உஷாதீபனின் “வெள்ளை நிறத்தொரு பூனை” – சிறுகதைத் தொகுதிபற்றி மறைந்த – சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற எழுத்தாளர் திரு
மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் விமர்சனம்
---------------------------------------------------------------------
பாவனை இல்லை. பகட்டு
இல்லை, ஆடம்பரமில்லை, படாடோபமில்லை. உஷாதீபன் என்ற தனிமனிதனின் மனமெபாழி நடையே எவ்வித
ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் எல்லாச் சிறுகதைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. உஷாதீபன்
மன உலகம் அவரது கதை உலகமாக விரிகிறது். மத்தியதர வர்க்க ஊழியர். நடுத்தரமான பொருளாதார
வசதி உள்ள குடும்பம், ஒரு வேலைக்காரியில்லாமல் கதை நடக்காது. பல வேலைக்காரிகளும் வைத்துக்
கொள்ள முடியாது. காலையில் கோவில் – பகலில் அலுவலகம் – மாலையில் கோவில் என்று இயங்குகிற
உஷாதீபன் என்ற தனி மனிதர்- தான் அனுபவித்தவை, தான் தரிசித்தவை, தனது மனசில் தெறித்தவை,
பார்த்தவை என்று இவரது அன்றாட அனுபவ எல்கைக்குள் இவரது மனசுக்குள் பதிவாகிற, பதிவாகக்
கூடிய நிகழ்வுகளே இவரது கதைகளாகியிருப்பதில், இவரது நேர்மையும் – மன உண்மையும் தெரிகிறது.
நமக்குள் மரியாதை தோன்றுகிறது.
சிறுகதைகளில் பலவகை உண்டு. புதுமைப்பித்தன் ஒரு
வகை. கு.அழகிரிசாமி ஒருவகை. கு.பா.ராஜகோபாலன் ஒருவகை. மௌனி மற்றொரு வகை. இன்னும் சிலரது கதைகளைப் படித்தால் அழுகை வரும்.
மனம் கலங்குமி். கண்ணிமைகளை ஈரமாக்கிவிடும்.
இவற்றி உஷாதீபன் ஒரு தனி வகை.
சில வருஷகால நிகழ்வை சிறுகதையாக்குவது, ஒரு பாத்திரத்தை
அதன் தளத்தில் முழுசாக உயிர்ப்பித்து சித்தரித்துக் காட்டுவது, ஒரு சமுதாய உண்மையை
உணர்த்துவதற்கான சம்பவக் கோர்வை உள்ள சிறுகதையாக்குவது, நிலவுகிற சமூக நிஜங்களிலேயே புறக்கணிக்கப்பட்ட நிஜங்கரளை
தேடி எடுத்து சிறுகதையாக்குவது என்று பல முறைகள் உண்டு. உஷாதீபனின் முறைமையே தனி.
தனது அனுபவ எல்கை வட்டத்துக்குட்பட்ட ஒரு சம்பவத்தை
மட்டுமே, சம்பவத்துளியை மட்டுமே சிறுகதையாக்குவது என்பதுதான் உஷாதீபனின் முறைமை.
இவர் வீட்டுக்கு வருகிற வேலைக்காரி, இவர் கண்ணில்
படுகிற இளநீர்க்காரன், இவர் கோவிலுக்குப் போகிற போதெல்லாம் கண்ணில் தென்பட்ட, கைவிடப்பட்ட
கிழவி, இவர் அலுவலகம் போகிற இடத்தில் நிகழ்கிற தற்கொலை நிகழ்லு, இவர் முடிவெட்டப் போகிற
சலூன் என்று சின்னஞ்சிறு சம்பவத்துளியை பாவனையற்ற எளியமொழியில் சித்திரமாக சிறுகதையாக்குகிறார்.
உலுத்தாத மொழி நடை, அதே நேரத்தில் வசீகரித்து
அலைக்கழிக்கிற உணர்ச்சிமயமான மொழிநடையுமில்லை. தான் பார்க்கும் உலகமி், மனதில் பதிவாகிற
உலகம், அதுவே உண்மைமிக்க ஓர் எளிய மொழி நடையில் சிறுகதைகளாக வடிவம் பெறுகின்றன. இவரது
சிறுகதைகள் யாவும் ஆழ்ந்த அதிர்வுகளையோ, முடிவில்லாத அதிர்வலைகளைஆயா எழுப்புவதில்லை.
மாறாக, ்வாசகர் மனசில் ஒரு சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்கிறது. ஒரு சிறிய அழுக்கை
துடைக்கிறது. ஒரு சிறய சோகம் கவிந்து விழுகிறது. ஒரு வெளிச்ச நினைவு மின்னி மறைகிறது.
ஆனால் எல்லாச் சிறுகதைகளும் மனிதநேயம் என்கிற
உயர் உண்பை உயிர் வடிவமாகக் கொண்டுள்ளது. மத்தியதர வர்க்க மனிதரின் மனிதநேயம், அதிலிருந்து
பிறக்கிற கருணை. பரிவு எல்லாமே இவரது கதைகளின் வழித்தடம்.
இவர் பார்க்கிற ஏழை மனிதரை எல்லாம் மனித நேயத்தோடும்,
பரிவோடும், இவர் இப்படித் துயருறுகிறாரே என்ற கவலையோடும், இயங்குகிற இவரது குணபாவமே
அவரது சிறுகதைகளின் உயிராகவும் உடம்பாகவும் இயங்குகின்றன.
மனித நேயத்துக்கு எதிரான, ஏழைக்கு எதிரான எந்தச்
சிந்தனையுமி் இக்கதைகளில் இல்லை என்பது உறுதிபட்டுப் போன விஷயம்.
செம்மலர், கணையாழி போன்ற இதழ்களில் மட்டுமல்ல,
தாய், கதிர், விகடன் போன்ற பரந்த மக்களிடம் விரிவாகச் செல்கிற பிரபல இதழ்களிலும் இவரது
கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.
இதழின் இயல்புக்கேற்ப எழுத்தை மாற்றிக் கொள்ளாமல்
உல்லா இதழ்களிலும் எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளும் உஷாதீபனின் கதைகளாகவே உண்மையுடன்
நிகழ்வதை கவனித்துப் பாராட்டியாக வேண்டும்.
எந்த அரசியல் சாய்மானமோ, தத்துவச் சாய்மானமோ இல்லாத
ஒர தனி மனிதர், நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருக்கும் பட்சத்தில் அவரது படைப்புக்கள்,ஏழை
எளிய மனிதர் மீது பரிவு கொள்கிற மனித நேயச் சிறுகதைகளாகவே இயல்பாக அமையும் என்பதற்கு
உஷாதீபனின் இந்தச் சிறுகதைத்தொகுப்பே சாட்சி. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
மேலாண்மை பொன்னுச்சாமி
மேலாண்மறைநாடு,
விருதுநகர் மாவட்டம். 626127
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக