07 மார்ச் 2024

 

             தானாடவில்லையம்மா  தசையாடுது“   சிறுகதை

            ------------------------------------பிரசுரம்-பேசும் புதிய சக்தி மார்ச்2024


              சிவஞானம் உறாலில் ஓரமாகப் போடப்பட்டிருந்த டைனிங் டேபிளின் முன் அமர்ந்திருந்தார். அவர் முன் வைக்கப்பட்டிருந்த காபி ஆவி பறக்கக் காட்சியளித்தது. தன் மனத்திலும் ஆவி பறந்து கொண்டிருப்பதாய் நினைத்துக் கொண்டார். அந்தச் சூடு ஆறவே ஆறாதோ  என்று தோன்றியது.  அதுதான் முதலில் ஆற வேண்டும். ஆனால் அது நடக்காது என்று நினைத்து தனக்குத்தானே லேசாகப் புன்னகைத்துக் கொண்டார்.

           

            கேட்பதா, வேண்டாமா என்று ஒரு யோசனை. காலங்கார்த்தாலே, பொழுது விடிந்த நேரம் எதற்கு சண்டை?  ஆனாலும் கேட்பதுதான் முறை என்று மனம் குறுகுறுத்தது.  அதுவாக சாதாரண நிலையில் நடக்க வேண்டியவை…மனிதர்களின் குண மாறுபாடுகளினால் நிகழாமல் போகிறது. ஆள் வளரும்போது எல்லோருக்கும் அறிவும் சேர்ந்து வளருகிறது என்று சொல்லவே முடியாதுதான். அறிவு வளர்ந்தாலும்  உலக அனுபவம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றே. அந்தப் பொது அறிவை யாரும் மனதில் நிறுத்திக் கொள்வதில்லை. அந்த அனுபவத்தை உணர்ந்தாலும் மனம் ஏற்க மறுக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குமான தன் முனைப்பு தடுக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் சிந்தனை செய்தலும், பக்குவம் கொள்தலும் என்ன அத்தனை சாதாரண விஷயமா?அதற்கு உடனிருப்பவர்களும், சூழலும் எவ்வளவு காரணமாகிறார்கள்? அதையெல்லாம் மீறித்தான் ஒரு மனிதன் பொது நியாயத்தை உணர வேண்டும். உணர்ந்தாலும் செயல்படுத்த முனைய வேண்டும். அதற்கு ஒரு சிறப்பான மனோதைரியம் வேண்டும். நியாய உணர்வு இருப்பவர்களுக்கெல்லாம் தைரியம் இருப்பதில்லையே…! தன்னளவில்  அந்த உணர்வு குடி கொண்டிருப்பதுவே பெருமை என்றல்லவா மிதப்பில் திரிகிறார்கள்!!

 

சொல்லப்போனால் அவரது விருப்பமே வேறுமாதிரி. அதை நிறைவேற்ற இது தருணமல்ல. அதற்குக் காலம் கனிய வேண்டும். அத்தனை சீக்கிரம் அது நடந்து விடுவதற்கு வாய்ப்பில்லை. தானாய்க் கனிய வேண்டும். தடியால் அடித்துக் கனிய வைப்பது சாத்தியமில்லை. அது அப்போதைக்கு வேண்டுமானால் ஒரேயொரு நிகழ்வாக நிறைவேறி விடலாம். ஆனால் நிலைத்து நிற்காது. நிலைத்து நிற்பதற்கு மனம் ஒன்றிணைய வேண்டும். மேம்பட்ட சிந்தனைகள் வேண்டும். சராசரியாய் இருத்தலில் அது சாத்தியமில்லை.

 

தான் நினைப்பது நிலைத்து நிற்க வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம்.. ஆனால் ஒரு குடும்பம் என்பது, தான் மட்டும் அல்லவே…? என்னதான் ஒற்றுமையாய் இயங்கினாலும், அவரவர் மனது என்பது தனியே. அது எல்லாவற்றிற்கும் அத்தனை சுலபமாய் மசிந்து விடாதுதான். அதற்கு எண்ண முதிர்ச்சி வேண்டும். மன முதிர்ச்சி வேண்டும். அதன் தொடர்ச்சியாய் செயல் முதிர்ச்சி கைவர வேண்டும்.

 

மனிதர்களுக்கு இவையெல்லாம் அத்தனை சுலபமாய்க் கைவந்து விடுகிறதா என்ன? என்னதான் அடுத்தவர் எடுத்துச் சொன்னாலும், அவர்களாகவே ஒன்றின் நன்மை தீமைகளை ஆத்மார்த்தமாய் உணர்ந்தால்தான் எதுவும் சாத்தியப்படும்.

           

காபி சாப்பிடலையா? ஆறிட்டிருக்கே…? – கேட்டவாறே வந்து நின்றாள் ஜானகி. ஆறினால் திரும்பச் சுட வைக்க வேண்டுமே என்கிற சலிப்பு. அவளையே தீர்க்கமாய்ப் பார்த்தார் சிவஞானம். என்னவோ கேட்கப் போகிறார் என்பதற்கடையாளமாய், பதிலை மனதிற்குள் தயார் பண்ணிக் கொண்டவள் போல் நெற்றியைச் சுருக்கி நின்றாள் ஜானகி.

 

அவருக்குக் கொடுத்தியா? -கேள்வியைக் கேட்டுவிட்டு நேருக்கு நேர் அவள் கண்களை நோக்கினார் இவர்.

 

எல்லாம் கொடுத்தாச்சு….நீங்க சாப்பிடுங்க முதல்ல….என்றாள்.

 

நீயே கொண்டு கொடுத்திட்டியா….பலே….என்றார் சந்தேகம் கலந்த மகிழ்ச்சியோடு.  அவள் வாயை இப்படித்தான் கிளற வேண்டும். போட்டு எடுத்தல்.

 

ஆம்மா….நானே கொண்டு கொடுக்கிறேன்….நினைச்சிட்டிருங்க…உங்க பொண்ணு  வந்து வாங்கிட்டுப் போனா…..! நானெல்லாம் கொண்டு கொடுக்க முடியாது. சொன்னாளே ஒழிய அந்த உச்சரிப்பில்தான் எத்தனை துக்கம்? பாவமாயிருந்தது சிவஞானத்திற்கு. இன்னும் கேட்டால், அதற்கு நான் கொடுத்து வைக்கலை என்று சொல்லி அழ ஆரம்பித்து விடுவாள். இப்போதே உதடு துடிப்பது தெரிந்தது.

 

எப்படியெல்லாம் உபசரிக்க வேண்டுமென்று கனவு கண்டிருப்பாள்? என் பிள்ளை மாதிரிப் பார்த்துக்க மாட்டேனா? எனக்குப் பையன் இல்லாத குறையைத் தீர்த்துக்குவேனே? எப்போ நம்ம வீட்டுக்கு வந்தாரோ, அந்த நிமிஷத்துலேர்ந்து அவரும் எனக்கு ஒரு பிள்ளைதானே? ரெண்டு பேரும் இந்தச் சென்னைலதான் வேலை பார்க்கிறான்னா நம்ப கூடவே வச்சிக்கலாமே? எதுக்குத் தனிக்குடித்தனம்? நான் இருக்கேன் சமைச்சுப் போட….ஆயுசு பூராவும் அவாளைக் கவனிச்சிண்டு, பேரக்குழந்தை பிறந்ததுன்னா…அதைக் கொஞ்சிண்டு…வளர்த்துக் கொடுத்து, என் காலத்தை ஓட்டிடமாட்டேனா? ஒரு வேலையும் அவா செய்ய வேண்டாம்…சந்தோஷமா, ஜாலியா இருக்கட்டும்…அதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கிறேன்…எல்லாமும் நம்ப கண் முன்னால நடக்கட்டும்…அதுதான் எனக்கு வேணும்…எத்தனை முறை பூரித்து பூரித்துச் சொல்லி மாய்ந்திருக்கிறாள்? வெறும் உதட்டு வார்த்தைகளா அவைகள்?

 

தொண்டைக்குள் விடப்போன அடுத்த மடக்குக் காபியை அப்படியே அந்தரத்தில் நிறுத்தினார் சிவஞானம். சாய்ந்த டம்பளரிலிருந்து ரெண்டு சொட்டு அவர் மார்பில் விழுந்து வழிந்தது.

 

மேலெல்லாம் வழிய விட்டுக்குங்க சின்னக் குழந்தை மாதிரி…!….சட்டுன்னு சாப்பிடுவீங்களா…அது இதுன்னு ஏதாச்சும் கேட்டா? – சலித்துக் கொண்டே சிறிது தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து நீட்டினாள். கையை முக்கி மார்பில் துடைத்து விட்டுக் கொண்டார் சிவஞானம். ஜானகியை நோக்க அவருக்குப் பரிதாபமாய் இருந்தது. கண்ணீர் முட்ட முட்ட அவள் பேசி இவர் பார்த்ததேயில்லை. சமீபத்தில் அவள் முகமே மாறிவிட்டது. காலத்திற்கும் மாறாத துக்கம் அந்தப் பொன்னொளிர் வதனத்தில் நிரந்தரமாய்ப் படிந்து விட்டதோ? இப்படியா நினைத்து நினைத்து மாய்வது?

 

இந்த அழுக்கை சட்டுன்னு துடைச்சிடுறோம்….ஆனா நம்பளோட மன அழுக்கை…?

 

முகத்தில் ஆவேசம் பொங்க ஆரம்பித்தது ஜானகிக்கு. ஆமா…மன அழுக்கு…கண்டு பிடிச்சாச்சு…! இந்த பாருங்க…காலங் கார்த்தாலே எதாச்சும் சண்டைக்கு ஆரம்பிக்காதீங்க…சட்டுன்னு காபியை ஊத்திட்டு வட்டைக் கப்பைக் கொடுங்க…நான் போகணும்…எனக்கு வேலையிருக்கு….சத்தமாப் பேசிண்டு….!-இன்னும் கொஞ்சம் பேசினால் அழுது விடுவாள் போலிருந்தது. அந்தப் பாவத்தை வேறு கட்டிக் கொள்ள வேண்டுமா?  அன்றாடப் பொழுதே இந்த நினைப்பில்தான் கழிகிறது.  ஆறாத வடுவாய் ஆகி விடுமோ ? என்கிற பயமுமிருக்கிறது.

 

அந்தக் கடைசி வார்த்தையில் இருக்கும் சூட்சுமம் அவருக்குப் புரிந்தது. சத்தமாய்ப் பேசக் கூடாத ஒன்று என்று உணர்கிறாள். அப்படியானால் அது ஏதோவொரு இடறல்தானே? இதை அவளிடம் சொல்ல முடியுமா? எதற்கு வம்பு என்று பெற்ற பெண்ணே வந்து வாங்கிக் கொண்டு போய்விட்டாள். மனதுக்குள் அவளுக்கு எவ்வளவு வருத்தமோ?

 

கொண்டு போய்க் கொடுக்காவிட்டாலும் அப்பாவோடு உறாலில் சேர்ந்து அமர்ந்து சகஜமான நிலையில் காலைக் காபியை அருந்தலாமே? அப்பா சாதாரணமாய்த்தான் பேசுகிறார்…நலம் விசாரிக்கிறார்…ஆபீஸ் வேலைகளைப்பற்றியெல்லாம் கேட்கிறார். அவரதுஅப்பா அம்மா சௌகரியங்களைப்பற்றி வினவுகிறார்.  ஆனால் அதெல்லாம் அம்மா அங்கே வந்து நிற்கும்வரைதான். அவள் வந்துவிட்டால் அப்பா வாய் அடைத்துப் போகிறது. அந்தக் கணத்திலிருந்து அவர் அம்மாவுக்கு ஆதரவாய் அமைதி காத்து விடுகிறார். அவளை மீறி என்னால் எதுவும் ஆகாது. அதுதான் அம்மாவின் பெருமை. அவள் மனசு நோகக் கூடாது. அந்த அளவுக்குத்தான் என்னால் ஒத்துழைக்க முடியும்.

 

அந்த நிமிடம் அவரும் எழுந்து போய் விடுகிறாரே…? எதற்கு வம்பு? நம்மால் ஒருத்தருக்கு இடைஞ்சல் வேண்டாம் என்கிற நல்ல எண்ணம்தானே? அந்தப் பண்பு எண்ணிப் பார்க்கக் கூடிய ஒன்று. காலம் கனியக் காத்திருக்கும் கலை நயம். சட்டென்று கோபப்பட்டு மனைவியையும் இழுத்துக் கொண்டு வெளியேற எவ்வளவு நேரம் ஆகும்? ஆனால் அதை அவர் செய்யவில்லையே? அப்படியெல்லாம் செய்பவராகவும் தெரியவில்லையே? கொஞ்சம் கொஞ்சமாய்ச் சரி பண்ணுவோம் என்று தன் இளம்  மனைவியோடு ஒப்பந்தம் போட்டிருப்பாரோ? ஆனாலும் இத்தனை நிதானம் ஆகாதுதான். சிவஞானத்தால் இப்படித்தான் நினைக்க முடிந்தது. சாதுவாய் இருக்கும் பையனை ஏன் வெட்டிக்குக் கொத்திக் கொத்தி எடுக்க வேண்டும்? பிறகு சாது மிரண்டு விட்டால்? அதுவேறு பயமாயிருக்கிறதே? நீங்களுமாச்சு, உங்க பொண்ணுமாச்சு…என்று உதறி வெளியேறி விட்டால்?

 

புவனா…கொஞ்சம் இப்படி வர்றியா? என்று சொல்லிக் கொண்டே அன்று செந்தில் எழுந்து தன் அறைக்குச் சென்ற போது…அம்மாவின் பார்வையில் ஏன் அத்தனை கடூரம்? நான் பெத்த பெண்ணை, அவளுக்கு நான் வச்ச பெயரை, எத்தனை சகஜமா, இஷ்டமா உச்சரிக்கிறான் இவன்? மாட்டைத் தொடரும் கன்றுக்குட்டி போல் பின்னால் நடக்கிறாளே? இந்த வீடு அத்தனை அந்நியமாகி விட்டதா அவளுக்கு? பால்ய காலம் முதல் ஓடியாடிச் சாடிய வீடு…இன்று அளந்து நடக்கும் அளவுக்கு ஆகிவிட்டதோ? எல்லாம் அவன் செய்த வசியம். அதில் மயங்கிக் கிடக்கும் பேதை தன் மகள்…!

 

இவன்- என்றுதான் இன்றுவரை நினைக்கிறாள். மாப்பிள்ளை என்கிற மரியாதை வரவில்லை. மனதில் தோன்றவில்லை. அது அங்கும் தெரிந்துதான் இருக்கிறது. ஆனாலும் பெரியவர்கள் மனதைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அந்தப் பண்பாடு அந்தப் பையன் மனதில் ஆழமாய்க் குடி கொண்டிருக்கிறது. சூழலை மேலும் இறுக்கமாக்க விரும்பவில்லை அவன். லகுவாக்கத்தான் முயற்சிக்கிறான். அதுவே அந்தப் பையனின் நற்குணத்திற்கு ஒரு சான்றுதானே? இதை நுணுகி உணர அவள் தயாராயில்லை. ஆனால் சிவஞானம்  புரிந்து கொள்கிறார். ஆனால் ஜானகியை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளை அவள் வழியில் விட்டு, காலம் வரும்போது வழி தானே திறக்கும் என்று காத்திருக்கிறார். தானும் அவளைக் கைவிட்டால்? அது தகாது. அது ஆகாது. அது முடியாது. அவள் என் தெய்வம். இந்த வீட்டின் தெய்வம். மனைவி ஒரு வயதிற்கு மேல் கணவனுக்கு தெய்வமாகிறாள். அந்த வீட்டின் நடமாடும் பிரத்தியட்சம். அவள் காலடிக்கே அனைத்தும் சமர்ப்பணம்.

 

பின்னாலேயே தொடரும் மகள்….! எப்படி மாறி விட்டாள்? பின் காபியைக் கொண்டு வந்து அப்படி “ணங்“கென்று வைத்தால்? வைத்த காபியை வெட்கமில்லாமல் இவளும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து செல்கிறாளே? நேற்று வரை அம்மா…அம்மா…என்று மடியைப் பிடித்துக் கொண்டு என் பின்னாலேயே அலைந்தவள் இன்று அவனுக்குக் கொடுக்கு போல் சுற்றுகிறாள். நான் ஒதுக்கலாய்ப் போய்விட்டேன்.  சள சளவென்று பேசும் பெண் அளந்து அளந்து பேச ஆரம்பித்து விட்டாள். ஏதேனும் கூடப் பேசினால் எதிர்த்தும் நாலு வார்த்தையை வீசி விடுவாள் போலிருக்கிறது. இவன் என் பெண்ணைக் கைபிடிக்கப் போக, அவள் என்னிடமிருந்து இத்தனை சீக்கிரம் விலகி விட்டாளே?

ஆனாலும் புவனா இன்றுவரை ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசவில்லைதான். தன்னைப் போலவே மனதுக்குள் அழுகிறாளோ? ஏன்ம்மா…இப்டியிருக்கே நீ? சகஜமா இருக்க மாட்டியா? சந்தோஷமா இருக்க வேண்டாம். சகஜமா இருக்கலாமே…? முகத்தைக் காண்பிக்காமே, மூஞ்சியைச் சிணுங்காமே…! ஒரு வருஷத்துக்கும் மேலாச்சு…மாசம் ரெண்டு முறை, மூன்று முறை வந்து போயிண்டுதான் இருக்கேன்…ஆனாலும் உன் மனசு மாறவே மாட்டேங்கிறதே…? இப்படியாம்மா கல்லா இருப்பே? இரக்கமேயில்லையா உனக்கு? அவர் வேற்று ஜாதிங்கிறதாலே எவ்வளவுதான் அவரை அவமானப்படுத்துவே? எவ்வளவுதான் அவரை அலட்சியப்படுத்துவே? அத்தனையையும் எனக்காக, ஏன் உனக்காகவேன்னே சொல்லலாம். அவர் பொறுத்துண்டுதான் இருக்கார். என்னிக்காவது உன்கிட்டே கோபப்பட்டிருக்காரா? என்னைக்காவது சண்டை போட்டிருக்காரா? எதாச்சும் தப்பாப் பேசியிருக்காரா? எதுவுமேயில்லை.  என்னோட வற்புறுத்தலுக்காக, என் பேச்சை மதிச்சு, நீ பேச மாட்டே, முகத்தைக் காண்பிப்பே, அலட்சியப்படுத்துவேன்னு தெரிஞ்சும் இந்த வீட்டுக்கு வந்து போயிட்டிருக்காரே…அதைக் கொஞ்சமாவது நீ நினைச்சுப் பார்க்க வேண்டாமா? அவரும் ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்தானேம்மா? நம்மளவிட கடவுள் பக்தியும், கட்டுப்பாடும் உள்ளவங்கதான் அவங்களும். அதை நாம மதிக்க வேண்டாமா?

 

எல்லாம் எனக்குத் தெரியுண்டீ….நீ எனக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்…நம்ம குடும்பத்துல இந்த மாதிரியெல்லாம் இதுக்கு முன்னே நடந்ததில்லே. நீதான் முதன் முதல்லா வந்து ஆரம்பிச்சு வச்சிருக்கே…எல்லாரும் படிச்சு, பட்டம் வாங்கி, நல்ல பெரிய உத்தியோகத்துக்குப் போயி, கடவுள் பக்தியோட. பெரியவங்களை மதிச்சு , கடமையுணர்வோட, கண்ணியத்தோட, கட்டுப்பாட்டோட காலம் காலமாத் தொடர்ந்து வர்ற பரம்பரை நம்ப பரம்பரை…அதை உன்னோட இந்த ஒரு காரியத்துனால எல்லாத்தையும் கெடுத்துட்டே நீ…..எதையும் மதிக்காம, நினைச்சுப் பார்க்காமே, மனசுல ஒரு பயமில்லாமே உன் இஷ்டத்துக்கு நடந்துண்டுட்டே…!  இத்தனைக்குப்பிறகும் உன்னை இந்த வீட்டுல நுழைய விட்டிருக்கேன் பாரு…அதுக்கு நீ என் காலைத் தொட்டுக் கும்பிடணும்….இதுக்காக நான் எத்தனை எதிர்ப்புகளைச் சந்திக்கிறேன்னு உனக்குத் தெரியாது…மானசீகமா எவ்வளவு அழுகறேன்ங்கிறதை நீ உணர மாட்டே….! அத்தனையும் சேர்ந்து என் உடம்பை, உயிரைத் தின்னுண்டிருக்கு….நாளுக்கு நாள் நான் நசிஞ்சு போயிண்டிருக்கேன். உன்னைப் பெத்த பாவம்… உன் மூலமா என் முடிவு வரணும்ங்கிற விதி……

 

ஐயோ…அம்மா…போதும்…போதும்…நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம்…வாயையே திறக்காதே…நீ பேசுற பேச்சு…இங்கிருந்து நாங்க எங்க இடத்துக்குப் போன பின்னாலும் பல நாளைக்கு மறக்க மாட்டேங்கிறது….எங்க வீட்டைச் சுத்திச் சுத்தி வருது உன்னோட வசவு….உன்னோட வார்த்தைகள் எங்க மூஞ்சில வந்து அறையறது….ஏதோ அப்பாவாச்சும் கொஞ்சம் சகஜமா இருக்காரேன்னுதான் நான் இங்க வந்துட்டுப் போறேன்….என்னைக்காவது நிலைமை மாறாதாங்கிற நம்பிக்கை….எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து  எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருக்க மாட்டமாங்கிற எண்ணம்….என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தான் அவரும் அமைதியா இருக்கார். ஒரு நாளாச்சும் மரியாதைக் குறைவா நடந்துண்டிருக்கார்னு உன்னால சொல்ல முடியுமா? ஒரு சொல் தப்பாப் பேசியிருக்கார்னு உன்னால சுட்டிக் காட்ட முடியுமா? மனுஷாளோட பிறப்பு அவா கைல இல்ல…ஆனா அவாளோட வளர்ப்பு அவுங்கவுங்க கைலதான் இருக்குன்னு நான் நம்பறேன். நம்பள விட அவங்க தாய் தந்தையர் அவரை நல்லாத்தான் வளர்த்திருக்காங்கன்னு சொல்லுவேன். அது போதும் எனக்கு. நான் நிம்மதியாத்தான் இருக்கேன்….நீதான் உன்னை மாத்திக்கணும்….

 

சொல்லி விட்டுக் கிளம்பியவள்தான். காலில் விழுந்து இருவரும் நமஸ்கரிக்கையில் சற்றுத் தள்ளி நின்று கொண்டாளே அம்மா? ஆசீர்வாதத்தை மறுக்கிறாளோ? போகட்டும்…நாங்கள் முழு மனதோடுதான் விழுந்து வணங்கினோம்…அது போதும் எங்களுக்கு….!

 

பார்த்துப் பார்த்துச் சேகரித்து  வைத்த நகைகளும், பாத்திரங்களும் கொடுக்க வழியில்லாமல் அப்படி அப்படியே மூடிக்கிடக்கும் நிலையில் உறங்குகின்றன. பாவி…கேட்கும்போதெல்லாம் எனக்குக் கல்யாணம் வேண்டாம்…வேண்டாம் என்றல்லவா சொல்லி ஏமாற்றியிருக்கிறாள்? எத்தனை அருமையான வரன்கள் வந்தது? வீடு, வாசல், நிலம், நீச்சு என்று வரிசை கட்டி நின்றதையெல்லாம் மறுத்தும், எந்தப் பதிலும் சொல்லாமலும் ஒதுக்கி விட்டாளே? திரும்பத் திரும்ப வலிய வந்து கேட்ட போதும் அலட்சியமாய் நின்று விட்டாளே? மனதுக்குள் மகாராணி என்ற நினைப்பு.  அடங்காத அழகு என்கிற கர்வம்.  அந்த கர்வத்தை இப்படியா கொண்டு சேர்ப்பது?

 

இப்படிச் சீரழிய வேண்டும் என்று தலையெழுத்தா இவளுக்கு?  கடைசியில் இவன் காலடியில்தானே போய் விழுந்திருக்கிறாள்? எது இழுத்தது இவளை. அவனென்ன பேரழகனா? பெரும் சொத்துக்காரனா? பெயர் சொல்லும் குடும்பத்தைச் சேர்ந்தவனா? அப்படியே இருந்தாலும் அவனுக்கென்று அவன் ஜாதியில் ஒரு பெண் கிடைக்காமலா போகும்? அவன் பெற்றோர்களுக்கு அதைச் செய்யத் தெரியாதா? வளர்த்தவர்களுக்கு வாழ்வு அளிக்கத் தெரியாதா?

 

அவன்தான் அப்படி வந்து சொல்லிக்கொண்டு நின்றான் என்றால் அவர்களுக்கு எங்கே போனது புத்தி? காதலாம்…கத்தரிக்காயாம்? ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். அதை நாம் கெடுக்கக் கூடாது…அதுபோல் உன் வாழ்க்கையைப்பற்றியும் எங்களுக்கு ஒரு பெரும் கனவு உண்டு…அதை நாங்களும் உன் சார்பில் செவ்வனே நிறைவேற்றுவோம்…ஆகையால் இதெல்லாம் வேண்டாம்…இன்னொரு குடும்பத்தின் வயிற்றெரிச்சல் நமக்கு ஆகாது. அது நம் குடும்பத்தை சீரழித்து விடும். அவர்கள் வயிறெரிந்தால் அது நம்மைக் காலத்துக்கும் பின் தொடரும். அந்தச் சாபம்  நம்மைத் தொடர்ந்து வந்து பழி வாங்கும். இது வேண்டாம் விட்டு விடு….ஒரு குடும்பத்தின் சாபம் நமக்கு வேண்டாம்….வேற்று ஜாதிப் பெண் நமக்கு வேண்டாம்…சொன்னால் கேள்….

 

என்று சொல்லித் தடுத்திருக்க வேண்டாமா? அதுவல்லவா தாய் தந்தையர்க்கு அழகு?

றையினுள்  மாப்பிள்ளை செந்திலும், புவனாவும் குசுகுசுவென்று என்னவோ பேசிக் கொள்வது காதில் விழுந்தது சிவஞானத்திற்கு. இவர் எழுந்து அடுப்படி நோக்கிச் சென்றார். இன்னைக்கு என்ன சமையல்? என்று சகஜமாய்க் கேட்பது போல் போய் நின்றார்.

 

என்னவோ ஒண்ணு…எனக்குத் தோண்றதை வைப்பேன்….அவ்வளவுதான்…என்றாள் ஜானகி.

 

அப்படிச் சொல்லாதே….உன் பொண்ணைக் கூப்பிட்டு…அவருக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு இன்னைக்கு ஒரு நாளைக்குச் செய்…நாளைக்கு  அவங்க வீட்டுக்குப் போயிடப் போறாங்க….

 

அதெல்லாம் முடியாது. வேணும்னா அவளை வந்து சமைக்கச் சொல்லுங்க…நான் எங்க அண்ணா வீட்டுக்குப் போயிட்டு வர்றேன். ரொம்ப நாளாச்சு அண்ணா மன்னியைப் பார்த்து….நீங்க ரசிச்சு சாப்பிட்டுட்டு, படுத்து நல்லா ரெஸ்ட் எடுங்க…உங்களுக்குத்தான் எதுக்கும் விவஸ்தையில்லையே….! என்னால இன்னிக்கு என் இஷ்டப்படிதான் சமைக்க முடியும். யாருக்காகவும் மெனக்கெட முடியாது. மனசோட செஞ்சு படைக்கிறதுக்கு எனக்குக் கொடுத்து வைக்கலை…

 

விவஸ்தையில்லை என்ற கடைசி வார்த்தை வேண்டாத வார்த்தைதான். ஆனாலும் பொறுத்துக் கொண்டார் சிவஞானம். ஜானுதானே சொல்கிறாள். அவளுக்குத் தன்னைத் திட்ட உரிமையில்லையா? போகட்டும். ஆனால் அவள் ஒன்று சொன்னால் சொன்னதுதான். கொக்குக்கு ஒண்ணே மதி. யாருக்கும் அசைந்து கொடுக்க மாட்டாள். கேட்டால் என் மனசு எறியறது யாருக்குத் தெரியும் என்று அழ உட்கார்ந்து விடுவாள். யாரும் அவளை சமாதானப்படுத்த முடியாது. என்ன செய்யலாம். இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்தார் சிவஞானம். இன்று பார்த்து மகளிடம் நீதான் சமைக்கணும் என்று எப்படிச் சொல்லுவார் அவர். இல்ல…நாங்க கிளம்பறோம் என்று அவர்கள் வெளியேறி விட்டால்? அது இன்னமும் அவமானப்படுத்தியமாதிரி ஆகாதா?

 

இன்னைக்குப் பார்த்து நான் எங்க அண்ணா வீட்டுக்குப் போறேன்னு நீ கிளம்பினேன்னா அது நல்லாயிருக்குமா? அவங்களை அவமானப்படுத்துற மாதிரி இருக்காதா? எதாச்சும் தெரிஞ்சிதான் பேசறியா நீ? அவங்க இங்க வந்தது உனக்குப் பிடிக்கலைங்கிறத உறுதி செய்ற மாதிரி ஆகாதா? சொல்றதைக் கேளு….அவியல் பண்ணு…நான் காய்கறி நறுக்கித் தர்றேன். வத்தக்குழம்பு  வை…வடகம், அப்பளம் பொறி….ஃப்ரிட்ஜ்ல மாம்பழம் இருக்கு…அதை நறுக்கி கலத்துல போடு…சிம்பிளா .திவ்யமான விருந்தா இருக்கும்…சொல்றதைக் கேளு….எதையாவது நீயா நினைச்சிண்டு கோணின்டு நிற்காதே…! இப்டியெல்லாம் பண்ணினேன்னா எதிர்காலத்துல இதெல்லாம்தான் மனசுல நிற்குமாக்கும். அப்போ நெஞ்சுல பகைதான் நிலைக்கும். சுமுக நிலை வராது.

ஆனது ஆச்சு….எல்லாத்தையும் படிப்படியா கொஞ்சம் கொஞ்சமா மறக்கப்பாரு…பையன் நல்ல மரியாதையானவன்தான். அவனைக் குறை சொல்றதுல அர்த்தமேயில்லை. அவங்க குடும்பத்தோட கூடிக் குலவ வேண்டாம்….அவுங்க யாரும் இங்கே வரவும் மாட்டாங்க…குறைஞ்சபட்சம் ஒரு விருந்தாளி வந்தா எப்படி உபசரிப்போம்ங்கிற அளவிலேனும் சிறப்புச் செய்து அனுப்புவோம்…வீட்டுக்கு திடீர்னு வந்த விருந்தாளின்னு நினைச்சிக்கோ…என் பால்ய நண்பர் ஒருத்தர் வந்தா மனசோட செய்ய மாட்டியா…அப்டி நினைச்சிக்கோ…கடந்த ஒரு வருஷமா அவரை ஏதேனும் வழில அவமானப்படுத்திண்டே இருக்க நீ….எதையாச்சும் என்னிக்காச்சும் சொல்லிக் காண்பிச்சிருக்காரா? எப்பவாவது உன்கிட்டே கோபப்பட்டிருக்காரா? உன் முகத்தையாவது நேருக்கு நேர் பார்த்துப் பேசியிருக்காரா? அவ்வளவு மரியாதையான பையன்….மனிதாபிமான அடிப்படைலயாவது பாரு…கொஞ்சம் எனக்காக யோசி…நம்ம காலம் முடிஞ்சி போச்சு…நமக்கு இறுதிக் கடன் செய்றதுக்கு இருக்கிறவங்க இவங்க ரெண்டு பேரும்தான். அதை மனசுல வச்சிக்கோ….இன்னிக்கோ…நாளைக்கோன்னு நாம இருக்கோம்….நெருநல் உளனொருவன் இன்றில்லை…காலம்போன கடைசில ஒரு பெண்ணைப் பெத்து, லேட் இஷ்யூவாகி, ரிடையர்ட் ஆனப்புறம்  அதுக்குக் கல்யாணம் பண்ணி, கல்யாணம் நாம எங்க பண்ணினோம்..அதுவால்ல கோயில்ல வச்சு நடந்திடுத்து… அதுவும் இப்படி நிலை தப்பிப் போச்சுன்னா அது விதின்னு இல்லாம வேறே என்னன்னுசொல்றது….நாம கொடுத்து வச்சது  அவ்வளவுதான்…ஆனாலும் ஒருத்தன் மனுஷனா இருக்கானாங்கிறதுதானே முக்கியம்? நல்ல காரெக்டரோட வளைய வர்றானங்கிறதுதானே கவனிக்க வேண்டியது? ஒழுக்கம் தவறாத நாணயஸ்தனா இருக்கானாங்கிறதைத்தானே துல்லியமாக் கவனிக்கணும்…அதுல நம்ப மாப்பிள்ளை சோடை போகாதவர்…நூறு சதவிகிதம் அவரை நம்பலாம். ஆகையினாலே வீணா மனசைப் போட்டு உழட்டிக்காமே தேவையில்லாமே வக்கரிச்சிண்டு நிக்காமே ஆகுற காரியத்தைப் பாரு…..வந்தவாளை சுமுகமா உபசரிச்சு அனுப்பப் பாரு….இந்த ஒரு முறை எனக்காகச் செய்….நீ அதிகம் பேச வேண்டாம்…எல்லாம் நான் பேசிக்கிறேன்… போதுமா? ஒரு அதிதியா நினைச்சு திருப்தி பண்ணி அனுப்பு. மனசு தானாக் குளிர்ந்து போகும். பிறகு எல்லாம் நல்லபடியா நடக்கும்….

தான் நினைப்பதுபோல், தன் விருப்பம்போல், எல்லாமும் சரியாகி சகஜநிலை அடைவதற்கு இன்னும் வெகு காலம் ஆகலாம் என்று  நினைத்து பெருமூச்சு எழுந்தது சிவஞானத்திற்கு. இப்போதைக்கு இதாவது நடக்கட்டும் என்று நினைத்தார். துளித்துளியாய் அடியெடுத்து வைப்போம் என்று முனைந்தார்.

 

இனிமே என்ன நல்லபடியா நடக்கிறதுக்கு இருக்கு…..அதான் நடக்க வேண்டியதெல்லாம் தானா நடந்து முடிஞ்சாச்சே….! எல்லாமும்தான் கை மீறிப் போயிடுத்தே…! – சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது ஜானகிக்கு.

 

அதென்ன அப்படிச் சொல்லிட்டே….! உன் பொண்ணுக்கு நாள் தள்ளிப் போயிருக்கு தெரியுமா? உங்க வீட்டோட சகஜ நிலை ஏற்பட்ட பிறகுதான் நமக்குக் குழந்தைன்னு  பிடிவாதமா இருந்தாராம் அவர். புவனாதான் கட்டாயப்படுத்தி சரி பண்ணியிருக்கா…டாக்டர் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்னு சொல்லியிருக்காராம்.ஆபீசுக்கு லீவ் அப்ளை பண்ணியிருக்கா….! இதெல்லாம் உன்கிட்டே  மகிழ்ச்சியோட பகிர்ந்துக்கணும்னு வந்தவாளைத்தான் நீ தள்ளி நின்னு பேசவிடாமப் பண்ணிட்டே…! எப்படி இந்த விஷயத்தை உன் காதுக்கு இறக்கிட்டு, இங்கிருந்து கிளம்பறதுங்கிறதுதான் இப்போ அவங்களோட யோசனை….

 

தலையைக் குனிந்தவாறே கடகடவென்று ஒப்பிப்பதுபோல் தொடர்ச்சியாய் சொல்லிக்கொண்டே இருந்த சிவஞானம் ஜானகியைத் திரும்பிப் பார்த்தபோது நெஞ்சம் விம்ம புடவைத் தலைப்பை முகத்தில் மூடிக்கொண்டு  அமைதியாய் பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தாள் அவள்.

 

                                                -------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...