25 மார்ச் 2021

“ரப்பர் வளையல்கள்“- சிவஷங்கர் ஜெகதீசன் சிறுகதைகள்-

 

“ரப்பர் வளையல்கள்“- சிவஷங்கர் ஜெகதீசன் சிறுகதைகள்-வாசிப்பனுபவம்-உஷாதீபன் (வெளியீடு-சிவஷங்கர் ஜெகதீசன், சாலிக்கிராமம், சென்னை-93)



      தைகள் எழுதுவதென்ன அவ்வளவு பெரிய விஷயமா? என்று நினைத்து ஆரம்பித்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அத்தனை துறுதுறுப்பு. விறுவிறுப்பு. காணும் காட்சிகள், படித்த செய்திகள், கிடைத்த அனுபவங்கள் இப்படிப் பலவற்றையும் வைத்து எழுத ஆரம்பித்தால் அவைகள்தான் கதைகள் என்று சுலபமாக உணர்ந்து ஒவ்வொரு கதையும் வெவ்வேறு விஷயங்களைத் தாங்கி வரும் வகையில் ஒரு தொகுதிக்கான கதைகளை போகிற போக்கில் எளிமையாக வழங்கிச் செல்கிறார் சிவஷங்கர் ஜெகதீசன்.

     எழுதிய கதைகளைப் புத்தகமாக்கி அவரேதான் வெளியிட்டிருக்கிறார். எந்தக் கதைக்காகவும் அதிகமாக மெனக்கெடவில்லை. காரணம் காணும் அத்தனை காட்சிகளையும், தனக்குக் கிடைத்த அத்தனை அனுபவங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்கிற துடிப்பே கதை வடிவில் அவற்றைக் கொடுத்தால் சுவையாகப் படிக்கப்படலாம் என்கிற நம்பிக்கையை அவருக்கு அளித்திருக்கிறது.  விறு விறுவென்று எழுதித் தள்ளி விட்டார். முடிவுக்காகவோ, கடைசியில் ஒரு திருப்பம் வேணும் என்பதற்காகவோ எதுவும் வலிந்து அமைக்கப்படவில்லை, மெனக்கெடவில்லை. எதுவரை சொல்ல நினைத்தாரோ அதுவரை கதையைக் கொண்டு சென்று நிறுத்தி விடுகிறார் அல்லது அந்தக் கதை தானே அங்கேயே முடிந்து போகிறது.  கதைக்குக் கதை மாறுபாடான விஷயங்களை அவர் சொல்லியிருப்பதே பாராட்டத்தக்க விஷயமாய்ப் படுகிறது.

     எந்தவித ஜோடனையுமில்லாமல் பளிச்சென்று சுருக்கமான வார்த்தைகளில் பட்பட்டென்று சொல்லி கதையை நகர்த்திச் செல்கிறார்.

     தாரா என்று ஒரு கதை. முழுக்கதையும் நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதாவின் விறுவிறுப்பு. கொஞ்சம் வார்த்தைகளில் விளையாடித் தேர்ந்தெடுத்துப் போட்டிருந்தால் அசல் சுஜாதாதான்.

     பஞ்சம் என்று தலைப்பிட்டிருக்கலாம். 2300 ம் ஆண்டில் தண்ணீர் பஞ்சம் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை. அவ்வளவு போவானேன். 2100லேயே ஏன் அதற்குள்ளாகவே தண்ணீருக்காக ஒருத்தருக்கொருத்தர் அடித்துக்கொண்டு சாகாமல் இருந்தால் சரி. இவரின் கதையில் அது நடக்கிறது.

     ஆன் லைன் ரம்மி எப்படி ஆசையைக் கிளப்பி, ஆளை உள்ளே இழுத்து அமுக்குகிறது என்பதற்கு அந்தத் தலைப்பிலேயே ஒரு கதை.

     கிணத்துக்கடவு என்று ஒரு கதை. பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் போதுமான கொள்முதலுக்கு வழியின்றி, உற்பத்தியாளர்கள் அதனை சாலையில் ஊற்றுவதும் அதனை ஊடகங்கள் படம் பிடித்துப் போடுவதும் கண்டிருக்கிறோம். அதுபோல் தக்காளி சீசனில் ஒரு கூடைத் தக்காளி பத்து ரூபாய் என்று சல்லிசாக விலை வைத்தும் விற்பனையில்லாமல் அழுகிப் போக, அது குப்பையில் கொட்டப் படும் விஷயமும் நாமறிந்ததே. கிணத்துக்கடவு விவசாயியின் இந்தப் பரிதாப நிலை கதையில் சொல்லப்படுகிறது.

     இ.எம்.ஐ கட்டுவதற்கு இப்படி ஒரு யோசனையா இருக்கிறது? என்று சற்று சந்தேகம் எழத்தான் செய்கிறது.  ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்தபோது வேலை போய், வீட்டுக்கு வாங்கிய கடனுக்கு வங்கிக்கு இ.எம்..ஐ. கட்ட முடியாமல் இருக்கும் நிலையில் கதை நாயகன் யோசிக்கிறான். தன் கிரடிட் கார்டினைப் பயன்படுத்தி ஒரு டி.வி ஐம்பதாயிரம் உட்பட்ட விலையில் வாங்க, அது குறிப்பிட்ட இடைவெளி நாட்களில் டெலிவரி என்று தேதி குறிக்க, அந்தத் தேதியும், இ.எம்.ஐ கட்டும் தேதியும் ஒன்றி வர, குறிப்பிட்ட தேதியன்று டி.வி. பர்சேஸை கான்சல் செய்து, தன் வங்கிக் கணக்கைக் கொடுத்து ரீஃபன்ட் கேட்க, அவன் கணக்கில் பணம் சேர்ந்து விடுகிறது. இ.எம்.ஐ.க்கு வழி பிறக்கிறது. 2.5.% சர்வீஸ் சார்ஜ் லாபம் என்று நண்பன் பாராட்டுகிறான்.

     பயன்படுத்தியது கிரடிட் கார்டு. இவ்வளவு தொகைக்கு பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்று அதில் ஒரு நிர்ணயம் உண்டு. அந்தத் தொகைக்கு டி.வி.வாங்கி, பின் கான்சல் செய்தாலும், அந்தத் தொகை வங்கிக் கணக்கில்தானே போய்ச் சேர வேண்டும்? அது எப்படி அந்த நபரின் சேமிப்பு வங்கிக் கணக்கில் போய்ச் சேருகிறது? அந்தக் கணக்கு எண்ணை கடையில் கொடுத்தால் அதில் சேர்த்து விடுவார்கள் என்பதை நம்ப முடியவில்லை. இப்படியிருந்தால் பலரும் இம்மாதிரிச் செய்யக் கூடுமே? என்று தோன்றுகிறது. இதை ஜெகதீசன் சற்று விளக்கினால் நன்றாய் இருக்கும்.

     குமுதத்துக்குக் கதை எழுதுவதுபோல் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. போகிற போக்கில் கதை சொல்வது, பொழுது போகவில்லை என்று கதை சொல்வது, ஜாலியாய்க் கதை சொல்வது என்று விளையாடியிருக்கிறார். எதையும் குறை என்று சொல்வதற்கில்லை. துள்ளிச் செல்லும் புள்ளி மான் போல் கதைகள் பாய்ந்து பாய்ந்து பறக்கின்றன என்று பாராட்டலாம்.

     கொரோனா கதையும் உள்ளது. வீட்டுப் பெரியவர் கொரோனா நெகடிவ் ரிசல்ட்டிற்காகக் காத்திருக்கிறார். அது போலவே கிடைக்கிறது. பாசிடிவ் என்று வந்தால் பையன் சின்னவனிடம் அனுப்பி விடுவானோ, இருப்பவர்களுக்கு சிரமமாய் அமைந்து விடுமோ என்று தனக்குள்ள ஜூரம், தொண்டைக் கரகரப்பு, வயிற்றுப் பிரச்னை என்று மகனிடம் சொல்லாமலே கழிக்கிறார். ஆனால் அது அவரையும் மீறி காட்டிக் கொடுத்து விடுகிறது. மருமகளும், மகனும் சேர்ந்து பொறுப்பாய் மருத்துவமனையில் சேர்க்கத்தான் செய்கிறார்கள். மருந்தெல்லாம் சாப்பிட்டு நினைத்ததுபோல் கொரோனாவிலிருந்தும் விடுபடுகிறார். பலரின் பெயர் சொல்லி நெகடிவ், பாசிடிவ் என்று படித்து வர, இவர் பெயர் வரும்போது ஒரு சின்ன அதிர்ச்சி...பாசிடிவ் என்று சொல்லி ஸாரி...ஸாரி என்று பிறகு நெகடிவ் என்று கூற பெரியவரின் மனம் மகிழ்ச்சியில் திருப்தி கொள்கிறது.

     பரஸ்பரம் சகஜமாகப் பழகுவதை காதல் என்று நினைத்துக் கொண்டு பழக, மனசை இழக்க, கடைசியில் காதலன் அப்படியெல்லாம் இல்லை என்று முறித்துக் கொண்டு செல்ல, ஏற்படும் துன்பவியலை விவரிக்கிறது உணர்வுகள் என்ற கதை.

     அழகைவிட குணம்தான் முக்கியம் என்று இறந்த மனைவி சொன்னதை மனதில் வைத்து வீட்டு வேலைக்காரியின் மகளிடம் மனதை இழக்கிறான் கதாநாயகன். இதைத் தொட்டுச் செல்கிறது செம்மலர் என்கிற கதை.

     குற்றத்தைச் செய்தவரை விட செய்வதற்குப் பெருந்துணையாய் இருந்தவருக்கும் தண்டனை உண்டு என்பதற்கடையாளமாய், அதற்குப் பெரும் தூண்டுதலாய் இருந்தவர் கொலை செய்யப்படுகிறார். இதை மாற்றுக் கொலை கதை சிறப்பாகச் சொல்கிறது.

     வங்கிக் கடன் வாங்கிய எளிய மக்கள் பற்பல சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களிடம்தான் வசூல் வேட்டை நடைபெறுகிறது. வீட்டில் இருந்த மிச்சத் தங்கத்தை வைத்து, தவணையைக் கட்ட முனைகிறார்கள். ரப்பர் வளையல்கள் சத்தம் எழுப்புவதில்லை. ஏழைகளின் சொல்லுக்கு மதிப்பும் இல்லை. ஆனால் விஜய் மல்லையா போன்ற பெரும் பணக்காரர்கள் கோடிகளில் கடன்களைப் பெற்று உல்லாசமாய் வாழ்க்கை நடத்திக் கொண்டு தப்பித்து வாழ்கிறார்கள். இந்தக் கருத்தை முன் வைக்கும் ரப்பர் வளையல்கள் என்ற தலைப்புக் கொண்ட கதை மனதை நெருடுகிறது.

     ஜெகதீஷின் வேகம் இன்னும் பற்பல சிறப்பான படைப்புக்களை எதிர்காலத்தில் நிச்சயம் வழங்கும் என்ற நம்பிக்கை நமக்கு இந்தத் தொகுதியின் மூலம் அளிக்கப்படுகிறது. அவரது உற்சாகம், உலகாயத நிகழ்வுகளின் மீதான் கவனம்,சாதாரண மக்களின் பாடுகள், அரசாங்கம் மேற்கொள்ளும் வெவ்வேறு நடவடிக்கைகளின் மீதான கருத்தான கவனம், மனதில் நெருடும் விஷயங்களை எப்படிச் சொல்ல வேண்டும், எதுவரை சொல்ல வேண்டும் என்கிற தீர்மானம்,  ஒரே மாதிரி விஷயங்களில் கதை சொல்லாமல், கதைக்குக் கதை வெவ்வேறு களங்களில் பயணிக்க வேண்டும் என்கிற அவரது நம்பிக்கையே நம்மை அவரை நோக்கி நிற்க வைக்கிறது. மொத்தம் 19 கதைகள் கொண்ட அவரது இந்தத் தொகுதியில் கதைக்குக் கதை படங்களையும் கொடுத்துள்ள இன்னொரு சிறப்பு எனலாம்.  அவரது அடுத்தடுத்த தொகுதிகள் அந்த வெற்றியை சுலபமாய் எட்டும் என்பதற்கான அச்சாரமாய் இந்த ரப்பர் வளையல்கள் தொகுதி விளங்குவது ஒன்றே இந்தச் சிறுகதைத் தொகுதியின் சிறப்பு.

                                --------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...