23 அக்டோபர் 2021

“லட்சிய நடிகருக்கு லட்சிய அஞ்சலி”

 

                                                                                                                        

“லட்சிய நடிகருக்கு லட்சிய அஞ்சலி”        




               -                                  ----------------------------------------------------------------------------

       இவர் எந்த அரசியல் கட்சியில் இருந்தாரோ அந்தக் கட்சிக்காரர்கள் இவரது நடிப்பை ரசித்தார்கள். கட்சிக்காரர்களாயும், ரசிகர்களாயும். ஆனால் இவர் எந்த அரசியல் கட்சியில் இருக்கிறார் என்பது பிரச்னையில்லை, நடிப்புதான் எங்களுக்கு முக்கியம் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களைத் தரமான ரசிகர்களாய்ப் பாவித்து,  அந்த இடத்தில் தங்களை நிறுத்திக் கொண்டு எந்தவித வேற்றுமையுமின்றி இவரது தமிழை, அழகான அழுத்தமான உச்சரிப்பை, உணர்ச்சிகரமான நடிப்பை, உணர்வு பூர்வமாய்,  ஆழமாய் ரசித்தார்கள். கை தட்டினார்கள். பாராட்டினார்கள், தொடர்ந்து வரவேற்றார்கள்.

       அந்தப் பல்லாயிரக்கணக்கான வெகு ஜன ரசிகர்களுக்கு அவர் சிறந்த நடிகனாகத்தான் தெரிந்தார். அழகான தமிழ் பேசும் பச்சைத் தமிழனாகத்தான் தெரிந்தார். ஒரு நடிகர்திலகத்திற்குச் சரிக்கு சமமாக கணீரென்று வசனம் பேச இவர்தான் என்று சொன்னார்கள். நடிகர்திலகமே அதை வரவேற்றார்.  குறிப்பாக அவர்களுக்கு ஒன்று இவரிடம் மிகவும் பிடித்திருந்தது.   

       மிகையில்லாத, இயல்பான, எந்தவித சிறப்பான பிரயத்தனங்களும் இல்லாத, அவரது உடலமைப்பு என்ன சொல்கிறதோ அந்த அசைவுகளுடனான,  அசலான நடிப்புதான் அது. அதற்காக அவர், தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கென, அதை நிலை நிறுத்துவதற்கென பிரத்தியேக முயற்சிகளே ஏதும் செய்யவில்லையா? என்று கேட்பதற்கில்லை.எழுதப்பட்ட வசனங்களுக்கேற்ப  அவரது பாவங்கள், தேக நளினங்கள் தானாகவே வந்து கச்சிதமாய் உட்கார்ந்து கொண்டு அவருக்குப் பெருமை சேர்த்தன என்பதுதான் சரி.  

       அவர் நடித்த அந்தந்தத் திரைப்படங்களும் அவரது கதா பாத்திரங்களும் முழுமையான புரிதலின் அடிப்படையிலேயே அர்ப்பணிப்பு உணர்வோடு அவரால் அணுகப்பட்டதால், அவை தன்னகத்தே கொண்டுள்ள சிறந்த கதையமைப்பினாலும், அழுத்தமான காட்சிகளாலும், அந்தக் காட்சிகளின்பால் இவருக்கு ஏற்பட்ட அதீத ஈடுபாட்டினாலும், அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அனைத்துத் திரைப்படங்களும் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் திருப்திகரமாகவே அமைந்தன. காதல் காட்சிகளுக்கும், நகைச்சுவைக் காட்சிகளுக்கும், உணர்ச்சிகரமான கட்டங்களுக்கும் என அவருக்கு இயல்பாக எது அமைந்திருந்ததோ அதுவே பார்த்து ரசிக்கும்படி இருந்ததுதான் இவரது சிறப்பு. அதனால் தொடர்ந்து வரவேற்றார்கள்.

       எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொன்று. அந்த வெள்ளைப் பளீர்ச் சிரிப்பு. அப்போது அவரது இடது கன்னத்தில் விழும் குழி. அந்த அழகு தனி. அதை மட்டும் எதிர்பார்த்து ரசித்தவர்கள் அநேகம். அது  பார்வையாளர்களுக்குத் தந்த மகிழ்ச்சி. அவர் திரையில் சிரிக்கையில் இவர்களின் முகம் தானாகவே மலர்ந்தது.  அதனாலேயே அவர் மேல் ஏற்பட்ட பிரியம் அவர்களுக்கு அதிகரித்தது. நிலைத்தது.

       தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் விருப்பத்திற்குகந்தவராக இவர் இருக்கிறார், இவர்பாலான வரவேற்பு சற்றும் குறையாமல், குன்றாமல் நிலையாகச் செழித்து நிற்கிறது என்பதை இவரது அர்ப்பணிப்பு உணர்வோடான நடிப்பின் ஆழத்தோடு சேர்த்து உணர்ந்து கொண்ட இயக்குநர்கள் தங்கள் படத்தில் இவர் நடிப்பதை, அதன் மூலம் தாங்கள் எழுதிய தமிழ் வசனங்களுக்குப் பெருமை சேர்த்துக் கொள்வதை, யார் எழுதிய வசனம் என்று இவரது கணீரென்ற உச்சரிப்பின் மூலமாகத் தாங்கள் அறியப்படுவதை உணர்ந்து பெருமை கொண்டார்கள். மதிப்பு மிக்க இடத்தில் இவரைக் கடைசிவரை வைத்திருந்தார்கள். இது என்னால் உச்சரிக்கப்படும்போது அது தனக்கான பெருமையைத் தேடிக் கொள்கிறது என்று நிரூபித்தார் இவர்.

       தமிழ்த் திரையுலகின் மிகப் புகழ் பெற்ற இரண்டு ஜாம்பவான்களின் கடுமையான போட்டிக்கு நடுவே தனக்கென்று உள்ள இடத்தைத் தீர்மானமாகத் தக்க வைத்துக் கொண்டு, தன் இடமும் அதற்குச் சமானமான இடமே என்று தன் திறமையின்பால் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, நிலைநிறுத்தி, அந்த இருவருக்குச் சரிநிகராகத் தன்னைத் தேடி இயக்குநர்களையும், படாதிபதிகளையும் வரவழைத்தவர். அவர்களை நஷ்டமின்றி வாழ வைத்தவர்.

       கருப்பு வெள்ளைப் பட காலத்தில் தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களைக் கொடுத்து, திறமையான இயக்குநர்கள், தரமான படத்தயாரிப்பாளர்கள், நல்ல திரைக்கதை, சிறந்த நடிப்பு, அருமையான பாடல்கள், அற்புதமான காட்சிகள் என்று தன் பெயருக்கான வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, என்றும் தன்னை நினைக்கும்படியான இடத்தில் இருத்திக் கொண்டு, இன்றும் மதிப்பு மிக்க ஓரிடத்தில் தன்னை அழுத்தமாக வைத்துக் கொண்டு, நம்மிடையே வாழ்ந்து சமீபத்தில் மறைந்தவர்தான் அவர்.

       அவர் நமக்கெல்லாம் தெரிந்த, நாம் இன்றும் நினைத்துப் பார்க்க வேண்டிய, தொலைக்காட்சிகளில் பழைய படங்கள் ஓடும்போதெல்லாம் மகிழ்ச்சியோடு ரசித்துப் பார்க்கக் கூடிய, எல்லோராலும் சுருக்கமாக, அன்பாக அழைக்கப்பட்ட இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ஆர். அவர்கள்.

       எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று உச்சரிக்கவே கம்பீரமான பெயர் கொண்ட இலட்சிய நடிகர் அவர். நம் மக்களுக்கு அவர் எஸ்.எஸ்.ஆர்.  நடிப்புத்தானே, வேஷம் கட்டுவதுதானே, பிழைப்புத்தானே, சம்பாத்தியம்தானே, அரிதாரம் பூசியாச்சு, அது என்ன வேஷமாயிருந்தாத்தான் என்ன என்று வெறுமே நினைத்து விடாமல், தான் கொண்ட கொள்கைக்கு மனமுவந்து, அதற்கு நியாயம் சேர்ப்பவராய், மனசாட்சிக்குப் பொய்யாகாதவராய், புராணக் கதாபாத்திரங்களை ஏற்பதில்லை என்று இலட்சியப் பிடிப்போடு கடைசிவரை இருந்தவர், என்பதால் இலட்சிய நடிகர் என்ற பட்டத்துக்கு உண்மையிலேயே உகந்தவரானார்.

       ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள் ஆரம்பம்வரை வெளிவந்த திரைப்படங்கள் வாழ்க்கையை, அதன் உன்னதங்களை, அதன் மேன்மைகளை உயரே தூக்கிப் பிடிக்கும் அம்சங்களாய் விளங்கிய கால கட்டம் அது. அந்த நாட்களில் அத் திரைப்படங்களில் நடித்த நடிகர்களும் அந்தந்த உயர் லட்சியங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் தங்களை இணைத்துக் கொண்டதால், அவர்களின் முகமும், பாவனைகளும், பேச்சும், நடிப்பும், சொல்லும் செயலும், இவர்கள் இதற்காகவே பிறவியெடுத்திருக்கிறார்களோ என்று நினைத்து வியக்கும்படியான தோற்றத்தை ரசிக மனங்களிடையே ஆழமாய் ஏற்படுத்தி, இவர்களை நேரில் பார்க்க மாட்டோமா,  பேச மாட்டோமா,  இவர்களோடெல்லாம் பழகும் சந்தர்ப்பம் நமக்கும் கிடைக்காதா என்று ஏங்கிய நாட்கள் அவை. அந்த அளவுக்கான தாக்கத்தை, கனவுகளை ரசிக மனங்களில் தோற்றுவிக்கும் ஆன்ம பலம் பெற்றிருந்தன அந்நாளைய திரைப்படங்கள்.  அப்படியான பல படங்களில் நடித்திருப்பவர் எஸ்.எஸ்.ஆர் அவர்கள்.

       மனைவியை விபசாரி என்று சொன்ன வாயைக் கிழித்து எறிகிறேன் என்று, மாசு மருவற்ற அக்காளை எப்படி நீ அவ்வாறு சொல்லலாம் என்று அத்தான் ஸ்தானத்திலான சிவாஜியின் சட்டையைப் பிடித்து, சுற்றி இறுக்கி அக்காளின் ஒழுக்கத்தைப்பற்றிப் பிரலாபித்து,  அவரை வார்த்தைகளால் பிளந்தெடுத்து, எஸ்.எஸ்.ஆர்  கொதித்து நிற்கும் அந்தக் காட்சியை யாரேனும் மறக்க முடியுமா?  எஸ்.எஸ்.ஆரின் மனக்கொதிப்பு பார்வையாளர்களின் நெஞ்சிலும் பரவிக் கிடந்த காட்சி அது.  மிகவும் உன்னதமானதும், காட்சியை உயர்த்திப் பிடிக்கும் லாவகமானதுமான அந்தக் காட்சி, அவர் மழையாய்க் கொட்டித் தீர்த்ததும்தான் எல்லோருக்கும் அடங்கும். சொல்லணும், சொன்னாத்தான் தெரியும்…என்றார்கள் பலர். ஒருவன் மனசுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் கெட்டுப் போவதை மக்கள் மனதார மறுதலித்த காட்சி அது.  உணர்ச்சிப் பிழம்பான அந்தக் காட்சியைப் போல் இன்றுவரை அப்படி ஒன்று எந்தத் திரைப்படத்திலும் அமையவில்லை என்று சொல்வேன் நான்.  ஆனால் அந்த இடத்தில் கூட ஓரிரு சொல் வசனத்தினால், அதை உச்சரிக்கும் முறையினால், தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் சிவாஜி.அது அவரின் திறமை. பிறரை மிஞ்ச, தனக்கு முக்கியத்துவம் இல்லாத காட்சிகளில் இப்படியான யுக்திகளைக் கையாள்வது அவரது வழக்கம். ஆனால் அங்கே ரசிக மனங்கள் எஸ்.எஸ்.ஆருக்கு ஆதரவாகவே நின்றன.. அவரோடு சேர்ந்து கண்கலங்கின.அந்த அளவுக்கு மக்களிடம் நேர்மையும், நல்லுணர்வும், வாழ்க்கையின்  உன்னதங்களில் இருந்த அக்கறையும் இருந்த காலகட்டம் அது. அதை உணர்ந்து   அக்கறையோடு உருக்கமாகப் படம் எடுத்தார்கள் அந்தக் காலத்தில்.  தெய்வப்பிறவி படத்தின் இந்தக் காட்சியை யாரேனும் அவ்வளவு எளிதாக, சினிமாதானே என்று மறந்து விட முடியுமா என்ன? எஸ்.எஸ்.ஆருக்கு அண்ணியாக பத்மினி. சிவாஜியின் மனைவி. தங்கம்…அடித் தங்கம்….என்று மன ஆழத்தில்  சிவாஜி சொல்லிப் பெருமைப்படுவார். அப்படியான ஒரு காரெக்டர் அவராலேயே சிதைக்கப்படும் மேற்கண்ட காட்சியில்.அது பொய் என்று கொதித்தெழுவார் எஸ்.எஸ்.ஆர்.அப்படி அன்பால் கட்டுண்ட குடும்பம்.  எப்படியய்யா இப்படி வார்த்தெடுத்ததுபோல் கச்சிதமாய் அமைந்தார்கள்? இன்றும் நினைத்து வியக்கத்தானே வைக்கிறது.

       தெய்வப்பிறவி படத்தில் ஒரு காட்சியை மட்டும் சொன்னால் போதாது. உணர்ச்சிகரமாய் வசனம் பேசி, கோபம் கொப்பளிக்க தத்ரூபமாய் நடிப்பை வெளிப்படுத்தும் லட்சிய நடிகருக்குள்ளே ஒரு பெண்மையும் ஒளிந்திருந்தது. அது அவரை வெட்கப்பட வைத்தது. நாணமடைய வைத்தது. உடம்போடு ஒன்றிப்போன அந்த நாணத்தினாலும், வெட்கத்தினாலும், வார்த்தைகள் வராமல் அவர் தடுமாறினார். வளைந்து நெளிந்தார். அசடாய் கூனிக் குறுகினார்.  அந்தத் தடுமாற்றத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறினார். ஒரு பெண்ணின் நெருக்கம் அவரை மிகவும் கூச்சமடைய வைத்தது. நாணிக் கோண வைத்தது. அங்கிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற பதற்றத்தை ஏற்படுத்தியது. அது எத்தனை இயல்பாய் அவருக்கு அமைந்து ரசிக மனங்களை நிறைவு செய்தது?

       நீங்க…!...நீங்க எங்க இங்க….? – எம்.என்.ராஜத்தின் வீட்டு வாசலில் இந்தக் காட்சி. அதிசயமாய், எதிர்பாராது, ராமு என்ற எஸ்.எஸ்.ஆரைப் பார்த்த மென்மையான அதிர்ச்சியில் கேட்கிறார்.

       நா….நா வந்து….நந்தியாவட்டப் பூ இல்ல…நந்தியாவட்டப்பூ...அத ரெண்டு...பறிச்சிட்டுப் போலாம்னு வந்தேன்….

       எதுக்கு…?

       ம்…..கண்ணு வலிக்கு….ம்…!

       உங்களுக்கா….? – சிரித்துக்கொண்டே…

       கல்லூரில படிக்கும்போது…உங்களப் பார்க்கணும்னு காத்துக்கிட்டிருந்த எனக்குல்ல கண்ணு வலி எடுத்திருச்சு…..

       ம்ம்….!!!

       உங்ககிட்டப் பேச முடியலையேன்னு சித்தம் கலங்கி நொந்தில்ல போயிருந்தேன்….

       உனக்காவது சித்தம் கலங்கிப் போச்சு….உன்னக் கண்ட ரெண்டு கணத்துக்குள்ளாகவே, எனக்குப் பைத்தியமே பிடிச்சுப் போச்சு…..

       நான் உண்மையாச் சொல்றேன்…எனக்கு எப்பவுமே உன்னுடைய நினைவுதான்…கண்ண மூடினா, உன்னப்பத்திக் கவலைதான்…..

       இந்த இடத்தில் கள்ளபார்ட் நடராஜன் கோபமாய் உள்ளே நுழைவார். வேகமாய் வந்து பளாரென்று எஸ்.எஸ்.ஆரின் கன்னத்தில் அறைந்து விட்டுச் சொல்லுவார்…

திலகத்தப் பத்திப் பேச உனக்கு என்னடா உரிமையிருக்கு? –

கன்னத்தில் பதிந்த விரல்களோடு பொறுக்க முடியாமல் வெலவெலத்து நிற்கிறான் ராமு.  

மனோகர்….நீ செய்தது உனக்கே நல்லாயிருக்கா? அறிவுள்ளவன் செய்ற காரியமா இது? – திலகத்தின் ஆக்ரோஷமான கேள்வி.

அது எங்க அண்ணனுக்கே கிடையாதே….! .இருந்திருந்தா இவனுக்கு இப்டி ஒரு உரிமை கிடைச்சிருக்குமா?

மனோகர், இப்ப நீ இவரை அடிச்ச பாரு…

தப்புங்கிறியா? நான் ரொம்ப இளகின மனசு படைச்சவன் திலகம்…உங்கிட்ட எனக்கு என்னடா பேச்சு…? பேச வேண்டிய எடத்துல நான் பேசிக்கிறேன்….- கோபமாய் மனோகர் வெளியேறுகிறான்.

என்ன இது…? இந்த சம்பவத்த….

இதோட மறந்துற வேண்டிதான்…..

என்ன சொல்றீங்க….?

இந்த விஷயம் மட்டும் எங்க அத்தானுக்குத் தெரிஞ்சா, எங்க குடும்பமே கலைஞ்சு போயிடும்…..

அதுக்காக…?

நீ என்னை நேசிக்கிறது உண்மையாயிருந்தா, இதப்பத்தி எங்கயும், யாருகிட்டயுமே பேசக் கூடாது….- திலகத்திடம் சத்தியம் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான் ராமு.

சிறு காட்சிதான். ஆனாலும் அடி வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பாக சட்டென்று ஒரு முடிவு எடுத்து, இந்த நிகழ்வு என் அத்தானுக்குத் தெரியக் கூடாது, ஏன் யாருக்குமே தெரியக் கூடாது என்று தீர்மானிக்கும் எஸ்.எஸ்.ஆரின் ராமு என்கிற கதாபாத்திரம் இந்த இடத்தில் வானளவு உயர்ந்து நிற்கும். குடும்பம் என்கிற அமைப்பு எந்தக் காரணங்களுக்காகவும் சிதைந்து விடக் கூடாது என்கிற தத்துவம் பலமாய் பொருந்திப் பிரகாசிக்கும். எஸ்.எஸ்.ஆரின் இந்தக் காட்சியிலான நடிப்பு பற்றி விவரிக்கும் இந்த வேளையில் அவரின் அதிர்ச்சியும், வருத்தமும், சகிப்புத்தன்மையும் கலந்த அந்த முகம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. காட்சியின் வீர்யத்தில் அவர் நின்றாரா அல்லது அவரது உணர்ச்சிகரமான நடிப்பால் அந்தக் காட்சி நின்றதா என்றால், காட்சியும் இருந்தது, அதற்கேற்ற பொருத்தமான, திறமையான நடிகர்களும் அமைந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தெய்வப்பிறவி படத்தில் ராமு கதாபாத்திரத்திற்கு எஸ்.எஸ்.ஆரைத் தவிர வேறு எவர் ஒருவரையும் நினைத்தே பார்க்க முடியாது என்கிற அளவில் தன் நடிப்பை ஸ்தாபித்திருப்பார் லட்சிய நடிகர். 

எப்படி நடிகர்திலகத்திற்கு சிறந்த கதையமைப்புள்ள, காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்ட, திறமையான இயக்குநர்கள் அமைந்தார்களோ அதுபோலவே எஸ்.எஸ்.ஆருக்கும் அமைந்தது அவரது அதிர்ஷ்டம். இந்தக் கதைக்கு இவர்தான் பொருந்துவார் என்று கன கச்சிதமாகத் தேர்வு செய்து அவரை நடிக்க வைத்தார்கள். அவரும் தன் கதாபாத்திரத்தை ஆழமாய் உணர்ந்து ஒன்றி நடித்து, தனக்கும், தன்னைச் சார்ந்த இயக்குநர்களுக்கும் பெருமை சேர்த்தார். அப்படி எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு அமைந்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர்கள் திரு கே.எஸ்,கோபாலகிருஷ்ணன் அவர்களும், திரு ஏ.சி.திருலோகசந்தர் அவர்களும் ஆகும்.                                    

இது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வந்ததாயிற்றே என்று நினைக்கும்படியான, அப்படியான ஒரு படம்தான் நானும் ஒரு பெண். ஆனால் இந்தப் படத்தை இயக்கியது திருலோகசந்தர். குடும்பப்படம், குடும்பப்படம் என்கிறோமே…இதெல்லாம்தான் அந்த வகை. இந்தக் குடும்ப அமைப்பை ஆத்ம பூர்வமாய் உணர்ந்தவனும், அனுபவித்தவனும், பழுத்த அனுபவமிக்க பல பெரியோர்களின் எழுத்துக்களைப் படித்து ஆழமாய் உள்வாங்கியவனும்தான் இம்மாதிரியான நூறு சதவிகிதக் குடும்பத் திரைப்படங்களை எடுத்து கம்பீரமாய் முன் வைக்க முடியும். இந்தா பார்த்துக்கோ….இதுக்குமேலே இதுல எதாச்சும் செய்ய முடியுமா சொல்லு? என்று சவால் விடுவதுபோல் இருக்கும். அப்படியான இயக்குநரின் கைவண்ணத்தில் பரிமளித்ததுதான் நானும் ஒரு பெண்.

கறுப்பு நிறம் என்றைக்குமே பலராலும் விரும்பப்படாததாகத்தான் இருந்திருக்கிறது. இன்றும் இருந்து வருகிறது. அதிலும் பருவத்தே கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய, பெற்றோரின் கடமையாய் நிற்கக் கூடிய குடும்பப் பெண் கருப்பு என்றால் அது பலராலும் விரும்பத்தகாததாயும், ஒதுக்கப்படத்தக்கதாயும்தான் இருந்திருக்கிறது.

கருப்பிலும் அம்சமான அழகு உண்டுதான். பளீரென்ற வெள்ளைப் பல்வரிசைச் சிரிப்போடு, அகன்ற நெற்றியோடு, உப்பிய கன்னங்களோடு, எடுத்துப் படிய வாரிய நீண்ட கூந்தலோடு, கச்சிதமான உடலமைப்போடு, குங்குமச் சொப்பு போல் இருக்கும் பெண்களைக் கண்டு மயங்காத ஆண்களும் உண்டா என்ன? அப்படியான கருப்பழகிகள் விலை போகாமலா போய்விட்டார்கள். ஆனால் இத்தனையும் இருந்தும், திருமணச் சந்தையில் விலை போகாமல் கிடக்கும் ஒரு பெண்ணை (விஜயகுமாரி) என்னென்னவோ சொல்லிக் குழப்பி, இரண்டு குடும்பமும் நிதானத்திற்கு வரும்முன் திருமணத்தை நடத்தி முடித்து, சொத்தை அடைவதற்காகத் தன் திட்டத்தை கச்சிதமாய் நிறைவேற்றி, தான் நினைத்தவாறே அந்த மாளிகைக்குக் கொண்டு வந்து விடுகிறார் எம்.ஆர்.ராதா. பிறகுதான் ஆரம்பிக்கிறது பிரச்னை. நிறத்திற்காக எவராலும் விரும்பப்படாமல் அந்தக் குடும்பத்தில்  கரித்துக் கொட்டப்படுகிறார் அவர். படிப்படியாகத் தன்னுடைய நல்ல தன்மையினால் மாமனாரின், கணவனின் அன்பைப் பெற முயற்சிக்கிறாள் அவள்.

சற்றே அவனின் அன்பைப் பெற்ற வேளையில் அவளது படிப்பறிவு  இல்லாத பூஜ்ய நிலை மீண்டும் அவளைச் சிக்கலாக்குகிறது. அப்படி ஒரு காட்சி எத்தனை ஆழமாய், உணர்ச்சிகரமாய், மனக்கொதிப்போடு, பெரும் துயரத்தோடு இங்கே அரங்கேறியிருக்கிறது பாருங்கள். போகட்டும் பரவாயில்லை என்ற சமாதானத்தில் நிறத்தில் கருப்பான தன் மனைவி படிப்பறிவும் இல்லாதவள் என்பதை அறிய நேரும் அந்தக் காட்சியில் எஸ்.எஸ்.ஆரின் உணர்ச்சிப் பிழம்பான நடிப்பு இன்றும் தொலைக்காட்சிகளில் இந்தப் படம் பார்க்க நேர்கையில் நம்மை நடுங்க வைக்கிறது. அந்தப் பெண் மேல் ஆயாசம் கொள்ள வைக்கிறது. ஐயோ பாவமே…! என்று கல்யாணி கதாபாத்திரத்தில் வாழ்ந்த விஜயகுமாரி மீது பரிதாபம் கொள்ளாதவர் எவர்?

டெல்லியில் நடைபெறும் ஓவியப்போட்டிக்கான கண்காட்சியில் கலந்து கொள்ளும் முன் தன் நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்துவிட நினைக்கும் பாஸ்கர் (எஸ்.எஸ்.ஆர்) விருந்து தயாராய் பண்ணி வைக்கும்படி க்ளப்பிலிருந்து மனைவிக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்புகிறான். கடிதத்தைப் படிக்கத் தெரியாத கல்யாணி  பணியாள், ஒரு சிறுவன், கணவனின் தம்பி என்று கேட்டுக் கேட்டு  ஒவ்வொருவரும் ஏதோவொரு காரணத்தைச் சொல்லிச் சென்று விடுகையில் கடிதத்தில் இருக்கும் விபரங்களை அறிய முடியாமல் மனமுடைந்து பயந்து போய்க் கிடக்கிறாள் கல்யாணி. தான் படிக்கத் தெரியாதவள் என்று அறிந்தால், மறுபடியும் தன்னை எல்லோரும் வெறுப்பார்களே என்று கலங்கிக் கிடக்கிறாள். அந்நேரம் பாஸ்கர், நண்பர்கள் குடும்பத்தோடு வீடு வந்து சேர்கிறான். விருந்து தயார் செய்து வை என்று அவன் மனைவிக்கு எழுதியிருந்த கடிதம் அவளால் படிக்கப்படவில்லை. அதாவது படிக்க முடியாததால் விபரம் அறியப்படவில்லை. பதற்றமாய் சமையலில் ஈடுபட்டதில் முகத்தில் தீற்றிய கரியோடு டீ எடுத்து வருகிறாள். ராதா மூலம் அவள்தான் பாஸ்கரின் மனைவி என்பதை நண்பர்கள் அறிகிறார்கள்.

என்ன மிஸ்டர் பாஸ்கர், உங்க மனைவியைப் பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டிருக்கோம்…இன்னும் காணமே…டீயை வேலைக்காரிகிட்டக் கொடுத்தனுப்பிச்சிருக்காங்களே…?

என்னாது…? இதுதான் சம்சாரம் கல்யாணி……! – போட்டு உடைக்கிறார் ராதா.

என்ன? இதுவா பாஸ்கர் ஒய்ஃப்பு?

சரோ, நம்மளையெல்லாம் கேலி பண்ணினாரே…அவருக்கு வாச்சதைப் பார்த்தியா? ரோஸ் ஏஞ்சலையே கொண்டுவரப் போறேன்னு சொன்னாரு…கடைசில அவருக்கு வாச்சதைப் பார்த்தியா? ப்ளாக்…..

கீப் கொய்ட்…..

என்னா எல்லாரும் குசுகுசுன்னு பேசிக்கிட்டே இருக்குறீங்க…வாத்தியார்சம்சாரம் கருப்புன்னுதானே….இப்போநீங்கள்லாம் பொருத்தமாவா இருக்குறீங்க…எல்லாம் அப்டித்தான் என்று ராதா ஏற்றி விடுகிறார். கோபத்தில் கத்துகிறார் பாஸ்கர். சும்மாருக்கப் போறீங்களா இல்லியா? என்கிறார் ராதாவைப் பார்த்து.  

சாரி…மிஸ்டர் பாஸ்கர்…நாங்க புறப்படுறோம்….உங்கள வழியனுப்ப நாளைக்கு ஏர்போர்ட்டுக்கு வந்திர்றோம்…. என்று எழுந்து புறப்பட்டு விடுகிறார்கள் அவர்கள்.  ச்சே….இன்சல்ட்….என்று சலித்து, கோபத்தோடே உள்ளே வருகிறார் பாஸ்கர்.

என்னங்க….டிஃபன்….. – கேட்டுக் கொண்டே பயந்து நடுங்கி எடுத்து வருகிறார் விஜயகுமாரி.

படாரென்று தட்டி விடுகிறார் பாஸ்கர்.

டிஃபன்….! என்னை அவமானப்படுத்தணும்னு எத்தனை நாளாக் காத்துக்கிட்டிருந்த….?

இல்லைங்க….

என்ன இல்லைங்க…? கொஞ்சமாவது அறிவு இருக்குதா? இயற்கையான அழகுதான் இல்ல…செயற்கையா சிங்காரிச்சுட்டு வரக்கூடவா தெரியாது?

இல்லைங்க….வந்து….

என்ன வந்து, போயி….? ஏற்கனவே பெரிய்ய்ய ரத்தி….இந்த அழகுல மூஞ்சில கரியவேறே பூசிட்டு மூதேவி மாதிரி அவ்வளவு பேருக்கும் முன்னால வந்து நிக்க உனக்கு வெக்கமா இல்லே? வேலைக்காரின்னு சொல்லக் கூடிய அளவுக்கு வேஷங்கட்டிட்டு வந்து நின்னியே…,ஏன்? நீ ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செய்றேன்னு நான் தெரிஞ்சிக்கணும்னா?

கோவிச்சுக்காதீங்க….திடீர்னு நீங்க வந்து சொன்னதுனால ஏற்பட்ட அவசரத்துலயும், பதட்டத்துலயும்…..

ஏன் அவசரப்படணும்? ஏன் பதட்டப்படணும்? சாயங்காலமே உனக்கு லெட்டர் எழுதி அனுப்பிச்சன்ல….?

ஆமங்க….

அது உன் கைக்குக் கிடைச்சதுல்ல…..?

கிடைச்சதுங்க….

படிச்சிருக்க மாட்ட, படிக்க உனக்கு நேரம் இருந்திருக்காது…ஏன்னா பெரிய ஜமீன்தார் நீ….இந்த வீட்டையே தூக்கி உன் தலைல வச்சிட்டிருக்க பாரு…அதுல ஏற்பட்ட திமிரு…அலட்சியம்….

சத்தியமா அப்டியெல்லாம் இல்லைங்க….

பின்ன? படிச்சிட்டுப் பேசாம இருந்திட்டியா?  என் லெட்டருக்கு மதிப்பில்லையா? படிச்சிட்டுத் தூக்கி எறிஞ்சிட்டுப் பேசாம இருந்திட்டியா? நான் டெல்லிக்குப் போறத முன்னிட்டு, என் நண்பர்களுக்கெல்லாம் ஒரு விருந்து வைக்கணும், அதுக்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்னு நான் எழுதியிருந்ததை நீ கவனிக்கலையா? அதை நீ படிக்கவே இல்லையா?

இல்லிங்க…நான் படிக்கலைங்க…

ஏன் படிக்கலை…?சொல்லு…ஏன் படிக்கலை…?ஏன் பேசாமயிருக்க…சொல்லு ஏன் படிக்கல…? சொல்லு…..

ஆ…..என்ன அடிச்சிராதீங்க….

அடிக்கல…அடிக்கல…கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு….

எனக்கு…….

சொல்லு…..

எனக்கு….

படிக்கத் தெரியாதுங்க…….

என்ன சொன்னே….? படிக்கத் தெரியாதா? உனக்குப் படிக்கத் தெரியாதா? என் மனைவிக்குப் படிக்கத் தெரியாதா? கல்யாணி உனக்குப் படிக்கத் தெரியாதா?

ஆமங்க…நான் சின்னப்பொண்ணா இருக்கும்போதே எங்க அம்மா, அப்பா செத்துப் போயிட்டாங்க…அப்போ மாலதி கைக்குழந்த….எங்க அண்ணனுக்கு சமைச்சுப் போடுறதுக்கும், மாலதியக் கவனிக்கிறதுக்குமே நேரம் சரியா இருந்தது….என் தங்கச்சிய வளர்த்து. நல்லா படிக்க வச்சு ஆளாக்கணும்னு  ஆசப்பட்டனே தவிர, நான் படிக்கணும் சந்தோஷமா இருக்கணும்னு  நினைச்சதேயில்லைங்க…..

அப்டீன்னா இத்தன நாளா என்னை நல்லா ஏமாத்தியிருக்கே…நான் புஸ்தகத்தக் கொடுத்துப் படிக்கச் சொன்ன போதெல்லாம், படிக்கத் தெரிஞ்ச மாதிரி நடிச்சு,  மாமா கூப்பிடுறாங்க…அடுப்புல பால வச்சிட்டு வந்திருக்கேன்…இப்டியெல்லாம் சொல்லி என்ன ஏமாத்தி முட்டாளாக்கியிருக்கே…இல்லையா?

அய்யோ…தயவுசெய்து அப்டியெல்லாம் நினைக்காதீங்க….

பின்ன ஏன் இந்த விஷயத்த முதல்லயே சொல்லலை….ஏன் சொல்லலை? – கைகளைப் பிடித்து உலுக்குகிறார்.

நான் படிக்காதவள்னு உங்ககிட்ட சொல்ல வேண்டியது அவசியம்னு நினைக்கல்லீங்க….ஏதோ ஒரு முக்கியமான விஷயத்த கணவர்கிட்டே மறைக்கிறோம்ங்கிற எண்ணமும் எனக்கு ஏற்பட்டதே இல்லைங்க…இது ஒரு பெரிய விஷயமா என் மனசுக்குப் படலீங்க….அதுனாலதான்….

நிறுத்து….என்னப் பொறுத்தவரைக்கும் இது ஒரு பெரிய்ய்ய விஷயம்தான்….மனிதனாப் பிறந்தவங்களுக்கு, கண்ணை விடக் கல்விதான் முக்கியம்…..

ஆமாங்க….எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்க…ஏன் நீங்களே சொல்லிக் கொடுங்க….சீக்கிரமா நான் படிச்சிக்கிறேங்க….

போதும்….உனக்குப் பொறக்கப்போற பிள்ளைங்க படிக்கிற காலத்துல நீ படிக்கிறேன்னு சொல்றியே…உனக்கு வெக்கமா இல்ல? உன்னச் சொல்லிக் குத்தமில்ல…எடுபடாமப் போயிடுவாளேன்னு நினைச்சு  இரக்கப்பட்டு, என்னுடைய கற்பனைகளையும், லட்சியங்களையும் தியாகம் பண்ணிட்டு, உன் கழுத்துல தாலிகட்டி, தகப்பனையே எதிர்த்துப் பேசி, இந்த மாளிகைல எடமும் கொடுத்து மதிப்பும் கொடுத்தன் பாரு…, ….எனக்கு வேணும்…நல்லா வேணும்…பாஸ்கரோட மனைவி அழகில்லாத, கல்வி அறிவில்லாதவன்னு எல்லாரும் என் முகத்துல காறித் துப்பணும், உன்னைக் கட்டிக்கிட்ட பாவத்துக்காக அப்பவே நான் தூக்குப் போட்டுக்கிட்டுத்  தொங்கணும்…இது என் விதி….விதி…அய்யோ…நான் என்ன பாவம் பண்ணினனோ….என் வாழ்க்கை பாழாப் போயிடுச்சி…அநியாயமாப் பாழாப் போயிடுச்சி….

அயர்ந்து விடுகிறாள் கல்யாணி.ஆமாங்க…..உங்க வாழ்க்கை பாழாத்தான் போயிடுச்சி…..அதுக்குக் காரணம் நான்தான்….உங்க அறிவுக்கும், அழகுக்கும்…நான் பொருத்தமான மனைவி இல்லேங்கிறது எனக்கே தெரியுது…..நான் செத்ததுக்கப்புறமாவது, அறிவும் அழகும் நிறைஞ்ச மனைவி ஒருத்தி உங்களுக்குக் கிடைப்பான்னா…நான் இந்த நிமிஷமே சாகுறதுக்கும் தயாரா இருக்கேன்…எனக்கு ஒரு நல்ல கணவர் கிடைச்சார்ங்கிற திருப்தியோட, பூவும் பொட்டுமாப் போறமேங்கிற பெருமையோட,சந்தோஷமா சாவேன்….எப்பவோ செத்திருக்க வேண்டிய எனக்கு, நீங்க எங்கிருந்தோ வந்து உயிர் கொடுத்தீங்க….வாழ்வு குடுத்தீங்க….என்னோட வாழ்ந்த காலத்த, ஏதோ கெட்ட கனவுல நடந்த சம்பவமா நினைச்சு மறந்திடுங்க….என்னை மன்னிச்சிடுங்க….எனக்கு வாழ்வு வேண்டாம்…நான் சாகப் பிறந்தவ…நான் சாகத்தான் வேணும்….சாகத்தான் வேணும்….மயங்கி விழுகிறார்.

இந்த உணர்ச்சிமயமான அழுகை கொப்பளிக்கும் காட்சியைப் போல் ஒரு படத்திலும் இப்படி ஒரு அற்புதமான காட்சி வந்ததில்லை என்பேன் நான். எஸ்.எஸ்.ஆரின் நடிப்பு நம்மை இந்த அரை மணி நேரத்தில் பதறியடிக்க வைக்கும்….என்ன ஆகப் போகிறதோ என்று துடிக்க வைக்கும். விஜயகுமாரி அவருக்குச் சமமாக வெளுத்து வாங்குவார்….

இப்படியாகப் பல படங்களில் தன் தனித்துவமான நடிப்பை நிலை நிறுத்தியவர் லட்சிய நடிகர்.நானும் ஒரு பெண் என்ற இந்தப் படத்தில் கடைசியான கிளைமாக்ஸ் காட்சி ஒன்றும் இதே போன்று வீரியமாய்ப் பட்டுத் தெறிக்கும். அப்படிக் காட்சி அமைத்த இயக்குநரைச் சொல்வதா, அருமையாய் வசனம் எழுதிய வசனகர்த்தாவைச் சொல்வதா, அல்லது இரண்டையும் பெருமைப்பட வைத்த நடிகரைச் சொல்வதா? தனக்குக் கிடைத்த அத்தனை வாய்ப்புக்களையும் இம்மாதிரித் தன்னுடைய அர்ப்பணிப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கும், கற்கண்டுத் தீந்தமிழை களிப்புறப் பேசுவதற்கும் சவாலாகப் பயன்படுத்திக் கொண்டவர் எஸ்.எஸ்.ஆர் அவர்கள்.

அவர் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடித்த பல படங்கள் அவருக்கு இணையாக இவரையும் தூக்கி நிறுத்தி, ரசிகர்களைப் பேச வைத்தன.

கை கொடுத்த தெய்வம் படத்தில் தன் தங்கைதான் சிவாஜிக்குப் பார்த்திருக்கும் பெண் என்பது தெரிந்து, ஊராரின் அவச் சொல்லுக்கு ஆளான அவள் தன் நண்பனுக்கு வேண்டாம் என்ற மறைமுகமாய் அவர் மறுத்து நிற்கும் காட்சியும், அதனால்தான் இவன் இதை மறுக்கிறான் என்று பிறகு தெரிந்து அந்தப் புதிரை விடுவிக்கும் சிவாஜியும், நீயெல்லாம் ஒரு அண்ணனா என்று குற்றம் சாட்டி நிற்கையில், ஏன் அவ்வாறு செய்தேன் என்று தன் பக்க நியாயத்தை எஸ்.எஸ்.ஆர் எடுத்து வைக்கும் அழகும்….வெறும் சினிமாக் காட்சிகளா அவை? பார்த்துவிட்டுத் தியேட்டரைவிட்டு வெளியே வந்ததும் மறந்து விடும்படியாகவா இருந்தன? பாடமல்லவா சொல்லிக் கொடுத்தார்கள் அன்று. யாரேனும் மறுக்க முடியுமா?

பச்சை விளக்கில் வெள்ளந்தியான விவசாயி பசுபதியாக வருவாரே…அந்தக் காரெக்டருக்கு அவரைத் தவிர வேறு யார் பொருத்தம்? அந்த முகமும், மலர்ந்த சிரிப்பும், ஒரு கிராமத்து விவசாயிக்கே உரிய பொறுப்பான பேச்சும், தன்மையும் கொண்ட அந்தக் கதா பாத்திரத்தை அவரைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும்?

கட்டபொம்மன் வந்த காலத்தில் அதற்குப் போட்டியாக வந்த சிவகங்கைச் சீமையில் முத்தழகு பாத்திரத்தில்  கண்ணதாசனின் பக்கம் பக்கமான வசனத்தை அவரைத் தவிர வேறு யார் அத்தனை திருத்தமாக அப்படிப் பேசியிருக்க முடியும்?

சாரதா படத்தில் தமிழாசானாக வந்து முருகனின் வேலுக்கு விளக்கம் சொல்வாரே…பார்வையாளர்களின் மனத்தில் அந்தக் கருத்து பச்சென்று பதியாதா?

முதலாளியில் ஆரம்பித்து, ஏரிக்கரையின் மேலே…போறவளே பெண்மயிலே…என்று பாடி….பராசக்தி, ரத்தக் கண்ணீர், மனோகரா, குலதெய்வம், தை பிறந்தால் வழி பிறக்கும், பிள்ளைக் கனியமுது, அல்லி பெற்ற பிள்ளை, சிவகங்கைச் சீமை, தெய்வப்பிறவி, குமுதம், மணப்பந்தல், ஆலயமணி, சாரதா, வானம்பாடி, பூம்புகார், சாந்தி, காக்கும் கரங்கள், மறக்க முடியுமா, மணி மகுடம்….என்ற எத்தனை எத்தனை படங்களில் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார்?

எண்பத்தியாறு வயது ஆன பொழுதிலும் கூட அவரைப் பேட்டி கண்ட போது, நினைவு தப்பாமல், அந்தக் கால வசனங்கள் சிலவற்றை அவர் சொல்லிக் காட்டிய அழகு, அந்தத் தமிழ் இன்றும் தடுமாறாத சித்தம், தனக்கென்று பெருமையான ஒரு இடத்தைத் தக்க வைத்தவராகவே கடைசிவரை இருந்து, நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பரிமளித்து, அக்டோபர் 24, 2014 ல் தன் இன்னுயிரை நீத்த  திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் தமிழ் ரசிக நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து நிலைத்திருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. 

                     --------------------------------------------------------

உஷாதீபன்,                                                  8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு,                   மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014.                         செல்-94426 84188 ) ( ushaadeepan@gmail.com )

                     --------------------------------------------------------------------------------------

                                 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

      

      

      

      

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...