20 அக்டோபர் 2019

;சிறுகதை உஷாதீபன், “கனல்”
;சிறுகதை                                     உஷாதீபன்,                                                                                                                                                                    “கனல்”                                               
                                                                                         
       கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டதுமே வீட்டுக்குள்  மன்னியின் தலை தெரிந்தது. உள்ளே நுழைந்து ஞாபகமாய்க் கதவைச் சாத்தினேன். வீதியில் திரியும் நாய்கள் அதுபாட்டுக்கு நுழைந்து வராண்டாவில் அசிங்கம் பண்ணிவிட்டுப் போய் விடுகின்றன.
       எப்பவும் கதவைச் சாத்தியே வை....– ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் தவறாமல் அண்ணா சொல்லும் வார்த்தைகள்.
       வா......சிவமணி..  வா.....என்றவாறே திண்ணையின் கதவைத் திறந்தாள் மன்னி. உள்ளே நுழைந்து பையை ஓரமாய் வைத்தேன். அதிலிருந்த அல்வா..மிக்சரை எடுத்து நீட்டினேன்.
       தரட்டுமா? என்றாள் மன்னி அண்ணாவைப் பார்த்து. அண்ணா முறைத்தது போலிருந்தது. மன்னி உள்ளே போய்விட்டாள்.
       இதெல்லாம் சாப்பிடுமாதிரியா இருக்கு நிலமை....இப்ப ஆஸ்பத்திரிக்கு ஓடணும்...கேட்குறா பாரு கேள்வி? – அறைக்குள்ளிருந்து அண்ணாவின் குரல்.
       இதோ... குளிச்சிட்டுக் கிளம்பிடுறேன்...நான் போய் துணைக்கு இருந்துக்கிறேன்-
அடுத்து என்ன சொல்வானோ என்கிற எதிர்பார்ப்பில் அவன் முகத்தையே பார்த்தேன். பேன்ட்டை மாட்டிக் கொண்டே திரும்பியவன்,
       நான் கிளம்பிட்டேன்....டிபன் கொண்டு போறேன்...நீ குளிச்சு, டிபன் சாப்டுட்டு, சாப்பாடு எடுத்திண்டு வந்துடு.  நீ வந்தப்புறம் நான் புறப்படுறேன்....ராத்திரி அங்கயே படுக்கிற மாதிரி வா….
       சரி....என்றேன். மறுப்பு சொல்ல ஏதுமில்லை. அவன் சொன்னதுதான். வந்து போகும் எனக்கு சொன்னதைச் செய்வதுதான் வேலை...
       நான் வரேன்... – மன்னியைப் பார்த்தவாறே சொல்லி விட்டு அண்ணா செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றேன். வாசல் கேட்டை உள்ளே கைவிட்டு கொக்கி போடும்போது கூட என்னை நிமிர்ந்து பார்க்கவில்லை.
       காபி குடிக்கிறியா....? என்றாள் மன்னி.
       இல்ல டிபன் சாப்டுட்டு காபி சாப்டுறேன்.....
       வெளியில் வந்தால் என் வழக்கமான பழக்கங்களில் சில மாற்றங்களைத் தயங்காமல் செய்து விடுவது உண்டு. காலை ரெண்டு காபியை ஒன்றாகக் குறைத்து விடுவேன். நம் வீட்டில் நமக்கிருக்கும் சுதந்திரம் வேறு. வெளியிடத்தில் அதையே எதிர்பார்க்க முடியுமா? கூடியானவரை பிறருக்கு சிரமம் கூடாது. வாயைக் கட்ட இப்பொழுதே பழகினால்தானே பின்னால் உதவும்?
       காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குளித்து விட்டு டிபனுக்கு உட்கார்ந்தேன். இட்டிலி தயாராயிருந்தது. நாலே நாலு....போடுங்கோ...போதும்.....
       எப்பயுமே அந்த நாலுதானா...? – என்றவாறே இட்லியை வைத்து, சாம்பாரை ஊற்றினாள் மன்னி-.
       அதுதான் என் அளவு.... என்றவாறே லபக் லபக் என்று விழுங்கி விட்டு எழுந்தேன். போதுமா என்ற மன்னியின் குரல் காதில் விழாததுபோல் இருந்து விட்டேன். என்னைப் பொறுத்தவரை வேணுமா...வேணுமா என்று கேட்பவரை விட...போதுமா...போதுமா என்று சொல்பவரை விட, எதுவும் பேசாமல் தட்டில் போடுபவரையே விரும்புவேன் நான். உபசரிப்பு என்பது அதுதான். என் மனையாள் சுமதியையே நான் அப்படித்தான் பழக்கியிருக்கிறேன்.
       காபியை வாங்கி உறிஞ்சினேன். கொஞ்சம் சூடு பத்தாதுதான். எது குடிக்க முடியாததோ அதுவே சூடு. அப்படி வெளியிடத்தில் எதிர்பார்க்க முடியுமா? சூடு பண்ணித்தான் கொடுக்கிறார்கள். ரெண்டு ஆற்று ஆற்றிக் கொடுக்கையில் அது குடிக்கும் சூடாகிவிடுகிறது. குடிக்க முடியாத சூடுதான் நான் விரும்புவது.
       நெருப்புக் கோழி அவன்...ஆத்தாதே...அப்டியே கொடு என்பாள் அம்மா சுமதியிடம்.
       ராஜாஜி இப்டித்தான் சூடாக் குடிப்பாராம்....தெரியுமா?
       அதனால...நீங்களும் குடிக்கிறேளா...?இதுல ஒரு பெருமையா?  நாக்கு பொத்துப் போயிடப் போறது....!
       அதெல்லாம் இல்லை....பழகியாச்சு....குடு...
       அதான் ஆள் எப்பவும் சூடாவே இருக்கேள்...என்னமா கோவம் வருது...? அம்மா காது கேட்கவே இப்படிச் சொல்வாள். பயமெல்லாம் கிடையாது. சம்பாதிக்கிறாளே...!  
       நல்ல விஷயமெல்லாம் வேகமாத்தாண்டி வரும்....சொல்றதுக்கு ஆள் இல்லேன்னாத்தான் தெரியும் அருமை....
       உலகத்துலயே உங்களுக்கு மட்டும்தான் நல்லது தெரியுமா? மத்தவாளெல்லாம் வெறும் மண்ணா...?
       மண்ணா இருந்தாப் பரவால்லியே...பிடிச்சு வச்ச மண்ணால்ல இருக்கா சில பேர்...
       யாரச் சொல்றேள்....? என்னையா....?
       உன்னைச் சொல்ல முடியுமா? ஜோதிட பூஷணம்...ராமண்ணா வீட்டுப் பரம்பரையாச்சே நீ....அறிவு ஜீவிகளாச்சே...!
       அவள் அப்பாவைப் புகழ்ந்து சொன்னால் பெருமை தாங்காது.
       ழியில் அவரைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. கோயிலைப் பூட்டிக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார். தற்செயலாய்த் திரும்பியவர்...என்னைப் பார்த்து விட்டார்.
       வந்திருக்கேளா....? எப்போ வந்தேள்...காலைலயா...? கேள்விப்பட்டேன்...அப்பா ரொம்ப முடியாம இருக்கார்னு...நல்லதுதான்...துணைக்கு ஆள் இருந்தாத்தான் முடியும்....ஆஸ்பத்திரிக்குதானே....நா அப்புறமா வந்து பார்க்கிறேன்..... – என்னை வாயைத் திறக்க விடாமல் எல்லாவற்றையும் அவரே சொல்லிக் கொண்டார்.
       ஒரு புன்னகையோடு அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் அவரைச் சந்திப்பது உண்டு. மாலை வேளைகளில் அருகிலுள்ள கோயில்களுக்குச் செல்கையில் அவர் பூஜை செய்யும் அந்த முருகன் கோயிலுக்கும் செல்வேன். அர்ச்சனை என்று இல்லாவிட்டாலும், தட்டில் காசைப் போட்டு விடுவேன். உண்டியலில் போடுவதை விட அர்ச்சகர் தட்டில் பணம் போட்டால் அது அவருக்குப் பயன்படுமே...!. குறைந்த வருமானம் இழுத்துக்கோ, பறிச்சிக்கோ என்று ஜீவனம். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் என் வழக்கம் அது. ஐம்பதோ நூறோ சுளையாய்க் கண்ணில் பார்க்கையில் அவர் முகம் மலருமே...அந்தக் காட்சி வேண்டும் எனக்கு. நிறைவு அதில்தான்.
       உங்க அண்ணா ரொம்பக் கஷ்டப்படுறார்...தனியாக் கெடந்து....வாரத்துக்கொரு வாட்டி அப்பாவுக்கு ட்யூப் மாற்ற வேண்டியிருக்கோன்னோ...அரை நாள்...லீவு போட்டுட்டு, டாக்டர வரச் சொல்லிட்டு, முன்னதா அவர் வந்து நின்னிடுவார். அப்பாடீ...என்ன சத்தம்...அலறல் இந்த வேதனை வேணுமா....? தங்கமான மனுஷன்...காலம் பூராவும் உழைச்சு உழைச்சு ஓடாப் போயி, உங்களையெல்லாம் ஆளாக்கினாரே...அதுக்கு பகவான் கொடுத்திருக்கிற பரிசு இதுதானா?
       -சொல்லும்போதே அவருக்குக் கண்கள் கலங்கிவிடும்.
       உங்கப்பாட்ட எப்பயாவது பேசிண்டிருக்கிறபோது என்ன சொல்லுவார் தெரியுமோ...அது முன் ஜென்ம வினைம்பார்....அனுபவிச்சித்தான் தீரணும்...இல்லேன்னா இன்னொரு ஜென்மாவுக்கு அது தொடரும்பார்....பாவம் பகவான் அவரைச் சீக்கிரம் கூப்பிட்டுக்கணும்...அதுதான் நான் தெனமும் என் முருகன்ட்ட வேண்டிக்கிறது....என்ன இப்டிச் சொல்றேனேன்னு நினைக்காதீங்கோ....அவர் அனுபவிக்கிற வேதனை தாங்க முடியலை....அடுத்தாத்துல இருக்கிற எங்களுக்கு.., அந்த அலறல் சத்தம் கேட்க முடிலை. நெஞ்சு வெடிச்சிரும் போல்ருக்கு.....
       அவரின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். அப்பாவையும், அம்மாவையும் கூட்டிக் கொண்டுபோய் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கு உண்டுதான். ஆனால் என் மனையாளின் ஒத்துழைப்பு எவ்வாறிருக்கும் என்கிற சம்சயம் உண்டு.
       அங்கன்னா மன்னி அன்-எம்ப்ளாய்டு...ஆத்துல இருந்து பார்த்துக்கிறதுக்கு சௌகரியம். இங்க அப்படியா? நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போயிட்டா...உங்க அப்பாவை யார் பார்த்துக்கிறது? ஆள் போட்டா சரி வருமா? நம்பிக்கையா யார் கிடைப்பா? அது உங்கப்பாவுக்குப் பிடிக்குமா? அம்மாவுக்கும் வயசாச்சு...இருட்டுறபோது நாம வீடு வந்து சேர்ற வரைக்கும்...உங்கம்மாவால தனியா இருக்க முடியுமா? அப்பாவப் பார்த்துக்க முடியுமா? திடீர்னு என்னமாவது ஆச்சுன்னா? யோசிச்சுக்குங்கோ எல்லாத்தையும்....
       முதல் எடுப்பிலேயே என்னைப் பயமுறுத்தி விட்டாள். அத்தோடு ஓய்ந்து போனேன். அப்படிப் பார்த்தால் அதேதானே இங்கே. மன்னியால் மட்டும் அப்படி என்ன பெரிதாய்ச் செய்து விட முடியும்? பக்கத்து வீட்டுக்குச் சென்று யாரையேனும் துணைக்கு வரவழைக்கலாம்.. அண்ணாவுக்கு ஃபோன் பண்ணிச் வரச்செய்யலாம். அவ்வளவுதானே...! முடியுமென்றால் முடியும்...முடியாதென்றால் முடியாதுதான். எல்லாவற்றிற்கும் பரந்த மனசு வேண்டும். ஐம்பது வயது தாண்டிய அண்ணா திடீர் திடீரென்று இப்படி ஓடிக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் ஒரு வார்த்தை சொல்லியதில்லை. எங்கிருந்துதான் அவனுக்கு இப்படியொரு பொறுமை வந்ததோ...! உதவிக்கு வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மன நிறைவில்லை.
       அப்பா அம்மாவுக்கு மூத்தவனிடம்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை, ஆசையை  மதித்து, தன்னோடேயே இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டான்.
       முடியுதோ, முடியலையோ...கடைசிவரை நான் பார்த்துக்கிறேன். அவ்வளவுதான். அதுக்கு மேலே சொல்றதுக்கு எதுவுமில்லை...   – எப்போதோ ஒரு முறை இப்படிச் சொன்னான். மேற்கொண்டு எதுவும் பேசாததே பெரிய பெருந்தன்மை. . குழந்தை இல்லாத அவனுக்கு இந்தளவு சகிப்புத் தன்மையும், பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இருப்பது எங்களுக்கெல்லாம் பெரு வியப்பு. எனக்கு மூத்தவன் காமேஸ்வரன். எங்க ரெண்டு பேருக்கும் மூத்தவன்தான் ராஜாமணி அண்ணா.
       அவனும் அழைத்தால் வருவான். அப்பாவுக்கு உடம்பு முடில...புறப்பட்டு வா...ன்னு சொன்னாத்தானே சேதி தெரியும். சொல்லலைன்னா...? நாமென்ன வரமாட்டோம்னா சொல்றோம்? – சொல்லிக் கொண்டு அவனும் வந்திருக்கிறான். சென்ற முறை அப்பா படுக்கையில் விழுந்தபோது அவன்தான் வந்து இருந்தான். தன்னால் யாருக்கும் சிரமம் வேண்டாம் என்று ஆஸ்பத்திரியிலேயே படுத்து, குளித்து, உண்டு, உறங்கி, ஊர் திரும்பும் வரை வெளியே இருந்தே கழித்து விட்டான். இங்கயே கான்டீன்ல டிபனை வாங்கி அப்பாவுக்கும் கொடுத்துக்கிறேன்...முழுக்க நான் பார்த்துக்கிறேன்...என்றுதான் சொன்னான். உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது ஓட்டல் உணவு வேண்டாம் என்று அண்ணா சொல்லி விட்டான். சாப்பாடு டிபன் வாங்கி வர என்று மட்டும் அண்ணா வீட்டுக்குப் போனான்-வந்தான். அந்த முறை தன் வயிற்றுப்பாட்டை ஓட்டலோடேயே வைத்துக் கொண்டு அப்பா டிஸ்சார்ஜ் ஆனதும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டு வண்டியேறி  விட்டான்.
       ராஜாமணி அண்ணாவும் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. நானும் அப்போது கூட இருக்கத்தான் செய்தேன். நான் கடைசி. சின்னவன். அப்படியிருக்கக் கூடாது என்று என் மனசு சொல்லிற்று. அத்தோடு நடக்க முடியாத அம்மாவை தினமும் பார்க்கவும், அருகில் அமர்ந்து பேசவும் வீட்டில் இருந்தால்தானே வாய்ப்பு என்கிற ஆசை இருந்தது. ஊரிலிருந்து வந்து, அம்மா அருகில் ஆசையாய் அமர்ந்து பேசும்போது லேசு பாசாக அண்ணா சொல்லியிருக்கிறான்….
       பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டாப்ல ஆச்சா….!.
       இதற்கு முன் அம்மாவுக்குப் பல் எடுக்க என்று ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருந்தபோது முழுக்க முழுக்க நான்தான் வந்து கூட இருந்தேன். ஃபோனில் சொன்ன மறு நிமி்டமே ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு ஏதாவது ஒரு பஸ் பிடித்து  மறுநாள் காலை சென்னை வந்து சேர்ந்து விடுவேன். அண்ணா வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை. ஆனால் அப்படி ஒவ்வொரு முறையும் அழைப்பதும், நாங்கள் வந்து போவதிலுமே ஏதோ நெருடல் இருந்து கொண்டேயிருந்தது. நல்ல சம்பளத்தில்தான் அண்ணா பணியாற்றுகிறான் என்றாலும், எங்கள் கடமை என்று ஒன்று இருக்கிறதே என்று மாதா மாதம் நாங்கள் பணம் அனுப்பத் தவறுவதில்லைதான். எங்களுக்கு மனஆறுதல் என்று வேண்டுமே...! ரெண்டாம் தேதி டாண் என்று என் பணம் போய்ச் சேர்ந்து விடும். என்ன, ஏது என்று என்றும் ஒரு வார்த்தை கேட்டதில்லை. அப்பா அம்மாவை உடன் வைத்துப் பார்த்துக் கொள்வதே பெரிது. இதில் அனுப்பும் பணத்திற்குக் கணக்குக் கேட்டால் அது பண்பாடாகுமா? அப்படியென்ன அது பெரிய தொகையா?  நினைத்தே பார்க்கக் கூடாது என்பதுதான் என் குணம்.  காமேஸ்வரன் அண்ணாவும் என்னைப் போலத்தான். டக்கு...டக்கென்று பணத்தை அனுப்பிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். மருந்து, மாத்திரை என்று ஆயிரம் செலவிருக்கும். எதுவும் எதனாலும் தடைபடக் கூடாது என்பான்.
       டந்தா வந்தே.....அதான் இவ்வளவு நேரமாச்சேன்னு  பார்த்தேன். பஸ் பிடிச்சேன்னா இங்கே அனுமார் கோயில் ஸ்டாப்புல இறங்கியிருக்கலாமோல்லியோ....? – தான் கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டே கேட்டான் அண்ணா.
       நின்னு பார்த்தேன். ஒரு பஸ்ஸையும் காணோம். சரி நடப்பமேன்னு வந்துட்டேன்... வழியையும் தெரிஞ்சிண்டாப்ல இருக்கும்தானே....
       அது சரி...அதுக்காக வேகாத வெயில்ல இப்டியா வருவாங்க...ஒரு ஆட்டோ பிடிச்சிதான் வர்றது. அம்பது ரூபா கேட்பான்....போனாப் போறது....
       நான் அமைதியாயிருந்தேன். தப்பித் தவறிக்கூட ஆட்டோவில் ஏறாத அவன் எனக்கு இப்படிச் சொல்கிறானே என்றிருந்தது. கதியாய்க் காத்திருந்து பஸ்ஸில் வருவானேயொழிய ஒரு நாளும் ஆட்டோவில் கால் வைத்து நான் பார்த்ததில்லை. மத்தவன் காசுன்னா பரவால்ல போல்ருக்கு....என்னவோ எனக்கு இப்படித் தோன்றியது.
       வாங்கோ....வாங்கோ....என்ன இவ்வளவு தூரம்....? – கதவருகில் திடீரென்று முளைத்த அவரைப் பார்த்து அண்ணா வாய்நிறைய அழைத்தான். வழக்கமாய் அண்ணா வீட்டுக்கு வரும் ஆப்த நண்பர் அவர்.
       இந்தப் பக்கமா வர வேண்டியிருந்தது. சரி...அப்டியே உங்கப்பாவப் பார்த்திட்டுப் போயிடலாமேன்னு நுழைஞ்சேன்....எப்டியிருக்கார்....? தம்பி வந்துட்டார் போல்ருக்கு...? அதான் அம்பாப் பறந்து வந்து குதிச்சிடுவாளே…!
       இதை அண்ணா ரசித்ததாய்த் தெரியவில்லை.  
       இருக்கார்....ஒரு வாரம்  ஆகும்னு சொல்லியிருக்கார் டாக்டர்....இடது கை அத்தனை ஸ்வாதீனமில்லாம இருக்கு...பேச்சும் வரலை….போகப் போகத்தான் பார்க்கணும்.....
       அடப்பாவமே...! இது வேறையா...? ஏற்கனவே அவர் படுற அவஸ்தை போறாதா...? பகவான் நல்லவாளை எப்டியெல்லாம் கஷ்டப்படுத்தறார் பாருங்கோ...?
       இப்டியெல்லாம் அவஸ்தைப் படுறதுக்குப் பேசாமப் போயிடலாம்...? அது உத்தமம்….
       அண்ணாவின் இந்த வார்த்தைகள் அவரைத் துணுக்குறச் செய்ததோ என்னவோ...தீவிரமாகப் பார்த்தார். எனக்கும் என்னவோ போலிருந்தது..
       அது நம்ம கையிலயா இருக்கு...அவனில்ல நேரம் குறிச்சிருக்கான்...படுறதெல்லாம் பட்டாத்தானே ஓயும்....மனசைத் தேத்திக்குங்கோ....உங்களுக்குத்தான் தம்பிமார்கள் இருக்காளே....தம்பியுடையான் படைக்கஞ்சான்ங்கிற மாதிரி....ஒரு வார்த்தை சொன்னேள்னா மறு நிமிஷம் கிளம்பி வந்துடப்போறா....இவனுக்குப் பெரியவர் ஒருத்தர் இருக்காரே....திருச்சிலயோ எங்கயோ...அவருக்குத் தகவல் சொல்லிட்டேளா...வந்துண்டிருக்காரா....?
       சொல்லியிருக்கேன்...... –ஒற்றை வார்த்தையில்  வந்தது பதில். நான் அமைதியாய்த் தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.
       நீங்க ஒண்ணுத்துக்கும் கவலைப் படாதீங்கோ...அவாகிட்டே பொறுப்பை ஒப்படைச்சிடுங்கோ...நீங்கபாட்டுக்கு ஆபீசுக்குக் கிளம்புங்கோ...எல்லாத்தையும் அவா பார்த்துப்பா....உங்கப்பாவ நேர் பண்ணி சுபமா வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்ப்பா.... தங்கமா ரெண்டு தம்பிமார்களை வச்சிண்டு எதுக்கு வருத்தப்படறேள்....எல்லாம் நல்லபடியா நடக்கும்....நான் சொல்றேனே பாருங்கோ....அடுத்த வாரம் சுபிட்சமா அகத்துக்கு வந்து சேருவார் நான் வரட்டுமா....பெரியவர் தூங்கறார்...எழுந்ததும் நான் வந்துட்டுப் போனேன்னு சொல்லுங்கோ...சந்தோஷப் பட்டுக்குவார்....நாளைக்கு மறுபடியும் வந்து பார்க்கிறேன்....
       சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார் அவர். கூடவே அண்ணாவும் வழியனுப்பக் கிளம்பினான்.
ஒரு காப்பி சாப்டுட்டுப் போகலாம்...இருங்கோ.....என்றவாறே செருப்பைக் மாட்டிக் கொண்டான். இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
நீங்க சொல்றதெல்லாம் சரிதான். இருந்தாலும் நான் ஒருத்தனே கஷ்டப்படணும்னு விதியா இருக்கு? அவாளுக்கும் கடமை இருக்கில்லியா...? எல்லாத்தையும் வாய்விட்டுச் சொன்னாத்தான் தெரியுமா? அவாளுக்காத் தெரிய வேண்டாம்? வச்சிக்கப் பிடிக்காம வம்படியா வெளியேத்திட்டான்னு கடைசில எம்மேல பழி போடுறதுக்கா…?  மாத்தி மாத்தி அவாளும் அப்பாம்மாவைக் கொண்டு வச்சிக்கலாமில்லியா? அப்பத்தானே கஷ்டம் தெரியும்...? மூத்தவன்னாலும், என் ஒருத்தன் தலைலயேவா எழுதியிருக்கு...?
சற்றுச் சத்தமாகவே சொல்லிக் கொண்டு அவரோடு நடந்த அவன் லேசாகத் திரும்பிப் பார்த்தது போல் இருந்தது. அந்த வார்த்தைகள் என் காதுகளில் விழாமலில்லை. பொது வெளியில் அவன் அப்படிச் சத்தமாகப் பேசியது அதுவே முதல் முறை…!
                     ------------------------------------------------------------------------
      
      
      


.

      

 


கருத்துகள் இல்லை: