18 ஜூன் 2020

அந்திக் கருக்கல் - வண்ணநிலவன் சிறுகதை வாசிப்பனுபவம்

அந்திக் கருக்கல் - வண்ணநிலவன் சிறுகதை
வாசிப்பனுபவம்


“அந்திக் கருக்கல்” – மங்கிய வெளிச்சமும், மெல்லிய இருளும் இஷ்டத்தோடு ஒன்றையொன்று தழுவிக் கொள்ளும் நேரம். தவிர்க்க முடியாமல் ஒளி தன்னை ஒளித்துக் கொண்டு இருளுக்கு வழி விடும் மாலை மயங்கும் பொழுது.

அந்தக் கலங்கிய மன நிலையில்தான் அவரும் இருக்கிறார். மனிதன் எந்தச் சிந்தனையில் தன்னைப் புகுத்திக் கொள்கிறானோ, எதில் கிடந்து உழன்று கொண்டிருக்கிறானோ அதற்கேற்றாற்போல் புறச் செயல்கள், எண்ண ஓட்டங்கள் எல்லாமும் அமைந்து விடுகின்றன. வாழ்ந்து கழித்து, உணர்ந்தவனின் செயல் நேர்த்தி அல்லது தவற விட்ட வாழ்க்கையின் மதிப்பு மிக்க விஷயங்கள் இவையெல்லாமும் சந்ததிகளைப் பாதிக்கும்போதோ அல்லது சந்ததிகளின் அடையாளங்களாய் விகசிக்கும்போதோ மனம் வேதனைப்பட்டு விண்டு விரிகிறது.. இயலாமை மன அமைதியைக் குலைக்கின்ற நிலைக்குத் தள்ளுகிறது.
பீடிக்கட்டையும், தீப்பெட்டியையும் தேடிப் பெஞ்சில் தடவிப் பார்க்கிறார். பெஞ்சின் வழுவழுப்பு விரல் சுருக்கங்களில்  பதிந்து ரொம்பவும் இதமாய் இருக்கிறது. பெஞ்சின் கால்களைத் தடவினால் கூட பளிங்குக்கல் மாதிரியான வழுவழுப்பு. தொழிலின் செய் நேர்த்தி மனதை ஈர்க்கிறது. தடுக்க முடியாமல் போன தவறுகளுக்கான இயலாமை, தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் இருக்கும் ஒழுங்கை நாடி ஆறுதல் கொள்கிறது. இப்படியெல்லாம் எதுவும் அமையாமல் போனதே என்பதான பூடகமான மன ஏக்கம்  விரக்தியை ஏற்படுத்தி, சலிப்பையும், எரிச்சலையும் தூண்டுகிறது.
கண் பார்வையற்ற தன் அவல வாழ்வின் ஆற்றாமை சொல்லித் தீருவதில்லை. அது அனுபவித்துத் தீர்க்க வேண்டியது. இயலுமானால் தானே ஒரு தீர்வைக் கண்டு பிடிக்க முயல வேண்டும். அதன் மூலம் தன் நிம்மதியைத் தானேதான் தேடிக் கொண்டாக வேண்டும்.
எங்கே இந்த ரெஞ்சிதம் பிள்ளையைக் காணவில்லை? எங்கேதான் போய்த் தொலையுமோ? விளையாட்டுப் பிள்ளையையெல்லாம் வேலை வாங்கினால் இப்படித்தான்.  இந்தச் சங்கரபாண்டி வந்தானே…அவனையாவது கூட்டிக் கொண்டு போகச் சொன்னோமா…?
பக்கத்தில் பால்கவுச்சி வாடை…ரெஜினாவாகத்தான் இருக்க வேண்டும்.
மாமா…என்ன தேடுதீ்ங்க… - அதற்குள் அந்தக் குரல்.
பொறவாசலுக்குப் போவணும்…பீடி, தீப்பெட்டியைத் தேடுதேன்…இ்ந்த ரெஞ்சிதம்புள்ள எங்க போச்சுதோ?
வாங்க…நா கூட்டிட்டுப் போறேன். இங்க மாடக்குழிலல்ல இருக்கு…
அவர் எழும்போது துண்டு கீழே விழ,அதை எடுக்க அவள் குனியப் போகிறாள் என்பது மெல்லிய அசைவிலேயே அவர் உணர்ந்து கொள்ள, அது கெடக்கட்டும், பெறவு எடுத்துக்கலாம் என்று அவர் கையை நீட்டிச் சொல்ல, அவள் நெஞ்சில் அவர் கை பட்டு விடுகிறது. அவருக்குள் இருக்கும் படபடப்பை உணர்த்தும் அருமையான கட்டம் இது.
மெள்ள வாங்க…என்று பார்வையற்ற அவரின் இடுப்பைச் சுற்றி கையைக் கோர்த்துக்கொண்டு அழைத்துச் செல்கிறாள் அவள்.
இந்தக் கெழடால உனக்குஎம்புட்டுத் தொந்தரவு? ஆண்டவர் அழைக்க மாட்டேங்கிறாரே?
ரெண்டாங்கட்டுக்குள் நுழைந்தபோது யோசித்து மெல்லக் கேட்கிறார்….
ரெஜினா….கோயில்பிச்சை வந்தானாம்மா….?
அவுக வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு….ஞாயித்துக்கெழமை வந்ததுதான்…
மடேர் மடேர் என்று தலையில் அடித்துக் கொள்கிறார். நல்லா வாழ வேண்டிய உன்னைய இந்த ஆடுகாலிப்பயலுக்குக் கட்டிவச்சு உன் வாழ்க்கையைப் பாழாக்கிட்டேனேம்மா…..
அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா….எங்க வீட்ல விட நா இங்க நல்லாத்தான் இருக்கேன்…சொல்லும்போது அழுகிறாள் அவள்.
ஆமா…அந்தக் காலத்துல நீரு இந்த அலங்காரத்தம்மாளப் படுத்தாத பாடா…? –ஒம்ம வாரிசும் ஒம்ம மாதிரியே அலையுது….
பதில் பேச வாய் வரவில்லை இவருக்கு….மனதுக்குள் திட்டிக் கொள்கிறார்.
யாரு ரெஞ்சிதமா…. – வெங்காய வாடை கண்டு கேட்கிறார்.   அதென்ன எப்பப் பார்த்தாலும் வெங்காயத்தக் கடிச்சிக்கிட்டு…?
சும்மா வீட்டுக்குள்ளயே கெடக்கம்லா…சித்த வெளில போய்ட்டு வந்தாத் தேவல…
அய்யாவ மெதுவாக் கூட்டிட்டுப் போய்ட்டு, கூட்டியாரணும்…தெரிஞ்சிதா…?
புறப்படுகிறார்.
ஒனக்கு அந்த வூடு தெரியுமா புள்ள…?
யாரு….பரிமளத்தக்கா வீடுதான…
ஆமா…அந்தக் கேடு கெட்டவ வீடுதான்…
இப்படிச் சொல்லும் அவர், அவளைப் பார்த்ததும் இரக்கத்துக்கு ஆட்படுகிறார். மாடியில் போய் ஒளிந்து கொள்கிறான் அவன். உங்க அப்பாருதான் வர்றாரு…..
அவன் இல்லையாம்மா…?
தயங்கியவாறே அவள் சொல்கிறாள்…வெளில போயிருக்காஉற…
அவென் வெசயமா உன்னைப் பார்த்துப் பேசணும்னுதான் வந்தேன்…ஒன் வீடே கதின்னு கெடக்கான்…பொண்டாட்டி புள்ள, குடும்பம்னு ஒண்ணு இருக்கதே மறந்து போச்சு…நீதான் அவனுக்குப் புத்தி சொல்லி அனுப்பணும்….
தான் சீரழிந்தது போதாதென்று தன் பையனும் தன்னைச் சீரழிக்கிறானே…மருமகளின்  வாழ்க்கை பாழாகிறதே என்று புலம்புகிறது மனம். உரிமையோடு  அவளிடம் கோரிக்கை வைக்கிறார்.
விசும்பல் சத்தம் கேட்கிறது.
அழுதியா பரிமளா…என்னவோ என் ஆத்தாமையச் சொன்னேன். நீயும் வேறே அசல் மனுஷி இல்ல….
நீங்க சொன்னதுல தப்பு ஒண்ணும் இல்ல மாமா…இன்னைக்குக் காலம்பறக் கூட வூட்டுக்குப் போயிட்டு வாங்கன்னுதான் சொன்னேன். எத்தனை நாள் சொல்லியிருக்கேன்…கேக்க மாட்டேங்காகளே…சின்னப் புள்ளலருந்து பழகிட்டேன்…என்னால உன்னைய விட்டுப் போக முடியாதுங்கிறாரு….எனக்குன்னு யாரு மாமா இருக்காக…நா நாதியத்தவ…இவரு ஒருத்தரும் இப்டி வரல்லேன்னா……-சொல்லிக் கொண்டே காபித்தண்ணி எடுத்துவர உள்ளே போகிறாள்.
அதற்கு மேல் என்ன சொல்வது என்று அறியாமல் இவரும் கிளம்புகிறார்.
மாமா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா…
ரஞ்சிதம் அவர் கையைப் பிடித்து அவள் தலைமீது வைக்கிறாள். மோதிர விரலை நெற்றிக்குக் கொண்டுவந்து சிலுவைக் குறியிடுகிறார் அவர். கரத்தரை ஸ்தோத்திரி…கர்த்தரை ஜெபி…மன்றாடி ஜெபி…உனக்கு மனச் சமாதானத்தைத் தருவார்…என்று ஆசீர்வதிக்கிறார்.
அதற்கு மேல் என்ன செய்ய…என்ன சொல்ல….? இரக்கமும் கருணையும் அன்பும் கொண்ட இந்த மனது வேறு என்னதான் செய்யும்? நம்மை மீறிய சக்தி, இறையருள்தான் எல்லாவற்றையும் நிவர்த்தித்தாக வேண்டும்…..
அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். அந்திக் கருக்கலின் அந்தக் கலங்கிய வெளி எல்லாப்புறங்களிலும் பரவிக்கிடக்கிறது. தெளியும்…தெளிய வேண்டும்…..
மிகக் குறைவான வார்த்தையாடல்களில் வெளிப்படும் ஆழமான உணர்ச்சி பாவங்கள் நம் மனதை உருக்குகிறது இச்சிறுகதையில்…
அவளையும் அதற்கு மேல் கண்டிக்க முடியாமல், அன்பும் பாசமும் நிறைந்த அவளிடம் தன் மகனுக்கான, மருமகளுக்கான வாழ்க்கையை விட்டுக் கொடுத்து விடு என்று அன்பு ததும்பவே கருணை மிகக் கொண்டு  வேண்டுகிறார் அவர். அவள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் உணர்ந்தவராய் ஆசீர்வதித்துத் திரும்புகிறார்.
தவிர்க்க முடியாத,  தவறுகளுக்கு இடையிலான நியாயங்கள் அழிக்க முடியாத நிலையில் தக்க வைத்துக் கொள்கின்றன. அவை இந்த உலகத்துக்கான பொது வெளியில் தவறுகளாய்த் தோன்றினாலும், தனி மனித மனப் போராட்டங்களில் ஒதுக்க முடியாதவையாய் நிலைத்து விடுகின்றன. மனிதர்களுடைய எல்லாச் செயல்களுக்கும் எங்கோ ஒருதுளி நியாயமும், தர்மமும் ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதான தோற்றம் புறந்தள்ள முடியாததாய் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.
வண்ணநிலவன் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பில் இந்தப் படைப்பு என் மனதைப் பாடாய்ப் படுத்தி உலுக்கி எடுத்து விட்டது என்பது அத்தனை உண்மை.
                        -----------------------------------------
        




கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...