24 அக்டோபர் 2019

திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் - கட்டுரை


நகைச்சுவை நடிகர்                       கட்டுரை

                                                  
திரு.டி.ஆர்.ராமச்சந்திரன்                           ----------------------------------------                                                 “இயல்பையே நடிப்பாக்கி   வெற்றி கண்டவர்“                                                                        
       வர்  திரையில் தோன்றும்போதே குதூகலித்துக் கை தட்டி ரசிக்கப் பழகிக் கொண்டார்கள். இவரின் முட்டைக்கண் பார்வையையும், அது பண்ணும் சேட்டைகளையும் ரசித்தார்கள். அந்தக் கண்ணோடு சேர்ந்த முகத்தையும், அதில் தோன்றும் அசட்டுச் சிரிப்பையும், அந்தச் சிரி்ப்போடு கலந்த பாவங்களையும், அப்போது தோன்றும் உடல் மொழிகளையும் அவை அனைத்தும் கதையோட்டத்தோடு மிகப் பொருத்தமாய் நடைபோடும் அழகையும் வியந்து ரசித்து மகிழ்ந்தார்கள். அவரின் அப்பாவித்தனமான தோற்றமே அவருக்கு ப்ளஸ் பாய்ன்ட். இப்படி மைனஸ்ஸாக இருந்ததைப் ப்ளஸ்ஸாக மாற்றியவர்கள் பலர். அதில் திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் மிக முக்கியமானவர். காரணம் இயல்பிலேயே, உடம்போடு ஒட்டியிருந்த  அந்த அப்பாவித்தனம். 
படத்தில் இவர் இருக்கிறாரா என்று அறிந்து சந்தோஷப்பட்டார்கள். வரும் படங்களிலெல்லாம் நகைச்சுவைப் பாத்திரம்தான் என்றாலும், ஒவ்வொன்றும் அந்தந்தப் படத்தின் கதைக்கேற்றாற்போல் வெடிச் சிரிப்பாய் அமைந்து, பார்வையாளர்களைக் குலுங்கச் சிரிக்க வைத்ததை மீண்டும் மீண்டும் அலுக்காமல் பார்த்து அந்த இயல்பு  நடிப்பில் தங்களை இழந்தார்கள். கதை ஓட்டமும், நாயகன் நாயகியின் முக்கியத்துவமும் விஞ்சி நின்றாலும், அவ்வப்போதைய திடீர்த் திருப்பங்களுக்கும், விலகாத குழப்பங்களுக்கும் காரணமாய் இருக்கும் கதாபாத்திரத்தில் இவர் இருந்ததால், அவரின் வருகையைத் திரையில் எதிர்பார்த்தே காத்துக் கிடந்து ரசித்தார்கள்.,
       1940 முதல் 1960 காலம்வரை தன்னைத் தமிழ்த் திரையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களுக்கு அலுக்காமல், தோன்றி அவர்களின் மனதில் முக்கிய இடம் பிடித்தவர்தான் நகைச்சுவை நடிகர் திரு.டி.ஆர்.ராமச்சந்திரன்.
       வெறும் நகைச்சுவை நடிகர் என்று மட்டும் கூறிவிடுவது நன்றன்று. ஆரம்ப காலங்களில் நாயகனாய்ச் சில படங்களில் வைஜயந்திமாலா போன்ற முக்கிய நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துப் புகழ் பெற்றவர். இளம் பிராயம் முதல் நடிக்க வந்துவிட்ட இவர் அறுபதுகள் வரை தொடர்ந்து திரையில் தோன்றிக்கொண்டே இருந்தவர்தான். பின்னர்தான் ஒரு இடை-வெளி விழுந்தது. எண்பதுகள் வரை தமிழ்த் திரையுலகில் விட்டு விட்டு வலம் வந்தார். ஒரு கட்டத்தில் போதும்…இனி தொடருவதற்கில்லை என்று முடிவெடுத்து குடும்பத்தோடு அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.
       திருக்காம்புலியூர் ரங்க ராமச்சந்திரன் என்பதுதான் இவரது முழுப் பெயர். 1917ல் பிறந்த இவர் 1990 ல் மறைந்தார். லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தனது 73 வது வயதில் காலமானார்.
       ஒரு நடிகனுக்கு அவனது உடல் மொழியும், கண்களும், முக பாவங்களும் நடிப்பிற்கான ஆதாரங்கள். டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு அவரது கண்களைத்தான் முக்கியப்படுத்திச் சொல்ல வேண்டும். அதுவே மக்களை அத்தனை சிரிப்புக்குள்ளாக்கியது. Saucer eyes என்று இவரது விழிகளின் சேஷ்டை மக்களிடையே அத்தனை பிரபலமாய் விளங்கியது. கண்கள் காதலுக்கு மட்டும்தான் பேசுமா? எல்லாவித உணர்ச்சிகளையும் காட்டும் வல்லமை பெற்றது அது. எண்ணம், மனது, பேசும் வார்த்தைகள் இவற்றோடு சேர்ந்து பயணிப்பது. அதனை எத்தனை திறமையாகப் பயன்படுத்துகிறோம் என்பதே ஒரு நடிகனுக்கான பயன்பாடு. நவரசங்களை வெளிப்படுத்த விழிகளின் பங்கு அதி முக்கியம். நாட்டியப் பேரொளி பத்மினியை ஒரு கணம் நினைத்துக் கொள்ளுங்கள். நடிகர்திலகத்தின் திறமையை நினைத்துப் பாருங்கள்.
       ஒரு நடிகன் முதலில் தனக்குத்தானே ஒரு பெரும் ரசிகனாய் இருக்க வேண்டும். கற்பனை கலந்தவனாய், அதை அணு அணுவாக உணருபவனாய், நல்ல ரசனை உள்ளவனாய் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்குள் தன்னை இணைத்துக் கொள்ள முடியும். உள்ளே புகுந்து பயணிக்க முடியும்.ஒரு படம் முடியும்வரை அந்தப் பாத்திரமாகவே வலம் வர முடியும். வலம் வர வேண்டும். அதுதான் அவன் கடமை. அதுவே தொழில் சுத்தம்.  அப்பொழுதுதான் மற்றவர்களை அந்தப் பாத்திரமாகவே உணர வைக்க முடியும். இது இயற்கையாகவே பலருக்கும் பொருந்தி வந்தது. ஒரே முகம்தான். ஆனாலும் நடிக்கும் படத்திற்கேற்றாற்போல உடனடியாக அந்தக் கதைக்கு ஏற்ற நடிகனாய் தன்னை இருத்திக் கொள்ள முடிந்தது. அதில் ஒருவர்தான் டி.ஆர்.ஆர். தொழில் பக்தி மிகுந்த காலம் அது. பக்தி சிரத்தையோடு, பயந்து பயந்து நடித்தார்கள். தங்கள் பெயரை நிலைநாட்டிக் கொண்டார்கள்.
பிரபலமான நடிகர்கள் அத்தனை பேரோடையும் நடித்துப் புகழ் பெற்றவர் இவர். கூட நடிக்கும் அந்தக் கதாநாயக நடிகரை விட தன் மீது அதிகக் கவனம் விழும்படி இருக்கும் இவர் பங்கேற்றிருக்கும் காட்சிகள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்று அந்தக் காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த நடிகர்களின் படங்களில் இவரும் கட்டாயமாய் இருந்தார். இவரும் இருக்கிறார் என்று மகிழ்ந்தே இவரது நகைச்சுவைக்காக அந்தப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தார்கள் நம் தமிழ் மக்கள். நாயகனோடு சேர்ந்து ஏற்றுக் கொண்டார்கள்.
       1938 ல் வெளிவந்த நந்தகுமார்தான் இவரது முதல்படம். அது வெற்றியில்லை என்கிற நிலையில் 1941 ல் வெளிவந்த சபாபதி- AVM தயாரிப்பிலான திரைப்படம் இவரை உயரத்துக்குக் கொண்டு போனது. பிறகு வரிசையாக கண்ணகி, நாம் இருவர், ஞான சௌந்தரி, வைஜயந்திமாலாவுடன் ஜோடி சேர்ந்த வாழ்க்கை என்று படங்கள் வர ஆரம்பித்தன.
       கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் நடிகர்திலகத்துடன் சேர்ந்து அடிக்கும் கொட்டம் சொல்லி மாளாது. அந்தப் படம் இன்றும் புதிய தலைமுறை இளைஞர்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் சிறந்த நகைச்சுவைத் திரைப்படம். பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ்  தயாரிப்பில் வந்தது. ப.நீலகண்டன் அதன் இயக்குநர்.
       ஒரு நடிகனுக்குக் குரல் என்பது மிக முக்கியம். அது கட்டைக் குரலாக இருந்தாலும் சரி, வெண்கலப்பாத்திரத்தில் அடித்த கணீர்க் குரலாக இருந்தாலும் சரி, அல்லது மென்மையான இனிமைக் குரலாக இருந்தாலும் சரி….உச்சரிப்பு என்பது எடுத்து வைத்தது போல் பிசிறின்றி இருத்தல் வேண்டும். வசனங்களை உச்சரிக்கும்போது அது,  என்ன சொன்னார்…? என்கிற சந்தேகத்தை எழுப்பாமல், திரும்ப ஒரு தரம்...சொல்லுங்க….என்று கேளாமல்,  பளிச்சென்று புரிவதுபோல், அந்த வரிகளுக்கான பாவங்களை உள்ளடக்கியும், பொருத்தமான நடிப்போடு கலந்தும் மிளிர வேண்டும். அந்தத் தெளிவு இவரின் நடிப்பில் இருந்தது.
       முகமும், கண்களும், கன்னக் கதுப்புகளும், தாடையும் வாயும்,  ஏன் மூக்கும் காதுகளும் கூடச் சேர்ந்து நடிக்க வேண்டும். அத்தோடு கைகளும், கால்களும் இவற்றோடு ஒன்றிக் கொண்டாக வேண்டும். இதெல்லாம் அந்தக்கால நகைச்சுவை நடிகர்களின் பிறவியோடு ஒட்டியதாக இருந்தது என்பதுதான் உண்மை.காரணம் நாடக அனுபவம் அவர்களைப் புடம் போட்டிருந்தது. டி.ஆர்.ஆர்.க்கு நாடக அனுபவம் இருந்ததாகத் தகவல் இல்லை..  ஏ.கருணாநிதி, டி.எஸ்.துரைராஜ், டணால் தங்கவேலு, நாகேஷ் போன்றவர்களை நான் சொல்லும் இந்த லட்சணங்களோடு சேர்த்து நினைத்துப் பாருங்கள்….அப்போது புரியும்  தாத்பர்யமும், நடிப்பின் இலக்கணமும்.
       டி.ஆர்.ராமச்சந்திரனைப் பார்த்தாலே சிரிப்பு வந்து விடும். காரணம் அவரின் அப்பாவித்தனமான முகமும், மேடுதட்டிய அசடு வழியும் சிரிப்பும், முட்டைக் கண்களும், காதில் விழும் வார்த்தைக்கெல்லாம் உடம்போடு ஒரு உதறு உதறிக்கொண்டு பதறியது போலும், நிறையப் புரிந்தது போலும் அவர் பேசும் பேச்சும், நமக்கு விடாத சிரிப்பை வரவழைக்கும் என்றாலும், இந்த அப்பாவி எங்கே போய் ஏமாறப் போகிறானோ, யார் இவனை ஏமாற்றப் போகிறார்களோ என்று அவர் மீது கரிசனம் கொண்டு பயந்தவாறே படம் பார்க்கும் அந்தக் கால ரசிகர்கள்….அவருக்காகப் பரிதாபப் படவும் செய்து, கடைசியில் அது சினிமாதானே என்று உணர்ந்து தங்களைத் தேற்றிக் கொண்டார்கள். தொள தொளா பேன்ட் போட்டுக் கொண்டு நிற்பதும், கால்கள் நடுங்கும்போது பேன்ட்டோடு சேர்ந்து வெளிப்படும் அந்த நடுக்கம் நமக்கு அத்தனை சிரிப்பை வரவழைக்கும்.  நடிகனுக்கு காஸ்ட்யூம்ஸ் மிக முக்கியமல்லவா? பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்த அதுதானே முக்கியப் பங்கு வகிக்கிறது!
       தன் காதலியிடமே, தான் மிகவும் புத்திசாலி என்று சொல்லாமல் சொல்லி, விவரமாகப் பேசுவதுபோல் பேசி, கடைசியில் ஏமாந்து வேறு வழியில்லாமல் போயும் போயும் வீட்டு வேலை செய்யும் ஒரு வேலைக்காரப் பெண்ணையா தான் காதலித்துக் கல்யாணம் செய்து ஏமாந்தோம்  என்று அவர் நொந்து போய்,  தன் வீட்டிற்கு வந்து தாறுமாறாய் நடந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சி ரொம்பவும் நகைச்சுவையானதும், படத்திற்கே அதி முக்கியமானதும் ஆகும்.
படிக்காத மேதை படம். அது  வெறும் படமல்ல, பாடம் என்று மூத்த தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவார்கள். டி.ஆர்.ராமச்சந்திரன் அந்தப் படத்தில் ராவ்பகதூர் எஸ்.வி.ரங்காராவின் மகனாவார். பெயர் ரகு. ரிடையர்டு மிலிட்டரி ஆபீசர் ஒருவரின் வீட்டில் வேலை செய்து விட்டுத் திரும்பும் நடிகை சகுந்தலா (சி..ஐ.டி. சகுந்தலா-பின்னாளில்) வைப் பார்த்து அவள் அந்த மிலிட்ரி ஆபீசரின் மகள் என்று நினைத்துக் கொண்டு காதலிக்க ஆரம்பித்து விடுவார். எங்கப்பா யார்னு உங்களுக்குத் தெரியுமா? என சகுந்தலா வாயைத் திறக்கும்போதெல்லாம் அவர் வாயை அடைத்து, இத்தனை நாளா உன்னோட பழகறேன்…இது கூடவா தெரியாது…அதுதான் உங்க வீட்டு வாசல்லயே பெரிய பெரிய எழுத்துல போட்டு போர்டு வச்சிருக்கே…ரிடையர்டு மிலிட்டரி ஆபீசர் தாமோதரன்னு….அதக் கூடவா படிக்காம இருந்திருப்பேன்…என்ன நீ இப்டி கேட்கிறே என்னப் பார்த்து….என்பார்…..
விவரமாய் இருப்பதாய் நினைத்துக் கொண்டு தானே வலிய ஏமாந்து வலையில் போய் மாட்டும் இந்தக் காட்சிகளும், பின்னணியும் மிகவும் நகைச்சுவையானதும், சீரியஸ் ஆனதும் ஆகும்.
பக்கத்துலே கன்னிப் பெண் இருக்கு…..கண் பார்வை போடுதே சுருக்கு….. – என்ற ஏ.எல்.ராகவனின் குரல் (நடிகை எம்.என்.ராஜத்தின் கணவர்) ராமச்சந்திரனுக்கு அத்தனை பொருத்தமாய் இருக்கும்….ஒஉற்.Nஉறா…(ஓகோ….!) .என்று அவர் அப்பாவியாய்  வெட்கப்பட்டுக் கொள்வதைக் கூடப் பாட்டிற்கிடையில் ராமச்சந்திரனாகவே பாடிக் காண்பித்திருப்பார் ஏ.எல்.ராகவன்.
இந்த பாரு…நான் அந்தஸ்து தெரியாம அடியெடுத்து வைக்கமாட்டேன்…நல்லா கேட்டுக்கோ…நானோ ராவ்பகதூர் சன்…..
(இடைமறித்து) நான் வந்து…..
ரிடையர்ட் மிலிட்ரி ஆபீசர் டாட்டர் தாரணி……ஒண்ணுக்கொண்ணு மேட்சிங் கரெக்டா இருக்கே…ஏன் பயப்படுறே…வா போவோம்….என்பார்.
சரி…சரி…எங்கப்பாகிட்டே நானே சொல்லி அனுமதி வாங்கறேன்…அதுவரை நீங்க பொறுமையா இருங்க…என்று சகுந்தலா சொல்ல…
ம்….ம்….ம்…இன்னுமா பொறுமையா இருக்கச் சொல்றே…சரி..உனக்காக இருக்கேன்……. ஆனா ஒண்ணு…கன்ட்ரோல் அவுட்டாச்சு…அப்புறம் எம்மேல வருத்தப்படக் கூடாது…என்ன…?
கல்யாணம் நடந்து விடும். கொட்டாப்புளி ஜெயராமன்தான் ரிடையர்ட் மிலிட்ரி ஆபீசர்…அவர் தலைமையில் திருமணம் நடக்க…அவரே இவளின் அப்பா என்று நினைக்க, காரில் ஏறப் போகும்போது…அங்க எங்க போறே….ஏறு இந்த மாட்டு வண்டில…..என்பார் துரைராஜ். அவர்தான் தாரணியின் தகப்பன் என்று தெரிய பதறுவார் ராமச்சந்திரன். ஐயையோ…நான் ராவ்பகதூர் மகனாச்சே…என் அந்தஸ்து என்னாறது? என்பார்.
இதையெல்லாம் காதலிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்….காதலிச்சிட்டு கைவிட்டுட்டுப் போகலாம்னு நினைச்சியா…? என்று உருண்டு உருண்டு வந்து நின்று கேட்பார் துரைராஜின் மனைவியான டி..பி.முத்துலட்சுமி. ஆளும் உருண்டை…விழிகளும், முகமும், குரலும் பேசும் பேச்சும்….ரசிகர்களை அப்படி ஈர்க்கும். முத்துலெட்சுமி தங்கவேலுவோடு சேர்ந்து செய்த அறிவாளி பட நகைச்சுவை யாராலும் மறக்க முடியாதது. அதான் எனக்குத் தெரியுமே….என்று சொன்னாலே புரிந்து கொண்டு சிரிப்பார்கள்.
அம்மா கண்ணாம்பாவிடம் சென்று தன் காதலைப் பற்றிச் சொல்ல நிற்க, கண்ணாம்பா சௌகாரை மனதில் நினைத்துப் பேச….ஓல்டன் ம்மி ஓல்டன்…..மம்மி…நீங்க எந்தப் பெண்ணைப் பத்திப் பேசறீங்க…? என்று விளித்து, கிரேட் ப்ளென்டர் மம்மி…கிரேட் ப்ளென்டர்….நான் சொல்றது… ரிடையர்டு மிலிட்டரி ஆபீசர் டாட்டர் தாரணியைப் பத்தி என்று சொல்லி கண்ணாம்பாவைப் பதற வைப்பார்.  தாரணியாவது….ஊரணியாவது….அவன் கெடக்கான் அத்தை….குண்டுக்கட்டா தூக்கி மணவறைல உட்காத்தி …தாலியக் கட்டுறான்னா கட்டிட்டுப் போறான்….என்பார் ரங்கன். சிவாஜி.
அந்தத் தாலியை எடுத்திட்டுப் போயி என் காதலி தாரணி கழுத்துல கட்டுவேன்….தண்டால் எடுக்கிற உனக்கு..என் தாரணியைப்பத்தி என்னடா தெரியும்…. என்று எதிர்த்துப்பேசி அந்த இடம் விட்டு அகலுவார்.
ராவ்பகதூர் குடும்பத்தில் இப்படி ஒரு கோமாளியா? என்று படம் பார்ப்போரை சங்கடப்படுத்தும் அந்தக் கதாபாத்திரத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனைப் பொறுக்கிப் போட்டதும், அதைத் தன் அப்பாவித்தனமான நடிப்பாற்றலால் (நடிப்பாற்றல் என்று சொல்வதை விட அதுதான் அவரது இயல்போ என்கிற அளவுக்குப் பொருந்திப் போனவர்) சிறப்புச் செய்த டி.ஆர்.ஆரும் ஆகிய எல்லாமும்  இயக்குநர் திரு ஏ.பீம்சிங் அவர்களின்  திறமை என்றுதான் சொல்வேன். எந்தக் கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார்கள் என்கிற டைரக்டரின் கணிப்பு கவனிக்கத்தக்கது.. படிக்காத மேதை படத்தின் வெற்றிக்கு டி.ஆர்..ராமச்சந்திரனின் கதாபாத்திரம் மிக முக்கியமான ஒரு அங்கம் என்று கூடச் சொல்லலாம்.
டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த எத்தனையோ படங்கள் நம் நினைவில் நிற்கக் கூடியவை. அறிவாளி, இருவர் உள்ளம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் கூட வரதன் என்கிற பாத்திரம் ஏற்றிருப்பார். மோகனா சொல்வதைத் தட்டாமல்  கேட்பது அவர் வேலை. பத்மினி சொன்னதுபோல் நாகப்பட்டிணம் சென்று அங்கு மனோரமா நடத்தும் நாடக நிகழ்ச்சிக் கொட்டகைக்கு நாதஸ்வர வித்வான் சண்முகசுந்தரத்தைப் பார்க்கச்  செல்வார். வெளியே நிற்கும் காவல்காரர் அவரை உள்ளே விடமாட்டார். தடுத்து நிறுத்துவார். சாயங்காலம்தான் ஆட்டம். அப்போ டிக்கெட் வாங்கிட்டு வாங்க…உள்ளே விடுவாங்க…என்பார்.
நாதஸ்வரம் வாசிப்பார்ல, அவர் இங்க இருக்கிறதா சிக்கல்ல சொன்னாங்க…அவரைப்  பார்க்கணும் என்று சொல்ல, காவல்காரர், அவருக்கு நீங்க என்ன வேணும்? என்று கேட்பார். இவரோ அந்தக் கேள்வியில் எரிச்சலடைந்து, “ம்ம்ம்…..மச்சான் வேணும்…என்று அவர் மூஞ்சிக்கு முன்னாடி கையை நீட்டித் திட்டுவதுபோல் சொல்லி வைக்க, ஓ…மச்சானா….சரி…சரி…போங்க உள்ளே….என்று விட்டு விடுவார். ஒரு வசனத்தை எந்த இடத்தில் எப்படிச் சொன்னால் எடுபடும் என்கிற பாவம் கனகச்சிதமாய் இருக்கும் அவரிடத்தில். மனோரமா தன்னை மலேயாவுக்கு கான்ட்ராக்ட் போட்டு நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதாய் சண்முகசுந்தரத்திடம் சொல்ல…நானும் வரேன் என்று மனோரமாவின் கையைப் பிடித்துக் கொண்டு சிவாஜி உருகுவார். இந்தக் காட்சியைத் தவறாகப் புரிந்து கொண்டு, அவர் மேல் கோபம் கொண்டு, விலக்கிய திரையை விசுக்கென்று மூடுவார் டி.ஆர்.ஆர். வெளியே வந்து இடுப்புத் துண்டை கோபத்தில் படக்கென்று கக்கத்தில் இடுக்கிக்கொண்டு கோபமாய் கொட்டகைப் பக்கம் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு நடையைக் கட்டுவார். பத்மினியிடம்போய், அந்த நாடகக்காரி கையைப் பிடிச்சிக்கிட்டுத் தன்னை மறந்து பேசிட்டிருக்கிறதை என் ரெண்டு கண்ணால பார்த்தேன்…என்று சொல்லி விடுவார். பிறகுதான் பத்மினி, தானே நேரில் சென்று சண்முகசுந்தரம் மலேயா செல்வதைத் தடுத்தாக வேண்டும் என்று புறப்படுவார். சிறு பாத்திரமானாலும் அவரின் நடிப்பு நினைவில் நிற்கும். ரசிக்கும்படியும் இருக்கும்.
திரைப்படங்களின் காட்சிகளைப் படம் பிடிக்கும்போது கைகளைத் தொங்கவிட்டு நிற்கக் கூடாது என்று ஒரு மரபு உண்டு. நான்கு பேர் நின்று பேசும்போதோ அல்லது ரெண்டு பேரோ பேசும்போது என்றே வைத்துக் கொள்ளுங்களேன்… பேசுபவர் உரிய பாவங்களோடு, கைகளைத் தக்க அர்த்தங்கள் புலப்படுமாறு அசைத்து ஆட்டிப்  பேச வேண்டும். அதுபோல் எதிராளி தன் கைகளை முழங் கையோடு மடக்கி விரல்களைக்  கோர்த்துப் பிடித்துக் கொண்டு அல்லது கையை ஒன்றின் மேல் ஒன்று வைத்துக் கொண்டு மற்றவர் பேச்சைக் கவனித்து ரீயாக்ட் செய்ய வேண்டும். இதையெல்லாம் கவனித்து கவனித்தே கற்றுக் கொள்பவர்கள் உண்டு. நாடக அனுபவத்தில் புரிந்து பக்குவப்பட்டவர்கள் உண்டு. நடிப்புக் கற்றுக் கொடுத்துத் தெரிந்து கொள்பவர்களும் உண்டு.  டி.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் காரக்டர்கள் பெரும்பாலும் காமெடி டிராக் என்பதால் இந்தக் கைகளின் விளையாட்டு என்பது சற்று மாறி மாறி இருக்கும். கீழே தொங்கிய நிலையிலும், ரொம்ப முக்கியமான கட்டங்களில் கோர்த்துக்கொண்டும் நடுங்கும். அவரின் கைகளும், கால்களும் நடுங்கும் நடிப்பைப் பார்த்தால்….என்னா பயம் …என்று நமக்குச் சிரிப்பை வரவழைக்கும். வெகு இயல்பாய் அமைந்திருக்கும் அவரது நடிப்பு, சொல்லிக்கொடுத்துச் செய்வதுபோலவோ, காட்சிக்கென்று அமைந்ததுபோலவோ இருக்கவே இருக்காது. இயல்பாகவே அவரது உடல் மொழிகள் அப்படி ஆகியிருக்கிறதோ என்றும் , அது நடிக்கும் படத்திற்கு அத்தனை பொருத்தமாய் அமைந்து சிறப்புச் செய்கிறதோ என்றும் நம்மை எண்ண வைக்கும்.
அறிவாளி படத்தில் “ஏக் லவ்” என்ற பெயரில் நடிகர்திலகத்திற்கு நண்பனாய் வருவார். முரட்டு பானுமதியை அடக்கிக் கல்யாணம் பண்ண சிபாரிசு செய்து, அவரது தங்கையான சரோஜாவைத் தான் திருமணம் செய்து கொள்ள ஐடியா பண்ணுவார். தன் விவசாயத் தொழிலுக்கும், கைத்தறி விசை உற்பத்திக்கும் உதவிகரமாய் இருக்கும் அளவுக்குப் பணம் கிடைக்குமா என்று மட்டுமே பார்க்கும் சிவாஜி, பானுமதியின் கொட்டத்தை அடக்கித் திருமணம் செய்து கொள்ளத் தயார் என்று முன் வருவார். அவர் கல்யாணம் நடந்தால்தான் தன் காதலும் நிறைவேறும் என்று சாரங்கபாணியின் இரண்டாவது மகளான சரோஜாவை இவர் காதலிப்பார். கவலைப்படாம இரு…உன் கல்யாணத்துக்கு நான் பொறுப்பு…என்று சிவாஜி தைரியம் கொடுக்க…ஓ…இன்டியா….என்று காதலியின் புகைப்படத்தை நெஞ்சில் அணைத்துக்கொண்டு சந்தோஷப்படுவார்.
இதுபோல்தான் இதற்கு முன்பே வந்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்திலும் ரெண்டு பேரும் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. அதில் அமெரிக்கா ரிடர்ன் பெண்ணைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஃபாரின் மோகத்தில் இருக்கும் டி.ஆர்.ஆருக்கு, பத்மினியின் தங்கை (படத்திலும்) ராகினிக்கு ஃபாரின் ரிடர்ன் பொய்யைச் சொல்லி, நாகரீக உடையை அணிவித்து,பேசச் செய்து  மயங்க வைத்து என்று கதை நீண்டு கொண்டே போகும். ராகினியைக் கண்டு இவர் இளிக்கும் இளிப்பும், படும் வெட்கமும், கூச்சமும்….அவர் மீது கொள்ளும் தீராக் காதலும் அள்ளிக்கொண்டு போகும் நகைச்சுவையை.
பத்மினி காரோட்டி வரும்போது டி.ஆர்.ஆரின் அப்பா மேல் இடித்துவிட குய்யோ முறையோ என்று அவரை வீட்டில் கொண்டு வந்து போட, இனிமே பெண்கள்லாம் காரோட்டக் கூடாதுன்னு இந்தியாவுல ஒரு சட்டம் கொண்டு வரணும்… என்பார். இம்மாதிரி பல இடங்களில் தொட்டதெற்கெல்லாம் இந்தியாவுல ஒரு சட்டம் கொண்டு வரணும், சட்டம் கொண்டு வரணும் என்று அவர் பேசும் வசனம்…படு சிரிப்பாய் இருக்கும். படம் பார்ப்பவர்களே அவரை முந்திக்கொண்டு இதைச் சொல்லிவிட்டுச் சிரிப்பார்கள்.
சார்…நான் அஞ்சு வருஷமா கார் ஓட்டறேன்….ஒரு ஆக்ஸிடென்ட் கூட நடந்ததில்லே….என்று பத்மினி சொல்ல…எங்கப்பாவும் அம்பது வருஷமா ரோட்டுல நடந்து போய்ட்டு வந்திட்டுத்தான் இருக்காரு….அவருக்கும் ஒரு விபத்துக் கூட நடந்ததில்லே….என்பார் இவர். பட்டுப் பட்டென்று அவர் பேசும் வசனமும், துடிப்பும்….நம்மை அப்படி ரசிக்க வைக்கும்.
சொல்வதானால் டி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களைப்பற்றி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் நகைச்சுவை நடிப்பின் காட்சிகள் ஏராளமாய் உள்ளன.
இருவர் உள்ளம் திரைப்படம்  நாம் அனைவரும் அறிந்து, ஒரு முறைக்குப் பலமுறை பார்த்து ரசித்ததே. எல்.வி.பிரசாத் இயக்கத்தில், கலைஞர் வசனத்தில், கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த வெற்றிப்படம் அது. எழுத்தாளர் லட்சுமியின் பெண் மனம் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
சிவாஜி வேலை விஷயமாக டெல்லி செல்வார். அவரின் வருகைக்காக சரோஜாதேவி காத்திருப்பார். டி..ஆர்.ஆர்.ரும் வெளியூர் செல்வார். மனைவி வசந்தியைப் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு. மனைவியாக நடிப்பவர் பத்மினி ப்ரியதர்சினி. மைனர் மாணிக்கம் பாலாஜி உன் புருஷன் எப்போ வெளியூர் போவாருன்னுதான் காத்திட்டிருக்கேன் என்று சொல்ல, அது அறிந்த டி.ஆர்.ஆர். வெளியூர் செல்லாமல் உள்ளூரிலேயே வெளியிடத்தில் தங்கி கவனிப்பார். பாலாஜியின் வீட்டில் சிவாஜியோடு இருக்கும் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து சிவாஜிக்கு ஃபோன் செய்து வேலைக்காரி போல் பேசி, பாலாஜி ஆபத்தான நிலையில் இருப்பதாகப் பொய் சொல்லி சிவாஜியை வரவழைப்பார் பிரியதர்சினி. நண்பனைக் காப்பாற்ற வேண்டி அங்கு சென்று மாட்டிக் கொள்வார். வசந்தி சிவாஜியை வரவழைக்க, தன்  மனைவியின் தவறான நடத்தையைக் கண்டு அவளை மறைந்திருந்து கொலை செய்துவிட்டுத் தப்பி விடுவார் டி.ஆர்.ராமச்சந்திரன்.  வசந்தியின் தவறான அழைப்பு  அறிந்த சிவாஜி அங்கிருந்து வெளியேறுவார். மேலே மாடியில் ஆ……..! வென்று சத்தம் கேட்கும். வேலைக்காரி வெளியேறும் சிவாஜியைக் கீழே பார்த்து விடுவார். கொலைப்பழி சிவாஜி மேல் விழுந்து விடும்.
இதன்பின் நடக்கும் கோர்ட் விசாரணையும் அதில் இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் பரமாத்மாவாக நடிக்கும் டி.ஆர்.ராமச்சந்திரன் மீதான விசாரணையில் அவரின் தடுமாற்றமான பதில்களும், அதன்பின் குடித்துவிட்டு லாட்ஜில் கிடக்க அங்கு சரோஜாதேவி போய் மறைந்து நின்று பார்க்க, யார் உள்ளே என்று எழுந்து வந்து, சரோஜாதேவியைக் கண்டு மிரள, நீங்கதானே வசந்தியைக் கொலைசெய்தது….உண்மையை ஒப்புத்துக்கிட்டு என் கணவரைக் காப்பாற்றுங்க என்று மன்றாட, குடிபோதையில் அவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டி வசந்தியைக் கொலை செய்ததுபோல் இன்னொரு கொலை செய்ய என்னைத் தூண்டாதே….என்று உளற, இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில் வெளி வந்த உண்மையை வைத்து போலீசார் அவரைக் கைது செய்வார்கள். இந்தக் கடைசிக் கிளைமாக்ஸ் காட்சியில் டி.ஆர்.ராமச்சந்திரனின் அபாரமான நடிப்பு பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும். ஒரு அசடு, ஒரு கொலையையும் பண்ணிட்டு என்ன பாடு படுத்துது எல்லோரையும் என்று வியந்த காலம் அது.
தனக்கு அமைந்த உடலமைப்பு, குரல் வளம், உருவ அமைப்பு, இவற்றையே மூலதனமாக்கிக்கொண்டு ஏற்றுக்கொண்ட எல்லாப் படங்களிலும் சிறப்புறத் தன் திறமையைக் காட்டிய அற்புதமான நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்.
தமிழ்த் திரையுலகம் திறமையானவர்கள் பலரைத் தவற விட்டிருக்கிறது. காலப் போக்கில் காணாமலே அடித்திருக்கிறது. அப்படி அறுபதுகளுக்குப் பிறகு காணாமல் போனவர் இவர். எப்பொழுதாவது ஒரு படம் என்று திருமால் பெருமை, தில்லானா மோகனாம்பாள் என்று தலை காட்டியவர் பிறகு போதும் என்று மனம் வெறுத்ததுபோல் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரத்தில் சென்று செட்டிலாகிவிட்டார்.
அவர் நடித்த சாது மிரண்டால், அன்பே வா, ஆலயமணி, புனர்ஜென்மம், அடுத்த வீட்டுப் பெண், வண்ணக்கிளி, யார் பையன், மணமகன் தேவை, பாக்தாத் திருடன் , கோமதியின் காதலன், கள்வனின் காதலி என்று சொல்வதற்கு இன்னும் பல படங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக அடுத்த வீட்டுப் பெண் படத்தில் தங்கவேலு கோஷ்டியோடு சேர்ந்து அஞ்சலிதேவியைக் காதலிக்க அவர் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. அந்தக் காலத்திலேயே வந்த மிகச் சிறந்த நகைச்சுவைத் திரைப்படம் அடுத்த வீட்டுப் பெண் இந்தக் கால இளைஞர்கள் அறிந்திருப்பதற்கில்லை.
டி.ஆர்.ராமச்சந்திரன் என்ற அருமையான நடிகரின் வயதான தோற்றத்தை நீங்கள் யாரேனும் கண்டிருக்கிறீர்களா? இத்தோடு இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். அந்த கண்ணியமான பெரிய மனிதரின் அந்தத் தோற்றம் அவரின் மீது நமக்கு மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தும். அது அவரின் அதுகாலம்வரையிலான நடிப்புத் திறமைக்கு சான்றாக அமையும். தமிழ்த் திரையுலகம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய அழியா நட்சத்திரம் திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் என்றால் அது மிகையாகாது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை: