“வண்ணதாசன் கதைகள்-கிருஷ்ணன் வைத்த வீடு-
சிறுகதை-வாசிப்பனுபவம் -
சொல்ல வந்த கதையை எல்லோரும் அறிந்த சாதாரண வாசிப்பு நடையிலேயே தட்டையாக முன்வைப்பது என்பது படைப்பாளிக்கும் பெருமை சேர்க்காது…படிக்கும் வாசகனையும் உற்சாகப்படுத்தாது. ஆகையினாலே எடுத்துக் கொண்ட கருவை என்ன மொழி நடையில் சொல்லிச் சென்றால் வாசகனின் மனதில் ஆழமாகப் பதியும்…எந்த இடத்தில்
ஆரம்பித்து இதை நகர்த்தினால் கதை தீவிரமாய்ப் பயணிக்கும் என்பதையெல்லாம் நிர்ணயித்து ஒரு படைப்பை எழுதும் எழுத்தாளனே தேர்ந்த படைப்பாளியாகிறான்.
ஒரே ஒரு வரிக்கதையானாலும் அதற்கு
ஒரு நீண்ட கால சரித்திரம் உள்ளதாகக் காண்பிக்க வேண்டி, எவ்வெவ்விதமான காட்சிகளைக் கோர்த்துக்
கொண்டே போனால் அது தனக்கான இடத்தைத் தானே சென்றடையும் என்று மனதிற்குள் காட்சி ரூபங்களாய்ப்
பயணித்து, அப்படியானவை எளிய, நம் மக்கள் ஏற்கனவே அறிந்த சாதாரணக் காட்சிகளாயினும் அதை
எங்ஙனம் விவரித்தால் என்ன மொழி நடையில் வரிகளாக்கினால்
அது பிரமிப்பை ஏற்படுத்தும், ரசனைக்கு உட்பட்டதாயிருக்கும் என்பதைத் துல்லியமாய் அறிந்து
இழை இழையாய்க் கோர்த்துப் பின்னி கடைசியில் ஒரு நீண்ட கனமான ஜடையாய்ப் போட்டுப் பூச்சூடுபவனே
பிரமிக்க வைக்கும் படைப்பாளி.
வண்ணதாசனின் இந்தச் சிறுகதை அந்த
வகையிலே கருத்தாய்ப் பின்னி ஜடை போட்டுப் பின்னிப் பூச்சூடப்பட்ட அழகான கதை. ஒரு தொகுதிக்குக் குறைந்தது
நான்கைந்து கதைகளாவது சிறப்பாக இருந்தால்தான் அது தரமான சிறுகதைத் தொகுதியாகக் கருதப்படும்.
ஆனால் இந்த ஒரு கதை இருக்கிறது என்பதற்காகவே இத் தொகுதியை வாங்கலாம், படிக்கலாம் என்கிற
தகுதியைப் பெறுவது மாதிரி பெருமையோடு ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு அலையலாம்
என்றால் அந்தத் தகுதியை இக்கதை கட்டாயம் பெறும்.
அதற்காக வண்ணதாசனின் சிறுகதைத் தொகுதியில் மற்ற கதைகளெல்லாம்
தகுதியின்றிப் போய் விடுமாயென்ன? அவரது படைப்புக்கள் ஒவ்வொன்றும் பொறுக்கியெடுத்த முத்து
மாதிரி. பல எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு என்று ஒன்று வருமானால், அந்தத் தொகுதியில்
இந்தச் சிறுகதை இருக்குமானால், அப்பொழுதும் இந்த ஒரு கதைக்காக அந்தப் புத்தகத்தை வாங்கி
மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டேயிருக்கலாம். திரும்பத் திரும்பப் படிக்க வைப்பதுதானே
ஒரு படைப்பின் தரமாக இருக்க முடியும்? ஒரு எழுத்தாளரின் மீதான தனிப்பட்ட நட்பின் காரணமாக
அவரது தரமில்லாத படைப்பை வைத்துக்கொண்டு அலைய
முடியுமா? படைப்பு வேறு…படைப்பாளி வேறு. படைப்பை வைத்துத்தான் படைப்பாளிக்கு மரியாதை.
அல்லாத பட்சத்தில் அது தனிப்பட்ட நட்பு மட்டுமே…! நட்பு கொள்ளுதல் என்பது வேறு. ஒரு
சிறந்த, காலத்தால் மறக்க முடியாத, இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்காக அந்தக் குறிப்பிட்ட
படைப்பாளியை நேசிப்பது என்பது வேறு. அப்படி மானசீகமாக நேசிக்க வேண்டிய தகுதி பெற்றவர்
திரு வண்ணதாசன் அவர்கள்.
ஒரு வீட்டின் கதை இது. அந்த வீடும்
அதில் வாழ்ந்த மனிதர்களும் அங்கு நடந்த சம்பவங்களும் ஒரு நீண்ட கால சரித்திரத்தைக்
கண் முன் நிறுத்தி பெரும் சோகத்தைப் படிப்பவனின் மனதில் ஏற்படுத்துகிறது. …ஒரு அழிக்க முடியாத கதை அந்த
வீட்டிற்கு இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. …வெகு காலம் அங்கு வாழ்ந்து கழித்த
மனிதர்கள் எப்படி, எதனால் எதிர்பாராத் தருணத்தில் அழிந்துபட்டுப் போனார்கள் என்ற தகவலின்
மூலம் ஒரு அமானுஷ்யத் தன்மையை ஏற்படுத்துகிறது. ஒரு சரித்திரத்திற்கான அத்தாட்சியாய் வாசலில் நிற்கும் மூளியாகிப் போன சின்னஞ் சிறிய கிருஷ்ணன்
சிலை குறியீடாக நின்று இந்தக் கலக்கத்தை நம்முள்ளே உண்டுபண்ணி விடுகிறது.
வெகுநாள் கழித்து சந்திக்கும் நண்பன்
கேட்கும் முதல் கேள்வி அந்தக் “கிருஷ்ணன் வச்ச வீடு” இப்ப இருக்கா? . தனுஷ்கோடி அழகர்
கேட்டவுடனே நாமும் தயாராகிக் கொள்கிறோம். என்ன அந்த வீட்ல? என்ற கேள்வி உடனேயே நம்முள்ளும்
பிறந்து விடுகிறது. அவர்கள் பின்னால் அவர்களே அறியாமல் நடக்க ஆரம்பிக்கிறோம். அவை புதைந்து
கிடக்கும் ரகசியங்கள் அல்ல. ஊருக்கே தெரிந்த ரகசியங்கள்தான். ஆனால் பூடகமானவை.
அந்தக் கேள்வியை அவன் கேட்கும்
முன்னால் எதிர்பாராத் தருணத்தில் அவனைச் சந்திப்பதையும் சுற்றுச் சூழல் மற்றும் மனிதர்கள்
மீதான அவனது கவனத்தையும் மெல்ல மெல்ல அழகாய்ச் சொல்லிக் கொண்டே போகிறார். அந்த மென்மையான ரசனையும் வரிகளும்தான் வண்ணதாசனுக்கே உரிய தனித்தன்மை..
“பாப்புலர்
டாக்கீஸில் “தாமரை நெஞ்சம்” படம் பார்த்துவிட்டு வெளிவருகிற கூட்டத்தில் என் தோளை வந்து
அவன்தான் பிடித்தான். சிகரெட் குடித்து, மிட்டாய் சாப்பிட்டிருந்த வாசனையுடன் சிரிப்பு
இருந்தது. தனுஷ்கோடி அழகர் தியேட்டர் முன்பு தரையில் பரப்பி வைத்துப் பாட்டுப் புத்தகம்
விற்கிற மனிதரைப் பார்த்தான். வளைந்து திரும்புகிற வாய்க்காலில் தண்ணீரே தெரியாமல்
பூத்துக்கிடந்த நீலநிறப் பூக்களைப் பார்த்தான். விறகுக் கடையில் விழுந்து கொண்டிருந்த
சம்மட்டி அடியிலிருந்தும் ஈரவிறகு வாசனையில் இருந்தும் என்னுடைய அழைப்புக் குறித்த
முடிவை எடுத்தது போல “சரி போவோம்” என்றான்.
என்று நண்பனை வீட்டிற்கு அழைத்து அவன் அளிக்கும் பதிலுக்கான இடைவெளியை இதமாக்குகிறார் வண்ணதாசன். படைப்பாளிக்கு
காணும் இடங்களைப் பற்றிய கூரிய பார்வை இருக்க வேண்டும்.. ஆனால் அதை வெறும் அட்டவணையாக
முன் வைப்பதில் பலனில்லை. அதற்கு ஒரு கலாரசனை வேண்டும். சாலையில் நடந்து செல்லும்பொழுது
வானுயர்ந்த மரங்களை இவன் பார்த்தான் என்று சொல்வது பெரிதில்லை. அந்த மரங்களைப் பார்க்கும்பொழுது
இவனுக்கு இவன் மூதாதையர்களைப் பார்ப்பது போன்றதான உணர்வு ஏற்பட்டது என்று சொன்னால்தான்
கலையழகு மிளிரும். கலை கலைக்காகவே என்கிற வகைமையைச் சார்ந்த விஷயம் இது. வானுயர்ந்த
அடர்ந்த மரத்தினுள்ளே இருள் படுத்திருந்தது என்று சொல்லியாக வேண்டும். இதில் தன் தனித்தன்மையை
ஆணித்தரமாய்ப் பதித்திருப்பவர் வண்ணதாசன். சின்னச் சின்ன வரிகளாய் எப்படி சரம் சரமாய்த்
தொடுக்கிறார் பாருங்கள் –
“பெருமாள்
கோயில் தெருப்பக்கம் நின்ற தேரை நிதானமாகப் பார்த்து, அது எந்தத் திருவிழாவுக்கு ஓடும்
என்று விசாரித்தான். எல்லா ஊர் சலூன்களுக்கும் ஒரே மாதிரி கதவுகள்தான் இருக்கின்றன
என்று சொல்லிக்கொண்டே சந்திப் பிள்ளையார் முக்குவரை நடந்தான். வாடகைக்கு நிற்கிற ஒற்றை
மாட்டு வண்டிகளைப் பார்த்து ஆச்சரியம் அவனுக்கு. பக்கத்தில் நிற்கிற காந்தி சிலையைப்
பற்றி, முக்கியமாக காந்தியின் கால்களைப் பற்றி சிலாகித்தான். என்னைப் போலவே அவனுக்கும் காந்தி சிலைக்குப் பக்கத்தில்
பழக்கடை போட்டிருப்பவர் எப்போதும் ஊதாச் சட்டைதான் போடுவாரா என்கிற சந்தேகம் வந்தது.”
இவையெல்லாம் நீங்களும் நானும் எத்தனையோ முறை பார்த்திருப்போம். பார்த்துக்கொண்டே
அப்பகுதிகளைக் கடந்து போயிருப்போம். நமக்கு இதிலென்ன இருக்கிறது என்று தோன்றும் பல
விஷயங்கள் படைப்பாளிக்கு அப்படித் தோன்றுவதில்லை. அதிலும் வண்ணதாசன் போன்ற அழகுணர்ச்சி
மிகுந்த படைப்பாளிக்கு அத்தனை சாதாரணமாய் ஒரு இடத்தைக் கடந்துவிட முடியாது. அதனால்தான்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தத் தேரைக் கவனிக்கும் தனுஷ்கோடி அழகருக்கு அது
எந்தத் திருவிழாவுக்கு ஓடும் என்று கேட்க முடிகிறது. எல்லா ஊர் சலூன்களுக்கும் ஒரே
மாதிரிக் கதவுகள்தான் இருக்கின்றன என்று சொல்ல முடிகிறது. வாடகைக்கு நிற்கிற ஒற்றை
மாட்டு வண்டிகளைப் பார்த்து அதிசயிக்க முடிகிறது. காந்தி சிலையை விட வீசி வீசி இந்த
தேசம் முழுவதும் போராட்டம், சத்தியாக்கிரகம்
என்று ஓயாது நடந்து ஓய்ந்த அந்த எலும்பு தெரியும்
மதிப்பு மிக்க பாதங்களை நினைவுபடுத்திச் சொல்ல முடிகிறது. ஏதோவொரு வகையில் ஒற்றுமையாய் அல்லது தற்செயலாய் அமைந்து போன பழக்கடைக்காரர்களின்
ஊதா நிறச் சட்டையை அறுதியிட்டுச் சொல்ல முடிகிறது.
இப்படி தான் காணும் சின்னச் சின்னக்
காட்சிகள் அனைத்தையும் உடனுக்குடன் உள் வாங்கி கேள்விகளை அடுக்கும் தனுஷ்கோடி அழகர்தான்
சட்டென்று ஒரு கேள்வியை வைக்கிறான்….“அந்தக் கிருஷ்ணன் வெச்ச வீடு இன்னும் இருக்கா….?”
– படிக்கும் வாசகனும் சட்டென்று அந்தப் புள்ளியில் நின்று போவான். என்னவோ கேட்கிறானே?
என்று கருத்தூன்றுவான். இந்த முக்கியக் கேள்விக்காகத்தான் அந்த முன் ஜோடனைகள். ஆனால்
வெறும் அலங்காரப் பந்தல் அல்ல….கலையழகு மிளிரும் நவீன இலக்கியத்தின் தனித்துவமான அடையாளங்கள்
கொண்ட ஆழமான அற்புதமான வரிகள் அவை. மென்மையான ரசனை உள்ளத்தின் மேன்மை மிக்க வரிகள்.
அந்தக் கிருஷ்ணன் வச்ச வீடு இப்போ
இருக்கா…அதைச் சொல்லு….? என்ற கேள்வியோடுதான் இக்கதை முடிகிறது. ஆனாலும் அந்த வீட்டின்
மொத்தக் கதையும் உள்ளே சொல்லப்பட்டு விடுகிறது. அதற்கான நிகழ்வுகள்தான் நமக்கு அந்த
அமானுஷ்யத் தன்மையைத் தருகின்றன…..அந்த வீட்டிற்கான மாய பிம்பங்களைத் தோற்றுவித்து நம்மை பிரமிக்க வைத்து விடுகின்றன. கதையைச் சொல்வது
இருக்கட்டும்…அதற்காகப் பயணித்து அவர் சொல்லும் மற்றவைகளைச் சற்று ஊன்றிக் கவனியுங்கள்.
வீட்டிற்குக் கூட்டிச் செல்லும் நண்பனுக்காக உபசரிப்புகளை நினைக்கையில் அவரின் சிந்தனை
பயணிப்பதை என்னவென்று ரசித்துச் சொல்வது அந்த அழகை?
“இந்த நேரத்தில் அப்பா
வீட்டில் இருப்பாரா என்று சந்தேகம். உண்டாயிற்று. அம்மா மட்டும் இருந்தால் கூட நல்லது.
தின்பதற்கு ஏதேனும் கொடுத்து, காபியையும் தனுஷ்கோடி அழகருக்குத் தரமுடியும் எனில் நன்றாக
இருக்கும். ஒன்றுமே கொடுக்காவிட்டால் கூட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டது போல அம்மாவால்
உபசரித்து விட முடியும். அம்மா முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்தான் கொண்டு வந்து கொடுப்பாள்.
கொடுப்பதற்கு முன் டம்ளரின் வெளிப்புறத்தில் வழிகிற சொட்டுக்களை லேசாக விரல்களால் துடைத்து
விடுவாள். அந்தத் துடைப்பிலேயே எல்லா மாயமும் நிகழ்ந்து விடும். அம்மாவிடமிருந்து தண்ணீர்
வாங்கிக் குடித்த யாரும் அம்மாவை மறந்திருக்க முடியுமா? தெரியவில்லை.”
என்ன ஒரு ஆழ்ந்த ரசனை? அன்பும், கருணையும், மனித நேயமும், குடும்பத்தையும்,
இந்த வாழ்க்கையையும் நேசிக்கும் ஒருவனால்தான் இம்மாதிரி எழுத முடியும். அம்மாதிரி நேசிக்கும்
பிற படைப்பாளிகளெல்லாம் எழுதி விடுகிறார்களா
என்ன? இல்லை, அவர்கள் ஒரு மாதிரி, இவர் ஒரு மாதிரி என்று சாதாரணமாய், சராசரியாய்ச்
சொல்லிவிட்டு வெறுமே நகர்ந்து விட முடியுமா? வண்ணதாசனுக்கே உரிய தனித்துவம் என்பதுதானே
இது…? அவரை மாதிரி அவர் மட்டும்தான் எழுத முடியும். அவர் மட்டும்தான் எழுதுகிறார்.
அதனால்தான் அது தனித்துவம்.
தனுஷ்கோடி அழகர் அம்மாவைப் பற்றி
எதுவும் கேட்காமல் “அந்தக் கிருஷ்ணன் வச்ச வீடு இப்போ இருக்கா?” என்று மறுபடியும் வீசும் கேள்வி, படிக்கும் வாசகனுக்கு எவ்வளவு முக்கியத்துவத்தைத்
தருகிறது? என்னுடைய ரகசிய அறையில் ஒளித்து வைத்திருந்த ஒரு விஷயத்தை எடுத்த எடுப்பில்
அவன் தொட்டு விட்டது எப்படி என்ற ஆச்சரியத்துடன், அதை எப்போ பார்த்தே நீ? என்ற இவனின்
கேள்வி இவனுக்கே விநோதமாய் இருக்கிறது.
தனியான அடையாளமும் மரியாதையும்
கொண்ட கிருஷ்ணன் வைத்த வீடுபற்றி – “ஒரு சுடலை மாடசாமி பீடத்தை ஆரம்பமாக வைத்து, நூல்
பிடித்த மாதிரி சிறியது்ம் பெரியதுமாக ஐம்பது நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட
காரை வீடுகளுக்கும் மட்டப்பா போட்ட வீடுகளுக்கும் மத்தியில் “கிருஷ்ணன் வைத்த வீடு”
துண்டாகத் தெரியும். ஆற்றங்கரையில் வெள்ளம் வந்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதுபோல்
நான்கைந்து படிகளுடன் கட்டப்பட்டிருக்கும். நெடு நெடு என்று வரிசைக்கு இரண்டு பாக்குமரம்,
இரண்டு தென்னை மரம், முன் வாசலில், நட்ட நடுவில் புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணர்
பொம்மை. பொம்மையின் முதுகுக்கு அண்டைக் கொடுத்த மாதிரியான குழாயின் உச்சியில் நீளமான
ஒரு ரசகுண்டு. ராத்திரியில் உள்ளுக்குள் பல்பு எரியும். தெருவில் போகிறவர் வருகிறவர்கள்
தற்செயலாக ஏறிட்டுப் பார்த்தால், கிருஷ்ணன் நேரடியாக நிலா வெளிச்சத்தில் புல்லாங்குழல்
வாசித்துக் கொண்டு அந்த வீட்டின் முன்னால் நிற்கிறது மாதிரி இருக்கும்.”
கிருஷ்ணன் வைத்த வீடு என்பது ஒரு குறியீடு. அவ்வளவுதானே? அதற்குள் நடந்த நிகழ்வுகள்தானே
அந்தக் குறியீடாக மாறுகிறது? வாசல் முழுவதும் புல் பூண்டுகள் மண்டி ஒருமழைக் காலத்துக்குப்
பிந்திய வெயில் நாளில், தட்டான்பூச்சிகள் பறக்கிற கோலத்தில் வாசிக்கின்ற புல்லாங்குழல் முற்றிலும்
உடைபட்டு, மூக்கு நுனி மூளியாகி வலது முழங்கைப் பக்கம் துருப்பிடித்த கம்பி தெரிய கிருஷ்ணன்
அந்த வீட்டில் கால்மாற்றி நிற்பதைப் பற்றி தனுஷ்கோடி அழகரிடம் சொல்ல வேண்டுமா என்ற
தயக்கம் வந்தது. உண்மையின் கரிக்கோடுகளால் முப்பது வருஷத்துக்கு முந்திய ஞாபகத்தின்
சுவர்களில். அவன் வரைந்து வைத்திருக்கிற அந்த வீடு பற்றிய சித்திரங்களை நான் கோரப்படுத்த
வேண்டுமா? நான் இரண்டாவது முறை அந்த வீட்டைப் பார்த்த கோரத்தை விடவா பெரிய கோரம் வந்து
விடப் போகிறது? நான் மட்டுமா பார்த்தேன். தெருவே அல்லவா கூடிப் பார்த்தது.
நான் எங்கே நின்றேன் என்று சொல்ல
முடியவில்லை. எல்லா இடங்களிலும் எல்லோருடனும் நின்றிருக்க வேண்டும். அங்கே விழும் ஒரு
கேள்வி. அதுதான் இந்தக் கதையின் முடிவு. அந்தக் கிருஷ்ணன் வைத்த வீட்டின் அமானுஷ்யம்
மாறாத் தன்மை.
“ஒண்ணு போலப் போயிரலாம். ஒண்ணு
போல வர முடியுமா? ஐஸ் விற்கும் தாத்தாவின் கேள்வி.
என்னிடம் மட்டும் இதையெல்லாம் ஏன்
கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. “வர முடியாது” என்ற பதிலையே “வர முடியமா?” என்ற கேள்வியாகக்
கேட்டால் என்ன சொல்ல முடியும்? நண்பன் தனுஷ்கோடி
அழகரின் கேள்வி அப்படியே நிற்கிறது. அந்த வீட்டைப் பற்றிய சோக நினைவுகளோடு நாமும் பிரமித்து
நிற்கிறோம்.
நான் எப்படி என்னை வகைமைப்படுத்திக் கொள்ளலாம்….வேண்டுமானால்
இப்படிச் சொல்லலாம்….நான் சின்ன விஷயங்களின் மனிதன்….A man of small things….அநேகமாக…அநேகமாக…இந்த
ஐம்பத்தாறு வருடங்களில் நான் சின்ன விஷயங்களைப் பற்றித்தான் எழுதி வருகிறேன்…அது என்
மேல் சுமத்தப்படுகிற விமர்சனம் என்றால் அது என் மேல் வைக்கிற மிகப்பெரிய பாராட்டாகவே
நான் அதைக் கருதுவேன். ஒரு பறவையைப் பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்றால், நான் அந்தப்
பறவையின் உதிர் சிறகைப் பற்றி எழுதுவேன். நீங்கள் ஒரு மகாநதியைப் பற்றி எழுதுவீர்கள்
என்றால்…நான் அந்த மகாநதியின் கரையோரம் ஒதுங்கிக் கிடக்கிற கூழாங்கற்களைப் பற்றி மட்டுமே
எழுதுவேன். உங்களுடைய தெருவிலே ஒரு மீன் வியாபாரி வருகிறார் என்றால்…..நான் அந்த மீன்
வியாபாரியைப் பற்றி எழுத மாட்டேன். அந்த மீன் வியாபாரியின் வருகைக்காக அவருடைய பழைய
கருத்த லொட லொடுத்த சைக்கிள் தெருவிலே திரும்புகிற நேரத்திற்காகக் காத்திருக்கிற ஒரு
கிழட்டுப் பூனையைப் பற்றித்தான் எழுதுவேன். என்னுடைய மிக அறியப்பட்ட கதைகளில் ஒன்றான
“நிலை” என்ற சிறுகதை கூட சின்ன விஷயங்களைப் பற்றித்தான் தெரிவிக்கிறது. எங்களுடைய திருநெல்வேலி
ஊரிலே ரத வீதியிலே ஓடுகிற தேரைப் பற்றிய கதை
அல்ல அது. அந்த ரத வீதியிலே ஓடுகிற, தேரைப்
பார்க்க முடியாத, வீட்டுப் பகுதியிலே தன்னை அடைத்துக் கொள்கிற, வெளி வர முடியாத, கோமதி
என்கிற சின்னஞ் சிறிய சிறுமியைப் பற்றிய கதைதான் தேரைப் பற்றிய கதையல்ல அது. நீங்கள்
தேரைப் பற்றிய ஒரு கதை எழுதச் சொன்னால் நான் அதை மறுப்பேன். ஆனால் தேர் பார்க்க முடியாத
சிறுமியைப் பற்றித்தான் நான் கதை எழுதுவேன். இப்படியாக….இப்படியாக…நான் மறுபடியும்
மறுபடியும்…சின்ன விஷயங்களின் மனிதனாகவே இருக்கிறேன். அதில்தான் நான் மிகுந்த மகிழ்ச்சி
அடைகிறேன்….என்கிறார் வண்ணதாசன். ----------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக