21 டிசம்பர் 2021

“நேற்றைய பால்” சிறுகதை (26.12.2021 ராணி வார இதழ் -

 

                                                                                                                “நேற்றைய பால்                 சிறுகதை   (26.12.2021 ராணி வார இதழ்    -  

           



         

       வள் கேட்டது தவறா, தான் சொன்னது தவறா? மண்டையைக் குடைந்தது சுப்புவிற்கு. தினமும் சந்தேகமாகவே ஒரு விஷயத்தை எதிர்நோக்குவதென்றால் பிறகு, தான் ஏன் அந்த வேலையைச் செய்ய வேண்டும்? அந்தக் கணம் அவர் நொந்துதான் போனார். ஆனாலும் ஒரு அனுபவம் பேசுகிறதோ அவளிடம்?

       உதவியாக இருக்கட்டும் என்றுதானே செய்தாகிறது. இழுத்துப் போர்த்திக் கொண்டு எனக்கென்ன என்று ஆறரை, ஏழுவரை தூங்கத் தெரியாதா என் வயசுக்கு?

       உதவின்னு நினைக்கிறதே தப்பு....நான் அப்படி நினைச்சேன்னா என்னாறது? ரேவதி கேட்பது போல் தோன்றியது. சரி......கடமைன்னே வச்சிக்குவோம்....என்ன நஷ்டம்? ஆனா ஒண்ணு எத்தனை வீடுகள்ல ஆம்பிளைங்க விடிகாலம்பற எழுந்து அடுப்புத் துடைச்சு, மேடை துடைச்சு,  பால் காய்ச்சி, டிக்காக் ஷன் போட்டு செய்றாங்க சொல்லு....விரல் விடு பார்ப்போம்...நம்ம உறவுகள்லயே எடுத்துக்கோ...ஒருத்தரைக் காண்பி...எல்லாமே பல்லைத் தேய்ச்சிட்டு காபிக்குக் கையேந்தி நிக்கிற கேசுகள்தான்....நான்தானே உனக்குக் காபியைக் கலந்து கொண்டு வந்து நீட்டறேன்...? ஒரு பேச்சுக்குச் சொன்னா இப்டியெல்லாம் நினைக்கிறதே தப்பும்பே....! இப்டி மணக்க மணக்கப் பக்குவமா உன்னாலே காபி கலக்க முடியுமா?

       நான் அதெல்லாம் பேச வரல்லை...உங்களை யாரு மேடை, அடுப்பெல்லாம் துடைக்கச் சொன்னா? வந்து நின்னு அப்டியே பால் பாத்திரத்தை அடுப்புல ஏற்ற வேண்டிதானே? –

அதைத்தான் அழுத்திச் சொல்கிறாள் அவள். எனக்குக் கொஞ்சம் லேட்டடாய்த்தான் புரிகிறது. நான் சராசரி. ஆனாலும்...

       என்னடி அபத்தமாப் பேசறே? ஒரு டைப்பிஸ்ட் இருக்கான்னா, அவன் தினமும் தன் மிஷினைத் துடைச்சிட்டுத்தான் வேலையை ஆரம்பிக்கணும். ஒரு கிளார்க் இருக்கான்னா, டேபிளைத் தட்டித் துடைச்சு சுத்தம் பண்ணி, அப்பறம்தான் சீட்ல உட்கார்ந்து. ஃபைலைக் கையில் எடுக்கணும்...அதுபோல அடுப்படியத் துடைக்காம அன்றாட வேலையை எப்டி ஆரம்பிக்கிறது? அது சாமியில்லையா? அன்னம் பிரசன்னமாகுற இடமில்லையா?  நீ செய்வியா அப்டி? மாட்டேல்ல? எனக்கு மட்டும் மாத்திச் சொல்றியே?

       அதெல்லாம் நான் வந்து வேலையை ஆரம்பிக்கும்போது செய்துப்பேன்...ரொம்ப உருகாதீங்க...! நீங்க செய்ய ஆரம்பிச்சீங்கன்னா மெயின் ஒர்க்ல உங்களுக்குக் கவனம் இல்லாமப் போயிடும்...அதனாலதான் சொன்னேன்....

       என்னா பெரிய  மெயின் ஒர்க்? – புரியாமல் கேட்டார் சுப்பு. கவனமில்லாமல் போகும் என்கிறாளே? இவளே என்னைப் படுகிழவனாக்கிடுவா போல்ருக்கே? ஆனாலும் இந்தப் பெண்களுக்கு அதீதப் பெருமைதான். என்னவோ தாங்கள்தான் சமையலுக்கு அதிபதி...நிபுணி என்கிற நினைப்பு. ஒரு நாளாவது உப்பு சரியாப் போட்டிருக்கியா? கேட்டா என்னாகுறது?...சண்டைதான் மிச்சம்...!   நளபாகம்னுதான் சொல்லி வச்சிருக்கான்...இதுக பீத்துற பீத்தலப் பார்த்தா...அடேங்கப்பா....? தாங்க முடிலடா சாமி....!!

       மெயின் ஒர்க்குன்னா....பால் காய்ச்சிறதுல இருக்கிற கவனம்....! அதைச் சொன்னேன்.  எடுக்கிற பாத்திரத்தை ஒரு வாட்டி கழுவணும். இல்லன்னா அதுல ஷபீனாப் பவுடர்...விம் சோப்பு படலம் ஒட்டிட்டிருக்கும்....அதோட பாலை ஊத்தித் ...தண்ணி கலந்து காய்ச்சும்போது...நிச்சயம் திரிஞ்சி போகும்...ஒரு பாக்கெட் இருபத்தஞ்சு ரூபா...தண்டமா? அதனால சொன்னேன்....கருத்தான விஷயங்களை பவ்யமா கேட்டுக்க மாட்டீங்களா? ஒருதரம் நீங்களே திரிய வச்சு அனுபவப்பட்டாத்தான் ஒத்துப்பீங்க போல்ருக்கு...!

       அப்டித்தான் அனுபவம் ஏற்படட்டுமே...! சுட்டபின் நெருப்புன்னு உணர்ந்தாத்தானே உண்மையான பயம் இருக்கும்? அந்த அனுபவம்தானே பெரிசு?  திரிஞ்சா நீதான் அதை வீணாக்காம பால்திரட்டு பண்ணிடுவியே...! உபயோகப்பட்டுருமே...!

       ஊம்....நாக்கைத் தீட்டிட்டு இருங்க...செய்து வைக்கிறேன்....ஏதோவொரு வாட்டி தொலையுதுன்னு பண்ணினா....ஒவ்வொரு தரமும் திரட்டிப்பால் கேட்குதோ அய்யாவுக்கு...? அதுக்கு ஜீனி என்ன செலவு, கேஸ் என்ன செலவுன்னு தெரிஞ்சா இப்டிக் கேட்க மாட்டீங்க...? ஒன்றரை மணிநேரம் காயும் அது...! கிண்டிக்...கிண்டி கை ஓய்ஞ்சு போயிடும்...!  இப்பயே இருபது நாளைக்குதான் வருது ஒரு சிலிண்டர்....ஆயிரத்தை தொட்டாச்சு விலை...தெரியும்ல...?

       யம்மாடி...ஆள விடு....நீ சொல்றபடியே செய்துடறேன்....எதுக்கு வெட்டிப் பேச்சு....பாத்திரத்தை நல்லா ஒருவாட்டி பவுடர் போகக் கழுவிட்டு பால் காய்ச்சணும்...அவ்வளவுதானே...? .கே....!

       பேச்சு அத்தோடு முடிந்தது அன்று.

       ன்று மறுபடியும் அந்தக் கேள்வி. அதே கேள்வி...!

       பால் காய்ச்சிட்டீங்களா...? -  பாவி...படுக்கையிலிருந்து எழுந்ததும் நேரே இங்கு வந்து நிற்கிறாளே...? செக்கிங் இன்ஸ்பெக்டர் மாதிரி? ஏன் இவளுக்குத் தன் மேல் நம்பிக்கையே வரமாட்டேனென்கிறது? அநியாயமாச் சந்தேகப்படுறாளே...! ஒருவேளை என்னை மக்குன்னு நினைச்சிட்டாளோ? பொம்பளைங்களே புருஷன் முன்னாடி  ஈகோ பிடிச்சவங்கதான்......அதுலயும் இவ ஸ்பெஷல் பர்ஸனாலிட்டி.....!

       அதெல்லாம் அப்பவே காய்ச்சியாச்சு....! புது டிகாக் ஷன் போட்டு மணக்க மணக்க நான் காப்பியும் குடிச்சாச்சு....!! பல் தேய்ச்சிட்டு வா...உனக்கும் ஒரு பெஸ்ட் காபி தர்றேன்....!

       சரி என்று பாத்ரூம் நோக்கித் திரும்பியவள், சந்தேகம் வந்ததுபோல் திரும்பவும் கேட்டாள்.

       புதுப்பாலைக் கேட்கலை...அது சந்தேகமில்லாமக் காய்ஞ்சு பொங்கிடும்...பழைய பாலு...நேத்துப் பால் மிச்சமிருந்ததே...அதைத்தான் கேட்டேன்....!

       குறிப்பாய்க் கேட்கிறாள்? சில சமயம் நல்ல சூட்டில் இருக்கையில் டப்-பென்று வெடித்துத் தெறிக்குமே...! திரிந்து விடுமோ என்கிற பயத்தில், எதற்கு வம்பு,  காய்ச்சின வரைக்கும் போதும் என்று அடுப்பை அணைத்திருக்கிறேன்...! அது தெரிந்திருக்குமோ? யமகாதகியாச்சே...!!

       அதுதான் நேத்தே பொங்கிடுச்சே.....! – வேண்டுமென்றே வாயைக் கிண்டுவதுபோல் சுருக்கமாய் பதில் சொன்னார் சுப்பு. எத்தனை துணிச்சலான பதில்? என்ன இப்டிச் சொல்லிட்டோம்? அவருக்கே என்னவோ மாதிரி ஆகிப்போனது.

       பிள்ளையில்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாடினானாம்...! – இதை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறாள். ஆனால் இப்போது சொல்லவில்லை. காரியத்தில் கண்ணாய் இருந்தாள்.

       நேத்துக் காய்ஞ்சது எனக்குத் தெரியாதா? இன்னைக்குத் திரும்பவும் காய்ச்சினபோது பொங்கிச்சான்னு கேட்டேன். ஏன்னா சில சமயம், ஃப்ரிட்ஜ்லருந்து எடுத்து ரெண்டாந்தடவை காய்ச்சும்போது லப் டப்...வந்து திரிஞ்சிடும்...!! – குறிப்பாய்க் கவனித்து வைத்திருந்து சொல்கிறாள்....! அனுபவம் பேசுகிறது.!

       பேஷாக் காய்ஞ்சிடுத்து....பொங்கினதே...பார்த்தனே...! ....வேணும்னா வந்து நீயும் பார்த்துக்கோ...எதுக்கு சந்தேகம்...? கொஞ்சம் பராக்குப் பார்த்து நின்னுட்டேன். பொங்கி வழிஞ்சிடுத்து....சட்டுன்னு அடுப்பை அமர்த்தினேன். என்னவோ தோன்ற ஏதோவொன்றைக் கூடுதலாகக் கூறினார் சுப்பு.

       சொன்னபிறகுதான் இதைச் சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது சுப்பிரமணியனுக்கு. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா? பழைய பால் பொங்கி வழிந்தது நேற்று. ப்பொழுதில்லை. பாத்திரத்தின் வெளியே அருவி போல் பால் வழிந்து படர்ந்து வெளேர் என்று உலர்ந்திருந்தது. அப்படி வழிய வழியக் கவனக் குறைவாய்ப்  பாலை நேற்றுக் காய்ச்சி இறக்கியவள்  அவள்தான். அதுதான் உறுத்துகிறதோ? அதை அறிந்தும் அறியாதவராய், தான் உளறியது தப்பு என்று அந்தக் கணத்தில் உணர்ந்தார் சுப்பு.

       வழிந்தது நேற்றுத்தானே என்பது சட்டென்று நினைவுக்கு வர- என்ன சொல்றீங்க நீங்க.?..என்று சந்தேகத்தோடு எழுந்து  வந்து தலையை நீட்டினாள் ரேவதி. பால்,  பாத்திரத்தின் உள்புறத்தில் பொட்டுப் பொட்டாய்ப் பரவி, குழம்பிய குட்டை போல் அழகாய்த்  திரிந்திருந்தது.

போச்சா...? – ஓடி வந்து எட்டிப் பார்த்து அவளோடு சேர்ந்து புரியாதவராய் இவரும் துக்கப்பட்டார். எப்படி? மண்டை குழம்பியது! அநியாயமா மாட்டிக்கிட்டமே...?  

 அடக் கடவுளே...! இதென்னடா கிரகம்...? பொங்கினபோதுதானே அடுப்பை அணைத்தோம்? திடீரென்று சந்தேகம் வந்தது. புதுப்பால் பொங்கியதை பழையபாலுக்கும் சேர்த்து நினைத்துக் கொண்டோமோ? அடுப்பை அணைத்து, தட்டுப் போட்டு மூடியிருக்கிறேனே...! பொங்காமல் மூடுவேனா? சரியாப் பார்த்தேனா, பார்க்கலியா?  காபி எதில் கலக்கினேன்? புதுசிலா, பழசிலா? அதுவும் நினைவில்லை அவருக்கு. பரிதாபமாய் நின்றார் சுப்பு...! எதற்கு வம்பு என்று அவள் எழுந்து காய்ச்சிக்கட்டும் என்று விட்டிருக்கணும்...ஃபிரிட்ஜ்லயே இருந்திருந்தா இந்தக் கேள்வியில்லையே! தனக்குக் காபி குடிக்கத்தான் புதுப் பால் இருந்ததே...! அடிக்கடி அவளிடம் வலிய மாட்டுவதே தன் வேலையாய்ப் போச்சு...! நொந்து கொண்டார் சுப்பு.

நாள் முழுதும் கதாகாலட்சேபம் கேட்பா....என்ன கதை சொல்லுங்களேன்னா...எனக்கு ஷூகர். ப்பி...பி...உண்டு.....அதனால் எல்லாம் மறந்துடும்ன்னு நழுவிடுவா..நாலு வரி சொல்லத் தெரியாது....அத மாதிரி இருக்கு உங்க கதை...! –பிடித்துக் கொண்டாள் ரேவதி.

       ஒரு பாலை கவனமாய்க் காய்ச்சி இறக்கத் துப்பில்லை....அடுப்பைப் பெரிஸ்ஸா வச்சிருப்பேள்...குளிர்ந்த. பாலுக்கு திடீர்னு அதிகமா சூடு கொடுத்தா? அது ஈஈன்னு இளிச்சிடுத்து.- கோபமாய் வந்து விழுந்தன வார்த்தைகள். பால் திரி திரியாய்ப் பல் இளித்தது. ராத்திரியே படுக்கும்முன் வழக்கம்போல் பால் சாப்பிட்டிருந்தால் இந்த வம்பில்லை...நஷ்டமில்லை. மீதியை உறையிட்டிருக்கலாம்...செய்ய விட்டுப்போனது. அப்படியே மிஞ்சி விட்டது.  தப்பு தன்னுடையதுதான். நினைத்துக் கொண்டாள் ரேவதி. எல்லாம் நானே கண்ல விளக்கெண்ணெய் விட்டுண்டு  பார்த்தாகணும்...தலைலெழுத்து..!  இப்டி ஒரு மனுஷனோட குப்பை கொட்ட வேண்டிர்க்கு...! என் காலமும் கழிஞ்சிடுத்து...!! அழுகை வந்தது அவளுக்கு.

       என்னை அநாவசியமாக் குற்றம் சொல்லாதே.... உன் மேலேதான்..தப்பு...! .என்றார் சுப்பு அயராமல். மேலும் கடுப்பானாள் ரேவதி.

       என் மேலயா...? நான் என்ன பண்ணினேன்...? – புரியாமல் கோபம் வெடிக்க நின்றாள்.

       புதுப்பாலை எப்படி கவனமாய்க் காய்ச்சணும்னுதான் சொன்னியே தவிர, பழைய-முதல் நாள் இரவு மிஞ்சி பாலை எப்படிப் பக்குவமாத்  திரும்பக் காய்ச்சணும்னு சொல்லிக் குடுத்தியா? அந்த சூட்சுமம் உனக்குத்தானே தெரியும்?- கேட்டுவிட்டு அவளையே விழுங்குவதுபோல் பார்த்தார் சுப்பு. எனக்கும் கேள்வி கேட்கத் தெரியும்! என்பது போலிருந்தது அந்தப் பார்வை. பால் காய்ச்சுவதில் என்ன கம்ப சூத்திரம்? என்ற கேள்வியும் கூடவே மனதில் தோன்றி வெட்கம் கொள்ள வைத்தது.. சாமர்த்தியமாய்க் கேள்வி கேட்டு விட்டால் சரியாப் போச்சா? – மனசாட்சி குத்தத்தான் செய்தது.

       அதான் சிம்ல வச்சுக் காய்ச்சுங்கோன்னு ஆயிரம் தடவை சொல்லியிருக்கனே? மறந்து போச்சா?

       சிம்ல வச்சிட்டா? திரியாதா? என்னடீ இது அபத்தமா இருக்கு? திரியுற பால் எப்டியும் திரிஞ்சிதான் போகும்...அதைத் தடுக்கிறது நம்ம கைலயா இருக்கு? எல்லாம் ஈசன் செயல்...! சிம்ல வச்சா என்ன....ஃபுல்லா எரிய விட்டா என்ன? கரன்ட் போய்ப் போய் வருது. ஃபிரிட்ஜ்லயே அது கெட்டிருக்க வாய்ப்பிருக்கு....என்னைப் போய் குறை சொல்றியே? ஊருக்கு எளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி...!

       ரேவதி அடுத்து என்ன செய்யப் போகிறாள்? என்பது புரியாமல் ஏண்டா இப்படி விதண்டாவாதமாய்ப் பேசினோம் என்று பயந்தவாறே அமரிக்கையாய் நின்றார் சுப்பு. ஒரு கணம்தான்..! ஒரே ஒரு கணம்...! பிறகு அதுவும் குளிர் விட்டுப் போனது.

அடுத்தாற்போல் இனிப்பான பால் திரட்டு எப்பொழுது தயாராகும் என்று மனதுக்குள் கற்பனை ஓட ஆரம்பித்து,  மகிழ்ந்து நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு  காத்திருந்த அந்த நிமிடம் அவள் கோபம் ஒரு பொருட்டாய்த் தோன்றவேயில்லை அவருக்கு. !

தூரக் கொட்ட முடியுமா? அதுக்கா காசு கொடுத்து வாங்கிறது? ...எனக்குத்தான் வேலை....! செய்து தொலைக்கிறேன்...வச்சிண்டு நன்னா வழிச்சித் தின்னுங்கோ...எனக்கென்ன வந்தது? அய்யருக்கு வேட்டைதான்... – என்றாள் அவள்.. வஞ்சப் புகழ்ச்சி...!!

ந்த வார்த்தைகளும் அடியோடு உறைக்கவேயில்லை அவருக்கு...!.! பால் திரளும் ஒரு வகையான மணம் அவர் மூக்கைப் பதம் பார்த்தது. கண்களை மூடி அதை ரசித்தார். திரட்டிப்பால் எப்போது திரண்டு கைக்கு வரும் என்று காத்திருக்கலானார் சுப்பு என்கிற சுப்பிரமணியம்...!

                                  ---------------------------------------------------    

      

      

 

 

             

      

             

 

 

      

       

 

      

 

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...