28 அக்டோபர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “கோபுர விளக்கு” - சிறுகதை - வாசிப்பனுபவம் -

 

தி.ஜா.நூற்றாண்டு - “கோபுர விளக்கு” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்     ந்தக் கோயிலும், ஒளிவீசும் அந்தக் கோபுரமும் அதைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மேன்மையான குணங்களின் அடையாளமாகத் திகழ்வதாக  நம்பிக்கை. மனிதர்கள் எல்லோரும் சராசரிகள்தான் என்றாலும் அடிப்படை நியாய உணர்வு, தர்ம சிந்தனை, சராசரிகளுக்கு இருக்க வேண்டிய நேயம், கருணை இப்படிப் பலவற்றின் உதாரணங்களாய்த் திகழ்ந்தால்தான் அந்த ஊருக்கும் பெருமை, அதன் முக்கிய அடையாளங்களுக்கும் பெருமை.  

     வறுமையின்பாற்பட்டு ஏற்பட்ட இழி நிலைக்கும், அதன் தொடர்ச்சியான ஒரு பெண்ணின் சாவுக்கும் காரணங்களை அசை போடும் ஊர், அந்தக் காரணங்களையே காரியமாக வைத்துப் பொழுதைக் கழித்து நிற்கும் அவலம். பாவப்பட்ட மனிதர்கள்,  இப்படியான கேலிப் பேச்சுக்கள், புறஞ்சொல்லல்,  ஏச்சுக்கள் மூலம்  மேலும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாது காலம் கழிக்கும் கேடு....அதை ஒரு குற்றமாகக் கருதாத மனநிலையில், இதுவே நியாயம் என்று ஊர் கூடிப் பேசி, கருணை இழந்து, மனித நேயம் தவறி தங்களை நியாயவான்களாய் விலக்கிக் கொண்டு நிற்கும் கொடுமை...

     கோவிலுக்கு வருமே அந்தப் பொண்ணுதான்...சிரிச்சுப் போன குடும்பம்தான்...ஒப்புத்துக்கறேன்...ஆனால், செத்துப் போனதுக்கப்புறமும் தூக்கறதுக்கு ஒரு ஆள் கூட இல்லைன்னா இது என்ன மனுஷன் குடியிருக்கிற தெருவா? காக்கா கூட ஒரு காக்கா செத்துப் போச்சுன்னா, கூட்டம் கூட்டமா அலறித் தீர்த்துப்புடும்...கூட்டத்தக் கூட்டிடும்...மத்தியானம் மூணு மணிக்குப் போன உசிரு....ஒரு பய எட்டிப் பார்க்கல....வீட்டில இருக்கிறது அத்தனையும் பொம்பளைங்க...சின்னஞ் சிறுசுகள்....அப்படி என்ன குடி முழுகிப் போச்சு இப்போ...? அவங்க கெட்டுப் போயிட்டாங்கதான்...நாதன் இல்லாமச் சீரழிஞ்ச குடும்பம்தான்....பசிக்குப் பலியான குடும்பம்....அதுக்காக இப்படியா? என்ன அக்கிரமம் இது? இந்த மாதிரி மிருகங்களை எங்கயும் நான் பார்த்ததில்லை....நானும் நாலு ஊர்ல இருந்திட்டு வந்தவன்தான்....

     கோயில் கோபுர விளக்கு எரியவில்லையே...தெருவே இருட்டாக் கெடக்கு...திருட்டு பயம்வேறே என்று சொல்லப்போன இவர் மானேஜரின் கோபத்தின் முன்னால் வாயைத் திறக்கத்தான் முடியவில்லை.

     கௌரிதான் சொன்னாளே....தெரியும் என்று.   தெரியுறது என்ன? குளம், சந்தி, கடைத்தெரு, எங்கே பார்த்தாலும் நிற்கிறதே...காலமே கிடையாது, மத்தியானம் கிடையாது ராத்திரி கிடையாதுன்னு எடுபட்ட குடும்பம்....

     அதுதான் யாருன்னு கேட்கறேன்....? அதைச் சொல்ல மாட்டேங்கிறியே...?

     முருங்கைக்காய்னா முருங்கைக்காய்தான்....எந்த ஊரு? எந்தக் கொல்லை? இதெல்லாமா கேட்கணும்? மந்திரச் சாமாவின் அந்தப் பஞ்சாங்கக்காரனின் பொண்டாட்டிதான் இந்த விடோ...அவ பொண்ணுதான் திரியறதே....சமாசாரம் தெரிஞ்சவுடனே அந்த விடோவோட மகளை அந்தச் சின்னப் பொண்ணை,  புருஷனும் கையக் கழுவிட்டான்.....இதான் கதை.....எல்லாம் ஒரு தினுசாத் திரிஞ்சதுகள் இன்னிக்கு இப்டி சீரழிஞ்சு நிக்கிறதுகள்....

     மூணு மாசமாம்...டாக்டர்ட்டப் போயிருக்கா...அவன் அம்பது ரூபா கேட்டானாம்...இவளே கண்ணாடியத் தூள் பண்ணி தண்ணில கலந்து குடிக்க வச்சிட்டா....கத்தினா ஊர் கூடும்னு வாயில வைக்கோலையும், துணியையும் அடைச்சிருக்கா...துடி துடின்னு துடிச்சு செத்திடுத்து....

     கௌரி விசித்து விசித்து அழுகிறாள். அந்தப் பொண்ணு ஊத்தின எண்ணெய்க்காவது அந்த பகவான் மனசு இறங்க வேண்டாமா? பொம்மனாட்டி கண்ணுல ஜலம் விட்டா அந்த தெய்வம் உருப்படுமா?

     கோபுர விளக்கு எரியவில்லை என்று வந்து நின்றவருக்கு...மானேஜரின் பேச்சும் கோபமும் வாயை அடைத்து விடுகிறது.

     பத்து மணி வரையில் பார்க்கப் போறேன்...அப்புறமும் நாதியில்லேன்னா, நாயனக்காரர் ரெண்டு பேரைக் கூட்டிண்டு வர்றேன்னிருக்கார்...நாலு பேருமாத் தூக்கிண்டு போயிடலாம்னு இருக்கோம்...வேறே என்ன செய்றது? கோயிலைத் திறந்தாகணும்.....

     ஆனா ஒண்ணு தெருவுக்கு மட்டும் விளக்குக் கிடையாது. நாளை ராத்திரி வரையிலும் நிச்சயமாக் கிடையாது. அந்தத் துர்க்கை அம்மனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் அவ்வளவு  ராசி....விளக்கு கிடையாது...உறுதியாச் சொல்லிட்டேன்...

     கதை முடிந்து போகிறது. ஊரில் கோயிலிருந்தென்ன...? அந்த ஊரில் மனிதர்கள் இருக்கிறார்களா? அதுதான் முக்கியம். அவர்கள் மனங்களில் இருள் இருக்கிறது. அதன் அடையாளம் அந்தக் கோபுர விளக்கு. இருண்டு கிடக்கும் கோபுர விளக்கு அதன் குறியீடு.

     தி.ஜா.வின் இந்தக் கோபுர விளக்கு நம்மை நம் கிராமத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறது. கோவில் மூடப்பட்டதற்குரிய காரணங்களை நாம் அறிவோம். கோபுர விளக்கு அணைக்கப்பட்டதற்கான காரணம் அந்த மனிதர்களின் குணக் கேட்டின் அடையாளமாக, இருண்ட மனதின் உருவகமாக தி.ஜா.வால்  முன்னிறுத்தப்படுகிறது. கதையின் மையக்கருவை நிலை நிறுத்தும் விரிவும், ஆழமும் படைப்பு முழுவதும் பரவி நிற்கிறது. ------------------------------------------

                          

கருத்துகள் இல்லை: