“அம்மாவின் அப்பா...”
அப்பா பஸ்ஸூக்கு ஓடுவதைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
ஓரமாய் ப்ளாட்பாரத்தில் சைக்கிளோடு நின்று கொண்டிருந்த இவன் அப்போதுதான் தன்னுடைய தவறை
உணர்ந்தான். எந்த வரிசையில் பஸ் வந்து நிற்கிறதோ அந்தப் பக்கமே கொண்டு அப்பாவை இறக்கியிருக்க
வேண்டும்.. இடது பக்கம் நின்று கொண்டிருந்த அப்பா பஸ் வருவதைப் பார்த்து, வலது புற
ஸ்டாப்பிற்கு சாலைக்குக் குறுக்காக ஓடியபோது ரெண்டு மூன்று டூவீலர்காரர்கள் அந்த விடிகாலை
வேளையிலும் விர்ரென்று பாய்ந்து வந்தது ஒரு
கணம் இவனுக்கு உடம்போடு ஆடிப் போனது. ஓரமாய்ப் போய்க் கொண்டிருந்த நாய் ஒன்று இந்த
சத்தத்தைக் கேட்டு மிரண்டு அதீதமாய்க் குரலெடுத்துக் குரைக்க ஆரம்பித்திருந்தது. அப்பா ஓடுவதைப் பார்த்துக் குரைக்கிறதோ என்று இவன்
மிரள, அவர் குறுக்கே கடந்த அவசரத்தில் பயங்கரமான தப்பு ஒன்றைச் செய்துவிட்டதை உணர்ந்தான்.
தனக்கும் அப்பாவுக்கும் நகரம் புதிது. தானாவது சில முறைகள் வந்திருக்கிறோம்.
அப்பாவுக்கு சுத்தமாய்த் தெரியாது. இன்னும் வீட்டிலிருந்து கிளம்பி அந்த ஸ்டாப்பிற்குத் தனியாய் வரத் தெரியுமா?. பஸ்ஸில்
ஏற்றி விடட்டுமா என்று கேட்டபோது, இருட்டில் எது இறங்க வேண்டிய நிறுத்தம் என்பதில்
அப்பாவுக்குத் தடுமாற்றம் இருந்தது.
கொண்டு விட்றேன்….என்று சொன்னதும் இவனுக்குக் கண்கள் கலங்கி விட்டது. கிளம்பிட்டேம்பா….என்றான்.
சீனு…..நீயே கூட்டிண்டு போய், புதூர் பஸ்ல ஏத்தி விட்டிட்டு வாயேன்….
அம்மாவும் இப்படிச் சொல்ல அதுதான் சரி என்று தோன்றியது. தனியே அனுப்புவதில் இவனுக்கும்
ஒப்புதல் இல்லைதான். அவரிடம் உள்ள இயல்பான ஒரு பதற்றம் பார்ப்பவர்களைப் பயப்பட வைக்கும்.
எதையெடுத்தாலும் ஏன் இப்படி அவசரப்படுகிறார் என்று தோன்றும். ஆனால் மாலையில் அவராகவே வந்து விடுகிறார். ஒரு பஸ்
குறிப்பிட்ட நேரத்துக்குத் தவறாமல் வருமென்றும்
அதில் ஏறி ஒரே வண்டியாக வந்து கிராஸ் ரோடில் இறங்கி விடுவதாகவும் கூறினார். ஏதேனும்
ஒரு நாள் அது வராமல் போனால் ரெண்டு பஸ் மாறி வரத் தெரியுமா என்று சந்தேகமிருந்தது.
எத்தனாம் நம்பர் பஸ்ஸூப்பா…என்றால் சொல்லத் தெரியவில்லை. கிராஸ் ரோடு போகுமான்னு கேட்டு
ஏறிட்டேன் என்றார். அந்த நகரத்தில் வேறு எங்கேனும் “கிராஸ் ரோடு” என்கிற ஸ்டாப் இல்லாமல்
இருக்க வேண்டும்.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்து. ஆறு மணிக்குள்
நிறுத்தம்
வந்து பஸ் பிடித்து ஏழுக்குள் E.B. கான்டீனுக்குள் நுழைந்தாக
வேண்டும்.
நிர்வாகம் என்ன நேரம் சொல்லியிருந்ததோ தெரியாது. அப்பா தனக்கு நிர்ணயித்துக் கொண்ட
நேரம் அது. அவருக்குத் தெரியும்… முன்னதாக…தாமதமின்றி எப்பொழுது அங்கே இருக்க வேண்டும்
என்று.
உன்னோட ஆக்டர் சிவாஜி இருக்கானே…அவன் அப்படித்தான்
இருப்பானாம். காலம்பற ஆறரைக்கு ஷூட்டிங்னா…ஆறுக்கெல்லாம் டாண்னு ஸ்பாட்ல இருப்பானாம்….அதுதான்
அவனை இம்புட்டு உயரத்துக்குக் கொண்டு வந்திருக்காக்கும்…தொழில் பக்தி வேணும் யாராயிருந்தாலும்…..என்பார்
அப்பா. அவர் வயதுக்கு “ன்“ விகுதியில் பேசுவது சொந்த சகோதரனைப் பேசுவது போல….அப்பாவுக்குப்
பிடித்த ஒரே ஆக்டர்…நடிகர்திலகம்தான். டெடிகேஷன் டு ட்யூட்டி….என்பார் அடிக்கடி.
அப்படித்தான் இத்தனை ஆண்டு காலத்தையும், சின்சியராய்
ஊரில் இருந்து கழித்திருக்கிறார். ஒரே இடத்தில். மொத்தமே
இவ்வளவுதான் ஊர் என்பது போல் குறிப்பிட்ட மூன்று தெருக்களுக்குள் அப்பாவின் வாழ்க்கை
நடந்து முடிந்து போனது. குடியிருந்த ஒற்றைத்தெருவைக் கடந்தால் அப்பா பார்த்தது அரசியல்
கூட்டங்கள் நடக்கும் அந்தப் பொது மைதானம். அதை ஒட்டிய மாரியம்மன் கோயில். பிறகு பொது
நூலகம். பின்பு பஞ்சாயத்துப் பள்ளி…அதைத் தாண்டினால் அவர் வேலை பார்க்கும் மெயின் ரோடு
உணவகம். அப்படியே அவரின் நாற்பதாண்டுகளுக்கும் மேலான பொழுதுகள் கோடு போட்டதுபோல் கழிந்துவிட்டன.
தடம் மாறாத, பிறழாத வண்டி.. அப்பா அப்படிக் கடுமையான கட்டுப்பாட்டோடு வாழ்ந்திருந்ததனால்தான்
குடும்பம் இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. தெருவில் இருந்த பல குடும்பங்களில்
ஒன்று கூட இத்தனை சீராக முன்னேறியதாகச் சொல்வதற்கில்லை. ஆனால் அந்த ஸ்திர நிலையை அப்பா வந்தடைவதற்கு அம்மாவின் பிரார்த்தனைகள்தான்
காரணம். அவளின் பொறுப்பான நடவடிக்கைகளும், சகிப்புத்தன்மையும் சேர்ந்துதான் அந்தக்
குடும்பத்தை முன்னேற்றியிருக்கிறது. வியாபாரம்…வியாபாரம் என்று ஊர் ஊராகக் கடை வைத்து
நஷ்டமடைந்த அப்பா…போதும் என்று உள்ளூரில் கால் ஊன்றியது அம்மாவின் வற்புறுத்தலினாலும்…ஆலோசனையினாலும்தான்.
அதன் பின்னர்தான் குழந்தைகளின் படிப்பு, முன்னேற்றம் என்பதே உறுதிப்பட்டது.. இன்று
இந்த நகருக்கு இடம் பெயர்ந்து வந்திருப்பதும் அந்த உழைப்பின் பலனால்தான். மூத்த அண்ணாவுக்கு
அரசாங்க வேலை கிடைக்க….ஒரு கட்டத்தில் குடும்பத்தை இடம் பெயர்க்க வேண்டி வந்ததும்,
அதிலும் உள்ளூரை விட்டு நான் வரமாட்டேன் என்று அப்பா தங்கி விட்டதும் தனிக் கதை. அந்த
ஊருக்கான உருள் பெருந்தேர் அவர். அவரை நகர்த்துவது லேசுப்பட்டதா என்ன?
விடிகாலை
நேரம் கூட ஸ்டாப்பில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்து இவனுக்குச் சங்கடமாய்த்தான் இருந்தது.
எங்கப்பா ஏறிக்கட்டும்ங்க…பெறகு ஏறுங்க…மனசு முணுமுணுத்தது இப்படி. அவரைப் போலத்தானே மற்றோரும். அவர் வசதியாய் ஏற வேண்டுமென்பதற்காக
பஸ்ஸூக்குக் கூட்டமில்லாமல் இருக்குமா? அந்த நிறுத்தத்திலிருந்து வெளியூர் செல்லும்
ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு மற்றும் சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு என்று ஜனக்
கூட்டம் அடித்துப் பிடித்து ஏறிக் கொண்டிருந்தது. உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று
ஓடியாடும் ஜன சமூகம்.. முண்டி ஏற முடியாமல்
முன் வாசலுக்கும், பின் வாசலுக்கும் அப்பா ஓடுவதைப் பார்க்கவே சங்கடமாய் இருந்தது.
உர்ர்…உர்ர்…என்று சீறுவதைப் பார்த்தால் எங்கே
பஸ்ஸை எடுத்து விடுவானோ என்ற பதற்றம். ஏறக்குறைய எல்லோரையும் ஏற விட்ட பின்பே அப்பா
ஏறினார். ஏறுங்க…ஏறுங்க…என்று சொல்லி…பிறரைத்தான் ஏற விட்டாரேயொழிய இவர் ஏற யத்தனிக்கவில்லை.
பஸ்ஸூக்குள் ஓடி இடம் பிடிக்க பின்னும் ஒரு பதற்றம். எப்படியோ அப்பா ஒரு இருக்கையில்
அமர்ந்தபோது, வெளியே நிற்கும் தன்னை அடியோடு மறந்து விட்டது தெரிந்தது.
அந்தக் காமராஜ் சட்டையோடு கூட்டத்தில் தனியே அவரைப்
பிரித்துப் பார்க்க முடியும். இவனுக்கே அது புதிய அடையாளம்தான். ஆனாலும் மனதில் பதிந்த
பிம்பம். . அப்பா இங்கு வந்துதான் சட்டை போடுகிறார்.
வெகு காலமாய்ப் பெட்டியில் தூங்கிய சட்டை அது. வாழ்க்கையில் அதுநாள் வரை தனக்கென்று
வாங்கிய, வைத்திருந்த ஒரே சட்டை அதுதான். ஏதாச்சும் வெளியூர் பயணம், கல்யாணம் காட்சி
என்றால் அப்போதுதான் அது வெளியே வரும். பின்பு மறுபடியும் பெட்டிக்குள் முடங்கி விடும்.
ஊரில்
இருக்கையில் கடையில் வேலை முடித்து வரும்போது மேலுக்கு வெறுமே துண்டைப் போர்த்திக்
கொண்டு வந்து விடுவார். வியர்வை அப்படிப் பொங்கும். அது வீட்டுக்கு வந்து வாசல் திண்ணையில்
அமர்ந்து சட்டுச் சட்டென்று முன்னுக்கும் பின்னுக்கும் துண்டால் விசிறி அடித்துக் கொள்கையில்
வெளிக் காற்று சேர்ந்து நேரம் கழித்து ஆறும்.
அந்தப் பொழுது அப்பா யாருடனும் பேச மாட்டார். பாட்டி சற்றுத் தள்ளி அமர்ந்திருப்பாள்.
அம்மா உள்ளே கூடத்தில் அமர்ந்து அப்பாவைப் பார்த்தவாறு இருப்பாள். அவள் முகத்தில் நிரந்தரமாய்ப்
படிந்துவிட்ட கவலைக் கோடுகள். அது வறுமை தந்த வரம். குரல் கொடுத்தால் கணத்தில் போய் நிற்க வேண்டுமென்று
காத்திருப்பாள். அளந்து பேசும் அப்பா எதற்கேனும் கூப்பிட மாட்டாரா என்கிற ஆதங்கம்.
வீதியில் போகிற வருகிறவர்களைக் கவனித்தபடியே நிமிஷங்கள்
நகரும்..அப்பாவுக்கு எதிரே, அருகே திறந்த வெளிச்
சாக்கடை மறைத்த சிமின்ட் திண்டில் இவன் அமர்ந்திருப்பான். அந்த நேர அப்பாவின் வியர்வை
மணம் இவனுக்கு ரொம்பப் பிடிக்கும். மனதுக்குப் பிடித்த வாசனை அது. துடைச்சு விடட்டாப்பா…என்றால் கேட்க மாட்டார். போய்ப்
படி…..இதுதான் அவர் வழக்கமாய்ச் சொல்லும் வார்த்தை. இரவில் அப்பாவுக்கு அருகில்தான்
படுத்துக் கொள்வான். இவனுக்கு அந்தப்பக்கம் பாட்டி. தான் அறியாத தூக்கத்தில் அப்பாவின்
கைகள் இவன் தலையை ஆதுரமாய்த் தடவுவதை உணர்வாய் விழித்து, ஆனந்தமாய்ப் பருகுவான். ஆழ்ந்த அன்பின், பாசத்தின்
வெளிப்பாட்டு நேரம் அதுதான். மற்றப்படி பகல் பொழுதுகளில் அவர் யாரிடமும் சாதாரணமாயோ,
கலகலப்பாயோ பேசிக் கூடப் பார்த்ததில்லை. அமைதியும்,
தனிமையும்தான் அப்பாவின் சொத்து.
விழித்திருக்கும்
நேரங்களில் அவருக்கென்று ஏதேனும் புத்தகங்கள் இருந்தால் சரி. அது கூட பக்கத்து வீட்டில்
இரவல் வாங்கியவைகள்தான்.வார இதழ்களாகட்டும், தினசரி செய்தித்தாள்களாகட்டும்…ஒன்று விடாமல்
மேய்ந்து விடுவார். அப்பாவுக்குப் பிடித்த ஒரே எழுத்தாளர் ஜெயகாந்தன்தான். வீட்டில்
எல்லோரையும் ஜெயகாந்தனுக்குப் பழக்கி விட்டவர் அவர்தான். சிங்கம் மாதிரி எழுதறான் பாரு….என்பார்.
இரவல் வாங்கி ஆகாது என்று செலவோடு செலவாக வாராந்திர
விகடனும் வீட்டில் வாங்க ஆரம்பித்தது. லைப்ரரி மெம்பர் சேர்ந்தபோது முதலில் எடுத்த
புத்தகம் ஜெயகாந்தன்தான். கேட்லாக் பார்த்து
வரிசையாய் ஜெ.யின் புத்தகங்களைப் படித்து முடித்துத்தான் ஓய்ந்தார். அதன்பின்புதான்
தி.ஜா.ராவுக்கு வந்தார். படிக்கும்போது தாங்க முடியாத ரசனையில்…நாக்கை மடக்கி…கிர்…கிர்..கிர்….என்று
சத்தமெழுப்புவார். அது படைப்பாளிக்குக் கிடைத்த வெற்றி.
வாழ்க்கைல நாம பார்க்கிறதுக்கு,
அனுபவிக்கிறதுக்கு எதுவுமே இல்லைன்னு தோணறது…அம்புட்டையும் எழுத்துல கொண்டு வந்துட்டாளே…மகா
மேதைகளான்னா இருக்கா ஒவ்வொருத்தரும்….என்று தன்னை மறந்து புகழ்வார். தன்னை மறந்து அயர்ச்சியில்
தூங்கி விடும்போது, படித்த பக்கத்தோடு, விரித்த புத்தகம் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும்.
அதை யாரும் தொட்டுவிடக் கூடாது. எந்த நிமிடமும் அப்பா எழுந்து மீண்டும் படிப்பைத் தொடரக்
கூடும். அம்மாவுக்கும், பாட்டிக்கும் சமயங்களில்
உற்சாகம் மீறிப் பொங்க படித்துக் காண்பிக்க ஆரம்பித்து விடுவார். பாட்டி ஜபமாலையை உருட்டிக்
கொண்டே கேட்பாள். ஜபிக்கிறாளா, கேட்கிறாளா? அம்மா அப்படியில்லை. சொல்லப்போனால் அம்மா
வுக்குத்தான் ரசனை ஜாஸ்தி….கண்களில் நீர் பொங்க காட்சிகளை விவரிப்பதில் அம்மா கெட்டிக்காரி.
அவளே வாழ்ந்த வாழ்க்கைபோல் சொல்வாள். ஆத்மார்த்தமான வாசிப்பு அனுபவம், விருப்பம் அதுவாகவே காலப்போக்கில் அப்பாவின் மூலம் நிறைவேறிப்போனது
என்றுதான் சொல்ல வேண்டும்.
சைக்கிளை எப்படித் தனியே விட்டு விட்டுப் போவது என்று பயந்து
அதோடு நெருங்கி நின்ற நிலையில் இவன் அப்பாவைப் பார்த்துக் கையசைக்க….அவரின் கவனமோ முன்பக்கமாய்
இருந்தது….வண்டி நகர்ந்த பொழுதில் சடனாகத்
திரும்பிப் பார்க்க இவன் வேகமாய்க் கையை ஆட்டி தன் இருப்பை உணர்த்தினான். சரியாகப்
பார்த்த மாதிரியும் தெரியவில்லை…பார்க்காத மாதிரியும் தெரியவில்லை….வண்டி நிரம்பியிருந்தது.
இப்போது ஏற ஆளே இல்லை. இத்தனை அடிபிடியே வேண்டாம் தான். ஆனால் உட்கார இடம் பிடிக்க
முடியாது. அடுத்த பதினைந்து இருபது நிமிடங்களுக்கு நின்றாக வேண்டும். அது அப்பாவுக்கு
சிரமம்தான். மேலும் உட்கார்ந்து போனால்தான் இறங்கும் இடத்தை அப்பாவால் கரெக்டாகக் கண்டுபிடிக்க
முடியும். இல்லையென்றால் இடம் தப்பிவிட வாய்ப்புண்டு. கண்டக்டர் என்ன ஒவ்வொரு நிறுத்தத்திற்கும்
சொல்கிறாரா என்ன…? டிக்கெட் கிழிப்பதோடு சரி. அந்தந்த ஸ்டாப்பில் வண்டி அநிச்சையாய்
நிற்கும்….ஆட்கள் இறங்குவார்கள். ஏறுவார்கள். பிறகு புறப்பட்டு விடும்….அப்படித்தானே
நடக்கிறது…எங்கப்பாவ மறக்காம E.B. ஸ்டாப்புல இறக்கிவிட்ருங்க….என்று சொன்னால் நடக்குமா?
ஏதோ ஒரு நாள் நடக்கலாம். தினமும் சாத்தியமா? நானே போய்ப்பேன்பா…கவலைப்படாதே…. அப்பா
சொல்லத்தான் செய்கிறார். சரியாக இறங்கிச் செல்கிறாரா என்று யாருக்குத் தெரியும்? அம்மாவைப்
போல் இவனுக்குள்ளும் பயம் இருக்கத்தான் செய்தது. இடங்கேடாக எங்கேனும் இறங்கி வைத்துத்
தடுமாறக் கூடாதே…!
.கொஞ்ச தூரம் வண்டி
போனபின்… சைக்கிளை உருட்டிக் கொண்டு கிளம்பினான். வந்த வழியே திரும்பிப் போக முடியாது.
ஒரு வழிப்பாதை அது. ஆனால் போக்குவரத்து அதிகமில்லாத அந்தப் பகல் வேளையில் பலரும் போய்க்
கொண்டுதான் இருந்தார்கள்.
அந்த ரவுண்டானாவைக்
கடந்து அப்புறம் போய் ஏறிக்கோ….போலீஸ் பிடிச்சிடப்போறான்….-முதல் நாளே அப்பா எச்சரித்திருந்தார்.
காலைல யாரும் இருக்கமாட்டாங்கப்பா…என்றான்
இவன்.
அது எதுக்கு? நமக்குப்
பொருந்துகிறதை நாம செய்யணும்…சரியா? என்றார்.
போக்குவரத்து சற்றே அதிகமாகியிருந்தது. அங்கங்கே
டீக்கடைகள் திறந்திருக்க ஆட்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள்.. பிளாட்பாரத்தில்
கடை போட்டு பால் விற்றுக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் தோசை மாவு விற்றுக் கொண்டிருப்பது
தெரிந்தது. மில்லை ஒட்டி சூப் கடைகள் வந்திருந்தன. இரவு நேர ஷிப்ட் முடிந்து வெளி வரும்
தொழிலாளர்களுக்குப் புத்துணர்ச்சி பெற வேண்டி அப்படியான கடைகள் அங்கங்கே அடிக்கடி புதிது
புதிதாய்த் தோன்றுவதும், சில சமயங்களில் காணாமல் போவதும் வழக்கமாய் இருந்தது. வாழைப்பழக்
கடைகள்தான் அதிகம். வேலை நேரத்தில் மூச்சு வழியும், வாய் வழியும் பஞ்சுத் துளிகள் வயிற்றுக்குள்
போயிருக்கும். காலையில் மலஜலம் கழிக்கும்போது வசதியாய் வெளியே வந்துவிடத் தோதாய் பழங்கள்
சாப்பிடுதல் என்பது தொழிலாளர்களின் வழக்கம். அப்போதுதான் கணக்கிலடங்கா பழக்கடைகள் மாலையானால்
ஏன் அங்கே உதிக்கின்றன என்பது புரிந்தது இவனுக்கு. நகரின் வேறு பகுதிகளில் அங்கொன்றும்
இங்கொன்றுமாய்த்தான் இந்தப் பழக் கடைகளைப் பார்க்க முடியும். மற்றப்படி அத்தனையும்
இந்த மில் பகுதியில்தான் குவிந்திருக்கும். திருவிழாக் கூட்டம்தான். வெளியில் வரும்போதே
காசுக்குக் காத்திருக்கும் மனைவிமார்கள். அன்றைய பாடு கழிந்தாக வேண்டுமே….!!
வேடிக்கை பார்த்துக் கொண்டே தான் மிகவும் மெதுவாய்ச்
சென்று கொண்டிருப்பதாய் உணர்ந்து வேகமெடுத்தான் சீனு. குளித்து முடித்து உடனே அவனும்
கிளம்பியாக வேண்டும். எட்டு மணிக்குள் அந்தத் தட்டச்சுப் பள்ளியில் இருந்தால்தான் வந்திருக்கும்
மாணவர்களை ஒரு பக்கம் பயிற்சியாக ஏதேனும் பத்திகளை டைப் செய்யச் சொல்லி விட்டு எட்டே
காலுக்கு ஸ்பீடு டெஸ்ட் கொடுக்க முடியும். பத்து நிமிடங்களுக்கு அந்தத் தேர்வுச் சோதனையை
முடித்து விட்டு மாடியில் காத்திருக்கும் சுருக்கெழுத்து மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க
வேண்டும். அதற்குள் கீழே தனக்கு உதவியாக இருக்கும் தனசேகர் வந்து விடுவார். அவரிடம்
தட்டச்சுப் பிரிவின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு மேலே செல்வான் இவன். அடுத்த ஒரு மணி
நேரத்துக்கு சுருக்கெழுத்து வகுப்பை முடித்துவிட்டுக் கீழே இறங்கும்போது ஒன்பது மணி
பேட்ச் மாணவர்கள் வந்திருப்பார்கள். அந்த வகுப்பையும் முடித்தால் பிறகு காலை பத்து
மணி முதல் மதியம் ஒரு மணி வரை பெண்கள் பிரிவு வகுப்பு ஆரம்பித்து விடும். பிற்பகல்
ஒன்று முதல் இரண்டு வரை ஓய்வான நேரம். வகுப்புகள் கிடையாது எனினும், பழக்கப்பட்ட மாணவர்கள்
வந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
பெண்கள் வகுப்புக்கென்று தனியே ஆசிரியைகள் இல்லை., தனசேகர்தான் கவனித்துக் கொள்வான்.பிரின்ஸிபால்
இவனிடம் கேட்ட போது மறுத்து விட்டான். இவனிடம் உள்ள கூச்ச சுபாவம் அவருக்கும் புரிந்திருந்தது. பத்து மணிக்கு வீட்டிற்குக் கிளம்பி, குளித்து முடித்து,
மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு இரண்டு மணியை ஒட்டி வருவான். அதற்குள் பள்ளி முதல்வர்
வந்து அமர்ந்திருக்க தனசேகர் ஓய்விற்குக் கிளம்பிப் போயிருப்பதும், பிற்பகல் வகுப்புகளை
இவன் கவனிக்க வேண்டியிருப்பதும் நடக்கும். மாலை நாலரை மணியைப் போல் தனசேகர் மீண்டும்
வந்து விட இரவு வரை இருவரும் சேர்ந்து பணியில் இருப்பார்கள்.
ஜாப் டைப்பிங் நிறைய வரும் இடம் அது. அதனால் வகுப்புகளைக்
கவனித்துக் கொண்டே வரும் தட்டச்சுப் பணிகளையும் கவனித்தாக வேண்டும். ராத்திரி ஒன்பது
வரை வேலை இருந்துகொண்டேயிருக்கும். சமயங்களில் ஏதேனும் கோர்ட் வேலைகள் என்று வந்துவிட…இரவுப்
பணி தொடரும். அம்மாதிரி நேரங்களில் பள்ளியிலேயே தங்க வேண்டி வந்துவிடும். அந்த உழைப்பில்தான்
அவனுக்குப் பேரானது. பிரின்சிபாலின் மதிப்பிற்குரிய பணியாளன் அவன். முழுக்க நம்பி சாவியை
ஒப்படைத்து விட்டுப் பல நாட்கள் வெளியூர் சென்று விடுவார். பக்கத்து ஊரில் கிளை திறப்பதற்கான
ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஒருநாளும் வகுப்புகள் தடைபட்டதில்லை. உண்மையா உழைச்சேன்னா,
எங்கயும்,எப்பயும் அதுக்குத்தான் மரியாதை… மனசில வச்சிக்கோ…அப்பாவின் பொன்னான வார்த்தைகள்
இவை.
சீனுவுக்கு அந்த வேலை ரொம்பப் பிடித்திருந்தது.
அதற்குக் காரணம் இன்னொன்றாகக் கூட இருக்கலாம். சின்ன, சாதாரணக் காரணம்தான். ஆனாலும்
அதுவே அப்போது அப்படியொரு மகிழ்ச்சியளித்தது. சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்து நகரத்திற்கு வந்து,
அந்த தட்டச்சுப் பள்ளியில் சேர்ந்த பிறகு, முதன் முறையாகப் பேன்ட் போட ஆரம்பித்திருந்தான்
அவன். அதுவும் அவனுக்கென்று தைத்த பேன்ட் இல்லை. ராமகிருஷ்ணன் அண்ணா, டைட் ஆகிப் போச்சு
என்று ஒதுக்கி வைத்திருந்த பேன்ட்டை எடுத்து, இது சரியா இருக்கா பாரு…என்று சொல்ல,
….வேண்டாமே…வேட்டியே கட்டிட்டுப் போறேன் என்றான் இவன். அம்புட்டுக் கூச்சம்.
ம்உறீம்…இன்ஸ்டிட்யூட்டுக்கு வாத்தியாராப் போறே….பேன்ட்
போட்டிருந்தாத்தான் மதிப்பாங்க….பக்கத்து கிராமத்துலேர்ந்தெல்லாம் பசங்க படிக்க வருவாங்க…பொம்பளப்
பிள்ளைங்களும் வரும்...ஆகையினால வேட்டி வேண்டாம் என்று மாற்றி விட்டான். ஆனால் பிரின்சிபாலுக்கோ
மற்றவர்களுக்கோ இவன் முதன்முறையாய்ப் பேன்ட் போடுகிறான் என்பது தெரியாதே…! அதனால் ஒரு
சிறு தைரியம். இவனுக்குப் பேன்ட் பிடித்திருந்தது.
புதிதாகப் போட்டதாக ஒரு சிறு அடையாளம் கூடத் தெரியக்கூடாது என்று சைடு பாக்கெட்டுகளில்
கைகளை நுழைத்துக் கொண்டு ஸ்டைலாக நடந்தான். அநாயாசமாய் நின்றான், திரும்பினான். இயல்பு
நிலை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டான். எங்கும் எதிலும் தடுக்காமல், இடிக்காமல்
கவனமாய்…! பிரின்ஸிபால் இவனையே கவனித்துக் கொண்டிருந்ததும்…லேசாகச் சிரித்துக் கொண்டது
போலவும் உணர, ஒரு ஆசிரியனுக்கு உள்ள தகுதியே அவனது தன்னம்பிக்கைதான் என்கிற ரீதியில்
மாணவர்களுக்கு இவன் பாடம் எடுத்த கம்பீரம்
அவர் வாயை அடைத்து விட்டது. ரொம்பவும் கூச்ச சுபாவமுள்ள தானா இப்படி என்று இவனுக்கே
ஆச்சரியம்தான். இவன் பொறுப்பு ஏற்றுக் கொண்ட
பிறகு பள்ளியின் ரிசல்ட் சதவிகிதம் கூடியிருந்தது அவர் அதுவரை பார்த்திராத ஒன்று. அதனால்
அவனது சுதந்திரம் அங்கே கேள்விக்கு அப்பாற்பட்டதாய் மிளிர்ந்தது. மாணவர்கள் அவரிடம்
போய் நின்றபோது…எதுவானாலும் .ஸ்ரீநிவாசன் மாஸ்டர்ட்டக் கேட்டுக்குங்க….என்று அவர் சொன்னது
இவனுக்குப் பெருமையாயிருந்தது. கால நேர சலுகையளி்த்து, குறைத்து வாங்கிய கட்டணங்களை
நிலுவையின்றி வசூலித்தான் இவன். மாணவர்கள் பிரின்சிபாலை விட இவனுக்குப் பயந்தார்கள்.
அதே சமயம் பாடங்களை மிகச் சரியாய் சொல்லிக் கொடுப்பதில் இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வைக்
கண்டு மரியாதை செய்தார்கள். ஆப்சென்ஸ் என்பதே அறவே நின்று போனதைக் கண்டு வியந்தார்
முதல்வர். பள்ளிக்கு வருவதை சந்தோஷமாய் உணர்ந்தார்கள். ஸ்ரீநிவாசன் தனக்குக் கிடைத்த
பொக்கிஷம் என்று நினைத்தார் முதல்வர்
முப்பதுக்கும் மேற்பட்ட தட்டச்சு இயந்திரங்கள்
அங்கு உண்டு. ஆரம்ப நிலை மாணவர்கள் ஐந்தாறு பேர் தவிர, மீதி அனைவரும் தேர்வுக்குச்
செல்லும் தகுதியுடனிருந்தார்கள். காலையில் சோதனைத் தேர்வு நடத்தும்போது, ஸ்கிரிப்ட்களைக்
கொடுத்து, அனைத்து மாணவர்களையும் தயார் நிலையில் இருத்தி, யெஸ்….ரெடி…..கமென்ஸ்….என்று
இவன் துவக்கிவிட….தட…தட…வென்று ஒரே கணத்தில் ஒரே ஸ்ருதியில் அத்தனை தட்டச்சு இயந்திரங்களும்
ஒரு சேர ஓசை எழுப்பும்போது….எக்ஸ்பிரஸ் ரயில் பறந்து கொண்டிருப்பது போல் கதி கலக்கும். கட்டடமே அதிருவது போலான அந்தச் சத்தம்….சாலையில்
செல்பவர்களை ஒரு கணம் திரும்பிப் பார்க்காமல் போகவே விடாது. அது தட்டச்சுப் பள்ளி என்று
தெரியாத பாதசாரிகள் சிலர்…என்ன சார் சத்தம்…?என்று பதறிப்போய்க் கேட்டிருக்கிறார்கள்.
நகரிலேயே பெரிய பள்ளி அதுதான். எண்ணிக்கையில் அதிகமான இயந்திரங்களைக் கொண்டதும், நிறைய
மாணவர்களை உள்ளடக்கியதுமான ஸ்தலம் அது. ஆம்…ஸ்தலம்தான்.. உயர் கல்விச் சிந்தனையும்,
இரக்க சுபாவமும், உதவும் கரங்களுமாய் இருக்கும் கோயில் அது. ஏழை மாணவர்களுக்கு பாதிக்
கட்டணம்தான் என்று சுற்று வட்டாரத்திலிருந்து பஸ் பிடித்து இறங்கிப் படிக்க வரும் கிராமத்து
மாணவர்களுக்குக் காட்டும் சலுகை இவனுக்கு அந்த
முதல்வரிடம் பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அலை அலையாய், சாரி சாரியாய் மாணவர்கள் வந்து படித்தார்கள். பெற்றோர்கள் வந்து முதல்வரிடம்
வேண்டினார்கள். “எம் பையனுக்கு எப்டியாச்சும் ஒரு அரசாங்க வேலை கிடைக்க வழிபண்ணிருங்க…புண்ணியமாப்
போகும்” என்று கையெடுத்துக் கும்பிட்டார்கள். முதல்வரின் இரக்கச் சிந்தையும், தயாள
குணமும் இவனுக்கு அவரிடம் வேலை பார்க்கப் பெருமையாயிருந்தது. மாணவர்கள் நாள் முழுக்க வருவதும், போவதுமாய் இருப்பதே
அந்தச் சாலையின் பிரதான நிகழ்வாகத் திகழும். நகரிலுள்ள சினிமாத் தியேட்டர்களில் சிலைடு
போட்டுக் காட்டிக் காட்டி…பள்ளியின் ஸ்ட்ரெங்க்த் எகிறிக் கொண்டிருந்தது. எங்கள் பள்ளிக்கு
வந்து விடுங்களேன் என்று சம்பளம் கூடத் தருவதாக ஆசைகாட்டி அழைத்த கோரிக்கைகளும் இவனுக்கு உண்டுதான் அசைந்தே கொடுத்ததில்லை.
அந்தப் புனித ஸ்தலத்தை விட்டு இவன் நகர நினைத்ததேயில்லை.
அன்றைய
பணி முடித்து இவன் சற்று முன்னதாகவே வீடு வந்தபோது அப்பா அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பது
தெரிந்தது. எப்பொழுதும் வீடு திரும்புகையி்ல் வாசலில் அமர்ந்திருப்பார். முகம் சிந்தனை
வயப்பட்டிருக்கும். இன்னும் ஊர்ச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை என்று எண்ண வைக்கும்.
காலத்தின் கோலம்…இப்படி இடம் பெயரும்படி ஆகிவிட்டதே என்று அப்பா ரொம்பவும் சங்கடப்பட்டது
போலிருந்தது. உண்மையில் இஷ்டமேயில்லை. அண்ணாவின்
சொல்லைத் தட்ட முடியாமல்தான் அப்பா சம்மதித்தார்.
நான்தான் வேலைக்குப் போயாச்சே…எல்லாரும் அங்க
வந்து என்னோட இருங்கோ…..நீங்க வேலைக்குப் போக வேண்டாம்….இனிமே….! இத்தனை வருஷம் உழைச்சது
போதும்….
அதெப்படிப்பா… ஓடின சரீரம்…திடீர்னு பேசாம உட்காருன்னா
கேட்குமா…? நான் இங்கயே இருந்துக்கிறேன்.
கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன். சீனு வேணும்னா எனக்குத் துணையா இருக்கட்டும்….- என்ற போது
யாராலும் மறுக்க முடியவில்லைதான். அப்பா ஒன்றைத் தீர்மானித்தார் என்றால் யார் சொன்னாலும்
மாற மாட்டார். அப்பாவோடு தனியாய் இருப்பதெனில் அவர் வேலை பார்க்கும் Nஉறாட்டலில்தான் தனக்குச் சாப்பாடே என்று நினைத்தபோது இவனுக்குள் அப்படி ஒரு
சந்தோஷம். அங்கேதான் சுந்தர்ராஜன் வேலை பார்த்தான். இவர்கள் வீட்டுக்கு ரெண்டு வீடு
தள்ளி அவர்கள் வீடு. கஷ்டப்படும் குடும்பம். எஸ்.எஸ்.எல்.சி. முடித்தாயிற்று. சும்மாயிருக்க
ஏதேனும் சம்பளம் வருமே…தன் சாப்பாடு கழியுமே என்று. இப்படி எத்தனையோ குடும்பங்கள் அங்கே
உண்டுதான். சின்னச் சின்னதாய் வருமானம் கொண்டு வந்துதான் பெரிய எண்ணிக்கையிலான குடும்பங்கள்
தட்டுத் தடுமாறி நடந்தேறின.
காலைல சரியா எட்டுக்கெல்லாம் வந்துரு…..சூடா வடை
அப்பத்தான் தயாராய் இருக்குமாக்கும்…பூரி பொறிக்கிறதும் அப்பத்தான். நீபாட்டுக்கு வந்து
அந்த ரூம்ல உட்காரு….நா எடுத்திட்டு வந்து தர்றேன் உனக்கு….சாம்பார் வடை சாப்பிட்டுப்
பாரு….அப்புறம் விடவே மாட்டே….உங்கப்பா அடுப்படிலதான் இருப்பார்….நான் சொல்லிக்கிறேன்…
கூச்சப்படாமச் சாப்பிடு….எம்புட்டோ வீணாகுது தெனமும்…இன்னும் பத்துப் பேருக்கு ஓசிச்சோறு
போடலாம் இந்த முதலாளி. முதல் அழிஞ்சு போகாது. …உங்கப்பாவோட உழைப்புக்கு தாராளமாச் செய்யலாம்…நீ
வந்துரு…நா கவனிச்சிக்கிறேன்….ராத்திரி கள்ளிச் சொட்டா, எருமைப் பால்…டிபன் முடிச்சிட்டு
சாப்பிடு….பனங்கற்கண்டு இருக்கு…போட்டுத்தர்றேன்….
சுந்தர்ராஜனின்
ஆசை வார்த்தைகள் இவனை என்னவோ செய்தன. ஒரு அளவுக்கு மேல் ப்ரீதியாய்ச் சாப்பிடுதல் தவறு
என்று தோன்றியது. குடும்பத்தின் கஷ்ட நிலை கருதியும், இடம் பெயர்ந்து தனியாய் இருப்பது
வேண்டியும்….கடை முதலாளி அப்பாமேல் மதிப்பு வைத்து, இரக்கப்பட்டுக் கொடுத்த சலுகையை அளவுக்கு மீறி இஷ்டம்போல்
பயன்படுத்திக் கொள்ள முடியுமா? அப்படியென்ன
நாக்கு ருசி…! ஓசிச் சோறுக்கு உடம்பு அப்படி வளையுமா என்ன? அம்மா பக்கத்திலிருந்து
எச்சரிப்பது போலிருந்தது. சீச்..சீ….உனக்கு வேண்டாம் அது…!
காலை ஒன்பதுக்குள்
கூட்டுறவுப் பால் பண்ணை ஆபீசில் போய் உட்கார்ந்து
விடுவான். அங்குதான் க்ளார்க் வேலை அவனுக்கு. அக்கௌன்டன்ட் என்றார்கள். என்னவோ சொல்லிக்
கொள்ளட்டும்…சம்பளத்தைக் கொடு…என்று வேலைக்குச் சென்றான் இவன்.
அம்பி...ரொம்பக் கரெக்ட்….ஒரு நா கூடப் பாவம்
லேட்டா வந்ததில்ல…சீக்கிரமா வந்து லேட்டாத்தான் போவுது….மரியாதையான பையன்….- கோ-ஆப்ரேடிவ்
சங்கச் சேர்மன் வெள்ளைச்சாமி பிள்ளை காது கேட்கப் பாராட்டும்போது….அது எங்கப்பாட்டருந்து
நான் கத்துக்கிட்டதாக்கும்…என்று சொல்லத் தோன்றும் இவனுக்கு. புண்ணாக்குக் கணக்கும்,
பால் கூப்பன் கணக்கும் தப்பாய் எழுதச் சொன்ன செக்ரட்டரிக்கும் இவனுக்கும் வந்த தகராறில்தானே
வேலையை விட்டது.அதுக்கெல்லாம் நான் ஆளில்லை சார்…-ஒரே பேச்சில் வெட்டி விட்டான். அதுதானே
அப்பாவும் இடம் பெயருவதற்கு முடிவு எடுக்கும் உகந்த தருணமாயிற்று…
மாஸ்டர்…உங்களைப் போல ஒருத்தர் எங்களுக்கு இனிமே
யார் கிடைப்பாங்க….குடும்பமே இடம் பெயர்ந்துட்டதுனால…என்னாலயும் உங்களை நிறுத்த முடியலை….எங்கருந்தாலும்
நீங்க நல்லா இருக்கணும்…. என்று சொல்லி ஒரு தொகையை அந்தக் கடை முதலாளி கொடுத்த போது….அப்பா
கண் கலங்கி நின்ற காட்சி இன்னும் மனக் கண்ணில். அவர் உழைத்த உழைப்புக்கு அது சிறு தொகைதான்.
ஆனாலும் அதை மனமுவந்து வாங்கிக் கொள்ள அப்பாவால்தான் முடியும். அத்தனை முதலாளி பக்தி.
சீனு…அப்பாட்ட
இன்ஸ்டிட்யூட்டோட ஃபோன் நம்பர் கொடுத்திருக்கியோல்லியோ…. – என்றுமில்லாத அதிசயமாய்
அம்மா அப்படிக் கேட்டது இவனுக்கு என்னவோ போலிருக்க….எதுக்கும்மா…..கேட்கறே….? என்றான்.
ஒரு அவசரத்துக்கு உதவுமேன்னுதான் என்று அம்மா
சொல்ல….இருக்கும்மா….அப்பாட்டச் சொல்லியிருக்கேன். ஆனா ஞாபகமிருக்கணுமே….
அதெல்லாம் வச்சிப்பார்….ஒரு தடவை சொன்னாப் போதும்…மனசுல
பதிஞ்சுடும் அவருக்கு…..ஆனா எதுனாச்சும் அவசரம்னா, தேவைன்னா…ஃபோன் பண்ணத் தயங்குவாரோன்னு
தோண்றது….யார்ட்டயும் எதுக்காகவும் போய் நிற்க மாட்டாரே….? கான்டீன் நம்பரை நான் வாங்கி வச்சிருக்கேனே….
அப்டியா….என் கண்ணு…சமத்துடா நீ….நல்லதாப் போச்சு…..எதுக்குக்
கேட்டேன்னா…ஒரு வேளை அவர் வர்றதுக்கு லேட்டாயிடுச்சின்னா…ஃபோன் பண்ணிக் கேட்கலாமோல்லியோ….?
அதெல்லாம் கரெக்டா வந்திடுவார் …அவருக்கென்ன தெரியாதா?
நீ ரொம்பப் பயப்படுறம்மா…
இல்லடா செல்லம்….புது ஊராச்சே….அன்னைக்கு ஒரு
நாள் பஸ் போயிடுத்துன்னு பஸ் ஸ்டான்டுக்குப் போய் இறங்கி, அங்கிருந்து வழக்கமான அந்த
7ஏ-ஐப் பிடிச்சு ஊரெல்லாம் சுத்தி வந்திருக்கார்….நான் உங்ககிட்டே சொல்லலை….அதனாலதான்
கேட்டேன். சாயங்காலம் அஞ்சு மணியைப் போல ஒரு ஃபோன் போட்டு கேட்கிறியா…அப்பா கிளம்பியாச்சான்னு….?
பாவம்டா அந்த மனுஷன்…இந்த வயசுலயும் வேல வேலைன்னு அலையறாரு பார்த்தியா? இல்லன்னா சாப்பாடு
இறங்காதாக்கும் அவருக்கு….அவ்வளவு ரோஷம்….
சரிம்மா….வழக்கமா ஆறுக்குத்தான் புறப்படுவார்……அஞ்சரைப்
போலக் கேட்டா சரிய்யா இருக்கும்…உனக்கு அப்பா டயத்துக்கு வீட்டுக்கு வரணும்…அவ்வளவுதானே….நான்
பொறுப்பு அதுக்கு…போதுமா….? பயப்படாதே….
அதுதாண்டா கண்ணா….இதுக்குத்தான் நீ வேணும்ங்கிறது….
பெரியவன்ட்ட இதெல்லாம் சொல்லிண்டிருக்க முடியாது. அவனுக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி….தினமும்
அவன் வர்றதுக்கே ஒன்பது, பத்து ஆறது….அதனாலதான் உங்கிட்டே கேட்டேன். கொஞ்ச நாளைக்கு…அவருக்கு
நன்னா பழகறவரைக்கும் செய்துடுடா எங்கண்ணு…..நம்ம அப்பாவோல்லியோ….!! அந்தி சாய, நான்
சாமி விளக்கேத்தறபோது அவர் வீட்ல நின்னாத்தான்
எனக்கு மனசு ஆறும்….
புது ஊருக்கு வந்து அம்மாவுக்கு இன்னும் பயம்
போகவில்லை. தானாவது வீட்டோடு….இந்த வயசான காலத்துலேயும் சும்மா இருக்கமாட்டேன்னு ஓடுகிறாரே…அதில்
அம்மாவுக்குத் தீராத ஆதங்கம்.
நீ இப்போ சின்ன வேலைலதானே இருக்கே…உனக்கும் அரசாங்க
வேலை கிடைச்சிடுத்துன்னு வச்சிக்கோ…அப்பாவ வேலையை விட்டுடச் சொல்லிடலாம்… அப்பவும்
போய்த்தான் தீருவேன்னு முரண்டு பிடிச்சா ஆகாது….நீங்க ரெண்டு பேரும் வற்புறுத்தித்தான்
அவரை நிறுத்தி வைக்கணும். அந்த மனுஷன் இத்தனை காலம் ஓடி ஓடி உழைச்சு, உருக்குலைஞ்சது
போறாதா…? மீதிக் காலந்தான் வீட்டுல இருந்து
கழிக்கட்டுமே…நிம்மதியா…ஒரு நாளாவது என் கைச் சமையலை ரசிச்சு சாப்பிட்டிருக்காரா சொல்லு?
ஆர அமர அமர்ந்து தினசரி படிக்கிறதை….அவருக்குப் பிடிச்ச ஜெயகாந்தனை விரும்பிப் படிச்சு அனுபவிக்கிறதை நான் கண்ணாரக் காணனும்….அப்பத்தான்
என் மனசு ஆறும்….அப்பாடா…என்ன ஓட்டம்…என்ன ஓட்டம்….வெளியூருக்கும் உள்ளூருக்கும்…போறுண்டாப்பா
இந்த ஜென்மத்துக்கு…..அந்த மனுஷனோட மீதிக்
காலத்தையாவது ஓய்வா, சந்தோஷமா ஆக்குங்கோ…அதுதான் உங்களோட பொறுப்பு…கடமை…..நீங்க நன்னாயிருப்பேள்…என்னோட
பரிபூர்ண ஆசீர்வாதம்…
அம்மா தன்னைப் பற்றிக் கிஞ்சித்தும் கருதாமல்
அப்பாவைப் பற்றியே சதா நினைத்து மறுகிக் கொண்டிருப்பதும், அவரின் நலனே தன் சந்தோஷம்
என்று கருதி உருகுவதும்….இவன் நினைவில் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன. எப்போது அப்பாவைப்பற்றிப்
பேசினாலும் பேச்சின் இறுதியில் தாலிச் சரடை எடுத்து அம்மா கண்களில் ஒற்றிக் கொள்வதைக்
கண்டிருக்கிறான். சற்றே மிகையாய்த் தோன்றியது அது. ஆனால் அந்தக் காட்சியைக் காண்பதற்காகவே
காத்திருந்து கண் கலங்குவான் இவன். அவளின் ஏதோவொரு பயத்தின் அடையாளமாய் அந்தச் செய்கையை
உணர்ந்தான். அப்பா எங்களைவிட அம்மாவின் அப்பாவாகத்தான் திகழ்ந்தார். இருவருக்குமான
அந்த மானசீக உறவின் ஆழம் யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாதுதான். தெய்வீகத்தன்மை
வாய்ந்தது என்று கொள்ளலாம். நாங்கள் வெறும் பிள்ளைகள்…தென்னம் பிள்ளைகள்….!!!
மாலை ஐந்தரை மணி எப்போது ஆகும் என்று காத்துக்
கொண்டிருந்தான் சீனு. நேரம் தாண்டியிருந்தது. வேலை இழுத்து விட்டது. பிரின்சிபாலிடம் அனுமதி பெற்றுக் கொண்டு கிளம்பி
ஸ்டான்டிலிருந்து சைக்கிளை எடுத்தபோது அந்த ஃபோன் வந்தது.
சீனு….உங்கம்மாட்டருந்து ஃபோன்…….- ஓடி வந்த தனசேகர்
தடுத்து நிறுத்தினான்.…
அம்மாவா….? எங்கம்மாவா பேசறாங்க….நல்லா கேட்டியா…..?
என்றான் பதட்டத்தோடு.
சீனுவோட அம்மா பேசறேன்னு சொல்லித்தான் உன்னை அவசரமாக்
கூப்பிடச் சொன்னாங்க…..
ஓடினான்.. என்றுமில்லாத அதிசயமாய் ஃபோனில் அம்மா
முதன் முறையாய் அழைப்பது பயத்தை ஏற்படுத்தியது. அவசரத்தில் சைக்கிளைப் பூட்டி சாவியை
எடுத்தோமா என்று சந்தேகமாயிருந்தது. ரிசீவரைக் கையில் வாங்கியபோது… நடுங்கியது...
சீனுஊஊஊஊஊஊ….சீனுதானே…..உடனே
கிளம்பி வர்றியா கண்ணா….உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லை…என்னவோ போல இருக்கார்….மூச்சு
முட்டராப்புல இழைக்கிறார்….…நெஞ்சைத் தேய்ச்சு விட்டிண்டிருக்கேன்….அஞ்சு நிமிஷத்துல
வாடா ராஜா…..? எனக்கு பயம்மா இருக்குப்பா….
அம்மா அழுது கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது.
அதற்குள் அப்பா வீட்டுக்கு வந்து சேர்ந்திருப்பதே அந்த விபரீதத்தை உணர்த்தியது. விரைந்தான்.
சைக்கிளின் பூட்டில் சாவி தொங்கிக் கொண்டிருந்தது.
நல்லவேளை…அதிகமாய்த் திருட்டுப் போகும் பகுதி அது….
நினைத்தவாறே ஏறிப் பறந்தான். அன்று முழுக்க அம்மா
அப்பாவைப் பற்றியே என்றுமில்லாத புதிராய் ரொம்பவும் அக்கறையாய், அழுத்தமாய்ப் பேசியது
நினைவில் வந்து முட்டியது..காலையிலிருந்தே அம்மாவுக்கு மனசு சரியில்லையோ? அப்படிக்
கலங்கினாளே…! பதறியே பேசினாளே? என்ன தாபம் பிறந்தது அவள் நெஞ்சக் கோயிலுக்குள்…?எதை
நினைத்து இப்படி உள்ளுக்குள் மறுகுகிறாள்? பயம் புகுந்து கொண்டது இவனுக்குள். கடவுளே…எங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது….நீதான்
காப்பாத்தணும்…நீதான் காப்பாத்தணும்…. - மனசு பதட்டத்தோடு முணுமுணுக்க …. செல்லும்
வழியெல்லாம் இருக்கும் சின்னச் சின்னக் கோயில்களிலெல்லாம் ஒரு விநாடி நின்று வேண்டிக்
கொண்டே வீட்டை நோக்கி விரைந்தான் ஸ்ரீநிவாசன்.
----------------------------------------
பிரசுரம் - செம்மலர் – மாத இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக