07 நவம்பர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - ”ஆயா” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

தி.ஜா.நூற்றாண்டு - ”ஆயா” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்
       ணிக ரீதியிலான ஜனரஞ்சக இதழ்களிலே சிறுகதைகளின் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைத்து முடித்து படிக்கும் வாசகனுக்கு ஒரு உற்சாகத்தை ஊட்டுவார்கள். எதிர்பாராத அந்தத் திருப்பத்திலே வாசகன் அசந்து போய் எழுத்தாளனைப் பாராட்டுவான். எப்டி இப்டியெல்லாம் யோசித்து இன்ட்ரஸ்டிங்கா எழுதுகிறார்கள்? என்று அதிசயிப்பான். அந்த வகையிலான கதைகள் வெறும் போகிற போக்கிலான வாசிப்புச் சுவைக்காக மட்டுமே. அதற்குப் பிறகு அந்தப் படைப்பினை நினைவில் வைக்க வேண்டிய அவசியமில்லை. இன்னொன்றைப் படிக்கும்போது, முன்னது நம் நினைவை விட்டுப் போய்விடும். பொழுதுபோக்கான வாசிப்புக்குகந்த இம்மாதிரிப் படைப்புக்கள் ஏராளமாய்க் குவிந்து கிடக்கின்றன். அவை இலக்கியமாகாது.

       ஆனால் இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புகளிலும் மேற்சொன்ன மாதிரியான கதையின் இறுதியில் வரும் கடைசி ட்விஸ்ட் எத்தனையோ எழுத்தாளர்களின் சிறுகதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது, வெறும் உற்சாகத்திற்காக மட்டுமல்ல என்பதை சற்று நுணுகிப் பார்த்தோமென்றால்தான் புரியும். விளங்கும். ஒரு சிறுகதையின் முடிவில் சொல்லியதை விட, சொல்லாமல் விட்டதைப் புரிந்து கொள்வதுதான், புரிந்து கொள்ள வைப்பதுதான் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பின் பிரதானமான அம்சம்.

       இந்த ”ஆயா” என்கிற சிறுகதையிலும் தி.ஜா. அம்மாதிரி ஒரு கடைசி ட்விஸ்டைக் கொடுத்து அதில் சொல்லாமல் சொல்லும் ஒன்றைப் பிரதானமாக உணர்த்துகிறார். மனிதர்கள் தவறுகள் நிறைந்தவர்களே. தவறுகள் இல்லாத மனிதன் என்று ஒருவனைக் கூடக் காட்ட முடியாது இந்த உலகத்தில். தவறுவது என்பது மனித இயல்பு. வாழ்க்கைச் சூழ்நிலையில் பல்வேறுவிதமான காரணிகளால் மனிதன் தவற நேரிடுகிறது. தவறையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பதுதான் தவறு.

       தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும்...என்கிற பாடல் வரிகளைச் சற்று நினைத்துப் பாருங்கள்.

       ஒருவனுக்கு அனுபவம் என்பது எப்போது கிடைக்கும்? ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து செய்தும், அதில் தவறிழைத்தும், அதனைத் திருத்திக் கொண்டும் செயல்படும்போது அந்தக் குறிப்பிட்ட பணியில் அனுபவம் என்பது சேகரமாகிறது. அது போல் அன்றாட வாழ்க்கையில் நம் செயல்களில் நமக்குக் கிட்டும் அனுபவங்கள் ஏராளம். கொஞ்சம் கொஞ்சமாய் அவை நம் மனதில் சேர்ந்து சேர்ந்து நாளடைவில் பக்குவம் மிக்க ஒரு மனிதனாக நம்மை உரு மாற்றுகிறது.

       எந்த அனுபவமுமே இல்லாத ஒருவன், நேற்றுதான் பள்ளிக் கல்வியை முடித்த ஒரு பையன், குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளவன், ஒரு நேர்காணலுக்குச் செல்லும்போது, அவனால் எந்த அளவுக்கு சிறப்பாக அதை எதிர்கொண்டு விட முடியும்? ஆரம்பப்பள்ளி ஆசிரியன் வேலைக்கு நேர்காணலுக்குச் செல்லும் ஈச்வரதாஸ் நேர்காணல் நடத்துபவர் கேட்பதன்படியான “நாலாங்க்ளாஸ் பிள்ளைகளுக்கானதாய் ஒரு கதை சொல்லு பார்ப்போம்“ என்ற கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி நிற்க, பழைய கதையா, பைபிள், ராமாயணம்..மாதிரி என்று பதிலுக்கக் கேட்டுவிட்டு எதுவேணும்னாலும்...என்று பதில் வர, தன் சொந்தக் கதையையே எடுத்து விடுகிறான்.

       அப்பா ராணுவத்தில் டிரக் ஓட்டுநர். எப்பொழுதாவதுதான் ஆண்டுகள் இடைவெளியில் வருவார். பெரிய அளவில் பணமெல்லாம் தர மாட்டார். அதையும் இதையும் சொல்லி நாலு நாள் நன்றாகத் தின்று விட்டு, இருக்கும் காசு தீர்ந்தவுடன், கன்னாபின்னாவென்று  திட்டிவிட்டு, கோபித்துக்கொண்டு திரும்பி விடுவார். அதனால் அம்மா ஆயா வேலைக்கு வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தாள் ரெண்டு குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு பெரும் சிரமப்பட்டாள். குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்காக அடிக்கடி சம்பளத்திலிருந்து சிறிது சிறிதாக வாங்கி வந்து விடுவாள், பையனின் அரிப்புத் தாங்காமல் அவனுக்குச் செலவுக்குக் கொடுப்பதற்காக இருபது முப்பது என்றும் அவ்வப்போது கொடுத்துக் கொண்டேயிருப்பாள். ஒருநாள் அவளை அவர்கள் மூன்று மாதச் சம்பளம் அட்வான்சாய்க் கொடுத்து வேலையை விட்டு நீக்கி விடுகிறார்கள். அழகாய் விஷயத்தை எடுத்து  வைத்து, கண்ணியமாய் வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

                நாலஞ்சு மாசமாய் ரூபாய் எல்லாம் இருபது முப்பதுன்னு காணாமப் போயிட்டே இருக்கு. இத்தோட நானூறு ரூபாய்க்கு மேலே திருட்டுப் போயிருக்கு. நீங்க எடுத்தீங்கன்னு நாங்க சொல்லல. நீங்க எடுக்க மாட்டீங்கன்னு ஒரு எண்ணமிருக்கு எங்களுக்கு. ஆனா இங்கு வேறே ஒருத்தரும் வர்றதில்லே. அதனால உங்க மேலே சந்தேகப்படும்படியா இருக்கு. சந்தேகம் இருக்கிறப்ப, நீங்க இங்க தொடர்ந்து வேலைக்கு வர்றது நல்லாயிருக்காது. நாளைக்கு ஏதாவது நடந்து போயிடுச்சின்னா உங்க மேலேதான் பழி விழும்...ஆகையினால நின்னுக்குங்க...என்று சொல்லி அனுப்பிவிட ஆயா அழுது கொண்டே வந்து விடுகிறது வீட்டுக்கு.

       அவங்க சந்தேகப்பட்டது சரிதான் என்கிறது பையனிடம். அப்ப நீ திருடினியா? என்கிறான் பையன். ஆமாம்...அப்பப்போ உன் செலவுக்கு, ஸ்கூல் கட்டணம் இதுக்கெல்லாம் எங்கேயிருந்து பணம் வரும்? தங்கச்சி கல்யாணம் அதுக்கு காப்பு, சேலை, தோடுன்னு  எங்கே போவேன் நான்...என்கிறாள் அம்மா.

       அதை அவங்ககிட்டே சொல்லி ஒத்துக்கிட வேண்டிதானே? என்று கேட்க அப்படிச் செய்தால் திருடிங்கிற பட்டம் வந்துடும். பிறகு வேறே எங்கும் வேலைக்குப் போக முடியாது என்று சொல்ல பையன் வீராவேசமாய் எப்படியாச்சும் சம்பாரிச்சி அவங்க பணத்தைத் திருப்பிக் கொடுத்திருவோம் என்கிறான். அப்படிச் செய்தாலும் திருடிங்கிற பேர் வந்திடும், அது வேண்டாம் என்று ஆயா சொல்கிறாள். கதை முடிந்து போகிறது.

       அவங்க சந்தேகப்பட்டுத்தான் நிறுத்தினாங்க. இந்த ஆயா திருடிப்புட்டு ஒப்புத்துக்க மாட்டேங்குது.திருடின்னு பேர் வரக் கூடாதுன்னு பையனையும் தடுக்குது...இதெல்லாம் நாலாங்கிளாஸ் பிள்ளைங்களுக்குப் புரியுமா? என்கிறார்கள் நேர்காணல் புரிவோர். புரியும்சார்...அஞ்சு வயசாச்சுன்னாலே எல்லாமும் படிப்படியாப் புரிய ஆரம்பிச்சிடும் என்று இவன் சொல்ல சிரிக்கிறார்கள் அவர்கள். அது அவன் அனுபவமாய்த் தெரிகிறது அங்கே.

       அவனுக்கு ஆசிரியர் வேலை கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் நீ போய் உங்க அம்மாவை  அனுப்பு....எங்களுக்கு உடனடியா ஒரு ஆயா வேலைக்குத் தேவை என்கிறார்கள். அவன் சொன்னது சொந்தக் கதை சோகக் கதை என்பதைப் புரிந்து கொண்டு விடுகிறார்கள். அது அவன் அம்மாதான் என்று அறிந்தே சொல்கிறார்கள்.

       குறைகளோடிருந்தாலும், அனுபவம்தான் முக்கியம் என்று மதிப்புப் பெறுகிறது இங்கே. தப்பு என்று தெரிந்தே செய்து, அதற்காக வருந்திவிட்டார்கள்தானே? அதைவிட சூழ்நிலை காரணமாக தப்புச் செய்ய நேர்ந்தது என்றும், தனக்கு திருடி என்கிற பட்டம் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கும் அந்தத் தாயின் மனவுணர்வும, பயந்த எண்ணமும், ஈச்வரதாஸின் தாய்தான் அது என்று தெரிந்து ஆயா வேலைக்குத் தேர்வு செய்ய வைக்கிறது அவர்களை.

       இந்தக் கதை வெறும் ட்விஸ்ட் அல்ல. சடாரென்று ஒரு திருப்பத்தைக் கொடுத்து வாசகனை “ஆ..!” போட வைக்கும் வேலையல்ல. அந்த ட்விஸ்ட் எத்தனை நுணுக்கமாய்ப் புரிய வைக்கப்படுகிறது என்பதே தி.ஜா.வின் எழுத்துத் திறமை.

       பத்திரிகைத் தரம் வாய்ந்த எழுத்துக்களிலும் இலக்கியத் தரம் வந்து விடுவதுண்டு என்று க.நா.சு. சொல்லுவார். அது இந்தக் கதையில் நிரூபணமாகிறது.

                                         --------------------------------------------

 

கருத்துகள் இல்லை: