09 அக்டோபர் 2019

“இரகசிய வேதனை“ - அசோகமித்திரன் - சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன்


இரகசிய வேதனை“ - அசோகமித்திரன் - சிறுகதை -     வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் 2 தொகுதிகள்                                                                    ------------------------------------------------------------------                       


                     தையின் தலைப்பைக் கவனித்தீர்களா? இரகசிய வேதனை....!  அதாவது?....அதாவது எளிய மனிதனின் இயலாமை. கேட்பது, சொல்வது, பார்ப்பது என்கிற வகை மாதிரிகளில் செயல்படுத்த முடியாமை. மனதுக்குள் உறுத்தல் இருந்தும், கோபம் இருந்தும் அவற்றை வாய்விட்டுச் சொல்ல முடியாமல் அல்லது கேட்க முடியாமல் இப்படியெல்லாமுமா நடக்கும்? இப்படியெல்லாமுமா மனிதர்கள் இருப்பார்கள்? இப்படி இருக்கிறார்களே, இது அநியாயமில்லையா? இப்படி இருக்கலாமா, தவறில்லையா? இது ஏன் இவர்களுக்குத் தெரியமாட்டேனென்கிறது? தெரிந்தும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இது, இதெல்லாம் தவறு என்று உணர்ந்தும் ஏன் அதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்? தவறு என்று தெரிந்தும் ஏன் திருத்திக் கொள்ள மாட்டேனென்கிறார்கள்? திருத்திக் கொள்ள முடியவில்லையா அல்லது சூழலும், இருப்பும் அதைத் திருத்த விடுவதில்லையா? திருத்தலேன்னா இப்ப என்ன என்கிற மெத்தனமா? இப்படி இருப்பது இவர்களுக்கு ஏன் வெட்கமாக இல்லை...இதுதான் நடைமுறை என்று சரியானதைப் பொருட்படுத்தாமல் போய்க் கொண்டேயிருக்கிறார்களே...!
       அரசாங்கம்தான் எல்லாவற்றையும் செய்தாக வேண்டுமா? நமக்குப் பொறுப்பில்லையா? அட, அரசாங்கம் செய்வதையாவது சாதாரண மனிதர்களின் வாழ்க்கை முறை, அதில் சாத்தியமானவைகள், அன்றாட நடப்பியல்களில் கை கூடக் கூடியவை என்பதாக எல்லாவற்றையும் யோசித்து அதற்குத் தகுந்தாற்போல் செய்கிறதா? அரசாங்கமும் ஓரளவுக்குத்தான் யோசிப்பார்களா? ரொம்பவும் அலட்டிக் கொள்ள மாட்டார்களோ? ஒரு சட்டமியற்றினால் அல்லது ஒரு உத்தரவு போட்டால் அந்த உத்தரவுக்கான சூழல் மக்களின் வாழ்வில் புழக்கத்தில் இருக்கிறதா என்பதைக் கணித்து அதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்து, எளிய மக்கள் கஷ்டப்படாமல் இருக்க, ஊர் உலகத்தில் புழங்க....வழிவகை செய்ய மாட்டார்களா?
       ஒரு மனிதன் ஒரு நாளில் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி திரும்ப வீடு திரும்பும் வரையில் எதிர்கொள்ளும் பலவகையான சின்னச் சின்ன இடர்பாடுகள் இதெல்லாம்தான் என்பதாக யோசித்து, அதற்குத் தக்க தீர்வு செய்வதுதானே கடமை? ஏன் யார் கண்ணிலும் இதெல்லாம் படமாட்டேனென்கிறது? யாரும் இதைப் பற்றியெல்லாம் ஏன் கவலை கொள்வதில்லை?  கவலை கொள்வதில்லையா அல்லது கொண்டு ஏன்ன ஆகப் போகிறது என்கிற சலிப்பா? இப்படியே அத்தனை பேரும் சலித்து சலித்துத்தான் எல்லாமே சகிப்புத்தன்மையின்பாற்பட்ட விஷயமாகி, மக்களே எல்லாவற்றிற்கும் பழகிக் கொண்டு விட்டார்களோ? எதையும் எதிர்த்துக்கேட்கும் மனோபாவம் மாறி விட்டதா? என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது என்கிற சலிப்போ?
       அவன் சங்கடம் அவனோடு மட்டும்தானா? மற்றவருக்கில்லையா? பலருக்கும் இப்படி இருக்க வாய்ப்பிருக்கிறதுதானே? ஆனால் தனி மனிதன் ஒருவனின் சங்கடங்கள்தானே பலரின் சங்கடமும்!
       இருமுறை பஸ் கட்டண விகிதத்தை மாற்றியபோதும் சங்கடங்கள் தீர்ந்ததா? 1.75 என்று நிர்ணயித்தபோது கால் ரூபாய் நாணயம் இல்லாமல் சங்கடப்பட வேண்டியிருந்தது. இரண்டு ரூபாயாய்க் கொடுத்தால் மீதிக் கால் ரூபாய் வருவதேயில்லை. இறங்க வேண்டிய ஸ்டாப் வரை கண்டக்டர் தந்து விடுவார் என்று எதிர்பார்த்து நின்றதுதான் மிச்சம். தரவில்லையே? ஞாபகமிருக்குமா அல்லது மறந்திருக்குமா? இப்படி எத்தனை பேருக்குக் கொடுக்க வேண்டியிருந்தது? அத்தனையும் மிச்சம் என்றால் ஒரு நாளில் எவ்வளவு காசு மிஞ்சும்? அந்தக் காசு யாருக்குப் போகும்?  யாருமே வாய்விட்டுக் கேட்கவில்லையே? கேட்டால் கேவலம் என்று நினைக்கிறார்களா? அவன் திட்டுவான் என்று பயப்படுகிறார்களா? அவனாகத் தர வேண்டாமா? அதுதானே நியாயம்? கேட்பவர்களை விட கேட்காமல் இறங்கிச் செல்பவர்கள்தான் அதிகமாய்த் தெரிகிறதே...! தினமும் இதுதான் வழக்கமென்றால், இதுவே ஒரு வருமானமாய் அவன் மனது கணக்குப் போடுமே! அது சரியா?
       எவ்வளவு கால் ரூபாய்களைத்தான் அக்கறையாய் சேமிக்க முடியும்? தினமும் வெளியே செல்லும்போது கால் ரூபாய்க் காசு இல்லாமல் பஸ் ஏற முடியாதே...! எதற்கு விடணும்?என்று அழுத்திக் கேட்ட பொழுதுகளில், அதிகப் புழக்கமில்லாத, எல்லோரும் மறந்து விட்ட இருபது பைசாவை கோபத்தோடு திணித்தானே...? கேட்டவர்களுக்கு  இருபது பைசா நாணயத்தைத்தான் திணித்தான். அதுமட்டும் கைவசம் இருக்கிறதா?
        கொடுக்கும்போது கால் ரூபாய் போனால் போகிறது என்று செல்கிறவர்கள், 1.75 கட்டணத்திற்கு அந்த இருபது பைசாவை கால் ரூபாயாக நினைத்து சேர்த்துக் கொடுத்தால் அதைக் கால்ரூபாயாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவனுக்கு உண்டா?
       இரண்டாம்முறை மாற்றப்பட்ட கட்டணம், கால் ரூபாய்ச் சில்லரை இல்லையென்றால் பயணமே செய்ய முடியாது. பஸ்ஸில் ஏறவே பயப்பட வேண்டும். அதிலும்  சிக்கல் இருக்கத்தானே செய்தது. அப்போது அரசாங்கம் நடைமுறை சாத்தியத்தை யோசிக்கவில்லையே? பொது மக்களின் அவதியை சிந்திக்கவில்லையே? அப்போதும் அந்தக் கால்ரூபாய் இடிக்கத்தானே செய்தது? அதற்கென்று எங்கே போவார்கள் ஜனங்கள்? அந்தக் கால் ரூபாய்க்காக, அவன் பாக்கி கொடுப்பதுபோல், இருபது பைசா நாணயத்தை இவர்கள் சேர்த்துக் கொடுத்தால் அதை கால்ரூபாயாக ஏற்றுக்  கொள்வாரா கண்டக்டர்.
       எத்தனை முறை கால் ரூபாய் கொடுக்காமல் விட்டிருக்கிறோம்? எத்தனை முறை இருபது பைசா நாணயத்தை வழங்கியிருக்கிறோம்...அதே துட்டு நம்மிடம் திரும்பி வரும்போது ஏற்றுக் கொள்வதுதானே முறை?
       செய்யவில்லையே...! அவர் கணக்கு உதைக்குமே...!!!
       எது எதற்குத்தான் வருந்துவது, வேதனைப்படுவது? மனதை என்னவெல்லாம் வாட்டி எடுக்கிறது? நினைத்துக் கொண்டே பஸ்ஸில் ஏறினான். அவன் போக வேண்டிய இடத்திற்கு ஒரு ரூபாயையும், ஒரு இருபது காசை நாணயத்தையும் கண்டக்டரிடம் நீட்டினான்.
       கண்டக்டர் அதை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு சீட்டுக் கிழித்துக் கொடுத்தான்.
       இரகசிய வேதனைக்கு ஒரு தற்காலிக விடிவு....!
       ஒரே ஒரு பக்கக் கதை இது...! அதில் நமக்கு இந்த வேதனையை ஏற்படுத்தி விடுகிறார் அசோகமித்திரன். சாதாரண மனிதர்களின் பாடுகளைப் பற்றி சதா மனதில் வேதனைப் படும் மனிதனின் உள் மன வேதனைகளை, வருத்தங்களை, மன வியாகூலங்களை அவர் கதைகள் நிறையச் சொல்லியிருக்கின்றன.
       ஒரு ஊரிலே ஒரு நரி. கதை அத்தோடு சரி....! - சொல்ல முடியுமே...!    விவரித்துப் புரிந்து கொள்ள வேண்டியதுதானே வாசகனின் வேலை...!
                                  -------------------------------------------------
      

கருத்துகள் இல்லை: