“தண்ணீர்” -நாவல் - அசோகமித்திரன் -வாசிப்பனுபவம்.-
வாழ்க்கையில் உன்னதமெல்லாம் இலவசம் - என்று அன்று ஒரு பழமொழி உண்டு. தெரிவிப்பவர் திரு அசோகமித்திரன். அந்த உன்னதத்தை நாம் மதித்து நடந்திருக்கிறோமா...? இலவசமாகக் கிடைப்பது எதுவுமே மதிப்பற்றதாகிப் போகுமோ? இயற்கையின் கொடையாக இருந்த அது அன்று இலவசம். கொடையாக இருந்து கொட்டித் தீர்த்ததைப் பாதுகாத்தோமா? வணங்கினோமா?
பாதுகாப்பாய் இருந்ததை மதிப்பாய்ப் பயன்படுத்தினோமோ? தேவை அறிந்து, பயந்து, பொறுப்பாய்ச் சிக்கனமாய் உபயோகித்தோமா? எதுவுமில்லை நம்மிடம். இன்று லபோ...திபோ என்று அடித்துக் கொண்டு அதற்காக அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம். குடும்பத்தின் மாதாந்திரச் செலவுகளில் அதுவும் ஒரு முக்கிய அங்கம் வகிப்பதாகி விட்டது. அப்படியே செலவு மேற்கொண்டாலும் தடையின்றிக் கிடைக்கிறதா என்றால் இல்லை. அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வெளியூர்களுக்குச் செல்கையில் கூஜாவில் எடுத்துக் கொண்டு
போய் பொறுப்பாயும், சிக்கனமாயும், பாதுகாப்பாயும் பயன்படுத்திய அதை இன்று எவ்வளவு ஆனால்
என்ன என்று கைவீசிப் பணம் கொடுத்து வாங்கி உபயோகிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம்.
எல்லாம் காலத்தின் கோலம். எதிர்காலச் சந்ததி இதற்காக அடித்துக் கொண்டு
சாகப் போகிறது என்கிற நிலை கண்டிப்பாக ஏற்பட்டே தீரும் என்று ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது
சொல்லிச் சொல்லி நம்மை எச்சரிக்கைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். எதையும் நாம்
காதில் வாங்கிக் கொள்வதேயில்லை. அப்படிக் காதில் வாங்கியிருந்தால் இப்போது கிடைப்பதை
சிக்கனமாய் உபயோகிக்கக் கற்றுக் கொண்டிருப்போமே? அப்படியா கவனத்தோடு இருக்கிறோம் நம்
வீட்டில்? இல்லையே? சொல்பவர்கள் சொல்லிக் கொண்டிருக்கட்டும்...வரும்போது பார்த்துக்
கொள்வோம். என்றுதானே மெத்தனாய் இருக்கிறோம்....? தண்ணீர் எப்படியெல்லாம் நம்மைக் கவலைப்படுத்துகிறது?
அன்றாடச் சிந்தனையில் அதன் தேவை கவலையுடன் நினைக்கப்படவில்லை என்று எவரேனும் இன்று
சொல்ல முடியுமா?
ஊர் பேர் தெரியாத ஒரு பெண் குடத்தை வைத்துக்
கொண்டு அலைவதைத் திரும்பத் திரும்பப் பார்த்ததன் விளைவாகத்தான் இந்தக் கதை எழுதப்பட்டது
என்று மிகுந்த வருத்தத்தோடு கூறுகிறார் பெரியவர் அசோகமித்திரன். பிறர் துன்பத்தைத்
தன் துன்பமாகக் கருதும் அந்த மனம் எல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா? ம்ம்...பாவம்...சனம்
தண்ணிக்காக எப்டி அலையுது....? என்று வாய் வார்த்தையாக வருத்தப்பட்டுக் கொண்டு தன்
சொந்த வாழ்க்கையில் கரைந்து போகும் மனங்கள்தான் எத்தனையெத்தனை?
தான் காணும் எளிய மக்களை, அவர்கள் படும் துயரங்களை,
சின்னச் சின்னக் காரியங்களிலெல்லாம் விட்டுக் கொடுத்து, பொறுமை காத்து, நஷ்டப்பட்டு,
தன் கஷ்டங்களைப் பொருட்படுத்தாது சமன் செய்து, எப்படியெல்லாம் இந்த ஆத்மாக்கள் தங்கள்
அன்றாடங்களைத் துயரத்தோடு கடந்து செல்கிறார்கள்?
ஐயோ...இந்த மனிதர்களின் தீராத சோகங்களுக்கெல்லாம்
ஒரு முடிவே கிடையாதா? என்று மனம் வருந்தி, புழுங்கி, எதுவும் செய்வதற்கியலாது பேதலித்து
நின்று, மனம் குமைந்து...தனக்குத்தானே அழுது, இறைவா...இவர்களின் துயரைத் துடைத்தெறி...அனுதினமுமான
இந்த ஆதரவற்ற, சக்தியற்ற, வசதி வாய்ப்புக்கள் அற்ற எளிய மனிதர்களின் கஷ்டங்களைப் போக்கு.....என்பதான
வேண்டுதல் மனநிலையில்- மனித மனத்தின் அடியாழங்களிலிருந்து அசோகமித்திரன் வெளிக்கொண்டு வருகிற கனிவும், ஈரமும்,
நேயமும், கருணையும் வற்றாத பெரு நதியாய்க் காலம் கடந்தும் பெருகி நிற்கும் விதமாய்
இப்படி ஒரு படைப்பை நமக்கு வழங்கிச் சென்றிருக்கிற பெரியவர் அசோகமித்திரனை நாம் வெறும்
எழுத்தாளனாய்க் கொள்ளாமல் மனித தெய்வமாய்க் கொண்டாட வேண்டாமா?
வெறும் தண்ணீர்ப் பஞ்சத்தை, கஷ்டத்தை சொல்லிச்
செல்லும் கதையா இது? அந்தக் கஷ்டங்களின் ஊடாகப் பயணம் செய்யும் ஜமுனாவும், சாயாவும்
அவர்களின் தேய்ந்த வாழ்க்கை நிகழ்வுகளில் உற்றாரும், உறவினரும் இன்றி, இருப்போரின்
துணையினை எதிர்பார்த்து நிற்காமல், தன் கையே தனக்கு உதவி, நம் முயற்சியே நம் வாழ்க்கை என்று இருப்பதை
ஈடுகட்டிக் கொண்டு செல்லும் பயணம் எத்தனை துயரம் நிறைந்தது? எத்தனை சமரசங்களைக் கொண்டது?
எத்தனை வேதனைகளை உள்ளடக்கியது?
வாழ்க்கை என்னதான் பிரச்னைகள் உடையதாய் இருந்தாலும்,
பற்றாக்குறையாய் விடிந்தாலும், அந்தப் பிரச்னைகளை அதன் போக்கிலேயே பொறுமையாய்க் கையாண்டால்,
நாளும் பொழுதும் தானாய்க் கடந்து போகும் என்கிற அரிய தத்துவத்தை, அனுபவத்தை ஜமுனாவின்
வாழ்க்கை நமக்கு எவ்வளவு தெளிவாய்க் கற்றுக் கொடுக்கிறது?
அந்த பாஸ்கர் ராவைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை
அக்கா...அவனைப் பார்த்தாலே அடிச்சு விரட்டணும்போல இருக்கு...ஒரு அசிங்கமான மனுஷனை எப்படி
இத்தனை சாதாரணமா நீ எதிர்கொள்றே? அவனோட எப்படி
இவ்வளவு சகஜமா உன்னால பேச முடியுது? நடு வீட்டுக்குள்ள சர்வ சாதாரணமா வந்து குந்திக்கிறான்.
வெட்கங்கெட்ட எவனும் செய்யக் கூடிய காரியமா பட்டவர்த்தனமா அது தெரியுது. ஆனா அவனை நீ
உனக்கு ரொம்ப வேண்டியவன் போல வரவேற்கிற...உடகார்த்தி வச்சுப் பேசறே...டீ வரவழைச்சிக்
கொடுக்கிறே... உன்னை சீரழிச்சவன்ட்ட உன்னால எப்படி இத்தனை சமாதானமா நடந்துக்க முடியுது...?
நா உறாஸ்டலுக்குப் போறேன்...உன்னோட இனிமே இந்த வீட்ல இருக்க விரும்பல.... - இது சாயாவின்
சகிக்க முடியாத மனநிலை.
சாயா...அடியே சாயா...நீயும் என்னை விட்டுப் போயிட்டேன்னா...அப்புறம்
எனக்குன்னு யார்டி இருக்கா? தெனம் காலைல எந்திரிச்சு உன் முகத்தைப் பார்த்துத்தானேடி
நானே என் நாளை ஆறுதலா, சமாதானமா ஆரம்பிக்கிறேன்...நீதானேடி என் நெஞ்சுக்கு ஆறுதல்...என் ஒரே ரத்த உறவு நீ மட்டும்தான்னு நினைச்சிண்டிருக்கேன்...நீயும்
போறேங்கிறியே...?
அந்த பாஸ்கர்ராவ் இனிமே இந்த வீட்டு வாசப்படி
மிதிக்கக் கூடாது....அப்டீன்னா சொல்லு....நான் இருப்பேன்...அந்தப் பொறுக்கியக் கண்டாலே
எனக்குப் பிடிக்கலை...... - ஜமுனா மௌனம் காக்கிறாள்.
எனக்கு வேறே வழி? அவனை விட்டா....நான் யாரைத்
தேடிப் போவேன்...என்னிக்காவது ஒரு நாள் எனக்கு விடியாதா?
உனக்கு விடியாதுக்கா...விடியாது...அவன் உன்னைப்
பயன்படுத்திக்கிறான் தன் லாபத்துக்காக...உன்னை சீரழிச்சிட்டுக் காணாமப் போயிடுவான்....
- சொல்லிவிட்டு சாயா போயே விடுகிறாள்.
ஜமுனா தனியளாக்கப்படுகிறாள். கிடந்து குமைகிறாள்.
எத்தனை நாட்கள் எத்தனை இரவுகள்? யார் யாரோ வந்து வந்து...எவரெவர் திருப்திக்கோ அலைந்து,
சீரழிந்து.....இந்தப் பெண் ஜென்மம் என்பது எனக்கு மட்டும் ஏனிப்படி? சாயா சொன்னது நிஜமாகி
விட்டதோ?
நீதாண்டா எங்கக்காவச் சீரழிச்சே...இப்போ அவ வயித்துல
சுமந்து நிக்கிறாளே...நீதான் அவளைக் கட்டிக்கணும்....கையில் குடையை எடுத்துக் கொண்டு
அடிக்கப் போகும் சாயா...அவளைத் தடுக்கும் ஜமுனா...நீங்க கிளம்புங்க... என்று பாஸ்கர்
ராவை கிளப்பும் நிதானம்.....அந்த நிலையிலும் தனக்கு ஒரு நல்ல நாள் தேடி வராதா என்று
அலையும் அவள் மனது.
ஜமுனாவின் வாழ்க்கை அவலங்கள் நம் மனதை உலுக்கி
எறிந்து விடுகின்றன. ஆனாலும், இதுதான் தன் வாழ்வு என்று சுற்றியிருக்கும் சுற்றங்களைத் தன் நட்பாய், உறவாய்
நினைத்துக் கொண்டு, டீச்சரம்மாவோடு அவள் தண்ணீருக்கு அலைவதும், அதற்காக அதிகாலை அதிசீக்கிரமாய்
எழுந்து, ஊரும் உலகும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அரை மைல் நடந்து ஒரு வீடடைந்து,
அடி பம்ப்பை பட்டுப் பட்டென்று அடித்து குடத்தில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு திரும்புவதும்,
வாயேன்...ஒரு வாய் காபி சாப்பிட்டுட்டுப் போகலாம் என்று ஆதரவாய் அழைக்கும் அந்த டீச்சரம்மாவின் நேசத்தை
மறுக்க முடியாமல் அவள் வீட்டில் போய் நிற்பதும், அந்த வீட்டில் உள்ள இரண்டு கிழங்கள்
அவளை விரட்டியடிப்பதும், கண்ட நாயெல்லாம் எதுக்கு இங்க வருது? என்று கேவலமாய்ப் பேசுவதும்...
எதுவும் பதில் சொல்லாமல், கோபப்படாமல், டீச்சரின் அன்பிற்காக, அவளின் ஆதரவிற்காக, வயதில்
பெரியவர்கள் ரெண்டு வார்த்தை தூஷணையாய்ச் சொல்லிவிட்டால்தான் என்ன? என்று பொறுமை காப்பதும்
அடேயப்பா...இந்த வாழ்க்கையின் சின்னச் சின்ன அசைவுகள்...எவ்வளவெல்லாம் நமக்குக் கற்றுக்
கொடுத்து விடுகிறது இந்தக் கதாபாத்திரத்தின் மூலமாய்....எப்படியெல்லாம் மனிதர்கள் துயர்ப்படுகிறார்கள்?
எப்படி, எங்கெங்கெல்லாம் வசை வாங்குகிறார்கள்? எவ்வெவற்றையெல்லாம் பொறுத்துப் போகிறார்கள்?
எவ்வளவு சகிப்புத் தன்மையைத்தான் உள்ளடக்கி நீந்துகிறார்கள்?
மனிதன் வறுமையில் உழல்வதும், இல்லாமையில் சீரழிவதும்,
ஒழுங்கில்லாத வாழ்க்கையில் கிடந்து அவதியுறுதலும், மீண்டு வெளி வர இயலாமல் தவித்தலும்...அத்தனையும்
இருந்தாலும்...மூழ்கி முக்குளித்து அதில் சலிப்பில்லாமல் விரக்தியில்லாமல் பொறுமையோடும்
நிதானத்தோடும் பயணித்தல் என்கிற அனுபவம் ஒருவனை எத்தனை செழுமையானவனாக ஆக்கி உலவ விடுகிறது?
ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை எத்தனை சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்கிறார்கள்?
டீச்சரம்மாவை ஏன் ஜமுனாவுக்குப் பிடித்துப் போகிறது? தனக்கு ஆதரவாக இருக்கிறாள் என்பதற்காக
மட்டுமா?
ஸ்கூல்லர்ந்து வந்து இன்னும் ஒண்ணுக்கு ரெண்டுக்குக்
கூடப் போகலை...உடனே பாத்திரத்தை தூக்கிண்டு பாலுக்கு ஓட வேண்டிர்க்கு...அதுக்கப்புறம்
தண்ணி...அதுக்கப்புறம் கறிகாய்...பிறகு மளிகைச் சாமான், அதுக்கப்புறம் அம்பத்திரண்டு
காம்போசிஷன் நோட்டுத் திருத்தணும்...அதுக்குள்ளே மருந்து ஏதாச்சும் தீர்ந்து போயிருந்தா
அதை ஓடிப்போய் வாங்கி வச்சாகணும். அதுக்கப்புறம் இந்தக் கிழக் கோட்டான்களுக்கு பலகாரம்
பண்ணிப் போட்டாகணும்...லாண்டரிக்குப் போய் துணியை வாங்கி வரணும்...பெட்பானை ஃபினாயில்
போட்டுக் கழுவி வைக்கணும்...நாளைக்கு இன்ஸ்பெக் ஷனுக்கு நோட்ஸ் ஆப் லெசன்ஸ் சரிபார்த்து
வைக்கணும்.....- ஜமுனா....அவளையே நோக்குகிறாள்...அக்கா...அக்கா...என்கிறாள். பிறகு
அழுது விடுகிறாள். டீச்சர் மார்பில் சாய்கிறாள்....- இவளுக்குமுன் தன் துயரமட் ஒன்றுமில்லை
என்ற எண்ணம் வந்து விடுகிறது. அல்லது இவள் சுமக்கும் சுமைக்கு முன்னால் நான் எம்மாத்திரம்?
என்கிற எண்ணம் மேலெழுகிறது. எத்தனை உருக்கமான காட்சி...
தன் துயருக்குச் சமாதானம் தேடி நிற்கும் இடத்தில்
இருக்கும் துயரைக் கண்டு மனம் நெகிழ்ந்து, டீச்சரம்மாவை ஜமுனா அரவணைக்கும் இந்தக் காட்சி
மனித மனத்தை ஆட்டிப் பிழிந்து விடுகிறதே...!
வெறும் தண்ணீர்க் கஷ்டத்தைச் சொல்லவா இந்த நாவலை
எழுதினார் பெருந்தகை அசோகமித்திரன். வாழ்க்கையின் அனுபவங்களை, அவலங்களை, முதிர்ச்சியை,
பக்குவங்களை சாதாரண மக்களின் வாழ்வோட்டத்தின் ஊடாக எப்படிக் கண் முன் கொண்டு வந்து
மனது உருக உருக நிறுத்துகிறார்...?
ஆதரவில்லாத இரண்டு பெண்கள்...உறவுகள் நெருங்க
விடாத விலகலான வாழ்க்கை அமைவில், ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொண்டு, மனச் சடவுகளை
விலக்கிக் கொண்டு, பொருந்தாத சூழலை அனுதினமும் சமாளித்துக் கொண்டு வாழ்ந்து கழித்தலே
வாழ்க்கை என்று சின்னச் சின்ன அடியாக எடுத்து வைத்து, நாட்களைக் கழிக்கும் அவலம் ஜமுனா-சாயா
வாழ்வில் எத்தனை நுணுக்கமாய்ப் பகிரப்பட்டிருக்கிறது?
அவளை உறீரோயின் ஆக்குகிறேன் என்றும், பிறகு இரண்டாவது கதாநாயகியாகவாவது ஆக்கி விடுவேன் என்றும்
விடாது சொல்லிக் கொண்டு அவளைத் தன் வசமாக்கி இழுத்துச் சென்று சீரழிக்கும் பாஸ்கர்ராவும்,
என்றாவது தனக்கு விடியாமலா போகும் என்று அவன் பின்னாலேயே நம்பிக்கையை விடாது அலையும்
ஜமுனாவும், இனி வேறு எங்கென்று செல்வது என அவனே சதம் என்று நம்புவதும், அதனை, அவனை
முற்றிலும் நம்பாது அவளை எச்சரிக்கும் சாயாவும்...அந்தப் பகுதியின் தண்ணீருக்காக அலைந்து
அல்லல்படும் மக்கள் பலரின் கவனிக்கப்படாத வாழ்க்கையின் ஊடான நெகிழ்வான பயணமாக அவர்களின்
வாழ்க்கைப் பாடுகள் எத்தனை உருக்கம் நிறைந்தவை?
நாவல் நம் மனதை பிழிந்து எடுத்து விடுகிறது.
அங்கங்கே சிலவற்றைச் சுட்டிக் காட்டியதே இப்படி இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
முழு நாவலையும் வரி வரியாய் விவரிப்பதென்றால்? ஒரு புத்தகமே எழுதலாம்....உலகின் மிகச்
சிறந்த பத்து நாவல்களுள் ஒன்றாய் பேசப்படும் இந்தத் தண்ணீர் நாவல்...ஒரு வாழ்க்கைப்
பாடம்.
சென்ற நூற்றாண்டில் தமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு
குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று என மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய அசோகமித்திரனின் இந்தத் தண்ணீர்
நாவல் நிறுவப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக