“வேஷம்”-
சிறுகதை - பாவண்ணன் - வாசிப்பனுபவம்-
உஷாதீபன்
“இதுதான் இந்த தேசத்தின் சரித்திரம்” என்ற அந்த
முடிவு நமக்கு இப்படி அர்த்தப்படுத்துகிறது. வெள்ளை உள்ளம் கொண்ட மனிதர்கள் - எனவே
அவர்களை சுலபமாய் ஏமாற்றி விடலாம் என்று அந்த மக்களோடு மக்களாய் இருக்கும் ஒருவர்
- கூறுகிறார்.
“நாமும்தானே இதற்கு உடந்தை” - ஆக நம் மக்களே
நம்மை ஏமாற்றுகிறார்கள். அப்படி ஏமாற்றுவதற்கு ஆபத்திற்குப் பாவமில்லையென தலைவரின்
அந்தரங்கக் காரியதரிசியும், காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரியும் வந்து அந்த யோசனையைச்
சொல்கிறார்கள்.
ஒரு பொய்யைச் சொல்வதனால் ஒரு காரியம் சித்தியாகுமானால்,
வேறு ஆபத்தொன்றுமில்லையானால், அந்தப் பொய்க்குப்
பாவமில்லை. நேரமும் காலமும் கூடி நெருங்கிவிட்ட வேளையில், வேறு எப்படிச் சமாளிப்பது?
அந்த யோசனை தக்கதானவொன்றாய், பாதிப்பொன்றுமில்லையே என்கிற சமாதானத்தில் தங்களைத் தாங்களே
ஏமாற்றிக் கொள்கிறார்கள். நிர்வாகமே உடந்தையாகிறது என்பதைவிட நிர்வாகமே அந்த யோசனையைச்
சொல்கிறது எனும்போது மறுக்கமுடியாமல் நடந்தேறுகிறது. மறைக்க வேண்டியதை மறைத்து, கொடுக்க
வேண்டியதைக் கொடுத்தாக வேண்டும். நம் திறமையும், சாமர்த்தியமும் அதில்தான் அடங்கியிருக்கிறது.
இப்படிப் பூடகமாகவே சொல்லிக் கொண்டு போனால் எப்படி?
எளிமையாய் கதையை விளக்கி விடலாமே...!
மொத்தம் ஐநூற்று சொச்சம் பக்கங்கள். தலைவர் எழுதியது.
அந்த தேசத்தின் சரித்திரம். அரசியலைப் போலவே
எழுத்தும் அவரின் பொழுதுபோக்கு. நூற்றாண்டுகளின் ஊடே வளர்ந்து வந்திருக்கும் தன்
இனத்தின் சரித்திரத்தையும், தேசத்தின் சரித்திரத்தையும் தன் ஆட்சிக் காலத்தில் அது
அடைந்திருக்கும் பொற்காலத்தையும் பற்றிய விளக்க நூல்.
அதுதான் சொல்லியாயிற்றே...அரசியலைப் போலவே எழுத்தும்
அவரின் பொழுதுபோக்கு என்று. பொழுதுபோக்கு எழுத்தை பொழுதைப் போக்கி வெளியிட ஏற்பாடு
செய்தால் அதற்கு எத்தனை தடங்கல். போயும் போயும் இந்த மின்சாரம் இப்படியா கழுத்தறுக்க
வேண்டும்? இன்னும் மீதி ஆறு பக்கங்கள் தட்டச்சு செய்து முடிக்க வேண்டிய நிலையில்...பாழாய்ப் போன மின்சாரம் மொத்தமாய்ப்
படுத்துவிட்டதே...!
உங்களுக்குத் தெரியாதா? இன்று சாயங்கால வண்டியில்
கட்டுகளை ஏற்றிவிட வேண்டும். நாளைக் காலை அவர்கள் விழா.
வெளியே மழை கொட்டித் தீர்க்கிறது. மழைக்காக மின்சாரத்தை
நிறுத்தி விட்டார்களோ...?
இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் முடிந்து விடும்.
கணிப்பொறி அறைக்குள் நுழைகிறேன். முதலாளி அச்சுப்பொறியின் அறைக்குள் போகிறார்.
கடவுளே...கடவுளே...! - காலை கடந்து பகல் வரை கூட மின்சாரம் வரவில்லை.
தொலைபேசினேன். முழு நகரத்துக்கும் மின் வெட்டாம்.
மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு. பழுது பார்க்க ஆகும் காலம் அறுதியிட இயலாது.
வேறு வழியில்லை. இது ஒன்றுதான் இப்போதைக்கு.
பலமான யோசனைதான்....சற்றே சாமர்த்தியமாகச் செயல்பட்டால் கைகூடிவிடும்...வெற்றிகரமாக
நிறைவேற்றி விடலாம்.
தயாராய் இருக்கும் புத்தகத்தின் அட்டைகளை வைத்துக்
கொண்டு, வெள்ளைத்தாள்களை உள்ளே அடுக்கி புத்தகங்களை உருவாக்க வேண்டும். பத்துப் புத்தகங்கள். தோற்றத்துக்குப் புத்தகங்கள். உள்ளே வெறும் வெள்ளைத்
தாள்கள்.....
வெற்றிகரமாக நடந்தேறுகிறது விழா. பாராட்டுரை
பல்கலைத் துணைவேந்தர். அடுத்து வந்தது ஒரு கவிஞர். அதற்கடுத்து பிரபல சமூக சேவகர்.
தொடர்ந்து எழுத்தரசர் விருது பெற்ற எழுத்தாளர் ஒருவர். அடுத்து கட்சியின் மகளிர் அணித்
தலைவி...அடேயப்பா...என்னே புகழாரங்கள்? மெய் சிலிர்த்துப் போகிறதே...! அதுதானே நோக்கம்..!
அந்த நோக்கம் நிறைவேறினால் சரி.
மகா ஜனங்களே...இது புத்தகமல்ல...வெறும் வெற்றுத்
தாள்கள்....என்று கத்த வேண்டும்போல்தான் இருக்கிறது. என்ன செய்ய...?
எல்லோரும் ஒரு வசப்பட்ட மனநிலையில், பக்திச்
சிலிர்ப்பில், கண் செருக...என்னமாய் ஒரு மயக்க லாகிரியில் அமர்ந்திருக்கிறார்கள்?
இது மோசடி இல்லையா? - நான் கேட்கிறேன் முதலாளியைப்
பார்த்து.
முதலாளி என்னைப் பார்த்து, அட சிறுவனே...! இதுதான் இந்த தேசத்தின் சரித்திரம்...நாமும்தான்
இதற்கு உடந்தை...! - ரகசியக் குரல் அழுத்தமாய் விழுகிறது?
நம் மக்கள் வெள்ளை உள்ளம் கொண்ட மனிதர்கள். அவர்களை
எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்....! எதையும் மறைத்து எந்த உச்சிக்கும் போகலாம்.
எழுத்தைப் பொழுதுபோக்காய்க் கொண்டிருப்பவனுக்கு எல்லாச் சாமர்த்தியமும் வேண்டுமாக்கும்....உடம்போடு
ஒட்டி இருக்குமாக்கும்...! அரசியலும் எழுத்தும் அப்படிக் கூடி வருமா எல்லோருக்கும்...?
வேஷம்
கிடைத்தால் விட்டு விடாதீர்கள். எங்கும் வேஷம்...எதிலும் வேஷம்....!
தேவை ஆவேசம்....!!
---------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக