08 அக்டோபர் 2019

“அப்பாவின் கோபம்” - சிறுகதை - அசோகமித்திரன் -வாசிப்பனுபவம் - உஷாதீபன்



“அப்பாவின் கோபம்” - சிறுகதை - அசோகமித்திரன் -வாசிப்பனுபவம் - உஷாதீபன்
வெளியீடு:- காலச்சுவடு, நாகர்கோயில். தலைப்பு:- அசோகமித்திரன் கதைகள் (2 தொகுதிகள்)
------------------------------------------------
     ப்பாவைப் பற்றி ஏறக்குறைய எல்லா எழுத்தாளர்களுமே கதைகள் எழுதியிருப்பார்கள். அதுபோல் அம்மாவைப் பற்றியும். தனியாக ஒரு தொகுதியே போடலாம் என்பதாய் என் அப்பாவைப் பற்றி பல கதைகள் எழுதியுள்ளேன் நான். இங்கே அதைச் சொல்லிக்கொள்வதே மனதுக்குக் கூச்சமான ஒன்றாகத்தான் இருக்கிறது.
     .க்ளாசிக் கதைகள் கொடுத்த ஜாம்பவான்களின் கதைகளைப் படிக்கும்போது நாமெல்லாம் ஒன்றுமில்லை என்றுதான் தோன்றும். இதை நமக்கு நாமே உணர்ந்து கொள்ளுதல்தான் கௌரவம். சிறந்த வாசகனாகவாவது இருக்கிறோமே என்று நினைத்துப் பெருமைப்பட வாய்ப்புண்டு.
     அப்பாவின் சிநேகிதர், அப்பாவின் சைக்கிள், அப்பாவிடம் என்ன சொல்வது? அப்பாவின் கோபம்  என்று அசோகமித்திரனையும் வரிசையாய்ப்  பாதித்திருக்கிறார் அவரது தந்தை.
     அப்பாவின் பாசத்தைச் சொன்ன கதைகள் உண்டு. குணக்கேடுகளைச் சொன்ன கதை உண்டு. சுயநலத்தைச் சொன்ன கதைகள் உண்டு. அப்பாவின் அமைதியைச் சொன்ன கதைகளும் உண்டு. திருட்டுத்தனத்தைச் சொன்ன கதைகள் உண்டு. ஒழுக்கக் கேடுகளைச் சொன்ன கதைகள் உண்டு. அப்பாவை அடையாளப்படுத்தும், நினைவுபடுத்தும் அழியாத பொருட்கள் சொன்ன கதைகள் உண்டு. ஆனால் அப்பாவின் புத்திசாலித்தனத்தையும், சாமர்த்தியத்தையும், அவரது தியாகங்களையும் சொன்ன கதைகள் குறைவு. அம்மாதிரிக் கதைகளை நான் எழுதியிருக்கிறேன். என் தந்தையை நினைக்கும் பொழுதே அவரது உழைப்பும், தியாகமும், எளிமையும், தன்னலமற்ற தன்மையும், குடும்பத்திற்காகவே வாழ்ந்து கழித்த சரித்திரமும்தான்  எனக்கு நினைவு வரும். என் நெஞ்சில் தினமும் அந்த எண்ணங்கள் வந்து வந்து என்னைத் துன்புறுத்தும். வாழ்க்கையில் ஒரு மனிதன் தவறுகள் செய்யாமல் இருப்பதற்கும், சீரான வாழ்க்கையை நடத்துவதற்கும்  ஆதாரமாக அவர்களது பெற்றோர்களின் தியாகங்களை நினைவில் வைத்திருந்தால் போதும்.
     அம்மாதிரி அப்பாக்கள் நம் மேல் கோபப்பட்டதேயில்லையா? நம்மைத் திட்டியதேயில்லையா? நம்மை அடித்ததேயில்லையா? வெளிப்படையாய் அவற்றை செய்யாமல் இருந்திருந்தாலும், அமைதியாய் இருப்பதன் மூலம் இருந்ததன் மூலம் தங்கள் கோபத்தை  நமக்கு உணர்த்தி, நம்மிடமிருந்து விலகி விலகி நின்று, நம்மை அமைதியாய் அந்த விலகலால் தண்டித்து சீர்படுத்தி விடுவார்கள். அப்படியான அப்பாக்களும் சிலர் இருக்கத்தான் செய்தனர். இன்றும் இருக்கின்றனர்.
     அசோகமித்திரனின் இந்த அப்பாவும் அந்த வகையைச் சார்ந்தவர்தான். அதிலும் மனைவியை இழந்த தனிமை அவர்களை மானசீகமாய் வாட்டும்போது, தானே சதம் என்று இருந்த மகனிடம் இன்று தான் சதமாய்க் கிடக்கும்போது, உடல் நோவும் அதனால் ஏற்பட்ட மன பலவீனமும் சேர்ந்து கொண்டு இருக்கவும் முடியாமல்,போகவும் ஏலாமல் கிடந்து தவிக்கும் நிலையில் அது அர்த்தமுள்ள, அர்த்தமற்ற கோபங்களாய் வெடிக்கும் போது அதனை உணர்ந்து பொறுத்துக் கொள்ளும், மலையளவு பொறுமை காக்கும்  பிள்ளைகள் ஒரு தந்தைக்குக் கிடைத்திருப்பானேயானால் அந்தத் தந்தையைப் போல் பாக்கியசாலி வேறு எவரும் இருக்க முடியாது.
     மதியச் சாப்பாட்டிற்கு உட்கார்ந்த புருஷோத்தமிற்கு வந்த அந்த ஃபோன் அர்ஜென்ட் என்ற தகவலோடு காதுக்கு வர, சாப்பிடாமல் டிபன் கேரியரோடு  அப்படியே கிளம்புகிறான். கீழே விழுந்து எலும்பு முறிஞ்சதுபோல் இருக்காம்...என்று ஃபோன் வந்த தகவலை ஷிப்ட் ஃபோர்மேன் சொல்ல....வீட்டுக்கு எதிரேயுள்ள வெற்றிலை பாக்குக் கடைக்காரர்தான் பேசியிருக்கக் கூடும் என்று உணர்ந்து கொண்டு கிளம்புகிறான்.
     வீட்டை அடைய அப்பா தரையில் படுத்திருக்கிறார். மனதுக்கு அந்தக் காட்சி தொந்தரவு செய்ய, ஏம்ப்பா...கட்டிலில் படுக்க வைக்கக் கூடாது? என்று கேட்க, தொடவிடமாட்டேங்குறாருங்க.....என்று சொல்கிறான் அவன். அப்பா கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தவண்ணம் இருக்கிறது.
     அடி பட்டிருக்காப்பா...? எங்கே...? என்று கேட்க பதில் சொல்லாமலேயிருக்கிறார். உடலும் மனமும் ரொம்பவும் சோர்ந்திருக்க, பசியின் உக்கிரம் தீவிரமாகியிருப்பதை உணர்ந்து, அப்பா முன்னாலேயே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கிறான். திடீரென்று ஏதோ நினைவு வர, அடுப்படிக்கு சென்று பார்க்கிறான். நல்லவேளை, அப்பா சாப்பிட்டிருக்கிறார்...சாப்பிட்டு முடித்து, டிபன் கேரியரைக் கழுவிக் கவுத்திவிட்டு, அப்பாவிடம் வந்து அடி பட்ட இடம் எது? என்று சோதனை செய்கிறான்.
     தொடாதே...! கத்துகிறார் அவர். அப்பாவின் கோபம் புரிகிறது.
     என்ன பண்ணப்பா...நான் ஒண்டி ஆளு...அவ பிள்ளை பெத்துட்டு வர ரெண்டு மாசம் ஆகும்...வேணும்னா கூட்டியாந்திடறேன்...அப்புறம் இங்கதான் டெலிவரின்னு ஆகும். செலவு வேறே...என்னை என்ன பண்ணச் சொல்றீங்க...? என்று வருத்தப்படுகிறான். அப்பாவின் முகம் கடுமை குறையாதிருக்கிறது. அந்தக் கடைக்குச் செல்கிறான்.
     தொடையிலே அடிபட்டிருக்கும்னு நினைக்கிறேன். இல்ல சுளுக்காகவும் இருக்கலாம். எதுக்கும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறது நல்லது....-கடைக்காரர் சொல்கிறார். கொஞ்சம் வர்றீங்களா...ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கலாம்...என்க...கடைக்காரர்...தொடவிடமாட்டேங்குறாருங்க...என்கிறான். என்கிட்டப் பேசவே மாட்டேங்கிறாரு....என்று இவன் வேதனைப் படுகிறான்.
     சென்ற தடவை  ஆட்டோவில் எடுத்துப் போக முடிந்தது. இம்முறை அது நடக்காதுபோலிருக்கிறது. அப்போது அப்பா இவ்வளவு கோபத்தில் இல்லை. அவன் நினைத்துக் கொள்கிறான்.
     வயதானவர்கள் கோபத்தில் பேசாமல் இருந்தே தண்டித்து விடுகிறார்கள். ஆனால் அவனை தண்டித்து அவருக்கு என்ன கிடைக்கப் போகிறது? ஒரே பிள்ளையைச் சித்ரவதை செய்து என்ன சாதிக்கப் போகிறார்?
     அப்பா முனகுகிறார். கால் வலிக்கும். இன்னும் வலியை நிறுத்தும் மறக்கும் மருந்து கூடத் தரவில்லை அவருக்கு. அப்பா, இந்தமாத்திரையைச் சாப்பிடுங்கள்...வண்டி கொண்டு வரேன்...ஆஸ்பத்திரி  போகணும்...
     வேஷ்டி ஈரம்...ரத்தக்கறை ஏதுமில்லை. குளியலறையில் வழுக்கி விழுந்திருக்கிறார். வழுக்குவதுபோல் இல்லைதான் அந்த இடம். வயதானவர்களை அப்படிச் சொல்ல முடியுமா?
     அம்மா இப்படியெல்லாம் கஷ்டம் பட்டதேயில்லை. வீட்டில் எல்லோரும் இருக்கும் ஒரு மதிய வேளையில், தூங்கினமேனிக்கே அநாயாசமாக உயிரை விட்டாள். எல்லாவற்றிற்கும் கொடுப்பினை வேண்டும்.
      அம்மா பழங்காலப் பெண். கோபமெல்லாம் அவளுக்குள்ளேயே...
      அப்பா பழங்கால மனிதன். கோபமெல்லாம் பிறர்மேல் விழ வேண்டும். அப்போதுதான் அவர் கோபித்துக் கொண்டிருப்பது அவருக்கே அர்த்தப்படும்....இந்த அர்த்தம் பெறும் முயற்சியில் தேவையே இல்லாமல் உடல் உபாதையை நீட்டித்துக் கொள்வார்....
      இதை இந்த ரீதியில் சிந்திக்கக் கூடிய ஒரு மகன் இருந்தால், அவனை அடைந்ததற்காக அந்தத் தந்தை எவ்வளவு பெருமைப் படலாம்? எந்த அளவுக்கான ஒரு முதிர்ச்சி இந்த வகையில் ஒருவனை எண்ணிப்பார்க்க வைத்திருக்கும்? வாழ்க்கையை இலக்கியம் கற்றுக் கொடுக்கிறது-நம்மை அமைதியானவனாக்குகிறது-நம்மிடம் உள்ள சளசளப்பைப் போக்குகிறது-நம்மை சிறந்த விவேகியாக்குகிறது-என்றெல்லாம் சுந்தரராமசாமி சொல்லியிருப்பாரே-அது எந்த அளவுக்கான உண்மை என்பது இங்கே புலப்படுகிறதா?
     ஒரு டெம்போ பார்க்கிறேன். கட்டுப்போட்டு கூட்டிட்டு வந்திடுவோம்....சொல்லிடட்டுமா?
     அட்மிட் பண்ணிட்டா என்ன? - புருஷோத்தமனின் மனம் துடிக்கிறது.
     நீங்கதான் கஷ்டப்படுவீங்க? உதவிக்கு?
     எனக்குப் பணம் காசு பற்றாக்குறை கூடப் பெரிய கவலை இல்லைங்க...அவர் என் சம்சாரம் ஊருக்குப் போனதிலிருந்து உர்புர்ன்னு இருக்கார்....
     எல்லா வீட்டியும் இருக்கிறதுதான். என் அப்பா என்னை வீட்டை விட்டே விரட்டினாரு....
     வீட்டைப் பூட்டிக் கொண்டு டெம்பொவில் அப்பாவுடன் எலும்பு முறிவு ஆஸ்பத்திரிக்குப் போகிறார்கள்.
     புருஷோத்தமிற்கு அடுத்த நாளைப் பற்றி நினைக்கவே பயமாயிருக்கிறது. பொருளாதார வசதியின்மையும், ஆள் துணையில்லாமையும் அவனைக் கலங்கடிக்கிறது.
     அசோகமித்திரன் கதைகளில் தென்படுகிற எளிமை, சாதாரணத் தன்மை முதிர்ச்சியும் நுட்பமும் கூடியவை. கதாபாத்திரங்கள் தங்கள் இயல்பிற்கும், சூழலுக்கும் ஏற்ப நடந்து கொள்பவர்கள். மீளவே முடியாது என்று தோன்றுகிற துயரங்களும், கஷ்டங்களும் சூழ அவற்றிற்கு நடுவேயும் வீழ்ந்து படாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
     வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது இயல்பாக உருவாகக் கூடிய அவநம்பிக்கை, துயரம், குற்றவுணர்வு, வெறுமை இப்படியான மனத்துயரங்களுக்கு ஆளாகக் கூடியவர்கள்.  
     வாசகனாகிய நாம் அவற்றைப் படித்து உணர்வு பூர்வமாய் உள்வாங்கும்போது நம்மைப் புடம் போட்டுக் கொள்கிறோம். நம்மிடமிருக்கும் தவறுகளை ஒதுக்கப் பழகிக் கொள்கிறோம். நம்மை மேலும் பண்பாளனாய் நிலை நிறுத்திக் கொள்கிறோம். இலக்கியம் நம்மை மேன்மைப் படுத்துகிறது என்கிற உண்மை இங்கே தலை நிமிர்கிறது.
                     -----------------------------------------------------------------
    


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...