குட்டி இளவரசன் - அந்த்வான் து செந்த்-எக்சுபெரி-பிரெஞ்ச்
நாவல்-தமிழ் மொழி பெயர்ப்பு-வெ.ஸ்ரீராம் மற்றும் ச.மதனகல்யாணி.
இந்த
நாவலைப் படிக்காவிட்டால் ஏதேனும் பழி பாவத்துக் ஆளாக நேரிடுமோ என்கிற அளவுக்குத் தோன்றிப்
போனது மனதில். பயம் பிடித்துக் கொண்டது. குட்டி இளவரசன் படிச்சிருக்கீங்களா...? என்று
யாரேனும் கேட்கப் போக...இல்லையே....! என்று வாயைப் பிளக்க...கேவலமாகிப் போனால்....?
அந்த முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வது?
ஒரு
வழியாய் ஒரு முறைக்கு ரெண்டு முறை படித்தாயிற்று. ஆனால் பலரும் பலமுறை படித்ததாகவே
இதைச் சொல்கிறார்கள். ஒரு பிரபலமான, மதிப்பிற்குரிய எழுத்தாளர், தான் ஆயிரம் தடவைக்கு
மேல் இதைப் படித்திருப்பதாக வேறு சொல்கிறார்.
என்னடா....து...!
என்று குற்றவுணர்ச்சி தாளாமல் நானும் எடுத்துப் படித்துத்தான் விட்டேன். வாங்கி வருஷக்
கணக்காயிற்று....அப்படி எத்தனையோ உண்டு என்று வையுங்கள். இன்னும் கிடக்கிறது பலதும்...ஈஸ்வரோ
ரக்க்ஷது.
பெரும்பாலும்
மொழி பெயர்ப்புகளில் அந்தந்தக் கதா பாத்திரங்களின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு
நகர்வது என்பதே மிகுந்த சிரமம். குறிப்பாக ஆணா, பெண்ணா என்று பளிச்சென்று தெரியாத பெயர்களாக இருக்கும். இடப் பெயர்கள்
வேறு நெருடிக் கொண்டேயிருக்கும். இதையும் தாண்டி மொழி பெயர்ப்பு வரிகள் அது கதை என்பதை
உணர்த்தாமல், ஏதோ கட்டுரை போல் அல்லது தகவல் அட்டவணை போல் நகர்ந்து கொண்டிருக்கும்.
இதையெல்லாம் தாண்டி பிடிவாதமாய்ப் படித்து விடுகிறோம் என்று வையுங்கள்...படித்த சில
நாளில் மறந்தும் போகும்....
இப்படியான
ஆபத்துக்களெல்லாம் மொழி பெயர்ப்பு நாவல்களில் உண்டுதான். அதுக்குத்தான் பல முறை படிக்கணும்
போலும். இதற்காகவே அப்படியே மொழியைப் பெயர்த்து எடுக்காமல், அந்த எழுத்தாளருக்கு என்று
படிந்து போன தமிழ் எழுத்து நடையில் சிலர் வேற்று மொழி நாவல்களை மொழியாக்கம் செய்து
உலவ விட்டிருக்கிறார்கள். இந்த வாக்கியம் தமிழில் இருந்தால் எப்படியிருக்கும் என்று
கற்பனை செய்து கொண்டு அவருக்கான கதை நடையிலேயே, பேச்சு மொழியில், பெயர்ப்பைக் கொடுத்துள்ளார்கள்.
எனக்கென்னவோ இங்கில்லாத எழுத்தா, எழுத்தாளர்களா என்று தோன்றிக்கொண்டேயிருக்கிறது.
இந்த
நாவலின் வெ.ஸ்ரீராம் மற்றும் மதன கல்யாணி மொழி பெயர்ப்பு வாசிப்பதற்கு சுலபமாக, நாவலின்
போக்கை எளிமையாய்ப் புரிந்து கொள்ளும் வண்ணம் இருக்கிறது என்பதை நாம் சொல்லித்தான்
ஆக வேண்டும். ஏற்கனவே வெ.ஸ்ரீராமின் மொழி பெயர்ப்பில் “அந்நியன்“ நாவலைப் படித்த அனுபவம்
உண்டுதான். அதன் பின்புதான் அவரின் மொழி பெயர்ப்பைப் பார்த்து, க்ரியாவின் புத்தகங்களை
வாங்க நேரிட்டது. நிறையப் பதிப்புகள் வந்திருக்கிறது. வர வரத் தீர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது.
ஓரு
சிறுவன் விமான ஓட்டியாக மாறுகிறான். அவனே
இந்தக் கதையைச் சொல்லிச் செல்கிறான். விமான ஓட்டியாக மாறுவதற்கு முன்பு அவனிடம் இருந்த
திறமை ஓவியம் வரைதல். அதைப் பெரியவர்கள் உணராமல் இதெல்லாம் உதவாது என்று அவனைக் கேலிக்குள்ளாக்கி,
உபயோகமாய்ப் பாடங்களில் கவனம் செலுத்துமாறு
அறிவுறுத்துகிறார்கள். அதற்குப் பின் அவன் விமான ஓட்டியாக மாறுகிறான். அவன் ஓட்டிச்
சென்ற விமானம் பல ஆயிரம் மைல்கள் தூரத்தில் சென்று சகாரா பாலைவனத்தில் விழுந்து விடுகிறது.
அங்கு தனிமைப் பட்டுக் கிடக்கிறான். விமானத்தைப் பழுது பார்க்கும் வேலையில் இறங்குகிறான். அவனை ஒரு குரல் அழைக்கிறது. அதுதான் குட்டி இளவரசன்.
கோள்
எண். பி612 கிரகத்திலிருந்து வருவதாக அவன் கூறி, எனக்கு ஒரு ஆடு படம் வரைந்து கொடு
என்று கேட்கிறான். அவன் எப்படி அங்கு வந்தான். வலசை வரும் காட்டுப் பறவைகளைப் பயன்படுத்திக் கொண்டு அங்கு வந்திருக்க வேண்டும்.
சின்னஞ்சிறிய கிரகத்திலிருந்து பறந்து இங்கு வருவதற்கான காரணம்தான் என்ன என்கிற யோசனையில் தான் பிரியமாய் நினைத்திருக்கும் மலரை, வரைந்து
கொடுக்கும் ஆடு மேய்ந்து விட்டால்? என்று நினைத்து பயப்படுகிறான். ஒரு சின்னஞ்சிறிய
வீடு அளவே உள்ள அந்தக் கிரகத்திலிருந்து ஒரு நாளைக்கு 44 தடவைகள் தான் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்திருப்பதாகவும்
குட்டி இளவரசன் கூறுவது ஆச்சரியப்படுத்துகிறது. ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்போது சூரிய
அஸ்தமனங்கள் மனதுக்குப் பிடித்திருக்கிறது என்று கூறுகையில் அந்த அஸ்தமனங்களை நீ பார்த்தாயா?
என்ற கேள்விக்கு குட்டி இளவரசனிடமிருந்து பதிலில்லை.
ஒவ்வொரு
நாளும் அவன் சொல்லும் கதைகள் வியப்பளிக்கிறது. பவோபாப் மரங்களை ஆடு மேய்ந்து விடுமே
என்று வருந்துகிறான். அவை ஒரு யானை தின்னும் அளவினை விடவும் அதிகமானது. எனவே ஆடுகள்
மேய்வதற்கு வாய்ப்பில்லை என்று பதில் வருகிறது.
சுற்று
வட்டாரத்தில் ஆறு கிரகங்கள். 325 முதல் 330 வரை.முதல் கிரகத்தில் ஒரு அரசன். இரண்டாவது
கிரகத்தில் ஒரு தற்பெருமைக்காரன். அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். நான்காவது கிரகத்தில் ஒரு பிஸினஸ்மேன். இவனின் கேள்விகளும்
பதில்களும்தான் விசித்திரமானவை. விண்மீன்களைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். ஏன் எனில்
நான்தான் அவைகளை முதன்முதலில் இப்படி நினைத்துப் பார்த்தேன். யாருக்கும் சொந்தமில்லாத
ஒரு வைரத்தைக் கண்டால் அது உன்னுடையது. யாருக்கும் சொந்தமில்லாத ஒரு தீவைக் கண்டு பிடித்தால்
அது உனக்குச் சொந்தம். முதன் முதலில் ஒரு புதிய கருத்து உனக்குள் தோன்றினால் அது உன்னுடையது. அதுபோல் விண் மீன்கள் எனக்குச்
சொந்தம். ஏனெனில் நான்தான் அவைகளைப் பற்றி அப்படி முதலில் நினைத்தவன். அது வேறு யாருக்கும்
தோன்றவில்லை எனும்போது நான் நினைப்பதில் என்ன தவறு? ஐந்தாவது கிரகம் மிக விநோதம். அங்கு
ஒரு விளக்கேற்றுபவன். அவன் சற்றே வித்தியாசமானவனாய் வெளிச்சத்தை இந்த உலகுக்குக் கொடுப்பவனாய்க்
காண்கிறான். ஆறாவது ஒரு புவி இயலாளன். ஏழாவதாக
வந்தடைவது பூமி. அங்கே ஒரு பாம்பைக் காண்கிறான் குட்டி இளவரசன். மனிதர்களுக்கு வேர்கள்
இல்லை. அதனால் அவர்களைக் காற்று கொண்டு சென்று விடுகிறது. என்று கூறும் ஒரு மலரைச்
சந்திக்க நேரிடுகிறது. அந்த ரோஜா மலரைப் பாதுகாக்க நினைக்கிறான். அது வாடி விடுகிறது. உவமையாக்கிச் சொல்லப்படும்
இந்தக் கதை ஆசிரியரின் சொந்தக் கதையின் சாயலோ என்று நினைக்கத் தோன்றுகிறது. காதல் தோல்வியின்
அடையாளங்களை இப்படி சோகமாய் அடையாளப்படுத்துகிறாரோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை இப்படி அடையாளப்படுத்தி இந்த நாவல் வெகு கற்பனையாகப்
புனையப்பட்டிருக்கிறதோ என்று நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. இதன் உள்ளார்ந்த அர்த்தங்களை
நாமாக அடியாழத்திற்குச் சென்று உணர்ந்து கொள்வதற்காகவே திரும்பத் திரும்ப இந்நாவலை
நாம் படிக்க வேண்டியிருக்கும் என்பதே இப்புத்தகத்தைப் படித்து முடித்த வேளையில் மனதில்
தோன்றிய முற்றுப் பெறாத கருத்தாக இருக்கிறது.
---------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக