09 மே 2020

“ரா.கி.ர.டைம்ஸ்“ – ரா.கி.ரங்கராஜன் – வெளியீடு-சிறுவாணி வாசகர் மையம், கோவை. –வாசிப்பனுபவம்


“ரா.கி.ர.டைம்ஸ்“ – ரா.கி.ரங்கராஜன் – வெளியீடு-சிறுவாணி வாசகர் மையம், கோவை. –வாசிப்பனுபவம்


பதிப்பகம்:- பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஉறால், சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர் போஸ்ட், கோயம்புத்தூர்-641038 (siruvanivasagar@gmail.com)
       குமுதத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள். நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்த அவர் ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள் என்று எழுதியுள்ளார். டைம்ஸ் என்ற வாராந்திர செய்தித்தாளில் சுமார் 12 வருடங்கள் தொடர்ச்சியாக “நாலு மூலை” என்ற தலைப்பில் அரசியல், நாட்டு நடப்புகள், சினிமா, விளையாட்டு, நகைச்சுவைத் துணுக்குகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அரைப்பக்கக் கட்டுரைகள், பெரிய கட்டுரைகள் என்று எழுதியுள்ளார். அண்ணா நகர் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளிவந்த “நாலு மூலை” என்ற தலைப்பிலான கட்டுரைகளைக் கதம்பமாகத் தொகுத்து “ரா.கி.ர. டைம்ஸ்“ என்ற தலைப்பில் தற்போது கோவை, சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டிருக்கிறது.
       ரா.கி.ர.வின் மூன்று நாவல்கள் திரைப்படமாகியுள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் வெளிவந்துள்ளன.. சுஜாதா இவரைப்பற்றி மிகப் பெருமையாகச் Disciplined, Beautiful writing என்று சொல்லி இவர் எழுத்தைப் பெருமைப்படுத்துகிறார். திரு.ரா.கி.ர.வின் “திக்…திக்…கதைகள்“ என்று ஒரு தொகுப்பு மிகவும் ஸ்வாரஸ்யமானது. ஜனரஞ்சகமான எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் எத்தனை விஷய ஞானம் உள்ளவர் என்பதை இவரது கதைகள் மூலமும், கட்டுரைகள் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம்.
       குரங்கும் சாணக்கியனும் என்ற கட்டுரையில் குல்லா வியாபாரியைப் பற்றிய கதையைச் சிறுவர்களுக்குச் சொல்லும் இவர், அதன் மூலம் சாணக்கியனின் அரசியல் வித்தகத்தை அவரது வரிகள் மூலம் அழகாக விவரிக்கிறார். சாணக்கிய நீதி இதோ-
       அரசர்கள் எளிய குடிமகன்போல் வாழ்கிற தேசங்களில் குடிமக்கள் “அரசர்களைப் போல் வாழ்வார்கள்.         தோல்வியின் இன்னொரு பெயர் பொறாமை                                                      ஆணவம் மிக்கவரை மரியாதை காட்டி வெற்றி கொள்ளலாம். முட்டாள்களை அவர்களுடைய முட்டாள்தனத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பதன் மூலம் வெற்றி கொள்ளலாம். அறிவாளியை உண்மையின் மூலம் வெற்றி கொள்ளலாம்                                                                       ஒரு வேலையைச் செய்யத் தொடங்கிய பிறகு தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள்.                                                                                                          விஷமில்லாத பாம்பானாலும் சீறுவது அவசியம்.                                                                  வளைந்து கொடுத்தால் வீழ்ச்சிகளைத் தவிர்க்கலாம். எப்போதும் நிமிர்ந்தே நிற்பது மரங்களுக்கும் ஆபத்து. மனிதர்களுக்கும் ஆபத்து.                                                   உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைத்துக் கொள்ள முடியாதபோது மற்றவர்களாலும் முடியாது.
        அர்த்த சாஸ்திரம் என்ற அறிவுநூலை இயற்றிய மேதை பிறக்கும்போதே முப்பத்திரண்டு பற்களோடு பிறந்தவராம். கௌடில்யன், விஷ்ணுகுப்தன் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. நந்த வம்சத்தை ஆண்ட அரசனால் அவமதிக்கப்பட்டபோது தன் குடுமியை அவிழ்த்துக் கொண்டார். இவனை அழிக்கும்வரை அவிழ்ந்த குடுமியை முடிக்க மாட்டேன் என்று சபதம் செய்து, சந்திரகுப்தனை அரசனாக்கிப் பழி தீர்த்துக் கொண்டார் என்பது வரலாறு.
       வாழ்க்கை வரலாறுகள் வீணா? என்ற தலைப்பில் “இட்லிதான் என்னை உலகை வலம் வரச் செய்த்து. என் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய இட்லியை நான் எவ்வாறு மறக்க முடியும்” என்று நூலாசிரியர் காமத் எழுதிய “இட்லி ஆர்கிட் மன உறுதி“ என்ற விசித்திரமான தலைப்பைத் தாங்கிய புத்தக்கத்தைப்பற்றிய அறிமுகம் இந்நூலில் நமக்குக் கிடைக்கிறது. இந்தியாவெங்கும், உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட நானூறு ரெஸ்ட்டாரென்ட்களையும் மூன்று நான்கு நட்சத்திர உணவுவிடுதிகளையும் வெற்றிகரமாக நடத்தும் அதிபர் காமத்தின் சொந்தக் கதையை இந்தப் புத்தகம் சிறப்பாக விவரிக்கிறது.
       தத்தாத்ரேயரை நாம் அறிவோமா? உறிந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டிய மகான்களில் ஒருவர் இவர். இவருக்கு இந்தியாவில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. மூன்று தலைகளும் நான்கு கைகளும் கொண்டவராக அவருடைய திருவுருவம் காட்சி தருகிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் குறிப்பிடுவதாகவும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றைக் குறிக்கின்றன என்றும் கருத்து.
இருபத்து நான்கு குருமார்கள் என்ற அவருடைய உபதேசம் மிகவும் பிரசித்தி பெற்றது என்று அறிகிறோம். பூமி, தண்ணீர், அக்னி, காற்று, பிரபஞ்சம், நிலா, சூரியன், புறாக் கூட்டம், மலைப்பாம்பு, சமுத்திரம், விட்டில் பூச்சி, வண்டு, தேனீ, காட்டு யானை, மான், மீன், வேசி, சின்னப்பறவை, குழந்தை, இளம் பெண், “பாம்பு, அம்பு, சிலந்திப் பூச்சி, ஒரு புழு…இப்படியாக்க் கூறி ஒவ்வொன்றுக்கும் அளித்திருக்கும் காரண காரியங்களுடன் கூடிய விளக்கம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்படியெல்லாம் நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா என்று மனம் எண்ணுகையில் வெட்கமுறுகிறது. இந்த உலகில் ஞானிகள் எப்படிஎப்படியெல்லாம் உருவாகியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நாம் ஒன்றுமேயில்லை என்று சிறுத்துப் போகிறோம்.
எனக்குத் தமிழ் தெரியாது, வித்வான்களும் மனிதர்கள்தான், முன் தூங்கி முன் எழுவது எப்படி? அன்பு கொல்லுமா? தேவை பழி போட ஒரு ஆள், சில நேரங்களில் சில தாத்தாக்கள், அரைக்கால் அர்ச்சுனன், டெல்லியில் சில புத்திசாலிகள், ஒழிக உம்மணாம் மூ!ஞ்சிகள், மனிதனும் மசாலா தோசையும், புள்ளோசை என்று விதவிதமான தலைப்புகளில் இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் அந்தந்தத் தலைப்புகளுக்காகவே உள்ளே செல்லும் ஆர்வத்தைத் தூண்டி, என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று படிக்க வைத்து விடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பற்றிச் சொல்லியுள்ள இரண்டு கட்டுரைகளும் இப்புத்தகத்திற்கு சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளன.
கிருஷ்ணதேவராயரைப்பற்றிய கதையை இவரை எழுத வைத்தது, அவரை அரசன் என்பதை விட சாதாரண மனிதன் என்று வரித்து எழுதுங்கள்..அதாவது “அவனுக்கு முதுகு அரித்தது, சொரிந்து கொண்டான் என்று எழுதுங்கள் என்று சுஜாதா சொல்லியது….அந்த நாவலை எழுதி முடித்து, முழுக்கப் படித்து …“ராட்சஸன்யா நீ” என்று பாராட்டியது….கறுப்பு, சிவப்பு, வெளுப்பு என்ற தலைப்பில் சிப்பாய்க் கலகம் என்று சொல்லப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றினை சுஜாதா எழுத் தலைப்பட்டு அது மூன்றே வாரங்களில் குமுதத்தில் நிறுத்தப்பட்டது, ஒரு குறிப்பிட்ட வாரக் குமுத்தை சுஜாதா தயாரித்தது என்று சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கிய இந்தக் கட்டுரையோடு இந்தப் புத்தகம் முடிவடையும்போது, அத்தோடு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று அலமாரியில் அடுக்காமல்,  அவ்வப்போது எடுத்துப் படிப்போம் என்று அருகிலேயே வைத்துக் கொள்ளத் தூண்டுகிறது.
வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட கோவை சிறுவாணி வாசகர் மையத்தின் “மாதம் ஒரு நூல்” திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள திரு  ரா.கி.ரங்கராஜனின் இந்த “ரா.கி.ர.டைம்ஸ்” என்ற இந்தப் புத்தகம் வாசிப்பை விரும்பும் அன்பர்கள் அல்லாது அனைத்துத் தரப்பினரும் படித்து அறிய வேண்டிய முக்கியமான, தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத புத்தகம் என்று சொல்வதையே விரும்புகிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...