09 ஜூன் 2021

“அறியப்படாத தீவின் கதை” - ஜோஸே ஸரமாகோ- (போர்த்துகீசிய நாவல்) ஆங்கிலம் வழி தமிழில்-ஆனந்த் - [ வாசிப்பனுபவம் - உஷாதீபன் ]

 

அறியப்படாத தீவின் கதை” - ஜோஸே ஸரமாகோ- (போர்த்துகீசிய நாவல்) ஆங்கிலம் வழி தமிழில்-ஆனந்த் - [ வாசிப்பனுபவம் - உஷாதீபன் ]



      றியப்படாத தீவு - என்ற தலைப்பே நம்மைக் கவனிக்க வைக்கிறது. அப்படியெனில் ஒரு தீவு உள்ளது என்றும், அது இப்பொழுதும் அறியப்படாமல் கிடக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். இதுவரை அறியப்படாத ஒன்றை அப்படிப் பெயரிட்டு அழைப்பதுதானே முறை.

     அப்படியான தீவு ஒன்றை அறிய முற்பட்டு ஒரு படகு வேண்டி அரசனிடம் போய் நிற்கிறான் ஒருவன். ( இங்கே முனிசிபாலிட்டியிலும், பஞ்சாயத்திலும் அல்லது மாநகராட்சியிலும் சொல்லி எந்தப் பயனும் இல்லை என்று கருதி நேரடியாக சீஃப் மினிஸ்டர் செல்-லுக்கே எழுதுவதில்லையா? அப்பொழுதுதான் காரியம் ஆகும் என்று கோரிக்கையைக் கவனத்திற்குக் கொண்டு செல்வதில்லையா?) அதுபோல அரசனிடம்தான் தன் கோரிக்கையை நேரடியாக அவரிடம்தான் சொல்ல வேண்டும் என்கிறான் அந்தப் பிரஜை. வாயிற்காப்போனிடம் சொல்லி, பிறகு கீழ்நிலைப் பணியாளனிடம் அதைப் பகிர்ந்து, அவன் மூலம் அடுத்தடுத்த படி நிலைகளைக் கடந்து கடைசியாக அரசனுக்குப் போய்ச் சேருவதுபோல, கோட்டை வாயிலில் கட்டப்பட்டிருக்கும் மணியை இழுத்து அடித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதைப்போல  என்றெல்லாம் அல்லாமல்  நேரடியாக மன்னனிடம்தான் சொல்லுவேன் என்று நிற்கும் ஒருவனை என்னதான் செய்வது?

     நாடும் சமூகமும் அளித்த பெருங்கொடையின் நிமித்தமாக அல்லது அவனுக்கென்று அளித்துள்ள சிறப்புச் சலுகைகளின் வழி அரசன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும் நிலையில், விண்ணப்பங்களுக்கான கதவுகளும் அவ்வப்போது தட்டப்படும், அந்த வாசலும் எப்போதாவது திறந்து மூடப்பட வேண்டிய அவசியம் நேரும் என்பதை உணர நேரும் இக்கட்டான நிலை. சலுகைகளையே அனுபவித்து அதிலேயே சந்தோஷித்து வாழும் அரசனின் பொறுப்பு வாய்ந்த கடமைகளுக்கும் அவ்வப்போது நெருக்குதல் ஏற்பட்டுப் போகும் என்பதுதானே யதார்த்தம்?

     அந்த விசித்திர மனிதன் கேட்பதென்ன? ஒரு படகு. எதற்காக? அறியப்படாத தீவு ஒன்றினைக் கண்டறிவதற்காக. அறியப்படாத தீவுகள் என்று ஏதுமில்லை. எல்லாமும் அறியப்பட்டுவிட்டன. வரைபடங்களை நன்றாக அறியட்டும். அதில் அப்படி ஒன்று இருக்கிறதா என்பதைத் தேடட்டும். அப்போது இந்த உண்மை புலப்படும். இது அரசனின் பதிலாக இருக்கிறது.

     அதை அந்த எளிய மனிதன் ஏற்றுக் கொள்கிறானா என்ன? அப்படி இருப்பதற்கு சாத்தியமேயில்லை. அறியப்படாத தீவு என்று ஏதேனும் ஒன்று இருந்தே தீரும்.அறியப்படாத ஒன்றின் அறிதலே இப்போதைய  என் பணி. அது என் மூலமாக முற்றுப் பெற வேண்டும் என்பதே என் கனவு. எனவே அதை அறிவதற்கு எனக்குப் படகு தந்து உதவுங்கள் என்று வேண்டி நிற்கிறான். அவனது தொடர்ந்த நச்சரிப்பின் காரணமாக மக்களின் ஆதரவுக் குரல் அதிகரிப்பதைக் கண்ணுற்று, அந்த உதவியை அளிக்காமல் அவனை அங்கிருந்து நகர்த்த முடியாது என்கிற உணர்தலில் துறைமுகத்திலிருந்து அவனுக்கு ஒரு பாய்மரக்கப்பல் படகு அளிக்க உத்தரவிடப்படுகிறது.

     அது வெகு காலத்திற்குப் பயன்படுத்தப்படாது உபயோகமின்றி சிதிலமடைந்த, பழைய படகாக இருப்பதைக் கண்டு இரக்கமுற்று ஒரு  கடைநிலைப் பணிப்பெண் உதவுகிறாள். அவன் கோரிக்கையோடு வந்து நின்ற நாள் முதலாய் அவனைக் கவனித்து வருபவள். அவன் மீது உண்டான இரக்கம் அவளை அந்த உதவிக்குத் தூண்டுகிறது. ஆனால் அவனோடு பயணிக்க எந்த மாலுமிகளும் மனமுவந்து வரச் சம்மதிக்கவில்லையே? அவனின் அந்த முயற்சியின் மீது எவருக்கும் நம்பிக்கை எழவில்லையே? பின் அவன் எப்படித் தன் பயணத்தை மேற்கொள்ளுவான்?எப்படிப் படகினை இயக்குவான்? எவரெவரின் ஒத்துழைப்பில் அந்த அறியப்படாத தீவினைக் கண்டறிவான்? கலங்கி நிற்கும் ஒவ்வொரு முயற்சியிலும் மனம் தளராது தன் சிந்தையில் அந்த லட்சியத்தைச் சுமந்து கொண்டேயிருக்கிறான் அவன்.

     அறியப்படாத தீவினை அறிய முயலுதல், அதற்காகப் படகு ஒன்று வேண்டும் என்று அரசனிடம் போய் நிற்றல், படகைப் பெறுவதற்காக துறைமுகத் தலைவனிடம் விவாதித்தல், அளிக்கப்பட்ட பழைய படகை முழுமையாகச் சுத்தம் செய்து அவன் பயணத்திற்கு உதவுகையில் அந்தப் பணிப்பெண் அவன்பால் ஈர்க்கப்படுதல், என்று வெவ்வேறு படிநிலைகளில் நாவல் புரியும் விவாதப் பயணம், அந்த மனிதனின் கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற ஆர்வத்தை நமக்கு ஏற்படுகிறது. அவனோடு சேர்ந்து நாமும் பயணிக்க யத்தனிக்கிறது. இந்த வாழ்க்கையின் உன்னதமான பயணத்தை இந்த நாவல் அடியாழமாக உணர்த்திச் செல்கிறதோ என்கிற புரிதலில் நாம் வியந்து நிற்கிறோம்.

     அன்றிரவு அவன் காணும் அரிய கனவு ஒன்றே அவனை அந்த அறியப்படாத தீவிற்கு அழைத்துச் செல்கிறது. அதில் அவனோடு  பலரும் பயணம் செய்கிறார்கள்.  விவாதித்த மனிதர்கள், கேலி செய்த மாலுமிகள், உடன் வர மறுத்த பணியாளர்கள் என்று பலர் மற்றும் நிறையப் பெண்கள் அவனோடு பயணிக்கிறார்கள். கோழி. மாடு,கழுதை, குதிரை, வாத்து என்று பலவும் அந்தப் பயணத்தில் பங்கு கொள்கின்றன. அறியப்படாத தீவினைத் தேடிக் கிளம்பிய அந்தக் கப்பலே மெய்ம்மையான அந்தப் புது உலகில் ஒரு சிறிய தீவாக  மாறிப் போகிறது. வாழ்க்கைப் பயணத்தின் புத்தம் புதிய அனுபவங்கள்.

     ...இந்தப் பயணத்திற்கு பேருதவியாய் இருந்த, அவன் மனதிற்குகந்த, அன்பின்பாற்பட்ட அந்தப் பணிப்பெண் என்ன ஆனாள்? அவளைக் காணவில்லையே? அவனோடு வந்தாளா என்றால் இல்லை. கரையிலேயே ஒதுங்கி விட்டாளே அவள்? அவன் கவனம் முழுதும் அவள் மீதே நிலைத்து விடுகிறது. அவளின் அளப்பரிய பணியை நினைத்து நெஞ்சம் உருகுகிறது. அவள் தன் பயணத்திற்குப் பேருதவியாய் இருந்திருக்கிறாள். தன் கனவுகளின், லட்சியங்களின், செயல்பாடுகளின் ஆணி வேராய் நின்று பணியாற்றியிருக்கிறாள். என் முனைப்பான முயற்சிக்குத் தன் முனைப்பாய் நின்று உதவியிருக்கிறாள். அவளோடு உயிரும், உடலுமாய் கலந்து அந்தக் கனவுலகில் பயணிக்கிறான் அவன். அதுவே அவனை வெற்றி கொள்ள வைத்து விடுகிறது.

     கப்பல் தானாகவே ஒரு தீவினைச் சென்றடைந்து விடுகிறது. உடன் பயணித்தவர்கள் எல்லோரும் இறங்கிப் போய் விடுகிறார்கள். அவன் அவளோடு, அவளுடனான கனவுகளோடு தனித்து விடப்படுகிறான். படகிற்கு வர்ணம் பூசும் நிகழ்வின்போது அந்த வண்ணங்களின் கலவையில் அந்தப் படகே அழகிய தீவாய் புதிய உருப்பெற்று விடுகிறது.

                ஒரு தீவைத் தேடிப் பயணம் புரியும் சின்னஞ் சிறு தீவு அளவிற்கான மிகச்சிறிய குறுநாவலே இது. அந்தப் பெண்ணிற்கும் ஆணிற்குமான உறவின், அன்பின் ஆழங்களை, அதன் உள்ளார்ந்த மெய்யுணர்வை ஆத்மார்த்தமாய் உணர்த்தி செல்லும் ஒரு இனிமையான பயணமாக அமைகிறது இந்தச் சிறு நாவல். அந்த ஆணோடு கலந்த அந்தப் பெண்ணின் பயணம், அவள் அவனுக்கு ஒத்துழைப்பாக இருந்து அவனை வழி நடத்திச் செல்லுதல், அவனின் பயணத்தை இனிமையாக்குதல், வாழ்க்கைப் பயணங்களில் சோர்வடையாத நிலையில் இருத்தல்...என்பதாக இந்த வாழ்க்கையின் பல படிநிலைகளை உணர்த்துவதாகவே நாம் இந்த நாவலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணோடு இணைந்து கொண்ட இந்த வாழ்வில் நம்மால் அதுவரை அறியப்படாத வாழ்வின் வெவ்வேறு விதமான அனுபவங்களை எதிர்கொள்வதும் அதன் மூலம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வதுமான மெய்யான உணர்வுகளை எய்த முடியும் என்பதாக இந்த நாவல் நமக்கு உணர்த்துகிறது என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

      இந்தச் சிறு நாவலின் முன்னுரையில் இப்படிச் சொல்லப்படுகிறது.

     “மொழி பெயர்த்தல் என்பது மற்றொரு சுயமான  படைப்பை உருவாக்கும் செயலுக்கு ஒப்பானதாகும். மூலத்திற்கு இணையானதாகவும், நியாயம் செய்வதாகவும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. ஒரு சித்திரத்தைப் பார்த்து வரையும் இன்னொரு சித்திரம் எனலாம். சில வண்ண மாற்றங்களும், வடிவ மாற்றங்களும் மூல சித்திரமாகவும், அதே நேரம் சுயமானதாகவும் இருக்க வேண்டும்”

     ஆனந்த அவர்களின் இந்த நாவலுக்கான மொழி பெயர்ப்பு அந்த உணர்வை நமக்கு முழுமையாக ஏற்படுத்துகிறது. மொழி பெயர்ப்பில் தெளிவான ஒரு வாசிப்பு அனுபவத்தை நமக்குத் தரும் சின்னஞ்சிறிய சிறப்பான நாவல் இந்த “அறியப்படாத தீவின் கதை”.

                           ----------------------------------

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...