15 மார்ச் 2023

“மாறுதடம்” - சிறுகதை - பேசும் புதிய சக்தி - மார்ச் 2023 இதழ் - பிரசுரம்

 

                                                                        






முத்துநாகுவுக்கு  உடம்பில் தெம்பே இல்லை. விடிகாலை ஆறு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பும்போதே “இன்னைக்கு ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுத்துக்கட்டா...?“ என்று மனைவி சம்பங்கியிடம்  கெஞ்சாத குறையாகக் கேட்டான். அவள்தான் சட்டுனு எந்திரிச்சிக் கௌம்பு...எல்லாம் சரியாப் போகும்...என்று உசுப்பி அனுப்பி விட்டாள். இருக்கவே விடமாட்டாள். அவள் பேச்சைத் தட்டியதேயில்லை முத்துநாகு. அம்புட்டு ஆசை அவள் மேல். அது அவன் கண்ணையும் கருத்தையும் மறைத்தது.

      முதல் நாள் ராத்திரி வந்து படுக்கும்போது மணி பன்னிரெண்டு தொட்டிருந்தது. மேலூருக்குப் போகும் கடைசி பஸ் கிடைக்காமல், அந்த வழி அதையும் தாண்டி வெளியூர் செல்லும் பஸ் ஏதேனும் வருமா என்று காத்திருந்து அதில் ஒத்தக்கடை ஒண்ணு என்று சொல்லி ஏறி அமர்வதே பெரிய பிரயத்தனமாகிவிட்டது. இராப் பொழுதாச்சே என்றுதான் இரக்கப்பட்டிருக்க வேண்டும். வந்து விழுந்தவன்தான்...அப்படி ஒரு புரளு புரளுமுன் விடிந்தாகிவிட்டது. ரணமாய் வலித்தது உடம்பு. கழற்றித் தொங்கவிட்டால் தேவலை என்றிருந்தது. பல நாட்கள் இப்படித்தான் கழிகிறது.

      நேரத்துக்குப் போய் நிற்கவில்லையென்றால் முதலாளி கொடூரமாய்த் திட்டுவார். அந்த அவச்சொற்களை வாங்குவது தற்கொலை பண்ணிக் கொள்வதற்குச் சமம். பெரும்பாலும் அப்படி நடப்பதில்லைதான். என்றோ நிகழ்ந்து விடக் கூடிய ஒன்றுதான் என்று கூட அவர் வாய் சும்மா இருந்ததில்லை. திட்டும் அந்த நேரம் பதில் பேசினால் அடுத்த நிமிடம் வேலை போய் விடும். அதோடு மட்டுமில்லாமல் அந்தப் பேட்டைப் பகுதிக்கே தன் பெயர் கெட்டுச் சீரழிந்து விடும். அதற்குப் பின் எந்த ஓல்சேல் கடை வாசலிலும் போய் நிற்க முடியாது. எந்த லாரி ஆபீசிலும் போய் லோடு ஏத்த முடியாது.  

      உன்னப்பத்தி நிறையச்  சொல்லிட்டாருய்யா...உங்க முதலாளி....உனக்கெல்லாம் வேல தர முடியாது....என்ற சொல்லி வைத்தாற்போல் ஒரே பாட்டைப் பாடுவார்கள். முன்பு வேலை பார்த்த லாரி ஆபீசில் கிடைத்த அனுபவம் உண்டு முத்துநாகுவுக்கு. நன்றாகத்தான் வைத்துக் கொண்டிருந்தார் அந்த ஓனர்.  அவருக்கு உயிர் நண்பரான ஒருவரின் குடும்பம் சென்னைக்கு மாறுகிறது என்று அந்த வீட்டுச் சாமான்களையெல்லாம் லாரியில் ஏற்றி அனுப்பியபோது கூடப் போயிட்டு வாய்யா....போய், நாளைக் காலைல அவுக வீட்டுல எல்லாத்தையும் பத்திரமா, சேதமில்லாம  இறக்கி வச்சிட்டு...திரும்ப வந்து சேரு....என்று சொல்லி சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

      அன்று மாலையே மீண்டும் கிளம்பி மறுநாள் காலை ஊர் வந்து விட வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார். முத்துநாகுவுக்கோ பெரிய வருத்தம். இருந்திருந்தும் சென்னை போக ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஒரு நாள் ரெண்டு நாள் இருந்து நன்றாகச் சுற்றிப் பார்க்கலாம் என்றால் இப்படிச் சொல்லி விட்டாரே...? ஒரே ஒருவாட்டி இடம் தேடிப் போயி சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்த்துப்பிடுவோம்னா கெடுத்துப்புட்டாரே...! நம்பள மாதிரி சாதாரண நிலைலர்ந்து மேல வந்த மனுசன்....ஒரு கும்பிடப் போட்டு கை குலுக்கிட்டு அப்டியே ஒரு ஃபோட்டோவும் எடுத்துக்கிடுவோம்னு ஆசையா இருந்தனே....? அந்த ஆசைல கூடவா மண்ணு விழணும்? ஏற்கனவே லோடு ஆர்டரெல்லாம் வாங்கி வச்சிருந்திருப்பாரோ....உடனே லாரி நிரம்பிப் போச்சு....? எங்கெருந்துதான் கொண்டு வந்து இறக்குவானுங்களோ....? அதுகளத் தூக்கி அடுக்கவே குறுக்கு விட்டுப் போச்சு...பெறவு எங்கெருந்து ஊர் சுத்துறது? பிணமாவா ரவுன்ட் அடிக்க முடியும்?

      இன்னொருவாட்டி வருவோம்ப்பா...அப்ப நானே உன்னக் கூட்டிட்டுப் போறேன்....லாரி டிரைவர் ராஜாக்கண்ணு....செய்த சமாதானம் முத்துநாகுவின் மனதை ஆறுதல் படுத்தவில்லை. அதற்குப் பிறகு எத்தனை நாட்கள் ஓடி விட்டன. மறுபடியும் சென்னை போக வாய்க்கவேயில்லையே? எல்லாத்துக்கும் ஒரு அதிருஷ்டம் வேணும்....ஆறெல்லாம் நீரா ஓடினாலும் நாய்க்கு நக்கிக் குடிக்கிற யோகமிருக்கைல யார்தான்...என்னாதான் செய்ய முடியும்?

      யோவ்...என்னாய்யா யோசன....? கௌம்பு...கௌம்பு....- சம்பங்கி விரட்டுவதைப் பார்த்தால் முதலாளியே பரவாயில்லை போலிருக்கிறது. சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். இடுப்பில் பீடிக்கட்டு சுருட்டினோமா என்று கவனமாய்ப் பார்த்துக் கொண்டான். இனிப் பொழுதடைஞ்சுதான் வீடு வரணும். அவன் மனது ஏங்கித் தவித்தது.

      அஞ்சு நிமிஷம் ஓய்வு கிடைக்கைல பீடிய ஒரு இழுப்பு இழுக்கிற சுகமிருக்கே...அந்த நேரம் சொர்க்கம்...! அதுக்குள்ளயும் ஊதப் போயிட்டியா....வாய்யா....-என்ற முதலாளியின் கறார் குரல் அந்தக் கணத்தில் காதில் ஒலிப்பதுபோல் தோன்றி மிரட்டியது இவனை.

      பஸ்ஸைப் பிடிக்க மெயின் ரோடு செல்ல வேண்டும். போகும் வழிக்கு ஊதிக்கலாம் என்று கிளம்பினான் முத்து நாகு. வாசல் கடந்தவுடனேயே பீடியை எடுத்து பல்லால் கடித்து நிறுத்தினான்.

      ச்சே….எத்தனவாட்டி ஊதினாலும் இந்தப் பழக்கம் போவ மாட்டேங்குதே…இந்தச் சனியன பத்தவச்சிட்டில்ல வாயுல வைக்கணும்… என்றவாறே தீக்குச்சியை இழுத்து நுனியை நெருப்பாக்கி  உதட்டில் செருகிக் கொண்டான்.. சிகரெட் போல இது நிக்கவா செய்யும்….பல்லால கடிக்கலேன்னா…கீழ  விழுந்து மண்ணாப் போயிருமே… - என்று சொல்லிக் கொண்டே நடையை வேகப்படுத்தினான்.

      நடுமேட்டுப் பாலம் கடக்கையில் வழக்கம்போல் பயம் வந்தது. ஒத்தைல போகாத…வெத்தலைக்கு சுண்ணாம்பு கேட்குற பிசாசு ஒண்ணு அங்கன சுத்திட்டிருக்கும்….அடியில் ஓடும் நீரின் சலசலப்பு பயத்தைத்தான் ஏற்படுத்தியது. கால்கள் தானாகவே விரைந்து கொண்டன.

      ஊருக்குள்ளாற ஒரு குடிசைன்னாலும் போதும்னு இருந்திருக்கலாம்.. காரை வீடு வேணும்னு இவதான் போட்டுப் பிடிவாதம் பண்ணி இங்கன ஒதுக்கலா வந்து இருத்திப்புட்டா…நாம்பாட்டுக்குக் கௌம்பி வந்திட்டனே…அவ இருட்டுக்குள்ள எப்டித் தனியாப் போய் ஒதுங்குவா…? அவளே அத மறந்திட்டாளோ…? ஒரு நிமிஷம் திரும்பி விடுவோமா என்று தோன்றியது முத்துநாகுவுக்கு. அவபாட்டுக்கு கருவேலஞ்செடிப் பக்கம் ஒதுங்கி அங்க பாம்பு கீம்பு இருந்திரக் கூடாதே…! நான்னா கைல கம்போட தட்டிட்டே போவேன்….துணைக்கு நிப்பேன்…நாஒரு மடப்பய மவன்…இதக் கேக்காமயே வந்திட்டனே….எஞ்செல்லிமடம் தாயே…! நீதான் அவளுக்குப் பாதுகாப்பு….எம்பொஞ்சாதிக்கு எந்தக் கேடும் வரக்கூடாது…!!

      ன்னாடா…மலச்சு நின்னுட்ட…கொண்டு சேத்துருவேல்ல….-முத்துநாகு நிற்கும் தோரணையைப் பார்த்து சந்தேகப்பட்டுக் கேட்டார் ஓனர் ராசாங்கம். வண்டி பாரத்தால் நிரம்பி்த் தளும்பியது. முன் பக்கம் தூக்கிக் கைகளால் அந்த பாரத்தை நிறுத்த வேண்டும்.

      மொதலாளி….அதெல்லாம் எப்பயும் போலக் கொண்டு சேர்த்துருவேனுங்க… என்றவாறே வேட்டியை மடித்துத் தார்ப்பாய்ச்சிக் கட்டினான் முத்துநாகு. துண்டை அவிழ்த்து தலையில் வளைத்து இறுக்கிய போது அந்த ஞாபகம் வந்தது. முட்டுச் சந்துக்குள் வண்டியை விட்டபோது ஓரமாய் ஒதுங்கி அப்பாவியாய் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் மீது  பண்டல் சாய்ந்தது நினைவுக்கு வந்தது. யம்மா….! என்று கத்திக்கொண்டே வலது தோள்பட்டையை அவர் இறுக்கிப் பிடித்துக் கொண்டதும், ஐயா…மன்னிச்சுக்குங்கய்யா….பள்ளத்த தவிர்த்து ஏத்தைல, கல்லு இடறி பண்டல் சாய்ஞ்சிடுச்சிங்க….என்று பதறினான் முத்துநாகு. பெரியவர் பதில் சொல்லும் நிலையில் இல்லை. வலி பொறுக்க முடியாமல் கண்கள் இருண்டது அவருக்கு.

      கட்டு அவிழும்னு நினைக்கல….மன்னிச்சிடுங்க அய்யா…என்றவாறே அவரைக் கை பிடித்து ஓரமாய் இருந்த கடை வாசல் படிக்கட்டில் உட்கார்த்தினான். சற்றுப் போனால் சாய்ந்து சரிந்திருப்பார். அதற்குள் பின்னால் நின்றிருந்த வண்டிகள் உறாரன் அடித்து அடித்து விரட்ட திரும்பவும் முன் பக்கக் கைப்பிடிகளைத் தூக்கி வண்டியை நகர்த்துவதே பெரும்பாடாகிவிட்டது. யாரோ தள்ளினார்கள். நகர்ந்த வேகத்தில் எங்கே திரும்பவும் ஓரங்கட்டுவது. அதுவே ஒரு  சந்துபொந்து ….போதாக் குறைக்கு காது கிழியும் போக்குவரத்துப் போலீசின் விசில் சத்தம். கொஞ்சம் போனால் தன்னைத்தான் குறி வைப்பான். ஓரங்கட்டுவான். அவனுக்கு மட்டும் அதற்கு இடம் கிடைக்கும். அப்புறம் முதலாளிக்குப் பேசுவான். காசு கறக்கப் பார்ப்பான். இழுத்தால் ஒரே மூச்சில் கொண்டு போய்ச் சேர்த்து விட வேண்டும். இல்லையென்றால் பழி தன் பக்கம், பாவமும் தன் பக்கம். அனுபவம் உஷார் படுத்தியது அவனை. பண்டல் உள்ளே பொருட்கள் உடைந்தால் சம்பளப் பிடித்தம். என்ன அநியாயம்? அதற்கெப்படித் தான் பொறுப்பாக முடியும்? பண்டல் போடும் இடத்திலேயே நிகழ்ந்திருந்தால்? இதுவரை அப்படி எதுவும் ஆகவில்லைதான். எல்லாம் கடவுள் செயல்…ஏழைகளுக்குக் கண்ணுக்குத் தெரியாத கடவுள்தானே துணை?

      ஓரத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டு தான்பாட்டுக்கு வந்து விட்டோமே…அந்தக் கிழவருக்கு ஒரு டீயாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம். அதையெல்லாம் சாவகாசமாய்ச் செய்வது போலவா அந்த ரோடு கிடக்கிறது? கீழே விழுந்த பண்டலை ஏற்றி நிறுத்தி திரும்பக் கட்டுவதற்குள்ளே குலை நடுங்கிப் போனது. எவனாச்சும் ஒதவிக்கு வரானா? அவனவன் அவன் வேலயப் பார்த்திட்டுப் போறான். அந்தக் காலமெல்லாம் மலயேறிப் போச்சு. ஒதவுற மனசே சனங்ககிட்ட இல்லையே? எல்லாம் காசு…காசுன்னுல்ல அலையறானுங்க….? சுயநலம் பேயா ஆட்டுது….!

       அந்தப் பெரிசை நினைக்க ஏது நேரம்? பாவம்…ரொம்ப வெயிட்டான பண்டல்….அவர் கைல விழுந்து…கால்ல விழுந்து பெறவுல்ல ரோட்டுல பெரண்டுச்சு….நல்லவேளை…பக்கத்து சாக்கடைல இறங்கல….மனசாட்சி குத்திக் கிழித்தது முத்துநாகுவை. திட்டித் தீர்த்திருப்பார். அது பலிக்காமல் இருக்க வேணும். மனசு பயப்பட்டது. வயிறெரிஞ்சு சொன்னா பலிக்கும்பாங்களே?

      இதெல்லாம் சகசம்தான் மச்சான்..…இதப்போயி நெனச்சிட்டே இருப்பியா…? என்று ஒரு வரியில் முடித்து விட்டாளே சம்பங்கி. நம்ப பொழப்பே நாறப் பொழப்பு. இதுல இது வேறேயா? என்றாளே…! தன்னால் மட்டும் ஏன் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை? அவளுக்கு அவள் தம்பி மன்னனுக்கு எப்படியாச்சும் ஒரு வேலையை வாங்கிக் கொடுத்தாக வேண்டும். அதற்கு தன்னைப் போட்டுப் படுத்துகிறாள். பண்றதத்தனையும் பொறுக்கித்தனம். இதுல பேரப்பாரு…மன்னனாம்…!  வெத்தலப் பேட்டையில் அவன் பண்ற காலித்தனம் சொல்லி மாளாது. எந்நேரமும் உள்ளங்கைல தேச்சுத் தேச்சு மூக்குல இழுக்குறவன எப்டி டிரைவர் வேலல சேர்த்துவிடுறது? போதைல எங்கயாச்சும் போய் முட்டிட்டு நிக்கவா? ஆக்சிடென்ட் பண்ணவா?

      அட…அவனையென்ன லாரி டிரைவருக்கா சொல்லச் சொன்னேன்….உங்க ஓனரு வீட்லதான் ரெண்டு மூணு காரு இருக்குதாம்ல…அதுல ஒண்ணுல இவன ஓட விடுங்க….

      என்னாடி இது…என்னமோ நானே காரு வச்சிருக்கிறமாதிரிச் சொல்ற? வேறே வம்பே வாண்டாம்….அவுரு குடும்பம் கூட்டுக் குடும்பமாக்கும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, மாமன் மச்சான்னு….எல்லாரும் ஒரே காம்பவுன்டுக்குள்ளாற குதூகலமாக் கும்மியடிக்கிறவுங்க…ஒரு கோயிலு கொளம்னா….ஒண்ணாத்தான் புறப்படுவாகளாக்கும்….யாரும் தனிச்சிப் போயி நா பார்த்ததில்ல….அங்க போயி இந்த நாறப்பயல சிபாரிசு பண்ணினா என் வேலை போயிரும்டீ….அதுக்கு நானே ஓட்டக் கத்துக்கிட்டு அங்க வேலைக்குப் போயிருவேன்…இந்த வண்டி இழுக்கிற தண்டனை போதும்னுட்டு….போதாக் கொறைக்கு பொம்பளக் கிறுக்கு பிடிச்சவன் வேறே ஒந்தம்பி…கேட்கணுமா? அந்த வீடே பெண்டுக நெறைஞ்ச எடம்….அங்க இவன் வேலைக்குப் போக…அவுகளப் பார்த்து ஈஈஈன்னு இளிச்சிட்டு நின்னான்னா…? தூக்கிப் போட்டு மிதிச்சி ரோட்டுல தள்ளிடுவாங்களாக்கும்…

      ஏற்கனவே எங்கண்ணன்ட்டச் சொல்லி எம்ப்ளாய்மென்ட் ஆபீசுல இன்டர்வியூ வாங்கிக் கொடுத்தேன்.   அதயாச்சும் ஒழுங்காப் பண்ணினானா? ….ஜீப்பு ஓட்டாதவனப் போயி…திடீர்னு ஒக்காரு, ஓட்டு, ரிவர்ஸ் எடு, கியர் மாத்து,  இப்டித் திருப்பு, அப்டித் திருப்பு…ஷெட்டுக்குள்ளாற கொண்டு நிறுத்து…ன்னு விசுக்கு விசுக்குன்னு பதட்டப்படுத்தினா….அவென் போயி முட்டாம என்னா செய்வான்? ஜே.சி.பி ஓட்டுவேன்னு சொன்னவன அதயாச்சும் ஓட்ட வச்சிப் பார்த்திருக்கலாமுல்ல…ஒங்க மொதலாளி ரெக்கமன்டேசன் இருந்தும் கெடைக்காமப் போச்சு….அவுரு சொந்தக்காரப்புள்ளன்னா இப்டி விட்டிருப்பாரா? அந்நியந்தானன்னு கைய விரிச்சிட்டாரு….காசும் கெட்டி…ஆளும் கெட்டி…கைய நீ்ட்டச்சொல்லி தடவித்தான விடுறாரு…?

      சும்மாப் பொலம்பாதடீ….எம்பொழப்பே நாறப் பொழப்பா இருக்கு…இதுல அவனுக்கு வேறே நா சொல்லணுமாக்கும்….நீ இங்க இருக்கணுமா இல்லியான்னு ஒத்த வரில கேப்பாரு ஓனரு…இந்த வேலயும் போச்சின்னா அப்புறம் சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டிதான்….

      ஏன்யா….ஒன்ன நம்பிக் கெடக்குற என் தம்பிக்கு நீதானய்யா ஒரு வழி பண்ணனும்? வேறே எங்கய்யா போய் நிப்பான் அவென்? ஏதோ அப்பப்ப ஏதாச்சும் செலவுக்குத் தரத்தான செய்றான்…வேல ஏதும் செய்யாம துட்டு எப்டிப் பேறும்?

      வெத்தலப்பேட்டைல பொறுக்கிட்டிருக்கானாம்… எவனோ வட்டிக்கு விட்டுத் திரியுறவனோட கொடுக்காட்டம் அலையிறானாம்…அவென் வசூலுக்கு இவனத்தான் அனுப்புறானாம்….அடியாளாயிட்டு வர்றாண்டி ஒந்தம்பி….இன்னும் கொஞ்ச நாள்ல அவனும் பெரியாளாயிடுவான்….ஆமா…இம்புட்டுச் சொல்றியே…ஏன் நேத்திக்கு வீட்டுக்கு வரலே….முந்தா நா எங்க போனே….இன்னிக்கு எம்புட்டுச் சம்பாரிச்சே….எதாச்சும் கேட்டிருக்கியா அவன்ட்ட…? என்னைப்போட்டு இம்புட்டுத் தொணத்துறியே…அவென் வந்தா மட்டும் ஏன் வாய் அடைச்சிக்கிருது….இந்தா பார்றீ….எனக்குத் தெரியாம அவன்ட்டக் காசு கீசு வாங்கிட்டுத் திரியாதே….அது நல்லதுக்கில்லே…ஒழைச்சு வர்ற காசுதாண்டீ நிக்கும்…நெலைக்கும்….அடாவடி பண்ணி காசு பார்த்தா…அது கொலை…கொள்ளைன்னுதான் போயி முடியுமாக்கும்….சொல்றதச் சொல்லிப்புட்டேன்…பெறவு உன் இஷ்டம்….எதாச்சும் போலீசு கேசுன்னு போயி நின்னே…நா வரமாட்டேன்….நீதேன் போயி உன் தம்பியக் கூட்டியாரணும்…..டேசன் பக்கம் திரும்பாது ஏந்தலை…

      சர்தான்யா…ரொம்பப் பேசாத…..எந்தம்பி அப்படியாப்பட்டவன் இல்லே….சாமர்த்தியமானவன்தான்….ஒன் ஒதவி இல்லாமயே பொழைச்சிக்கிறானா இல்லையா பாரு….அவனா முயற்சி பண்ணி மேல வர்றானா இல்லையா பாரு…..?

      வண்டியிழுக்கும் நேரத்தில் மன்னனின் சிந்தனை எதற்கு? என்று தனக்குத்தானே அலுத்துக் கொண்டான் முத்துநாகு. மன்னன் இன்னும் கொஞ்ச நாளில் உண்மையிலேயே மன்னனாகி விடுவானோ? நமக்குத்தான் சாமர்த்தியமாய்ப் பிழைக்கத் தெரியவில்லையோ? நேர்மையாய் இருப்பவரெல்லாம் இப்படி மனசு கலங்கும்படி காரியங்கள் நடக்கிறதே இவ்வுலகத்திலே? மனுச புத்தி என்னிக்காச்சும் நல்லவனுக்கும்  பெரண்டுச்சின்னா?

      ஓரமாய் ஒதுங்கி பீடி இழுத்துக் கொண்டிருந்த முந்தாநாள்…முத்துநாகுவின் பார்வையில் அந்தக் காட்சி. பலசோலிக்காரனா இருப்பாம் போல்ருக்கே….சரியான கேடிப்பயலோ….?

      என்னாது இது? நம்ப மொதலாளியா வட்டிக்கு வாங்கிக் கட்டுறாரு? இவென் வந்து நிக்குறானே? என்று தன்னை நன்றாக இழுத்து மறைத்துக் கொண்டான்.

      நாளைக்கு சேர்த்து வாங்கிக்கிடலாம். ஒங்க பிச்சாண்டிட்ட நா சொன்னேன்னு சொல்லு….

      அவுரு ஊர்ல இல்லீங்க….வட்டிய கரெக்டா வசூல் பண்ணலேன்னா என்னப் பிடிச்சு ரூம்ல அடச்சுப்புடுவாருங்க…நாந்தான் செலவழிச்சிப்புட்டேன்னு ஆள விட்டு அடிக்க விடுவாரு….தங்கிட்ட வேல பார்க்குற ஆளாச்சேங்கிற கருணயெல்லாம் அவர்ட்டக் கெடையாது. கறார்னா கறார்தான்…..எந்த எடத்துலயும் போயி நின்னா அன்னைக்கு சிட்டை போடாம நகர மாட்டேன் நா….என்ன நம்பிப் பொறுப்ப ஒப்படைச்சிருக்காரு….நாப்பது எடம்…தெனமும் போயிட்டிருக்கேன்….தயவுசெஞ்சு கொடுத்திடுங்க…நா இந்தத் தொழிலுக்குப் புதுசு….-படபடவென்று பொரிந்தான். அந்தப் பேச்சில் தொனிக்கும் பயம் உண்மைதானா?

      ஒனக்கெதுக்குய்யா இந்த வேல…என்னைக்கானாலும் சங்கடந்தான…..இம்புட்டுக் கருத்தா அலையுற….அதோட ஆபத்த உணராம? அது கெடக்கட்டும்…நீ என்னா கூலி முத்துநாகுவுக்குச் சொந்தமா? …ஒன்ன யாரோ கையக் காண்பிச்சாகளே…அப்டியா…?    அந்தாளுக்கு நீ என்னா வேணும்? அந்தாள் ஒன்னப்பத்திச் சொன்னதேயில்லயே?

      அது யாருங்க…..எனக்குத் தெரியாதுங்களே….!!

      அவனின் இந்த பதிலைக் கேட்டுத்தான் அசந்து இடிந்து போனான் முத்துநாகு. சம்பங்கி இதுபற்றி ஏதும் பேசுவாள் என்று எதிர்பார்த்தான். வாயே திறக்கவில்லையே? சரியான அமுக்குளி…! அப்படியானால் அவன் இப்பொழுது பார்க்கும் இந்த வசூல் வேலயில் அவளுக்கும் சம்மதம்தானோ? அதையாவது அவளிடம் சொல்லியிருப்பானா? வாயே திறப்பதில்லையே இப்போதெல்லாம்? காசு காசு என்று பறப்பாளே? அவன் ஏதும் செலவுக்குக் கொடுப்பானோ? தாராளமாய் இருக்கிறாளோ? வழக்கமாய்ப் பேசும் ரெண்டு அன்பான வார்த்தைகள் கூடக் குறைந்து போனதோ?

      சுப்ரமணியபுரம் கோடவுனுக்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்று நாகுவுக்கு ஆச்சரியமாயிருந்தது. இம்புட்டுத் தொலவு லாரில அனுப்பலாம்ல….நம்பள இழுத்துக் கொண்டாந்து சேர்க்கச் சொல்றாரு….எலும்பு எலும்பாக் கழன்டு போகுது ஒடம்பு….இதுக்குச் சொந்தமா வண்டி வச்சு லோடு இழுத்தாலும் நாலு காசு மிஞ்சும் போல்ருக்கு….ஒரு வண்டிய எப்படியாச்சும் ஒடைமையாக்கணும்….கொஞ்சங் கொஞ்சமாக் கட்டுறேன்னுட்டு நம்பாள்ட்டயே ஒரு வண்டிய ஆட்டயப் போட்ரணும்….இத்தன வருஷம் ஒங்ககிட்ட நாயா ஒழைக்கிறேன்ல மொதலாளி…நா வச்சிக்கிறனேன்னா…தொலஞ்சு போன்னு தந்திட மாட்டாரு….-தனக்குச் சாதகமாகவே நினைத்துக் கொண்டான் முத்துநாகு. கூலியே கூட்டிக் கொடுக்காதவரு, எப்டி வண்டிய வச்சிக்கிற சம்மதிப்பாரு….? என்ற யோசனை ஏனோ முத்துநாகுவுக்கு வரவேயில்லை.

      டீ குடிக்க நகர்ந்தபோது மன்னனின் புல்லட் சத்தம் இவனை அதிர வைத்தது. அட…வண்டி வேறே கொடுத்திருக்காங்களா? அதிரடியாப் போய் நின்னாத்தான்…வசூல் வேட்டை வெற்றியாகும்ங்கிற தந்திரம் இந்தக் கந்து வட்டிக்காரங்களுக்கு எப்டித்தான் தெரியுதோ? அவனைத் தொடர்ந்து இரண்டு மூன்று பைக்குகள் பின் தொடர்ந்தபோதுதான் கண் இமைக்காமல் நோக்க ஆரம்பித்தான் முத்துநாகு. அது என் மச்சினன்தானா? இல்ல வேறே யாராச்சுமா? அதுக்குள்ளாறயும் பதவி ஒசந்து போச்சா? ஏரியாவயே கலக்குறானுங்க…? பிச்சாண்டியோட அம்புட்டு நெருங்கிட்டானா? அவென் யாரையும் அத்தனை லேசுல நம்ப மாட்டானே? எப்டி இவனுக்கு எடம் கொடுத்தான்? பின்னாடி படைய வேறே சேத்து விட்டிருக்கான்? இந்த ஏரியாவுல போலீஸ்காரங்ஞ இருக்காங்களா இல்லையா? வசமா மாமூல் போயிடுது போல்ருக்கு…!

      என்னா வாயப்பொளந்திட்டு நிக்குற நாகுண்ணே….மொதல்ல போனது யாருன்னு கவனிச்சேல்ல…மன்னன்னு அந்தாளுக்குப் பேரு…..அவென் வந்தாலே அடுத்த ஒரு மணி நேரத்துக்கு இந்த மார்க்கெட் ஏரியாவே அமதியாயிரும்…..அஞ்சு நிமிஷம் தப்பினாலும் போதும்….ஆளுக ஓடிரும்னு காத்தா வருவாங்ஞ….மார்க்கெட்டு ரெண்டு கேட் வாசல்லயும் காவல் நிக்குது பார்த்தேல்ல….எவனும் வெளியேற முடியாதாக்கும்…..கன் மாதிரி வசூல் பண்ணிருவாங்ஞ….தர்லேன்னா அவிங்ஞ பேசுற பேச்சு கேட்டிருக்கியா நீ? நாண்டுக்கிட்டு செத்துறலாம்…பட்டினி கெடந்தாலும் கெடக்கலாமேயொழிய அவிங்ஞகிட்டப் போயி நின்னுறக் கூடாது….மாட்டக் கூடாது….! கழுத்துல கயித்தப் போட்ருவாங்ஞ…..

      சங்கிலிக்கு மன்னன் தன் மைத்துனன் என்பது தெரியாது எனப் புரிந்தது. அப்படியே இருக்கட்டும் என்று நினைத்தான். அவனைத் தன் உறவுக்காரனாக அதுநாள்வரை எங்கும் காட்டிக் கொள்ளாதது எத்தனை வசதி? அவன் அடாவடி தாங்காமல் எவனாவது தன்னைக் கை வைத்தால்? போட்டுத் தள்ளினால்? கடத்திக் கொண்டு போனால்? எதிரிக்கு எதிரி தோன்ற மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

      இவனுக்குத்தான் வேலை வாங்கிக் கொடு என்றாள் சம்பங்கி. இனிமேல் அதற்குத் தேவை இருக்காது. அவன்தான் தனி ராஜ்யம் நடத்துகிறானே? அக்காமேல் இருக்கும் பாசத்தில் அடிக்கடி தான் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்கு வந்து போகும் மன்னனிடம் காசுக்கு ஆசைப்பட்டு நிற்கக் கூடாது அவள். அது ஒரு நாள் ஏதேனும் தப்புத்தண்டாவில் கொண்டு விடும் என்பது நிச்சயம். சொல்லப்போனால் அவனுக்கு வீட்டினுள் இடம் கொடுப்பது என்பதே கூடாது. அதுவே தப்பு. ஆனால் தன்னால் எதையெல்லாம்தான் கண்காணிக்க முடியும்? தான் இல்லாதபோதுதானே அவன் வந்து போகிறான்? முன்னைப்போல கொடுக்கிற காசு பத்தல என்று சம்பங்கி அடிக்கடி நச்சரிக்காததே அவனுள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது எதில் கொண்டு போய் விடுமோ என்று பயம் கொண்டது அவன் மனது.

      அன்று தன் மொதலாளியிடம் முதலில் பணிந்து கேட்டவன்…பின்னர் சற்றுக் கறாராகப் பேசியதும், அப்படியும் பணம் பேறவில்லையே என்று கோபமாய் வெளியேறியதும், முத்துநாகுவின் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது.

      லாரி ஆபீஸ் நன்றாகத்தானே நடக்கிறது. நிறைய லோடுகள் வந்து போய்க் கொண்டுதானே இருக்கின்றன…பின்னரும் அந்த பாதகப்பயல் பிச்சாண்டியிடம் கைநீட்டிக் கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது முதலாளிக்கு? மொதலாளி வயசென்ன, இவன் வயசென்ன…பிச்சாண்டியோடு உள்ள பழைய பழக்கத்தில் நான் சொன்னேன் என்று சொல்லு என்று மொதலாளி சொன்னால் சரி என்று போக வேண்டியதுதானே? அதற்கு இவன் என்ன முறைப்பது? அவ்வளவு அதிகாரமும் இவன் கைக்கு வந்துவிட்டதா என்ன? நாந்தான் பிச்சாண்டி…பிச்சாண்டிதான் நானு….என்று ஒரு வார்த்தை விட்டானே…அது யார் கொடுத்த அதிகாரம்? அப்படிச் சொல்ல அவனுக்கு அவரே அனுமதி கொடுத்து விட்டாரா? அல்லது இவன் கை அங்கே ஓங்கியிருக்கிறதா? எது பேசினாலும் சரி…வசூல் வரணும் எனக்கு…என்று அவிழ்த்து விட்டு விட்டாரோ? இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது அவனுக்கு?

      சரி…சின்ராசு….நா புறப்படுறேன்…..லோடு முழுக்க எறக்கிட்டேம்ப்பா….மொதலாளிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடு….இனி டவுனுக்குள்ளாற புகுந்து நா போய் ஆஜராக முடியாது…இப்டியே ஸ்டான்டுல வண்டியப் போட்டுட்டு ஊருக்கு  பஸ் ஏறிடுவேன்…அது மொதலாளிக்கும் தெரியும். நாளை கழிச்சு காலைல ஆத்துக்கு அப்பால இருக்கிற ஸ்டான்டுல  போய் வேறே வண்டி எடுத்துக்கிடுவேன். வேல முடிச்சு இன்சார்ஜ் கருப்பணன் அண்ணன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிடுவேன். இந்தப் பக்கம் வேலயில்ல… நாளைக்கு எனக்கு லாரி ஆபீஸ்ல லோடு ஏத்தி இறக்குற வேலதான்.

      ஒடம்பு கெஞ்சுது. சீக்கிரம் வெளிச்சத்தோட வீடு போய்ச் சேர்றேன். என்னிக்காச்சும் கிடைக்கிற சலுகை இது. -சொல்லிவிட்டு பதிலுக்கு நிற்காமல்….போய்க் கொண்டிருந்தான் முத்துநாகு. நிலையத்தில் பஸ் ஏறி அமர்ந்தபோது ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை.

      சின்ன வயசில் தன் தந்தை ஒரு சினிமாத் தியேட்டரில் வேலை பார்த்ததும், அந்தக் காசு பத்தலை என்று காலைப் பொழுதுக்கு பேப்பர் போடும் வேலை என்று ஓடியதும், போதாக் குறைக்கு சாகும் முன்பு வரை வீட்டில் ஒரு பெரிய கிரைண்டர் வாங்கி வைத்து மாவு அரைத்துக் கொடுத்து, அதை வாசலில் வைத்து மனைவி செல்வியை நிறுத்தி வியாபாரம் செய்ததும்…..என்ன பண்ணியும் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க முடியாமல் திடீரென்று ஒரு நாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவர் அப்படியே கண்ணை மூடியதும்…. படிப்பில்லாமல் போன குடும்பம் சிதிலமடைந்து கொத்தனார் வேலை, காய்கறி வியாபாரம், நூறு நாள் கூலி என்று  பல வகையிலும் அலமந்து ரெண்டு தங்கைகளையும் எப்படியோ கரையேற்றி, கோயிலில் வைத்து சிம்பிளாக மாலை மாற்றிக் கட்டிக் கொடுத்து அனுப்பியதும், தனக்கென்று வந்து வாய்த்த சம்பங்கியின் கொடுமை தாங்காமல் தம்பிகள், தங்கைகள் என்று ஆளாளுக்குப் பிய்த்துக் கொண்டு போனதும்…..எல்லாம் போக இன்று அவள் தம்பி மன்னன் மட்டும் எத்தனை இஷ்டமாக வந்து போய்க் கொண்டிருக்கிறான்? அது மட்டும் அவளுக்கு இனிக்கிறது. காலம்தான் எத்தனை நாடகம் ஆடுகிறது?

      ஒரு குழந்தைக்கு வழியில்லை இதுநாள்வரை. தன்னந்தனியே தானும் தன் புருஷனும் மட்டும் இருந்து குடும்பம் நடத்த வேண்டும். வேறு யாரும் உறவுகள் வந்து எட்டிப் பார்த்து விடக் கூடாது? தப்பித் தவறித் தலைகாட்டி விட்டால் அடுத்த வேளைக்கு  ஆகாது. அது அந்த ஒரு வேளையிலேயே வந்தவர்களுக்குப் புரிய வைத்து விடும் மனக் கோணல். கடவுளாய்ப் பார்த்து அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத தண்டனையைக் கொடுத்து விட்டானோ? அதுதான் இப்படி அலமந்து கிடக்கிறாளோ? யாரையுமே எனக்குப் பிடிக்காது. இந்த வீட்டுக்கு ஒருத்தரும் வர வேண்டாம். யாரையும் பார்க்க நா விரும்பல….என்கிற அந்தக் கொடூர மனம்தான் அவளை ஒற்றையாய் நிறுத்தியிருக்கிறதோ? ஒருத்திக்கு எம்புட்டுக் காசு வேண்டும்? இருப்பதைக் கொண்டு ஏன் அவளால் திருப்திப்பட முடியவில்லை? தான் கொண்டு வந்து கொடுப்பது போதாதா? ஒரு டீ தவிர வேறு ஏதும் செலவு உண்டா எனக்கு? பீடியைக் கூட எத்தனை நாள் பாதியோடு அணைத்துப் பத்திரப்படுத்தியிருக்கிறேன் நான்? இதெல்லாம் ஏன் இவளுக்குப் புரியமாட்டேனென்கிறது?

      எண்ண அலைகள் பிடுங்கியெடுக்க….இறங்கும் இடத்தில் வந்துதான் உயிர்பெற்றான் முத்துநாகு. மனசும் உடம்பும் ரொம்பவும் தளர்ந்துதான் இருந்தது. போய்க் கஞ்சியைக் குடித்துவிட்டு அப்படியே வெளியே கட்டிலைப் போட்டு சாய்ந்து விட வேண்டும். வெட்ட வெளியில் தூங்கும் அந்த சுகமே அலாதி…..!

      நினைத்துக் கொண்டே வீட்டை நெருங்கியவனுக்கு அந்தக் காட்சி. அதென்ன வீட்டு வாசலில் கார்? யாருடையது? இந்த ஏழையின் வீட்டுக்குக் காரில் வரும் ஆட்கள் கூட இருக்கிறார்களா? என்றுமில்லாத அதிசயம். யாராயிருக்கும்? சம்பங்கி வீட்டுக்காரர்கள் யாரும் வந்திருப்பார்களோ? டாக்சி போலும் தெரியவில்லையே?

      சட்டென்று கால்கள் தயங்க…சற்றுத் தள்ளியிருந்த வாகை மரத்திற்குப் பின்னால் தன்னை ஒளித்துக் கொண்ட முத்துநாகு மெலிதாக எட்டி நோக்கியபோது அந்த ஆள் வெளியே வர, பின்னாலேயே சம்பங்கியும் தயக்கத்தோடு வருவதைக் கண்டு அதிர்ச்சியுற்றான்..

      அந்த அவன் பிச்சாண்டியாய் இருப்பான் என்று அவன் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவேவேயில்லை.  உடம்பு உதறலெடுத்தது.. வண்டி புறப்பட்டபோது அவனை நோக்கி எடுப்பாய் நின்று  அவள் கையசைத்த விதமும், முகத்தில் தெரிந்த புன்னகையும் பார்க்கவே அருவருப்பாய் இருந்தது முத்துநாகுவுக்கு. என் சம்பங்கியா? என்று நினைத்த கணத்தில் கோபமும் ஆத்திரமும் பொங்கியெழ, தலை சுற்றி  மயக்கம் வந்தது முத்துநாகுவுக்கு.

     

                                    ------------------------------------

 

     

     

     

     

 

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...