09 மே 2020

“ஒரு கொத்துப் புல்“-எழுத்தாளர் திரு. எஸ்.வைதீஸ்வரன் சிறுகதைத் தொகுப்பு.-வாசிப்பனுபவம்


“ஒரு கொத்துப் புல்“-எழுத்தாளர் திரு. எஸ்.வைதீஸ்வரன் சிறுகதைத் தொகுப்பு.-வாசிப்பனுபவம்
வெளியீடு:- வித்யுத் பப்ளிகேஷன்ஸ், நெமிலிச்சேரி, குரோம்பேட்டை, சென்னை-44.                                                             --------------------------------------
       படைப்பாளி இயற்கையை, மனிதர்களை, பிற ஜீவ ராசிகளை, மரம் செடி கொடிகளை என்று காணுகின்ற எல்லாவற்றையும் ரசிக்கக் கூடிய ஒருவனாக இருத்தல் வேண்டும். கருணை உள்ளம் கொண்டவனாக, நேச மனம் படைத்தவனாக, இரக்கச் சிந்தை கொண்டவனாக இருந்தால், எந்தவொரு சிறு நிகழ்வும் அவனுக்குள் பாதிப்பை ஏற்படுத்த முடியும். அந்த பாதிப்பின் தாக்கம் அவன் மனதினில் அதீத நெருடலை ஏற்படுத்தி, சதா அவனைத் துன்புறுத்தி, அதற்கு வடிகாலாக  சிறந்த படைப்பை அவன் வழங்குவதற்கு வழி வகுக்கும்.
       செல்லுமிடமெல்லாம் அவனுக்குக் கதைகள் இருந்து கொண்டேயிருக்கிறது.  பார்க்கும், பேசும் மனிதர்களிடமெல்லாம் அவனுக்கு ஏதேனும் ஒன்று கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. காணும் காட்சிகளிலெல்லாம் ஏதோவொன்றை அவன் வித்தியாசமாக உணர்கிறான். தன் வாழ்க்கையோடு  அதனைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளவும், இரக்கச் சிந்தையைப் படர விடவும், தன்னால் இயன்ற அளவிலான உதவிகளைச் செய்யவும் முயல்கிறான்.
       இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையாக அவன் சொந்த வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் அவனுக்குத் துணை நிற்கின்றன. பிறந்த இடம், பெற்றோர், சுற்றம், வளர்ந்த விதம் இப்படிப் பலவும் அவனை உருவாக்கி நிற்கும் அடிப்படை நிலைகளாக அமைகின்றன.
       எழுத்து, தீபம், கணையாழி போன்ற பழம்பெரும் சிற்றிதழ் காலம் முதல் தரம் மிக்க படைப்புக்களைத் தந்து வருபவரான மதிப்பிற்குரிய  படைப்பாளி  திரு எஸ். வைத்தீஸ்வரன் அவர்களின் “ஒரு கொத்துப்புல்” என்ற இச்சிறுகதைத் தொகுப்பைப் படிக்கப் படிக்க மேற்கண்டவாறான எண்ணங்கள் தொடர்ந்து கிளைத்துக் கொண்டேயிருந்தன.
       கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் என்றே அடையாளம் காணப்பட்டிருக்கும் அவர், புனைகதை வெளியிலும் அர்த்தமுள்ள, அழுத்தமான சிறுகதைகளை அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார் என்பதற்கு இத்தொகுப்பு ஒரு சான்று. படிக்க ஆரம்பிக்கும்போதே ஒரு வரி கூட வீணாகக் கூடாது என்று சங்கல்பம் செய்து கொண்டதுபோல் அத்தனை சமூகப் பொறுப்போடு, படைப்புக்குச் செய்யும் மரியாதை உணர்வோடு வரி வரியாக நகர்ந்திருப்பது நமக்கு அவர்மேல் மிகுந்த மதிப்பை ஏற்படுத்துகிறது.
       சொல்ல வந்த கதை பத்துப் பன்னிரெண்டு பக்கங்கள் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்கிற அநாவசியத் திட்டமில்லாமல், சொல்லப் போகும் கருத்து எந்த இடத்தில் முதிர்ச்சி அடைந்து தன்னை நிறுத்திக் கொள்கிறதோ அங்கே அந்தப் படைப்பு முடிந்து போகிறது என்பதை வாசகர்கள் நியாயமாய் உணர்ந்து திருப்தி கொள்ளும் வண்ணம் கருத்துக்கும், எடுத்துக் கொண்ட கருவுக்கும் முதலிடம் கொடுத்து ஒவ்வொரு படைப்பையும் பொறுப்போடு முன் வைக்கிறார் எழுத்தாளர்.
       தொகுதியின் தலைப்பான “ஒரு கொத்துப் புல்” முதல் கதையாய் அமைந்து படிக்கும் மனதுக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒரு படைப்பை மட்டுமே இங்கு சொல்ல வருவதன் மூலம் அடுத்தடுத்த வாசிப்பனுபவங்களை வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் அவசியம் தானே எழும் என்பது சர்வ நிச்சயம். இந்தத் தொகுதிக்கான மேன்மை தலைப்புக் கதை மூலம் உயர்ந்து நிற்கிறது.
       கௌரிகுண்ட் என்ற ஸ்தலத்திலிருந்து கேதார்நாத்தின் உச்சிக்கு குட்டைக் குதிரையின் மேல் ஏறி சுமார் இரண்டு மணி நேரம் சவாரி செய்து வந்த அனுபவத்தை அசைபோடும் அதே  வேளையில் கேதாரநாதரான சிவனைத் தரிசித்து விட்டு மனைவியோடும், மகளோடும் மீண்டும் அதே குதிரையில் ஏறிக் கீழிறங்கும் அனுபவமும் சேர அந்தச் சோக நிகழ்வு கண்ணுக்குப் பட்டு மனதை வேதனைப் படுத்துகிறது. அங்கங்கே நிலச் சரிவு  என்கிற செய்தியைக் கேள்விப்பட்டுக் கொண்டே பாதுகாப்பாய்த் தடம் பதித்து எச்சரிக்கையாய்  இறங்கும் குதிரையின் அனுபவத்தை  மனதில் வாங்கிக் கொண்டு பயணிக்கும் அதே வேளையில் பாதி மலை இறங்குகையில் கீழேயிருந்து வரும் தகவல்கள் மனதைச் சங்கடப்படுத்துகின்றன.
       இவர்கள் ஏறிய குதிரை பத்திரமாய்க் கொண்டு சேர்த்திருந்தாலும் எதிர்பாராவண்ணம் நடந்திருக்கும் ஒரு விபத்து இவர்களைக் கலக்கமடையச் செய்ய பரபரப்புடன் நெருங்கிப் போய்ப் பார்க்கையில் மனது அதிர்ச்சியுறுகிறது. நிலச்சரிவில் பாறை உருண்டு வந்து இளைப்பாறிக்கொண்டிருந்த குதிரையின் பின்னங்கால்களின்  மேல் விழுந்து அதன் நுரையீரல் புடைத்துப்போய் நோவில் அது கிடக்கும் காட்சி இவர்களை வேதனைப்படுத்துகிறது. சற்று நேரத்தில் அந்தக் குதிரை இறந்தும் போகிறது.
       சுற்றுலா வந்த இடத்தில், புண்ணிய தரிசனம் கிடைத்த அந்த நாளில் இப்படி வேதனையான நிகழ்வினைக் காண நேர்கையில் ஒரு படைப்பாளியின் மனம் சாதாரணமாகவா விலகிச் சென்று விடும்? மனித நேயம் மிக்க ஒரு படைப்பாளிக்கு இருக்கும் இரக்கச் சிந்தையும் கருணையும் காணும் அவரையும்  மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாக்குகிறது.
       அது என்ன அந்தக் குதிரைக்கான விடுதலையா?                                                          அது இந்த மாதிரிக் கோர விபத்தாகவா இருந்திருக்க வேண்டும்? என்று கேட்டுவிட்டு, இந்த வாழ்க்கையை அது சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழவில்லை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? என்றும் கேட்கிறார்.
       வாழ்க்கையே சமரசங்களின் திரட்டுதான். எத்தனையோவிதமான சமரசங்கள். அன்றாட வாழ்க்கைக்கான போராட்டங்கள் அதற்குள் அடங்கிய உணவுக்கான போராட்டங்கள்  என்று அமிழ்ந்து போனவை.  மனிதனைப்போல்தான் அந்தக் குதிரைக்கும் அதன் வாழ்க்கை சமரசங்களின் அடையாளமாய்த்தான் அமைந்திருக்க வாய்ப்பு உண்டு.. அமைந்த அந்த வாழ்க்கையை அது சந்தோஷப்படுத்திக் கொண்டதா? என்பதே கேள்வி என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.
              படைப்பாளியின் பார்வை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதேனும் திட்டமுண்டா என்ன? அவன் காணும் காட்சி ஒரு கோணத்தை வெளிப்படுத்துகிறதென்றால் அதைப் படிக்கும் வாசகனின் மனநிலை அவனை வெவ்வேறுவிதமான தளங்களுக்கும் கொண்டு செல்லும்தானே? அவரவர் அனுபவம் சார்ந்த மனநிலையின் வெளிப்பாடாக அது இருக்கும், இருந்துவிடும் வாய்ப்பு உண்டுதானே?
       இந்தக் கதையில் ஆசிரியரின் மனநிலை அவரை வெவ்வேறு எண்ணங்களுக்கு இட்டுச் செல்லும் அழகு நம்மை மிகவும் ரசிக்க வைக்கத்தான் செய்கிறது. புனைவு என்பது இல்லாமல் காணும் காட்சிகளின் தட்டையான விவரிப்பாய் இருக்குமானால் படைப்பு எந்தவிதமான எழுச்சி மனநிலையையும் கிளர்த்தாது, அடுத்தது என்று தாண்டிப் போக வைத்துவிடும். அப்படியல்லாமல் கண் காணும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு அர்த்தபூர்வமான விவரிப்பை படைப்பாளி நிகழ்த்தும்போது படிக்கும் வாசகனின் மனநிலை துள்ளிப் பாய்கிறது.
       சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து கொண்டு மலையேறும் காட்சியைக் காணுகையில் குதிரைகளுக்குக் கூட, ஏன் எல்லா ஜீவராசிகளுக்குமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்குன்னு நினைக்கிறேன் என்கிறார் மகளிடம். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரின் வாழ்க்கை முறையும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்கிற தத்துவார்த்த ரீதியிலான அந்த வரிகள் நம்மையும் யோசிக்க வைக்கின்றனதான்.
       “பொறக்கிற இடத்தைப் பொறுத்துத்தான் வாழ்க்கை சுகமாகவோ துக்ககரமாகவோ அமைகிறது“-சத்தியமான உண்மைகள்தானே இவைகளும்.
       குதிரைப் பயணம் செய்யும்போது சுற்றிலுமான இயற்கையை ரசிப்பதே பெரும்பாலான மனிதர்களின் இயல்பான வழக்கமாய் இருக்கும். ஆனால் இவர் யோசிக்கிறார்.
       பார்ப்பதற்குக் குட்டையாய் பெரிய ஆகிருதி இல்லாமல் இருக்கிற குதிரை, நம்ம பாரத்தை அநாயாசமாய்த் தூக்கிக் கொண்டு கல்லும் கரடும் வழுக்கலுமாய் இருக்கிற மேட்டுப் பாதையில் ஒரு இடத்தில் கூடக் கால் இடறாமல் ஒரு பொறுப்புள்ள சிநேகிதன் போல் உச்சிவரை ஏற்றிவந்து பத்திரமாக இறக்கி விடுகிறதே...என்று வியப்புறுகிறார். அத்தோடு மட்டுமின்றி அதன் மீது இரக்கம் கொண்டு அந்த ஜீவனுக்கு நாம் எத்தனை நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்? என்று கேள்வி எழுப்புகிறார்.
       மலை மீது ஆக்ஸிஜன் குறைவாய் இருக்கும் என்று மருத்துவரி்டம் தன்னைச் சோதித்துக் கொள்ளும் அவர், அந்தக் குதிரைகளைப் பற்றிச் சிந்திக்கிறார்.
       “பெரிய ஆத்மாக்கள்தான் இவை. எந்த பாரத்திற்கு எந்தளவு பலத்தையும் வேகத்தையும் பிரயோகப்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.  மனிதன் என்கிற பாவ மூட்டைகளை ஓயாமல் உச்சியிலிருக்கும் சிவனடிக்கு ஏற்றி விடுவதையே தன் ஜீவனமாகக் கொண்டு மடிகின்ற இவைகள் மிருக வடிவில் மறைந்திருக்கும் ஞானிகள்”. இவற்றின் செயல்பாட்டை உற்று நோக்குகையில் நமக்கு நம் வாழ்க்கையை, எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சமாளிக்க ஏதோவொருவிதத்திலான தெளிவு கிடைக்க இவை உதவுகின்றனதானே...!“
       இறுதிக் காட்சியாக மல்லாந்து விழுந்து கிடக்கும் அந்த குதிரையின் வாயில் இன்னும் தின்னப்படாமல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கொத்துப் புல்      அதன் போராட்டமான வாழ்க்கையை, அதுநாள் வரையிலான  அதன் கஷ்டங்களை, அந்த எல்லாவற்றிலிருந்தும் அதற்குக் கிடைத்த விடுதலையை நமக்குச் சொல்கையில், இந்த வாழ்க்கையின்மீதான தீராத பற்றை அது  தனக்குச் சொல்வதாக வாசகர்களாகிய நமக்குச் சொல்கிறார் ஆசிரியர்.
       ஒரு சிறுகதையின் மூலம் பல்வேறு நற்சிந்தனைகளை நம் மனதில் விதைக்கும் “ஒரு கொத்துப் புல்” என்ற இந்தப் படைப்பு நம் மனதில் நீங்கா இடத்தைப் பெறுகிறது. ஒரு தொகுதியை விறு விறுவென்று படித்து முடித்து விடுதல் என்பது வெறும் வாசிப்பின்பாற்பட்டது. ஆனால் படைப்பின் ஊடாகப் பயணம் செய்கையில் அது ஏற்படுத்தும் தாக்கம், அடுத்து அடுத்து என்று பக்கங்களைப் புரட்ட விடுவதில்லை நம்மை. ஒரு தேர்ந்த வாசகனால், ஆழ்ந்த ரசிகனால் அவ்வாறு இயந்திரத்தனமாய் நகர்ந்து விட முடியாது. மனதுக்குள் பெரிய பாரத்தை ஏற்றிவிடும் ஒரு படைப்பு குறைந்தது சில தினங்களுக்காவது அவனைப் படுத்திக் கொண்டேதான் இருக்கும். தொடர்புடைய சிந்தனைகளை அவனுக்குக் கிளர்த்தி விடும். மேன்மையான எண்ணங்களை உள்ளடக்கிய படைப்புக்களின் தார்மீக பலம் அது. அதற்கு படைப்பாளி சுத்தமானவனாகத் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சத்தியமான உண்மை.
       இந்த ஒரு சிறுகதை இப்படிப் பலவாறு என்னை அலைக்கழித்து என் வாசிப்பை நிறுத்தி யோசிக்க வைத்து மனதில் பெரும் பாரத்தை ஏற்றிவிட்டிருக்கிறது. இதன் பிற படைப்புக்களும் அடுத்தடுத்துத் தொடரும் இப்புத்தகத்தின் மேலும் சில படைப்புக்கள் பற்றியும் சொல்லியாக வேண்டிய கடமை இருப்பதாக நான் உணர்கிறேன். மொத்தம் 26 கதைகளைக் கொண்ட இத்தொகுதிக்கு முதன்மையாய் இந்த வாசிப்பனுபவத்தை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
                                  ---------------------------------------------------கருத்துகள் இல்லை: