06 நவம்பர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “இசைப் பயிற்சி”-சிறுகதை-வாசிப்பனுபவம்

 

தி.ஜா.நூற்றாண்டு - “இசைப் பயிற்சி”-சிறுகதை-வாசிப்பனுபவம் -உஷாதீபன்



     ர் உலகம் செய்யாத  ஒரு காரியத்தை, அது நியாயம் என்று மனதுக்குத் தோன்றி செய்யப் புகுந்தால், என்னவெல்லாம் கேள்வி வரும் என்று அதற்கு நம்மைத் தயார் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். மகாகவி பாரதியார் கழுதையைத் தூக்கிக் கழுத்தில் மாட்டிக் கொண்டு அக்ரஉறாரத் தெருவில் வலம் வந்தார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த சிறுவனின் தோளில் கை போட்டுக் கொண்டு வீதி நெடுகப் போனார். அவரைத் தெரு மக்கள் ஒதுக்கித்தான் வைத்தனர். அவர் எழுதிப் பாதியில் நின்றுவிட்ட நாவலில் கூட பிரளயம் வந்தபோது அக்ரஉறாரத்தில் மட்டும் அழிவு வந்ததாக எழுதுகிறார். ஊர் விலக்கில் எளிய மக்களின் குடிசையில் சென்று அவர்கள் தரும் உணவைச் சாப்பிட்டார். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவராய் இருந்தார்.

       எல்லோரும் அப்படி இருக்க முடியுமா? எல்லாரும் அப்படி இருந்தார்களா? இருந்தார்கள் ஒரு சிலர். அவர்களில் தி.ஜா.வின் மல்லிகையும் ஒருவர். மல்லிகையையும் எல்லோரும் பரிகாசம் செய்தார்கள். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. மல்லிகை என்கிற கதாபாத்திரத்தில் தி.ஜா. தன் கருத்துக்களை வலியுறுத்துகிறார். பிற்போக்குத்தனத்தைச் சாடுகிறார். ஊர் வம்பு பேசுபவர்களை வெறுக்கிறார். ஒரு நல்ல செயல் செய்ய முனைபவர்களை எவ்வகையிலேனும் தடுக்கும், கேலி செய்யும், வெட்டிப் பொழுது போக்கும் மனிதர்களை ஒதுக்குகிறார். எந்த நற்செயலையும் முன்னெடுக்காத இவர்களால் என்ன பயன் என்று மறுகுகிறார்.

       ஆலயப்பிரவேசம் ஆயிடுத்து. தெருப் பிரவேசம் ஆயிடுத்து. அடுத்து கிரஉறப்பிரவேசம்தான்...என்று கேலி செய்கிறார் பாலன்...காந்தி மாதிரி அதையும் நடத்திட வேண்டிதானே... என்கிறார். எதைப் பற்றி அவர் அப்படிச் சொல்ல முனைந்தார்? அப்படிக் கேலி செய்யும் அளவுக்கு மல்லிகை என்ன செய்யத் துணிந்தார்?

       வேறொன்றுமில்லை. குப்பாண்டிக்குப் பாட்டு கற்றுக் கொடுக்கத் தீர்மானித்தார். அவ்வளவே.

       சற்றே முற்போக்காக, வித்தியாசமாக, யாரேனும் ஏதேனும் செய்யப் புகுந்தால் அது கேள்வியாகிய காலம் அது. எல்லோரும் மனமுவந்து ஏற்காத காலம். அத்தனை பேராலும் மனமுவந்து ஏற்காத ஒன்றை யாரும் செய்ய முடியாத காலம்.. ஊர் ஒதுக்கி வைத்து விடுமோ என்று பயந்த காலம். மனதில் நல்லெண்ணம் இருந்தாலும், துணிந்து நிறைவேற்ற முடியாத காலம். என்ன செய்திடுவாங்க...அதையும்தான் பார்த்திடுவமே? என்று துணிச்சலாய் யாரும் அடியெடுத்து வைக்காது முடங்கிக்கிடந்த காலம். தங்கள் அதிருப்தியை எவ்வகையிலேனும் வெளிப்படுத்திய காலம். எதிர்ப்புக்கு ஆள் சேர்த்த காலம். எதுக்கு வம்பு என்று ஒதுங்கி ஒதுங்கி நின்று சுயநலம் ஒன்றே குறிக்கோள் என்று தன்னளவில் சுருங்கி வாழ்ந்த காலம்.

       திறமை எங்கிருந்தால் என்ன? அது மதிப்பான இடத்தில்தான் உட்கார்ந்திருக்க வேண்டுமா? அல்லது செல்வம் மிகுந்த இடத்தில்தான் செழிக்க வேண்டுமா? இறைவன் எல்லோரையும் ஒரே அளவில்தானே படைக்கிறான்? உயர்த்தி, தாழ்த்தி என்பதெல்லாம் நாமாக ஏற்படுத்திக் கொண்டதுதானே?

       அடுத்து பண்ணை சீதாராமன்....இப்பத்தான் யாருக்கு எது இருக்கு, இல்லைன்னு சொல்ல முடிலயே? என்கிறார்.  வித்யாதானம் பெரிய விஷயமாச்சே...? என்று கேள்வி போடுகிறார் சீதாராமன். ஒப்புக் கொள்கிறாரா, கேலி செய்கிறாரா புரியவில்லை. யாருக்கு எது இருக்குன்னு கணிக்க முடிலயே என்றால் எது எது எங்கெங்கு இருக்க வேண்டும் என்கிற விவஸ்தையில்லையா என்று கேள்வி கேட்பதுபோலிருக்கிறது அவரது வினா. இன்னொருவனிடத்தில், அதுவும் வேற்று, தாழ்ந்த சமூகத்தில் இருப்பவனுக்கெல்லாம் இது அமையலாமா என்று ஏளனம் பேசுவது போலிருக்கிறது அவரது கேள்வி.  

       அவனுக்கு சாரீரம் நன்னாருக்கு...ஞானம் இருக்கு...நன்னா வரும் போலிருக்கு...என்று தயக்கத்தோடேயே கூறுகிறார் மல்லி. அவனி்டமிருக்கும் திறமையை உணருவது தவறா? அதை வளர்த்தெடுத்தால் சிறப்பாக மேலேறுவான் என்று பரந்த மனதோடு ஏற்பது தவறா?

       ஏற்க மறுக்கத்தான் செய்கிறது அந்த மக்களின் மனம்.

       அதுக்காக, அவனுக்குப்போய் சொல்லிக் கொடுக்கிறதாவது? - பாலனின் கேள்வி இப்படி விழுகிறது.

       ஏன் சொல்லிக் கொடுத்தால் என்ன மாமா? இது இவரின் பதில் கேள்வி. என்னதான் சொல்கிறார் பார்ப்பமே என்று. சரியான பதில்தான் சொல்ல முடியாதே..உள்ளே அடங்கியிருக்கும் தர்ம சிந்தனையின் வலு அப்படி. ..இது படிக்கும் வாசக மனதின் எதிர்பார்ப்பும் கூட. பதில் மழுங்கலாய் வருகிறது.

       என்னன்னு கேட்டப்புறம் என்ன சொல்றதுக்கிருக்கு? - தெருவில் போவோர் வருவோர் எல்லாம் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற்போல இதைக் கேட்டுச் செல்கிறார்கள். திண்ணையில் உட்கார்ந்ததே தப்போ? என்கிற அளவுக்குமனம் சங்கடப்பட்டு விஷயம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.

       எங்கே வச்சு சொல்லிக் கொடுப்பீர்? - கேள்வி எப்படி விழுகிறது பாருங்கள். நடு வீட்டுக்குள்ள கூட்டிண்டு போயிடுவாரோ...? என்பதான எதிர்பார்ப்பு...அல்லது அப்படி பதில் வருமோ...என்று.

       அது பத்தி இன்னும் யோசிக்கலை..... - யோசிக்கலையா...? அதற்கும் ஒரு சிரிப்பு. இந்தச் சிரிப்பு அந்தப் பின் தங்கிய மனிதர்களின் அடையாளமாய் விழுகிறது. அவர்களின் குறுகிய மனதின் வெளிப்பாடாய் தெறிக்கிறது. ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுவதில் எத்தனை ஈடுபாடு? எங்களை மீறிச் செய்திட முடியுமா? என்கிற கேலவமான சிந்தனை.

       மல்லிக்கு அவரின் பதிலில் அவ்வளவாக திருப்தி இல்லை. ஏன் இப்படி பயந்து சொல்ல வேண்டும். அசடு மாதிரி? குப்பாண்டிக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது என்று தீர்மானித்த பிறகு யாருக்கு என்ன பயம்? ஒரு தேர்ந்த பாடகனுக்குத்தானே குரல் வளம்பற்றித் தெரியும்? எந்தக் குரல் எப்படிப் பேசுகிறது என்று அவனால்தானே அறிய முடியும்? அதை முடிவு செய்யும் முழுத் தகுதி அவனுக்கு மட்டும்தானே உண்டு?

       உள்ளே கூடத்தில் வச்சிண்டு சொல்லிக் கொடுக்கிறதான உத்தேசமில்லையே...? மேலும் வரும் கேள்வி. சரியான வம்பன் இந்தப் பாலன். விஷயம் உறுதியாய்த் தெரிந்தால் ஊரில் போய்ப் பிரலாபப் படுத்தலாம்தானே? எதுடா வம்பு என்று அலையும் மனம்.

       ஒரு மனிதனைப் போட்டு இந்த உலுக்கு உலுக்கினால்...? சற்றே ஆடித்தான் போகிறார் மல்லி. என்ன மாமா...இப்டிக் கேட்கிறேள்...உள்ளே அழைச்சு வச்சா சொல்லிக் கொடுப்பேன்...?  என்று மனத்தாங்கலோடு சொல்கிறார். எந்தச் சீர்திருத்தத்தையும் மெல்ல மெல்லத்தானே உள்ளே புகுத்த முடியும். எடுத்த எடுப்பில் பெரும் வீச்சில் புகுத்தி, நிறுத்தி விட முடியாதுதானே?

       மக்கள் எந்தளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாய் கதையில் வரும் உரையாடல்கள் நமக்குப் பலதையும்  உணர்த்துகின்றன. தெருவோடு போகும் பட்டாமணியம் கேட்கவில்லை.சேதி தெரியாமல் போகாதுதான்.இந்த அசட்டுத்தனத்தைப் பற்றிப் பேச வேறு வேண்டுமோ?

       சோற்றுக்கு வழியில்லாத அநாதைப் பாட்டி கூடக் கேட்கிறாள். இனிப் பொறுப்பதற்கில்லை என்றுதான் உள்ளே எழுந்து வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கொள்கிறார் மல்லிகை.

       குப்பாண்டியின் சாரீரத்தை செவி வழி நுகர்ந்த அந்தக் கணம் அவர் நினைவில். பயிற்சி பெற்றவர்கள் வேறு. பாடப் பிறந்தவர்கள் வேறு. இவன் பாடப் பிறந்தவன்!  என்ன ஒரு லாகிரி சாரீரமாக...பிறவியாக இருக்கிறது இந்தக் குரல்? சென்னையில் குப்பை கொட்டிவிட்டு ஊருக்கு வந்து நாலைந்து வருஷமாகி நமக்குத் தெரியாமல் ஒரு குரலா இந்த ஊரில்?  

       குப்பாண்டியின் தன்னிச்சையாய்ப் பாடும் அந்தக் குரல் இவரை ஈர்க்கிறது. திவ்யமா இருக்குடா...நீயாவா பாடறே...இப்படி? ஒருத்தரும் சொல்லிக் குடுக்கலையா? வகையாச் சொல்லிக்கிட்டா எப்படியிருக்கும் தெரியுமா? எலே...நீ எப்படிப் பாடறே தெரியுமா? நான் சொல்லித் தரப் போறேண்டா உனக்கு. அப்பொழுதே தீர்மானித்து விடுகிறார்.

       வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக்கு வர வேண்டியது. அப்புறம் தினமும் காலையிலே வந்து கத்துக்க வேண்டியது. ரண்டு வருஷத்திலே பாரு....? காதுல கடுக்கன மாட்டிண்டு சந்தனக் குங்குமப் பொட்டோட, ஜிப்பா வேஷ்டி பளபளக்க நீ சபைல பாடப்போறே....

       சொன்ன நாளில் அவன். கையில் தேங்காய் பழத்துடன். வீட்டுக் கிணற்றங்கரையில் போட்டிருந்த தளத்தில்  அமர்ந்து சுருதிப் பெட்டியை அவிழ்க்கிறார். ஸரிகம பதநிஸ....ஸநிதப மகரிஸா....ஆரம்பிக்கிறது பாடம்...

       என்னமாய்ச் சொல்கிறான் இவன்? என்ன புத்தி இந்தப் பயலுக்கு? என்ன வேகம்? என்ன இனிமை...கந்தர்வப் பிசாசு.... - சொல்லிக் கொடுப்பதைத் தீர்க்கமாய்ப் பிடித்துக் கொள்ளும் வேகம். இவரை பிரமிக்க வைக்கிறத. அன்றைய பாடம் முடிகிறது.

       கொல்லைப் படலைச் சாத்தாமல் வந்துவிட்டதனால் கூட்டம் கூடி நிற்கிறது. குடியானத் தெரு, சேரி ஜனங்கள் என்று ஒரு இருபது பேர்,  அக்ரஉறாரத்துப் பிரமுகர்கள் பாலன், சுப்புக்குட்டி, கர்ணம், சீதாராமன்...

       மல்லிக்கும், குப்பாண்டிக்கும் இருந்த தூரத்தைக் கணக்கிட்டு அப்போதும் சிரிக்கிறார்கள். எது கிடைக்கும் என்று அலைபவர்கள்தானே?

       நாற்பதடி தூரம்..சிரித்துக் கெக்கலிக்கும் கூட்டம். .மீசையிலே படாம கூழும் குடிச்சாச்சு...இது கர்ணம். ரொம்ப அழகாப் பண்ணிட்டீர்...இது பாலனின் எக்காளம்...இதைக் கேட்டு மார் சதை குலுங்கச் சிரிக்கும் சீதாராமன். இது எல்லாவற்றையும் பார்த்து குஞ்சும் குளுவான்களும் சிரித்துக் குதிக்கின்றன..

       நாளைக்கு உள்ளே வச்சிண்டு பாடம் சொல்றேனா இல்லையா பாருங்கடா...ஒழிச மக்களா?- மனதுக்குள் கோபமாய்ப் பொங்குகிறார். நீங்கள்லாம் நன்னாயிருப்பேளா? அவர் மனைவி அவர்களைப் பார்த்துக் கத்துகிறாள்.  நீ வா...உள்ளே...நாய் குலைக்கிறதேன்னு நாம திருப்பிக் குலைக்க முடியுமா? - படபடப்போடு சொல்லி விட்டு வீட்டுக்குள் வந்து விடுகிறார் மல்லிகை.குப்பாண்டிக்கான இசைப்பயிற்சி இப்படிப் பிரச்னைகளோடு துவங்குகிறது.

       1967 ம் ஆண்டு ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வந்த கதை இது. நாற்பது, ஐம்பதுகள் கடந்து அறுபதுகளிலும் நிலைமை பிற்போக்கு நோக்கில்தான்  தொடர்ந்திருக்கிறது என்பது இக்கதையைப் படிக்கும்பொது நமக்குப் புலப்படுகிறது. தனி மனிதர்கள் அவர்களின் நியாயமான  விருப்பத்தைத் தடையின்றி நிறைவேற்றிக்கொள்ளக் கூட எத்தனை எதிர்ப்பு இருந்திருக்கிறது என்பதை நினைக்கையில் சுதந்திரமாய் இயங்க முடியாத அந்தச் சூழல் நம் மனதை வேதனைப் படுத்துகிறது. மொத்தச் சமூகத்தையும் எதிர்த்துக் கொண்டுதான் சிறந்தவைகள் மலர்ந்திருக்கின்றன என்பதை உணர வைக்கிறது.

       குப்பாண்டியின் அருமையான சாரீரத்தைக் கணக்கிட்டு, ஊர் எதிர்ப்பை மீறி  அவனுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க முன்வந்த மல்லி அண்ணாவை நினைத்து நம் மனம் பெருமிதப்படுகிறது. தி.ஜா.வின் புரட்சிகரமான எண்ணங்கள் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் அவர் எழுத்தின் மூலம் ஆக்ரோஷமாய் படைப்புகளின் வழி வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

                                   --------------------------------------------------------------

      

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...