09 பிப்ரவரி 2024

 

சிறுகதை    -கணையாழி-பிரசுரம் பிப்ரவரி 2024                            

    “சாமி என்கிற பரசுராமன்“




            சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் – என்றான் அண்ணா சிவராமன்.

            அப்பா முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி.  தலை நிமிர்ந்து அண்ணாவை நோக்கினார்.

            அப்டியா? வா…வீட்டுக்குப் போகலாம்னு கூப்டியா? என்றார் ஆர்வமாக. ஊரிலேயே விட்டு வந்து விட்டோமே என்கிற உள்ளார்ந்த வருத்தம் அப்பாவுக்கு.

            சொல்ற நிலமைலயா அவர் இருந்தார்? தலை முகமெல்லாம் ஒரே புழுதி பறக்க அழுக்கு வேஷ்டியும் கிழிஞ்ச சட்டையுமா….பராரி மாதிரி அலைஞ்சிண்டிருந்தார்…எனக்கே முதல்ல அவரை அடையாளம் தெரில. கூர்ந்து பார்த்துத்தான் தெரிஞ்சிண்டேன். .என்னைக் கண்டவுடனே ஓட ஆரம்பிச்சிட்டார். ….விரட்டிப் பிடிக்க முடில என்னால அந்தக் கூட்டத்துல….

             என்னடா இப்டிச் சொல்றே? கண்ணுக்கு முன்னாடி வந்தும் கோட்டை விட்டுட்டு வந்து நிக்கிறியே? - கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்த  அப்பா மீண்டும்  சொன்னார்.  

            ஆள் எப்டியிருந்தா என்ன? கையை இறுக்கப் பிடிச்சி தரதரன்னு இழுத்திட்டு வர வேண்டிதானே? எவனாச்சும் போலீஸ்காரன் பிடிச்சிண்டு போனான்னா….? வெலங்கு மாட்டி தரதரன்னு இழுத்திண்டு போனான்னா…அது பரவால்லியா? அப்புறம் ஆளவே பார்க்க முடியாதேப்பா….!

            அவர்தான் என்னைப் பார்த்தவுடனேயே  விடுவிடுன்னு ஓடி …அலை பாயுற கூட்டத்துல மறைஞ்சே போயிட்டாரே….எத்தனை பேரை விலக்கிட்டு விலக்கிட்டு ஓடறது? சாமிண்ணா…சாமிண்ணான்னு நான் விரட்டிண்டே கூப்டதுகூட அவர் காதுல விழுந்ததா தெரில…என்னைப் பார்த்ததுமே பயந்து அலறியடிச்சு  ஓடுறார்…

            அப்பா அமைதி காத்தார். கண்ணுல பார்த்துட்டு இப்டி விட்டுட்டு வந்து நிக்கிறானே? என்று நினைத்தாரோ என்னவோ? அவருக்கு அப்படித்தான் தோன்றும். முதல் தாரத்துப் பிள்ளை சாமி என்கிற பரசுராமன் மேல் அத்தனை பற்று, பாசம். எங்களுக்கும்  அவர் மேல் அளவிலாப் பிரியமுண்டுதான். எல்லாம் காலக் கொடுமை!

            என்னடா சிவராமா சொல்றே நீ….? இந்த மெட்ராசுக்கு வந்த நாள்லேர்ந்து அவனைத் தேடிண்டிருக்கோம்…கண்ணாரப் பார்த்துட்டு விட்டுட்டு வந்து நிக்கிறியே…? யார்ட்டயாச்சும் உதவி கேட்டிருந்தாக் கூடப் பிடிச்சு நிறுத்தியிருப்பாங்களே? அதுக்குமா உனக்கு வாய் வரலை…?

            அதெல்லாம் என்னால செய்ய முடியாதுப்பா…அப்புறம் கூட்டம் கூடிடும். பெரிய களேபரமாயிடும். போலீஸ் வந்து நிப்பான். அவனுக்கு பதில் சொல்லியாகணும். அவன் நாம சொல்றதை நம்பணும்….இப்டி எவ்வளவோ இருக்கு…நம்ம வீடென்ன பீச்சிலேர்ந்து கொஞ்ச தூரத்துலயா இருக்கு…? அங்கேயிருந்து அவரக் கூடவே இழுத்திட்டு வந்து, எலெக்ட்ரிக் டிரெயின் ஏற்றி, இங்க மௌன்ட் ஸ்டேஷன் வரை வந்து, ஆதம்பாக்கத்துல நம்ம வீடு வரைக்கும் கூட்டி வரணும். எனக்கே இங்கே இன்னும் திக்கு திசை தெரியலை…பழகியாகலை…கம்முன்னு என் பின்னாடியே வந்தா அது ஒரு மாதிரிப் பிரச்னையில்லாமப் போயிடும்…இவர்தான் புத்தி சரியில்லாதவராச்சே…? திடீர்னு தோணித்துன்னா என் கையைக் கடிச்சிட்டுக் கூட விடுவிச்சிண்டு ஓடிடுவார்…என்ன செய்வார்னு யாருக்குத் தெரியும்?

            எல்லா சமயமுமா அப்டி இருக்கான். சரியா  இருக்கிற நேரமும் உண்டுதானே? நீ கூட்டிண்டு வர்ற நேரம் அப்டியிருந்தா நல்லதுதானே? ஊர்லேர்ந்து இங்கே வந்திருக்கான் பாரு? நமக்குத் தெரியாமப் போயிடுத்தே?

            அப்டீன்னா அவர் என்னைப் பார்த்ததும் ஓட மாட்டாருப்பா…சிவராமான்னு சொல்லிண்டு எனக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கிக் கொடேன்ம்பார். என்னைப் பார்த்தாலே  காசு கேட்பார்…இல்லண்ணா பசிக்குதும்பார்…மதுரைல எத்தன வாட்டி இப்டிப் பிடிச்சு அவரை இழுத்திண்டு வந்திருக்கேன். உங்களுக்குத் தெரியாதா? இன்னைக்குக் கைல அகப்படலேங்கிறேன்…தப்பிச்சில்ல ஓடறாரு….?

            அதற்குமேல் அப்பா ஒன்றும் பேசவில்லை. அமைதியாகிவிட்டார்.

            ந்தச் சென்னைக்குக் குடும்பத்தைக் கூட்டி வந்தே ஒரு மாதம் போலத்தான் ஆகிறது. நான் லாரியில் கொண்டு வந்து சேர்த்த வீட்டுச் சாமான்கள் பலவும் இன்னும் மூட்டை பிரிக்கப்படாமல்தான் கிடக்கின்றன. மதுரையில் வேலை பார்க்கும் நான் மெடிக்கல் லீவு போட்டு விட்டு இங்கு வந்திருந்தேன். எங்க எல்லாருக்குமே சென்னை புதுசுதான். எந்த எடத்துக்கு எப்படிப் போகணும், வரணும்னு இன்னும் பழக்கமாகாத நிலை.

            ரமணா…ஒத்த ஆளா இந்தச் சாமான்களையெல்லாம் மூட்டை கட்டி லாரில ஏத்திக் கொண்டு வந்து சேர்த்திருவியா? உனக்குத் துணை யாரும் இல்லையேப்பா….? என்று வருத்தப்பட்டார் அப்பா.

            அதெல்லாம் கவலப்படாதீங்க சாமி…நா இருக்கேன் அம்பிக்கு உதவி செய்ய…எல்லாம் பத்திரமா வந்து சேர்ந்திரும்…சந்தோஷமாப் போயிட்டு வாங்க…என்று நாயுடுதான் அனுப்பி வைத்தார். நாங்கள் மதுரையில் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரர்.  விகல்பமில்லாத மனுஷன். அடுத்தவர்களுக்கு உதவுவதற்கென்றே தன் காலத்தை அர்ப்பணித்தவர்.

            நீங்க இவ்வளவு சொல்றபோது எனக்கென்ன கவலை…சின்னப் பையனாச்சே…முடியுமான்னு யோசிச்சேன்….

            அவரென்ன சின்னப் பையன்கிறீங்க…வயசு முப்பதாகப் போவுது…காளை வயசு…கட்டான சைசு….லாரில அவர ஒத்தையாவா அனுப்புவேன்…நானும்தான் கூட வர்றேன்ல…? பெறவு என்ன பயம்?

            ஆஉறா….பரம சந்தோஷம்…நன்னா வாங்கோ….-என்று மகிழ்ச்சி தெரிவித்தார் அப்பா.

            துரையில் இருக்கும்வரை சாமியண்ணாவைக் காத்தவர் அவர்தான் என்றே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் கீழ நாலு வீடு, மேல நாலு வீடு என்றிருந்த அந்தக் காம்பவுண்டில் குடிபோயிருக்க முடியுமா? நாயுடு காம்பவுன்ட் என்றே அந்த இடத்திற்குப் பெயர்.

            எம்பையன் கொஞ்சம் புத்தி சரியில்லாதவன்…அவனும் எங்ககூடத்தான் இருக்கான்…இத நான் சொல்லாம மறைக்கக் கூடாதில்லையா? உங்களுக்கு இஷ்டம்னா விடுங்கோ…

            அதென்ன சாமி…அப்டிச் சொல்லிட்டீங்க…குறையில்லாத குடும்பம்தான் எது? அவர்பாட்டுக்கு இருந்திட்டுப் போறாரு….

            அதுக்கில்லே…ராத்திரில அவன்பாட்டுக்கு இஷ்டத்துக்குக் கத்துவான்….கூப்பாடு போடுவான்…உளறுவான்…இங்க குடியிருக்கிறவா பயப்படாம இருக்கணுமே…குழந்தைகள்லாம் இருக்கு…!  எல்லாரும் சேர்ந்து அப்ஜெக்ட்  பண்ணினான்னு வச்சிக்குங்கோ…அப்புறம் திரும்பவும் நான் டேரா தூக்கணும்…அதான் முதல்லயே சொல்லிடுவமேன்னு….எங்களுக்குத்தான் விதி…மத்தவாளுக்கு என்ன வந்தது?

            கொஞ்சம் யோசிக்கத்தான் செய்தார் நாயுடு.  பிறகு என்ன நினைத்தாரோ…பரவால்ல…வாங்க…பார்த்துக்கலாம்….இப்ப எங்க இருக்கீங்க…மேலப்பொன்னகரம் ஆறுலயா….வண்டி ஏற்பாடு பண்ணிருவமா…? சாமான்கள அள்ளிக் கொண்டாந்து போட்டுருவாங்க…ஒரு மணி நேரத்துல வேல முடிஞ்சி போயிடும்….-நாயுடுவின் உதவும் மனம் யாருக்கும் வராது. வாழ்க்கையில் சிக்கல்களையே அதிகமாய் எதிர் கொண்டவரோ என்னவோ…சகிப்புத்தன்மை கைவந்தவராய் இருந்தார.  இல்லையென்றால் வலிந்து கூட்டி ஏன் அவர் இந்தத் துயரத்தைச் சுமக்க வேண்டும்? முன் பின் தெரியாத ஒருவரிடம் ஏன் இத்தனை அன்பு பாராட்ட வேண்டும்? பொறுப்பு ஏற்க வேண்டும்? இரக்கச் சிந்தைதான்.

            ஆனால் ஒன்று இங்கே சொல்லியாக வேண்டும். அம்மாவுக்கும் நாயுடு சம்சாரத்துக்கும் மனசு ரொம்பவும் ஒன்றித்தான் போய்விட்டது. ரெண்டு பேரும் நெருக்கமாய் நின்று பேசிக்கொண்ட காட்சியைக் கண்டபோது ஏதோ சகோதரிகள் இருவர் வெகு நாள் கழித்துச் சந்தித்துக் கொண்டது போலிருந்தது. இந்தப் பக்கம்தான் குடியிருந்திருக்கீங்க…இத்தன நாள் தெரியாமப் போச்சே….என்று வருத்தப்பட்டார்கள்.

நாயுடம்மா அம்மாவின் இரு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்ததும், அங்கங்கே கண் கலங்கியதும்….அம்மாவோடு யார் பேச ஆரம்பித்தாலும் ஏன்தான் இப்படிக் கலங்கி நின்று சோக நிலைக்கு ஆளாகி விடுகிறார்களோ? பெண் ஜென்மமே இப்படிக் கஷ்டங்களையும், துன்பங்களையும், துயரங்களையும்அனுபவித்து  உள்வாங்கி ஜீரணித்து சமன் செய்யும் சக்திகள்தானோ?

            அந்த நாயுடம்மாவுக்கு இணக்கமான சமத்துவ குணம் அவர் கணவரான ஈஸ்வரப்பன் நாயுடுவுக்கும் அமைந்து போனதன் காரணம் புரிந்தது எங்களுக்கு.

            ஈஸ்வரக் கிருபை உங்களுக்கு நிறைய உண்டு…அதான் உங்களுக்கு அதே பேரான ஈஸ்வரப்பன்ங்கிறதை நாமகரணமா சூட்டியிருக்கா பெரியவா…உங்க சம்சாரம் பேரோ காந்தி…கேட்கவா வேணும் குண விசேஷத்துக்கு…-அப்பாவின் ஆசீர்வாதத்தில் நிறைந்து தளும்பினார் நாயுடு. உங்கள மாதிரிப் பெரியவங்க பக்கத்துல இருக்கணும்ங்கிறது என்னோட அடி மனசு விருப்பம். அது இப்ப நிறைவேறிப் போச்சு…என்றார்.

            நாயுடுவுக்குப் பிச்சாண்டி என்று ஒரு பையனும் உண்டு. படிப்பு வராத அவனுக்கு வீட்டு வாசலில் அவரே ஒரு லேத்துப் பட்டறை வச்சுக் கொடுத்திருந்தார். ஐ.டி.ஐ. படித்துவிட்டா அவன் இந்தத் தொழிலுக்கு வந்தான்? வெறும் அனுபவத்தினால் கிட்டிய பேறு. பல இடங்களில், பல பேரிடத்தில் வேலை பார்த்து உண்டான தொழில் அனுபவம், தனியே பட்டறை வைத்து ஓட்டும் அளவுக்கு அவனைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. வாய் பேசாது வேலையே கதி என்று அவர் இருப்பதே அவரை முன்னேற்றும் என்று பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

            வெளில வேலைக்குப் போகமாட்டேன்னு பிடியா நின்னுட்டான் சாமி…அதான் நானே இந்தக் கடையை வச்சுக் கொடுத்திட்டேன். பட்டறைச் சத்தம் உங்களுக்குத் தொந்தரவா இருக்குமே…பரவால்லியா? என்று கேட்டார் நாயுடு.

            பகல்லதானே? அதுபாட்டுக்கு அது நடக்கட்டும். நம்மள என்ன பண்றது? என்றுவிட்டார் அப்பா.  அங்கு வீடு கிடைத்ததில் அவருக்குள் அவ்வளவு திருப்தி.

            அங்கிருக்கும் வரை சாமியண்ணாவைப் பார்த்துக் கொண்டவர் அவர்தான் என்றே சொல்லியாக வேண்டும். எங்கெங்கோ ஊர் சுற்றிவிட்டு நடுஜாமத்துக்கு மேல் வீடு வந்து சேரும் சாமியண்ணாவுக்கு பொது கேட்டைத் திறந்து விடுபவர் நாயுடுதான். அங்கேதான் கயிற்றுக் கட்டிலில் படுத்திருப்பார் அவர்.

            சாமி…எங்க போய்ச் சுத்தியடிச்சிட்டு வாறீக…? காலா காலத்துல வீடு வந்து சேர மாட்டீகளா? அப்பன் ஆத்தா என்னமா தவிச்சிப் போறாகன்னு உங்களுக்குப் புரியலையா? இனிமே இப்டி வரக் கூடாது…அப்டி வந்தீக நாந்தான் இங்க படுத்திருக்கேன். உள்ளே விட மாட்டேன்…சொல்லிப்புட்டேன்… என்று உரிமையோடு கண்டித்தவர்…சாப்டீகளா…? என்று கேட்டு, காந்தீ…ஒரு தட்டு நிறைய மோர்ச் சோறு எடுத்திட்டு வா…தயிறு ஊத்திக் கொண்டா…என்று சொல்லி, சில நாட்கள் சாமியண்ணாவின் வயிற்றையும் நிரப்பி உறங்க வைத்திருக்கிறார் நாயுடு. தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு நோண்டி நோண்டிக் கேள்விகள் கேட்டுப் பேசிக் கொண்டேயிருப்பார். புத்தியைப் பேதலிக்க விடக் கூடாது என்று பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருப்பார்.

            கண்கண்ட தெய்வமாக இந்த உலகத்தில் பலர் அவ்வப்போது தென்படுவதுண்டு. அதை ஆய்ந்து உணர்ந்து கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு.

            இத்தனைக்கும் குடும்பம் மதுரையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த அன்று சாமியண்ணா எங்கிருக்கிறார் என்றே எங்களுக்குத் தெரியாமலிருந்தது. அவர் வீட்டை விட்டுப் போய் பல நாளாகியிருந்தது. யாரோ சொன்னார்கள்….கெங்குவார்பட்டி அருகே ஒரு சின்ன ஓட்டலுக்கு வண்டியிழுத்துத் தண்ணீா் கொண்டு கொட்டும் வேலையைச் செய்கிறார் என்று.    

            அவன் தலையெழுத்தைப் பார்த்தியா? எங்க போய் எப்படிச் சீரழியணும்னு எழுதியிருக்கு பார்? என்று அப்பா வேதனைப்பட்டார்.  பெரியகுளத்தில் ஒரு பெரிய ஓட்டலில் மாஸ்டர் வேலை பார்த்தவர்தான் சாமியண்ணா. அந்த ஓட்டல் முதலாளிக்கு சாமியண்ணா மேல் அவ்வளவு பிரியம். பரசுத் தம்பி…பரசுத் தம்பி என்று உயிரை விடுவார்.

            சாமி….பரசு எங்கயோ பயந்திட்டிருக்கார் போலிருக்கு. புத்தி பெரண்ட மாதிரி இருக்காரு….ஆர்டர் பண்ணாமயே எல்லாப் பண்டத்தையும் செஞ்சு வச்சிப்புடறாரு….தோசைக் குரூப்பியைக் கையிலெடுத்துக்கிட்டு எல்லாரையும் அடி க்கப் பாயுறாரு…திபு திபுன்னு விறகா எடுத்து அடுப்புல செருகி…சமையலறையே தீப்பத்திக்கும் போல ஆயிருச்சி….கைல கட்டியிருந்த கடிகாரத்தக் கழட்டி அடுப்புக்குள்ள போட்டுட்டாருன்னா பாருங்களேன்…அது அவரு சம்சாரம் வாங்கிக் கொடுத்ததாமே…அது எனக்கு வேணாம்னுட்டாரு…ஆளக் கௌப்பி இங்க கொண்டாந்து சேர்க்கிறதே பெரும்பாடாப் போச்சு…வர்ற வழிக்கு பஸ்ஸை விட்டு இறங்கி ஓடிட்டாரு. ஆளுக வெரட்டித்தான் பிடிச்சாங்க…வச்சு நல்லா வைத்தியம் பாருங்க…பரசுராமனுக்குப் பூரணமா சொஸ்தமானவுடனே சொல்லியனுப்புங்க…நானே வந்து மறுபடியும் கூட்டிட்டுப் போறேன்…எங்கடைக்கு பரசு மாதிரி ஒரு ஆள் எங்கயும் கிடைக்காது …என்னவோ காலக் கெரகம்….இப்படி ஆயிருச்சி….புள்ளைய நல்லா பத்திரமா பார்த்துக்கிடுங்க சாமி….என்று சொல்லிவிட்டு கொஞ்சம் பணத்தையும் அப்பா கையில் திணித்து விட்டுப் போனார் அந்த முதலாளி.

            இப்ப வேண்டாம்டா தனிக் குடித்தனம்…கொஞ்ச நாள் போகட்டும்…அந்தப் பொண்ணுக்கும் இந்த வீடு பழகட்டும்…பெறகு நானே கொண்டு குடித்தனம் வைக்கிறேன்…அதுவரை பொறு….என்றுதான் அப்பா சொன்னார்.

            கெட்ட நேரம்…எல்லோரையும் பிடித்து ஆட்டிற்று. போய்த்தான் தீருவேன் என்று ஒத்தைக் காலில் நின்றார் சாமியண்ணா. சரி…போ….என்று ஒற்றைச் சொல்லில் விடை கொடுத்தார் அப்பா.  விடை கொடுத்ததென்ன…சபித்தார்.   இனிமே என் மூஞ்சிலயே  முழிக்காதே…அப்டியே போயிடு….என்று வேறு கூடுதலாகக் குமுறினார். அந்தச் சாபம்தான் பலித்துவிட்டதோ என்னவோ?

            போய் மூன்று மாதத்திலேயே திரும்பி வந்தார் சாமியண்ணா. ஏதோ அநாச்சாரம் பிடித்த வீட்டுக்கு நன்றாய் விசாரிக்காமல் குடி போய், அங்கே இவரை ஆவியடித்து, பைத்தியமானார். பொம்பளப் பிசாசு என்றார்கள்.  அலறிப் புடைத்து  வீதியில் ஓடி,விரட்டிப் பிடித்த கதையெல்லாம் முடிந்து எங்கள் அண்ணி இனி இங்கே இருக்க மாட்டேன் என்று சொல்லாமல் கொள்ளாமல் சொந்த ஊர் தேடி ஓட,…அந்த முண்டை எனக்கு வேணாம்……அவ என் முன்னாடி வந்தா கழுத்த நெருச்சிக் கொன்னுப்புடுவேன்…என் கண்ணுலயே படப்படாது அவ…என்றெல்லாம் சாமியண்ணா கத்திக் குடியைக் கெடுத்ததும், அலறிப் புடைத்து ஆர்ப்பரித்ததும்…என்னென்னவோ வைத்தியமெல்லாம் பார்த்து வீட்டுப் பண்ட பாத்திரங்கள் அத்தனையும்  அடகுக் கடைக்கும் விற்பனைக்கும் போய்விட்டதும் எல்லாமும் முடிந்து இப்போதுதான் இந்த அளவுக்கேனும் எங்கள்  அண்ணா இருக்கிறார். சிவராமன் அண்ணா வேலைக்குப் போகத்தான் வீடு கொஞ்சம் தலை நிமிர்ந்தது. பிறகுதான் இப்போது இடப்பெயர்ச்சி.

ஒரு மலையாள வைத்தியரைக் கூட்டி வந்து தங்க வைத்து ரெண்டு மாசம் போல் வைத்தியம் பார்த்தது. அவர் பூஜை செய்யும்போது, அந்த நாளில் மட்டும் அமைதியாக இருப்பார். மற்ற நாட்களில் அவதாரம் எடுத்தது போல் ஆடுவார். அமாவாசை. பௌர்ணமிக்கு ரொம்பவும் உக்ரமாகத் திரிவார். வீட்டிலுள்ளோர் பயந்து சாக வேண்டியிருக்கும். ராத்திரித் தூக்கம் பாழாகும்.  அக்ரஉறாரமே கதி கலங்கும். கருப்பணசாமி கோயில் பூசாரி சங்கிலியைக் கூட்டி வந்து பூஜை போட வைத்து ஊரின் நான்கு எல்கைகளிலும் கோழி பலி கொடுத்து, சாமி வந்து ஆடி தாம்பாளத்தை வளைத்து என்னென்னவோ ஆர்ப்பாட்டமெல்லாம் நடந்து ஓய்ந்து விட்டதுதான். பலதும் சேர்த்து பலனானதோ அல்லது அதுவே பலவீனப்பட்டுப் போனதோ…இப்போதுதான் ஓரளவுக்கு அடங்கியிருக்கிறார் சாமியண்ணா. உடம்பும் சக்தியும் நலிந்து போனதுதான் மிச்சம். ஆனால் அந்தக் கால் சக்கரம்? அது நின்றால்தானே?

 அவ்வப்போது வீட்டை விட்டு ஓடிப் போக, பிறகு என்றாவது ஒரு நாள் அவராகவே வந்து நிற்க, பிறகு கொஞ்ச நாள் அடங்கிக் கிடக்க, அப்புறம் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது போய்விட….அப்பாவுக்கும் மனசு விரக்தியாகி, எங்களுக்கும் எல்லாமும் அலுத்துப் போய்…நாங்களும் எங்களின் அன்றாடங்களில் அமிழ்ந்து போக…வந்தால் வரட்டும்…போனால் போகட்டும் என்கிற கதையாகிப் போனார் பரசுராமன் என்கிற சாமியண்ணா.

நாயுடு வந்து மூன்று நாட்கள் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்து அவரை பீச்சுக்கெல்லாம் கூட்டிப் போய், வடபழனி, திருவல்லிக்கேணி,  மயிலை கபாலீஸ்வரர் என்று கோயில் கோயிலாய் அழைத்துப் போய் சாமி கும்பிட வைத்து மகிழ்வித்து பூரண திருப்தியோடு ஊர் திரும்பினார் நாயுடு.

எம் பையனுக்கு அரணா, காவலா இருந்தீங்க நீங்க…உங்க கூட இருந்தவரைக்கும் நான் நிம்மதியா இருந்தேன். இனிமே எப்படியோ…? என்று கண் கலங்கினார் அப்பா.

எந்த ஜென்மத்து பந்தமோ என்பதுபோல் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கண்கலங்கிப் பிரிந்தது பார்க்கும் எங்களை உலுக்கியெடுத்தது.

துரையிலிருந்து சென்னை குடிபெயர்ந்து போன வேளையில் ஆளேயில்லாமலிருந்த சாமியண்ணா, கரெக்டாக சென்னை வீட்டுக்குத் தேடி வந்து நின்றதுதான் எங்கள் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த ஒன்று. பொதுவாகப் புத்தி பேதலித்தவர்களுக்கு அது மிகவும் கூர்மையாக வேலை செய்யும் நேரங்களும் உண்டு என்று அறிந்து வைத்திருப்பது போல் எப்படிச் சென்னை வந்தார், எப்படி ஆதம்பாக்கத்திலுள்ள இந்த வீட்டைக் கண்டு பிடித்தார் என்பதுதான் எங்களால் நம்ப முடியாத ஆச்சரியமாய் இருந்தது. வீட்டிலுள்ளோர் பேசிக் கொள்ளும்போதெல்லாம் கேட்டுக் கேட்டு அது மனதில் பதிந்து போயிருக்குமோ? அந்தக் காலத்தில் வீட்டை விட்டு ஓடி டெல்லி. பாம்பே, கல்கத்தா என்று சுற்றியவர்தானே? இந்தச் சென்னை அவருக்குக் கொசுறு!

அதெல்லாம் கண்டு பிடிச்சிடுவான். அவனுக்கா தெரியாது? கில்லாடியாச்சே அவன்…! என்று அப்பாகூடப் பெருமைப்பட்டுக் கொண்டார்தான். அதுவே அவர் அண்ணாமேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை உணர்த்தியது எங்களுக்கு.

இன்றுவரை அவர் எப்படிச் சென்னை வந்தார், காசு ஏது, திருட்டு ரயில் ஏறி வந்தாரா? இந்த வீட்டை எப்படிக் கண்டு பிடித்தார்? முகவரி எப்படிக் கிடைத்தது? என்று எதுவுமே தெரியாது எங்களுக்கு. ஆனால் வந்து விட்டார்.

சாமி…எங்கேடா போனே? கெங்குவார்பட்டில ஓட்டல்ல வேலை பார்த்தியா? தண்ணி எடுத்து விட்டியா? வத்தலக்குண்டுல சித்தப்பாவைப் போய்ப் பார்த்தியா? அங்க சாப்டியா? அவாத்துல தங்கியிருந்தியா? பெறகு எப்டி மதுரை வந்தே? நாங்க இங்க வந்துட்டோம்ங்கிறது உனக்கு எப்படித் தெரிஞ்சிது? நாயுடு சொன்னாரா? அவர்தான் ரயில் ஏத்தி விட்டாரா? பணம் கொடுத்தாரா?  எதாவது சொல்லேண்டா? வாயுல என்ன வச்சிருக்கே…? நான் கேட்குறது ஏதாச்சும் உன் மண்டைல ஏறுதா இல்லியா? எங்க போய் இந்த அநாச்சாரத்த வாங்கிண்டு வந்தே? எல்லாம் என்னோட முன் ஜென்ம வினை…உன்னச் சொல்லிக் குத்தமில்லே…பெற்றோர் செய்த பாவம்…பிள்ளைகள் தலையில்னுவா…அதுதான் அரங்கேறிண்டிருக்கு இங்கே…பாவி…பாவி…இந்த வீட்டோட நிம்மதியைக் கெடுத்திட்டியேடா படுபாவி…!   எல்லாரோட சந்தோஷமும் பறி போயிடுத்தேடா உன்னால…நீ நன்னாயிருப்பியா…நரகத்துக்குத்தான் போவே…அநியாயமா இந்தக் குடும்ப நிம்மதி நாசமாப் போச்சேடா உன்னால…ஒரு பெண்ணோட வாழ்க்கை பாழாப் போச்சே…அந்தப் பாவம் உன்னைச் சும்மா விடுமா? எச்சுப் பிசாசு பிடிச்சிடுத்தா உன்னை…? பொம்பளைக் கிறுக்கா? என் கண் முன்னால நிக்காதே…போ…போ…வெளி வராண்டாவுல போய்ப் படு….இனிமே இங்கே உனக்கு அதுதான் எடம்….யாரும் அவனை வீட்டுக்குள்ள விடாதீங்கோ…பிறகு நா பொறுப்பாளியில்லே…எந்த நேரம் அவன் என்ன செய்வான்னு அவனுக்கே தெரியாது…நாம தூங்குறபோது கொழவிக் கல்லைத் தூக்கி யார் தலையிலயாச்சும் போட்டாலும் போட்டுடுவான்…பார்த்துக்குங்கோ….வெளில வச்சே சோத்தைப் போட்டு அங்கயே அவன இருக்க வைங்கோ…பட்டினி போட்ட பாவம் வேண்டாம் நமக்கு. எனக்குப் புள்ளையாப் பொறந்ததுக்கு சாகுற வரைக்கும் அவனுக்குச் சோறு போடறேன்…இனிமே அதான் என்னால முடியும்….அதுக்குமேலே இனிமே எந்த வைத்தியமும் பார்க்கிறாப்ல இல்லே. கிறுக்கு முத்திடுத்து…இனி அது அவனோட சாவோடதான் மடியும்.  கூட வச்சுக் கொண்டாடித் தொலைப்போம்….எல்லாம் என் தலையெடுத்து….லிபி…. – அப்பாவின் ஓயாத புலம்பல் எங்கள் எல்லோரையும் ஆட்டி வைத்தது.

மாடியில் வீட்டுச் சொந்தக்காரர்கள். எட்டி எட்டிக் கீழே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தெரியாம வாடகைக்கு விட்டுட்டமே என்று கொந்தளித்தார்கள். கீழே குழந்தைகளை அனுப்பவே பயப்பட்டார்கள். சீக்கிரம் காலி பண்ற வழியைப் பாருங்கோ…என்றும் சொல்லியாயிற்று.

பொழுது விடிந்த போது சாமியண்ணா வராண்டாவில் இல்லை. நாங்கள் யாரும் தேட முற்படவில்லை. அவருக்குப் படுக்கக் கொடுத்திருந்த பாயும் தலையணையும்  அநாதையாய்க் கிடந்தன. போர்த்திக்கொள்ளக் கொடுத்திருந்த விரிப்பு மட்டும் இல்லை.

            ன்றிலிருந்து சரியாக, அதாவது நான் அவரைப் பீச்சில் பார்த்த நாளிலிருந்து மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. அப்போது மீண்டும் நான்  லீவில் சென்னைக்கு வந்திருந்தேன். அங்கேயே எனக்கும் மாறுதல் கிடைத்துவிடும் போலிருந்த நேரம். தலைமை அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று முயன்று கொண்டிருந்தேன்.

சாமியண்ணாவைப் பற்றி நாங்கள் எல்லோரும் ஏறக்குறைய மறந்திருந்த நேரம் அது  என்றுதான் சொல்ல வேண்டும். நிம்மதியாக இருந்தோம் என்று கூடச் சொல்லலாம்.          இந்தப் பரந்த சென்னையில்  எங்கேனும் அவர் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது வேற்றூர் கூடப் போயிருக்க வாய்ப்புண்டுதான் என்றுதான் நினைத்தோம். ஆனால் நடந்ததோ….

            யாரு வாசல்லே….இதோ வந்துட்டேன்….கத்திச் சொல்லிக் கொண்டே அம்மா போய்க் கதவை திறந்த போது….சாமியண்ணா நின்றிருந்தார்.

            ஓ…! இங்க வாங்கோளேன்….இவன் வந்து நிக்கிற கெதியைப் பாருங்களேன்…அடக் கடவுளே….எந்த ஜென்மத்துப் பாவமோ…ஈஸ்வரா…எனக்கு இது வேணுமா…? என் மூத்தாள் பிள்ளையோட தலையெழுத்து இப்டியா ஆகணும்….ஐயையோ……என்னை அவ சபிப்பாளே…என் பிள்ளையை இப்டி அலைய விட்டுட்டேளேன்னு தூத்துவாளே…நா என்ன செய்வேன்…பகவானே…! இதுக்கு ஒரு முடிவேயில்லையா….?-ஒரே பார்வையில் அம்மா தொடர்ந்து புலம்பிக் கத்த ஆரம்பித்தாள்.

            அம்மாவின் அலறல் பொறுக்க முடியாமல் ஓடோடிப் போய் நின்றோம் நாங்கள். தள்ளு பார்க்கட்டும் அவனை….என்று எங்களை வேகமாய் விலக்கி விட்டு வெறியாய் முன்னால் பாய்ந்தார் அப்பா.

            கையில் ஒரு துணிப்பையில் நிரம்பச் சில்லரைக் காசுகளோடும், செக்கச் சிவந்த வாயோடும் கண்களோடும்…..உறி….உறி….உறி….உறி…..என்று கோரமாய் சிவப்பாய்ச் சிரித்தவாறே  நின்று கொண்டிருந்தார் சாமியண்ணா என்கிற பரசுராமன்.

            இதென்னடா பிச்சக்கார வேஷம்…இதுவும் போட்டாச்சா…? பிச்சையெடுத்துச் சேர்த்த சொத்தை இந்த அப்பனுக்குக் கொடுக்க வந்தியா? பாவி…படுபாவி….! உன்னை ரெண்டா வெட்டிப் போட்டாத்தான் என்ன? என்றவாறே என்னைப் பார்த்து உத்தரவிட்டார்..

            அந்தச் சில்லரையைப் பூராவும் ஒரு டப்பால போட்டுத் தண்ணியை ஊத்திக் கழுவிக் காய வச்சு,  அப்டியே பக்கத்தும் தெரு கோயில் உண்டியல்ல கொண்டு போய்ச் சேர்த்துட்டு வா…..ஒரு பைசாகூட வீட்டுக்குள்ள வரப்படாது….போ…உடனே செய்…. – என்றவர்….வாசலுக்கு வெளியேறி…தரதரவென்று சாமியண்ணாவைக் கொல்லைப் புறம் நோக்கிக்கொண்டு சென்று கிணற்றடியில் அமர வைத்து,  வாளி வாளியாய்த் தண்ணீரை  இறைத்து அண்ணாவின் தலையில் ஆவேசமாய்  ஊற்றலானார்.

                                                            -------------------------------

           

                                                    

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...