02 நவம்பர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “சிவப்பு ரிக் ஷா” - சிறுகதை - வாசிப்பனுபவம் -

 

தி.ஜா.நூற்றாண்டு - “சிவப்பு ரிக் ஷா” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்     வாசக நண்பர்கள் தி.ஜா.வுக்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள். இக்கதைக்கும் லிங்க் கிடைக்கவில்லை. ஆனால் இது செவ்வியல் (classics) வரிசையிலான படைப்பு என்பதால் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியுள்ளது.

     தையின் பெயரைப் பார்த்ததும் இது 'அதுவோ' என்பதாக யாரும் நினைத்து விட வேண்டாம். சிவப்பு என்பது பெண்ணின் கோபத்தைக் காண்பிப்பதான அடையாளம். கதை எழுதப்பட்ட காலம் 1954. பெண் சுதந்திரம்பற்றி அப்போதே பேசப்பட்டிருக்கிறதுதான். ஈவ் டீசிங் என்பது அப்போதே இருந்திருக்கிறது என்பதற்கடையாளமாய் இக்கதையின் காட்சிகள். அதே போல் அப்போதே இதை தைரியமாய் எதிர்த்து நிற்கும் பெண்களும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் உணர்கிறோம்.  

       பள்ளி முடித்து கல்லூரி போகிறாள் ருக்கு. டாக்டராக வேண்டும் என்று ஆசை. அதனால் மனதில் அதீத தைரியம் உண்டு. நாலு பஸ்ஸில் ஏற்ற வேண்டியவர்களை ஒரு பஸ்ஸில் ஏற்றினால்? கூட்டம் பிதுங்குகிறது. இப்படி அப்படி அசைய வழியில்லை. வெய்யில், புழுக்கம், மனித வெப்பம், சூடான மூச்சுக் காற்று, கம்பியைப் பிடித்துக் கொண்டு நெருக்கியடித்து நின்றமேனிக்குப் பயணம். இத்தனைக்கும் நடுவில் கூட்டத்தின் நெருக்கடி சாக்கில் இடிக்கிறான் ஒருவன். பொறுத்துப் பார்க்கிறாள். நின்றபாடில்லை. நீளமாய் வளர்த்திருக்கும் நகத்தை வைத்து அவன் கையில் அழுந்த ஒரு இழுப்பு.....ரத்தம் வடிய வடிய முன்னே கடந்து அடுத்த ஸ்டாப்பில் இறங்கி ஓடி விடுகிறான் அவன்.

       இவள் ஸ்டாப் வருகிறது. இறங்குகிறாள். பின்னாலேயே ஒருவர் இறங்குகிறார். எதிர் வீட்டுக்காரர். சப்-எடிட்டராய் ஒரு பத்திரிகையில் வேலை பார்ப்பவர். பார்த்தேனே நானும்...என்று சொல்ல...பின்ன என்ன பண்றது? பஸ்ல போய், இறங்கித் திரும்பறதே பெரிய அவஸ்தை. இதுல இது வேறே...இவங்கள்லாம் சும்மா விடலாமா...அதான் அப்படிச் செய்தேன்...என்கிறாள் ருக்கு. ஆனாலும் உனக்குத் தைரியம் ஜாஸ்திதான் என்கிறார் அவர்.

       ஏற்கனவே ஒருத்தனுக்கு கன்னத்தில் விட்டிருக்கிறாள். நாளைக்கு நான் டாக்டராகப் போறேன்..தைரியமா பரிசோதனைக்கு இறந்த .உடலெல்லாம் அறுத்துப் பார்க்க வேண்டியிருக்கும். இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? என்று அப்பாவிடம் சொன்னவள் ருக்கு.

       ஒரு மாதம் கடந்த பொழுதில் ஒரு நாள்... பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அந்த சப்-எடிட்டர் தற்செயலாய் கவனிக்கிறார். ருக்கு ஒரு காரில் அமர்ந்து சென்று கொண்டிருக்கிறாள். முன் பக்கம் ஒரு இளைஞன் ஸ்டைலாகக் கார் ஓட்டிக் கொண்டு. அதிர்ந்து போகிறார். அவ்வளவுதானா? நம்ப ருக்குவா அது?  ருக்குவுமா இப்டி  ஆயிட்டா? போதாக்குறைக்கு பஸ் ஸ்டாப்பில் இருக்கும் இளைஞர்கள் வேறு கேலி செய்கிறார்கள். நல்ல ஆளாப் பிடிச்சிட்டாம்பாரு....ஜாலியா போறதப் பாரு...என்று அவர்களைக் கேலி செய்கிறார்கள். இவரால் பொறுக்க முடியவில்லை. கொஞ்ச காலத்துக்குத்தான் எல்லா வீச்சும்...பிறகு எல்லாம் மாறிடுது...என பலவாறு நினைத்தவாறே வீடு போய்ச் சேர...தேடிக் கொண்டு வந்து விடுகிறாள் ருக்கு.

       கார்ல என்னைப் பார்த்துட்டு இவளும் இவ்வளவுதானான்னு நினைச்சிருப்பேள்...நீங்க ஒரு  ரூபாயை மிச்சம் பண்றதுக்காக லஸ்ஸூக்கு நடந்து போயிடறேள்....நான் என்ன பண்றது...நான்பாட்டுக்குத்தான் நின்னிட்டிருக்கேன் பழியா பார்த்துண்டு,  பஸ் வருமான்னு...அவனா வந்து வலியக் கேட்கிறான்...காலேஜ்தானே. நானும் அங்கதான்னு கூப்பிட்டான். ஏறிட்டேன்....வீட்டு விலாசம் சொல்லு...உன்னை அங்கயே இறக்கி விடறேன்னான். எதுவோ ஒரு அட்ரச சொன்னேன். வேணும்னுதான்...அலையட்டுமே...இவங்களுக்கெல்லாம் அதானே வேலை....அவன் அப்படித் தைரியமா என்னைக் கூப்பிட முடியும்னா, நான் ஏன் அப்படிச் சொல்லக் கூடாது.....என்னை எப்படிக் காப்பாத்திக்கிறதுன்னு எனக்குத் தெரியாதா?  என்று பதிலிருக்கிறாள்.

       அவர் அவளின் தைரியத்தை நினைத்து அதிர்ந்து போகிறார். ஏதேனும் நிகழ்ந்து விடக்கூடாதே என்றும் அஞ்சுகிறார். ஆனாலும் இத்தனை தைரியம் ஒரு பெண்ணுக்கு உண்டா? என்று பிரமிக்கிறார்.

       ஒரு வாரம் கடந்த பொழுது.....தற்செயலாய் கவனிக்க ருக்கு ஒரு ரிக் ஷாவில் போய்க் கொண்டிருக்கிறாள். சிவப்பு நிற ரிக் ஷா.

       என்னாச்சு.....ஏன் இப்டி? பஸ்ல போகலையா?  என்று அதிசயித்துக் கேட்கிறார். என்னால போராட முடில சார்.... பாருங்க...அந்த பஸ்ல எவ்வளவு கூட்டம்...தாங்க முடில....அதான் சொந்தமா ஒரு ரிக் ஷா வாங்கிட்டேன்....-கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்திருந்த பணத்தில் இது.

       சொந்த ரிக் ஷாவா....எப்ப வாங்கினது? என்கிறார் அவர். நேத்திக்கு...இனிமே இதுலதான் காலேஜ் போகப் போறேன்....என்னால தாக்குப் பிடிக்க முடில.....பாருங்க...என் காலை...என்று காண்பிக்கிறாள். கால் கட்டைப் பார்க்கிறார் அவர்.

       ஒருத்தன் காலை ஓங்கி மிதிச்சிட்டான்....வீங்கிப் போச்சு...காயமாயிட்டுது...ப்ளாஸ்டர் போட்டிருக்கேன்....- வருந்திச் சொல்கிறாள். இவருக்கு ஏமாற்றமாய் இருக்கிறது.

       உங்களுக்கெல்லாம் காளை மாதிரி பலம் இருக்கு. அந்தமாதிரி பெண்களுக்கும் பலம் வந்தாத்தான் ஆச்சு....போதும் சார்...தாங்க முடில....பாருங்க...காலேஜ்ல ஒரு மீட்டிங்ல பேசினேன். கையைத் தட்டி, மேஜையைத் தட்டி, கத்து கத்துன்னு கத்தி....கலாட்டாப் பண்றாங்க....இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஏதாச்சும் பிரச்னை...என்னதான் சார் பண்றது? நிம்மதியா நாலு நிமிஷம் பேச விடலை...கேலி செய்து, சத்தம்போட்டு, ஒரே கலவரம் மாதிரிப் பண்ணிட்டாங்க....வரட்டுமா சார்....பாருங்க...நகத்தைக் கூடக் கட் பண்ணிட்டேன்....என்று காண்பித்துக் கொண்டே....நகர்கிறாள். பிரமிப்பு விலகாமல் பார்த்துக் கொண்டே நிற்கிறார் இவர்.

       ஒரு பெண்ணால் ஈடு கொடுத்து நிற்க முடியாத சமுதாயமாய் இருக்கிறது என்பதை அவள் ஏறிப் பயணிக்கும் அந்த சிவப்பு ரிக் ஷாவை அடையாளமாய் வைத்து இந்தக் கதையைச் சொல்லி முடிக்கிறார் தி.ஜா. போராடிப் போராடி மனச் சோர்வு கொண்ட ஒரு பெண்ணின் நிலை. சகோதரியாய், சிநேகிதியாய் தாயாய், நினைக்க வேண்டிய பெண்ணை ஊரும் உலகமும் எப்படியெல்லாம் துவள வைத்து அலைக்கழிக்கிறது? இதற்காக நாம் வெட்கப்பட வேண்டாமா? இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இதையெல்லாம்  வெறும் காட்சிகளாய்ப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்? எவ்வளவு  நாளுக்குத்தான் இம்மாதிரி விட்டேற்றியான நடப்புகளையெல்லாம் அனுமதித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? பெண்களுக்கான பாதுகாப்பினை இந்த சமுதாயம் எப்போதுதான் உறுதி செய்யும்? பெண்கள் பயமின்றி நடமாடவும், சுதந்திரமாய் இயங்கவும் எப்போதுதான் நாம் அனுமதிக்கப் போகிறோம்? பெண்மையை, பெண்ணை மதித்துப் போற்றத் தெரியாத ஒரு சமுதாயம் எந்தவகையில் மேன்மையானது என்று சொல்லிக் கொள்ள முடியும்? என்று பல கேள்விகளை எழுப்புகிறது இந்த சிவப்பு ரிக் ஷா சிறுகதை.

       ஜனரஞ்சகமானதாகவும், செவ்வியல் தன்மை கொண்டு தன்னை நிலை நிறுத்திக் கொள்வதாகவும் அமைந்துள்ள இந்தப் படைப்பு தி.ஜா.வின் ஒருமையும், முழுமையும் வாய்ந்த சொற் சித்திரம்.

                                         ------------------------------------

 

கருத்துகள் இல்லை: