02 மார்ச் 2024


இடம்  - சிறுகதை  - தாய் வீடு இணைய இதழ் - மார்ச் 2024

 





      “தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் அங்கே வீடுகள் இருந்தன. அப்படித்    தனித்தனியாக ஒற்றையாக அவை நிற்பது அவனுக்குள் திகிலை ஏற்படுத்தியது. தொலை தூரத்தில் ஒரு மாடு மேய்வதுபோல் தெரிந்தது. இன்னும் சற்றுத் தள்ளி ஒன்றிரண்டு ஆடுகள் படலங்களாய்...மேய்ப்பன் எங்கே என்று அவன் கண்கள் தேடின.

      வீடுகளுக்கு அப்பால் பரந்து விரிந்து கிடந்தது ஒரு பெருங்கரடு. இன்னொரு பக்கம் அடர்ந்து தொடர் கொண்ட ஒரு மலை. கீழே வெவ்வேறு விதமான வடிவங்களில் வீடுகள். தனித்த ஆளரவமற்ற ஒற்றை வீடுகள். ஊய் ஊய் என்று காற்று மோதி மோதித் திரும்பும் வெளி. சுற்றிலும் பாதைகளற்று கருவேலையும், முட்செடிகளும், புதர்களும், மண்டிக் கிடக்க அவைகளுக்கு நடுவே நடந்து கடப்பது சிரமமாயிருந்தது. முக்கிய தார்ச் சாலையிலிருந்து வெகு உள்ளே தள்ளித் தள்ளித் தனித்து இருந்தன அவ்வீடுகள். பகலில் வெளிச்சத்தோடு வந்தால்தான்! இரவினில் இறங்க வேண்டிய இடம் இல்லை அது. வீடுகளுக்கான வண்ணம் அங்கே வெள்ளையாகவே இருந்தது. சிலவை பூச்சுக்களுக்காகக் காத்திருந்தன. முழுமையானது எதுவும் இருக்குமா என்று அவன் கண்கள் தேட ஆரம்பித்தன.

      எந்தச் சத்தமுமின்றி அந்த மலைகளுக்கு அடிமையாய்க் கிடக்கும் வீடுகள். அவை அவற்றை அமுக்கிப் பிடித்திருப்பதுபோல் நினைத்துக் கொண்டான். மலையின் பக்கவாட்டிலிருந்து ஒரு பெரிய கை தோன்றி அப்படியே அந்த வீடுகளை அடியோடு பெயர்த்து எடுத்துத் தள்ளித் தள்ளி வைத்திருப்பது போல் தோன்றியது அவனுக்கு.

      உச்சியில் துருத்திக் கொண்டிருக்கும் ஒரு பெரும் பாறை கீழே உருண்டால் எந்த வீடு அல்லது வீடுகள் துவம்சமாகும் என்று அவன் கண்கள் தேட ஆரம்பித்தன. அந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு அந்த மலையே தெய்வம். வெளியே வந்து இரு கைகளையும் பரந்து நீட்டி அவைகளை கண்மூடி வணங்கினால் போதும். பின் புறமிருந்து இரு மலைகளுக்கும் நடுவே நுழையும் காற்று ஒன்று குவிந்து அவ்வீடுகளைத் தாக்குவதாய்த் தோன்றியது.

      வந்ததிலிருந்து அந்தத் தனித்த வீடுகளின் இருப்பு பெருத்த மனத் தொந்தரவுக்கு அவனை ஆளாக்கியிருப்பதாய் உணர்ந்தான். உடன் வந்த மனைவியிடம் அவன் அதைச் சொன்னபோது அவள் அதை எப்படிப் புரிந்து கொண்டாள் என்பதை அவனால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. தான் மட்டும் தனியே வந்திருக்கலாம் என்று தோன்றியது.

               அவர்கள் பேருந்தை விட்டு இறங்கிய இடத்திலிருந்து அந்த இடத்திற்குப் பாதைகள் இல்லை. குறிப்பிட்டு இந்த இடம் என்று தெரியாமல்தான் இறங்கினார்கள். சாலைக்கு இத்தனை தூரத்தில் அங்கே எப்படி வீடுகள் அமைந்தன என்று வியப்பாய் இருந்தது. மலைக்கு அந்தப் புறத்தில் ஒரு கிராமம் இருப்பதாய்ச் சொன்னார்கள். ஒரு வேளை வழி அங்கிருந்து தோன்றியிருக்குமோ  என்பதாகச் சந்தேகம் வந்தது.             

      இப்போது அங்கங்கே கற்கள் பதித்திருப்பது தெரிந்தது. அவற்றில் எண்கள் இடப்பட்டிருந்தன. சிவப்பும் வெள்ளையுமாய் பெயின்ட் பூசி, கறுப்பில் எண்கள். தன் சட்டைப் பையிலிருந்து அந்த வரைபடத்தை எடுத்தான் அவன். எதுவுமே புரியாமல்  இருந்தது. ஊன்றியிருக்கும் கற்களை, அந்த இடத்தை அதில் தேடினான். இதெல்லாம் உரிமையுள்ளவர்கள் வந்து காண்பிக்க வேண்டியது என்று சலித்தது மனம்.

      இப்படி ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டால் எப்படியிருக்கும் என்று நினைத்தான். அதை அவளிடம் சொன்னபோது பதிலுக்கு அவள் ஏதோ மந்திரத்தை உச்சரிப்பது தெரிந்தது.      

      வெயில் தாழக் கிளம்பியது. அந்த இடத்திற்கு வந்து சேரவே பொழுது சாய்ந்து விட்டது. யாரும் இருக்கிறார்களா  இல்லையா என்று அறிய முடியாத வீடுகள். அவர்களோடு இடம் வாங்கிய ஒருவர் அங்கு வீடு கட்டிக் குடியிருப்பதாகக் கேள்வி. தனித்த  வீடுகள் இருக்கும் சூழலே அச்சமூட்டுவதாக இருக்கும்போது அவர் எப்போது வந்திருக்கக் கூடும் என்று அவன் நினைக்க ஆரம்பித்தான். எந்த வீடு அவருடையதாக இருக்கும்? அவரே அங்கிருந்து அடையாளம் கண்டு அழைத்தால்தான் உண்டு. அப்படி அழைத்தால் அவர் வீட்டை அடைவது எப்படி என்பதற்கும் அவரே வழி சொன்னால்தான் முடியும் என்று நினைத்துக் கொண்டான்.

               நீங்க கவலைப் படாதீங்கநா பார்த்துக்கிறேன் எடத்தை…”-என்றோ அவர் சொன்னது இன்று அவருக்கு ஞாபகம் இருக்கக் கூடுமா சொல்ல முடியாது. நம்மையே மறந்தும் கூட இருக்கலாம். அப்படியே கண்டாலும் அவர் தனித்திருக்கும் அந்த வீட்டுக்குள் போகலாமா என்று சிந்தனை போனது அவனுக்கு. மர்ம முடிச்சுகளாய் நிற்கும் வீடுகள். அந்தத் தனித்த வீடுகளெல்லாம் திடீரென்று ஒன்று சேர்ந்து கொள்வதுபோல் தோன்றியது.

      அவனின் பழைய வீடு தனித்த வீடு. அந்தப் பழைய வாழ்க்கை.

               என் முகத்துலயே முழிக்காத இனிமே…” விரட்டிவிட்ட தந்தை.

               ஏங்க இன்னைலர்ந்து கிச்சன்ல படுத்துப்பமே…”

               எது கிச்சன்லயா?”

               ஆமா, அங்கதான் குளுமையா இருக்கும்அந்த எடம் எனக்குப் பிடிச்சிருக்கு…”

      பக்கத்தில் படுத்திருந்தவள் நடுச்சாமத்தில் பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தாள்.

               திவ்யாதிவ்யாஏய் திவ்யா…”

               ஏய்; என்னத் தொந்தரவு செய்யாத, நா சிரிக்கணும்…”

               என்னது சிரிக்கணுமா? ஏய், என்ன உளர்றே?”

               “…போடா அந்தப் பக்கம்…”

      கதி கலங்கிப் போனான் அவன். பதட்டத்தில் எழுந்து லைட்டைப் போட்டான்.

      அட! என்னாச்சு? கரன்ட் போச்சா? மேலே காற்றாடி நின்றிருந்தது.

      உடம்பு வியர்த்தது. தலை கலைந்து பரத்தியிருந்தது திவ்யாவுக்கு. வாடிய மல்லிகைச் சரம் உதிரி உதிரியாய். என்ன வாசனை இது? அடச்சீ! அவளை ஒரு புரட்டுப் புரட்டினான்.

      குப்புறப் புரண்டவள் திரும்ப நிமிர்ந்து அவனைப் பிடித்தாள். அந்தக் கைகளின் இறுக்கம் அவனை அதிர வைத்தது. இருட்டுக்குள் அவள் முகத்தைத் தேடினான் அவன். பொட்டு வெளிச்சம் இல்லை. அவளை அப்படியே மடியில் எடுத்துப் போட்டுக் கொள்ள நினைத்து சம்மணமிட்டு அமர்ந்தான். அவள் கால்களை அணைத்துத் தூக்கப் போனான். புடவை மேல்வரை விலகியிருப்பது கண்டு இழுத்து விட்டான். அவள் பிடி இன்னும் தளராதது இவனை அச்சப்படுத்தியது. விசுவிசுவென்று அவளிடமிருந்து பெருமூச்சு.

      எழுந்தால்தான் தீப்பெட்டி  தேடலாம். விட்டால்தானே?

               திவ்யாஏய் திவ்யா…” – பதிலில்லை. இனம் புரியாத உளறல்கள் அவளிடமிருந்து.                    

      விடுபட்ட வாழ்க்கை. ஈடேறாத ஒருத்தி.

               நாம இப்போ வீடு கட்டினா தனியாத்தான் இருக்கணும்…”

      தனியான வீடுகள் அவனைத் தடுக்கின்றன.

               உங்களுக்குப் பிடிக்கலையா?”

      அவன் பதில் சொல்லவில்லை.

      அவன் அலுவலகம் சென்ற பிறகு அவள் தனியாய்த்தான் இருக்கிறாள். வாசல் கேட்டைப் பூட்டு, பிறகு திண்ணை கேட்டைப் பூட்டு என்பான். கொல்லைப்புறம் கிரில் கேட், உட்கதவு தனித்தனியாகப் பூட்டியிருக்கிறதா என்று பார்ப்பான். வியூவர் வைத்தான் உறால் கதவுக்கு. அது வழியே அவள் பார்க்க வேண்டுமாம். அது அவன் செலவு. வாடகை வீட்டுக்கு அவன் செய்த வசதி.

      தனிமை அவனை மருள வைத்ததுபோல் எண்ணி அவளுக்கும் அதுதான் என்று கவலை கொண்டான். தனித்த வீடுகள் அவனை விரட்டின. மனிதன் தனித்திருப்பதில்லை. பலரோடு உறவாடிக் கொண்டிருக்கிறான் மனதில். நான் தனியனில்லை. அவன் சொல்லிக் கொண்டான்.

               கிளம்பிட்டேன்நீ வீட்லதான இருக்க…” கேட்டுக் கொள்வான்.               அந்தத் தனித்த வீட்டின் ஒன்றிலிருந்து திவ்யா வருவதுபோல் தோன்றியது இவனுக்கு.

               நா இங்கதான் இருக்கேன்வாங்களேன்…”

               என்ன வேகமாப் போறீங்க…?”

      தன்னுணர்வு பெற்றான். திரும்பிப் பார்த்தான். அவள் தள்ளி வந்து கொண்டிருந்தாள். அப்பொழுதுதான்  கவனித்தான். காலிலும் செருப்பிலும் சகதி அப்பியிருந்தது.                                                                                                                                                              சீ! இது எப்படிப் பட்டது? அப்படியே நின்றான்.

               நா கூப்டுட்டே இருக்கன்நீங்கபாட்டுக்குப் போறீங்கஇங்க அடிக்கிற காத்துல கேட்கல போலிருக்குன்னுதான் கத்தினே…”

      கண்கள் எதையோ தேடின. “போதும் வா போவோம்…” அவன் திரும்பி நடந்தான்.

               எடம் பார்க்கலையா?” –ஏதுமறியாமல் கேட்டாள் அவள்.

               இங்கதான் ஏதோ ஒண்ணுவா போவோம்…”

      சாலையை ஒட்டியிருந்த ஓடையில் கை கால் முகம் கழுவிக் கொண்டான் அவன். சற்றுப் பொறுத்து வந்த பேருந்தில் ஏறிக் கொண்டார்கள் அவர்கள்.

      அவன் பார்வை அந்தத் தனித்த வீடுகளின் பக்கமே இருந்தது. அவை அவன் கூடவே வந்து கொண்டிருந்தன. நீண்ட வயல்களினூடே தூரம் விலக்கி நின்றாலும் பார்வையிலிருந்து அவை மறைய மறுத்தன.

      ஒரு ஒற்றைப் பனை தென்பட்டது அப்போது. குனிந்து அதன் உயரத்தை நோக்க முற்பட்டபோது அதன் நேர் கூற்றில் தனித்த அந்த வீடுஅதிலிருந்துதான் அவள் அழைத்தாள்.

      அவன் தன் மனைவியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்.

      பொது இடத்தில் அவனின் செய்கை அவளுக்கு வியப்பாயிருந்தது!!              

                                                            ---------------------------                                                                                                                                                                                                         

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

                                                       

 

 

 

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...