்வதில்லை ஏன்? நமக்கு முடியவில்லை என்பதால்தான் நாம் மற்றவர்களைத் தண்ணீர் அடித்துத் தரச்சொல்கிறோம். அப்படியானால் தண்ணீர் அடித்துக் கொடுப்பவர் கேட்கும் ரூபாயை நாம் கொடுக்கத்தான் வேண்டும். இதைச் செய்வதனால் நாம் அவர்களுக்கு உதவி செய்த மாதிரி இருக்கும். இந்த உலகைவிட்டு போகும் போது நாம் என்ன கொண்டு செல்லப் போகிறோம். அதனால் முடிந்தவரைப் பிறருக்கு உதவினாலே நம்மைச் சார்ந்த சந்ததிகள் நன்றாக இருப்பார்கள். இந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மீதம் பிடித்து நாம் என்ன மாட மாளிகைகளைக் கட்டிவிடப் போகிறோம்! என்று நாயகனின் மனைவி நாயகனிடம் கூறும்படி கதைக்களத்தை அமைத்திருப்பார் எழுத்தாளர். சில சமயங்களில் நாம் எடுக்கின்ற முடிவுகளைப் பற்றி,அடுத்தவர் நம்மிடம் இதை இப்படிக்கூடப் பார்க்கலாம் என்று எடுத்துக் கூறும் போது! நமக்கு அதில் புதைந்திருக்கும் உண்மை வெளிப்படும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் எழுத்தாளர் திரு உஷாதீபன் அவர்களுக்கு உரித்தாகட்டும்.
-பாலமுருகன்.லோ-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக