22 அக்டோபர் 2021

“ஒரு நாள் மட்டும்” – சுஜாதா சிறுகதை – வாசிப்பனுபவம்

 

ஒரு நாள் மட்டும்” – சுஜாதா சிறுகதை – வாசிப்பனுபவம் 




     க்கதையின் முடிவை யாராலுமே யூகிக்க முடியாது. கதையைப் படித்துக் கொண்டு வரும்போதே அவரவருக்குள் ஒரு முடிவு தோன்றும்தான். அப்படி ஒரு எதிர்பார்ப்பில் கதையை நகர்த்திக் கொண்டு போவதுதான் சுஜாதா போன்ற திறமை வாய்ந்த எழுத்தாளர்களுக்கான பெருமை.

     சுஜாதா போன்ற – என்று சொன்னேன். அதுவே தவறு. சுஜாதா போன்று சுஜாதா மட்டும்தான். அவரின் சாயலில், துள்ளலில், மின்னல் வெட்டு நடையில் பலரும் எழுதித்தான் பார்த்தார்கள் ஆனால் வெற்றியடைந்தார்களா, உச்சியை எட்டிப் பிடித்து நிலை கொண்டார்களா? என்பது கேள்விதான்.

     கதை எந்தளவுக்கு நீண்டு தன் முடிவை எட்டிக் கொள்ளுமோ அந்த அளவு சுஜாதாவுக்குக் கைவந்த கலை. இப்படியே சொல்லிக் கொண்டு போகிறாரே, சொன்னதையே திரும்பச் சொல்கிறாரோ என்று கூடத் தோன்றும் அளவுக்குப் பயணித்து, ஆனால் வாசிப்பை விட முடியாமல் தொடர்ந்து, அது ஒரு முடிவை எட்டும்பொழுது, அந்த முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகத்தான் இருந்து விடுகிறது.

     நவீனத் தமிழ் இலக்கிய வகைகளில் அவர் எழுத்து சேராது என்று சொல்பவர்கள் பலர். அப்படிச் சொன்னவர்கள் விடாது திரும்பத் திரும்ப அவர் எழுத்தைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொன்னவர்களின் எழுத்து ஒரு குறுகிய வட்டத்துள். ஆனால் சுஜாதாவுக்கோ எல்கையே இல்லை. அவர் விரிந்து பரந்து உலகளாவியிருக்கிறார். வரிக்கு வரி மிளிரும் ஸ்வாரஸ்யம். புதிய புதிய தகவல்களைக் கோர்த்துக் கொண்டே நகரும் சாமர்த்தியம்., எங்கு நிறுத்த வேண்டுமோ அல்லது அதுவாகவே எங்கு நின்று விடுமோ அந்த இடத்தில்  தானாகவே அது ஒரு முடிவைத் தேடிக் கொண்டு முடிந்து போகும் அதிசயம். அதுவே ஆச்சர்யம்..

     ஒரு நாள் மட்டும்…ஒரே ஒரு நாள் மட்டும் என்று இருவருமே அலைகிறார்கள். இருவருக்குமே அது வேண்டியிருக்கிறது. வேண்டாமென்றும் இருக்கிறது. தவிர்க்க நினைக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் தவிர்த்து, தவித்து, தங்களை மீறிய தூண்டுதலில் சந்தித்து அளவளாவிக் கொள்கிறார்கள். தொட்டுக் கொள்கிறார்கள், கை கொடுத்துக் கொள்கிறார்கள், சிரித்துக் கொள்கிறார்கள், ஒருவர் அழகை ஒருவர் மானசீகமாக ரசித்துக் கொள்கிறார்கள்…பொறாமைப் பட்டுக் கொள்கிறார்கள்… அதற்கு மேல் நிதானத்தைத் தவற விடாமல்தான் பயணிக்கிறார்கள். ஒட்டிக் கொள்கிறார்கள், உரசிக் கொள்கிறார்கள். வேண்டாமே….போதுமே….என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

     . சரி என்றும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டு மீண்டும் நிதானிக்கிறார்கள். வெறுமே பேசி விட்டு விலகுகிறார்கள். மனதுக்குள் துள்ளாட்டம் போடுகிறார்கள். மறுபடியும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் மனதுக்குள் இருக்கும் ஆர்வத்தை அவர்களை மீறி வெளிப்படுத்தி விட்டு அழியாமல் நிலைத்துவிட்ட அன்பை எண்ணி சந்தோஷித்துக் கொள்கிறார்கள். அதன் அடையாளமாய் ஒன்று நிகழ்ந்து விடுகிறது. அந்த ஒன்று அவ்வப்போதைய ஆறுதலுக்கான காரணியாய் அவருக்கு அமைந்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அது ஒரு விபரீத முடிவில்  கொண்டுபோய் நிறுத்தி விடுகிறது கடைசியில்.

     உங்களுக்கு வயசுக்கு வந்த பெண்கள், மனைவி இருக்கா. எனக்கும் கல்யாணம் ஆகி மகன், மகள், கணவன்னு ஒழுங்கா ஒரு வாழ்க்கை இருக்கு. சமூகத்தில் ரெண்டு பேருக்குமே வேறே  பொறுப்புக்கள், வேற வேலை இருக்கு. ஒரு காலத்தில் நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி நம்ம ஆசை நிறைவேற முடியாம போய்டுத்து. அதோட சரி…ஃபுல் ஸ்டாப்….

     அப்படீன்னா இந்த தினம்…?

     இந்த தினம் ஒரு….ஒரு சின்னக் கனவு…தினம்போல…..ஒரே ஒரு நாளைக்கு விதி ஒரு செமினார் வடிவத்தில் நம்மைச் சேர்த்து வெச்சது…அவ்வளவுதான்….

இடம் :- டில்லியின் ஷெராட்டன் ஓட்டலில் ஒரு கருத்தரங்க அறையில், இரண்டாயிரம் கி.பி.க்குப் பிறகு நம் நகரங்களின் போக்குவரத்து எப்படி இருக்கப்போகிறது, எப்படிப் பரிபாலிப்பது என்பது பற்றிய கருத்தரங்கு. கலந்து கொண்டவர்களில் பாதிப்பேர் கிபி இரண்டாயிரத்தில் உயிருடன் இருப்பார்களா என்பதே சந்தேகம்.

     பவானியின் கணவர் ராஜேஸ்வர்…டாக்டர் ராஜேஸ்வர்…யூ.என். எக்ஸ்பர்ட்.,

     கருத்தரங்கிற்கு வந்திருக்கும் விஜயசாரதி முன்னாள் காதலி பவானியை அங்குதான் சந்திக்கிறார். திடீர் அறிமுகம். பவானியை அடையாளம் கண்டு கொள்வதில் சிரமமிருக்கவில்லை. அவளுடைய ஆதார அடையாளங்கள் ஏதும் கரையவில்லை. அதே உதடுகள். கொஞ்சம் அழுத்தமாக, தூக்கலாக. ஆணவமாக கண்களில் அதே தூரம். உடம்புதான் சதை போட்டு பூசலாக. தலையில் ஓரிரு நரைமயிர் தோன்றத் துவங்கினாலும் இன்னமும் அழகாகவே இருந்தாள். 

பவானி….வாட் எ சர்ப்ரைஸ்…? –.

முதலில் சிதம்பரத்தில் நாம் பிரிந்ததிலிருந்து முன்கதைச் சுருக்கம் வேண்டும்….

கடைசியா உன்னை எப்பப் பார்த்தேன்….? உங்க அப்பா என்னைக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத குறையா வெளிய அனுப்பிச்சாரே… -  பேச்சு தொடர்கிறது.

உங்கப்பா அன்னைக்கு உன்னோட ஒரு வார்த்தை பேச விடலை….

இறந்து போறதுக்கு முன்னால வருத்தப்பட்டார். சாரதிக்காகக் காத்திருக்கலாம் பவானி. அவசரப்பட்டுட்டேன். மன்னிப்பியான்னு சொன்னார்.

அதுக்கு நீ என்ன சொன்னே…?

மன்னிக்கிறதும், மன்னிக்காததும் இப்போ அர்த்தம் இழந்து போச்சு….ரொம்ப லேட்டுன்னேன்….அதோ என் கணவர் வர்றார்….அவர்கிட்ட முன்னமே என்னைத் தெரியும்னு சொல்லாதீங்க…

ஏன்…?

அவர் ஒரு மாதிரி…ஜெலஸ்…..

பவானி…சாயங்காலம் டேராடூன் போறோம்….-சொல்லி அணைத்தவாறே போகும் அவரை ஏக்கத்துடன் பார்க்கிறார் சாரதி.

டெலிபோனில் பவானியின் குரல் கேட்டதும் ஆச்சரியம். டேராடூன் போகலையா?

அவர் மட்டும் போயிருக்கார். கார்ல இடம் இல்லை…நல்லதாப்போச்சு…..

விஜயசாரதிக்கு உடல் முழுவதும் சிலிர்ப்பு.   பவானி இங்க வர்றியா?

வேண்டாம்…லாபிக்கு வாங்க…பேசிட்டு இருக்கலாம்….

லாபி மானேஜரிடம் காருக்குச் சொல்ல….காண்டெஸ்ஸா காரில் ஒரு சின்ன பேக்கேஜ்…

இப்ப இந்தக் கணத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…நாம கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கணும் பவானி…

இன்னும் பத்து வருஷம் போகணும்….

சே…!தைரியம் இல்லாத கோழையா இருந்துட்டேன். படிப்பும் முடியல…வேலயும் இல்ல…எப்படித் தைரியம் வரும்? நீயாவது எதிர்த்திருக்கலாம்…ரெண்டு பேரும் ஓடிப் போயிருக்கலாம்..

எனக்கும் தைரியம் வரலை…சாரதி….

ஏமாற்றங்கள்….. – ஏக்கமாய் சிறு பயணம்.

சாரதியின் உள்ளத்தில் வேதனை. பிரிய வேண்டிய நேரம். அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறார்.

ப்ளீஸ் வேண்டாம். ரொம்பப் பயமா இருக்கு….என்ன பைத்தியக்காரத்தனமா காரியம் செய்திட்டிருக்கோம்…ரெண்டு பேரும் கல்யாணம் ஆனவங்க….

ஒரு நாள் மட்டும்….ஒரு நாள் மட்டும்…..நமக்கு கல்யாணமாகலை….

போதும் முடிஞ்சிருச்சு….. வேண்டாம் சாரதி…இந்தக் கணத்துலயே வெட்டிர்றதுதான் இயற்கை….

கையை விடுவித்துக் கொண்டு  பவானி மறைந்து போனாள்.  அறைக்கு வந்தார் சாரதி. டெலக்ஸ் செய்திகளைப் பார்த்தார். இ.பி.ஸி. அவார்டுக்காக வாழ்த்துச் செய்திகள் வந்திருந்ததை அலட்சியமாகப் புரட்டினார். அந்தப் போலராய்டு போட்டோவைப் பார்த்தார். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு, சிரித்துக் கொண்டு, அச்சாகப் பதிந்திருந்தது கணவன் மனைவி போல.

     ஒரு வாரத்தில் இந்தச் சம்பவம் அவர் மனதோரத்தில் ஒரு சிறிய இனிப்பாக, ஒரு தப்பித்த குற்றமாக.

அப்பா நீங்க லேசாக மாறிட்டீங்க…டில்லியில் என்னவோ ஆயிருக்கு…-மகள்

என்னம்மா சொல்றே…?

உங்க கண்ணுல ஒரு பிரகாசம்…

அப்பா கம்பெனிக்கு இபிஸி அவார்டு கெடச்சிருக்கு. ஒரு வீக்லில கூட இன்டர்வியூ…அதானேப்பா….?

அந்த ஃபோட்டோவை ஆபீசில் பத்திரப்படுத்தியிருந்தார். அவ்வப்போது மேசை டிராயரைத் திறந்து..திறந்து….முறுவலித்து…ஒவ்வொரு முறையும் அப்பாடீ…தப்பித்தோம்…குற்ற ஜரிகை படர்ந்த சந்தோஷம். மூன்று முறை பம்பாய்க்கு டெலிபோன் பண்ணும் முயற்சி. வேண்டாம்…ரெண்டு பேர் வாழ்க்கையும் பாதிக்கப்படும்.

     லேபர் யூனியனுடன் ஒரு சிக்கலான பேச்சு வார்த்தை. தலைவலி. பவானியுடன் இருக்கும் அந்த போட்டோவைப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாமே….மேஜை டிராயரைத் திறந்த போது…..

     உறரிணி…இந்த டிராயருக்குள்ளே ஒரு போட்டோ வச்சிருந்தனே… - புதிய செக்ரட்டரியை பதட்டமாய்….

     ஸார்…இட்ஸ் வித் மீ….

     அப்பாடா…கொண்டா அதை…அதை ஏன் எடுத்தே…?

     அது வந்து…உங்களை இன்டர்வியூ எடுத்தாங்களே…வீக்லீயில் அவங்க கணவன் மனைவியுமா ஒரு போட்டோ கேட்டாங்க…அவசரமா….

     என்னது?

     உங்க டிராயர்ல இந்த போட்டோவைப் பார்த்திருக்கேன்…அதனால இதை எடுத்துக் கொடுத்தேன். நல்லா வந்திருக்கில்ல… - அந்த வார வீக்லியின் இதழை மேசை மேல் பரப்பிப் பக்கத்தைத் திருப்பி வைத்தாள்.

இந்தியா முழுவதும் பரவிய லட்சோப லட்சம் பிரதிகளில் ஒரு பிரதி அவர் மேசை மேல் சிரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் ஆதர்ச தம்பதிகள் – பேட்டியிலிருந்த மேற்கோள் வாக்கியம் அதனடியில் அச்சிடப்பட்டிருந்தது.

     அடிச்சான்யா…க்ளாஸிக்….சுஜாதாவ அடிச்சிக்க ஆள் கிடையாதுப்பா….இனி பொறந்துதான் வரணும்….- ஒரு வாசகரின் உற்சாகக் குரல்.

ஒரு நாள் மட்டும் – கதையை உடனே தேடிப் படித்து விடுங்கள். படு சுருக்கமாய் நான் சொல்லியிருப்பதை முழுக்க விரித்துப் படித்துப் பாருங்கள்….அசந்து போவீர்கள். என்னா யோக்யமா எழுதறான் மனுஷன்…?ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு…ரெண்டு பேருக்கும் குழந்தைகள் இருக்கு…வேண்டாம்…தேவையில்லாம் ஏன் நிம்மதியைக் கெடுத்தக்கணும்….?  சுஜாதாவா இப்டி…? ஆச்சரியப்பட்டுத்தான் போவீர்கள்…ஆனால் அந்தக் கடைசி அதிர்ச்சி…..?

     அது அவரால் மட்டுமே முடியும்…….!!!!

                           -----------------------------------------------------

 

    

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...