சிறுகதை “கௌரவம்” -----------------------------------
அதான் நல்லபடியா விசேஷம்
முடிஞ்சு போச்சே... இன்னும் என்ன பலமான யோசனை...- ராகினியைப் பார்த்தும் பார்க்காதவாறு
கேட்டான் சுந்தரம்.. காரணமில்லாமல் அவள் அப்படி அமைதி காக்க மாட்டாள். ஒரு வேளை உடம்பு
சோர்வாக இருக்கிறாளோ?
எல்லாம் முடிந்து மண்டபத்தைக் காலி செய்து கொண்டு
வீடு வந்து சேர்ந்தபோது ராத்திரி மணி பன்னிரண்டாகிப் போனது. நல்லவேளை மறுநாள் அங்கு
யாரும் புக் பண்ணவில்லை. இருந்திருந்தால் மாலையே வந்து அடைந்திருப்பார்கள். அல்லது
குறைந்தபட்சம் விழாவுக்கான சாமான்களைக் கொண்டு வந்து வைக்க, போக வர என்றாவது இருப்பார்கள்.
அறைகளின் சாவியும் கை மாறியிருக்கும். அதெல்லாம்
இல்லாமல் வசதியாய் முடிந்தது. மண்டப ஓனரும் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. கொஞ்சம் முன்னப்
பின்னே போயிட்டுப் போறாங்க...என்று விட்டிருக்கலாம். சாவகாசமாய் சாமான்களைப் பேக் செய்து வரிசையாக எடுத்து
வைத்து, எதுவும் விடுபட்டிருக்கிறதா என்று கவனமாய்ப் பார்த்து கொண்டு வந்து சேர்த்தாயிற்று.
ஆனாலும் ஒரு ஃபங்ஷன் நடத்தி முடிப்பது என்பது சற்று சிரமம்தான். ரொம்பவும் மெனக்கிடத்தான்
வேண்டியிருக்கிறது. அதுவும் தனியொருவனாய் அவதியுறுவது சிரமம்.
செய்ய வேண்டிய வேலைகள் ஒரு புறமிருந்தாலும் இந்த
ஆட்கள் வரவினைக் கணக்கிடுவது என்பது ரொம்பவும் கஷ்டமாய்த்தான் இருக்கிறது. கண்டிப்பாய்
வருவார்கள் என்று நினைப்பவர்கள் ஆப்ஸென்ட் ஆகி விடுகிறார்கள். இது எங்க வரப்போகுது
என்று எண்ணியவர்கள் ஜம்மென்று வந்து நிற்கிறார்கள். அப்டி இப்டிக் கூட்டிக் கழிச்சாலும்
சாப்பாட்டுக்கு இவ்வளவு, டிபன் இத்தனை பேர் என்று கேட்டரிங்கிற்கு உறுதி சொல்வதில்
தடுமாற்றம் வந்துதான் விடுகிறது. கூடச் சொல்லி ஆட்கள் வராமல் போனாலும், இத்தனை இலை
முடிஞ்சிடுச்சுன்னு கணக்குச் சொல்லியாகிறது. நாம் சொன்ன எண்ணிக்கையைத் தொட்டு விட்டாலும்,
அதிகமா இத்தனை சாப்பாடு போயிருக்கு...என்று
சீட்டு வருகிறது. எதை நம்புவது? என்னவோ சொன்னதுதான், கொடுத்ததுதான். நிதியை மனதில்
கொள்ளாமல் உருவி உருவிக் கொடுக்க வேண்டியதுதான். சதுர்த்திக்கென்று குட்டிக் களிமண்
பிள்ளையார் இருநூறு, முன்னூறு என்று விற்பதில்லையா? எருக்கம் மாலையும், அருகம்புல்லும்
ஃ.ப்ரீ....- அந்தக் கதைதான்.
என்னங்க...தாம்பூலப்பை கொஞ்சம் மிஞ்சிப் போச்சே...என்ன
செய்றது?
அங்கென்னடான்னா இத்தனை சாப்பாடு போயிருக்குங்கிறாரு
சமையல்காரர். நீ என்னடான்னா மிஞ்சிப்போச்சுங்கிறே...எது சரி? அப்போ வந்து போறவங்களுக்கு
சரியா தாம்பூலப்பை கொடுத்தாகலைன்னு சொல்லலாமா? அதானே? சமையல்காரர்கிட்டே போய் ஒத்தைக்கு நிக்க முடியுமா?
பெண்களே இப்படித்தான் அவர்களுக்கு வேண்டியவர்களை விழுந்து விழுந்து கவனித்து அனுப்புவார்கள்.
மற்றவர்களை விட்டு விடுவார்கள். எனக்கு வேண்டியவர்கள் எத்தனை பேர் வாங்காமல் போனார்களோ?
ஏம்ப்பா...வாசல்ல தாம்பூலம் கொடுத்தனுப்புறதுக்குன்னு
ஒராளை ப்ராம்ப்டா நிக்க வைக்க மாட்டியா? சிலபேர்
கூச்சப்படாம அவங்களே சாக்குக்குள்ள கையைவிட்டு எடுத்துண்டு போயிடறாங்க...எல்லாராலும்
அப்படி முடியுமா? கேவலமா, தப்பா நினைக்கிறவங்களும் இருப்பாங்கல்ல....? இப்போது இதுதான்
நடந்திருக்கிறது.
அட...இதுக்குத்தான் இவ்வளவு யோசனையா இருந்தியா?
உறவுகள்தான் சுத்திவர இருக்காங்களே...அவ்வளவு ஏன்...நம்ப அபார்ட்மென்ட்லயே கொடுத்தாலும்
தீர்ந்தது. யாரும் தேங்காய் வேண்டாம்னு சொல்லப் போறதில்லே..சட்னிக்காச்சுன்னு வாங்கிக்கிடுவாங்க.....ரெண்டு
மூணுன்னு தள்ளி விட்டிடு....சந்தோஷமா வாங்கிட்டுப் போறாங்க...!
என் தங்கையின் திருமணத்தின் போது வாசலில் தாம்பூலம்
கொடுக்க ஆளே இல்லாமல், அதற்கென்று நிறுத்தியவர்களும் உள்ளே-வெளியே என்று இருந்ததில்
பலரும் பை வாங்காமலே போய், ரெண்டு சாக்குகளில் இருந்த நிறையத் தாம்பூலப் பைகள் மிஞ்சிப்
போயின. தேங்காய்கள் அத்தனையையும் பிரித்து ஒரு தனிச் சாக்கில் போட்டு, வழக்கமாய் வாசலில்
தேங்காய் விற்க வரும் ஆளிடம் அவன் கேட்ட விலைக்குக் கொடுத்துத் தள்ளி விட்டேன். சந்தோஷம்
தாங்கலை அவனுக்கு. எவன் தர்றான் இவ்வளவு குறைஞ்ச ரேட்டுக்கு என்று அள்ளிக் கொண்டு போய்விட்டார்.
அந்தளவுக்கு இப்பொழுது மிச்சமில்லைதான். இதை தானம் கொடுத்து சமாளித்து விடலாம்தான்.
ஒரு விசேடத்தில் தவறவிட்டவைகளை இன்னொன்றில் ஓரளவாவது
சரிசெய்து விடுகிறோம்தானே? இது ராகினி அவளாய் இழுத்து விட்டுக் கொண்டது. நான் சொன்னது
நூற்று ஐம்பது. அவளோ இருநூறு என்றாள்.
சின்ன ஃபங்ஷன்தான்....யோசிச்சுச் சொல்லு...நான்
லிஸ்ட் போட்டு, வடிகட்டி...வடிகட்டி...இந்தக் கணக்கைக் கொண்டு வந்திருக்கேன். அன்னைக்கு
ஒர்க்கிங் டே..வேறே...பத்திரிகை கொடுத்தவங்களெல்லாம் இம்புட்டு தூரத்துக்குப் புறப்பட்டு
வருவாங்களான்னு உறுதியாச் சொல்ல முடியாது. எங்கிருந்து டாக்ஸி வச்சாலும் குறைஞ்சது
முன்னூறு ஆகும் மண்டபம் வர. போக வர என்னாச்சு?
மொய் வேறே இருக்கு. எல்லாத்தையும் யோசிப்பாங்கல்ல? பேரன் ஆண்டு நிறைவு ஃபங்ஷன்தானே...அப்புறம் வீட்டுல
கூடப் போய் பார்த்தா ஆச்சுன்னு இருக்க வாய்ப்பிருக்கு......காலம்பற ஆறரை முகூர்த்தம்
வேறே...யோசிச்சிக்கோ....-சொல்லித்தான் இருந்தேன். கேட்டால்தானே...! அவள் ஃப்ரென்ட்ஸ்
வருவதை என்னவோ நான் தடுத்தாற்போல் துள்ளினாள்.
அதெல்லாம் இல்லை....மெட்ராஸ்ல என் பழைய ஃப்ரென்ட்ஸ்
நிறைய இருக்கா...எல்லாருக்கும் ஃபோன்ல சொல்லியிருக்கேன். வாட்ஸ்அப் வேறே கொடுத்தாச்சு...கண்டிப்பா
வருவா...அவாளெல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு...வருஷமாச்சு....எனக்கு எல்லாரையும் பார்த்தாகணும்.....பேசியாகணும்....குறிப்பா
பூக்கடை எக்ஸ்சேஞச்...
அவள் தொலைபேசித் துறை. ஆனால் என்றும் எனக்கு
தொல்லைபேசியாக இருந்ததில்லை.
நல்லாப் பாரு, பேசு...நானா வேண்டாங்கிறேன்...கட்டித் தழுவிக்கோ...முத்தம்
கொடுத்துக்கோ... யாரு வேண்டாம்னாங்க...எனக்குத் தேவை ஆள் கணக்கு...கரெக்டாச் சொல்லு....
என்னாலேயே சொல்ல முடியாததை அவளைப் போட்டு நெருக்கினால்?
அவள் சொன்னவர்கள் அத்தனை பேரும் வந்த மாதிரியும்
தெரியவில்லை.
இத்தனை பேரைக் கூப்டியே...வேலக்காரம்மாவ மட்டும்
கூப்பிட உனக்கு வாய் எங்க போச்சு...? -நேரம் பார்த்து கொக்கியைப் போட்டேன்.
நீங்க சும்மா இருங்க...உங்களுக்கு ஒண்ணும் தெரியாது....
- ஒரே பேச்சில் என் வாயை அடக்கி விட்டாள். ஆனாலும் எனக்கு மனசு கேட்கவில்லை.
மூணு வருஷமா நம்ம வீட்ல வேலை செய்றாங்க...ஒரு வார்த்தை சொல்றதுல
என்ன தப்பு? அட...பத்திரிகை கூடக் கொடுக்க வேண்டாம்...வாயால சொன்னாக் கொறஞ்சு போவியா?
அவங்களும் பிள்ள குட்டிகளோட வந்து சாப்டுட்டுப் போறாங்க...என்ன நஷ்டம்?
அவங்கள நான் கூப்பிடப் போறதில்ல...அவ்வளவுதான்.
அதுக்கு மேலே கேட்காதீங்க....
தப்புடீ...அப்டியிருக்கக் கூடாது. அவங்களும்
ஒரு குடும்பஸ்தங்க...மூணு குழந்தைகளுக்குத் தாயார்...வீட்டுல பேரனக் தூக்கக் கூடாதுன்னு
கண்டிஷன் போட்டுட்டீங்க...அதுவே தப்பு....அவங்க மனசு என்ன பாடு பட்டிருக்குமோ...அந்தம்மாவும்
அதையெல்லாம் பொருட்படுத்தாம, தள்ளி நின்னு கொஞ்சிட்டுப் போகுது...மனசுக்குள்ள எதாச்சும்
நினைச்சிடுச்சின்னு வச்சிக்கோ...அது நம்ப குழந்தையைத்தான் பாதிக்கும்...ஞாபகமிருக்கட்டும்...ஒருத்தர்
மனச இப்படியெல்லாம் சங்கடப்படுத்துறதுங்கிறது சரியில்ல...எல்லாரும் மனுஷாதானே...ஒரே
மாதிரி உணர்ச்சிகள்தானே? இப்டியெல்லாமா வித்தியாசம் பார்க்கிறது? - நானும் மனதில் தோன்றியதையெல்லாம்
கேட்டு விட்டேன். ராகினி மனது இரங்கவேயில்லை.
ஏதாவது செய்யப் போய் மருமகளின் வாயில் விழ வேண்டி
வந்தால் என்ன செய்வது என்று கூட யோசித்திருக்கலாம்.
“அவங்க பல வீட்ல வேலை செய்திட்டு வர்றவங்க...அதே
கையோட வேர்க்க விறு விறுக்க வருவாங்க...டிடெர்ஜென்ட் படிஞ்சிருக்கும்...அந்தக் கையால
குழந்தையை எடுக்க, ஏதாச்சும் இன்ஃபெக் ஷன் ஆச்சுன்னா...?”
புதிதாய்த்தான், புதிராய்த்தான் இருந்திருக்கும் ராகினிக்கும்...இப்படியெல்லாம் கூடப்
பார்க்க முடியுமோ? அந்தந்த வீட்ல வேலை முடிச்சி வரச்சே...கையை நன்னா சோப்புப் போட்டு
அலம்பிட்டுத்தானே வருவாங்க....நமக்கென்ன வந்தது
வம்பு..பேரனே ஆனாலும் ஒரு லெவலுக்குத்தான்...என்று தோன்றி விட்டதோ என்னவோ? அவா குழந்தை,
அவா சொத்து.....நாளைக்கு அப்டியாச்சு...இப்டியாச்சுன்னு நம்மளை ஏதும் சொல்லிடப்படாது....என்கிற
ஜாக்கிரதை உணர்வு?
அதெல்லாம் சரின்னு கூட வச்சிக்கோ...அது உங்க
பிரியம்...அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அவுங்க பாட்டுக்கு வரப் போறாங்க...இருந்து
சாப்டுட்டுப் போகப் போறாங்க...நமக்கென்ன நஷ்டம்..?
என்னவோ தெரியவில்லை. என் பேச்சு அவள் மண்டையில்
ஏறவில்லை. எல்லாத்தையும் ஓடி ஓடிச் செய்யணும். ஆனா எங்க வார்த்தையை ஒரு சொல் கேட்டிறக்
கூடாது...அப்படித்தானே? வெறுமே பாடாப் படுறதுக்கு மட்டும்தான் நானா? - சற்று ஓட்டியும்தான்
பார்த்தேன். மசியவில்லை.
ஆனது ஆச்சு....ஃபங்ஷன் நல்லபடியா முடிஞ்சது...அதுவே
பெருத்த நிம்மதி. இனி இப்போதைக்கு வேறே பெரிய எடுப்பன்னு எதுவுமில்லே....அப்பாடா....!
என்று சற்று ஓய்ந்தேன் நான்.
அந்தக்
கணத்தில்தானே இது கண்ணில் பட்டு மனசை உறுத்துகிறது? இவள் எதுக்கு மூஞ்சியைத் தூக்கி
வைத்துக் கொண்டிருக்கிறாள்? தூக்கி வச்சிக்கிட்டு இருக்காளா அல்லது சாதாரணமா அமைதியாத்தான்
இருக்காளா? ரெண்டும் ஒண்ணாத்தான் தெரியுது....இத்தனை வருஷம் வாழ்ந்தும் இதை வித்தியாசப்படுத்திப்
புரிஞ்சிக்க முடியலை.....! என்னத்தச் சொல்ல...?
ஏங்க ஒண்ணு கவனிச்சீங்களா....? - உள்ளே வேலை
ஓடாமல் உறாலில் இருந்த என்னிடம் வந்து டக்கென்று நின்றாள் ராகினி.
அப்பொழுதுதான் நாலஞ்சு நாள் படிக்காத பேப்பரை
எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன் நான். காசு கொடுத்து வாங்குறமே...செய்திகள்
வீணாப் போகாதா? படிச்சாத்தானே ஆச்சு....‘! படிச்ச பிறகு எழுத்து மறைஞ்சாக் கூடப் பரவால்ல...!
என்ன? என்றவாறே தினசரியிலிருந்து முகத்தை விலக்கினேன்.
எதையோ சொல்லத் தயங்குவதுபோல் நின்றாள்.
திடீர்னு வந்தே...இப்ப கம்முன்னு நின்னுட்டே...?
என்ன விஷயம் சொல்லு.....!
இல்ல......மனசுக்கு ரொம்ப சங்கடமாப் போயிடுச்சு....அதான்...சொல்லுவமா
வேண்டாமான்னு....
எதை.....? எல்லாம் நல்லபடியாத்தானே நடந்தது....யாராச்சும்
மொய் எழுதாமப் போயிட்டாங்களா? அப்டீன்னா கோபமில்ல வரணும்? சங்கடமாயிருக்குங்கிறே? நமஸ்காரம்
பண்ணி ஆசீர்வாதம் வாங்க யாரேனும் விட்டுப் போச்சா? வித்தியாசமில்லாம எல்லார் கால்லயும்தானே
விழுந்தோம்...நம்ப வயசுக்கு அதுவே ரொம்ப ஜாஸ்தி....! பேரன் ஆண்டு நிறைவுக்கு இத்தன
பேர் கால்ல விழுந்தது நாமளாத்தான் இருக்கும்...!
உங்களுக்கு எல்லாமே கிண்டலும் கேலியும்தான்....அதெல்லாம்
கெடக்கட்டும்....பஞ்சவர்ணம்....
ஆமா...பஞ்சவர்ணம்....அவங்களுக்கென்ன...? உடம்பு
கிடம்பு சரியில்லாமப் போயிடிச்சா....?
அட அதில்லீங்க...அவங்க வந்தி்ட்டுப் போனத..........!
ஓ!...அதச் சொல்றியா....? ஆமாமா...நானும்தான்
கவனிச்சேன்....அதுல இன்னொண்ணையும் கவனிச்சேன்...அத நீ கவனிச்சியா தெரில.....?
என்னத்தக் கவனிச்சீங்க..?பெரிய்ய்ய்ய புத்திசாலி
கணக்கா...?
புத்திசாலியோ இல்லையோ...அனுபவசாலி...அத நீ மறுக்க
முடியாது...அவுங்க மட்டும்தான் வந்திருந்தாங்க....மூணு குழந்தைகள்ல ஒண்ணக் கூடக் கூட்டிட்டு
வரல......எப்டிப் பார்த்தியா?
அது மட்டும் இல்லீங்க...இன்னொண்ணை நீங்க பார்க்கலியே...?
செலவத்தான் நீங்க பார்ப்பீங்க...வரவு உங்க கண்ணுலயே படாது.....
பின்ன? செலவு செலவாயிருக்கணுமேயொழிய விரயமாயிடக்
கூடாதுல்ல...அதுனாலதான் கவனமாயிருக்கேன்...அப்டி நீ என்ன பார்த்தே...அதத்தான் சொல்லேன்....
- சொல்லியவாறே அவளை அருகில் அமரச் சொன்னேன்....
உட்காரெல்லாம் முடியாது. எனக்கு வேலையிருக்கு...அந்தம்மா
ஐநூறு ரூபா ஓதி வச்சிட்டுப் போயிருக்காங்க...அதத்தான்
சொல்ல வந்தேன்.....எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து....!
அப்டிப் போடு அறுவாள...? ஆஉறா.....ரூபாயால அடிச்சிட்டாங்களா
நம்மை....? பார்த்தியா...பஞ்சவர்ணம் அஞ்சு வண்ணத்தையும் நம்ம முகத்துல ஈஷிட்டாங்க....இதுக்குத்தான்
அன்னைக்கே சொன்னேன்...அந்தம்மாவையும் கூப்பிட்டுடுன்னு...நீ கேட்கலை.....என்னவோ பெரிய
கௌரவம் பார்த்தே....! அது இதுன்னு உளறினே...! இப்பப் பார்த்தியா...நாம முகத்தை எங்க
கொண்டு வச்சிக்கிறது?
அது மட்டுமில்லீங்க..போகும்போது அவ சொன்னா...நம்ப
வீடு...நம்ப கொழந்தை...கூப்பிடாட்டி என்னம்மா...எம்புட்டோ வேலைல மறந்திருப்பீங்க...நம்ப
பஞ்சவர்ணம்தானே, சொல்லியா வரணும்னு நெனச்சிருப்பீங்க...விட்டுக் கொடுத்திற முடியுமாம்மா...!
ன்னாங்க....என்ன பெருந்தன்மை பார்த்தீங்களா....? பெரிய்ய்ய்ய மனசுங்க....
சொல்லும்போதே ராகினியின் கண்கள் கலங்கியிருந்தன.
உண்மையும், சத்தியமும், உழைப்பும் அதைப் பொதிந்து வைத்திருக்கும் அன்பு மனமும், என்றும் ஈரத்தோடிருப்பவை. .அவை எழுப்பும்
உணர்வலைகள் அப்படித்தானே இருக்க முடியும்?
காலையிலிருந்து மாலைவரை பத்து வீட்டில் அடுத்தடுத்து
என்று நாளெல்லாம் வேலை செய்து உழைத்து சம்பாதித்து
மானத்தோடு ஜீவிக்கும் இம்மாதிரிப் பலரால்தானே இந்த உலகம் இன்னும் விடாது இயங்கிக் கொண்டிருக்கிறது.
இங்கே இன்னும் மழை பெய்கிறதென்றால் எதனால்? யாரால்?
இப்போ தெரியுதா... எது உண்மையான கௌரவம்னு.....?
- என்றேன் அவளைப் பார்த்து.
----------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக