26 ஜூன் 2021

 

                                                                     அரங்க நாடகம்                               “பானுவும்-ஜித்துவும்...”     



   
           ,  

காட்சி-1 இடம் - வீடு.  கருவேப்பிலை மரத்தடி. மாந்தர்-தாய்ப்பூனை-பானு- குட்டி-ஜித்து

தாய்ப்பூனை பானு- என்ன, காம்பவுன்ட் சுவத்தையே உத்துப் பார்த்துக்கிட்டிருக்கே...? இன்னும் பொழுது கூடச் சரியா விடியலை...? அதுக்குள்ளயும் ஏன் எழுந்தே...? (வீட்டினுள் லேசான சத்தம். யாரோ எழுந்து அடுப்படி விளக்கைப் போடுகிறார்கள்) பூனைக்குட்டி ஜித்து லேசாக நடுங்கியதுபோல் தன்னை மேலும் நன்றாக செடிக்குள் ஒடுக்கிக் கொள்கிறது. (வெளியில் உள்ள கருவேப்பிலைச் செடியை ஒட்டிய ஜன்னல் திறக்கும் சத்தம்).

பானு- என்ன...நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்...பதில் சொல்லாம இருக்கே...? (ஜித்துவின் பார்வை வாசல் காம்பவுன்ட் சுவற்றிலேயே நிலைத்திருக்கிறது.) ஓகோ...அதுவா சேதி...பால் பாக்கெட் எப்பப் போடுவான்னு காத்திட்டிருக்கியாக்கும்? அதுக்குள்ளே திருட்டுப் புத்தி வந்திடுச்சா?

ஜித்து - ம்...ம்...இல்ல....என்பதுபோல் தலையாட்டுகிறது.

பானு- குசும்பு....? ஆரம்பிச்சிட்டியா உன் வேலையை? உள்ளே ஒரு பாப்பா இருக்கு தெரியும்ல....?

ஜித்து - தெளியும்....அதுக்காக.?...எனக்குப் பால் வேண்டாமா...? நானும் பாப்பாதானே? பாப்பாக் குட்டி...

பானு - இப்பத்தான் தெரியுது...நேத்திக்கும் இந்த வேலை பண்ணினது - பாக்கெட்டைக் கடிச்சு, பாலை உறிஞ்சி காலி பண்ணினது நீதானா? அந்த அய்யா கம்பெடுத்து ஓங்கி ஒண்ணு போட்டாரே...நல்ல வேளை தப்பிச்சிட்ட...இல்லன்னா நேத்திக்கே செத்திருப்பே...! நான் பார்த்திட்டுத்தானே இருந்தேன்....!

ஜித்து - அப்போ ஏன் தடுக்கலை....? நான் அடி வாங்கணும்னு விட்டுட்டியா?

பானு - அப்டி விடுவனாடா தங்கம்....நீ என்ன செய்யப்போறேன்னே தெரியாம இருந்திட்டேன்...! நான் காம்பவுன்ட் சுவத்துல தள்ளி நின்னு அவரப் பார்த்து உர்ர்ர்ன்னு முறைச்சப்புறம்தான் பயந்து  உள்ளே போனாரு...பூனையா இது...புலி மாதிரியிருக்குது...ன்னு கூடச் சொன்னாரே...காதுல விழலியா?

ஜித்து - அடிச்சாரா உன்னையும்?

பானு - அடிக்க மாட்டாங்க...அடிக்கிற மாதிரி பாவலாதான் காட்டுவாங்க....அடிச்சு நாம செத்துட்டம்னா...நம்மள மாதிரி தங்கத்துல பூனை செய்து வைக்கணும்னு பேசிக்குவாங்க....! அதனால பயம்....

காட்சி-2 இடம் - வீடு. மாந்தர் - பால் போடும் பையன். மற்றும் ஜித்து ...பானு

 ஜித்து ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்தோடியது. காம்பவுன்ட் திட்டில் ஒரு பையன் இரண்டு பால் பாக்கெட்களை வைத்து விட்டு, கதவுக் கொண்டியை சத்தம் எழுப்பி, பால் என்று குரல் கொடுத்துவிட்டு சைக்கிளை விட்டான். அவன் நகர்ந்ததும் சற்றுத் தள்ளியிருந்த ஜித்து மெல்ல பாக்கெட்டை நோக்கி நகர்ந்தது. வாசல் கதவை யாரும் திறக்கவில்லை. சத்தம் உள்ளே கேட்டதோ என்னவோ?

பானு - இப்பத்தான சொல்லிக்கிட்டிருந்தேன். அதுக்குள்ளயுமா? சொன்னாக் கேளு...அவங்களுக்கு ஒரு பாப்பா இருக்கு தெரியுமோ? அதுக்குப் பால் வேணும். அந்த அய்யா இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திடுவாங்க...அவங்க காப்பி போட்டுக் குடிக்கணும்ல...ஓடி வா...ஓடி வா....

ஜித்து - ஏம்மா தடுக்கிறே...? எனக்குப் பசிக்குது....காலைல இந்தப் பச்சைப் பாலைக் குடிச்சா எவ்வளவு ருசியா இருக்கு தெரியுமா...? கொஞ்சூண்டு குடிச்சிக்கிறேனே...

பானு- கொஞ்சூண்டுன்னா...? அப்புறம் மிச்சப்பாலெல்லாம் வழிஞ்சி வீணாப் போகாதா? பாக்கெட் ஓட்டையாயிடும்ல......நாம வாய் வச்சிட்டம்னா அப்புறம் அவுங்க அதைத் தொட மாட்டாங்க...நம்ப முடியிருக்கும்னு பயம்....திருடித் திங்கிறது தப்புன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் உனக்கு?  கேட்க மாட்டே?

வெளிக் கதவு திறக்கும் சத்தம். வாசல் லைட் பளிச்சென்று எரிந்தது.

பானு - ஓடி வந்திடு...ஓடி வந்திடு...அடிக்கப் போறாங்க.... (ஜித்து பாய்ந்து பாய்ந்து பறந்து மறுபடி கருவேப்பிலைச் செடி பின்னால் போய் ஒளிந்து கொண்டது)

ஜித்து - போம்மா... விட்டிருந்தேன்னா ரெண்டு நிமிஷத்துல குடிச்சிருப்பேன்.

பானு -அது கூடாது. அந்தப் பாப்பாவுக்குப் பால் இல்லாமப் போயிரும். அவுங்க நல்லவங்க..அவங்களாலதான் நீ இன்னிக்கு எனக்கு இவ்வளவு அழகாக் கிடைச்சிருக்கே...நீ வயித்துல இருக்கைல அவுங்க என்னை விரட்டவே மாட்டாங்க....நான் வந்தாலே எதாச்சும் சாப்பிட எடுத்து வச்சிடுவாங்க...அம்புட்டுப் பிரியம் எம்மேலே. நன்றியோட இருக்கணும்...சரியா...? .கெடுதல் செய்யக் கூடாது. தெரிஞ்சிதா?

ஜித்து - நல்லவங்கங்கிறே...அப்புறம் கம்பால அடிச்சாரே...?.

பானு - அப்புறம் நீ திருடித் தின்னா, அடிக்காம என்ன பண்ணுவாங்க..? பாச்சாதானே காட்டினாங்க...    உனக்குப் பசிக்கு நான் கொண்டு வந்து தர்றேன்...அதத்தான் சாப்பிடணும்....

ஜித்து - நீ எங்கேயிருந்தும்மா கொண்டு வருவே...?

பானு - ஏதாச்சும் வீடுகள்லேர்ந்துதான். சில வீடுகளை நான் பழக்கம் பண்ணி வச்சிருக்கேன். அங்க போய் நின்னேன்னா எனக்குப் போடுவாங்க....அதத்தான் தினமும் நான் உனக்குக் கொண்டு வர்றேன்...நமக்கு இந்த வீடு அந்த வீடுன்னு கணக்கெல்லாம் இல்லை...எல்லா வீடும் ஒண்ணுதான்...தெரிஞ்சிதா?

ஜித்து - அது சாப்பாடுதானே...எனக்கு பால் குடிக்க ஆசையா இருக்கே...?

பானு - பால் வேணும்னா திருடியா குடிக்கிறது? அது வயித்துல செரிக்க வேண்டாமா? எங்கயும் அன்பா, சாதுவா நல்ல பிள்ளையா நடந்துக்கணும்...நல்ல பூனைன்னு பேர் எடுக்கணும்...அப்பத்தான் பிரியமா நடத்துவாங்க...அப்டிச் செய்து பார்....உன் வயிறு தானே நிறையும்...அப்புறம் எனக்காகக் காத்திட்டிருக்க மாட்டே...தினமும் நீயே உன் வயித்தை நிரப்பிக்குவே...இவங்ககிட்டயே இரு...இரக்கமானவங்க...நல்லவங்க....

ஜித்து - ஏதோ புரிந்ததுபோல் சரிம்மா...என்றது.  மனதில் அன்றொரு நாள் அம்மாவோடு பக்கத்து வீட்டு கொல்லையில் போய் நின்றதும் அவர்கள் தடவிக் கொடுத்து சாதம் போட்டதும் படமாய் ஓடியது.

காட்சி-3 - இடம்-வீடு மாந்தர்- வீட்டுக்காரர் சாம்பு, அவர் மனைவி பத்மா. கொஞ்சம் தள்ளி மோட்டார் பம்ப் அருகில் ஜித்து..  காலை நேரம் மணி ஒன்பதைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஜித்துவுக்கு பசி உயிரெடுத்தது. அழுக்குத் தண்ணீரை ஊற்ற வந்த பத்மா பூனைக்குட்டி இருப்பதைப் பார்த்துத் தயங்கி, வேறு திக்கில் ஊற்றினாள். ஜித்துவைப் பார்த்து செல்லக் குட்டீ....என்று சிரிக்கிறாள்.

பத்மா - ஏங்க இங்க வாங்களேன்...அந்தக் குட்டிப் பூனையைப் பாருங்களேன்...எவ்வளவு அழகா இருக்குன்னு...வெள்ளை வெளேர்னு பஞ்சுப் பொதியா மெத்து மெத்துன்னு....அழகாப் பெத்தெடுத்திருக்கு...

சாம்பு - சர்தான்...உள்ளே குழந்தை எழுந்திரிச்சிடப் போறான்...அத மொதல்ல கவனி.....

பத்மா - உங்களுக்கு ரசனையே கிடையாது. நம்ப குழந்தை மாதிரிதானேங்க அதுவும். முன் காலை ஊனி உட்கார்ந்திருக்கிற அழகைத்தான் ஒரு தடவை பாருங்களேன்...மொபைல்ல ஒரு ஃபோட்டோ எடுங்களேன்...நல்லா சிரிச்ச மூஞ்சி அதுக்கு....

சாம்பு - பூனைக்கு சிரிச்ச மூஞ்சின்னு இப்போ நீ சொல்லித்தான் வாழ்நாள்ல முதல் தடவையா கேட்கிறேன்...அது எப்டியும் தன் இரையைத் தேடிக்கும்...குழந்தைக்கு நாமதான் கவனிச்சாகணும்...அதுக்கு பால் கொடுக்கிற வழியைப் பாரு....இதோட மிச்சம் ரெண்டு குட்டி நாலு வீடு தள்ளி ஒரு வீட்ல அலையுது...அது தெரியுமா? இருக்கிறதுலயே பியூட்டி இதுதான்...பெரிய பூனை அங்கயும் போகும், வரும்...

ஆபீஸ் கிளம்பத் தயாராய் குளித்து, தலைசீவி, விபூதியிட்டு, சாமி கும்பிட்டு,  சாப்பிட அமர்கிறார். பக்கத்தில் கொல்லைக் கதவு வாசலில் ஜித்து.

சாம்பு - அட, நீயும் வந்திட்டியா...? உனக்கும் பசிக்குதாக்கும்.. இரு...இரு....பத்மா...அந்தப் பூனைக் குட்டி வந்திருக்கு...அதுக்கு துளி சாதத்தைப் பால்ல பிசைஞ்சு வையேன்...

பத்மா - பக்கத்துல வந்து சமத்தா உட்கார்ந்ததைப் பார்த்ததும் இரக்கம் வந்திடுச்சாக்கும் ஐயாவுக்கு...? ஜித்துன்னு அழகாப் பேர் வச்சிட்டு என்னடா அதோட ஒதுங்கிட்டீங்களேன்னு நினைச்சேன்...திரும்பவும் பாசம் வந்திடுச்சு போல்ருக்கு...

சாம்பு-...நம்மள மாதிரி அதுவும் ஒரு ஜீவன்தானே...சின்னஞ்சிறு குட்டிவேறே...அப்பாவியா உட்கார்ந்திருக்கிற அழகப்பாரு....இதோட அம்மா பிரக்னன்டா இருக்கிறபோதுதானே பால் பாக்கெட்டைக் காலி பண்ணும்....அந்தப் பால்காரன் சொல்லித்தானே அது தாய்மையா இருக்கிறதே நமக்குத் தெரிஞ்சிது. வாசல் கொண்டைப்பூ மரத்தடில, ஈர மண்ணுல வயித்தைப் புதைச்சு,புஸ்ஸூன்னு கண்ணை மூடி சுருண்டு படுத்துக்குமே...தினம் கால் லிட்டர் பாக்கெட் வாங்க ஆரம்பிச்சதே அப்புறம்தானே...அதுக்குத்தானே...?

பத்மா - ஆமங்க...அதுக்கும் அழகான குட்டி....நமக்கும் புஷ்டியா ஒரு பையன்...ஆகையினால இதப் பார்த்தா நம்ம குழந்தைதான் ஞாபகம் வரும் எனக்கு....எப்ப வந்தாலும் விரட்டவே மாட்டேன்...குட்டிய வீட்டுக்குள்ள விட்டிட்டு, அது கொல்லைல காவல் காக்குமாக்கும்...அதப் பார்த்திருக்கீங்களா? சொல்லிக் கொண்டே பால் சாதத்தை ஒரு சிறு தட்டில் கொண்டு வைத்தாள் பத்மா. அவள் கண்கள் கலங்கியிருந்தது.

 ஜித்து - அவுங்க ரொம்ப நல்லவங்க.... - அம்மா சொன்னதை கவனமாக நினைத்துக் கொண்டது பூனைக்குட்டி.ஜித்து. இனிமே  காம்பவுன்ட்ல வைக்கிற பால் பாக்கெட்டைக் குடிக்கப் போகக் கூடாது என்று அப்பொழுதே நினைத்துக் கொண்டு அந்தப் பால் சாதத்தை  நன்றியோடு ரசித்து உண்ண ஆரம்பித்தது.

                                         ------------------------------------

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...