27 மார்ச் 2021

“இறும்பூது”-சிறுகதைத் தொகுதி - சத்யா G.P. -வாசிப்பனுபவம் - உஷாதீபன்

 

இறும்பூது”-சிறுகதைத் தொகுதி - சத்யா G.P. -வாசிப்பனுபவம் - உஷாதீபன்           (வெளியீடு- ஃபுட்பிரின்ட்ஸ் பப்ளிகேஷன்ஸ் பேரூர், கோவை641010)


 

      புத்தகத்தின் தலைப்பே நமக்கு உற்சாகமூட்டுகிறது. இறும்பூது. என்றால் பெருமைகொள்ளுதல் - அதுவும் நெஞ்சு நிமிர்த்தி சாதனை என்று எண்ணி சந்தோஷமும் பெருமையும் அடைதல். அதைத்தான் திரு.சத்யா இந்தத் தொகுதியில் நிரூபித்திருக்கிறார்.

      இவரது மூன்றாவது நூலான இந்தச் சிறுகதைத் தொகுதியில் பல நல்ல கதைகள் இருக்கின்றன. ஒரு தொகுதிக்கு மூன்று நான்கு கதைகள் தேறினாலே ஆஉறா, ஓகோ...என்று புகழக் கூடிய காலம் இது. பரிசுக்கதைகளாகத் தேர்வு செய்து தொகுப்பில் சேர்த்தால் அதன் சிறப்பு உச்சத்திற்குச் சென்றுவிடும்.  அந்தப் பணியை இத்தொகுதிக்காக எழுத்தாளர் சத்யா கவனமாய்ச் செய்திருக்கிறார். அதனால்தான் “இறும்பூது” என்று பொருத்தமான தலைப்பையும் கொடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

      ஓரிரு கதைகளைப் படிக்கும்போதே படைப்பாளியின் கதை சொல்லும் திறன் புலப்பட்டு விடும். அதுவே அடுத்தடுத்து என்று அந்தத் தொகுதியின் எல்லாப் படைப்புக்களையும் படித்து முடிக்கும்படி செய்து விடும். அம்மாதிரியான ஒரு பெருமையை இந்தத் தொகுதிக்கு தாராளமாய் வழங்கலாம்.

      மெத்தை வீடு....மெத்தை வீடு என்று காலம் பூராவும் ஊராரால் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் ஸ்வாமி மலை ஸ்ரீநிவாச சர்மாவின் வீட்டுக்கு உண்மையிலேயே அப்படியான ஒரு தேவை ஏற்படும்போது அந்த மெத்தை வீட்டின் மேற்கூரையை நிமிர்ந்து நோக்கும் ஸ்ரீநிவாச சர்மாவின் மனம் அப்போதுதான் நிறைவு பெறுகிறது. காரணம் தகப்பனார் மஉறாதேவ சர்மாவின் வீடாக இருந்து பெயர் பெற்ற  அந்த ஸ்தலம் அத்தனை காலம் கழித்து அப்போதுதான் உண்மையிலேயே ஸ்ரீநிவாச சர்மாவின் மெத்தை வீடு என்று அடையாளப்படுத்தப் படுகிறது. அதற்கான நியாயமான ஒரு தேவை ஏற்படும்போது மனம் பெருமையடைகிறது.

      அந்தக் காலத்தில் அம்மாதிரி இடங்களைச் சொந்தமாகக் கொண்ட நபர்களைப் பட்டப் பெயர் வைத்து அழைத்தலும் சட்டுச் சட்டென்று ஒருவரை உணர்ந்து கொள்ளவும், அவரின் பெருமை மிகு பரம்பரை வழி அவரை அறிந்து கொள்ளுதலுமான ஒரு வழக்கம் முன்னோர்களின் வழி வந்த ஒரு நியதியாக இருந்தது.

      தொழில் முறையில் அவர்கள் கடைப்பிடித்த ஒழுக்கமும், தர்மமும் அவர்களையும் அவர்கள் பரம்பரையையும் நேர்மையாய் முன்னிறுத்தின. அதனால் வாரிசுகள் அந்த நற்பெயரின் வழி நின்று முன்னோர்களின் பெருமைகளைத் தோள் ஏற்றிச் சுமந்து தங்களையும் பெருமைப் படுத்திக் கொண்டார்கள்.

      எந்தத் தொழில் செய்தாலென்ன-தொழில் சுத்தம் என்பதை மனதினில் வைத்து இயங்கினார்கள். ஒரு சின்ன சாப்பாட்டு மெஸ்தான். ஸ்வாமி மலை கோயிலுக்கு தரிசனத்திற்கு வருவோர்க்கு  தேடி வரும் இடமாக நிலைத்து விடுகிறது. வயிறு நிரம்பினால் மனது நிரம்புகிறது. நாக்கு ருசி எண்ணங்களை நிறைத்து அவர்களாலேயே அது பிரபலமடைகிறது. இடத்தின் முகவரி ஒவ்வொருவராக அப்படியே நகர்ந்து நகர்ந்து ஒரு குடும்பம் தரிசனத்திற்கென்று வரும்போது வசதியாய்த் தங்கி ஓய்வெடுத்து, ஸ்வாமி தரிசனம் செய்து கொள்ளவும், வயிற்றையும் மனத்தையும் ஆரோக்யமாய் நிரப்பிக் கொள்ளவுமான இடமாக ஸ்ரீநிவாச சர்மாவின் மெத்தை வீடு முன்னிற்கும்போது நமக்கே மனதுக்குள் ஒரு சந்தோஷம் புகுந்து கொள்கிறது. ஒழுக்க சீலமான ஒரு சிறுகதை. கல்கி சிறுகதைப் போட்டியில் இது தேர்வாகிப் பரிசு பெற்றதே இதற்கான பெருமை.

      உப்பு மாமா - என்றொரு கதை.  கடைசியில்தான் உறைக்கிறது அவர் பெயரும் சர்வேஷ் என்று. உப்பு மாமா பெயருக்கேற்றாற்போல் மிகுந்த சுரணையோடுதான் வாழ்ந்து கழிக்கிறார். அன்னபூரணி மெஸ்ஸில் சாப்பிடும் அவர் ஏன் தனியாக இருந்து காலம் கழித்தார் என்பது கடைசியில்தான் தெரிகிறது. மகனுக்காக இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளாமல் தியாக வாழ்க்கை வாழ்ந்தவர், தன் மகன் இரண்டாம் கல்யாணம் செய்து கொண்ட போது பிணக்கிக் கொண்டு தனியனாகிறார். அன்னபூரணி மெஸ்ஸின் ஓனர் சிவராமனின் பிள்ளை சர்வேஷ் சி.ஏ. படிப்பதற்காக மொத்தச் செலவையும் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தாராளமாய்ச் சொல்லும் அவர், மெஸ் செயல்படும் திட்டை ஊரிலுள்ள வீடு வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தங்க வசதியாய் விளங்கட்டும் என்று உயில் எழுதுகிறார்.

      மகனுக்குப் பாதி, தன்னை முழுக்க பாத்தியதைப் படுத்தி கடைசிவரை கவனித்துக் கொண்ட மெஸ் சிவராமனுக்கும் அவர் மகன் சர்வேஷூக்கும் பாதி என்று தாராள மனம் கொண்டு எழுதி வைத்துவிட்டுச் சாகிறார். ஆனாலும் இது அதிகம் என்று நேர்மையுள்ளத்தோடு உணரும் சிவராமன் மூணு நாள் துக்கம் கொண்டாடும் தாயாதிக்காரன் கூட நான் கிடையாதே என்கிற உறுத்தலில் ஏதோ எழுதிட்டார், நான் வேணும்னா வேண்டாம்னு மறு உயில் போட்டுடறேன் என்று உப்பு மாமாவின் மகன் ஸ்ரீநியிடம் சொல்ல....மகன் மறுத்துவிடுகிறார். அதுதான் அவரது ஆத்மா சாந்தியடையச் சிறந்த வழி...சரியாய்த்தான் செய்திருக்கிறார் என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொடுக்கிறார்.

      எங்கோ சில இடங்களில்தான் இம்மாதிரி நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அங்கங்கே நல்ல ஆத்மாக்கள் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றை நாம் கேள்விப்படும்போது நெக்குறுகுகிறோம். உப்பு மாமா போன்ற நல் மனம் படைத்தவர்களை சொந்தங்களாகக் நாம் கொண்டிருந்தால் நாம் பேரதிருஷ்டம் செய்தவர்கள். நல்ல மனம் வாழ்க....என்று நம் நெஞ்சம் வாழ்த்துகிறது. சிறந்த கருத்தோட்டமுள்ள இச்சிறுகதை நேதாஜி-பேஸ்புக் குழு நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றிருப்பது சிறப்பு.

      வீட்டுக்கொரு கதை என்றொரு சிறுகதை.   வாழ்க்கைப் பயணம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வழியில் இழுத்துக் கொண்டு போய் விடுகிறது. அவரவர் குடும்ப வசதி வாய்ப்புகளுக்கேற்ப அது அமைகிறது. எம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிலும், பெற்றோர்கள் குழந்தைகளை எத்தனை அக்கறை செலுத்தி வளர்க்கிறார்கள், அந்தக் குழந்தைகள் பெற்றோர்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பார்த்துப் பார்த்து எப்படிப் பொறுப்பாக வளர்கின்றன என்பதைப் பொறுத்து நம் வாழ்க்கைப் பயணங்கள் பிற்காலத்தில் அமைந்து விடுகின்றன.

      திரும்பிப் பார்ப்பதற்குள் காலங்கள் ஓடி விடுகின்றன. என்ன சாதித்தோம் என்று யோசிக்கையில் ஓடி ஓடி உழைத்ததும், குடும்ப வண்டியை ஓட்டுவதற்காகக் கழிந்த காலங்களும்தான் மிச்சமாகி நிற்கின்றன. அதுவே நிறைவையும் தந்து விடுகின்றனதான்.

      சர்வேஷ் என்ற பெயரில் எழுத்தாளர் சத்யாவிற்கு ஒரு ஈர்ப்பு உண்டு போலிருக்கிறது. இவரது தொகுதியில் சில கதைகளுக்கு அந்தப் பெயரில் ஒரு கதாபாத்திரம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கதை. அதுபோல் சா்வேஷூக்கும் ஒரு கதை. வசதிக்கேற்ற வாடகையில் வீடு மாற்றுவதில் ஆரம்பிக்கிறது.  அவர் சந்திக்கும் சின்ன ஓட்டல் நடத்தும் பாய் - அவருக்கும் ஒரு கதை.....மியூச்சுவல் ஃபன்ட், சிப், டிமேட் அக்கெளன்ட் என்று வாடிக்கையாளர்களைத் தேடி அலையும் பணி, அன்றாடம் வெவ்வேறு மனிதர்களைச் சந்தித்தலும் உரையாடுதலும், தன் உற்சாகமான பேச்சினால் அவர்களை சேமிக்கத் தூண்டுதலும், அதுவே அன்றாடம் தன் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்வதான காரணியாக அமைந்திருப்பதில் திருப்தி கொள்தலும்....

      இராப் பொழுது முச்சூடும் தூங்காமல் கழிக்கும் சின்ன ஓட்டல் நடத்தும் பாய் - இருக்கிறாரே, அவருக்கும் மட்டும் என்ன....எந்தெந்த நேரத்தில் என்னென்ன வாடிக்கையாளர்கள் வருவார்கள், அவர்கள் எதிர்பார்த்து வரும் உணவு வகை என்ன...என்று அறுதியிட்டு உணர்ந்து அந்தச் சில நபர்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் கடையைத் திறந்து வைத்திருந்து காத்திருத்தலில் கிடைக்கும் சுகம், பிறகு காலந்தாழ்த்திக் கடையை அடைத்தாலும், அருகிலுள்ள நண்பர்களை மனதில் வைத்து 24 மணி நேர மெடிக்கல்ஸ் நண்பர்களிடம் சென்று விடிய விடியப் பேசிக் கொண்டிருத்தலும், பிறகு மணி மூன்றரைக்கு மேல் எதிர் டீக்கடை திறந்து பாட்டுப் போட்டு, அந்தக் கடையில் சென்று சூடாகத் தேநீர் அருந்துதலுமாக பொழுதுகளை நகர்த்திவிட, நாம் நினைத்தால் நம் வாழ்க்கையை எப்படியும் இனிமையாக்கிக் கொள்ளலாம் என்று விளக்கமளிப்பதில் ஒரு முக்கியமான சூட்சுமம் அடங்கிக் கிடக்கிறது. அதை உணர வேண்டியது எத்தனை முக்கியமானது?  -     

      குடும்பத்தை ஒரு ஊரில் விட்டு விட்டு, தனியாய் வேறொரு இடத்தில் வியாபாரம் செய்யும் மனுஷனுக்கு குருட்டு யோசனை செய்யவும், தப்புச் செய்யவும், தடம் புரளவும், பிறகு அது மனுஷனை முழுங்கவும் தயாராய்க் காத்துக் கொண்டிருக்கும் என்று அதிலிருந்து விடுபடத்தான் இம்மாதிரி வெவ்வேறு நடவடிக்கைகள் என்று விளக்கமளிக்கும் பாயின் ஸ்வாரஸ்யமான கருத்தான பேச்சு எளிய மனிதன் எப்படித் தன் வாழ்க்கையின் அபாயகரமான கட்டங்களை உணர்ந்து  கடக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திச் செல்லும் நயம் இக்கதையின் முக்கியக் கருத்தாக அமைகிறது.

      எதுக்குப் பிறந்தோம், எதுக்கு சம்பாதிக்கிறோம்,என்னத்தச் சாதிச்சோம், எதுக்கு மனுஷப் பிறவி ...ஒன்றும் புரியல பாய்....என்று நிற்கும் சர்வேஷின் கேள்விகளுக்கு அனுபவம்தான் மனிதனை உருவாக்குகிறது, அதுதான் செம்மைப்படுத்துகிறது, இறைவனின் துணை மட்டும் இருக்குமேயானால் கடுமையான உழைப்பின்பாற்பட்ட வாழ்க்கைப் பயணத்தில் நாம் வெற்றியே காணலாம் என்கிற பல்வேறு சிந்தனைகளைக் கிளறி விடும் படைப்பாளியின் கதை நம்மை திருப்தியுற வைக்கிறது.

      பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்                                    பிறந்து பாரென இறைவன் பணித்தான் ........                                    இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்                                       இறந்து பாரென இறைவன் சொன்னான்........   

            அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்                               ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்                                       ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி - அந்த                                அனுபவம் என்பதே நான்தான் என்றான்.....    -

      கவியரசர் கண்ணதாசன் அவர்களின் இந்தப் பாடலின் எடுப்பும் முடிப்புமான இந்தச் சில வரிகளே இந்த வாழ்க்கையை நமக்குத் துல்லியமாக உணர்த்தும்.

      இதனை எளிய மனிதனின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டி, உரை நடையில் ஒரு சிறந்த கதையாக வடிவமைத்திருக்கிறார் சத்யா G.P.

      மொத்தம் 20 கதைகள் அடங்கிய அவரது இந்தத் தொகுதியில் கருத்துள்ள கதைகள்  பல இடம்பெற்று இத்தொகுதிக்குப் பெருமை சேர்க்கின்றன.

                              ----------------------------------

                             

 

     

     

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...