19 டிசம்பர் 2021

“பிள்ளையார் சுழி” – டெல்லி கணேஷ்

 

 

 

“பிள்ளையார் சுழி” – டெல்லி கணேஷ் – வெளியீடு-கிழக்கு பதிப்பகம், சென்னை.




      கடந்த வாரம்தான் இப்புத்தக வெளியீட்டு விழா நடந்தது. தினமணி ஆசிரியர் இன்று ஞாயிறு கலாரசிகன் பகுதியில் இப்புத்தகத்தைப்பற்றி எழுதி விட்டார். எத்தனை பேர் வாங்கிப் படித்திருப்பார்கள் தெரியாது. நான் படித்து விட்டேன்.

      இலக்கியம் படிப்பதற்கு நம் உழைப்பைச் செலுத்த வேண்டும். ஜனரஞ்சகமாய்ப் படிப்பது என்பது அத்தனை கஷ்டமில்லை. அதிலும் ஸ்வாரஸ்யமான விஷயங்களை அடுக்கடுக்காய்க் கோர்த்து ஒருவரின் வாழ்க்கை அனுபவங்கள் தொடர்ச்சியாய்ச் சொல்லப்பட்டிருக்கிறதென்றால் அதனை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைக்கத் தோன்றும். அப்படித்தான் நானும் இந்தப் புத்தகத்தைப் படித்தது.

      ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞனின் விடா முயற்சியும், அக்கறையான உழைப்பும் படிப்படியாக அவனை எப்படி மேலே கொண்டு செல்கின்றன என்பதற்கு டெல்லி கணேஷ் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் உதாரணமாய் நிற்கின்றன. நீ உன்னுடைய முயற்சியைச் செய்து கொண்டேயிரு...இறை சக்தி உனக்கு மறைமுகமாய் உதவிக் கொண்டேயிருக்கும் என்ற புரிதலை இவரின் அனுபவங்கள் நமக்குத் துல்லியமாய்ச் சொல்கின்றன.

திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தனது முகவுரையில் சொல்லியிருப்பதுபோல் வல்லநாடு கணேசனை மதுரை கணேஷாக மாற்றியது டி.வி.எஸ். மதுரை கணேசனை கார்ப்போரல் கணேஷாக மாற்றியது இந்திய விமானப்படை...பிறகு நாடகக்காரனாக மாற்றியது டெல்லி தட்சிண பாரத நாடக சபா......“டெல்லி கணேஷ்“ என்கிற நாமகரணத்தைச் சூட்டி நாடகக்காரனாக இருந்தவரை சினிமாக்காரனாக மாற்றியது இயக்குநர் கே.பி.

      இதனை அவரே கடைசியாக ஒரு இடத்தில் தொகுத்து அளித்து சந்தோஷம் கொள்கையில், திருப்தியடைகையில், நன்றியோடு நினைத்துப் பார்க்கையில், நிறை வாழ்வு வாழ்ந்திருக்கும் திரு.டெல்லிகணேஷ் அவர்களின் அனுபவங்கள் பல விஷயங்களில் நமக்குப் பாடமாக அமைகின்றன என்பதை நாமும் உணர முடிகிறது.

      இந்த வாழ்க்கைக்குள்தான் எத்தனைவிதமான அனுபவங்கள்? என்று நாம் பிரமிக்கிறோம்...! அவசியம் எல்லோரும் வாங்கிப் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது.

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...