24 அக்டோபர் 2021

சிறுகதை “காவல்“ பிரசுரம் - அந்தி மழை

 

சிறுகதை                    “காவல்“                                                          ----------------               

     

கதவைத் திறந்தபோது அது உட்கார்ந்து கொண்டிருந்தது. 'க்சோ' என்று புது விதமான ஒலியில்  அதைச் சத்தமாக விரட்டினாள் திவ்யா.                        "எல்லாரும் 'ச்சூ... ன்னுதானே விரட்டுவாங்க...இதென்ன்ன க்சோ ? " என்றேன்நான்     மிரண்டு பயந்து ஏற்பட்ட பதட்டமாய் அவள் குரல்.                               அது ஒன்ன்றும் அலட்டிக்கொண்ட மாதிரித் தெரியவில்லை. தினமும் பார்க்கும் முகம்தானே என்பதுபோல் மெதுவே எழுந்து உடலை நீட்டி அருகே பள்ளத்திற்குள் குதித்து அடர்ந்த பூச்செடிகளின் மறுபுறம் உள்ள காம்பவுன்ட்  சுவரின் மேல் போய் அமர்ந்து கொண்டு சாவகாசமாய்த் திரும்பிப் பார்த்தது.                                பூனைகளுக்கு என்றுமே மனிதர்கள் முக்கியமில்லை.  வீடுகள்தான் முக்கியம்.     "முழியப்  பாரு...சரியான திருட்டுப் பூனை..." என்றவாறே கையில் பெருக்குமாரோடு வாசல் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் திவ்யா.                          கடந்த சில நாட்களாக இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பூனையை விரட்டுவதற்கென்று சற்றுச் சீக்கிரமே எழுந்து விடுகிறாள் அவள்.              "நா பார்த்துக்கிறேன்...இன்னும் கொஞ்ச நேரம் நீ படுத்துக்கோ..." சொல்லிப் பார்த்தேன்.  கேட்பதாய் இல்லை. அவளுக்கு என் மீது நம்பிக்கை போய்விட்டது.           'வேண்டாம்' என்ன்று சொல்வதோடு சரி. ஏன் வேண்டாம் என்று சொன்னால் மனதுக்குச் சற்று சமாதானமாய் இருக்கும். அதுதான் எப்பொழுதுமே அவளிடம் கிடையாதே! எல்லாச் சிரமத்தையும் தானே பட்டுக் கொள்வோம் என்பது போல் இயங்குவாள்.                                                                     "கூட ரெண்டு தரம் விரட்டினா போயிட்டுப் போறது..அதுக்காக அங்கேயே பழி கிடக்கணுமா?"                                                                     "அது போகாது...மீறினா நம்ம மேலேயே பாய்ஞ்சுடுமாக்கும். அந்த அளவுவுக்கு மோசமான பூனை அது...அந்த மரத்தடிலயே கிடக்குமேயொழிய அங்கவிட்டுப் போகவே போகாது.." - சொல்லிவிட்டுக் காத்திருக்கலானாள்.                                    இவளாகவே கற்பனை செய்து அதைப் பயங்கரப் புலியைப் போல் பாவித்துக் கொண்டு  அதன் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்த அளவுக்குப் பிரயத்தனப்படுவது அநாவசியமாய்ப் பட்டது எனக்கு.                                     "அவன்தான் வந்தா சத்தம் கொடுப்பானே...இதுக்காக வாசல்ல காவல் காக்கணுமா?" - மீண்டும் சொல்லிப் பார்த்தேன்.                                       நீங்கதான் சொல்லிக்கணும் சத்தம் கொடுப்பான்னு...அவன்பாட்டுக்கு வச்சிட்டுப் போறான். எப்போ வந்தான் எப்போ வச்சான்னு யாருக்குத் தெரியறது...?"                     "ஆறரை டூ ஏழுதான் கணக்கு. பேப்பர்காரன் ஆறு இருபது...சொத்துன்னு விழும்...அது சத்தம் கேட்கும்...இதுவும் கேட்கும். கொஞ்சம் கூர்ந்து கேட்கணும் வண்டிச் சத்தத்தை...முன்னெல்லாம் கேட் கொண்டியை அடிச்சு சத்தம் கொடுப்பான். அவனுக்கும் இப்போ அலுப்பு வந்திடுத்து போலிருக்கு. வாயால சொல்றதுக்குக் கூட வலிக்கிறது...சார் பால்னு ஒரு குரல் கொடுக்கிறதுல  என்ன்ன சிரமமோ தெரில..."                          நான் சொல்வது அவள் காதில் விழுந்ததா தெரியவில்லை. வீதியில் கவனமாக இருந்தாள். கடந்து போகும் சைக்கிள்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். வெவ்வேறு பேப்பர் போடும் பையன்கள். கிணி கிணியென்ன்று மணியடித்துக் கொண்டு செல்லும் பால் வண்டிகள்.                                                        "பசும்பாலானாலும் ரொம்பத் தண்ணியாயிருக்கு...வீதில வாங்கிப் பிரயோஜனமில்ல...பேசாமப் பாக்கெட்டே வாங்கிடுவோம்..." - அவள்தான் மாற்றினாள்.      என்னம்மா இப்டி திடீர்னு நிறுத்திப்புட்டீங்க...உங்களமாதிரி நாலு வீட்ல நிப்பாட்டினா அப்புறம் நாங்கள்லாம் எப்டிப் பொழக்கிறது?"                             "இல்லேப்பா...எனக்கு சரிப்படலே...நீ  நாலரைக்கும்  அஞ்சுக்கும் வந்து மணியடிக்கிறே...என் தூக்கம் கெடறது...எனக்கு ஒடம்புக்கு முடில..."                  "எம்பொண்ணக் கூட விடிஞ்ச பெறவு கொண்டாரச் சொல்றம்மா..."               "இல்ல...பரவால்ல...நான் அப்புறம் சொல்றேன் வேணுமுன்னா...."- நிறுத்தியே விட்டாள். நான் கூடச் சொல்லிப் பார்த்தேன்.                                       "தெரியாதா உங்க கும்பகர்ணத் தூக்கம்? விடி காலம்பறத்தான் அசந்து தூங்கறேள்...நீங்களாவது எழுந்து வாங்கறதாவது..."

     அப்பொழுது இந்தப் பூனைத் தொல்லையில்லை. அதாவது பால் திருடும் வேலையில்லை. அதுபாட்டுக்கு காம்பவுன்ட் சுவற்றில் எங்கேயாவது உட்கார்ந்து கொண்டிருந்தது அல்லது போய்க் கொண்டிருந்தது.பெரும்பாலும் மரத்தடிதான் அதற்கு யதாஸ்தானம். இப்படிப் பால் பாக்கெட் மேல் குறி வைக்கும் என்று யார் கண்டது?                                                                                     எப்படி அதற்கு இந்தச் சரியான நேரம் தெரிந்தது. "சார் பால்..." என்று அந்தச் சிறுவன் சத்தம் கொடுப்பது இதற்குப் புரியுமோ?                                  தெருவில் ஆட்கள் போக வர இருக்கிறார்கள்.  காம்பவுன்ட் சுவரில் வைத்திருக்கும் பால் பாக்கெட் நிச்சயம் எல்லார் கண்ணிலும் கண்டிப்பாகப் படும்தான். ஆனால் யாரும் தொடுவதில்லையே! பாலைத் திருடினால் பாவம் என்று ஐதீகமிருக்கலாம். பயமிருக்கலாம். அது பூனைக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?        முன்பு குடியிருந்த வீட்டில் தினசரி நான் சாப்பிடும் பொழுது பத்தடி தள்ளி மூன்று குட்டிப் பூனைகள் சொல்லி வைத்தாற்போல் வந்து உட்கார்ந்து கொள்ளும். "எம்புட்டு அழகு பாருங்களேன்..." என்று ரசிப்பாள் திவ்யா. ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி வைப்பாள். தயிர் சாதம் வைப்பாள். சாம்பார் ஊற்றிப் பிசைந்து வைத்திருக்கிறாள். எல்லாத்தையும்தான் சாப்பிட்டிருக்கிறது அவைகள். ஒரு நாள் கூட அவைகளை விரட்டியதில்லை. அப்பொழுது இல்லாத வெறுப்பு இப்பொழுது எங்கேயிருந்து வந்தது? ஏன் வந்தது? ஒரு வேளை  இது பெரிதாகவுவும் கருப்பாகவும் இருப்பது இவளைப் பயமுறுத்துகிறதோ? புலி போல மனதில் கற்பனை செய்து கொண்டு பயப்படுகிறாளோ? பயப்படுவது வேறு. வெறுப்பது வேறு. இவள் வெறுக்க அல்லவா செய்கிறாள்.                                                                                 "அப்பா திவசத்தன்ன்னிக்கு  காக்கைக்கு பிண்டம் வைக்கிறமே...அதத்          தின்னுண்டிருக்கு இந்தத் திருட்டுப் பூனை? ஒரு கல்ல எடுத்து வீசினேன் பாருங்கோ...அது பட்டுடுத்து போலிருக்கு...கத்திண்டே ஓடித்து...அதுக்கப்புறம் வராதுன்னு நினைச்சா இப்டி வந்த காத்துக் கிடக்கே?"                                          "காக்கை ரூபத்துல அப்பா வருவார்னு பார்த்தா வரலே...முன்னமாதிரி காக்கையே இல்லையே...இருந்தாத்தானே வரும்...செல் போன் டவர் நிறைய வந்துட்டதுலேர்ந்து எப்படிச் சிட்டுக் குருவிகள் காணாமப் போயிடுத்தோ அது போலக் காக்கைகளும் இப்போ அதிகம் தென்ன்படுறதில்லே...கா...கா...ன்னு நாம  காழ் காழ்ன்னு  கத்தினதுதான் மிச்சம். காக்கா வரலேன்னா அப்பாவுக்கு  வைக்கிற சாப்பாட வந்து சாப்பிடப் பிரியமில்லேன்னு வேறே மனசப் போட்டு அறுக்கிறது...இப்டி எத்தனையோ இதுகளுக்குப் பழகி வச்சிருக்கோம்...எதையும் விடவும் முடில.அதுதான் அங்க விசேஷம்.."                                                                                                "தினமும் மிஞ்சிற சாதத்தை அணில் சாப்பிடட்டும்னு எடுத்து வச்சா இது வந்து நன்னா வழிச்சித் தின்ன்னுட்டுப் போறது. ரெண்டு பருக்கை கூட அதுக்கு வைக்கிறதில்லை..."                                                           "இதப் போல மரத்துல காத்துண்டிருந்து உடனே அதுக்கு வரத் தெரில போலிருக்கு...?"                                                               "அப்டியில்லன்னா...வரத்தான் செய்றது...இது வந்து விரட்டிடறதாக்கும்...அதையும்தான் நான் பார்த்தனே.ஒரு மாதிரி தூக்கணாங் குருவி போல    ஒண்ணு உட்கார்ந்திண்டிருக்குமே...அது வந்து சாப்பிடறச்சே இது விரட்டிறதாக்கும்...அதான் எனக்குப் பிடிக்கலை..."                                 "சரி விடு...எதோ ஒரு ஜீவன் சாப்பிடறதோல்லியோ..."                                                                                                     "பாருங்கோ..இன்னிப் பார்த்து பால்காரனை இன்னும் காணலை...இவனை நம்பி எம்புட்டு நேரம் நான் உட்கார்ந்திண்டிருக்கிறது? எனக்கு உள்ளே காரியம் இல்லையா? "                                                                            "சரி சரி நீ போ  நான் பார்த்துக்கறேன்..."                                                                                                           "பார்த்துக்கறேன்னு உள்ளே உட்கார்ந்திண்டு சொன்னாப் போறாது. அங்க உட்கார்ந்து படிக்கிற பேப்பரை இங்க உட்கார்ந்து படிச்சிண்டே பார்த்திண்டிருங்கோ...அந்தப் பையன் வந்தவுடனே பக்கத்துல போய் நின்னுடணும்...பால் பாக்கெட்டை சுவத்துல வைக்க விடக்கூடாதாக்கும்...தட்டிப் பறிச்சிண்டு போயிடும் அந்த ராட்சசப் பூனை...கைக்குக் கை மாத்தி வாங்கிண்டு வந்துடணும்...தெரிஞ்சிதா..."                                                                                சொல்லிவிட்டு நான் வந்து காத்திருக்க அவள் உள்ளே போனாள். அந்தப் பூனை அவள் சொன்ன்னது போலவே செடிக்கு அந்தப்புறம் குத்திட்டு உட்கார்ந்து கவனமாகக் காத்துக் கொண்டிருந்தது. வெளிர் நீல நிறத்தில் கோலிக்குண்டு போல் பளபளக்கும் அதன் உருட்டு விழிகள். கருகும்மென்று தடிமனான உடம்பு! விசு விசுவென்று மூச்சு வாங்கும்போது அந்தப் பஞ்சு உடல் ஏறி ஏறித் தணிந்தது. உண்மையிலேயே பார்த்தால் கொஞ்சம் பயமாய்த்தான்ன் இருக்கிறது.                     

 உர்ர்ர்...என்று வாயைத் திறந்து பல்லைக்  காண்பித்து உறுமியது . மெகா சைஸால்ல இருக்கு! ஒரு வேளை பாய்ஞ்சுடுமோ?                                 பாதுகாப்புக்கு ஆள் வந்த பின்பும் அது அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறதென்றால் விவகாரமான பூனைதானே?                                                                                                       "தம்பி வெறுமனே வச்சிட்டுப் போகாதீங்க...பூனை வந்து தூக்கிட்டுப் போயிடுது...ஒரு சத்தம் கொடுத்து ஆள் வந்து எடுத்தபிறகு போங்க."                                                                                            "அது எப்டி சார்...நா இன்னும் நிறைய வீட்டுக்குப் போடறவன்...இங்கயே நீங்க வர்ற வரைக்கும் நின்னுக்கிட்டிருக்க முடியுமா? சத்தம் கொடுத்திட்டு நகர்ந்திடுவேன்...நீங்கதான் வந்து எடுத்துக்கணும்..."                                     என்ன ஒரு கறாரான பேச்சு? இந்தக் காலத்தில் யார்தான் பொறுப்போடும் மரியாதையோடும் பேசுகிறார்கள்? வேணும்னா பால் வாங்கு...இல்லன்னா சொல்லிடு...போயிட்டேயிருக்கேன் அவ்வளவுதான்.                                  ஆம்மா, அவன் சொல்றதுல என்ன தப்பு? நீங்க கேட்டதுதான் தப்பு. அவன் பல வீடுகளுக்குப்  போறவன். அவன இதுக்காக நிறுத்தி வைக்க முடியுமா? " - திவ்யாவும் ஆதரித்துப் பேசினாள்.                                                            அன்று ஒரு நிமிடம் பாத்ரூம் போய் வருவோம் என்று உள்ளே போனவன்தான்.. அதற்குள் அவன் வந்து பால் பாக்கெட்டை வைத்துவிட்டுப் போக இது வந்து அதைக் கடித்துத் துளை போட்டு சாவகாசமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தது.                                                                                           அதை விரட்ட வேண்டும் என்றே தோன்றவில்லை எனக்கு. என்ன ஒரு அழகான காட்சி! ஆள் விரட்ட வருமே என்பதெல்லாம் எதுவும் இல்லாமல் ரொம்ப லாவகமாகத் துளை போட்ட இடத்தில் வாயை வைத்து ஒரு காலால் எதிர்ப்புறம் அமுக்கி பாலை துளைப் பக்கம் வரவைத்து அது உறிஞ்சும் காட்சி.....                                "போனாப் போகுது திவ்யா...அது சாப்பிடுற அழகப் பாரேன். ஒரு நாளைக்கு வயிறு நிறையக் குடிச்சிட்டுப் போகட்டுமேன். விடு விடு..." என்றேன் நான். "இன்னிக்கு உங்களுக்குக் காபி கட்..." பதிலடி கொடுத்தாள் அவள். அன்றோடு போனால் சரி மறுநாளும் இதேமாதிரித் தவறத்தான் செய்தது.                                    அன்று சின்னப் பாக்கெட்டைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது. முதல் நாள்தான் பெரிசு சாப்டாச்சுல்ல...பொழைச்சிப் போகட்டும்...இன்னைக்கு சிறிசுல கையை வைப்போம் என்று பதம் பார்த்துக் கொண்டிருந்ததோ என்னவோ...கால் லிட்டர் அளவு கொண்ட சிறிய பாக்கெட் வெயிட் கம்மி என்பதால் வாயில் கவ்வி கீழே குதித்து மரத்தடியில் வைத்து பாக்கெட்டைப் பிய்த்துக் கொண்டிருந்தது. "                    "எப்பப்பாரு, அந்த மரத்தடிதான் அதுக்கு! வேறே போக்கிடமே கிடையாது போலிருக்கு...பேசாம அத வெட்டி எறிங்க...அதுலேயும் வாயை வச்சதோ என்னவோ...வேண்டாம்...வேண்டாம்...." என்று பெரிய அரை லிட்டர் பாக்கெட்டைத் தொடவே மாட்டேன் என்று விட்டாள் திவ்யா. அது கிழியவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் கேட்டால்தானே!                                               "பூனையோட முடி ஒட்டிண்டிருந்ததுன்னா கூட ஆகாதாக்கும்....எதுக்கு?  பன்னிரெண்டு ரூபாயப் பார்த்தா அப்புறம் பெரிசா எதாச்சும் வியாதி வந்திடுத்துன்னா...வேண்டாம்... வேலைக்காரம்மாவுக்கு வேணும்னாக் கொடுத்திடலாம்." அவளுக்கு மட்டும் ஏதாச்சும் வரலாமா? மனதிற்குள்தான் இது. ஆனால் ஒன்று. அதிலும் ஒரு நேர்மை இருந்தது திவ்யாவிடம்.முழு விபரத்தையும் சொல்லித்தான் "வேணும்னா எடுத்துண்டு போ..." என்றாள்.     s                                                                                                                "இதிலென்ன்னம்மா இருக்கு...பாக்கெட்டைக் கழுவிட்டாப் போச்சு..." - சொல்லிவிட்டு எடுத்துக் கொண்டு போய்விட்டாள் அவள்.                                                                                                            நான் காத்துக் கொண்டிருந்தேன். இன்னும் பால் வரவில்லை. அந்தப் பூனையும் நகரவில்லை. என்ன ஒரு திண்ணக்கம்? திவ்யா சொன்னதில் என்ன தப்பு? ஆள் இருக்கிறது என்று தெரிந்தும் நம்பிக்கையோடு காத்திருக்கிறதெனில் அடித்துக் பிடுங்கலாம் என்ற எண்ணம்தானே? ஒரு வேளை திவ்யா பயப்படுவதுபோல் பாய்ந்து வந்து ஆளைக் குதறி பாக்கெட்டைப் பிடுங்கிச் சென்ன்று விடுமோ?             மணி ஏழரை தாண்டிச் சென்று கொண்டிருந்தது. திவ்யா உள்ளே போன் பண்ணிக் கொண்டிருந்தாள்.                                                                "ஏங்க பால் வேன் வரல்லியாமே? இன்னிக்கு ஒரு நாள் வெளில வாங்கிக்குங்கங்கிறான்...ஏதாச்சும் பசும்பால் வண்டிக்காரன்  போனாக் கூப்பிடுங்க..." - திவ்யா சொன்ன சமயம் அந்தச் சைக்கிள் வண்டிப் பால்காரன் போவதைப் பார்த்து "ஏப்பா...பால்..." என்று கத்தினேன்ன்.                                               "நீங்கள்ளாம் நம்மகிட்டே வாங்குவீங்களா ஸார்.....!" - சொல்லிக் கொண்டே திரும்பாமல்  போய்க் கொண்டிருந்தான் அவன்.                                    "ஏய்....ஏய்....உன்ன்னைத்தாம்ப்பா கூப்பிடுறேன்...வா." - கையைத் தட்டி மேலும் சத்தமாய்க் கத்தினேன்.                                                                "என்னா ஸார்....நெசமாத்தான் கூப்பிட்டீங்களா.... பால் வேணுங்களா.....?"                                                                                   "ஆமாம்ப்பா....நீயும் தவிக்க விட்டுட்டுப் போயிடாத...அப்புறம் எனக்குக் காலம்பறக் காப்பி கட் ஆயிடும்...." - சொல்லிக் கொண்டே அவனை அழைத்து நிறுத்தினேன்.                                                                                      இதற்குள் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தாள் திவ்யா.                                                                                         "மாமிதான் நம்மகிட்ட பால் வாங்க மாட்டேன்னுட்டாங்க....நம்ம பால்தான் பிடிக்கலியே மாமிக்கு...அப்புறம் என்னா ஸார் இன்னிக்கு? ஏதாச்சும் விசேஷமா? என்னைக்குமில்லாம அதிசயமாக் கூப்டுட்டீங்க..."                                  "உங்கிட்ட வாங்கக்கூடாதுன்னெல்லாம் இல்லப்பா...பசும்பால் காபிக்குத்தான் ஆகும்...எனக்கு நிறைய உறை குத்தணும்...தயிர் வேணும்...வெண்ணெய் எடுக்கணும்...அதுக்கெல்லாம் இத வாங்கிக் கட்டுப்படியாகாதே...அதான்...வேறென்ன உங்கூட சண்டை போடறதுக்கு எனக்கென்ன வந்தது?"                              "அதுக்கில்ல மாமி வாங்கிட்டேயிருந்தவுக  திடீர்னு நிறுத்திப்புட்டீகளேன்னுதான்...சங்கடமாயிடுச்சி...சரி விடுங்க...எப்பவானாலும் கேளுங்க...நா இருக்கேன் எம்புட்டு வேணாலும்  தர்றதுக்கு...ஏதாச்சும் விசேஷம்னாலும் நம்மள மறந்துடாதீங்க மாமி..".பாலை ஊற்றிவிட்டுக் காசை வாங்கிக்கொண்ட அவன் "ஸார், அங்க பார்த்தீங்களா  மரத்தடில..." என்றான் கூர்மையாய் கவனித்தவாறே.           "அந்தப் பூனையத்தானேப்பா சொல்ற...அதனாலதாம்ப்பா இப்பப் பிரச்னையே....காலைலேர்ந்து இங்கயே ஏன் பழிகிடக்கிறேன்?..அதுக்காகத்தான்....டபால்னு வந்து பாலைத் து¡க்கிட்டு ஓடிடுதுப்பா....தொல்லை தாங்க முடியல...விரட்டியும் பார்த்தாச்சு...போகமாட்டேங்குது..."                                                 "அய்யய்ய...வெரட்டாதீங்க ஸார்...பாவம்...இந்த நேரத்துல அப்டிச் செய்யாதீங்க...."                                                                            "காலைலதானப்பா இப்டி வந்து பழி கெடக்குது....ராத்திரியே வந்து இந்த மரத்தடில படுத்துக்கும் போலிருக்கு...இதுட்டேயிருந்து இந்தப் பாலைக் காப்பாத்துறது பெரிய பாடா இருக்குப்பா...."                                                                                                                                              "நா அந்த நேரத்தைச் சொல்லல ஸார்...அதுக்கான நேரத்தச் சொன்னேன்...அது உடம்பு முடியாம இருக்கு ஸார்...நீங்க கவனிக்கலை போல்ருக்கு...அது சென ஸார்...பாவம்..நல்லா கவனிச்சிப் பாருங்க..."                                                                                                                 "என்னது?  என்னப்பா சொல்ற நீ...?!" -திடீரென்ற இந்த எதிர்பாராத செய்தியில் மனசை என்னவோ செய்ய ஆரம்பித்தது எனக்கு.                                                                                                              "அது அமுந்து அமுந்து அந்தப் பள்ளத்துக்குள்ளயே பதுங்குது பார்த்தீங்களா? அந்த மண்ணும் அதோட பதமான  ஈரமும் அத்தன எதம் அதுக்கு...அதான் அங்கயே சுத்திச் சுத்தி வருது....அநேகமா இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல ஆயிடும்...".                                                                                            "அப்டியா சொல்ற? நாங்க கவனிக்கவேயில்லையே?"                                                                                                   "அப்டித்தான்...அத வெரட்டாதீங்க ஸார்....தானாவே அதாவே போயிடும்...விட்டுடுங்க...." சொல்லிவிட்டு அவன் போய்க் கொண்டிருந்தான்.                                                                                           "அட, ஆண்டவனே! நல்லவேளை...இன்று இவன் மூலமாகவாவது இது விபரம் தெரிய வந்ததே..ஈஸ்வரா...!" -                                                                                                                                    என்னையறியாமல் முனகியவாறே திரும்பியபோது கண்கள் கலங்க உதடுகள் மெலிதாகத் துடிக்க அந்தப் பூனையையே  வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு  கலக்கத்தோடு நின்றிருந்தாள் திவ்யா!                                                ஒரு கணம் தடுமாறினேன் நானும்! அது ஏன் அப்படி என்று எனக்குத்தானே தெரியும்!!                                                                                                                                                                    ---------------                                                                                                                                                                                                                 

கருத்துகள் இல்லை: