26 ஜூன் 2021

அரங்க நாடகம் , “செய்ந்நன்றி” தினமணி சிறுவர் மணி

 

அரங்க நாடகம்                                                                      ,                    “செய்ந்நன்றி”       



 
                    

காட்சி-1  இடம் - ஒரு வீடு. எதிரே ஒரு மரம்-     மாந்தர் - முத்து-காக்கை மற்றும் நீலு அணில் (மரத்தில் உட்கார்ந்திருக்கிறது முத்து. நீலு அணில் அதனருகில் ஓடி வருகிறது)

நீலு அணில்--இன்னிக்கு சீக்கிரமே போய் நின்னிட்ட போலிருக்கு....? ஏதாச்சும் கிடைச்சுதா?

காக்கை முத்து - காலைல அந்த அய்யாதான் அடுப்படிக்கு வந்து பால் காய்ச்சுவாரு. அப்பவே போயிடுவேன்.....உடனே குரல் கொடுப்பேன்.  அதுக்குள்ள வந்திட்டியா...காபி குடிப்பியா? தர்றேன்னாரு ஒரு நா....

நீலு - அய்யய்ய...காப்பியா...கசக்குமே...? அந்த நேரம் போனா...அதத்தானே கேட்பாரு...?

முத்து - அது ஒரு மாதிரி மணத்துக்கிட்டுத்தான் இருந்திச்சு...இருந்தாலும் எனக்குப் பிடிக்கல...திரும்பக் கத்தினேன்.   புரிஞ்சிக்கிட்டாரு....அவருக்கு மனசு கேட்காது...நான் போய் நின்னா...எதாச்சும் உடனே எடுத்துப் போட்டிடுவாரு....இளகின மனசு அய்யாவுக்கு. அந்தம்மாவும் அப்டித்தான்.....சிரிச்ச முகம்...எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நீலு - எதாச்சும்னா....?

முத்து - வெல்லம், பொட்டுக்கடல, நிலக்கடல....சமயத்துல எப்பயாச்சும் பாதாம்பருப்பு, முந்திரின்னு, கிஸ்மிஸ்னு போடுவாரு.....அதனால அவர எனக்கு ரொம்பப் பிடிக்கும்..... சாதமும் போடுவாரு..இருந்தா.....

நீலு - அது பழைய சோறால்ல இருக்கும்....உனக்குத்தான் பிடிக்காதே...?

முத்து - பிடிக்காதுதான்....அவுங்க ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்.. முதல் நாள் மிஞ்சின பழைய சோத்தை வீணாக்காம சாப்பிடுவாங்க...அதப் பார்த்திருக்கேன் நான். அதுல நமக்கும் கொஞ்சம் போடுறாங்களே...அது பெரிசில்லையா...அவுங்க நல்ல மனசை மதிச்சு நானும் சாப்பிட்டுக்கிறது.

நீலு - எனக்குப் பிடிக்காதுப்பா....நான் மதியம்தான் அங்க போவேன்...அந்தம்மா எனக்குன்னே மாடித் திட்டுல கொண்டு வந்து சூடா வைப்பாங்க....மணக்க மணக்க இருக்கும்...அதத்தான் நான் சாப்பிடுவேன்.....பருப்பும் நெய்யும் அப்டி மணக்குமாக்கும்...

முத்து - மாடித் திட்டுலயா...அப்போ புறா அண்ணன்லாம் வந்திடுவாங்களே...எப்படிச் சாளிக்கிறே....?

நீலு - அவுங்கள்லாம் வந்தாலும் நான் சாப்பிடைல நெருங்க மாட்டாங்க...அவங்களுக்குத்தான் தானியமெல்லாம் கிடைச்சிடுதே....

முத்து - தானியமா...அதென்னது?

நீலு - அது தெரியாதா உனக்கு? வரகு,  கம்பன்னு அந்த வீட்டம்மா சாப்பிடுவாங்க...அதுல கொஞ்சம் எடுத்திட்டு வந்து தவறாமப் போட்டிடுவாங்க.. அரிசியும் போடுவாங்க....இறைச்சு விட்டா....என்னா கூட்டம்ங்கிறே..?

முத்து - இந்தப் பகுதில புறா அண்ணன்க ஜாஸ்தி....கூட்டம் கூட்டமாத் திரியும்...பார்க்க ரொம்ப அழகா இருக்கும்...அதுக வந்து மொய்ச்சுக்கிட்டு...ஒரு பொட்டுத் தானியம் இல்லாமக் கொத்திட்டுப் போயிடும்....நானும் பார்த்திருக்கேன்....அந்தம்மாக்கு ரொம்ப தயாள குணம்....கோடை காலத்துல தண்ணி கிடைக்காம நாம கஷ்டப் படுவோம்ல....

நீலு - ஆமாமா....நானெல்லாம் குழாயடிக்குப் போயி அங்க தேங்கிக்கிடக்குறதை உறிஞ்சி தாகம் தீர்த்துக்குவேன்....ஏதாச்சும் வீட்டுக் கிணத்தடிக்குப் போய் வாளில இருக்கிற தண்ணிய உறிஞ்சுவேன்.

முத்து - எங்களுக்கெல்லாம் அந்தக் கவலையேல்ல. ஏன்னா அவரோட சம்சாரம் ஒரு சட்டில தண்ணிய ஊத்தி ஊத்தி மாடில வச்சிடுவாங்க...நாங்க போய்ப் போய்க் குடிச்சிக்கிடுவோம்...ஒரு நா கூட எங்களுக்கு தாகம்ங்கிறது கிடையாது....எழுந்தவுடனே எங்களத்தான் முதல்ல கவனிக்கும்....

நீலு - நல்ல இடமாத்தான் பிடிச்சிருக்கே....உன் பாடு கஷ்டமில்லாமக் கழிஞ்சிடுது....

முத்து - உனக்கு மட்டுமென்ன...தினமும் சூடா சாதம் கிடைக்குதுல்ல....மரத்துக்கு மரம் பட்டுப் பட்டுன்னு தாவி எத்தனை வீட்டுக்குப் போயிடுறே நீ....சமயத்துல கூட்டு, கறி, பொங்கல், வடைன்னு அமர்க்களப்படுதே உனக்கு....

நீலு - அதெல்லாம் எப்பயாச்சும்தான்....அதெல்லாம் வச்சாலும் கத்திக் கத்தி காகா...காகா...ன்னு உங்களத்தான கூப்பிடுறாங்க....நாங்க மரத்துலேர்ந்து பார்த்துக்கிட்டேயிருந்துல்ல ஓடி வர வேண்டியிருக்கு...முத்தண்ணே...நீங்க பரவால்ல...உங்க சகாக்கள் இருக்காங்களே....

முத்து - யாரு....யாரைச் சொல்றே....?

நீலு - வீட்டுக்குப் பின் பக்கம் போய்ப் பாருங்க....பெரிய வாதராட்சி மரம் இருக்குல்ல...அதுக்குள்ள முடங்கிக்கிட்டு அவுக பண்ற அட்டகாசம் தாங்க முடிலயாக்கும்....

முத்து - அப்டியா....? நான் கேட்கிறேன்....என்னன்னு பார்க்கிறேன்..... - சொல்லிவிட்டு காக்கை முத்து பறந்தது. (அந்தப் பக்கமே தான் போய் உணவு உண்ண முடியாததை ஆதங்கமாய் நினைத்திருந்த நீலு அணில், அதுக ஒழிஞ்சாச் சரி...என்று சந்தோஷமாய் அடுத்த வீட்டு மரத்தை நோக்கிப் பாய்ந்தது)

காட்சி-2 இடம் - அதே வீட்டின் கொல்லைப் புறம். மாந்தர் - முத்து.   (வாதராட்சி மரத்தில் யாருக்கும் தெரியாமல் பதுங்கியிருந்தது முத்து.   நீலு அணில் சொன்ன சகாக்கள் வருவதை எதிர்நோக்கிக் காத்திருந்தது.)

எதிர்பார்த்தது போலவே நான்கைந்து சகாக்கள் கா கா கா கா கா கா கா என்று ஒரே கூட்டமாய், இரைச்சலாய்க் கத்திக் கொண்டு மரத்தை ஒட்டிய காம்பவுன்ட் சுவரில் வரிசையாய் உட்காரவும், எழுந்து பறந்து குதிக்கவுமாய் இருந்ததைக் கண்ட முத்து எதற்காக என்று குறிப்பாய்க் கவனித்தது.எதாச்சும் இறைச்சி கிடைச்சிடுச்சோ...?  

எங்கிருந்தோ கொண்டு வந்திருந்த இறந்து போன பெருச்சாளி ஒன்றை அந்த வீட்டின் கொல்லைப் புறத்தில் நட்ட நடுத் தரையில் போட்டு அவை பறந்து பறந்து கொத்திக் குதறிக் கொண்டிருந்ததைக் கண்டு எரிச்சல் வந்தது முத்துவுக்கு. அருகில் துளசி மாடமும், அதில் போடப்பட்டிருந்த அழகான மாக்கோலமும், செம்பட்டையும், செழித்து வளர்ந்திருந்த துளசிச் செடியும்  அதைக் கும்பிட சற்று நேரத்தில் வந்து விடுமே மாமி என்று நினைத்து முத்துவுக்கு உடம்பெல்லாம் பதறியது.

கா...கா...கா...என்று இடைவிடாது கத்திக் கொண்டு அந்த இரையை நோக்கி நோக்கிப் பாயும் தன் சகாக்கள். பயங்கரமாய்க் கோபம் வந்தது முத்துவுக்கு. நாகரீகமில்லாத, மரியாதை தெரியாத ஜென்மங்கள்....

முத்து - உங்களுக்கெல்லாம் அறிவில்ல...? இந்தக் கண்றாவிய இங்க கொண்டு வந்து போட்டிருக்கீங்களே...? வீட்டுக்குள்ள... அதுவும் சாமி கும்பிடுற இடத்துல போட்டா...என்ன அர்த்தம்? திங்கறதுக்கு இதுவா இடம்? எங்கயாச்சும் ரோட்டு மூலைல மறைவா போட்டுட்டுத் தின்ன வேண்டிதானே...யார் கேட்கப் போறாங்க...? அறிவு கெட்ட ஜென்மங்களா...?

கூட்டக் காகங்களில் ஒன்று - முத்துண்ணே...பார்த்துப் பேசுங்க...எங்களுக்கு பெரிய இரை கிடைச்சிச்சு...தூக்கிட்டு வந்தோம். அது வயித்தெறிச்சலா இருக்கா உங்களுக்கு?

முத்து - இரை கிடைச்சிதுன்னா...? எங்க வேணாலும் வீசிப் போட்டு சாப்பிடுவீங்களா? கோயில் மாதிரி இடத்தை அசிங்கம் பண்ணுவீங்களா? நம்மள மதிக்கிறவங்களை பதிலுக்கு மதிக்கணும்ங்கிறது கூட உங்களுக்குத் தெரியாதா?

 இதே வீட்டுல எத்தனை வாட்டி சோறு வாங்கித் தின்னுறுக்கீங்க...? கொஞ்ச மாச்சும் நன்னி வேணாம்...வடை, பொங்கல், போளின்னு, பழம்னு வாய்க்கு ருசியா அந்தம்மா எவ்வளவு ஆசை ஆசையா உங்களுக்குக் கொண்டு  வந்து போட்டாங்க...? அப்பல்லாம் கொள்ளையடிக்கிற மாதிரி அடிச்சு அடிச்சுப் பறந்து வந்து கொத்திட்டு ஓடினீங்க?...அடுத்தவங்களுக்குக் கூட வைக்கக் கூடாதுன்னு பெரிசு பெரிசா தூக்கிட்டுப் மறைஞ்சீங்க....நம்மள நோகாமக் கவனிச்சவங்களுக்கு இதுதான் நீங்க காட்டுற மரியாதையா? அன்னமிட்ட இடத்துல அசிங்கம் பண்றதா?

காக்காய் கூட்டம் -(பல குரல்கள்)  நீங்க சொல்றபடி வெளில கொண்டு போட்டா, பூனைத் தொல்லை இருக்கு...நாய்கள் ஓடி வந்திருது வாடை பிடிச்சிட்டு...நாங்க கஷ்டப்பட்டுத் தூக்கி வந்ததைப் பறி கொடுத்திட்டு நிக்கச் சொல்றீங்களா...? இங்கன்னாதான் எங்களுக்கப் பாதுகாப்பு.....

(மரத்தில் ஒடுங்கிக் கொண்டிருந்த நீலு அணில் இதையெல்லாம் அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.கடைசியாய் முத்து என்னதான் செய்யப் போகிறது என்று அறிய அதற்கு ஆவல்)

முத்து - அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்....இது கோயில் மாதிரி. இங்க வச்சு நீங்க இந்த அசிங்கத்தைப் பண்ணக் கூடாது. நம்மள மதிக்கிறவங்களை நாமளும் மதிச்சு நடக்கணும். அதுதான் பண்பு. இப்போ எடுக்கப் போறீங்களா இல்லையா?

காக்காய் கூட்டம் - (பல குரல்கள்) முடியாது....இதுதான் எங்களுக்கு பாதுகாப்பான இடம்...வெளில எடுத்திட்டுப் போனா எங்க இரை  பறி போயிடும்....முடியாது...முடியாது...இன்னிக்குச் சாப்பாடு இதுதான் எங்களுக்கு....தினமும் வெறும் சோத்தைத் தின்னு தின்னு ருசி செத்துப் போச்சு எங்களுக்கு...இத நாங்க விடமாட்டோம்....கொழு கொழு பெருச்சாளி...யார் கொடுத்த கொடையோ...?

இதைச் சொன்ன போது அடுத்த கணம்  முத்து அங்கே இல்லை.   எங்கே போச்சு? ஆளைக் காணலை? உறா...உறா....பயந்து ஓடிடுச்சி முத்தண்ணன்....வாங்க...வாங்க...நாம சீக்கிரம் சாப்பிட்டுக் காலி பண்ணுவோம்.....மறுபடி வந்திடப் போவுது....அதோட அதிகாரம் தாங்க முடில....

சொல்லிக் கொண்டிருந்தபோதே அங்கு  திடீரென்று தோன்றிய மின்னலைக் கண் கொண்டு பார்க்க முடியாமல் என்ன...என்ன....என்னாச்சு...என்னாச்சு....எதுவோ விர்ர்ர்ன்னு காத்தடிச்ச மாதிரி இருந்திச்சில்ல... பறந்து வந்த மாதிரி இருந்திச்சில்ல....யாரோ புயல் மாதிரி சர்ர்ர்ன்னு வந்துடுட்டு மறைஞ்சிட்டாங்களே.....யார் வந்தது? நீ பார்த்தியா...நீ பார்த்தியா...? அட...யாருமே பார்க்கலியா...ஒருத்தர் கூடப் பார்க்கலியா.... - ? எல்லாமும் கே...கே...கே...என்று கத்தித் தீர்த்தன.

காட்சி-3 மாந்தர் - முத்து காக்கை மற்றும் நீலு அணில் - (வாதராட்சி மரத்தின் உயரத்தில் அடர்ந்த கிளைகளின் ஊடே இருளில் அமர்ந்திருந்தது முத்து. அருகே நீலு. )

நீலு - நல்ல காரியம் பண்ணினே முத்துண்ணா....நீ மட்டும் கழுகண்ணாவக் கூட்டிட்டு வரல்லேன்னா இந்த வெட்டிக் கூட்டம் நீ சொன்னதைக் கேட்கவே கேட்காது. இன்னிக்கு ஏதோ விசேஷம் போல்ருக்கு....வீடு பூராவும் மாக்கோலம் போட்டிருக்காங்க மாமி...பார்த்தியா? இப்டி நாள்லயா இந்த அநாச்சாரம் பண்றது? எத்தனை சொல்லியும் ஒண்ணு கூடக் கேட்க மாட்டேங்குதே...? என்னா திமிர் இதுகளுக்கு? சரியான பதிலடி கொடுத்தே....

முத்து - வேறே வழி தெரில நீலு.. இனம் இனத்தோடன்னுவாங்க...என் ஆட்களே என் சொல்லைக் கேட்காதபோது நான் என்னதான் பண்றது? ..இதுக்கு கழுகண்ணன்தான் சரின்னு சட்டுன்னு மனசுல தோணிச்சு. ரெண்டு தெரு தள்ளிப் போயி இருக்கிற  சின்னத் தோப்புல காத்திருந்தேன். அது வந்திச்சு. இந்த மாதிரி சமாச்சாரம்னு சொன்னேன்....நீ பயப்படாதே...நான் பார்த்துக்கிறேன்னு வந்திடுச்சு....கண் மூடிக் கண் திறக்கிறதுக்குள்ளே முடிச்சிருச்சு பார்த்தியா?

நீலு - இதுகளப் பாரு.....எங்க போச்சு...யார் தூக்கிட்டுப் போனான்னு கூடத் தெரியாம கத்திட்டுக் கிடக்கிறதை? முட்டாப் பிள்ளைங்க...நல்லாதாப் போச்சு....மாமிக்கு இந்த நல்ல நாள்ல நாம ஒரு நல்லதைச் செய்திட்டோம்.புண்ணியம் கட்டிக்கிட்டோம். இப்பத்தான் மனசு நிறைஞ்சது....போகட்டும்...இப்ப உடனேயே நீ இந்தக் கூட்டத்துக்கு நடுவுல போயிடாதே...உன்னைக் குதறிக் காயப்படுத்தினாலும் போச்சு...அம்புட்டும் அவ்வளவு வெறில இருக்கு....வழக்கம்போல...பஜனை மடம் சாஸ்தா வீட்டுக்குப் போயிட்டு அப்புறம் வரலாம். இப்ப எல்லாம் உன் மேலே பயங்கரக் கோபமா இருக்கும்...சரியா....?

முத்து - கரெக்ட்..அதான் சரி....இது கண்ணுல முழிக்காமக் கொஞ்சம் தள்ளி இருப்போம் இந்த நல்ல நாள்ல....யோசனை சொன்னதுக்கு நன்றி...நா வர்றேன்....சாயங்காலம் பார்க்கலாம்.... சொல்லிவிட்டுக் கண் இமைக்கும் நேரத்தில் பறந்து மறைந்தது காக்காய் முத்தண்ணன்.

அது போவதையும் கொல்லைப் புறத்தில் தூணோரமாய் மாமி வைத்திருக்கும் நைவேத்தியப் பொங்கல் சாதத்தையும் ருசி பார்ப்பதற்கு சரியான தருணம் பார்த்துக் கொண்டு மாமி வரவை எதிர்நோக்கிக்  காத்திருந்தது நீலு அணில்.

                                  -----------------------------------------------------

 

 

 

 

 

 

 

      

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...