27 அக்டோபர் 2020

தி.ஜா. நூற்றாண்டு - “குழந்தைக்கு ஜூரம்”- சிறுகதை - வாசிப்பனுபவம்-உஷாதீபன்

 

தி.ஜா. நூற்றாண்டு - “குழந்தைக்கு ஜூரம்”- சிறுகதை - வாசிப்பனுபவம்-உஷாதீபன்


       நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும். ஆண்டவன் கணக்கு தனிக்கணக்கு. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இப்படி எதை வேண்டுமானாலும் இக்கதைக்குப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.                            

       துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்த்ததுபோல் என்னென்னவோ நடந்து போகிறது. அது நாம் எதிர்பாராததாகவும் இருந்து விடுகிறது. பொய்க் கணக்கு எங்கேனும் வெற்றியடைந்திருக்கிறதா? அப்போதைக்கு அதுதான் ஜெயித்ததுபோல் ஒரு தோற்றம் தரும். ஆனால் இறுதி வெற்றி உண்மைக்குத்தான்.                      

       எந்த வீட்டின் குத்துச் செங்கல்லை இனி மிதிக்க மாட்டேன் என்று சரவண வாத்தியார் சொல்லி வந்தாரோ அங்கே மனைவி சொன்னாளே என்று போய் நிற்க, என்னவெல்லாம் நடந்து போகிறது?

       மனிதனுக்குத் துன்பம் அதிகமாகுகையில் அதுவே பழகிப் போய் சிரிப்பாக மாறி விடுகிறது. நடந்தவைகளையெல்லாம் நினைத்து சிரிப்பதா அழுவதா....? மனிதன், தன் சாமர்த்தியம் என்று நினைப்பவைகளெல்லாம்  கணத்தில் எப்படிப் பொடிப் பொடியாகி விடுகிறது? ஒழுங்காய்ச் சம்பாதிக்கும் காசே நிற்காதபோது, பொய்யாய்ச் சேர்த்த பணம் எங்கிருந்து தன்னைத் தக்க வைத்துக் கொள்ளும்? செல்வம்...செல்வம்...செல்வோமென்று அது வந்த வழியே தன் வழியைப் பார்த்துக் கொண்டு போய் விடுகிறதுதானே?

       இருபது புத்தகம் போட்டு இருபத்தோராவது புத்தகம் நிலுவையில் இருக்கும்போது,  பண பாக்கிக்காகப் போங்கள் என்ற மனைவி சொல்லின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு பஞ்சுவின் வீட்டு முன்னால் போய் நின்ற சரவண வாத்தியாருக்கு...என்ன வகையில் ஒரு அவமானம் ஏற்பட்டுப் போகிறது?

       நல்லா யோசிச்சுச் சொல்லுங்க...மீதி நானூறு.....

       நானூறா...இதென்ன அநியாயமா இருக்கு...முன்னூறுதான்யா...ரெண்டு வாட்டி வந்து அம்பது, அம்பதா நூறு வாங்கியிருக்கீரே....அப்புறம் நானூறு எங்கேயிருந்து மீதி வரும்...

       நான் வந்தேன்...கேட்டேன்...இல்லைங்கலே....ஆனா பணம் வாங்கிண்டு போகலை....அதனாலதான் ஆயிரத்துல பாக்கி நானூறுன்னு சொல்றேன்.....அறுநூறுதான் வாங்கியிருக்கேன்...

       எழுநூறு காட்டுதேய்யா பதிவு....அப்போ நான் எழுதி வச்சிருக்கிறது பொய்ங்கிறீரா...? என்னய்யா இது அநியாயமாயிருக்கு....?

       நீங்க எழுதினதுக்கு நானா பொறுப்பு?  என் முன்னாடியா எழுதினேள்? நான் பார்த்தேனா அதை...? நீங்களா எழுதிண்டதை நான் நம்பணுமா...?

       அப்போ வாங்கலீங்கிறீரா? என்னமாய்யா துணிஞ்சு பொய் வருது உம்ம நாக்குல...நான் அயோக்யன்...அப்படித்தானே...உம்ம சகவாசமே வேணாம்...உம்ம பாக்கிப் பணம் வீடு வந்து சேரும்...நீர் கிளம்பும்...

       அந்தப் பணம் எனக்கு வேண்டாம்....நான் பொய் சொல்லலை...நானூறுதான் என் பாக்கி....-கிளம்பி விட்டார்....இந்த வீட்டுக் குத்துச் செங்கலைக் கூட இனி மிதிக்க மாட்டேன்....புயலடித்தது சரவண வாத்தியார் மனதில். என்னமாய் ஏமாற்றுகிறான்? என்ன ஒரு கள்ளத்தனம்? மனம் வேகிறது.

       ரவால்லே....அந்த இருபத்தோராவது புதுப் புத்தகத்தைத் திருப்பி வாங்குறாப்லே போய்ட்டு வாங்களேன்....அவராத் துவக்கமாட்டாரா என்ன? - அந்த வார்த்தைக்குக் கட்டுப்பட்டு மறுபடியும் வந்து நின்ற இடத்தில் கண்ட காட்சி? அதன் பிறகு எதெதெல்லாம் நடந்து போகிறது?

       பணத்தை ஏமாற்றின மனுஷனுக்கு உதவ எப்படி மனது வந்தது தனக்கு?அதெல்லாம் யோசித்து யோசித்தா செய்வது? அது மனிதத் தன்மையாகுமா?  அவர் மனைவி ஏன் அப்படி  திடீரென்று ரத்த வாந்தி எடுத்துப் படுக்கையாகணும்? அழைத்த மருத்துவர் வராமலிருக்க, தான் ஏன் அந்தக் காட்சி பொறுக்க மாட்டாமல் டாக்டரை அழைக்க ஓடணும்? யாரும் வராத நிலையில், தன் டாக்டர் நண்பனை அழைத்து வந்து, நிலைமையை அறிந்து, அட்மிட் பண்ணி, பிழைக்க வைத்தாயிற்றே...? அப்பாடா...இப்போதுதான் மனசுக்கு நிம்மதி.  டாக்சிக்கு கொடுத்து, ரிக் ஷாவுக்குக் கொடுத்து, நடையாய் நடந்து, ராத்திரி நகர்ந்ததே தெரியலையே...கைல இருந்த பைசா காலி....என் குழந்தையை, அது படுத்த படுக்கையாய் ஜூரமாய் இருந்ததை மறந்தே போனேனே?

       பயப்பட வேண்டாம்...இந்த மாத்திரையைக் கொடுங்க...சரியாயிடும்....காலமே அந்தப் பக்கம் வரும்போது வீட்டுக்கு வரேன்.......ஓரிரவில் நடந்த இந்த  நாடகத்தை என்னென்று சொல்வது?

       சரவணத்திற்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது. எப்படி? அந்தக் சிரிப்புக் கேட்டு....அதென்ன சிரிப்பு?   

       உறி....உறி....உறி......புல் தின்கிற சவடாலில் ஜட்கா ஸ்டான்ட் குதிரையின் கனைப்பு....அது எதை உணர்த்துகிறது? மனிதர்களைக் கேலி செய்கிறதா? அவர்களின் அலைக்கழிப்புகளைப் பார்த்து ஏளனமா? பாவம்யா நீர்...என்று கெக்கலிக்கிறதோ? பகைவனுக்கருள்வாய்...! .வீடு சேர்கிறவரை சிரித்துக் கொண்டே போகிறார். நம்மை மீறி, நம் சக்திக்கு மீறி என்னவெல்லாம் நடந்து விடுகின்றன?

       மனுஷன் போடுறது ஒரு கணக்கு...ஆண்டவன்  போடுறது வேறொரு கணக்கு...-கெட்டவனுக்கு கடவுள் நிறையக் கொடுப்பான். ஆனா சமயத்துல கைவிட்டிடுவான்....எங்கேயோ கேட்டதுபோலிருக்கிறதோ...!

       ஆபத்தில் உதவாதவன் மனுஷ ஜாதியில் சேர்த்தியா? என்னை ஏமாற்றிய அவனை நான் ஏமாற்ற இதுவா தருணம்?  காசா பெரிது அங்கே...? கணக்கா பெரிது அப்போது? ஒரு உயிர் முக்கியமில்லையா?  நிமிஷ நேரத்தில், ஒரு நாள் பொழுதில் என்ன நடக்கும், எது நடக்கும் யார் அறிவார்? நடந்திருப்பதே அப்படித்தானே? காசே குறியாய் கள்ளத்தனம் செய்தவனை, காலம்...காலன் போட்டுப் பார்க்கிறான்....கதி கலங்க அடிக்கிறான்....! அதுதான் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறதோ...! கைக்குள்ளா பிரபஞ்சம் அடங்கியிருக்கிறது?

       குழந்தைக்கு ஜூரம் என்று போய் நிற்க, ஏற்பட்ட அனுபவங்கள்-சரவண வாத்தியாரின் மனித நேயச் செயல்பாடு-வாழ்க்கையை, அதன் ஏற்ற இறக்கங்களை, எதிர்பாரா நிகழ்வுகளை, உண்மை என்றும் பொய்க்காது என்கிற தத்துவத்தை நமக்கு எப்படி ஆழமாக உணர்த்தி விடுகிறது?

                                         -------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...