24 டிசம்பர் 2023

 

 

“ஊழிக் கூத்து”  - சிறுகதை-பிரசுரம் தினமணிகதிர் 24.12.2023

----------------------------------------       

                                                                       

துக்குத்தான் நான் பல தடவை சொன்னேன்…இந்த வீட்டை வித்திருடான்னு….- அங்குசாமி  மிகுந்த சலிப்போடு சொன்னார்.  உள்ளுக்குள் கோபமும், எரிச்சலும் பொங்கியது அவருக்கு. அது பையன் ரகுவரன் பேரில் அல்ல. கடந்த நான்கு நாட்களாய் இருக்கும் அல்லலும், அவதியும் அவரை அப்படி நினைக்க வைத்திருந்தது.

இன்று ஐந்தாவது நாள். இன்னும் மின்சாரம் வந்தபாடில்லை. திருக்கார்த்திகைக்கு விளக்கேற்றியது மாதிரி அறைக்கு ஒரு அகல் விளக்கு. ராத்திரி பூராவும் எரிவது மாதிரி கழிப்பறைக்கு ஒரு அகல். இருட்டில் பாச்சா, பல்லி, தேள்,  பூரான் என்று வந்து நக்கி,  கடித்து வைத்தால் என்ன செய்வது என்ற பயம்?  நிற்காது பெய்யும் மழைக்கு ஏன் வராது? எதுதான் வராது?

ரெண்டாவது மாடிக்கெல்லாம் எதுவும் வராதுப்பா…! நீ ரொம்பத்தான் பயப்படுறே…தரைல…கார் பார்க்கிங்குல வேணா வரும். அங்க டூ வீலர்ல எதுவும் ஏறாம இருக்கணும்…சர்வீசுக்கு விட்டுத்தான் வண்டியை எடுக்கணும்…

ரெண்டாவது மாடிக்கு வராதுன்னா அப்போ முதல் மாடி வரைக்கும் வரும்ங்கிறியா?

இருக்கிற கஷ்டத்துல காமெடி  வேறையா? என்னப்பா…2015 வெள்ளத்துலயே வரல…மாடிப்படில நாலு படியோட நின்னு போச்சு கீழே…அப்போ டூ வீலர்தான் மூழ்கித்து…நல்லவேளை…மிதந்து ரோட்டுக்கு போகலை…



அதெப்படிறா போகும். அதான் கேட் சாத்தியிருக்கமே…அதத் தாண்டியா போயிடும்? மிதந்து டான்ஸாடினாலும் காம்பவுன்டுக்குள்ளயேதான் ஆடிட்டுக் கிடக்கும்….எல்லார் வண்டியும்தானே ஆடுது…நம்மது மட்டுமா…எல்லாருக்கும் உள்ளது நமக்கு…சில சமயம் டென்ஷனைக் குறைக்க, தனக்குத்தானே அதைத் தளர்த்தி நகைச்சுவையாக்கிக் கொண்டார் அங்குசாமி. வீட்டிலுள்ளோரையும் அது கொஞ்சமேனும் இலகுவாக்குமே…!

ஆனாலும் இந்த மழை ஒன்றும் குறைச்சலில்லை. நாலு நாள் பெய்யும் மழை ஒரே நாளில் ஊத்தித் தள்ளினால்…? ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். குழாயைத் திறந்து விட்டதுபோல் மழை ஊற்றியது. கொட்டித் தள்ளியது.  தெப்பக்குளமாய் நின்றது ஏரியா. அந்தந்த வீட்டின் மாடியிலிருந்து பலரும் சோகமே உருவாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  வீதியில் ஒரு காக்காய் குஞ்சு இல்லை. எப்போதும் நிறையப் பறந்து கொண்டிருக்கும், காக்காய்களும் புறாக்களும் எங்கு போய் ஒடுங்கியிருக்குமோ? எத்தனை பிழைத்ததோ எத்தனை செத்ததோ?

இங்க காக்காய்க்குக் குறைச்சலே இல்ல. அப்பா திவசம் முடிஞ்சு. எள்ளுப் பிண்டம் வச்சிட்டு அப்படித் திரும்பல…அத்தனை காக்கா…பித்ருக்கள் ரூபத்துல அப்பா வருவார்னு சொன்னியே…வந்து கொத்திட்டுப் போயிட்டார்…காக்கா வந்துதான்னு அக்கறையாக் கேப்பியே…அதுக்குப் பஞ்சமேயில்ல இங்க….அத்தனை காக்காய்ல அப்பா எந்தக் காக்கா? அதுதான் கண்டு பிடிக்க முடில…?

கன்னா பின்னான்னு பேச வேண்டிது….அப்புறம் எதுக்கு திவசம் பண்ணனுமாம்…மனசுல நம்பிக்கை வேணும். பக்தி வேணும்…அப்பத்தான் பலன்…ஞாபகமிருக்கட்டும்…

ஒரு பேச்சுக்குக் கூடச் சொல்லக் கூடாதா? உனக்கு நகைச்சுவை உணர்வே இல்லடீ….!

இல்லாட்டாப் போகுது…காரியார்த்தமா இருந்தாப் போதும். விருதாப் பேச்சு எனக்குத் தேவையில்ல…

அவ்வப்போது நிலைமையை இலகுவாக்கிக்கொள்ளுவதுதான். வேறு வழி? ஆனாலும்  அவருக்கு அவரது செயல் குறித்து மிகுந்த தன்னிரக்கமும் கோபமும் கொப்பளித்தது. ஏனிப்படி யோசனையில்லாமல் போனோம்? அலுவலகப் பணியில் அத்தனை திருத்தமாய் இருந்து விட்டு, ஓய்வு பெற்றதும் மழுங்கிப் போனோமா? கூர் கெட்டு விட்டதா? நினைத்து நினைத்து துக்கம்தான் பீறிட்டது அவருக்கு. அந்தத் துக்கம் தாளாமல்தான் பையனிடம் கேட்டார். வீட்டை விற்று விடு என்று. அவனென்றால் இங்கிருந்து நகர்ந்தால் தனியா சொந்த வீடு கட்டித்தான். அதுவரை இங்கேதான் என்கிறான். பெருத்த நம்பிக்கையோடு அவன் பெயருக்கு அவர் வாங்கிக் கொடுத்த வீடு. இன்று மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு திண்டாடுகிறது. இருக்கும் ஈரத்தைப் பார்த்தால் அபார்ட்மென்டே இடிந்து பூமிக்குள் அமிழ்ந்து விடுமோ என்கிற அளவுக்குப் பயந்தார்.

அடி முட்டாள்தனம் செய்தாச்சு…எவனாச்சும் சொன்னானா? சொந்தக் காரனுங்கன்னு இருந்து என்ன பிரயோஜனம்? போற போக்குல அங்கெல்லாம் தண்ணி தங்கும்னு சொல்வாங்க…பார்த்துக்கோ…என்றார்களே தவிர, அங்க வாங்காதே…வேறெ எடம் பாருன்னு எவனும் அடிச்சு சொல்லலையே…? வாங்கிட்டு நல்லா அவதிப்படட்டும்ங்கிற எண்ணமாயிருக்கும்…மனுஷனுக்கு தான் படுற கஷ்டத்த விட அடுத்தவன் படுற பாடுலதான் கவனம் ஜாஸ்தி…அதுலதான் திருப்தியும் கூட…அட…அதுதான் வேண்டாம்…நம்ம பய…அஞ்சாறு வருஷமா இந்தச் சென்னைலதான இருக்கான்…அவனுக்காச்சும் தெரிய வேண்டாம்….அவனும் ஒண்ணும் சொல்லலியே? சுத்திவர இம்புட்டு வீடுகள் இருக்கு…மாட மாளிகையா…கூட கோபுரங்களாக் கெடக்கு…இவங்களெல்லாம் முட்டாள்களா என்னன்னுதானே தோணித்து? பக்கத்துல ரயில்வே ஸ்டேஷன்…எல்லா ஜவுளிக் கடையும், நகைக் கடையும், பாத்திரக் கடையும்…பல மாடில…ஜேஜே…ன்னு இருக்கு…பக்கா ஏரியா…எதுக்கும் சிட்டிக்குள்ள போகவே வேண்டாம்….-எப்படி திருப்தி வந்தது? அண்ணா வீடும், தங்கை வீடும், மற்ற உறவினர்கள் வீடும் அஞ்சு ரூபாய் ரயில் பயணத்தில், டூ வீலர் போகும் தூரத்தில் கிடைக்கிறதே என்கிற வசதி கண்ணை மறைத்து விட்டதோ? இப்போது நினைத்து நொந்து என்ன பயன்? அப்படி எத்தனை முறை அவர்களைப் போய்ப் பார்த்து விட்டோம்,? அவரவர் வேலை அவரவருக்கு என்று ஆகிப் போனதே…! சும்மாச் சும்மாப் போனா சங்கடமா ஃ.பீல் பண்ணுவாங்கங்கிற எண்ணம் வந்து விட்டதே…! விலகியிருந்தால்தான் உறவு என்றாகிப் போனதே…! அட…ஃபோனில் பேசுவது கூடக் குறைந்துதானே போனது…! இந்தக் காலம் எல்லோரும் தனித் தனியாய் இருக்கும் காலம்…! அதனால்தான் தீவு தீவாய் நின்று அவதிப்படுகிறார்களோ?

தண்ணி நின்னா என்ன, கொளம் ஆனா என்ன…அட…கடலே புகுந்தாத்தான் என்னன்னு மக்கள் ஆயிட்டாங்களோ…? சென்னைல எங்கதான் தண்ணி நிக்கல? தனக்கு யோசனை சொல்லாத உறவுக்காரங்க இருக்கிற பகுதிலயும் கூடத் தண்ணி தேங்கித்தானே கிடக்கு? என்ன…அங்க நாலு நாள்ல வடியுற தண்ணி இங்க ஒரு வாரம் ஆகுது….

தண்ணி வரும்சார்…ரெண்டு மூணு நாள்ல வடிஞ்சிடும்…ஒண்ணும் பிரச்னையில்ல சார்….பில்டர் கொடுத்த நம்பிக்கை இது….அது சரி…உனக்கெங்கே போச்சு  புத்தி? தன் பின் மண்டையில் தானே தட்டிக் கொண்டார் அங்குசாமி. வெளியே மழை பேயாட்டம் போட்டது. கொஞ்ச நேரம் முன்னால்தான் கீழே போய் பார்த்து வந்தார். ரோட்டை விட்டுத்தாண்டி கார் பார்க்கிங்கிற்குள் புகுந்து கொண்டிருந்தது. லைட் கம்பங்கள் ஏறக்குறைய பாதி மூழ்கி விட்டன எனலாம். நல்லவேளை கரன்ட் அணைத்துவிட்டார்கள். இல்லையெனில் உயிர்ப்பலி நேரும். அந்த மட்டும் பாதுகாப்பு. அங்கங்கே சாலையில் சின்னச் சின்ன மரங்கள் சாய்ந்திருந்தன. தூரத்தில் ஒரு  மின் கம்பமே சாய்ந்து கிடந்தது. எங்கோ மொபைல் டவரே விழுந்து விட்டது என்றார்கள். மாடிக்கு மாடி கத்திப் பேசிக் கொண்டார்கள். எல்லாம் வயசுப் பையன்கள். மொட்டை மாடியில் குடையைப் பிடித்துக் கொண்டு சந்தோஷமாய், குதூகலமாய்த் திரிந்தார்கள். எவரும் விபரீதங்களை உணர்ந்தமாதிரித் தெரியவில்லை.

போட் வருது…போட் வருது…தண்ணி பாட்டில் இருந்தா வாங்கிட்டு வாங்க…அப்டியே பால் பாக்கெட் இருக்கா கேளுங்க…

ஈஸ்வரி  சொன்னதுதான் தாமதம்…ஒரு பையை எடுத்துக் கொண்டு கீழே ஓடினார் அங்குசாமி. படியிறங்கும்போது ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று மனசு சொல்லியது. தரை வரை படிகளில் ஒரே ஈரம். அஞ்சு நாளாச்சு….லிப்டில் தண்ணீர் இறங்கி….நின்று போனது. போதாக் குறைக்கு கரன்ட் கட் வேறு. மேகம் மூடி வெளிச்சமேயில்லை. இருளில் கவனமாய் நடக்க வேண்டியிருந்தது. .தெருக் குளத்தில் இறங்கி கரன்ட் பாசாகி மக்கள் சாகவா? பரவாயில்லை. அந்த மட்டுமாவது அலெர்ட்டாய் இருக்கிறார்களே என்று தோன்றியது.

முதல் மாடியில் இருக்கும் ஐ.ஜி.யம்மா…எனக்கும் வாங்கிட்டு வர்றீங்களா…என்று கதவை அவசரமாய்த் திறந்து கொண்டு பையை நீட்டியது.   அவன் தர்றானோ இல்லையோ…ஒரு வீட்டுக்கு ஒண்ணுதான்ம்பான்…நீங்க பால்கனி வழியா தலையை நீட்டி சத்தம் கொடுங்க…அப்பத்தான் தருவான்….-சொல்லியவாறே இறங்கினார் அங்குசாமி.

அந்தம்மாவுக்கு கால் மூட்டு போச்சு. நாலு தப்படி வைப்பதே பெரிசு. அது எங்கே கீழே இறங்கி வர. 2015 வெள்ளத்தின் போது அதை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய்த்தான் படகில் வைத்தார்கள். அதோடு அதாய் அது தன் சகோதரி வீட்டுக்குப் போய்த் தப்பித்தது. அந்த வீடு வரையிலும் படகுப் பயணம். அந்த மட்டுக்கும் கூப்பிடவாவது ஆள் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டார் இவர். திருமணமாகாத தனிக்கட்டை. ஆனாலும் தைரியம்தான்.

 அபார்ட்மென்டில் ஒரு காக்காய் குஞ்சு இல்லை. எல்லாரும் அலெர்ட் ஆகி முன்னமே கம்பி நீட்டி விட்டார்கள். தப்பிச்சோம், பிழைச்சோம் என்று அ வரவர் சொந்த ஊர் போயாயிற்று. மாட்டியவர்கள் இரண்டே குடும்பம். ஒன்று முதல் தளத்தில் இருக்கும் அந்தம்மா. இரண்டாவது மாடியில் இவர்கள்.

சார்…சார்…ஒண்ணு பத்தாது….அஞ்சு பேர் இருக்கோம்…மூணாவது கொடுங்க….-தண்ணீர் பாட்டிலுக்கு பையில் விழுந்த ஒன்றைப் பரிதாபமாய்ப் பார்த்துக் கொண்டு சொன்னார் அங்குசாமி. இடுப்பளவில் நீர் ஓடியது. ஏதேனும் பாம்பு ஓடுமோ என்று பயம் வேறு. காலில் செத்தை குப்பை ஏதேனும் சுற்றினாலும் பயம் வந்தது. சாக்கடைத் தண்ணீர் நாறியது. பிறகென்ன…மணக்கவா செய்யும்?  நடந்து போறவன்லாம் மனுனில்லையா?

ஒரு கி.மீ தள்ளியுள்ள ஏரியைத் திறந்து விட்டு விட்டார்கள். அந்தத் தண்ணீர் பூராவும் இந்த நகர்ப் பள்ளத்திற்குத்தான் வருகிறது. சாலையில் விடுகிறோம் என்று சொல்லி உடைத்து விட, அது சாலையைத் தாண்டி சில தெருக்கள் தாண்டி கடைசியில் இந்த மேத்தா நகருக்குள் புகுகிறது. பகுதி பகுதியாய் உடைத்து விட்டாலும் பரவாயில்லை. பிரிந்து போகும். ஒரே உடைப்பாய் இப்பகுதிக்குத் திறந்து விட்டால்? அங்குள்ள மக்களின் யோசனையா அல்லது கார்ப்பரேஷனே இப்படிச் செய்கிறதா? அந்த மக்கள் புண்ணியவான்கள் என்றால் இங்குள்ளவர்கள் பாவிகளா? யாருக்குமே பாதிப்பு இல்லாமல் ஒன்றை எப்படிச் செய்வது என்று யோசிக்கவே மாட்டார்களா? நிரம்பிய தண்ணீர் நகருவதாகவே தெரியவில்லை. குளமாய்த் தேங்கிக் கிடக்கிறது. என்று வடிந்து என்று சாதாரண இயக்கம் ஆரம்பிக்கும்? யாருக்குத் தெரியும். கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

உதவிகள் செய்ய வருபவர்கள் தனியாரா அல்லது அரசா என்றே தெரியவில்லை.  அங்கொன்றும் இங்கொன்றுமாக… வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எந்த அரசியல்வாதியுமோ, ஆட்சியாளர்களுமோ காணவில்லை. கால் நனையும் அளவு இருந்தால் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வருவார்கள். வேட்டியும், சேலையும், உணவும், தண்ணீரும் தருவதுபோல் படம் எடுப்பார்கள். இடுப்பளவு தண்ணீரில் எந்த அரசியல்வாதி வருவான்? எந்தத் தலைவன் வந்து உதவி செய்வான்? இடுப்பளவு தண்ணீரில் என்றாவது இறங்கி நின்றிருப்பார்களா? எல்லாம் அந்தப் பாவப்பட்ட ஜனங்களுக்குத்தான்…

ஒரு இரும்பு போட் வந்து கொண்டிருந்தது. எட்டு ஜவான்கள் அதில். சாலையில் நாற்பது ஐம்பது பேர் தண்ணீரில் நின்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கடந்து போனது.

இந்த ஏரியாவுல ஒரு மிலிட்டரி ஆபீசர் இருக்காராம். அவரையும், குடும்பத்தையும் கூப்பிட்டுப் போறதுக்கு இந்த போட் வந்திருக்குதாம். யாரோ ஒருத்தர் சொன்னார்.

காப்பாத்தட்டும்…யாரும் வேணாங்கலை. இங்கே அம்போன்னு நின்னுட்டிருக்கிற ஜனங்களையும் கொண்டு போய்க் கரை சேர்க்கலாமில்ல? இந்தப் புலம்பல் அவர்கள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அந்த ஜவான்கள் தமிழ் ஆட்கள் மாதிரியும் தெரியவில்லை. இந்தியில்தான் சம்பாஷித்துக் கொண்டார்கள். இந்தப் பரிதாப மக்கள் பக்கம் அவர்கள் பார்வையே திரும்பவில்லை. உங்களுக்குத்தான் உங்க அரசாங்கம் இருக்குதே? என்று நினைத்து விட்டார்களோ என்னவோ? அப்டியா? என்று யாரோ கேட்டது போலிருந்தது.

ல்லாருக்கும் கொடுக்கணும் சார்…இந்தாங்க இன்னொண்ணு…அவ்வளவுதான்…..எப்படித்தான் மனசு வந்து கொடுத்தானோ? அந்தம்மாவுக்கு…?

எந்தம்மா…? கோபமாய்க் கேட்டான் அவன். அதோ…பால்கனிலர்ந்து கத்துறாங்களே…அவங்களுக்கு….காதுல விழலியா? இந்தாங்க…பிடிங்க…-இன்னொரு பாட்டிலைப் போட்டான்.

பால் பாக்கெட்….?  விடாமல் கேட்டார் அங்குசாமி. காலையிலிருந்து காபித்தண்ணி தொண்டையில் இறங்கவில்லை. அதுவே பெரிய அலர்ஜியாக இருந்தது. வெந்நீராய்க் குடித்து ஆற்றிக் கொண்டிருக்கிறார். எவனோ கொண்டு வந்த பால் பாக்கெட்டை பொழுது விடியும் முன்னே தட்டுத் தடுமாறி கீழே போய் இருட்டுக்குள் வாங்கி வந்தார்தான். இருபத்தஞ்சு ரூபாய் பால் பாக்கெட்டை அவன் அம்பது சொன்னான். நூத்தம்பது கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து ஏதோ சாதனை செய்து விட்டதுபோல் ஈஸ்வரியிடம் பீற்றினார். மூணு பாக்கெட் பாலுமே திரிந்து போனது. இந்த வெள்ளத்தைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள்? எந்தப் பாலைக் கொடுத்தானோ, நேத்திக்குப் பாலோ, முந்தாநேத்திப் பாலோ…இருட்டுல எங்க பார்க்க முடிஞ்சிது?அதுல ஒரு குளிர்ச்சியே இல்லை. அப்பவே சந்தேகப்பட்டேன்…போனாப் போகுது…ஒரு தொழிலாளிக்குதானே போச்சு…பிழைச்சுப் போறான்…-மனம் பரிதாபப்பட்டது.

அந்தத் திரிஞ்ச பாலை அப்டியே பால்திரட்டாப் பண்ணிடேன்…-என்றார். வந்ததே கோபம் ஈஸ்வரிக்கு. இன்னும் அதுக்கு வேறே கேஸ் வேஸ்டா? அது மணிக்கணக்கா காயும். திரண்டு வர்றதுக்குள்ள சிலிண்டர் காலியாயிடும். எவ்வளவு ஜீனியாகும் தெரியுமா உங்களுக்கு? இம்புட்டு அல்லல்லயும் அய்யாவுக்கு பால்கோவா கேட்குதாக்கும்? – அவள் கோபத்தைக் கண்டு பெரிதாகச் சிரித்துக் கொண்டார் அங்குசாமி. வேணாந்தாயி…இந்த வசவையும் வாங்கிக்கிட்டு பால்கோவா தொண்டைல இறங்குமா இல்ல ருசிக்குமா?

பால் இல்ல சார்….தீர்ந்திடுச்சு….அடுத்தாப்ல போட் வரும். அதுல வாங்கிக்குங்க… சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்கள் அவர்கள். அத்தனை மழையிலும் வாடிக்கையாளர்களுக்குப் பால் கொடுத்தாக வேண்டுமே என்று ஒருவர் டூவீலரில் பின்னால் ஒருவரை பால் டப்பாவோடு அமர்த்திக் கொண்டு ஓட்டி வந்தார். அவருக்கு மட்டும் எப்படி இந்த வண்டி ஓடுகிறது? ஆச்சரியமாயிருந்தது. வாடிக்கைக்கு மட்டும்தான் சார்..வேறே பாக்கெட் இல்லை என்றார். ஒண்ணே ஒண்ணு கொடுங்க என்று கெஞ்சுவதுபோல் கேட்டார் இவர். இல்லசார்…இருந்தா தர மாட்டனா? என்று கருணை வள்ளலாய்ச் சொன்னான் அந்த ஆள்.

கவனமாய்த் திரும்பினார்.  மழைக்கு முன்பு தோண்டி விட்ட ஒரு பொந்து எங்கிருக்கும் என்று அவர் மனசு தேடியது. அதிலிருந்து விலகி நடக்க வேண்டும் என்று  மனசு எச்சரித்தது.  முதல் நாள் ஒராள் அதில் காலை விட்டு எடுக்க முடியாமல் தவித்ததும், ஒருவர்  விக்-கென்று இழுத்ததும், கடுமையான சிராய்ப்பில் அவருக்குக் காயமாகிப் போனதும், மழை நீர் வடிகால்  வேலை பாதியில் நின்றது..அங்கங்கே சல்லடைகள் வைக்காமல் விட்டு விட்டதும், தெருவுக்கு ரெண்டு என்று   துளை போட்டு இடித்து விட்டிருப்பதும், அதிலும் குப்பைகள் போய் திணித்து நின்று தண்ணீர் தேங்கி நிற்பதும்,  தண்ணி குறைஞ்சப்பெறவுதான் சார் ஆள் வரும் என்று மாநகராட்சிப் பணியாளர்கள் போட்டில் போகையில் சொன்னதும்….

ஒருவழியாய் அபார்ட்மென்டின் கரையை அடைந்தார் அங்குசாமி. பை நீட்டி போடுங்க…போடுங்க…என்று ஏந்தியபோது பலரது வீட்டு ஆட்களும் இங்கேயே பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது அவருக்கு. அவர்கள் யாரும் தண்ணீர் பாட்டில் வாங்க வந்ததாய்த் தெரியவில்லை. ஒருவேளை முன்பே முன் ஜாக்கிரதையாய்ச் சேமித்து விட்டார்களோ? பாலுக்குக் கூட எவரும் வாய் திறக்கவேயில்லையே? ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் கூட ராத்திரியே கரன்ட் போனதால் அந்தப் பால் கெட்டுப் போய் விடுமே…!

என்ன…இவரெல்லாம் வந்து கையேந்துறாரு…? என்பதுபோல் பணியாள் ஒரு பார்வை பார்த்தது…இவருக்குச் சிரிப்பை வரவழைத்தது. நானும் உங்கள மாதிரித்தான்யா….சாதாரண ஆள்தான்…  நடுத்தர வர்க்கம்தான்… பணக்காரன்லாம் இல்ல…-என்று அவர்களுக்குச் சொல்லணும் போலிருந்தது இவருக்கு.ஐயா…ஐயா…என்று அவர்கள் விளித்ததுதான் இவரைக் கூச்சப்படுத்தியது. ஓசி வாங்குறதுல என்ன கூச்சம் வேண்டிர்க்கு. ஐயாவாவது…கொய்யாவாவது? தேவை, பஞ்சம்னு வந்தா எல்லாரும் ஒண்ணுதான்…குஜராத்துல பூகம்பம் வந்தபோது முதநாள் சாயந்திரம் கோடீஸ்வரனா இருந்தவன்லாம், மொத்தத்தையும் இழந்திட்டு மறுநாள் காலைல ரோட்டுக்கு வந்துட்டான்…-நினைத்துக் கொண்டார்.

தண்ணீர் பாட்டிலை நீட்டிய போது பெரிய செல்வமே கிடைத்ததுபோல் உணர்ந்தாள் ஈஸ்வ ரி.

2015-ல….குலசேகரன்னு ஒரு பையன் இருந்தானே…ஞாபகம் இருக்கா? நமக்காக கேஸ் சிலிண்டர் வாங்கிட்டு தண்ணீலயே நடந்து தலைல சுமந்து வந்து கொடுத்தானே? மறந்திட்டியா…அப்புறம் எங்கயோ போய் தண்ணிக் கேன் வாங்கிட்டு வந்தானே…? எவ்வளவு உதவி…அந்தப் பசங்களெல்லாம் ஆளக் காணல…இருந்தா எவ்வளவோ உதவியா இருப்பாங்க….கொடுக்கிற காசை சந்தோஷமா வாங்கிப்பாங்க…

ஏன்…இப்பயும் பக்கத்துல கன்ஸ்ட்ரக் ஷன் நடக்குதே…அந்த வெளி மாநிலப் பசங்ககிட்டச் சொன்னா செய்யத்தான் செய்வாங்க….

அட நீ வேறே…அவுங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கிறதே பெரும்பாடுடி…அவிங்க பொழப்பே நாறிக் கெடக்கு….எவண்டா ஓசி கொண்டுவருவான்னு காத்துக் கிடக்கிறத நீ பார்க்கலியா…? சோத்துப் பொட்டணம், பிஸ்கட்டு, ரொட்டின்னு கிடைக்கிறதெல்லாம் வாரிப் போட்டிட்டிருக்காங்களே….தலையை நீட்டி கொஞ்சம் வெளி உலகத்தைப் பாரு…தெரியும்….நாலு மாடிக் கட்டடம் இன்னும் முடியலைல்ல…பக்கத்துல…அங்க பக்கமா உறலிகாப்டர் பறந்திச்சே…அதக் கவனிச்சியோ…கையை அசைச்சு அசைச்சு குதி குதின்னு குதிச்சு….போட வச்சிட்டாங்களே…மாடில அவுங்க தலைல இடிக்கிறமாதிரி இறங்கி வீசினதப் பார்த்திருக்கணுமே….சாமர்த்தியமான பசங்கதான்….கடுமையான உழைப்பு…அதுக்கு ஏத்தாப்ல சாப்டாத்தானே அடுத்தடுத்து வேல செய்ய முடியும்? பாவமில்லையா? அவுங்களாவே காலித் தண்ணிக் கேனை வச்சுக் கட்டி ஒரு போட் தயாரிச்சிருந்தாங்களே…கவனிச்சியோ…? அதுல போயி வேணுங்கிறத வாங்கிட்டு வந்திட்டாங்க….ஏற்கனவே அனுபவம் இருக்கும் போல…..ஒருவேளை அவுங்கதான் அந்தப் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் பால் பாக்கெட் வாங்கிக் கொடுத்திருப்பாங்களோன்னு நினைக்கிறேன்…எல்லாப் பயலுகளும் காபியும், டீயும் சூடா இறக்கிட்டு, பால்கனில நின்னு வேடிக்கை பார்க்கிறதைப் பார்த்தியா? நமக்குத்தான் ஆளில்லை….

உறலிகாப்டர் சில இடங்களில் சாப்பாட்டுப் பொட்டலங்களைப் போட்டது போலிருந்தது. குறிப்பாக மொட்டை மாடியில் கூட்டமாய் நின்று எங்கே கத்துகிறார்களோ அங்கு மட்டும் கிடைத்தது. ஒன்றிரண்டு பேர் நின்று கை அசைத்துப் புண்ணியமில்லை. உயரேயிருந்து போடும் பார்சல் கீழே விழுந்தால் சிதறிப் போகாதா? எல்லாவற்றையுமா கேட்ச் பிடிக்க முடியும்? அதுரோட்டில் விழுந்தால்? எத்தனை வீணானதோ? என்று தோன்றியது இவருக்கு.

ப்பா…அங்க பேசிட்டேயிருக்காதே….சீக்கிரம் மாடிக்கு  வா… -ரகுவரன் கத்துவது கேட்டது.          எதுக்கு மாடிக்குக் கூப்பிடுறான்…? என்றார் அங்குசாமி.

கீழே சம்ப் தண்ணி பூராவும் சாக்கடை இறங்கி கெட்டுப் போச்சு. அதை மோட்டார் வச்சு வெளியேத்திட்டுத்தான் புது லாரித் தண்ணி இறக்க முடியும். மோட்டார் ரிப்பேர் ஆகாம இருக்கணும். அதுக்கு எத்தனை செலவோ? அதுவரைக்கும் உபயோகத்துக்குத் தண்ணி வேணாமா? இந்த வெள்ளத்துல எப்டி நடந்து போய்த் தண்ணி கொண்டு வர்றது? மேல் தொட்டில கொஞ்சம் தண்ணி அடில கிடக்கும். அதை ஒவ்வொரு கப்பா எடுத்து விட்டுத் தருவான். அந்த வாளியை பத்திரமா கீழே கொண்டு வாங்க….அதுக்குத்தான் கூப்பிடறான்…சத்தமாப் பேசி ஊரக் கூட்டாதீங்க…

தொட்டி அடில இருக்கிற தண்ணி வீட்டுக் குழாய்ல வராது. ஒரு லெவலுக்கு மேலேதான் லைன் கொடுத்திருக்கான்…அதனால அதுக்கு அடில இருக்கிற தண்ணி தேங்கிக் கிடக்கும். கெட்டுப் போகும். அதுக்கு முன்னாடி அதை நாம உபயோகப்படுத்திக்கலாமே…? – மேலும் சொன்னாள் ஈஸ்வரி.

இந்த யோசனை தனக்கு வரவில்லையே…! இதுக்குத்தான் பொம்பளைங்க வேணும்ங்கிறது. அதுவும் ஐடியாதான்…என்று மகிழ்ந்து கொண்டார்.     போதும் புகழ்ந்தது…போய் தண்ணியத் தூக்கிட்டு வாங்க…-உரிமையோடு அதிகாரம் செய்யும்போது  ஒரு தனி இன்பம்தான்.

மாடிக்கு  ஓடினார் அங்குசாமி. மேல் சாரத்தில் ஏணி வழியாய் ஏறி, தொட்டிக்குள் இறங்கியிருந்தான் ரகுவரன். இவரும் மேலே ஏறலாமா என்று யோசித்தார். கொஞ்சம் பயமாய்த்தான் இருந்தது.

சமீபத்தில்தான் இந்த பயம் வந்திருந்தது. வயது எழுபதை நெருங்குகிறது.  எங்கேயாவது எக்குத் தப்பாய் ஏறி இறங்கி கால் கையை உடைத்துக் கொண்டால் பிறகு சேராது. அடுத்தவர்களுக்குப் பாரமாய்ப் போகும் பிறகு வரும் நாட்கள். உயிருள்ளவரை கால் கை இயக்கத்தோடு இருந்து அப்படியே போய்ச் சேர்ந்து விட வேண்டும். யாருக்கும் நம்மால் எந்தக் கஷ்டமும் நேர்ந்து விடக் கூடாது. இது அவரின் கடைசி விருப்பம்.

அப்பா…நீங்க கீழேயே நில்லுங்க…நான் இறங்கித் தர்றேன். பிறகு கொண்டு போங்க… என்றான் ரகுவரன்.  அப்பாவின் நிலையறிந்துதான் பேசுகிறான். படிகளில் தூக்கிக்கொண்டு போய் வீட்டு வாளியில், அண்டாவில் சேர்க்க வேண்டும். முடியமா? யோசனை வந்தது. பயம்தான். ஆனாலும்….படிகளில் கொண்டு போக தண்ணி வாளியைத் தூக்கிக் கொண்டு நடந்த போது. ரெண்டு ரெண்டு படியாய் நகருவதுதான் பாதுகாப்பு என்று தோன்றியது.

நா வேணா கொண்டு போகட்டாப்பா…-குரல் கொடுத்தான் ரகுவரன். உன்னால முடியுமாப்பா…? திரும்பவும் கேட்டான்.

வேணான்டா கண்ணா…நீ எவ்வளவுதான் செய்வே…கொஞ்சமாச்சும் நான் உதவியா இருக்க வேண்டாமா? ரெண்டு ரெண்டு படியா இறக்கிடுவேன். நா வர்ற வரைக்கும் நீ ரெஸ்ட் எடு. இன்னும் ஏழெட்டு வாளி தேறுமே…உட்கார்ந்திரு… - சொல்லிவிட்டு ஜாக்கிரதையாக மாடிப் படிகளில் முதலில் தான் இறங்கிக் கொண்டு, ரெண்டு ரெண்டு படியாய் இறக்கி வைத்தார். அப்படியும் தண்ணீர் அலம்பத்தான் செய்தது. படிகளில் சிந்தியது. அதில் கால் பதித்து வழுக்கி விடக் கூடாது என்ற ஜாக்கிரதையுணர்வு வந்தது.

அடுத்தடுத்து மூன்று வாளிகளை எப்படியோ தடுமாறாமல் கொண்டு சேர்த்தார் அங்குசாமி. திடீரென்று ஒரு நினைப்பு வந்தது. அதைச் சொன்னால் ஈஸ்வரி என்ன சொல்வாளோ? பையனைக் கூட சமாளித்து விடலாம். அவள்?

ஈசு…ஈசு…நா ஒண்ணு சொல்றேன் கேட்பியா…? –

என்ன…சொல்லுங்க…டீ வேணுமா….போட்டுத் தர்றேன்….

மணியாயிடுச்சு….அடுத்து சாப்பாடுதானே….இன்னும் சில வாளிகள் தேறும்….அந்தம்மாவுக்கு ரெண்டு மூணு  வாளி கொண்டு கொடுப்பமே….-தயங்கியவாறே சொன்னார்.

இதுக்கு எதுக்குத் தயங்குறீங்க…தாராளமாக் கொண்டு கொடுங்க…அவுங்க பங்கும் இருக்கே அந்தத் தண்ணில…எல்லாரும் காசு  பிரிச்சுப் போட்டுத்தானே லாரித் தண்ணி வாங்குறோம்….உரிமை உண்டுல்ல…? இவ்வளவு பரந்த மனதோடு அவள் சொல்வாள் என்று இவர் எதிர்பார்க்கவில்லை. இக்கட்டு என்று வரும்போது மக்கள் எவ்வளவு இரக்கச் சிந்தையோடு மாறி விடுகிறார்கள்?

அப்பா நீ இரு…நான் போய் ஐ.ஜி. மேடத்துக்குக் கொடுத்திட்டு வர்றேன். இன்னொரு மாடி இறங்கணும். உன்னால முடியாது. நீ உட்காரு….என்று விட்டு ஏணியில் இறங்கி, தண்ணி வாளியைத் தூக்கிக் கொண்டு படியிறங்கினான் ரகுவரன். வயசுப் பசங்கன்னா. வயசுப் பசங்கதான். எப்டித் தூக்கிட்டு திங்கு திங்குன்னு போறாம்பாரு….

வழுக்கும்டா…பார்த்து…கவனமாப் போ…என்று எச்சரித்தார் இவர். காலையிலிருந்து உட்காராமல் அலைந்து கொண்டிருக்கிறான். அவன் மனைவியையும், குழந்தையையும் கொண்டு அவர்கள் பிறந்த வீட்டில் முதல் வேலையாக விட்டு விட்டு வந்தான். குழந்தையைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு, தண்ணீரில்தான் நடந்து போனார்கள். மெயின்ரோடு போய் ஆட்டோ பிடித்து அவர்களைச் சேர்த்தாயிற்று. அந்த அபார்ட்மென்ட் பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. தனக்கு அப்படி வாங்கத் தெரியவில்லையே என்கிற ஆதங்கம் உண்டு இவருக்கு.  அதான் வித்துத் தொலைன்னா கேட்க மாட்டேங்கிறானே என்று பையன் மேல் ஆத்திரம் வந்தது.

நீங்க எல்லாருமே இங்க வந்திடலாம்….உங்க இடத்துல தண்ணி வத்தினதும் போனாப்போதும்…ஆதரவாய்த்தான் சொன்னார் சம்பந்தி.

ஈஸ்வரிதான் வேண்டாம் என்று விட்டாள். இவரைப் பொறுத்தவரை ஒன்றுமில்லைதான். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருந்து விடுவார் இவர். ஆனால் அவளை மீறி எப்படிப் போவது? இருக்கட்டும்…நாங்க சமாளிச்சிக்கிறோம்…என்று முடித்து விட்டாள். சகஜ பாவம் என்பது எல்லோருக்கும் எல்லா இடத்திலும் வந்து விடுவதில்லையே! பையனின் மதிப்பு எவ்விதத்திலும் குறைந்த விடக் கூடாது அவளுக்கு.

ஐ.ஜி மேடம் நெக்குருகிப் போக…ரகு…ரகு…உன் உதவி ரொம்ப…எனக்கு…உங்க பையன் நான் எது சொல்லியும் தட்டினதேயில்லை. எத்தனை தடவை எனக்காக அலைஞ்சிருக்கான் தெரியுமா? நீ நல்லாயிருப்பே…என்னோட ஆசீர்வாதம்….மாடிலர்ந்து ஏணி மேலே ஏறி…மேல் தொட்டில தண்ணிய இறைச்சுக் கீழே இறக்கிக் கொண்டு வந்து கொடுக்கிறதுன்னா அவ்வளவு சாதாரணமா என்ன? யு உறாவ் டன் எ வெரி குட் ஜாப்…“ – கன்னத்தில் தட்டிப் பாராட்டினார்கள் அவனை.

அவங்கள ஏண்டா ..ஐ.ஜி மேடம்னு கூப்பிடுறீங்க…என்றார் ஒரு நாள்.

இன்னும் ரெண்டு வருஷம் பொறுத்துக் கேளு….என்றான் ரகுவரன்.

சிரித்துக் கொண்டே …ஏம்ப்பா…இப்டிச் சொல்றே…? என்றார்.

பின்ன என்னப்பா…அவுங்கதான் இந்த அபார்ட்மென்டுக்கே முதல் முதலா குடி வந்தவங்க…அப்புறம் நாம வந்தோம்….ஐ.ஜி ஆபீஸ்ல வேலை பார்த்து ரிடையர்ட் ஆகியிருக்காங்க…அதனால ஒரு அடையாளத்துக்கு அதுவே பேராயிடுச்சு….அவ்வளவுதான்….

அவ்வளவுதானா….? அவுங்க ஒரிஜினல் பேரு….?

விடமாட்ட போல்ருக்கே….கரெக்டா கொக்கியப் போட்டுட்டியே….இதப் பத்தி நா இதுநாள் வரைக்கும் யோசிச்சதேயில்லப்பா….எனக்குத் தெரியாது…

பார்த்தியா…உன்னை மடக்கிட்டனா…? அவங்க பேரு பிரேமலதா. தெரிஞ்சிக்கோ…..

அதெப்படிப்பா உனக்குத் தெரியும்…?

மெட்ரோ வாட்டர் லாரி புக் பண்றோம்ல. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நம்பர் கொடுப்பான் அவன். அப்போ அவுங்க பேரைப் பதிஞ்சு, வீட்டு எண்ணையும் போட்டு படிவம் ஃபில் அப் பண்ணிக் கொடுத்ததே நான்தான்…இந்த அபார்ட்மென்ட்ல எல்லா பேசிக் ஒர்க்கும் செய்தது அடியேன்தான். எல்லா வீட்டுக்கும் சேர்த்து தலைல ஒவ்வொரு வேலையையும் சுமந்திருக்கேன். இதுக்கு, இ.பி.கனெக் ஷனுக்கு…ஆதார் கார்டுக்கு, பேன் கார்டுக்கு அட்ரஸ் மாத்தன்னு,  ரேஷன் அட்டைக்குன்னு அத்தனையையும் பொறுமையா செய்து கொடுத்தவன் நான்……இப்ப என்னடான்னா…இந்த மழை நேரத்துல எல்லாப் பயலுவளும், தான் தப்பிச்சாப் போதும்னு கம்பி நீட்டிட்டானுங்க….மனுஷங்களே சுயநலம் பிடிச்சவனுங்க…அதுதான் இயற்கை. தான் தப்பிக்கிறது எப்படின்னுதான் அவன் சிந்தனை ஓடும். தன்னை சேஃப்டியா வச்சிக்கிட்டு அப்புறம்தான் நேரம் இருந்தா அடுத்தவனப் பத்தி நினைப்பான்….இப்போ இந்த அபார்ட்மென்ட்டுல எவனாச்சும் நம்ம உதவிக்கு இருக்கானா பார்த்தியா? எல்லாப் பயல்களும் இழுத்துப் பூட்டிட்டு காணாமப் போயிட்டானுங்க  எல்லா வேலைகளையும் நாமளே பார்த்து, அபார்ட்மென்ட் பழையபடி தயார் ஆனதும் வருவானுங்க….அதுவரை எவனும் அசையமாட்டான். உன்கிட்டே ஃபோன் பண்ணி பொஸிஷன் என்னன்னு கேட்கிறானா இல்லையா பாரேன்….உறுதி செய்யாம எவனும் தலை காண்பிக்க மாட்டான்….

அப்பா…நீ ஒரு முக்கியமான விஷயத்த மறந்திட்டே…எல்லாரும் அவங்கவுங்க ஊருக்குப் போனது  நல்லதாத்தான் போச்சு. இல்லன்னா மாடித் தொட்டிலர்ந்து இத்தனை வாளித் தண்ணி கிடைச்சிருக்கமா யோசி…! அம்புட்டுப் பேரும் நான்…நீன்னு வந்து நின்னிருப்பானுங்க…ஆளுக்கு ஒரு வாளி கிடைச்சிருந்தாலே அதிகம். இப்போ நாம வெளில அலையாம….இந்தச் சாக்கடைத் தெருக்குளத்துல இறங்கி அவஸ்தைப்படாமக் கழிஞ்சிதில்ல…கெட்டதுல ஒரு நல்லது….அந்த மட்டுக்கும் திருப்திப்படு…..- ரகுவரன் சொன்னதும் ஒருவகையில் சரிதான் என்று தோன்றியது.

ன்னவோ ஒரு வேகத்தில் எல்லா வேலைகளையும் செய்தாயிற்று. காலையிலிருந்து ரகுவரன் உட்காரவேயில்லை. தண்ணிரிலேயே அவன் நடந்து போய் பலசரக்கு சாமான்களை வாங்கி வந்ததும், மெயின் ரோட்டிலும் பால் கிடைக்காததும், தண்ணீர் கேன் கிடைக்காததும், பாட்டில் பதினஞ்சு ரூபாய் என்று ஒரு கேஸ் வாட்டர் பாட்டில்களை அள்ளி வந்ததும், அந்தப் பன்னிரண்டு பாட்டில்களும் இப்போது தீரும் நிலைக்கு வந்திருந்ததும்…

இனிமே எங்கேயும் அலையாதே என்று அவனை இருத்தி வைத்ததும்…இருள் கவிந்த வேளையில் ரகுவரனின் உடம்பு காய்ச்சலுக்கு ஆட்பட்டிருந்ததும்…..

 டோலோ 650 இருக்குப்பா…அதோட ஒரு பீகாம்ப்ளெக்ஸை சேர்த்துப் போட்டுட்டுப் பேசாமப் படு….என்றார் அங்குசாமி.

தாளாத உடம்பு வலியிலும் தலைவலியிலும் அசந்து ஒடுங்கியிருந்தான் ரகுவரன். அவனுக்கு இந்த அபார்ட்மென்ட்டை வாங்கிக் கொடுத்து பெருத்த சிரமத்திற்கு ஆளாக்கி விட்டோமோ என்று வருத்தப்பட்டார் அங்குசாமி. மூன்று மாதத்திற்கு ஒருவர் மெயின்டனன்ஸ் பார்க்க வேண்டும். நான் மாட்டேன்…நீ மாட்டேன் என்றார்கள்.  தண்ணீர் லாரி. மின்சாரம், லிப்ட், பெருக்கிக் கூட்டி சுத்தம் செய்யும் ஆள் சம்பளம் என்று பராமரிப்புச் செலவு மிக அதிகம் என்று ஆளாளுக்குப் புலம்பினார்கள். பராமரிப்புப் பார்க்கும் ஆளுக்கு பைசாவை தாமதிக்காமல் கொடுத்தால்தானே? பத்துத் தரம் வாட்ஸப் போட்டு. ரிமைன்ட் பண்ணி அனத்தி அனத்திப் பிடுங்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் எல்லோரும் ஐ.டி. பணியாட்கள்தான். லட்சம் எண்ணிக்கையில் சம்பளம் பாங்குபவர்கள்தான். மனசு வேண்டுமே! வாட்டர் மீட்டர் கணக்கை தப்புத் தப்பாய் எடுத்தார்கள். தப்புத் தப்பாய் தொகையைக் கணக்குப் பண்ணினார்கள். வேண்டுமென்றெ செய்கிறார்களோ என்று எண்ண வைத்தது. அவரவர் தண்ணீர் செலவினை அவரவர் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டார்கள். அதில் சண்டை வந்தது. அபிப்பிராய பேதம் முளைத்தது. இனிமே நான் மெயின்டனன்ஸ் பார்க்க மாட்டேன் என்று நழுவப் பார்த்தார்கள். எப்பப் பார்த்தாலும் ஏதாவது பிரச்னை இருந்து கொண்டுதான் இருந்தது. ஆனாலும் இடம் பெயர மாட்டேன் என்றால்? இதுவே பெரிய மனப்பாரமாய் இருந்தது அங்குசாமிக்கு. வறுத்திக் கூட்டி அனுபவிக்கும் இந்தத் துன்பம் எதற்கு என்று நினைக்க ஆரம்பித்தார். சொந்த வீடு என்று பெயர். நாலு சுவருக்குள்தான் வீடு. அந்த நாலு சுவரும் அடுத்த வீட்டுக்கும்தானே?இங்கு குத்தினால் அங்கு முகம் தெரியும்.  எதைத் தனதென்று சொந்தம் கொண்டாட முடியும்? என்று வயிறெறிந்தது இவருக்கு.  

வெளியே மழை விட்டபாடில்லை….சாலையில் குளமாய்த் தண்ணீர் மேலும் மேலும் நிரம்பிக் கொண்டுதான் இருந்தது. அருகிலுள்ள இன்னொரு  நகர் ஏரியையும் திறந்து விட்டதாக வேறு கூறினார்கள். எத்தனைதான் உள்ளது அப்படி? அத்தனைக்கும் உறைவிடம் இந்த நகர்தானா? அடக்கடவுளே…!

அந்தத் தண்ணீர் முழுவதும் இங்குதானே வந்து சேரும் என்பதை நினைத்தபோது இதற்கு 2015 ம் ஆண்டே எவ்வளவோ தேவலை என்று நினைக்க ஆரம்பித்தார். அதை இப்போது நினைத்து என்ன பயன்?

காலையில் எழும்போது என்ன நிலையில் இருக்குமோ என்பதை எண்ணியபோது இப்பொழுதே அவருக்கு வயிற்றைக் கலக்கியது.

கீழே பாம்பு வந்துவிட்டதாக அந்த இருட்டிலும் யாரோ குரலெடுத்துக் கத்திக் கொண்டிருந்தார்கள். அபார்ட்மென்டிலேயே தனி வீடு ஒன்றும் இருந்தது. அதிலிருந்து சத்தம் வந்தது.  நிற்கும் கார்களில் ஒன்றை ஜாக்கி போட்டு மூன்று செங்கல் வரிசையிட்டு  உயர்த்தி நிறுத்தியிருந்தார் அவர். தண்ணீர் அதையும் தாண்டி காருக்குள் புகுந்திருக்கும் என்கிற எண்ணத்திலும், அந்தப் பாம்பு மாடிப் படியில் ஏறி…மெல்ல…மிக மெல்ல… மேலே வராமல் இருக்க வேண்டுமே என்கிற பயத்திலும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் அங்குசாமி.சென்ற முறை டூவீலரில் சுற்றிக் கிடந்தது பாம்பு. அந்த பயம் வேறு உறக்கத்தை விரட்டடியது. இரவு ஊழிக் கூத்து போல் பேயாட்டம் ஆடி நகர்ந்து கொண்டிருந்தது. இந்தக் களேபரத்திலிருந்து மீண்டபின் எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி மகனைக் குடும்பத்தோடு இங்கிருந்து நகர்த்தி விட வேண்டும் என்று திடமாக உறுதி செய்து கொண்டார் அங்குசாமி.

                                             --------------------------------------

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...