13 ஜூன் 2021

“சுதந்தர பூமி” - நாவல் - By இந்திரா பார்த்தசாரதி - வாசிப்பனுபவம் - கட்டுரை

 

சுதந்தர பூமி” - நாவல் - By இந்திரா பார்த்தசாரதி -





     1960 க்குப் பிறகு வாசகர்களுக்கு அறிமுகமான சில முன்னணிப் படைப்பாளிகளில் இந்திரா பார்த்தசாரதி முக்கியமானவர்.   இவரது “Heஉறலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன“ நாவலைப் படித்துவிட்டு ஜெட் விமானங்கள் கீழே இறங்கி விட்டன என்று தலைப்புக் கொடுத்திருக்கலாம் என்று தி.ஜா அவர்கள் பாராட்டினார். அத்தனை வேகம் இவரது எழுத்தில். அந்த நாவலை அப்படிப் புகழ்ந்து பாராட்டினார் தி.ஜானகிராமன். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத, புதிய உற்சாகத்தைக் கொடுக்கும் நாவல் அது.

     அதற்கு இணையாக அவரது அரசியல் நாவல்கள் பலவும் புகழ் பெற்றவை. பணி நிமித்தம் டெல்லியில் சில காலம் இருந்தவர் என்பதாலும், பல முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் அறிமுகத்திலும் பழக்கத்திலும், இந்த நாவல் அவரிடம் உருப்பெற்றிருக்கின்றன எனக் கொள்ளலாம். எதானாலும் சுவைப குன்றாமல் சொல்ல முடியும் என்பதே இவரது திறமை.

     இந்த நாவலைப் பொறுத்தவரை நான்கைந்து கேரக்டர்கள்தான். டெல்லிக்கு வேலை தேடிச் செல்லும் ப்ரொபசர் முகுந்தன். அவன் சந்திக்கும் அரசியல்வாதி மிஸ்ரா. எதற்கும் துணிந்த பெண்மணியான டாக்டர் சரளா...இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். டாக்டர் சராளாவின் பேச்சு, நடவடிக்கைகளைக் கண்ணுறும்போது நமக்கு கொஞ்ச காலத்திற்கு முன் அதிகமாக அடிபட்டாரே நீரா ராடியா என்றொரு பெண்மணி...அவரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிரதமராக வரும் பாத்திரம் ஒரு பெண்மணியாக வரிக்கப்படுவதால் இந்திராகாந்தி காலத்துக்கு கதை என்றும் கொள்ளலாம்.

     கதாநாயகன் டெல்லிக்கு வேலை தேடிப் போய் மி-ஸ்ராவிடம் சமையல்காரனாகி, அவருக்குக் காபி கலந்து கொடுப்பதிலிருந்து படிப்படியாக அரசியல் சதுரங்க விளையாட்டில் அவன் எப்படி பங்கு பெறுகிறான் அல்லது பங்கு பெற வைக்கப்படுகிறான் என்று வளர்ந்து, கடைசியில் மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவது வரை கதை  விறுவிறுப்பாகச் சொல்லப்படுகிறது. இதில் வரும் உரையாடல்கள் கதை தொடராக வெளிவந்த காலத்தில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது என்று அறிகிறோம்.

     ஒரு குறுகிய எல்லையை வகுத்துக் கொண்டு ஓர் இனத்தையே முட்டாளாக்கி அரசியல் லாபத்தை அனுபவித்து வரும் ஒரு ஃப்யூடல் கட்சியை எத்தனை நாள்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? என்று இதில் வரும் பிரதமர் கவலைப்படுகிறார். நீங்கள் சொல்வது புரிகிறது...தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் எதிர்நீச்சல்  போட்டு வெற்றி காண்பது என்பது ஒரு பகீரதப் பிரயத்தனம்தான் என்கிறான் முகுந்தன்.

     பகீரதப் பிரயத்தனமல்ல. தமிழ்நாட்டு பிரக்ஞைபற்றிய வரலாற்று ரீதியான சமூகவியல் பிரக்ஞை வேண்டும். தாழ்வு மனப்பான்மையினால் கஷ்டப்படுகிறார்கள் தமிழர்கள்..இவர்களைத் திருப்திப்படுத்த சின்னச் சின்ன விஷயங்களே போதும்...இந்தளவுக்குப் புரிந்து கொண்டு மாற்றுக் கோஷங்கள் கொடுத்தால் நிச்சயமாக வெற்றி அடையலாம் என்று யோசனை சொல்லப்படுகிறது.

     முகுந்தன் மிஸ்ராவால் எவ்வாறு படிப்படியாக மாற்றப்படுகிறான் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

     உனக்குக் கீழே இருக்கின்றவர்களை விரட்ட வேண்டும். கண்ணியம், கூச்சம், ஆகியவற்றை ஒதுக்கி வைப்பதுதான் முன்னேறி வரும் ஒரு அரசியல்வாதிக்குத் தேவை. அப்பொழுதுதான் ஒரு இயந்திர ரீதியான, ப்ரொஃபஷனல் அரசியல்வாதியாக நீ இருக்க முடியும்...நாட்டுக்குப் பணி செய்ய வேண்டும் என்ற லட்சியப்பூர்வமான காந்தியுகத் தாரக மந்திரங்களை மறந்து “அரசியல் ஒரு உத்தியோகம்” என்ற உண்மையைச் சந்திக்க உன்னைத் தயார் செய்து கொள்...-என்று உபதேசிக்கிறார் மிஸ்ரா.

     யோசிக்கிறான் முகுந்தன். அமெரிக்காவில் அரசியலை ஒரு உத்தியோகம் என்கிற ரீதியில்தான் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.லட்சியப் போர்வைகள் இல்லை...இதனால் மக்களுக்கும் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க வேண்டுமென்று தெரியும்.இதனால் இரு சார்பிலும் ஏமாற்றம் கிடையாது. பார்க்கப்போனா் தமிழ்நாட்டிலும் அத்தகைய அரசியல் சூழ்நிலை உருவாகித்தான் கிடக்கிறது. மந்திரிகளின், அந்த அரசியல்வாதிகளின் அந்தரங்க வாழ்க்கையைப்பற்றி மக்கள் கவலைப்பட்டிருந்தார்களென்றால் ஆளுங்கட்சி இவ்வளவு செல்வாக்குடன் மறுபடியும் பதவிக்கு வந்திருக்க முடியுமா? இந்த நாட்டில் ஏழை ஜனங்களுக்கு நன்மை செய்கிறோமோ இல்லையோ, பணக்காரனை அடிப்பது போல் ஒரு பாவனை செய்தால் போதும், அவர்களைத் திருப்திப்படுத்தி விடலாம்.

     இந்த உரையாடல்கள் நம்மை திருப்திப்படுத்தும்தான். அதே சமயம் இதை வெறும் அரசியல் நாவல் என்று நாம் வகைப்படுத்திவிட முடியாது. இந்த நாவலில் பேசப்படும் கவலை நிறைந்த விஷயங்கள், நம் நாடு சுதந்தரம் அடைந்த நாள் முதலாய் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பவைதான். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை அங்கங்கே கேலி செய்து கொண்டே நகர்கிறார் இ.பா. “அயல்நாடு சென்று வெற்றி வாகை சூடி வரும் தமிழரே...வருக...வருக...” என்று வெறுமே மலேஷியா சென்று வரும் ஒரு அமைச்சரைப் புகழ்ந்து கோஷமிட்டு ஆர்ப்பரிக்க....எதற்கு? அந்த நாட்டோடு தமிழ்நாட்டுக்கு ஏதும் சண்டையா? என்று ஏதும் புரியாமல் அப்பாவியாகக் கேட்கிறார் மிஸ்ரா.....இங்கே இப்படித்தான் அரசியல் கேலிக்கூத்தாய் சிரித்துக் கிடக்கிறது என்று பின்னால் புரிந்து கொள்கிறார்.

     இந்திரா பாரத்தசாரதி அவர்கள் அவர் மனதில் பட்டதைச் சொல்லத் தயங்கியதேயில்லை என்பதை அவரது வெவ்வேறு நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் மூலமும், அவற்றிற்கிடையேயான உரையாடல்கள் மூலமும் நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கருத்துக்களை அவரது கட்டுரைகளிலும்  அவர் எழுதியிருக்கிறார்.

     தனது அரசியல் அபிலாஷைகளுக்கு இந்தத் தமிழ் இளைஞன் நன்கு பயன்படுவான் என்று ஆ ரம்பத்திலேயே புரிந்து கொள்ளும் மிஸ்ராவும், அவரை அணுகியே தன் அனுபவங்களைப் பெருக்கிக் கொண்டு தெளிவடையும் முகுந்தனும், இவர்களின் விளையாட்டை உடனிருந்தே கண்காணித்து, கூடப் பயணித்து பயனடையத் துடிக்கும் டாக்டர் சரளாவின் பங்களிப்பும்....நாவலுக்கு மிகுந்த சுவையூட்டுகின்றன.

     கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கட்சிக் கொடிகளோடு சேர்த்துக் காற்றில் பறக்கவிட்டு அரசியல் நடத்திக் கொண்டு இருப்போரே இந்நாவலின் இலக்கு என்ற முக்கியமான இப்புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பு கவனிக்கத் தக்கது. அந்தப் பின்னணியில் அழுத்தமும், சிந்தனையாழமும் கொண்ட  அற்புதமான நாவல் இது என்று சொல்லலாம்.                                        ---------------------------

    

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...