“ஆகாயத் தாமரை“-நாவல்-அசோகமித்திரன்-வாசிப்பு ரசனைக் கட்டுரை-உஷாதீபன் (நற்றிணை பதிப்பகம்-திருவல்லிக்கேணி, சென்னை-5)மற்றும் (கிழக்கு பதிப்பகம்,சென்னை)
எந்தவிதத்
திட்டமும் இல்லாமல் எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் அசோகமித்திரன். முழுக்க முழுக்க மனோதத்துவ ரீதியிலான எண்ண ஓட்டங்களும், உரையாடல்களும்
கலந்து ஒரு பூடகமான மனநிலையிலேயே நாவல் நம்மை நகர்த்திச் செல்கிறது. அசோகமித்திரனின்
எழுத்து மனதுக்குள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தி விடும் பலம் கொண்டது. நம் குடும்பங்களில்
ஒருவரைப்பற்றி இவர் சொல்லியிருக்கிறார் என்று எண்ண வைக்கும். இம்மாதிரிச் சிலரும் நம்
வீட்டிலும் உண்டே என்று தோன்றும். அவர்கள் படும் துயரங்கள் எல்லாம் இந்த மனிதருக்கு
எப்படித் தெரிந்த்து என்று வியக்க வைக்கும். சாதாரண, எளிய மக்களின், அன்றாடங்காய்ச்சிகளின்
துயரங்களும், கஷ்டங்களும் இவரை ஏன் இப்படி வதைக்கின்றன என்று எண்ணி, நம்மையும் சங்கடம்
கொள்ள வைக்கும்.இவற்றையெல்லாம் நாமும் கவனித்திருக்கிறோம், ஆனால் மனதில் இருத்தியதில்லை
என்பது புரியும். அதை ஒருவர் அவருக்கேயுரிய தனி மொழி நடையில் அமைதியாக, அழுத்தமாகச்
சொல்லும்போது எப்படி உறைக்கிறது? என்ற எண்ணம் வரும். உலக நடப்புகளின் பல விஷயங்களுக்காக
தன் மனதுக்குள் இவர் எவ்வளவு துயருறுகிறார், வேதனைப்படுகிறார் என்பதை நாவலின் ஏதேனும்
ஒரு கதாபாத்திரமாவது வெளிப்படுத்தும்போது, அந்த எழுத்தின், விவரிப்பின் ஆழமான துயரம்
நம்மையும் பற்றிக்கொள்ளும்.
வெறும் கதை சொல்லல் என் வேலையல்ல. பொழுது போக்காய்ப்
பக்கங்களை நகர்த்த வைத்தல் என் நோக்கமல்ல. ஒரு குறிப்பிட்ட நபரின், அவன் குடும்பத்தின்
வாழ்க்கைப் பாடுகளை – அந்தந்தக் காலகட்ட சமுதாய நடைமுறைகளை , இயற்கை நிகழ்வுகளை, மாற்றங்களை,
உறவுகளின், வெளி மனிதர்களின், வேலை செய்யும் நிறுவனத்தின் இப்படிப் பலரின் தொடர்புகளால்
ஏற்படும் நன்மை, தீமை, லாபம், நஷ்டம், மகிழ்ச்சி, சோகம் ஆகிய பல்வேறு நிலைகளின் ஏற்ற
இறக்கங்களை, பாதிப்புகளை உள்ளடக்கி, ஒருவனின் சிந்தனையைத் தூண்டுவதும், அவனை பொறுப்புள்ள
மனிதனாக மாற்றுவதும், அவனால் சமுதாயத்திற்கு எந்தவிதக் கேடும் ஏற்படாவண்ணம் பக்குவப்
படுத்துவதும், தீமைகளிலிருந்து விலகியிருக்கச் செய்தலுமான பற்பல அனுபவங்களை உள்ளடங்கிய
மாற்றங்களை ஏற்படுத்துதலே என் எழுத்தின் தலையாய நோக்கம் என்பதை நமக்குள் ஆணித்தரமாய்ப்
பதிய வைக்கிறார் அசோகமித்திரன்.
ஒரு கதையை உண்டாக்கவில்லை, அது தானாய் இயல்பாய்
நடந்த்து என்பதாகச் சொல்லி இந்நாவல் பயணிக்கிறது. நாயகன் வேலைக்காக அலைகிறான். யாராவது
வாங்கித் தரமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. அதுவும் அவர்கள் இஷ்டமாய்,
அதுவாக, தானாய் நடந்ததாய் இருக்க வேண்டும் என்பதுவும் அவனது விருப்பமாய் உள்ளது. தனக்கென்று
உள்ள சிற கௌரவத்தை விட்டுக் கொடுக்க ஏலாமல் அதற்கு எந்தவகையிலும் பங்கம் வந்துவிடாமல்
அதுவாக நடந்தால் நடக்கட்டும் என்று விலகி இருக்கிறான்.
ஓவியக் கண்காட்சி ஒன்ற நடத்துகிறான் நாயகன். அதற்கு
ஒரு வெளி உதவித் தூதுவர் ஏற்பாடு செய்கிறார். சிறப்பாகக் கண்காட்சி நடந்தேறுகிறது. அக மகிழ்ந்து ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்
தூதுவர். அந்த விருந்து நடைபெறும் பிரம்மாண்டமான இடம், அந்த வளாகம், பெருத்த, படாடோபமான
செலவினை உள்ளடக்கிய ஏற்பாடுகள், பல முக்கியப் பிரமுகர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வு மிகுந்த
பிரமிப்பை ஏற்படுத்தி நாயகனைப் பயமுறுத்துகிறது.
உள்ளே செல்லவே அஞ்சி, தயங்கி, செக்யூரிட்டியால்
தடுக்கப்பட்டு, பின் வேறு வழி ஏதேனும் உண்டோ என்று மானசீகமாய்த் தேடி, திரும்பி விடலாமா
என்று யோசிக்கையில் கடைசியில் அந்தத் தூதுவரின்
பார்வைக்கே பட்டு, கைபிடித்து அழைத்துச் செல்லப்படுகிறான். வாழ்க்கையில் முதன் முறையாய்
முற்றிலும் அவனுக்குப் பொருந்தாத அந்த இடம் அவனைக் கூச வைத்து, ஒதுங்கச் செய்து, பேச
நா எழவிடாமல் ஊமையாக்கி, அந்தப் பெரியதனக்காரர்களின் சூழலிலிருந்து எப்படியாவது விலகி
ஓடினால் சரி என்று அவன் மனம் பதைத்துக் கொண்டேயிருக்கிறது.
சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி, அந்த வளாகத்தின்
இன்னொரு விருந்து நடக்கும் பகுதியில் சென்று ஒன்றும் புலப்படாமல் மாட்டிக் கொள்கிறான்.
அங்குதான் அந்த தனவந்தரைச் சந்திக்கிறான். அவரோடு பேச விருப்பமின்றி நழுவ நினைக்கையில் இழுத்து வைத்து
அவனை வலியப் பேசப் பண்ணுகிறார் அவர். சூழலுக்கு ஏற்ப அவனை நடந்து கொள்ளச் செய்ய யத்தனிக்கிறார்.
நாயகன் ரகுராமன் தனக்குப் பொருந்தாத இடத்தில் வந்து சிக்கிக் கொண்டதாய் நினைத்து, அங்கிருந்து
எந்தக் கணமும் வெளியேறத் துடிக்கிறான். அவனை அவரோடு சேர்த்து மது அருந்த வைக்க முயற்சிக்கிறார்
அந்த செல்வந்தர் ராஜப்பா. மறுத்து விடுகிறான் ரகுராமன். எவ்வளவோ முயற்சித்தும் அவனைத்
தன் வழிக்குக் கொண்டு வர முடியாத நிலையில் ரகுராமனை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அங்கிருந்தும் வெளியேறுகிறான் நாயகன். எப்பொழுது
வேண்டுமானாலும், எதற்காகவேனும் நீ என்னை நாடி வரலாம் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்
அவர்.
நாயகன் வாழ்வில் அடுத்தாற்போல் மாலதி குறுக்கிடுகிறாள்.
அவள் தனக்கு உதவக்கூடும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறான் ரகுராமன். ஆனால் அவனைப்
பலமுறை கேலிக்குள்ளாக்கும், விமர்சிக்கும் அவள், அவனுக்காக எதுவும் செய்யாமலேயே விலகிச்
சென்று விடுகிறாள்.
ஆரம்பத்தில் தன் சொந்த முயற்சியில் கிடைத்த சொற்ப
சம்பளத்திலான வேலையில் அவனையறியாமல் நடந்தேறிவிட்ட ஒரு தவறுக்காக சஸ்பென்ட் பண்ணப்பட்ட
நிலையில், மறுபடியும் ஒரு நல்ல வேலையில் அமருவதற்காக நாயகன் செய்யும் முயற்சிகள் அனைத்தும்
தோற்றுப் போகின்றன. வேலை எதுவுமற்ற நாயகனின் மன ஓட்டங்களை, அன்றாட வாழ்க்கையின் கஷ்டங்களை,
அவன் தாயுடன் கூடிய வருத்தங்களை, மனமுருகி நினைத்துப் பார்ப்பதும், புழுங்குவதுமாய்,
வேதனையோடு கழிப்பதும், விரக்தியினால் தோன்றும் மன வெறுப்பும், யாரையும் நம்பத் தகாத
தன்மையும், ஏமாற்றமும், தத்துவ ரீதியிலான சிந்தனையைக் கிளறி விடுகிறது நாயகன் ரகுராமனுக்கு.
எந்த நிறுவனத்திலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டானோ
அந்த நிறுவனமே அவனை மறுபடி அழைத்துத் தாங்குகிறது. முன்பிருந்த பணிக்கு வேறு ஒருவரை
நியமனம் செய்து விட்டதாய்ச் சொல்லி, அதனிலும் மூன்று படி நிலைகள் உயர்ந்த ஸ்தானத்திலான
ஒரு பதவியில் இவனை அமர்த்துகிறது. யாருக்கு இவனைப் பிடித்துப் போனதாய் – எந்த நேரமும்
என்னை நீ அணுகலாம் என்று தன் கௌரவம் பார்க்காமல் – அந்த ஒரு விருந்து நாளில் பல பேர்
முன்னால் சத்தமிட்டு, உரக்கச் சொன்னாரோ அந்தச் செல்வந்தரே திரு ராஜப்பா அவர்களின் சிபாரிசினால்தான்
தனக்கு இந்த உயர்ந்த ஸ்தானத்திலான வேலையும், அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை உணர்கிறான்
நாயகன் ரகுராமன். அவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு
அந்த நிறுவனத்தின் வெற்றிக்காக உழைக்கத் தன்னை முனைப்பாக நிறுத்திக் கொண்டு உழைக்க
ஆரம்பிக்கிறான்.
வேலை கிடைக்காத நாட்களில், தற்காலிகப் பணி நிறுத்தத்தில்
இருக்கையில் ஏற்படும் மன உளைச்சல்களும், வெறுப்பும், ஏமாற்றமும், அதனால் விளையும் முரணான
செயல்பாடுகளும், வீட்டில் அம்மாவுடன் ஒத்துழைக்காத, உதவாத போக்கும், வெளி நபர்களிடம்
தோன்றும் அர்த்தமற்ற கோபங்களும், தடித்த வார்த்தைகளும் என ரகுராமன் அல்லாடுவது நாமும்
இப்படியெல்லாமும் இருந்திருக்கிறோம்தானே என்பதாய்ப் பல இளைஞர்களின் அனுபவ எண்ணங்களைக்
கிளறி விடக் கூடும். அதே சமயம் சுயமாய் நல்ல வளர்ப்பால் படிந்திருக்கும் இரக்கம், கருணை,
நேயம் இவைகளும் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கின்றன.
வசதியற்ற, அன்றாட வாழ்க்கைக்கே ஆதாரமின்றித் தவிக்கும்
மக்களைப் பார்க்கையிலும், அவர்கள் படும் அல்லல்களை நோக்குகையிலும், ஐயோ, இந்த மனிதர்கள்
தங்கள் உடன் பிறப்புகளைக் கரையேற்ற, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள்....துயருறுகிறார்கள்
என்று நாயகனின் மனம் படும் வேதனை நம்மையும் மிகுந்த சோகத்திற்குள்ளாக்குகிறது. ஒரு
மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் இல்லாமையையும், வறுமையையும், பற்றாக்குறையையும் கண்ணுறும்போதுதான்,
அனுபவிக்கும்போதுதான், அடுத்தவர்களின் பசியும் பட்டினியும் அவலமும் அவன் சிந்தைக்குள்
வருகிறது, உறுத்துகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் அசோகமித்திரன்.
ஆகாயத்தாமரை என்பது இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றைக்
கூடப் பெயரிட்டு அழைத்துத்தான் சுட்ட வேண்டியிருக்கிறது. மனம் எவ்வளவோ கற்பனை செய்து
கொள்ளலாம். விண்ணில் பறக்கலாம்...ஆகாயத்தை முட்டலாம்....நடப்பதுதான் நடக்கும், நடக்கும்போதுதான்
நடக்கும்...ஆகாயத்தாமரை ஏதோ நிஜமானது போல...இருக்கு. ஆனால் அதற்கு ஆதாரம் கிடையாது.
அது சாத்தியமானதும் கிடையாது....என்று வாழ்க்கையின் நிதர்சனத்தை நாவல் முழுக்கப் பரவ
விட்டிருக்கிறார் அசோகமித்திரன்.
இதையெல்லாம் சொல்லலாமா, அப்படிச் சொன்னால் நாவல்
ஸ்வாரஸ்யப்படுமா? என்று சந்தேகிக்கும், தயங்கும்விதமான
மிக மிகச் சாதாரண விஷயங்களைக் கூட மனதில் வைத்திருந்து அவர் சொல்லிச் செல்லும் முறை...இவற்றையெல்லாம்
அசோக மித்திரன் சொன்னால்தான் நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பெருமைப்பட வைக்கிறது.
சைதாப்பேட்டை
பாலத்தினடியில் இரவில் சலவையாளர்கள் துணி
துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவில்தான் துணி துவைப்பார்கள் என்று
சொல்லக் கேள்விப்பட்டிருந்த ரகுராமன், பகலிலும் துணி துவைப்பதைப் பார்த்ததை
நினைத்துக் கொள்கிறான். அத்தோடு போகவில்லை. அவர் துவைக்கும் துணிகளில் என் சட்டையும் பேன்ட்டும்
இருக்கலாம். ஐயா...சற்று மெதுவாக அந்தக் கல்லில் தோயுங்கள். பலமாக அறையாதீர்கள். ஒவ்வொரு
முறையும் நான் உடையுடுத்தும்போது ஒரு பொத்தானாவது இல்லாமல் இருப்பதைச் சங்கடமாக உணர்கிறேன்
நான். சற்று தயவு செய்யுங்கள். பட்டன்கள் உதிராமல் துவைக்கப் பாருங்கள் என்று மானசீகமாய்
வேண்டிக் கொள்கிறான். எவ்வளவு பண்பான எழுத்து என்று அசோகமித்திரன் மீது நம் மதிப்பு
உயர்கிறது.
ஒரு
பெரிய தலைவரின் இறப்பின்போது ஊர் எப்படியெல்லாம் கொந்தளித்துப் போகிறது? பெரும் கூட்டம்
கூடி கடைசியில் அது எப்படி ஒரு திருவிழா மாதிரித் தோற்றம் கொண்டு விடுகிறது? பெரும்
கூட்டம் கூடும்போது தனி மனிதத் துக்கம் கூட உருமாறி விடுகிறதே...! என்கிறார்.
அன்றாடச்
செயல்களில் நமது சின்னச் சின்னத் தடுமாற்றங்களைக் கூடச் சுட்டிச் செல்கிறார். இவற்றையெல்லாம்
எழுதலாமா என்று தயக்கம் கொள்ளும் பலவற்றை அவர் சொல்லிச் செல்லும் விதத்தால் அந்தச்
சாதாரண விஷயம் கூட, போகிற போக்கிலான காட்சிகள் கூடப் பெருமை பெற்று விடுகிறது.
1973
காலகட்டம் இந்நாவலில் பயணிக்கிறது. 1980-ல் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. இப்பொழுது
படிக்கும்போதும் இந்நாவலுக்கான தேவை இருக்கிறது என்ற எண்ணம் எழுகிறது நமக்கு. இதில்
வரும் நாயகன் ரகுராமன் போல் இங்கே பலர் இருக்கிறார்கள். வேலையில்லாமல் வீட்டிலும் வெளியிலும்
அவமானத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். கூச்ச சுபாவம் உள்ளவர்களாக, தங்களைத் தாங்களே
சுருக்கிக் கொண்டு, வார்த்தைகளை அளந்து அளந்து பேசிக் கொண்டு, பேசாமல் முழுங்கிக் கொண்டு
பல கேவலங்களை, அவமானங்களை, எந்த எதிர்வினையும் காட்டாமல் தாங்கிக் கொண்டு வலம் வந்து
கொண்டிருக்கிறார்கள்.
ரகுராமன்
வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவதும், மனிதர்களிடம் நடந்து கொள்ளும்
விதமும், அவனை மற்றவர்கள் நடத்தும் முறையும், மனோதத்துவ முறையில் சொல்லப்பட்ட இந்த
நாவல் வாழ்க்கையில் யாரும் யாருக்காகவும் எதுவும் செய்து விட முடியாது?, அவரவருக்கு
அமைந்த வாழ்க்கையை அவரவர் வாழ்ந்தே கழித்தாக வேண்டும் என்கிற பொது விதியை முன்னெடுத்துச்
செல்கிறது என்கிற எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் கூற்று...அசோகமித்திரனின் இந்நாவலுக்கு
முற்றிலும் பொருந்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
---------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக