11 மே 2020

தி.ஜா.ரா.வின் “ஸ்ரீராமஜெயம்” – சிறுகதை – வாசிப்பனுபவம் – உஷாதீபன்

தி.ஜா.ரா.வின் “ஸ்ரீராமஜெயம்” – சிறுகதை – வாசிப்பனுபவம் – உஷாதீபன்                   வெளியீடு:- “தி.ஜானகிராமன் சிறுகதைகள்” - காலச்சுவடு பதிப்பகம்-நாகர்கோயில்.


     ரு கதையில் கதா பாத்திரங்கள் மௌனமாக-குறைவாக-மிகச் குறைவாகப் பேசி நகரும்போது – எதற்காக இப்படியொரு காரெக்டர் என்கிற புதிரோடேயே நாமும் நகர்கிறோம். எப்பொழுதாவது பேசும்போது-என்ன சூட்சுமம் அதில் என்று தேட ஆரம்பிக்கிறோம். அந்த எழுத்தாளரை நினைத்து வியந்து போகிறோம். அவரை நோக்கி மேலும் நம் வாசிப்பை விரிவு செய்கிறோம்.
       ஒரு படைப்பில் தன் செயல்களை வெகு அமைதியாக, நிதானமாக மேற்கொள்ளும் ஒருவர், எதை எதிர்நோக்கி, எதை நிறைவேற்ற இப்படி செயல்படுகிறார் என்று யோசனையோடேயே வாசிப்பைத் தொடர்கிறோம். அதன் விளைவு என்னவாகப் போகிறது என்பதில் நமக்கொரு ஆர்வம் பிறக்கிறது. அது நன்மையோ-தீமையோ அல்லது அந்தப் பாத்திரத்தின் நியாயமோ அதை உணர்கையில் ஆஉறா என்று பாராட்டவோ, அடடா…! என்று பரிதாபம் கொள்ளவோ வைக்கிறது.
       தி.ஜா.ரா.வின் “ஸ்ரீராமஜெயம்“ கதையைப் படித்தபோது எனக்கு இப்படிப் பலவும் தோன்றின. இப்படியொரு தலைப்பை வைத்து, அந்தக் காரெக்டரையும், அதன் மன உணர்வுகளையும், ஒழுக்க சீலத்தையும், மறைபொருளாக-பாத்திர அமைதியாக உணர்த்திக்கொண்டே வாசகனை ஊடுருவி அறியச்செய்து கொண்டே செல்லும் ஆழமான பயணம் இக்கதையில் சீராக அமைந்துள்ளது.
       போயும் போயும் இதற்காகவா செய்தார் என்று தோன்றும் அதே வேளையில் எத்தனை தூரம் அவரின் கஷ்டங்கள் அவரை நோக வைத்திருந்தால், எவ்வளவு வேதனைகளை அவர் தன் வாழ்வில் சுமந்திருந்தால்-அப்படியாவது ஒரு தீர்வு வராதா என்றும் – துன்பமும் துயரமும் விலகாதா என்றும் நினைத்திருப்பார் என எண்ண வைக்கிறது நம்மை.
       தனது சர்வீசும், முதுநிலையும், அனுபவமும் மதிப்பாய் உணரப்படாத ஓரிடத்தில் தொடர்ந்து அயராத உழைப்பை நல்கி என்னதான் பயன்? என்கிற சராசரி மனிதனின் நோக்கு-அதை வெளிச்சமிட்டுக் காட்ட வகையில்லாமல் ஒடுங்கி-ஒடுங்கியே கழியும் நாட்கள்-இப்படியான வேதனைகளூடேயே கழிக்கும் ஒரு சாதாரண – சராசரி மனிதனின் அதிகபட்ச செயல் என்பது விலையில்லாத தன்மையாய் அமைந்து போவதும், அது அவரைத் தவறு செய்தவர் என்ற இடத்தில் கொண்டு அமர்த்தி விடுவதும்-அந்தோ பாவம் என்று நம்மை இரக்கம் கொள்ள வைப்பதும் – இப்படியான பல்வேறு உணர்ச்சி நிலைகளுக்கு நாம் ஆளாகிறோம்.
       வரிக்கு வரி ரசனையை மிதக்க விடும் அழகு தி.ஜா.ரா.வினுடையது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் ரசனையை, அழகியலைத் தொட்டுச் சென்று கதையை ஓட்டுவதில்லை.  ரசனையும் ரொம்ப நுணுக்கமாய் இருக்கணும். ஒரு மனிதனின் இயல்புகள், செயல்கள், அதன் தனித்தன்மை என்று உணரப்பட வேண்டும். அதை எழுத்தில் வாசகன் ரசிப்பது போல் சுருங்க, பொருத்தமான வார்த்தைகளில் வழங்கும் திறன் வேண்டும்.
       அந்த அச்சாபீஸில் காவல்காரராக இருக்கும் வேலுமாரார் இருபது வருஷம் சர்வீஸ் போட்டவர். இவர் பார்வையிலேயே முழுக்கதையும் சொல்லப்படுகிறது. அவருக்கு மூத்த மூதாதை ராகவாச்சாரி இருபத்தாறு வருஷம் சர்வீஸ் போட்ட ப்ரூப் ரீடர். அத்தனை வருஷ சர்வீசுக்கு ராகவாச்சாரிக்கு என்ன பக்குவம் என்பதை வேலுமாரார் நன்கு உணர்ந்து அவர் மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர்.
       வேலுமாரார் ராகவாச்சாரிக்கென்று இதயத்தில் ஒரு இடம் ஒதுக்கியிருந்தார். இருபத்தாறு வருஷமாய் ஒரே மேஜையில் அமர்ந்து கோடானு கோடி அச்சுப் பிழைகளைத் திருத்திய புண்ணியவான், மன்னித்து ஒதுக்குகிற காருண்யன் அவர் என்கிற மதிப்பு இவருக்கு அதீதம்.
       அதே சமயத்தில் தன் கடமையின் மீதான கருத்தில், கவனமாய்க் இருந்து மனதில் பதிய வைத்துக் கொண்டவையும் சில உண்டுதான். தினமும் எட்டரை மணிக்கு ஆரம்பிக்கிற ஆபீசுக்கு ஒரு நாள் கூட சரியான நேரத்துக்கு வராதவர் ராகவாச்சாரி. எட்டு முப்பத்தைந்திலிருந்து ஒன்பதே காலுக்குள் ஏதாவது ஒரு நிமிஷத்தில் ஆபீசுக்குள் நுழைந்து விடுகிறவர். மதியச் சாப்பாட்டிற்கென்று வெறும் ஐந்து நிமிடத்திற்கு மேல் செலவழிக்காத பெருந்தகை. ஆபீசுக்குள் இம்மியும் நேரம் வீணாக்காதவர். கருமமே கண்ணாயினார். ஏன் லேட்? என்று அவரை யாரும் கேட்டதுமில்லை. வெறும் கண்ணாடியைக் கொண்ட வலது கண்ணும், பூதக் கண்ணாடியாய் விழிக்கும் இடது கண்ணுமாக அதன் பின்னால் மறைந்திருக்கும் அவருக்கான நாலு பெண்டுகள், மூன்று ஆண் குழந்தைகளுடனான அவரது  ஏழ்மை பிம்பம், முதலாளியைக் கூடக்  கேள்வி கேட்கவிட்டதில்லை.
       அவருக்கு ஆசை கிடையாது. அந்த ஆபீசில் நடந்த எத்தனையோ வேலை நிறுத்தங்களில் எதிலும் அவர் கலந்து கொண்டதுமில்லை. கலந்து கொள்ளவில்லையே என்று யாரும் அவருடைய வெள்ளி விளிம்பு மூக்குக் கண்ணாடியைப் பிடுங்கியதில்லை. அவர் காக்கிச் சட்டையைக் கழற்றியதுமில்லை. முதலாளிக்குத் தெரிந்த வறுமைப் பிம்பம் தொழிலாளிகளுக்குத் தெரியாதா என்ன?
       ராகவாச்சாரி வேலை செய்யும்போது இந்தண்டை அந்தண்டை பார்ப்பதில்லை. அவ்வளவு கவனம், கடமையுணர்வு. அவர் மேஜைக்குப் பின்னால் எப்போதாவது நேரம் ஒழிந்தால் அமைதியாக வந்து நிற்பார் வேலுமாரார். சாமி பேனாப் பிடித்து திருத்தும் அழகே தனி. கழுத்துப் பகுதியில் பிடிக்காமல், உடம்புப் பகுதியில் அதாவது வயிற்றுப் பகுதியில்  பேனாப் பிடித்து எழுதுபவர்கள் விசேஷமானவர்கள் என்று அவருக்கு ஒரு அபிப்பிராயம் உண்டு. அதன் மீதான மதிப்பு அவர் மீது.
என்னவோ அவர் மீது ஒரு தனிப் பரிவு. தனி அநுதாபம். வறுமை-இப்படிப் பெருமையும் பொறுமையுமாக நடமாடுகிற விந்தையை ராகவாச்சாரி மூலம் கண்டார் அவர். 
ராகவாச்சாரி அந்த ஆபீசில் எங்கு வேண்டுமானாலும் போகலாம், வரலாம். அவ்வளவு உரிமையும் உண்டு அவருக்கு. வீட்டைச் சுற்றி வரும் பூனைக் குட்டியை அடுக்களைக்குள் வராதே, இங்கு வராதே, அங்கு வராதே என்று கூற முடியுமா?
அவர் இந்த நாலு நாட்களாகத்தான் சற்று முன்னதாக வேலைக்கு வந்து விடுகிறார். அதாவது எட்டு மணிக்கே.
என்னா சாமி இவ்வளவு சீக்கிரம்? வேலுமாராரின் கேள்வி.
ஒரு நாளைக்கு ஒழுங்காயிருப்பமே…? என்ற அவரின் பதில் இவரைச் சந்தோஷப்படுத்துகிறது. இந்த மனிதனையும் இறைவன் சந்தோஷப்படுத்திப் பார்க்கிறானே என்று ஆச்சரியமுறுகிறார். அடுத்தடுத்து நாலு நாளைக்கு அதே நேரத்துக்கு வருகிறார் ராகவாச்சாரி.
அட்சய திரிதியைக்கு வருடா வருடம் காஞ்சிபுரம்  கருட சேவை பார்க்க மூன்று நாட்கள் லீவு எடுத்துப் போகும் அதிசயத்தை விட, இந்த எட்டு மணி வரவு மிகுந்த ஆச்சரியப்படுத்துகிறது வேலுமாராரை.
நாலு நாளைக்குப்பின்,  நாளைக்கு நான் லீவு போட்டிருக்கேன்…வரமாட்டேன் என்கிறார்
என்னா சாமி அதிசயம் என்று வேலுமாரார் கேட்க….ஊரிலிருந்து அண்ணா வந்திருப்பதாகவும் அவரோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
ஆனால் சொல்லியதற்கு மாறாக,மறுநாள் காலையில் ஏழே முக்காலுக்கு ஆபீஸ் வந்து நின்ற போது வேலுமாராருக்கு சற்றுத் திகைப்பாகத்தான் இருக்கிறது.
மனதில் அசைபோடும் எண்ணங்கள், மனிதனைத் தடுமாற வைக்கின்றன. வாழ்க்கையில் தப்பே செய்யாதவன், காலம் பூராவும் நேர்மையாய் நின்றே கழித்தவன், எந்த முறைகேடான வரவுக்கும் ஆசைப்படாத மனது கொண்டவன், ஒரு அல்ப சந்தோஷத்திற்காக ஒரு அல்ப ஆசையின் நிமித்தம் கொள்ளும் மனத் தடுமாற்றத்தின் அடையாளங்களாய் ராகவாச்சாரியின் செய்கைகள் அமைகின்றன. அது அவர் மனதிற்கு மட்டும் தெரிந்த உண்மை.
அவரை கடந்த இருபதாண்டுகளாய்க் கவனித்து வரும், அவர் மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருக்கும், வேலுமாராருக்கு அவரின் இந்தச் செய்கைகள், கடந்த நான்கைந்து நாட்களாய் அவர் நடந்து கொள்ளும் விதங்கள் எல்லாமும் சங்கடத்தோடு கூடிய சந்தேகத்தை அவர் மீது எழுப்புகின்றன. எதுக்காக சாமி இப்டி அல்லாடுறாரு….?
கொத்தவால் சாவடிக்கு வந்தேன்…கறிகாய் வாங்கணும்…அண்ணா வந்திருக்காரு….முதலாளிட்டப் பணம் வாங்கணும்…
நேத்தே வாங்கியிருக்கலாமே….?
என்னவோ அப்பத்  தோணலை…..!
சரி…சரி..இருங்க.. – என்கிறார் மாரார்.
ராகவாச்சாரி வெளியே ஒரு நாற்காலியில் உட்காருகிறார். பிறகு உள்ளே சென்று உதவி மானேஜர் இருக்கையில் போய் அமர்கிறார். அங்கும் இருப்புக் கொள்ளாமல் எழுந்து டெலிபோன் ஆபரேட்டர் மேரி டேபிளில் சென்று சற்று நேரம் அமர்கிறார். அதுவும் பிடிக்காமல் கடைசியில் முதலாளியின் கண்ணாடி அறைக்குள்ளே சென்று விசிட்டர்ஸ் உட்காரும் எதிர் இருக்கையிலேயே அமர்ந்து விடுகிறார்.
அவரின் செய்கைகளை வேலுமாரார் கவனித்துக் கொண்டேயிருக்கிறார். ஏன் இப்டியிருக்கார் இன்னிக்கு?
ராகவாச்சாரியின் அலைபாயும் மனதை வெளிப்படுத்துகிறது அவரது செய்கைகள். எல்லா நல்ல மனிதர்களும் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அல்லது சில கட்டங்களில் தடுமாறித்தான் போயிருக்கிறார்கள். வாழ்க்கைச் சூழல்கள் அவர்களை அப்படிக் கொண்டு நிறுத்தி விடுகின்றன…. ஆனாலும் நல்லவனாய் இருப்பவன் என்றும் தடுமாறிவிடக் கூடாது என்பதுதான் சத்தியம். வாழ்க்கை பூராவும் தரித்திரமும், ஏழ்மையும், நோயும் நொடியும் துரத்தினாலும் எதற்கும் ஆசைப் படாத தூய  மனது கொண்டவன்தான் மிகுந்த செல்வம் படைத்தவன். இறைவன் விதித்த வழி என் பயணம் என்று தொடர்ந்து சாவை வெல்பவன் அவன்.
ஏதோ ஒரு கட்டத்தில் அல்ப ஆசைகளுக்கு மனம் விழைந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்….அது அதுகாலம் வரையிலான ஒருவனது அப்பழுக்கற்ற தூய்மையை பங்கம் பண்ண வைத்து விடும் பெருத்த அபாயம் உண்டு.
அப்படியான பெரிய்ய்ய்ய்ய ஆசைக்கு உட்பட்டு ஒன்றும் ராகவாச்சாரி தவறிழைக்கவில்லை. ஆனாலும் ஒரு  அல்ப விஷயத்திற்காக அவர் இதைச் செய்திருக்க வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. அப்போதும் கூட வேலுமாரார் அவர் சார்ந்து வைத்திருக்கும் மதிப்புக்குக் கொடுக்கும் மரியாதை நம்மை வியக்க வைக்கிறது. அவர் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.
மனிதர்கள் எப்போதாவது தட்டுத் தடுமாறி, நிலை கொள்ளாமல் அல்லது தன் நிலை மயங்கி தவறிழைத்து விடுவது உண்டுதான். அதைப் பெரிசு படுத்தாமல் ஒதுக்கி விடுவதே சாலச் சிறந்தது…ஏதோ…தெரியாம நடந்து போச்சு….அவ்வளவுதான். அதுதான் அந்த மனிதனின் அது நாளைய வரையிலான நேர்மையையும், ஒழுக்கத்தையும் உழைப்பையும் மதித்ததாகும் என்கிற நீதி இக்கதையில் நின்று நிறைவேறுகிறது. அது வேலுமாரார் மூலமாகவும், ஏன் அந்த நிறுவனத்தின் முதலாளி மூலமாகவும் கூட நிலை நிறுத்தப்படுகிறது. ஆனாலும் அதை வேலுமாரார் கவனித்து அவரைத் தடுக்கும் அந்த நிகழ்வு….? நம் மனசை என்ன பாடு படுத்துகிறது?
சந்தேகப்படுவதற்காகத்தானே அவருக்கு சம்பளம்? அதுதானே அவருக்கு வேலையே…!
இப்படி வாங்க சாமி…ஒரு விஷயம்…..
எனக்கு நிக்க நேரமில்லை…..
உங்க பையைப் பார்க்கணும்…..
என் பையையா…அதில எட்டணாத்தான் இருக்கு…
சட்டைப்பையை இல்ல…கைப்பையை….-என்று வாங்கிப் பார்த்தே விடுகிறான்.
என்னடாது அதிகப்பிரசங்கித்தனம்….?
இந்த இடத்தில்தான் வேலுமாராரின் பண்பாடு வெளிப்படுகிறது.
கத்தாதீங்க…நீங்க கத்தினீங்கன்னா மத்தவங்களுக்குத் தெரிஞ்சி போயிடும்… அப்படி அசிங்கம் பண்ண வேண்டாம்னு பார்க்கிறேன்…முதலாளி வரட்டும். உங்களை கண்ணாடி ரூம்ல கொண்டு நிறுத்தறேன்.கதவைச் சாத்திக்கிட்டு இதைச் சொல்றேன். அப்புறம் அவர் சொல்றபடி கேட்கிறேன். ஒருத்தருக்கும் காதிலே விழாது…..
நீ சொல்றதை அவர் நம்பிடுவாரா?
நான் எனக்குத் தோணறைதை அவர்ட்டச் சொல்லணும். அது என் கடமை.இல்லாட்டி முதலாளிக்கு செய்ற துரோகமாயிடும்…
நம்பி….என்னை வேலையை விட்டுத் தூக்கிட்டார்னா? ஏழு குழந்தைகள் பட்டினி கிடக்குமே…யோசிச்சியா?
நம்மள் சிரசிலே எப்படி லிகிதமோ?-இது சுருக்கமாக சொல்லியிருக்கும் நிகழ்வு. ஆனால் கதையின் உயிரே இந்த நிகழ்வும், இதற்கான வேலுமாராரின் விசாரணையுமாக ஊசலாடும் இடமாய் அமைந்து விடுகிறது.
ஐந்நூறு பக்கம் நோட்டு…ஒன்றுமே எழுதாத புதிய நோட்டு….முதலாளி மேஜை மீது இருந்த நோட்டு….
என்னய்யா இது…?.முதலாளியின் கேள்வி.
தினப்படி கணக்கு எழுதன்னா இதமாதிரி செய்யச் சொன்னேன்…….
       எனக்கு வேணாம்…ஏதோ பார்த்துண்டேயிருந்தேன். அசதி மறதியா பைக்குள்ள போட்டுண்டேன் போல்ருக்கு….
       அப்போ மேலாக இல்ல பைல இருந்திருக்கணும்….துண்டு எப்டி மேலே வந்திச்சு…. –பையைச் சோதனை செய்திருந்த மாராரின் பதில்.
       என்னைக் கேட்கப்படாதா…இத மாதிரி பத்து நோட்டுப் பண்ணித் தரமாட்டனா…?சரி…சரி…போம்…! ஏய் மாரார்…பைண்டர்ட்டச் சொல்லி பத்து நோட்டு ரெடி பண்ணச் சொல்லு…..
       சரி…போமய்யா…போம்..போய் வேலையைப் பாரும்…இனிமே எதாச்சும் வேணும்னா எங்கிட்ட கேளும்..எதுக்கு இந்த அசட்டுத்தனம் இந்த வயசிலே…..எழுந்திரும்…! –விஷயம் முடிந்தது. முதலாளியின் விசாரணை அவருக்கும், அவர் வயசுக்கும்,  அவர் சர்வீசுக்கும்,ஏன் அவரின் குடும்ப நிலைமைக்குமே கொடுத்த அதி மரியாதை என்று கொள்ளலாமா?
       வெளியேறும் ராகவாச்சாரிக்கு அன்று அவர் லீவு எடுத்தது அறவே மறந்து போகிறது. பாவம்…அவரின் தடுமாற்றம் நமக்கு வேதனையளிக்கிறது. இந்த மனுஷனுக்கு ஏன் புத்தி இப்டிப் போகணும்? எல்லாம் கெட்ட நேரம்…! ஒரு சராசரி மனிதனின் வேதனை இதுவாகத்தான் இருக்கும்….மாராரைப் போல், அவர் முதலாளியைப்  போல் நாமும் ராகவாச்சாரியின் சார்பாகவே நிற்கத் தலைப்படுகிறோம். அதுவே மனிதாபிமானம்.
ராகவாச்சாரி எதற்காக அந்த ஐநூறு பக்க பைன்ட் நோட்டை எடுத்தார்….? புரிகிறதா உங்களுக்கு….? கதையின் தலைப்பைப் பாருங்களேன்….!!!
                           --------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...