08 டிசம்பர் 2021

 

சிறுகதை                                                                                                            “மௌனம் சம்மதம்...!”   




 து அனுகூலம் என்று சொல்லப்படுகிறதோ, சமூகத்தில் எது பொறுப்புள்ள நடவடிக்கை என்று கருதப்படுகிறதோ  அதுவே கிருஷ்ணமூர்த்திக்கு இப்போது பாதகமாகத் தோன்றியது. அவரது மீதி வாழ்நாளின் கனவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்து கொண்டிருந்தன. இனிமே உனக்கெதுக்குய்யா கனவெல்லாம்? என்றும் கேட்கலாம். கனவு என்றால் ஆடிப் பாடி மகிழ்ந்து, விட்டேற்றியாய்த் திரிந்து....வீணாய்ப் பொழுது போக்கி என்றில்லை. அது லட்சியக் கனவு. பத்து வருடத்திற்கு முன்னால் தோன்றியது. ஒரே ஒருநாள் ஜெகஜ்ஜோதியாய் எரிந்தது. பிறகு அணைந்து போனது. அதன் பிறகு அந்த லட்சிய தீபத்தை ஏற்றவே முடியவில்லை இவரால். எதனால் அப்படி ஆனது? இவருக்கு அதை உணரவே முடியவில்லை.  ஆனால் இப்போதும் அந்தக் கனல் உள்ளேயே கனன்று கொண்டேதான் இருக்கிறது. குறைந்தபட்சம் தமிழ்நாடு முழுமையேனும் சுற்றிவிட வேண்டும்...! எல்லாக் கலைப் பொக்கிஷங்களையும், புராதன அடையாளங்களையும், கோயில்களையும் பார்த்திடணும்...இது அவரது லட்சியம். ஆனால் நிறைவேறிற்றா? இல்லையே! கதையே மாறிப்போயிற்றே...! கனவுகள், கற்பனைகள்-வெறும் காகிதங்கள் என்று ஆகிப் போனதே?

      கோகிலா நிம்மதியாய் இருந்தாள். அவள் நினைத்தது  நடந்து விட்டது. அதை வெளியில் சொல்லவில்லையே தவிர, தானாய் நடந்து போனதில் – என் மூலமாய் – எனக்கே தோன்றிய யோசனையாய் அது நிகழ்ந்து விட, உணர்ந்தோ, உணராமலோ கமுக்கமாய் ஆகிப் போனாள். அதுவாவே நடக்குது. நாம எதுக்குக் குறுக்கே விழுந்து கெடுப்பானேன் என்று விட்டு விட்டாள். உணர்ந்ததாய்க் காட்டிக் கொண்டால் தடை விழுந்து விடுமோ என்று கூட ஒரு தயக்கம் இருந்திருக்கலாம். இந்தக் கோபக்கார மனுஷன் ஆள் திருக்கிண்டாருன்னா சிக்கல் என்று கவனப்பட்டிருக்கலாம். எப்படியோ அவள் காரியம் ஆகிப் போனது. பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த, உறவினர்கள் இருக்கும் சென்னை வந்தாயிற்று.

      எல்லாம் சொல்லி வைத்தது போல்தான் நடந்து விட்டது. எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது...என்று கவிஞர் பாடி வைத்தது போல வாழ்க்கையின் திசையே மாறி விட்டது. திடீரென்று மனசில் அது தோன்ற உற்சாகமாய்க் காரியத்தில் இறங்கினார் கிருஷ்ணமூர்த்தி.

      ம்....ம்....ம்....-! என்ன இவள் எல்லாவற்றிற்கும் இப்படித் தலையாட்டுகிறாள் என்று அன்றைக்குத் தோன்றவேயில்லை இவருக்கு. வழக்கம்போல், தான் எல்லாத்தையும் சரியாய்த்தான் செய்வோம் என்கிற நம்பிக்கை அவளுக்கு என்று இருந்து விட்டார். ஆனால் இப்போதுதான் தெரிகிறது...அது அவள் அதிர்ஷ்டம் என்று. கல்யாணம் ஆன புதிதிலேயே ஆளைக் கிளப்பி வெளியூர் கொண்டு வந்தவன். சென்னைக்கு மாத்திக்குங்களேன் என்று சொன்னதற்கு ஒரே வார்த்தையில், பிடிக்கல....என்று மறுத்து விட்டார். அதே திசைக்கு மறுபயணம் நிகழ்ந்து விட்டது.

அவள் அதிர்ஷ்டம் தனது துரதிருஷ்டம். நினைந்து நொந்து போனார். இப்போது அவருக்குத் தேவை தனிமை. அமைதி. மனைவி கூட வேண்டாம் துணைக்கு. அவள் பையனோடேயே இருந்து கொள்ளட்டும். வா என்றால் வரவா போகிறாள்? கேட்டு மறுப்பானேன். மகன், மருமகள் முன்பு அந்தக் கேவலம் எதற்கு? நீ எனக்கு வேண்டாம் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் அமைதி காத்தார் அந்த விஷயத்தில். நீ என்ன என்னை மறுப்பது...நான் மறுக்கிறேன் உன்னை...! அவ்வளவுதான்...!

எனக்குத் தனியா இருக்கணும். நா போறேன்....இதுதான் இப்போது அவரது பிலாக்கணம்.

      பையன் தனியாக் கிடந்து சீரழியறான்...அங்க ஒரு வீட்டை வாங்கிட்டம்னா வீட்டு சாப்பாடு அம்மா கையால் கிடைக்கும் அவனுக்கு. உடம்பைக் கொஞ்சம் தேத்திக்கிட்டான்னா, ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வச்சிட்டு...அப்பாடா...நீயாச்சு...உன் குடும்பம் ஆச்சுன்னு திரும்பிடலாம்...இதுதான் ப்ளான்...என்று சொல்லிக் கொண்டுதான் கிளம்பினார்கள். எல்லாம் முடிந்து-

      இப்போதென்னடாவென்றால் நா வரலை.....என்கிறாள்? பேசி வச்சுதான் செய்கிறாளோ? அல்லது தன்னிச்சையோ...?

      நீயும் எங்க கூடவே இங்கயே இருக்க வேண்டிதானேப்பா....ஊருக்கு ஏன் போறேங்கிறே? என்றான் பையன். ஆதங்கத்தோடு கேட்டானோ அல்லது மேம்போக்காகவோ...? யார் கண்டது? பசங்களுக்கு எப்பவுமே அம்மாட்டதானே நெருக்கம்? எனக்கு எல்லாம் எங்க அம்மாதான்....- ஒரு மூன்றாம் நபரின் முன்னே வைத்து ஒரு முறை சொன்னானே...! அது மறக்குமா என்ன?

      சொல்லப் போனால் எதுதான் கூட வரப்போகிறது? நம் கடமையைச் செய்தோமா...அத்தோடு சரி...எங்க மண்டையைப் போட்டா என்ன? தூக்கிக் கிடாசுறதுக்கு நாலு பேர் இல்லாமயா போகப் போறான்? மனசளவில் என்றோ ஒதுங்கி விட்டார் கிருஷ்ணமூர்த்தி. அந்த விலகலைத் தனிமையில்தான் பூரணமாய் உணர முடியும்...!

      அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்கதான் வாழணும். இப்டிக் காலம் பூரா சமைச்சுப் போட்டுண்டு உங்கம்மா இருந்தாள்னா, அப்புறம் உங்களுக்கு எப்படிப் பழகுறது எல்லாம்? ஒரு ரிலாக்சேஷன்ங்கிறது அவளுக்கும் வேண்டாமா? ஒரு கச்சேரி, கோயில்னு கிளம்பிப் போனோம், திரும்பி வரைல ஓட்டல்ல நாலு இட்லியை முழுங்கினோம், வீடு வந்து அக்கடான்னு படுக்கைல விழுந்தோம்னு அவளுக்கும் தோணாதா.? வயசுக்கும் அதுக்கும் ஓய்வை மனசு நாடாதா?  அதை நீங்கள் புரிஞ்சிக்க வேணாம்?  காலம் பூராவும் மாடு மாதிரி வேலை செய்யணுமா? .கேட்டு என்ன பயன்? அது அவளுக்குப் பிடித்திருக்கிறதே? மருமகளுக்கும் சேர்த்து சமைத்தாலும் சரி...பையனோடு இருந்தால் போதும்....ஒருவகையில் அடிமைப் புத்தி எனலாம் என்றுதான் இவருக்குத் தோன்றியது.

      பையன் அவன் மனைவியை விட அம்மாவிடம்தானே நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறான்? என்கிற பெருமை. பீத்தப் பெருமை. காலம் எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றிப் போடாதா என்ன? இப்படி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறோம்?

      ரெண்டு பேரும் வேலை பார்க்கிற நிலையில் அது எப்டிப்பா சாத்தியம்? நீங்க உதவாம யார் உதவுவா? நடைமுறைக்கு சாத்தியமில்லாததைப் பேசறியே?

      எப்டியோ சாத்தியப் படுத்திக்குங்கோ...நானும் உங்கம்மாவும் கூட போத் எம்ப்ளாய்ட்தானே? நாங்க எப்படிச் சமாளிச்சோம்? எங்களுக்கு யார் துணையிருந்தா? ஆளுக்கொரு சாவி வச்சிண்டு வீட்டைப் பூட்டிப் போட்டுட்டுத்தான் போவோம்...வருவோம்....நீ பிறந்த பிறகுதான் அவ அம்மா வந்தாங்க...மூணு வருஷம் இருந்து பார்த்திட்டுப் போயிட்டாங்கல்ல....? அது போல நீங்களும் செய்யுங்கோ....? சாகுறவரைக்கும் கூடவே இருக்கிறதுன்னா...எந்த வீட்டு வேலையும், குடும்பக் காரியங்களும்  படியாதுப்பா உங்களுக்கு...இந்த வயசுல வேலை செய்யாம வேறே எப்ப செய்றது? சின்ன வயசுலதான் கடுமையா உழைக்கணும்....உடம்பு உரம் பெறும்..தளராது....அம்பது வயசுக்கு மேலதான் இரங்கு தசை...அதுக்கப்புறம்தான் தளர்ச்சி, சோர்வு எல்லாம். அதுவரைக்கும் நல்லா சாப்பிடவும் செய்யலாம். சதும்ப உழைக்கவும் செய்யலாம். வலிக்குதா உங்களுக்கு இந்தச் சின்ன வயசுல வேலை செய்ய? ஆபீஸ் வேலை மட்டும் செய்றீங்க? உங்க வீட்டு வேலையை யார் பார்க்கிறது? உடம்பு ஆரோக்யமா இருக்கணும்னா ஓடி ஓடி உழைக்கணும்.தம்பி......இல்லன்னா நீங்க உட்கார்ந்து செய்ற வேலைக்கு ப்பி.பியும், ஷூகரும், முதுகு வலியும்தான் மிஞ்சும்....!

      எல்லாமும் சொல்லி வாய் ஓய்ந்து, ஒரு குழந்தையும் பிறந்து, அதற்கும் இப்போது மூன்று வயது முடிந்து நான்கில் கால் வைத்தாயிற்று. இப்போதாவது நகர வேண்டாமா? ஆவியை இங்கேதான் விடுவேன் என்றால்? வயதான காலத்தில் நான் மட்டும் போய் தனியாய்க் கிடந்து, சமைத்துச் சாப்பிட்டுக் கஷ்டப்படணும்னு தலையெழுத்தா? என் பெண்டாட்டிக்கு என்மேல் அக்கறை  வேண்டாமா? இல்லையே? வயதானால் பரஸ்பரம் பிரியம் கூடும் என்று எவன் சொன்னான்? வெறும் சென்டிமென்ட் டச்...!

பட்டாலும் பரவாயில்லை என்றுதான் நினைத்தார். கஷ்டப்படுவதிலும் ஒரு சுதந்திரம் இருக்குமே? அதுதான் வேண்டும் அவருக்கு. இங்கு நாலோடு ஐந்தாகக் கிடப்பதில் அவருக்குத் துளியும் இஷ்டமில்லை. சாவு வீடானாலும் அங்கே நான்தான் பிணம்....! நான்தான் முதல்....!! –இதுதான் அவர் சித்தாந்தம்.

வீடே கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது.. கிருஷ்ணமூர்த்தியின் பாடுதான் இப்போது திண்டாட்டம். கடமை பூராவையும் முடித்தாயிற்று. பின்னயும் பிடி விட மாட்டேங்குதே...?

      ஏம்ப்பா...உனக்கு எங்களோட இருக்கப் பிடிக்கலையா? பேரனைக் கொஞ்சிண்டு இருக்கத்தானே எல்லாரும் ஆசைப்படுவாங்க? நீ என்ன இப்டியிருக்கே? – என்று புதிதாக ஆரம்பிப்பதுபோல்,  விநோதமான பிராணியைப் பார்ப்பதுபோல் கேட்டான் பையன். பேரனைக் காட்டி ப்ரேக் பண்ண நினைக்கிறான். பாசமில்லாமலா இருக்கும். அதற்காக? என்ன பேச்சு இது?

      உங்கம்மாவுக்கு நீதான் உலகம். ஆனா எனக்கு அப்படியில்லை.....என்றார் அவர் பதிலுக்கு.

      எங்களோட இருக்கிறது பிடிக்கலைங்கிறதை அப்படி சூசகமாச் சொல்றே...அதானே?

      இதுல பிடிக்கிறது, பிடிக்கலைங்கிறது எங்கிருந்து வந்தது? அவனவனுக்குன்னு ஒரு சுதந்திரம் உண்டில்லயா? என்னைமாதிரி வயசானாத் தெரியும் உனக்கும்...! தன்னுடைய கடைசி காலத்தை இப்படித்தான் கழிக்கணும்னு ஒருத்தனுக்கு ஆசை இருக்கக் கூடாதா என்ன? அத மாதிரி எனக்குச் சில ஆசைகள் உண்டு....அதைத் தப்புன்னு எப்படிச் சொல்ல முடியும்? மற்றவங்களோட சுதந்திரத்தைத் தடுக்க நமக்கு ஏது உரிமை? இப்போ உங்க சுதந்திரத்துல நான் ஏதாவது தலையிடுறேனா?

கண்டது, கழியதுன்னு எதை எதையோ வாங்கிப் போடுறீங்க...என்னென்னவோ செலவு செய்யறீங்க...ஐயோ...நான் இப்டி வீணாப் போறேனேன்னு அந்தப் பணமே வாயிருந்தா அழும்...ஒரு வார்த்தை சொல்லியிருக்கேனா என்னிக்காச்சும்? சொல்ல மாட்டேன்.... ஏன்னா...இந்த உலகத்துல சொல்லித் திருந்தினவனை விட, பட்டுத் திருந்தினவன்தான் அதிகம்.....எனக்கென்ன வந்தது? வீட்டுல அப்பா, அம்மா வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்துக் கத்துண்டது ஒண்ணுமேயில்லயா? கம்ப்யூட்டர் தெரிஞ்சிட்டா இந்த உலகமே தெரிஞ்சிட்டதா அர்த்தமா? அது தெரியாததுனால மூத்தவங்களெல்லாம் மூடர்கள்னு ஆகுமா?

 இந்த வயசுக்கு மேலே தொட்டுத் தொட்டு இதுக்கெல்லாம் கவலைப்பட்டு முடியுமா? அவனவன் பாடு அவனவனுக்கு...! காசைச் சேர்த்து வச்சிண்டா மகனே உன் சமத்து...இல்லைன்னா பிச்சையெடுங்க.......நானா உயிரோடயிருந்து பார்க்கப் போறேன்...? அதே உரிமையும் சுதந்திரமும்தானே  எனக்கும்.....? சாகுறவரைக்கும் அல்லது அட்லீஸ்ட் படுக்கைல விழறவரைக்கும்னு கூட வச்சிக்கயேன்....ஒழுக்கமும் கட்டுப்பாடுமா இருந்தவனுக்கு, தன் கடமைகளைத் தவறாமச் செய்தவனுக்கு, இதுக்கு உரிமையில்லையா? அவனை யார்தான் தடுக்க முடியும்ங்கிறே? அழுத்தம் திருத்தமான வார்த்தைகள். இதுவரை வீட்டில் இப்படிப் பேசியதேயில்லை. அமுக்குணியாய்த்தான் இருந்திருக்கிறார். அது புலி இரைக்காகப் பதுங்கியிருந்த காலம். சுப வேளையை எதிர்நோக்கியிருந்த நேரம்.

      இப்போ உன் உரிமையை யார்ப்பா தடுத்தா? எதுக்காக இப்படிச் சொல்றே? – பையன் சட்டென்று புரிந்து கொண்டு கேட்டது வசதியாய்ப் போயிற்று கிருஷ்ணமூர்த்திக்கு.

      என் மனசு எப்படிப்பட்டதுன்னு நீ முழுசாப் புரிஞ்சிண்டிருக்கியா தெரில? நான் சுதந்திரமானவன். எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காதவன். ஒரு தேசாந்திரி மாதிரின்னு வச்சிக்கயேன். பல இடங்களுக்கும் போகணும், பார்க்கணும், இன்னும் நிறையப் படிக்கணும்ங்கிற ஆசை எனக்குள்ள இன்னும் அடங்கலை....அதை நிறைவேத்தணும்னு நான் விரும்பறேன். இதுக்கு தனிமைதான் எனக்கு முழுசா உதவும்ங்கிறது என்னோட திடமான அபிப்பிராயம்...!.அதுதான் என் நம்பிக்கையும் கூட. அந்தத் தனிமையும் அமைதியும் இங்க எனக்குக் கிடைக்கல...! ஆகையினால உன் அம்மாவை நீ வச்சிக்கோ...நான் பறிக்கலை...பறிச்சாலும் கைக்கு வரமாட்டா அவ....அது எனக்குத் தேவையுமில்லை..ஏன்னா என்னோட செயல்பாடுகளோட ஒத்துழைக்கிற ஆர்வம் உங்கம்மாவுக்குக் கிடையாது. அவளுக்கு நீதான் உலகம்...என் உலகமோ வேறே...! ஒருவகைல உன் அம்மாவோட இருப்பு எனக்கு லாபம்தான்.  .அதனால என்னை நீ நிறுத்த முடியாது. யாருமே நிறுத்த முடியாது......நான் சுதந்திரப் பறவை.....

      எல்லாத் தாத்தாவும் பேரக் குழந்தையைக் கொஞ்சிண்டு...மீதிக் காலத்தைக் கழிப்போம்னு சிவனேன்னு இருப்பாங்க....நீ என்னடான்னா....?

      குழந்தைக்கு இதோ நாலு வயசு முடியப் போறது....பொழுது விடிஞ்சா ஸ்கூலுக்குக் கிளம்பிடுவான் அவன்....அப்புறம் வந்தா...அவன் பழக்கங்களே மாறியிருக்கும். அவனுக்குன்னு ஒரு உலகத்தை அவன் கண்டுக்குவான்...அங்கே அவனோட ஸ்கூல், டீச்சர், பாடம், விளையாட்டு, படிப்புன்னு எல்லாமே தலைகீழா மாறிப் போயிடும்....அதுக்காகக் குழந்தையை வெறுத்து ஒதுங்கிறேன்னு அர்த்தமில்லையே...! உங்க எல்லாரையும் மறந்துட்டேன்னு ஆகப் போறதில்லையே....! மற்றவர்களோட எண்ணங்களையும் சுதந்திரத்தையும் மதிக்கக் கத்துக்கணும்...இப்போ உங்க அம்மா என்னோட வரல்லையேன்னு நான் கோபப் படுறேனா என்ன? அம்மா எங்கூட வராததுக்கு, உன்னோடவே இருக்கேங்கிறதுக்கு எதுவுமே சொல்லலையே நீ...! அப்போ அதுல உனக்கு ஒப்புதல்னுதானே அர்த்தம்? மனுஷனே சுயநலமானவன்தாண்டா...நல்லா யோசிச்சுப் பாரு...புரியும்...!  நான் கிழிச்ச கோட்டைத் தாண்டக் கூடாதுன்னு உங்கம்மாவுக்குக் கண்டிஷனா போட்டேன்....அவ சுதந்திரத்தை நான் உணரலையா? அது போலதான் என் சுதந்திரமும்....புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்கோ....இல்லன்னா விடுங்கோ....நாளாக நாளாக எல்லாமும் தானே சரியாப் போயிடும்....இதுவும் கடந்து போகும்...அவ்வளவுதான்....!

ஒரு ஞானியைப் போல் சொல்லி முடித்தார். பெரிய மனபாரம் நீங்கினாற் போலிருந்தது. தன்னிலை விளக்கம் முடிவுற்றது. ஆனாலும் இவ்வளவு பேசித்தான் வெளியேற வேண்டுமா? என்கிற நினைப்பு அலுப்பைத் தந்தது.

வீடே அமைதியில் மிதந்து கொண்டிருந்தது.. இறுக்கமான மௌனம்..... புரிந்து கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.

                        -----------------------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...