26 ஆகஸ்ட் 2021

சிறுகதை “ இவர்களால்தான் மழை பெய்து கொண்டிருக்கிறது“-கல்கி 05.09.2021

 

சிறுகதை               “ இவர்களால்தான் மழை பெய்து கொண்டிருக்கிறது“

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------



      ருகிலே உட்கார ஸ்டூல் எதுவுமில்லை. பழியாய் நின்று கொண்டிருந்தேன். அந்த மரத்தடி நிழலில், காம்பவுன்ட் சுவரை ஒட்டி அவன் அமர்ந்திருந்தான். நான் நிற்பதுவே அவனுக்குள் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியிருந்ததோ என்னவோ? தையலுக்கு நடுவே சற்றே பக்கம் திரும்பித் திரும்பி என் காலடியைப் பார்த்துக் கொண்டான். நின்ற இடம் வட்ட சாக்கடை மூடி மேல். கொஞ்சம் உள்ளே ஒரு பக்கம் அமுங்கித்தான் இருந்தது. சற்று பயம்தான் எனக்கு. சுற்றிலும் “ட“ வடிவத்திற்குத் தோண்டிப் போட்டு பள்ளமாய்க் கிடந்தது. தண்ணிக் கொழா போடுறாங்க சார்...என்றான் அவன். தண்ணி வருமா?

      கொஞ்சம் தள்ளி என் டூ வீலரை ஒரு மேடு பள்ளத்தில் கவனமாய் நிறுத்தியிருந்தேன். வீதியில் போகும் வரும் வாகனங்களுக்கு அது இடைஞ்சலாய் இருக்குமோ என்று தோன்றிக் கொண்டேயிருந்தது. அதற்கு மேல் வண்டியை ஒதுக்கினால் அருகிலுள்ள சாக்கடையில் சாய்ந்தாலும் போயிற்று. அல்லது வண்டியை எடுக்கும்போது நான் விழ நேரிடும். அதனால் திரும்பித் திரும்பி என் வண்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவே அவனை விரைவு படுத்தியதோ என்னவோ? அது ஒரு வீட்டு வாசல் காம்பவுன்ட் வெளி பிளாட்பாரம். அந்த வீடு அடைத்துக் கிடந்தது. உள்ளே இருப்பார்கள் போலும்....மரத்தடியில் சுத்தமாய்க் காற்று இல்லை. சினிமா செட்டிங்ஸ் போல் நின்றது. இடையிடையில் கழுத்து, காது, முகம் என்று வியர்வையை அழுந்தத் துடைத்து விட்டுக் கொண்டான் அவன். வெப்பம் தகித்தது. கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டான். பார்வை தெளிவு பெற்றது.

      சில இடங்களில் ஐம்பது கேட்கிறார்கள். சில இடங்களில் நாற்பது என்கிறார்கள். வெறும் இருபதுக்கு ஆகும் காரியம் ஏன் இப்படி ஏறிப்போனது? இந்தக் கொரோனா வந்தாலும் வந்தது, மக்களுக்கு, குறிப்பாக சிறு தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு, வருமானம் வெகுவாய்க் குறைந்து போனது என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. அதனாலேயே இப்படி ரேட் உயர்ந்து போனதோ? இந்த மனநிலையும் அதனால்தான் வந்ததோ?

      முன்னெல்லாம் உழவர் சந்தைக்குப் போனா, அந்தந்தக் கடைல தலைக்கு மேலே மாட்டியிருக்கிற போர்டுல என்ன விலை கிலோவுக்கு எழுதியிருக்குதோ அந்த விலைக்குதான் போடுவாங்க...இப்ப என்னடான்னா அதை எவனும் மதிக்கிறதேயில்லை...

      பார்கவி காலையில் அங்கு போய்விட்டு வந்து புலம்பிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

      அவுக எழுதுவாங்க...நமக்குக் கட்டுபடியாகாதுங்க....என்று சொல்லி கூடத்தான் சொல்கிறார்கள். மைக்கில் ஆபீஸ் ரூமிலிருந்து அன்னவுன்ஸ் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

      “எழுதியிருக்கும் விலைக்கு அதிக விலை விற்றால் ஆபீசில் புகார் தரும்படி       வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....“

      அதுவும் ஒரு சம்பிரதாயமாய் நடந்து கொண்டிருக்கிறது. யாரும் அந்த அறிவிப்பை மதிப்பதில்லை. காய்கறி வாங்க வருபவர்களும் இதற்குப் பழகி விட்டார்களோ என்று தோன்றுகிறது? நம் மக்களுக்கு சகிப்புத் தன்மை அதீதம்.

      உழவர் சந்தை என்று துவக்கப்போய், அங்கு வியாபாரிகள் புகுந்து விட்ட நிலையில்...இதை ஒழுங்கு படுத்துவது எங்கள் கையிலில்லை என்று ஆபீஸ்காரர்களே கைவிட்ட நிலை.

      ரெண்டு மணிக்கு சந்தை முடிஞ்சிடும். ஒன்றரை மணிக்கு மேலே அந்த ஆபீசிலேர்ந்து ஒருத்தன் பெரிய பை ஒண்ணைத் தூக்கிக்கிட்டு கடை கடையாய் போய் நிப்பான் பை நிரம்பும்....அப்பத் தெரியும் அந்த உண்மை.....- என்றேன் நான். பதிலொன்றும் சொல்லவில்லை பார்கவி. அவளுக்குப் புரிந்ததோ இல்லையோ...? அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் ஒன்றைக் கெடுத்தல் என்கிற தத்துவ விதி.

      இது கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வரும் வழக்கம். எப்போதோ வழக்கமாகிப் போன ஒன்று...ஆனால் சின்னச் சின்ன வேலைகளுக்குக் கூட அநியாயக் கூலி கேட்கும் பழக்கம் இப்போதுதான் வெகுவாய்ப் பரவியிருக்கிறதோ என்று தோன்றியது எனக்கு. எல்லாம் கொரோனா செய்யும் கொடுமை....!

      ஆனாலும் ஐம்பதும், நாற்பதும் ரொம்ப அதிகம் என்றுதான் அவனைத் தேடிக் கொண்டு வந்திருந்தேன் நான். தெருவில் ஓரமாய் மெஷின் போட்டுத் தைக்கும் தையல்காரன் என்றால் ஆகாதா? இல்லை கேவலமா?  அவனும் சுயமாய் தொழில் செய்பவன்தானே? சொந்தமாய் உழைத்து உண்ண வேண்டும் என்று மெனக்கிடுபவன்தானே? அது எவ்வளவு பெரிய நல்லொழுக்கம்? ரோட்டோரமாய், வெயிலும், புழுதியுமாய்...

      கண்ட எடத்துலெல்லாம் கொண்டு போய்க் கொடுத்து, கொரோனாவ வீட்டுக்கு வாங்கிட்டு வந்திடாதீங்க....! பத்திருபது கூடப் போனாலும் டீசன்டான ஒரு கடையாப் பார்த்து  தைச்சு வாங்குங்க....எங்க போனாலும் பத்தடி தள்ளியே நில்லுங்க...மாஸ்க் போடாமப் போயிராதீங்க...நீங்க போய் நிக்குற எடத்துல அவன் போட்டிருக்கானோ இல்லையோ...?

      இப்போது நான் இங்கு வந்திருப்பது அவளுக்குத் தெரியாது. ஒரு கைலிக்கு ரௌன்ட் அடிக்க அம்பதக் கொண்டா, நாப்பதக் கொண்டான்னா எவனுக்குத்தான் மனசு வரும்? கூலி கொடுக்க நம்ப வருமானமும், இருப்பும் கட்டுபடியாக வேணாமா?  பழகிய தையல்காரனே, முகம் பார்க்காமல்,  தயங்காமல், வாயில் வந்ததைக் கேட்கிறானே?

      பகல் கொள்ளையால்ல இருக்கு...? ஒரு நியாயமான கூலி கேட்டா மறு பேச்சில்லாமக் கொடுத்திர மாட்டமா? சனங்க ஏன் இப்படிக் கெட்டுப் போயிட்டாங்க....? ஒழுங்காச் சம்பாதிக்கிற காசே நிக்க மாட்டேங்குது...இப்படி அநியாயமாக் கூலி கேட்டு வர்ற காசு நிக்குமா, நிலைக்குமா?

      அடடடடடடா...! ஆரம்பிச்சிட்டீங்களா உங்க புராணத்த...? தொலைஞ்சு போறான்...மனசோட கொடுத்திட்டுத்தான் வாங்களேன்....அந்தக் காசை வாங்கி அவனென்ன கோட்டையா கட்டப் போறான்? என்னமோ அள்ளி வீசிட்ட மாதிரி..?

      நான் இப்போது அப்படித்தான் நின்று கொண்டிருந்தேன். வந்து இறங்கியபோது ஒரு பெண்,  நிறையத் துணிகளைக் கொடுத்து கிழிசல்களைத் தைக்கவும், சுருக்கவும், டக்-அடிக்கவும் ஒவ்வொன்றாய்ச் சொல்லிக் கொண்டிருந்தது. அவனிடம் பேனா வாங்கி இந்தந்த இடம் என்று கோடு போட்டு, மார்க் பண்ணி அது சொல்ல, சரி...சரி...என்று வாங்கிக் கொண்டான் அவன். எப்பத் தருவீங்க...? என்றபோது நாலு மணிக்கு வாங்க...என்றான். இத்தனை துணியை வாங்கி வைத்திருப்பவனுக்கு ஒவ்வொரு துணியிலும் அந்தம்மா சொன்ன வேலையைச் சரியாய் நினைவு வைத்துக் கொண்டு அடிக்க முடியுமா என்று வியப்பாயிருந்தது. பேனாக் குறிகள் விழுந்தமாதிரித் தெரியவில்லையே? அது தொழில் ரகசியம்...!

       அந்தப் பெண் போன பிறகு ஒரு இளைஞன் வந்தான். இரண்டு பழைய பேன்ட்களைக் கொடுத்து, உயரம் குறைக்கச் சொன்னான். இன்னும் பழைய துணிகளைத் தைப்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தோன்றியது. நம்ம பையன் கொஞ்சம் பழசானாலும் தூக்கி எறிஞ்சிடுறானே என்றும் தோன்றியது. இப்ப எல்லாமே யூஸ் அன்ட் த்ரோதாம்ப்பா....! என்னையும் ஒரு நாளைக்கு இப்டித் தூக்கி எறிஞ்சிடுவானோ...? ரொம்பப் பழசாப் போயிட்டே...! என்று....!

      அவன் கேட்ட கூலி நியாயமாய்த் தோன்றியது எனக்கு. நான் நினைத்து வந்ததில் பத்து ரூபாய் அதிகம்தான். ஆனாலும் போகட்டும்...என்று ஒப்புக் கொண்டேன். அதே நாப்பது அம்பது கேட்கலையே! அதுவே பெரிசு. பொதுவாய் இந்த மாதிரித் தெரு முனைகளில், ப்ளாட்பாரங்களில் உட்கார்ந்து கொண்டு மழையிலும், வெயிலிலும் சளைக்காது தொழில் செய்பவர்களிடம் நான் பேரம் பேசுவதில்லை.  அது பாபம் என்று நினைப்பேன். குறைத்துக் கேட்க எனக்கு மனசும் வராது. கேட்டதைக் கொடுத்து விடுவேன். அப்படித்தான் அன்று அவன் சொன்னதையும் ஏற்றுக் கொண்டேன்.

      என் கைலியை எடுத்து ஓரங்களில் சீரில்லாமல் சடை சடையாய்ப் பறந்து கொண்டிருந்த நூல்களை கரக் கரக் என்று வெட்டிச் சீர் செய்து விட்டு, இரு பக்க முனைகளையும் சேர்த்து மூட்ட ஆரம்பித்தான். தையல்காரன் வைத்திருக்கும் இவ்வளவு பெரிய  கத்தரிக்கோல், பொடி நூல்களை எப்படி இத்தனை துல்லியமாய், ஷார்ப்பாய் வெட்டுகிறது....? இளம் பிராயத்திலிருந்து இன்றுவரை தீராத சந்தேகம் இது....!

      நா வந்து இறங்கினபோது ஒருத்தர்,  ரெண்டு  தைச்சு வாங்கிட்டுப் போனாரே....அது சங்கு மார்க் கைலியோ....? -சும்மா நிற்பதற்கு ஏதாச்சும் பேச்சுக் கொடுப்போமே....என்று ஆரம்பித்தேன்.

      ஆமா...அது விலை ஜாஸ்தி....சார்.... நல்லா உழைக்கும்.....,இப்பல்லாம் ரெளன்டா மூட்டுன கைலியே வருது சார்...அவரென்னவோ இதெ வாங்கியிருக்காரு....

      அப்டியா...? அது ஓகே...நமக்கு ஆறு மாசம் உழைச்சாப் போதாது? எதுக்கு அம்புட்டு விலை கொடுத்து வாங்கணும்...?...இதெல்லாம் விலை கம்மிதான்....

      சரி சார்....வீட்டுல இருக்கிறப்ப கட்டுறதுக்கு இது போதும் சார்...நல்லா, அகலமா, இறக்கமாத்தானே  இருக்கு....! -

      தண்ணில நனைச்சா சுருங்குமோ என்னவோ? வாங்கியாச்சு....தூக்கி எறியவா முடியும்....?- வந்து நேரமாகி விட்டதை உணர்ந்து சுற்று முற்றும் பார்த்தவாறே இருந்தேன். டூ வீலரில் வந்த ஒருவர், இங்க தண்ணி கேன் எங்க கிடைக்கும்? என்றார் அவனைப் பார்த்து.

      நேரா போங்க...மெயின் ரோடு திரும்புற எடத்துல “மாரி வாட்டர் கேன்னு“ ஒரு கடை இருக்கும்....

      அடுத்த நிமிடம் இருவர் ஒரு வண்டியில் வந்து ஒரு ஸ்கூல் பெயரைச் சொல்லிக் கேட்க, அந்த வீதியிலேயே கடைசில இருக்கு என்று அனுப்பினார்.

      எல்லாம் உங்ககிட்டதான் வந்து விசாரிப்பாங்க போல்ருக்கு...இது அடிஷனல் ஒர்க்கா....? என்றேன் சிரித்தவாறே...!....

      பெரிய தொல்லை சார் ஆட்டோக்காரன், கூரியர் சர்வீஸ், ஓட்டல் சர்வீஸ் இவங்கள்லாம் கூட மொபைல்ல மேப் ரூட் பார்த்து போயிடுறாங்க....ஆனாலும் இப்டிச் சிலபேர் இன்னும் வந்திட்டுத்தான் இருக்காங்க...என்னா பண்றது? தப்பாவா சொல்ல முடியும்? இல்ல தெரியாதுன்னு சொல்றதா? தெரியாதுன்னு வாயைத் திறக்குறதுக்கு தெரிஞ்சதைச் சொல்லி்டலாமே!  வேலைக்கு நடுவுல ஏதோ உதவி.....அவனின் அனுபவமான பேச்சு எனக்குப் பிடித்தது. அன்றாட வாழ்க்கையில் நசிந்து அனுபவப்பட்டவர்கள், சிறந்த விவேகியாக மாறி விடுகிறார்கள். அமைதியும், பக்குவமும் அவர்களை உயர்த்துகிறது.

      என் நாலு கைலிகளும் தைத்து முடித்து, மடித்து, துணிப் பையில் வைத்து பவ்யமாய் நீட்டினான். ஏற்கனவே அவன் கேட்ட கூலியைத் தைக்க ஆரம்பித்த போதே கொடுத்திருந்தேன். அது அவன் சட்டைப் பையில் சரியாய்ச் செருகப்படாமல் முகத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தது. இரண்டு ஐம்பது, ஒரு இருபது.....பார்ப்பவர் கண்ணை உறுத்துவது போல....பளீரென்று....

      சரி...வர்றேன்....வெயில் ஏறிப்போச்சு...ரொம்ப நேரமும் ஆயிப் போச்சு...என்று விட்டுக் கிளம்பினேன்.

      சார்...சார்....ஒரு நிமிஷம்......-அவன் குரல்  படு அவசரமாய் என்னைத் தடுத்தது.

      என்னாச்சு.....? - என்றவாறே திரும்பினேன்.

      இந்தாங்க பிடிங்க......-சொல்லியவாறே ஒரு இருபது ரூபாயை நீட்டினான்.

      அநிச்சையாய்க் கையைப்...பின்னுக்கு இழுத்துக் கொண்டேன். எதுக்கு...எதுக்காக? புரியாமல் கேட்டேன்..

      இல்ல சார்....மூட்டுறதுக்கு இருபத்தஞ்சுதான் வழக்கமா வாங்குறது.....அந்தம்மா குறுக்க வந்திடுச்சா....எதோ நெனப்புல மறந்த வாக்குல கூடக் கேட்டுப்புட்டேன்...அவுங்களுக்கே கூலி சரியாச் சொன்னனான்னு சந்தேகமாயிருக்கு...துணி அதிகம் பாருங்க....பிடிங்க....

      ஏங்க...? இந்த இருபதத் தர்லன்னா என்ன இப்ப...? இருக்கட்டும் வைங்க சட்டப் பைல ரூபாயச் சரியாச் செருகுங்க.....என்றேன் கூடவே...!

      வேணாம் சார்...ரொம்பத் தொலவுலர்ந்து என்னைத் தேடி வந்திருக்கீங்க....அடுத்தாப்ல வரணும்...அதான் எனக்கு வேணும்....கரெக்டான கூலிதான் வாங்குவேன்...-குரலில் தொனித்த உறுதி...! அந்த இருபதை என் கையில் திணித்தே விட்டான். அவன் வேகம், ஏதோ பாபக் காசைக் கையை விட்டுத் தொலைப்பது போலிருந்தது.

      வேறு வழியின்றிக் கிளம்பினேன். அந்த சங்கு மார்க் கைலிக்காரனிடம் இரண்டு கைலிக்கு ஐம்பது வாங்கியதை நான் பார்த்திருந்தேன். அதைக் கவனித்திருப்பானோ? விலையுயர்ந்த அந்தக் கௌரவக் கைலிக்கு இருபத்தைந்து என்றால் இந்த சாதா லோகல் கைலிக்கு இருபது போதாதா? - மனிதனின் பீத்த புத்தி எப்படியெல்லாம் வேலை செய்கிறது?

      அது சங்கு மார்க் கைலியா? என்று யதார்த்தமாய் விசாரித்தேனே....அதை வைத்துப் புரிந்து கொண்டு விட்டானோ?

      அந்த இருபது ரூபாயை அவனிடம் வாங்கியது இந்த நிமிடம் வரை என்னை உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. சாலையோரத்து வியாபாரிகளிடம், தொழிலாளியிடம் என் வாழ்நாளில் நான் எப்போதுமே பேரம் பேசியதில்லை. வளர்ந்த, வாழ்ந்த வாழ்வு எனக்கு அதை நிரம்பக் கற்றுக் கொடுத்திருக்கிறது. வீட்டில் உடன் வந்திருந்தாலும் தடுத்து விடுவேன்....

      இந்தச் சின்ன களிமண் பிள்ளையாருக்கு நூத்தம்பதா? அநியாயமாயில்ல...?

      விடு...விடு....வருஷத்துக்கு ஒரு நா.....- சாமிக்குச் செய்ததா நினைச்சுக்கோ....-சொல்லியிருக்கிறேன்.

      ஆனாலும் இந்தத் தையல்காரனின் அதீதமான நியாய உணர்வு..? சாதாரணப்பட்டதா? அடேயப்பா...! .எளிய மக்களில் இப்படி எத்தனை நல்லவர்கள், நியாய உணர்வு உள்ளவர்கள் இன்னும் இந்த உலகில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் மன நேர்மையை யார்தான் சந்தேகிக்கக் கூடும்? மெய் சிலிர்க்க கண்கள் கலங்குகின்றன எனக்கு. இவர்களுக்காகத்தான் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறதோ?  

                              ------------------------------------------------------

                        உஷாதீபன்,  (ushaadeepan@gmail.com)                                                     எஸ்.2 – இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                                        மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                           ராம் நகர் (தெற்கு)12-வது தெரு, ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில்,                          மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188).

 

     

 

           

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...