சிறுகதை “நீக்(ங்)குதல்” 24.10.2021 சொல்வனம் இணைய இதழ்
தியாகராஜன் அவர் கைபேசியை
அணைத்து வைத்திருந்தார். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை அவருக்கு. என்ன பேச்சு வேண்டிக்
கிடக்கிறது? என்றிருந்தது. வேண்டாத அழைப்புகள் நிறைய வருகின்றன என்று எரிச்சல்பட்டு அணைத்து வைக்க ஆரம்பித்தவர் இப்பொழுது வேணும் அழைப்புகளும்
தேவையில்லை என்று தோன்ற அது அணைந்தே கிடந்தது. உலகமே அதை அணைத்துக்கொண்டு திரிகையில்
இவர் அதை விலக்கி கிடப்பில் போட்டிருந்தார்.
அப்புறம் எதுக்குப்பா உனக்கு ஃபோன்...? என்றான்
பையன்.
வேண்டாம்தான்...
இல்லாமயே ஆக்கிடறேன் பார்...! இப்டி ஆஃப் பண்ணியே வச்சு, ஆள் இருக்கானா இல்லையாங்கிற
அளவுக்கு சந்தேகத்த உண்டு பண்ணி, கடைசில ஃபோனே இல்லாம ஆக்கிடுறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்...அது
ஒரு நாள் கிட்டும்...
பையன் ஒரு
மாதிரியாய்ப் பார்த்தான் இவரை. இதென்ன சபதம்? ஏன் இப்படி ஆகிவிட்டார்?
உனக்குன்னு
ஃப்ரென்ட்ஸ்கள் இல்லையா? அவங்களோட பேச வேண்டாமா? இல்ல-அவங்கதான் பேச மாட்டாங்களா? அதுக்காகவானும்
ஃபோன் வேணும்தானே?
என்ன ஃப்ரென்ட்ஸ்
வேண்டிக் கிடக்குங்கிறேன்...? அம்புட்டுப் பயலுங்களும் ஊழல் பிடிச்சவங்க...எல்லாம்
லஞ்ச லாவண்யத்துல திளைச்சவங்க...? இவங்களோட என்ன நட்பு வேண்டிக் கிடக்கு? நல்லாளா நாலு
பேர் இருந்தாப் போறும்....- வெறுத்துத்தான் பேசினார்.
நாலு பேருக்கு
நன்றி...அந்த நாலு பேருக்கு நன்றி...பாட ஆரம்பித்தவன்... யாருப்பா அவங்க? என்றான்.
என்னோட படிச்சவங்க...சின்ன
வயசு நண்பர்கள். ஒண்ணா வளர்ந்தவங்க...கவர்ன்மென்ட் சர்வீசுக்கு வராதவங்க...!
அப்போ கவர்ன்மென்ட்
சர்வீஸ்லதான் இந்த லஞ்ச லாவண்யமெல்லாம்ங்கிறத
ஒத்துக்கிறே...? அப்டித்தானே? –
அவன் வங்கியில்
வேலை பார்க்கிறான். இப்போதுதானே உள்ளே நுழைந்திருக்கிறான். அங்கே என்னென்ன சிக்கல்கள்
இருக்கின்றன என்பது இனிமேல்தானே தெரிய வரும்...! நல்லவேளை...என்னை மாதிரிக் குழில விழாமே...தப்பிச்சானே?
அதுவே பெரிசு...
நான் என்னடா
ஒத்துக்கிறது? அதான் ஊரெல்லாம் தெரிஞ்ச விஷயமாச்சே...!
அதற்கு மேல்
பாலன் பேச்சை வளர்க்கவில்லை. அவரிஷ்டப்படி இருந்துவிட்டுப் போகட்டும்... என்று விட்டு
விட்டான்.
தியாகராஜன்
சர்வீசிலிருந்து ரிடையர்ட் ஆகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு நிதானத்திற்கு
வந்திருந்தார். அப்படி இப்படியென்று அவருக்கான சிக்கல்களெல்லாம் தீர்ந்து, ஓய்வு காலப்
பணப் பலன்கள் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்திருந்தன.
ஆக்கப் பொறுத்து ஆறப் பொறுக்காத கதையாகிவிட்டது அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள். பைசாப் பெறாத விஷயம் என்று
சொல்லக் கூடாது. பைசாப் பெறும் விஷயம்தான். கடைசி வரை அப்பழுக்கில்லாது இருந்து வந்த தியாகராஜனுக்கு எந்தச் சனியன் வந்து தலையில் உட்கார்ந்து கொண்டதோ, கெட்ட புத்தி வேலை செய்து விட்டது கடைசியில். அலுவலகத் தலைமைக்குத் தான் கொடுத்த கடனான கைக்காசு இனி வரவே வராது என்ற நிலையில் சொந்தமாய் உழைத்துச் சம்பாதித்த பணத்தை அப்படிப் போனால் போகிறது என்று விட முடியுமா? என மனம் கொந்தளித்துப் போய் அதை நிரவல் செய்வதற்காக ஒரு ஒப்பந்ததாரரிடம் டிமான்ட் பண்ண, அது வினையில் போய் முடிந்தது.
பழக்கப்பட்ட, அனுபவப்பட்ட ஒப்பந்ததாரர் என்றாலும் தொலையுது என்று எடுத்து வீசியிருப்பான். அதை எப்படி எங்கு மீண்ட வருவாயாய் மாற்றிக் கொள்வது என்கிற சூட்சுமம் அவனுக்குத் தெரியும்..
புதிதாய், நேற்றுத்தான் களத்துக்குள் குதித்த ஒருவனிடம், அவனைப் பக்குவப்படுத்தாமல் மிரட்டிக் கை நீட்டினால்? அதையும் இதையும் சொல்லி பயமுறுத்தினால்? ஒப்பந்தமே கிடைக்காவிட்டாலும் போகிறது என்று விஜிலென்சில் சொல்லி வைத்து, தான் கேட்ட பணத்தைக் கொடுப்பது போல் கொடுத்து, கையும் களவுமாகப் பிடிபட வைத்து விட்டானே பாவி? முப்பத்தி மூணு வருடத் தூய்மையான பணிக்கு பங்கம் வந்து விட்டதே? அத்தனை நற்பெயரும் பாழாய்ப் போனதே? நியாயமாய்ப் பார்த்தால்,
தான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். அந்த எண்ணமும் உந்தத்தான் செய்தது. குடும்பம்
கண் முன்னே வந்து நிர்க்கதியாய் நின்று அதைத் துடைத்தெறிந்தது.
ஒரு வார்த்தை
எங்கிட்ட யோசனை கேட்க மாட்டீங்களா? எந்த விஷயத்தைத்தான் நீங்க என்னோட கலந்து பேசியிருக்கீங்க...எல்லாத்தையும்
உங்க இஷ்டத்துக்குத்தான் செய்வீங்க... ரிடையர்ட் ஆகக் கூடிய சமயத்துல இப்டியா அசட்டுத்தனம்
பண்ணுவாங்க...?-மனைவி விசாலி வயிரெறிந்தாள். எல்லாரும் சேர்ந்து உங்களை லூஸாக்கிட்டாங்க....!
அவளே திட்டும் அளவுக்குத் தாழ்ந்து போனார்.
என்ன தியாகராஜன்,
இதுக்கா இப்படிச் செய்தீங்க? பணமுடைன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தாக் கூட எங்கயாச்சும்
வாங்கிக் கொடுத்திருப்பனே? இந்த ஆபீஸ்லதானே இருக்கீங்க...மெதுவாக் கொடுப்பமேன்னு இருந்தேன்...அதுக்குள்ளேயும்
அவசரப்பட்டுட்டீங்களே...? வெறும் ஐயாயிரம்...அதுக்காகத் தப்புப் பண்ணப் போய் மொத்தப்
பேரும் அநியாயமாக் கெட்டுப் போச்சே...? என்றார்
அலுவலர். ஆபீஸ் பேரு உங்களால ரிப்பேர் ஆயிடுச்சே...! என்ன ஒரு சாமர்த்தியமான பேச்சு?
தன் கடன் காசுக்காகத்தான் இந்தாள் இப்படிப் பண்ணியிருக்கிறான் என்று எப்படிப் புரிந்து
கொண்டார்? அத்தனை பேர் முன்பும் வைத்து இப்படி உடைக்கிறார்? பழி பாவத்துக்கு அஞ்சாத
ஆள்தான் இப்படியெல்லாம் பேச முடியும்...!
தப்புப்
பண்ணுவதைப்பற்றி இவர் பேசுகிறார். வசூல் மன்னன். என்னால் பேர் கெட்டுதாம்? என்ன ஒரு
மனசாட்சியற்ற பேச்சு? மாதா மாதம் ரெவ்யூ மீட்டிங்
வைப்பதே இதற்காகத்தானே? இலக்கை எய்தாதவர்கள் சூட்கேஸ் கொடுத்து வாயை அடைத்தார்களே?
அதிலிருந்து ஒரு துளியை எடுத்து என்னிடம் வீசியிருந்தால் நான்பாட்டுக்கு சிவனே என்று இருந்திருப்பேனே? அதிலென்ன லஞ்சப் பணம் என்றா எழுதி
ஒட்டியிருக்கிறது? என் கடன் எனக்குத் திருப்பி வந்தது என்று என்னால் சமாதானப்பட்டிருக்க
முடியாதா? அதைச் செய்தானா இந்தக் கள்ளப்பயல்? நான் வாங்க மாட்டேன் என்று தெரிந்தும்
என்னை ஏமாற்றுவதற்கென்றே என் சம்பளப் பணத்திலிருந்து கடன் வாங்கிய பலே திருடனாயிற்றே
இவன்? தான் அத்தனை பண முடையில் இருப்பதாக ஆபீசுக்கே, பணியாளர்களுக்கெல்லாம் காட்டிக்
கொள்ள வேண்டுமாம்....என்ன ஒரு கபட நாடகம்? உன் பெயர்தான் ஊரெல்லாம் சிரிப்பாச் சிரிக்குதே...!
அது தெரியாதா உனக்கு? நயவஞ்சகம்....!
பன்றியோடு
சேர்ந்த கன்றுக்குட்டியும் பீயைத் தின்னும் என்று சொல்வார்கள். கடைசி நேரத்தில் அந்தப்
பாவத்திற்கு நானும் ஆளாகி விட்டேனா? இந்த வயிற்றெரிச்சல் இன்று வரை தீரவில்லையே? சாகும்வரை
இந்தக் காயம் ஆறவே ஆறாது போலிருக்கிறதே? நினைத்து நினைத்து மனம் மறுகிக் கொண்டுதான்
இருக்கிறார் தியாகராஜன். அணையாத தீயாய் அது கனன்று கொண்டேயிருக்கிறது.
இப்போதும்
அவருக்கான கடைசிப் பணப் பலன் காசோலை பெறுவதற்கு கைப்பேசி மூலம்தான் எல்லாத் தொடர்புகளையும்
மேற்கொண்டார். தன் பணப்பலனை இவரே கணக்கிட்டு, அதை அலுவலகத்திலும் சரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்களா
என்று வீட்டிலிருந்தே சோதனை செய்து உறுதி பண்ணினார். நேரில் சென்று யாரையும் கண்கொண்டு பார்ப்பதற்கு அவர்
மனம் இசையவில்லை. வங்கிக் கணக்கைக் கொடுத்து அதில் நேரடியாகக் கிரடிட் பண்ணுவதற்கான
வழிமுறைகளைச் செய்தார். ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்திட்ட ரசீதை பாலன்தான் கொண்டு போய்க்
கொடுத்து வந்தான். அப்பா நல்லாயிருக்காரான்னு ஒருத்தர் கூடக் கேட்கலப்பா...! என்றான்.
இவங்க கேட்கலேன்னுதான் அழுதேனா? கிடக்கானுங்க...பேடிப் பயலுங்க....! வாயைத் திறந்தால்
அழுகல் வார்த்தையாய்த்தான் வந்தது அவருக்கு. மனசு ஆறவே மாட்டேனென்கிறது. தனக்கேற்பட்ட
அவமானம்...சாகும்வரை மனசிலிருந்து அகலாது.
அங்க யாரும்
உங்களப் பத்தி நினைக்கவேயில்லை...நீங்களா ஏன் வீணா கவலைப் பட்டுக்கிறீங்க...? ஸ்டாஃப்
எல்லாருமே மாறியிருப்பாங்க போல்ருக்கு....என்றான் பாலன். ஆனாலும் நேரில் போக வேண்டும்
என்கிற எண்ணமே எழவில்லை தியாகராஜனுக்கு. அந்த வாசலை மிதிப்பதே பாவம் என்று நினைத்தார்.
உள்ளே காலடி வைத்தாலே பணத்தைத் தாண்டித் தாண்டித்தான் போக வேண்டும் போல் உணர்ந்தார்.. அந்த காம்பவுன்ட் பூராவும் ரூபாய் நோட்டுக்கள்
காற்றில் சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டேயிருப்பதுபோல்
இவர் மனம் நினைக்கும். அவைகள் மூஞ்சியிலும், உடம்பிலும் ஒட்டாமல், கடந்து வெளியேறுவதே
பிரம்மப் பிரயத்தனம். பணம்...பணம்...என்று
வாயைப் பிளந்து கொண்டு நிற்கும் காட்டேரிகள் அங்கு நிரம்ப உலவுவதாய் அவருக்குத் தோன்றிக்
கொண்டேயிருந்தது.
அதே அளவு
வெறுப்பு இப்போது அவர் வைத்திருக்கும் கைபேசியிலும் வந்து விட்டது அவருக்கு. யாருடனும்
தொடர்பு கொண்டு பேசுவதற்குப் பிடிக்கவில்லை. என்ன குசலம் வேண்டிக் கிடக்கிறது? எவன்
நம்மை ஞாபகம் வைத்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது? இருந்தாலென்ன, செத்தாலென்ன? நாமுண்டு,
நம் வேலையுண்டு என்று இருந்தால் போதாதா? வெட்டிப் பயல்கள். காசுக்கு அலையும் காட்டான்கள்.
மனசுக்குள் பொரிந்து கொட்டினார்.
சார்...சும்மா நழுவிடலாம்னு
பார்க்கிறீங்களா...விடமாட்டோமாக்கும்....! எங்க எல்லாருக்கும் ஒரு பெரிய பார்ட்டி வச்சிட்டுத்தான்
நீங்க போக முடியும்...ரிடையர்ட்மென்ட்ன்னா சும்மாவா?
பார்ட்டின்னா....
எஸ்.கே.சி.தானே....? தாராளமா வச்சிட்டாப் போச்சு....என்றார் இவர். மனதோடுதான் சொன்னார்.
அது கூடச் செய்யாமல் வெளியேறுவது நன்றாயிருக்காது...!
வெறும் எஸ்.கே.சி.யோட
தப்பிச்சிரலாம்னு பார்த்தீங்களா? அதான் நடக்காது. எல்லாருக்கும் சாப்பாடு போட்டாகணும்.....எங்களுக்கு
பிரியாணி வேணும்..எலும்பு கடிக்கணும் நாங்க....வெறும் வெஜ் சாப்பாடோட கழண்டுக்க முடியாது....சாயங்காலத்துக்கு
மேலே தீர்த்தமாடணும்...சும்மா இல்ல...? – பகிரங்கமாய்க் கேட்டார்கள். அம்மணமாய் நின்று
ஆடுவது போலிருந்தது. தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாண் என்ன முழம் என்ன?
உண்மையிலேயே
பயந்துதான் போனார் தியாகராஜன். இந்தக் கலாச்சாரம் எங்கிருந்து வந்தது? எவன் முதலில்
ஆரம்பித்து வைத்தது? ஒன்றிலிருந்து ஒன்று எப்படிக் கிளைத்தது? ஆபீசில், அலுவலக வேலை
நேரத்தில், கோப்புகளை அடுக்கியிருக்கும் மேஜையில் அதையெல்லாம் மூலையில் தூக்கிக் கடாசிவிட்டு டேபிளுக்கு டேபிள் வாழை இலை பரப்பி தரைத்தளம், முதல் மாடி, இரண்டாம்
தளம் என்றும், அந்த வளாகத்திலுள்ள பிற அலுவலகங்கள் என்றும் தடபுடலாய்ச் சாப்பாடு பறிமாறுவதும்,
சவரணையாய் உட்கார்ந்து மணிக்கணக்காய்ச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும்.....எங்கிருந்து
முளைத்தது இந்த அநாச்சாரம்? எப்படிப் பரவியது? அதென்ன ஆபீஸா, ஓட்டலா? பொது ஜனம் திடீரென்று
உள்ளே நுழைந்து பார்த்தால் எவ்வளவு கேவலமாய் நினைப்பார்கள்? நமக்கான அலுவலகங்கள் இந்த
லட்சணத்தில் கிடக்கிறதே என்று வயிறெரிய மாட்டார்களா?
தலைமை அலுவலகக் கண்காணிப்பாளர் பணி ஓய்வு பெறுகிறார்
என்றால் கிளை அலுவலகங்களிலிருந்தெல்லாம் வந்து கூடி விடுவார்களே...? அழைக்காமல் முடியாதே?
பிரிவுபசார விழாவன்று கட்டாயம் வந்துதானே ஆக வேண்டும்? அப்படியானால் அதற்கு ரெண்டு
நாள் முன்னம் நடக்கும் சாப்பாட்டுப் பந்திக்கு அழைக்காமல் முடியுமா? திருவிழாக் கோலம்தான்.
கொண்டாட்டம்தான். ஆபீஸ்களில் வேலை நடக்கிறதோ இல்லையோ இதெல்லாம் கன கச்சிதமாய் நடந்து
கொண்டிருக்கின்றன.
மலைத்துப்
போனார் தியாகராஜன். குறைஞ்சது முப்பதாயிரமாவது வேணும். என்ன அநியாயம்? எவனோ உழைத்து
சம்பாதித்த காசை எவர்களோ தட்டிப் பறித்துக் கொண்டு போவதா? இந்தப் பழக்க வழக்கங்களெல்லாம்
ஒழுக்கத்தின் அடையாளங்களா என்ன? ஊழல் மலிந்து கிடக்கும் அலுவலகங்களில் இப்படியல்லாமல்
வேறு எப்படியிருக்கும்? அவிழ்த்துப் போட்டு ஆடுவது போலல்லவா இருக்கிறது? வெறுத்துத்தான்
போனார்.
ஆனால் அதற்கான
அவசியம்தான் இல்லாமல் போய்விட்டதே? ஓய்வு பெறும் நாளன்றைக்கு முன்னமேயே அவர்தான் சஸ்பென்ட்
பண்ணப்பட்டு விட்டாரே? கெட்ட நேரம் என்று ஒன்று வந்தால் எதுதான் குறுக்கே நின்று தடுக்க
முடியும்? தன் புத்தியை ஜோட்டால் அடிக்கணும். விசாலி சொன்னதுபோல் அவளிடம் ஒரு வார்த்தை
கேட்டிருக்கலாம். அறிவு வேலை செய்யவில்லை. கெட்ட நேரம்-கெட்ட புத்தி. அநியாயமாய் ஏமாற்றி
விட்டானே இந்த ஆள்? பணப் பேயான அந்த ஆபீசர் எங்கே திருப்பித் தரப் போகிறான்? என்கிற
எண்ணம் வலுவாய், திடமாய் மனதில் பதிந்து விட்டது. அந்த வேகம், விவேகத்தை மறைத்து, தன்னை
மூர்க்கமாய் இயங்கச் செய்து விட்டது. வேறு எதையும் யோசிக்க விடவில்லை. அதையும் பண்ணி.
என் துட்டை எனக்கு மீட்டுக்கத் தெரியாதா? நானென்ன சும்பனா? துணிந்துதான் இறங்கினார்.
நானா இப்படி? என்று அவருக்கே நிரம்ப சந்தேகம்தான்.
அந்தப் புதிய
கான்ட்ராக்டர் இப்படி ஒரு முடிவு எடுப்பான் என்று துளியும் நினைத்துப் பார்க்கவில்லையே?
காலம் காலமாய்க் ஒப்பந்ததாரராய் இருக்கும்
முகம் தெரிந்தவர்கள் எவரிடமுமேனும் கேட்டிருந்தால் கூடச் சத்தமின்றிக் கொடுத்திருப்பார்கள்.
பரவாயில்ல...நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்...என்று கமுக்கமாய் முடித்திருப்பார்கள்.
என் பாழாய்ப் போன கோணல் புத்தி ஒரு புதிய ஒப்பந்ததாரனிடம் போய் மாட்ட வைத்து விட்டது.
இதை விதி என்று நோகாமல் வேறு என்னதான் சொல்வது? ஊழலில் திளைத்தவர்களிடம் யோசனை கேட்டிருக்க
வேண்டுமோ? இதற்கும் ப்ரோக்ரேஜ் பேசியிருந்தால் காரியம் கச்சிதமாய் முடிந்திருக்கும்.
தப்பு செய்வதற்கும் ஒரு
சாமர்த்தியம் வேணும்.. தனித் திறமை வேணும். .இவருக்கெல்லாம் எதுக்கு இது? – தன் காதுபடவே
பேசினார்களே....!
ஒரு வழியாய் எல்லாக் களேபரமும்
முடிந்தது. மனதில் வெறுப்பு படிந்து போனது. எவரையும் பார்க்க வேண்டும் என்றே தோன்றவில்லை.
அலுவலகம் சார்ந்த எவரேனும் கண்ணில் பட்டு விடுவார்களோ என்றிருந்தது. எதிரே தென்பட்டாலும்
காணாதது போல் தலையைத் திருப்பிக் கொண்டு வந்தாகிறது. நடக்கும் ஜனங்களுக்கெல்லாம் கூடத்
தெரிந்திருக்குமோ என்று மனம் கூச்சப்படுகிறது. லஞ்சம் வாங்கினவன்தான நீ? என்று கேட்பது
போலிருக்கிறது. அவர்களே கூட அப்படியிருக்கலாம்தான். ஒதுங்கிப் போனால் நிம்மதியாய்ப்
போச்சுதானே? துஷ்டனைக் கண்டால் தூர விலகு....அவர்களுக்கு நானும் துஷ்டனாகத் தெரியலாமே...!
வாங்காதவன் துஷ்டந்தான். வாங்கிப் பிரித்துக் கொடுக்காதவன் அதைவிடத் துஷ்டன். நான்
எனக்கே எனக்கு என்று கை நீட்டியவன்தானே?
இந்தாளோடு
என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? ரொம்பவும் கண்டிப்பாக இருந்தவனின் நிலைமையெல்லாம் இதுதான்.
எப்படியிருந்தால் என்ன? தானே வேண்டாம் என்று ஒதுங்கி யிருக்கும்போது, அவர்களின் இருப்பைப்
பற்றிய நினைப்பு தனக்கு எதற்கு?
பஸ்ஸில்
கோயிலுக்குச் செல்லும்போது ஆபீஸ் கட்டடத்தைக் கடக்கையில் தலையைத் திருப்பிக் கூடப்
பார்ப்பதில்லை அவர். அது இருந்தாலென்ன? பாழாய்ப் போனால்தான் என்ன? என்று நினைத்துக்
கொள்வார். வாழ்வுக்கே படியளந்த இடத்தை அப்படி நினைக்கலாமா? என்று தோன்றும்தான். தனக்கு
ஏற்பட்ட இழிவு அதை மறைத்து விடும் அவருக்கு. எவனாவது சொல்லிக் கொடுக்காமல் அந்தப் புதிய
கான்ட்ராக்டர் அப்படிச் செய்திருப்பானா? அந்தக் கறுப்புப் பூனை யாரென்று தெரியவில்லை.
சதி வேலை...! தெரிந்து என்ன ஆகப் போகிறது? ஆனது ஆயிப் போச்சு...! இழி பெயர் மறைந்து
விடுமா? ஆனால் வெறுப்பு மண்டிப் போனதே...!
நீ பார்க்கலேன்னா என்ன, ஆபீசை இழுத்து முடிடவா போறாங்க...?
பூனை கண்ணை மூடிட்டா, உலகம் இருண்டு போயிடுமா? கொழிக்கிற இடம் என்னிக்கும் கொழிச்சிட்டுத்தான்
இருக்கும். நீ வேணும்னா ஒதுங்கியிருக்கலாமே தவிர அங்க நடக்குற எதுவும் என்றைக்கும்
மாறிடப் போறதில்லை. அந்த சாம்ராஜ்யம் என்னைக்கும் சரிஞ்சிடாது. அது வெறும் மண் கோட்டையல்ல.
மலைக்கோட்டை. அது சிரஞ்சீவித் தன்மை கொண்டது.
அதற்குப்பின்தான்
கைப்பேசியில் உள்ள தொடர்பு எண்களையெல்லாம் ஒரு வெறியோடு அழிக்க ஆரம்பித்தார் தியாகராஜன். யாரும் பேச வேண்டாம்...யாருடனும் பேச வேண்டாம்.
யாரையும் பார்க்கவும் வேண்டாம். ஒரு கனமான வெறுப்பு படிந்து போனது மனதில்.
என்னைக்காவது
தேவைப் பட்டுச்சின்னா என்னப்பா பண்ணுவே...ஒரு டைரிலயாவது குறிச்சு வச்சிட்டு அழிச்சிடுப்பா...மகனின்
ஆதங்கம்தான் அதிகம்.
அவங்க சங்காத்தமே
வேண்டாம்ங்கிறேன் நான்...நீ என்னவோ பேசறியே...? அப்படி ஆரம்பித்தவர் இன்று உறவினர்கள்
நம்பர்களைக் கூட அழிக்கும் நிலைக்கு வந்து விட்டார். தொட்டதெல்லாம் வெறுப்பாகிப் போனது
இப்போது.
என்ன தியாகு....பேசறதேயில்ல....இந்த
ஊர்லதான் இருக்கியா?
ஃபோனுக்கு
ரெண்டு வழி உண்டுப்பா....நான் பேசலேன்னா என்ன...நீ பேசறது...? அதென்ன என்னை மட்டும்
பின்பாய்ன்ட் பண்றே...? என்பார்.
யாரும் இவரிடம்
வாயைக் கொடுப்பதில்லை. மனசு வக்கரிச்சுப் போச்சுய்யா அந்தாளுக்கு...!
வயசானவங்கள
நாமதானே நலம் விசாரிக்கணும்...ரெண்டு வார்த்தை பேசினாத்தான் என்ன குறைஞ்சு போயிடுவீங்களா....?
– விசாலி அடிக்கடி நிமிண்ட ஆரம்பித்தாள். தான் எதிலாவது மாட்ட மாட்டமா என்று காத்திருந்தது
போல். ஏதோவொரு வகையில் தன்னை அவளுக்கு சீண்டனும்...அதில் ஒரு சின்ன ஆறுதல். வாங்கிக்
குவிக்கத் தெரியவில்லையே என்கிற ஆதங்கம் அவளுக்கும் கூட இருக்கலாம்தான். யார் கண்டது?
தன்னை வழிப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.
பொத்திட்டு
இருடி....எனக்கும்தான் வயசாச்சு....ஒருத்தருக்கொருத்தர் ரெண்டு, மூணு வயசுங்கிறது ஒரு
பெரிய வித்தியாசமா? ஏன் அவங்கதான் விசாரிக்கட்டுமே...ஆகாதா? அவனவனுக்கு கௌரவம்....வேண்டாத
ஈகோ....அவன்தான் என்னைக் கேட்கணும்...நான் எப்படிக் கேட்குறதுங்கிற திமிர்....அவன நிறுத்தச்
சொல்லு...நா நிறுத்தறேன்ங்கிற கதைதான்...அப்டின்னா இருந்துக்கட்டும்....என் இயல்பு
இது..! .எது? யாரோடயும் பேசாம இருக்கிறது....நான் உண்டு...என் வேலையுண்டுன்னு கிடக்கிறது...அத
அவங்களால ஏன் ஏத்துக்க முடில...? Accept
people as they are
– ன்னு ஒரு சொலவடை உண்டு...உனக்குத் தெரியுமோ...? மனுஷங்கள அவங்க இயல்போட ஏத்துக்கிற
தன்மை வேணும். அதுதான் பக்குவம். அவன் யார்ட்டயும் பேச மாட்டாம்ப்பா...நாம பேசினாத்தான்
உண்டு-ன்னு இருக்க ஏன் எவனுக்கும் தெரில....? எதுக்கு அநாவசியமா எங்கிட்டர்ந்து எதிர்பார்க்கிறாங்க....?
நாந்தான் இப்டியாப்பட்ட ஆளுன்னு தெரியும்ல? ஃபோன் பேசிட்டா எல்லாம் ஆச்சா? ஒருத்தரை
ஒருத்தர் மனசளவுல டிலீட் பண்ணிட்டுத்தானே நிக்கிறோம்.. எவனுக்கு நினைக்க நேரம்? .இந்த
ஃபோன் நம்பர் டிலீஷன்லதான் கெட்டுப் போச்சாக்கும் எல்லாம்?
அதுக்காகத்
தெனமும் பேசிட்டிருக்க முடியுமா? மாசங் கூடி ஒருவாட்டி, ரெண்டு வாட்டி பேசலாம்தானே?
ரெண்டு வாட்டிகூட வேண்டாம்...அட...ஒருவாட்டி பேசக் கூடாதா? தல கிரீடம் தாழ்ந்து போகுமா?
திடீர்னு யாராச்சும் மூச்சை நிறுத்திக்கிறான்னு வச்சுப்போம்...அப்பத் தோணும்...ஐய்யய்யோ...ஒரு
முறையாச்சும் பேசியிருக்கலாமேன்னு...என்னத்தக் கொண்டு போகப் போறோம்...? நேர்லதான் போறதில்ல...ஃபோன்ல
கூடப் பேசப்படாதா?
எல்லாரும்
ஒரு நாளைக்கு மண்டையப் போடத்தான்டி போறோம்..யார் முதல்ல...யார் பின்னாடின்னு யாருக்காச்சும்
தெரியுமா? ஒரு பயலுக்கும் தெரியாது....பெரிஸ்ஸா பேசிட்டாப் போறுமா? நீ நல்லாயிருக்கியா?
நான் நல்லாயிருக்கேன்...இவ்வளவுதானே? எல்லாரும் ஒண்ணாக் கூடி ஒரு நாலு நாளைக்கு சேர்ந்து
இருக்கச் சொல்லு பார்ப்போம்....அப்பத் தெரியும் வண்டவாளம்...! சனீஸ்வரன் சந்நிதி போல
ரெண்டாம் நாளே ஆளுக்கொரு திசைல திரும்பிண்டு நிற்பா...இதெல்லாம் சும்மாடீ....ஃபோன்ல
பேசிட்டா மட்டும் பாசம் பொங்கிட்டிருக்குன்னு அர்த்தமாயிடுமா? அதெல்லாம் பொய்யி.....அவனவனுக்கு
அவனவன் குடும்பம், குட்டிங்கதான் பெரிசு.....என்னைக்கோ எல்லாரும் பிரிஞ்சி பிரிஞ்சி,
தனித் தனி தீவுகளா மாறியாச்சு...இப்போ இந்தக் கலாச்சாரம்தான் நடைமுறை....இனிமேல்லாம்
எங்கயும், எதுவும் ஒண்ணு சேராதாக்கும்....வெளில தெரியுற மாதிரி சும்மா மெப்பனையா, வக்கணையா
வேணா ஆளாளுக்குப் பேசிக்கலாம். அதுவும் பேசாம கம்முனு இருக்கிறவன் குத்தம் செஞ்சவன்
ஆயிடறான்...இவ்வளவுதான் விஷயம்.....என்னடீ வாழ்க்கை இது...போலியான வாழ்க்கை...அர்த்தமில்லாத
இந்த வாழ்க்கைக்கு அர்த்தத்தக் கற்பிச்சிண்டு வாழ்றதுதான் விவேகம்னு நினைக்கிறா எல்லாரும்...அது
அப்டியும் இல்லன்னு நான் கிடக்கேன்....நான் ஒருத்தன் அப்டி இருந்துட்டுப் போறேனே...என்ன
கெட்டுப் போறது?
புலம்பிக்கொண்டே,
சந்நதம் வந்தவர் போல, கைபேசி எண்களை விடாமல், தேடித் தேடி மேலும் நீக்கிக் கொண்டேயிருக்கிறார் தியாகராஜன். மொத்தமா
ஃபோனையே ஆஃப் பண்ணிட்டா கதை முடிஞ்சிது...இதுக்கு எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்...?
என்று தோன்ற ஆரம்பித்திருந்தது அவருக்கு.
----------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக