21 அக்டோபர் 2021

“கருமிப் பாட்டி“ - சிறுகதை - கிருஷ்ணன் நம்பி - வாசிப்பனுபவம் -

 

“கருமிப் பாட்டி“ - சிறுகதை  - கிருஷ்ணன் நம்பி - வாசிப்பனுபவம் -




     ம் குடும்ப அமைப்பில்     சேமிப்பு என்பது ஒரு முக்கிய அங்கமாக இருந்தது.இன்றும் இருக்கிறது.  வரும் வருமானத்தில் செலவு போக மீறுவதைச் சேமிப்பது சேமிப்பல்ல...செய்யும் செலவுகளிலேயே எது தேவை, எவ்வளவு தேவை, எது தேவையற்றது, என்பதை அவ்வப்போது அறுதியிட்டு அதற்குத் தகுந்தாற்போல் செலவுகளைக் குறைத்து சேமிக்கும் பழக்கம்தான் உண்மையான சேமிப்பு. சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு எது செலவு, எது விரயம் என்கிற தீர்மானம் இருந்தாக வேண்டும்.     

     போதுமான வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு என்பது ஓரளவு இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் சோற்றுக்கே தாளம் போடும் குடும்பங்களில் எங்கிருந்து சேமிப்பது? எதைச் சேமிப்பது? அப்படியான குடும்பங்களில் கூட ஏதோவொரு வகையில்  சிறுகச் சிறுகச் சேமிக்கும் பழக்கம் இருந்தது என்பதுதான் நம் குடும்பங்களில் பெருமைப்படத்தக்க விஷயம்.     பெரிய அளவில் பயன்பட்டுவிடப்போவதில்லை என்று  தெரிந்தும் கூட என்றேனும், எதற்கேனும் அது உதவும் என்று கருதி துரும்பாய் ஒரு தொகையைக் கூட மதித்து சேமித்து வந்தார்கள். எடுக்க முடியாத வகையில், உடைத்துத்தான் எடுத்தாக வேண்டும் என்கிற நிலையில் உண்டியலில் போட்டு வைத்து சேமிக்கும் பழக்கம் என்பது இருந்தது. சேர்த்துக் கொண்டே போவதுதான் சேமிப்பு. பெருக்குவதுதான் சேமிப்பு. அவ்வப்போது தேவைக்கு எடுத்துக் கொண்டது போக அதுவாய் என்ன மீறுகிறதோ அது சேமிப்பு என்பது பெரிய்ய்ய  தவறு.  

     ஒரு குடும்பத்தில் யாராலேயும் எதுவும் செய்ய முடியாது என்கிற நிலையிருக்கும்பொழுது யாரேனும் ஒருவர், யாருக்கும் தெரியாமல் அல்லது மற்றவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது என்று நினைத்துக் கொண்டு அல்லது தெரிந்தால் தெரியட்டும் என்கிற முனைப்பில் சேமிப்பதும், இல்லாதவர்களுக்கு முறையே உதவுவதும் என்பதான நற்காரியங்களெல்லாம் ஒரு காலத்தில் நியமமாக நம் குடும்பங்களில் இருந்து வந்தன.

     நல்ல காரியம் என்று ஒன்று இருப்பின் அதைக் காலத்துக்கும் ரகசியமாய்ப் பாதுகாப்பதில் தவறில்லை என்ற கோட்பாடும் நடைமுறையில் இருந்து வந்தது. அதனால் பலரும் சந்தேகிக்கக் கூடும், கெட்ட பெயர் ஏற்படக் கூடும் என்பதைப் புரிந்து வைத்திருந்தாலும் அதைச் செய்தே ஆக வேண்டியதுதான் தனது கடமை என்று செயலாற்றியவர்கள் நம் மூத்த குடும்ப அமைப்பில் அநேகம்.  

     கருமிப்பாட்டி கருமியாகத்தான் இருக்கிறாள். ஆம்...அவளுக்கு வெளி வேலை செய்து, முறுக்கு சுற்றி கிடைக்கும் காசை பக்கத்து கிராமத்தில் இருக்கும் தன் பெண்ணுக்குக் கொண்டு போய் ரகசியமாய்க் கொடுத்துக் கொண்டேயிருந்தால்? இருக்கும் இடத்தில், வாழும் கிரஉறத்தில் உள்ள கஷ்ட நஷ்டங்களை அன்றாடம் கண் கொண்டு பார்த்திருந்தும், மடப்பள்ளியில் வேலை பார்க்கும் தன் பிள்ளை ரொம்பவும் காலட்சேபத்திற்கு அல்லாடுகிறான் என்பதை நன்கு அறிந்திருந்தும் கோயில் உண்டக்கட்டியில்தான் அன்றாடப் பசியே ஓரளவுக்கு அஞ்சு பேருக்குக் கழிந்தாகிறது என்பது கண்கூடாகத் தெரிந்திருந்தும், தனக்குக் கிடைக்கும் பணத்தை மகளிடம் கொண்டு போய்க் கொடுத்தால்? வரும் வருமானத்தை யாருக்கும் தெரியாமல், சொல்லாமல் கவனமாய்ச் சேமித்து வைத்து கடைசியில் அதை இருக்குமிடத்தை மறந்து அங்கு கொண்டு போய் இறைத்தால்?

     அதில் கொஞ்சத்தை இங்கே கொடுத்து உதவக் கூடாதா? நீங்களும்தான் கஷ்டப்படுகிறீர்கள். அன்றாடம் நானும்தான் என்ன பாடு படுகிறேன் கழித்துக் கூட்ட...? உங்க அம்மாவுக்கு இது தெரியுதா? குழந்தைகளுக்கு, எனக்கு ஒரு நல்ல துணி உண்டா?  மனைவி இதைக் கேட்டால் குத்தம். அது பிடிக்காது கணவனுக்கு. சொல்லிக் கொண்டேயிருந்தால் கடைசியில் உனக்கு இதுக்கு மேலும் வாய் நீண்டால் பிறகு என் கை நீளும் தெரிஞ்சிக்கோ....! நல்ல அப்பா, நல்ல அம்மா....! உங்களக் கட்டிண்டு நான் மட்டும் அன்றாடம் கஷ்டப்படணும்...உங்க தங்கை அங்கே சொகுசா இருக்கணுமாக்கும்....நாம படற கஷ்டம் உங்க அம்மாவுக்கு என்னைக்குத்தான் கண்ணுக்குத் தெரியப்  போறது...ஊரே பேசறது உங்க அம்மா காரியத்தைப் பத்தி...இப்டி எந்த மனுஷியாச்சும் எங்கேனும் இருப்பாளா? என்கிறது. நம்ப குழந்தைகளுக்குக் கூட உங்க அம்மா காரியம் புரிஞ்சிதான் இருக்கு....-புலம்பித்தான் பார்க்கிறாள்.
     இனிமே அம்மா பேச்சை எடுத்தியோ...அப்புறம் நா மனுஷனா இருக்கமாட்டேன்..... - கணவனின் பேச்சில் அடங்கிப் போகிறாள் அவள். கருமிப்பாட்டியின் செயல்பாடு குறித்து அந்தக் குடும்பத்தில் புகைந்து கொண்டேயிருக்கிறது. வறுமை, பொருளாதாரக் கஷ்டம் இருக்கும் இடங்களில் சின்னச் சின்னக் கோபங்களும், சண்டைகளும் அன்றாட நிகழ்வாக இருத்தல் என்பது இயல்பு.

     எல்லோரையும் பார்க்க வருவது போல் வந்து போன கோமு அத்தையிடம் அப்போதும் கொஞ்சம் பணத்தைத் திணித்து அனுப்புவதைக் குழந்தைகள் பார்த்து அம்மாவிடம் சொல்ல, அதை அவள் தன் கணவனிடம் கேட்க பெரிய சண்டையாகிவிடுகிறது அது. கடைசி மிச்சம் ஓங்கி ஒரு அறை. அம்மா அழுக,குழந்தைகள் அழுக....வீடே சோகக் காடாகி விடுகிறது, எதுவும் காதில் விழாத செவிட்டுப் பாட்டியோ நிச்சிந்தையான கும்பகர்ணத் தூக்கம்.

     பாட்டி ஒரு நாள் முற்றத்தில் வழுக்கி விழ, படுத்த படுக்கையாகிறாள். மருந்து வாங்கக் கூடப் பணமில்லை. கடன் வாங்கி ஒரு நாளுக்கு மருந்து கொடுத்தாகிறது. தொடர்ந்து பதினான்கு நாட்களுக்கு மருந்து கொடுத்தாக வேண்டும் என்று மருத்துவர் சொல்ல, பணத்திற்கு எங்கே போவது? ஈஸ்வரோ ரக்க்ஷது....ஆனது ஆகட்டும் என்று போட்டாயிற்று.

     அடுத்த ரெண்டாவது நாள் பாட்டியின் கதை முடிந்து விடுகிறது.  இருக்கும் கஷ்டம் போதாதென்று இதுவேறு. இப்போது கடைசிக். காரியத்திற்கு எங்கே போய் கை நீட்டுவது? இருக்கும்வரை தன் வருமானத்தையெல்லாம் கொண்டு மகளிடம் கொடுத்த பாட்டி கடைசியில் மகனிடம்தானே கடமைக்கு நிற்கிறாள்? என்ன செய்வார்?

     உங்க அம்மா மனசு எப்படியிருந்தாலும் சரி...என் மனசிலே ஒண்ணும் கிடையாது. இதோ வர்றேன்...என்று போய் பழைய ஓவல்டின் டப்பாவில் எப்போதோ தப்பித் தவறி ஏதேனும் அகஸ்மாத்தாய் மிஞ்சிவிட்டால் இருக்கட்டும் என்று போட்டு வைத்த காசு இப்போதேனும் உதவுகிறதே என்று கொண்டு வந்து கணவன் முன் வைக்கிறாள். இதுல இருக்கிறத வச்சு கடைசிக் காரியங்களை ஒப்பேத்தி விசேஷத்தை முடித்து விடுவோம்...என்கிறாள்.

     இரும்புக் கம்பி ஒன்று எடுத்து வந்து உண்டியல் உடைக்கப்படுகிறது. டப்பாவைத் தரையில் கவிழ்த்துகிறார்.

     “ஆ” வாயைப் பிளக்கிறாள் அம்மா. திக்பிரமை அப்பாவுக்கு. குழந்தைகள் மலங்க மலங்க விழிக்கின்றன. என்னாயிற்று?

     அத்தனையும் தங்கச் சவரன்கள்....என்ன பள பளப்பு?     

     பதில் சொல்ல பாட்டியில்லை அங்கே...! மொத்தம் பதினேழு தங்கச் சவரன்கள் அந்த டப்பாவில்...!

     கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைத்துக் கதையை முடிக்க வேண்டும் என்று வலிய எழுதப்பட்டதல்ல இந்தப் படைப்பு.  கதை எழுதப்பட்ட காலத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.. அப்போதுதான் இயல்பாய் எப்படித் தன்போக்கில் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு நகர்ந்திருக்கிறது என்பது புலப்படும். கதையின் விழுமியங்கள் காலத்தின் சாட்சியங்கள்.

     அந்தக் காலத்தில் இருந்த பெரியவர்கள் பல வகைகளிலும் நமக்கு உதவியாக, வழிகாட்டியாகவே இருந்தார்கள் என்பதுதான் மெய்மை.

     எதைப் பட்டவர்த்தனமாக, பூடகமாக, ரகசியமாகச் செய்ய வேண்டும், எதைப் பாதுகாக்க வேண்டும், எதை வெளியே சொல்ல வேண்டும், எந்த மாதிரியான ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும்  என்று ஒவ்வொன்றிலும் ஒரு சூட்சுமம் இருந்தது அவர்களுக்கு. சிந்தித்த எல்லாவற்றிலும் சுயநலம் இன்றி, பொது நலத்தை மனதில் வைத்து, மற்றவர்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கழித்தவர்கள் அவர்கள்.

     அவர்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு கொஞ்சமேனும் நாம் பின்பற்றப் பழகிக் கொண்டோமானால் நம் வாழ்க்கை சிறக்கும். இப்படிப் பல நியதிகளை நமக்குச் சொல்கிறது அமரர் கிருஷ்ணன் நம்பியின் இந்தக் “கருமிப்பாட்டி” கதை.

                                           ----------------------------

    

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...