“மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்”- கவிதைத் தொகுப்பு –
வதிலை பிரபா- வாசிப்பனுபவம் - உஷாதீபன்
வாசிப்பனுபவத்திற்காக
ஒரு கவிதைப் புத்தகத்தை எடுப்போம் என்று நினைத்தபோது மனதில் தோன்றியது எங்கள் ஊர்க்காரரான
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் திரு வதிலை பிரபாவின் “மரம் சுமக்கும் யானைகளின்
பிளிறல்“ கவிதைத் தொகுப்புதான்.
காடுகள் அழிந்து படுவதும், நாடு முழுவதும் அங்கங்கே
மரங்கள் வெட்டப்படுவதும், ஆறுகள் வற்றிப் புற்றும் புதருமாக சிதைந்து கிடப்பதும் இப்படியான
இயற்கையின் அழிவு இவர் மனதைப் பெரிதும் பாதித்திருக்கிறது போலும். ஏன், நாமே அவற்றை
மனதில் சதா நினைத்துக் கொண்டும் வருந்திக் கொண்டும்தானே செய்வதறியாது திகைத்து நிற்கிறோம்.
நம்மால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறோம்.
வதிலை பிரபாவின் இந்தப் தொகுப்பு முழுவதுமான
அவரது கவிதைகள் அவருக்கேற்பட்ட மன வலியை நமக்கு ஆழமாய் உணர்த்துகின்றன.
மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல் அவருக்கும்
நமக்குமாக என்னென்னவோ அர்த்தங்களை உணர வைக்கின்றன.
அந்த யானைகளின் பிளிறல் தாள முடியாத அந்தச் சுமையினாலா, அல்லது எங்கள் கண்ணெதிரே இப்படிப்
படிப்படியாக எங்கள் இருப்பிடங்களை அழித்து நாசமாக்குகிறீர்களே, இது நியாயமா என்பதான
கோப வெளிப்பாடா…அல்லது எங்கள் இடத்தை நீங்கள் அழித்தொழித்தால் நாங்கள் …உங்களை நோக்கித்தான்
வருவோம், வந்து வந்து தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருப்போம் என்பதான ஆக்ரோஷ எச்சரிக்கையா
என்று எண்ணி மனம் புழுங்க வைக்கின்றது.
மரத்தை வெட்டிச் சாய்த்தான்…இரண்டு பெரிய தந்தங்களோடு
ஒரு யானை வீழ்ந்தது….என்ற அந்த வரிகள் நம் முன்னோர்களை நமக்கு நினைவு படுத்துகிறது.
கால காலமாய் தன்னிச்சையாய் வளர்ந்து விரிந்து கிடக்கும் அந்த மரங்கள் நம் முன்னோர்கள்தானே…!…அடித்து
வீழ்த்தப்படும்போது தந்தங்களை வெட்டிச் சாய்த்து வீழ்ந்த யானைகளை மனதில் கொள்ளுங்கள்.
சுயநலத்திற்காக, பணத்தாசையின் மிதமிஞ்சிய அதர்மமாய், இயற்கை அழி்ப்பு போதாதென்று வனாந்தரங்களில்
எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கின்றன? எவ்வகையிலெல்லாம் திருடி விற்கப்பட்டிருக்கின்றன?
தலை மீது தும்பிக்கை வைத்து ஆசீர்வதித்த யானைகள் அவை….என்ற வரிகள் நம்மைக் கலக்கி விடுகின்றன. மனதாபிமானமுள்ள, மனிதநேய உணர்வுள்ள ஒருவன் இந்த வரிகளுக்குள் அடங்கியிருக்கும் துயரத்தை உணராமல் நகர முடியாது. ஒவ்வொரு முறையும் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான் வெட்டி வீழ்த்துகிறான் என்று இந்த மனிதப் பதர்களின் கீழ்மைச் செயல்களைத் தன் கவித்துவ வரிகளால் வெட்டிச் சாய்க்கிறார் கவிஞர் பிரபா. காடுகளில் உள்ள வானளாவிய அந்த மரங்களை வெட்டுவதும், கடத்துவதும் ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு யானையைக் கொல்வதற்குச் சமமானது என்பதைக் குறியீட்டு உணர்வாக வெளிப்படுத்தியிருக்கும்
அழகு நம்மை அடுத்தடுத்துக் கடந்து கவனம் கொள்ள வைக்கிறது.
பக்கத்திற்குப் பக்கம் யானைத் தந்தங்களின் படங்களை இட்டு
அந்த அதிர்வுகளோடேயே படிக்கும் வாசகர்களும் நகர வேண்டும் என்று விரும்பியிருப்பார்
போலும்…..இவர் கவிதையென்னும் அழகுக்கு அழகு சேர்க்கும் பக்கங்கள் விடாது நம்மை நோக்கிக்
கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருக்கின்றன.
விறகுகளுக்காகக்
காடுகள் தீ வைக்கப்படுகின்றன. வெப்பம் தாளாமல், தானே பற்றி எரிவதாக நாம் உணரத் தலைப்படுகிறோம்.
அல்லது உணர்த்தப்படுகிறோம்.
பெரு வனத்தை
விட்டு பறவைகள் வெளியேறுகின்றன. கூடுகளையும்,குஞ்சுகளையும் விட்டகலும் பெருந்துயரத்தைச்
சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறது பற்றி எரியும் பெரும் நெருப்பு….- இந்த வரிகள் ஒரு வனம்
எரியும்போது, எரிக்கப்படும்போது அங்கிருந்து வெளியேறும் உயிரினங்கள் எத்தனையெத்தனை
இழப்புகளை எதிர்கொள்கின்றன?
ஊரில் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்பொழுது
நில வெளிகளுக்கு அப்பால் வெகு தொலைவில் வானுயர்ந்து
வரிசையாக நிற்கும் பனை மரங்களைப் பார்த்து, வியந்து வாய்பிளந்து நின்றிருக்கிறோம்.
வாழும் காலம் வயது என்பதை அறியாமல் இன்று அவை
தங்களின் பொலிவினை இழந்து மொட்டையாக, மடங்கித் தொங்கும் அவலக் காட்சிகளைக் காணும்போது
மனம் என்னமாய் அழுகிறது. காலத்தின் குறியீடாய் நின்ற அவைகள் இன்று தனித்து, ஒற்றைப்
பனையாய்….!
சாலையின் இரு
மருங்கும் வரிசையாய் நின்ற மரங்களைக் கண்டு களித்த நாம், நம் காலத்திலேயே அவை வெட்டிச்
சாய்க்கப்படும் அவலத்தையும் காணத்தான் செய்தோம். அது ஒரு கவிஞனின் மனதை என்னமாய் பாதிக்கிறது?
“அந்தப் புளிய
மரத்தின் அடியில்தான் - எனக்கான கனவுகளைப் - புதைத்து வைத்திருந்தேன் - உதிர்வது
புளியம்பழம் மட்டுமல்ல. - என் கனவுகளும்தான். வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்ட புளிய மரத்தின் அடியில்
சில எலும்புகளும், ஒரு மண்டையோடும் இருந்ததாக – பார்த்தவர்கள் சொல்லிப் போனார்கள்“.
இயற்கையை நாம்
அழிக்க அழிக்க அவை இன்னொரு புறம் நம்மை அழித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு இலை உதிர்ந்தது்….கனம் குறையவில்லை மரத்துக்கு…ஒரு கனி
உதிர்ந்தது – கனம் குறையவல்லை மரத்துக்கு – ஒரு மரம் உதிர்த்த இலை ஒரு மரம் உதிர்த்த
பூ ஒரு மரம் உதிர்த்த கனி, ஒரு காடு தரும்
. உதிர்த்தது இலை இல்லை….உதிர்ந்தது பூ இல்லை…உதிர்ந்தது கனி இல்லை….உதிர்ந்தது பெருங்
காடு…காடுதான் உயிர்….உயிர்ப்பது உதிர்வதற்கும்…உதிர்வது உயிர்ப்பதற்கும்…..
இப்படி இன்னும்
இன்னும் அற்புதமான கவிதைகளை இத்தொகுதியில் கொட்டிக் கொடுத்திருக்கிறார் வதிலை பிரபா
அவர்கள். எழுத்தும் சிந்தனையும் இந்தச் சமுதாயத்திற்காக
என்ற அர்ப்பணிப்பு உணர்வினை அவரது படைப்புக்களில் உய்த்துணர முடிகிறது.
நண்பரும் திரைப்பட
இயக்குநருமான அகத்தியன் அவர்களுக்கு இத்தொகுதியைச் சமர்ப்பித்துள்ளார்.
ஒவ்வொரு கவிதைக்குள்ளும்
மனிதகுல வரலாற்றின் ஒரு பகுதி ஒளிந்து கிடக்கிறது. நாம் வாழ்ந்த வாழும் வாழ்வின் ஒரு
கதை வார்த்தைகளால் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பிளிறல் யானைகளின் பிளிறல் அல்ல. இந்தக் கவிதைகள் படிம வார்ப்புகள்.
இது அவரின் பாராட்டு
வரிகள்.
வதிலை பிரபாவின்
இத்தொகுதி இயக்குநர் அகத்தியன் சொல்வதுபோல் பல்கலையில் பாடமாக வைக்கப்படும் தகுதியை உடையது
என்பதை நம்மால் உணர முடிகிறது.. இக் கவிதைத் தொகுதி அதை நமக்கு உரத்துச் சொல்கிறது. வாழ்க அவரின் கவித்துவம்…..!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக