06 டிசம்பர் 2021

“அப்பாவுக்கு மரியாதை“ - குறுங்கதை

 

 

“அப்பாவுக்கு மரியாதை“      - குறுங்கதை      -   உஷாதீபன்



உறாலுக்குள் நுழைந்தார் நடேசன்.

ஆளில்லாமல் ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது. கரன்டென்ன ஓசிலயா வருது...-சொல்லிக்கொண்டே போய் சுவிட்சை அணைத்தார்.

தண்ணி குடிக்கணும்னு இப்பத்தான் எழுந்து வந்தேன். அதுக்குள்ளேயும் அணைக்கணுமா?-சுசீலா கேட்டாள்.

அடுப்படிக்கு வந்தா உடனேல்ல போய் திரும்ப உட்காரணும்...அங்க அஞ்சு நிமிஷம் ஆகுதுல்ல. அதுவரைக்கும் அந்த .ஃபேன் ஓடணுமா? இப்டி சின்னச் சின்னதா அணைக்காம எழுந்து  போனா...தினமும் இப்டி ஓடி மீட்டர் எகிறாதா? ஐநூறு யூனிட் வரைக்கும்தான் ஒரு ரேட்டு. பிறகு டபிள்....ரேட்...! தெரியுமா, தெரியாதா?

அவளுக்குத் தெரிகிறதோ இல்லையோ.!..வீட்டில் யாருக்கும் தெரிவதில்லை. மகனாகட்டும், மருமகளாகட்டும்..அங்கங்கே வெட்டிக்கு லைட் அணைக்காமலும், ஃபேன் ஆஃப் பண்ணாமலும்  ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. சொல்லிச் சொல்லி அலுத்து விட்டார்.

சொன்னால் சங்கடப்படுகிறார்கள். செய்தால் கோபப்படுகிறார்கள். இதைச் சரி செய்ய என்னதான் வழி? தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தார் நடேசன்.

அந்த மாதம் கரன்ட் பில் வந்தது. மொபைலில் மின் வாரியத்தின் ஆப் வைத்திருந்தார். தொகையைக் கட்டி விட்டார்.

என்னப்பா...நீயே எலெக்ட்ரிக் பில் கட்டிட்டியா? – சந்தோஷமாய் கேட்டான் பிரபு. ஆன்ட்ராய்டு ஃபோனோட பயங்கர பிக் அப் ஆயிட்டியேப்பா...? மகிழ்ச்சியில் சிரித்தான். அது காசு மிஞ்சின மகிழ்ச்சி...!

ஆமா...பென்ஷன் தொகைலர்ந்து கட்டிட்டேன். இனிமே நானே கட்டிடறேன்....-இ.பி. பில் என் கன்ட்ரோல்...புரிஞ்சிதா எல்லாருக்கும்....-சற்று சத்தமாகவே சொன்னார் நடேசன். அந்தச் சத்தம் எதையோ எச்சரித்தது.

     தன் பென்ஷன் காசிலிருந்து அப்பாவே கட்டுறாரே...பாவம்....!! –

அடுத்த ரெண்டாவது மாதம் கரன்ட் பில் பாதியாகியிருந்தது.        

                     ---------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...