29 அக்டோபர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “செய்தி“ - சிறுகதை - வாசிப்பனுபவம் -

தி.ஜா.நூற்றாண்டு - “செய்தி“ - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

      இசையின் மூலமாக இறைவனை அடைதல் என்றொரு வழிமுறை உண்



டு. தியாகப் பிரம்மம் எனப்படும் சங்கீத மும்மூர்த்திகள் அதைத்தான் பின்பற்றினார்கள். நம் இசையின் மகிமை அறிந்த ஒரு வௌ்ளைக்காரன் அதை உணர்த்துகிறான் இந்தக் கதையில்.

      செய்தி என்றதும் உலக நடப்பியல் சார்ந்த விமர்சனங்களடங்கிய கதையாகத்தான் இருக்கும் என்று உள்ளே புகுந்தால், இந்தச் செய்தி வேறு தகவலை நமக்குத் தருகிறது. இசையில் லயித்துக் போகும் ஒருவன், பேரிரைச்சலான இந்த உலக நிகழ்வின் நடுவே அமைதியைத் தேடி வேண்டும் ஒரு குரலை, ,அதன் மகிமையை, அதைத் திறம்படக் கையாளும் பிள்ளையின் நாத மேன்மையில் உணர்கிறான். அந்த அமைதி என்கின்ற செய்தி அவரின் இசையின் மூலமாக பரிபூர்ணமாக அவனால் உணரப்படுகிறது.

       தெற்கத்திய சங்கீதத்தில் திளைத்து, அதன் மகிமையை அனுபவித்து உணர வேண்டும் என்று வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறது  வெள்ளைக்காரன்  பிலிப் போல்ஸ்காவும் அவனது கோஷ்டியும்

       உங்க இஷ்டம்...வந்திருக்கிறவன் நிறை குடமாத் தெரியறான்...எந்தச் சங்கீதம் கேட்டு வெகு காலத்திற்குப் பிறகும் கண்டா நாதத்தின் ஊசலைப்போல  உற்ருதயத்தில் ஒலிக்குமோ, அந்த மாதிரி ஒரு சங்கீதத்தைக் கேட்க வேண்டுமாம் என்று சொல்கிறார் வக்கீல் மணி ஐயர்.

       நாட்டையைக் கம்பீரமாக ஆலாபனம் செய்து கீர்த்தனத்தைத் தொடங்குகிறார் பிள்ளை. போல்ஸ்காவிடம் புன் முறுவல் பிறக்கிறது. விழி மேலே செருகிக் கொள்கிறது. அமிர்தத் தாரையாகப் பெருக்கெடுக்கும்  நாதப் பொழிவில் அவன் தன்னை இழக்கிறான். நாதம் அவன் ஆத்மாவைச் சுண்டி இழுக்கிறது. அதுவரை காணாத லோகங்களுக்கும், அநுபவங்களுக்கும் கொண்டு செல்கிறது. ஆற்றோடு போகிறவனை இஷ்டப்படி வெள்ளம் அடித்து இழுத்துக் கொண்டு செல்வதுபோல் அந்த இசையோடேயே பயணம் செய்து, தன்னை நாத வெள்ளம் அடித்துக் கொண்டு போகும்படி விட்டுவிடுகிறான் அவன்.

       தொடர்ந்து தஸரிமா...மா....என்று ஸாமா ராகத்தில் தொடங்கி ஆலாபனம் செய்து, சாந்தமுலேகா...சௌக்கியமுலேது...நாட்டைக் குறிஞ்சி ராகப் பாடலை பிள்ளையவர்கள் தன் நாதத்தில் இழைக்க, சாந்தமில்லாமல் சுகமுண்டோ என்கிற தொனியில் தோட்டத்தில் மலர்ந்து மணத்தைப் பெருக்கும், அமைதியான மணத்தை வீசும், பவழமல்லியின் நினைவு வக்கீலின் மனத்தில் தவழ, அந்த லயிப்போடு போல்ஸ்காவைப் பார்க்கிறார் அவர். அவன் எந்த உலகத்தில் இருக்கிறானோ....எந்த வானில் பறக்கிறானோ? சத்யத்தைக் கண்டு இறைஞ்சுவதுபோல்...சாந்தமுலேகா...என்ற அந்த வரி கொஞ்சும் சுகம் குழந்தையைக் கொஞ்சுகிறாற்போல....போல்ஸ்காவிற்கு மெய் சிலிர்த்துப் போகிறது.

       மிஸ்டர் பிள்ளை...இதிலிருந்து, இந்த லயிப்பிலிருந்து, இந்த உலகத்திலிருந்து நான் விடுபட விரும்பவில்லை....இதிலேயே தொடர விரும்புகிறேன்...என்று திரும்பத் திரும்பச் சொல்லி, சாந்தமுலேகாவையே...மறுபடி...மறுபடி பாடச் சொல்லி, வாசிக்கச் சொல்லிக் கேட்கிறான். வாசியுங்கள்...வாசியுங்கள.....இல்லையென்றால் என் உயிர் போய்விடும்....என்று சொல்ல, அவன் நிசப்தத்தை, அங்கு தவழும் அமைதியான லயிப்பை, அவனறிந்த அந்தச் செய்தியைக் கலைக்கத் துணிவில்லாமல், வக்கீலும் மெல்லப் பிள்ளையிடம் வற்புறுத்துகிறார்.

       ஐந்தாறு தடவை திருப்பித் திருப்பிக் கீர்த்தனத்தை வாசித்து, கடைசியில் நாதம் மௌனத்தில் போய் லயித்ததுபோல் இசை நிற்கிறது.  போல்ஸ்கா அப்படியே தலையை அசைத்துக் கொண்டேயிருக்கிறான். கோயில் மணியின் கார்வையைப்போல் அவன் சிரமும் உள்ளமும் ஆத்மாவும்  அந்த நிசப்தத்தில் அசைந்து ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது.

       இந்தக் கையைக் கொடுங்கள்... வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள்...கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரலைக் கொடுங்கள்...நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன்....என்று அவரது கரத்தை வாங்கிக் கொள்கிறான். பிள்ளைக்கு அமைதியும் சாந்தமும் நிறைந்த அந்தச் செய்தி கிடைத்து விடுகிறது.

       இசையும், காட்சிகளும் நம்மை எங்கோ இழுத்துச் செல்கிறது. ஒரு அருமையான அழகியல் அனுபவத்தை நமக்குத் தருகிறது. தி.ஜா.வின் தங்கு தடையில்லாத, ஆற்றொழுக்கான நடை நம்மை லயிக்க வைத்து இழுத்துச் செல்கிறது. நாதஸ்வரக் கீர்த்தனைகளில் நம்மூர் சினிமாப்பாடல்களைக் கலந்து வாசித்து, வெளிநாட்டவனை ஈர்க்க வேண்டும் என்று, மகன் தங்கவேலு இங்கே தயாராகிக் கொண்டிருக்கையில், மொழி அறியாத அந்த வெள்ளைக்காரன், பிள்ளை அவர்களின் இசையின் மகத்துவத்தில், அந்த நாதத்தின் சுகானுபவத்தில்,  அதன் ஈடுபாட்டில், ஆழ்ந்த ரசனையில், முழுப் பொருளையும் உணர்ந்து கொள்கிறான். மெய் சிலிர்த்து நிற்கிறான். இதுவே இந்தக் கதையின் சாரம். இசையின் அனுபவத்தை தி.ஜா. விவரிக்கும் போக்கில் அவர் சொல்ல வந்த செய்தி நமக்குக் கிடைத்துப் போகிறது.

                                  -----------------------------------------------

 

 

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...