கட்டுரை உஷாதீபன்
அய்யா…தெரியாதைய்யா ராமாராவ்…!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் சினிமா மறக்கடித்த நடிகர்கள்
எத்தனையோ பேர். அதில் கதாநாயக நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள்
என்ற வரைமுறை எதுவும் கிடையாது. அப்படியாக வரையறுத்தும் அந்தக் கால நடிகர்கள் எவரும்
நடிக்கவுமில்லை. எந்த வேஷமானாலும் சரி என்று எல்லாவற்றிலும் சோபிக்கத்தான் செய்தார்கள்.
முப்பத்தைந்து வயது நடிகர் அறுபத்தைந்து வயது அப்பா வேஷம் கட்டினார். நாற்பதுக்கு மேல்
ஐம்பதைத் தொட்டவர்கள் கூட நாயக வேஷத்தில் சோபித்தார்கள். கனமான கதையும், வலுவான காட்சிகளும்,
திறமையான இயக்கமும் எல்லோரையும், எல்லாவற்றையும்
தூக்கி நிறுத்தியது.
ஆனாலும் அந்தந்தக் கால கட்டத்திலேயே காணாமல் போனவர்கள்தான் அதிகம்.
வேஷம் குடுங்க என்று தொங்கி நிற்காமல் அதுவாய்த் தேடி வரும்போது மனமுவந்து ஏற்றுக்
கொண்டு, அது சிறிசோ, பெரிசோ, ஈடுபாட்டோடு செய்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டார்கள்.
கொடுத்த, கிடைத்த சம்பளம் அப்பொழுதும் ஒரு பொருட்டுதான் என்றாலும், அதை விட ஏற்றுக்
கொண்ட வேஷங்கள் மனசாந்தி அளிப்பதாய், ஆத்மார்த்தமானதாய் உணரப்பட்டதால் கூலி பின்னேதான்
நின்றது.
என்னதான் இயக்குநர் சொல்லிக் கொடுத்தாலும், கதையோடு பொருந்திய காட்சிகளை
அமைத்தாலும், மனுஷன் இப்டியா அந்த வேஷத்தோட, அந்தக் கதாபாத்திரத்தோட பொருந்துவாரு?
என்று எண்ணி வியக்கும்படியாகத்தான் பல நடிகர்கள் திறமையோடு இருந்தார்கள்.
கதையோடு பொருந்திய…..என்று
சொன்னேன். அதாவது நாயகன், நாயகியை உள்ளடக்கிய மொத்தப்படத்தின் கதையம்சத்தோடு, ஒட்டி,
உறவாடிப் பயணிக்கும் வகையில்தான் நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டன. கதையோட்டத்தின்
முக்கியமான நிகழ்வுகளுக்கும், அதன் திருப்பங்களுக்கும் உதவும் வகையில்தான் சிரிப்பை,
கேளிக்கையை முன்னிறுத்தும் படக் காட்சிகளும் அமைந்தன. வாய்ப்பளிக்கப்பட்ட அம்மாதிரி
நகைச்சுவைக் காட்சிகளில், தங்களின் அகடிதகடனா சாமர்த்தியத்தை அச்சாக வெளிப்படுத்தி, படம் முடிந்து வெளியே செல்கையில்
தங்களையும் சேர்த்துப் பேசி மகிழ்ந்து, அதற்காகவே, அவருக்காகவே இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று சொல்லும் வண்ணம்
திறமைசாலிகளாக மிளிர்ந்தார்கள்.
அப்படியான நகைச்சுவை
நடிகர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எஸ்.ராமாராவ். பெயரே புதிதாய் இருக்கிறதே என்று
இன்றைய, ஏன் நேற்றைய தலைமுறை ஆட்கள் கூட நினைக்க வாய்ப்பிருக்கிறது. இன்றைய பையன்களுக்கு
சுத்தமாய்த் தெரியாது எனலாம். அவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி., ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்
என்று ஒரு சிலரைத் தவிர வேறு எவரையும்…தெரியவில்லையே?
இவர்தானப்பா தங்கவேலு…..டணால்
தங்கவேலுன்னு சொல்லுவாங்களே…அவர்தானே? இந்த…கல்யாணப் பரிசு படத்துல வந்து, பொய்யாச்
சொல்லுவாரே…அந்தத் தங்கவேலுதானே…. – என்று கேட்கும் பையன்கள்தான் இன்று இருக்கிறார்கள்.
இவர்களிடம் போய் ராமாராவ் என்றால் முழிக்காமல் என்ன செய்வார்கள்? என்.டி.ராமாராவா?
ஆந்திரா சி.எம்மா இருந்தாரே…அவரா? என்று கேட்கிறார்கள். அந்த மட்டும் அவரையாவது தெரிந்து
வைத்திருக்கிறார்களே…என்று பெருமை கொள்ள வேண்டியிருக்கிறது. அது ஜெனரல் நாலெட்ஜாம்….!
யாரு…அப்ளாச்சாரியா…?
என்று கேட்பவர்களும் உண்டு. இந்தப் பெயரைச் சொல்லி இவரைத்தான் கேட்கிறார்களா? என்று
சந்தேகம் வருவதும் உண்டு. எப்படி இவருக்கு இந்தப் பெயர் வந்தது என்று இன்றுவரை தெரியவில்லை.
எந்தப் படத்தில் இந்தப் பெயரிலான பாத்திரத்தை ஏற்றார் என்ற விபரமும் கிடைக்கவில்லை.
இல்லை, தலையில் வட்ருபி அடித்து, பாதி மண்டைக்குப் பின்னால் தழைய இறக்கிய முடியைக்
கொத்தாகப் பிடித்துச் சுருட்டி முறுக்கிட்டு கட்டுக் குடுமியாய்த் தொங்க விட்டு, அசல் அய்யராய் வந்து அசத்தினாரே அதனால் இந்தப் பெயர்
வந்திருக்குமோ என்று எண்ணுபவர்களும் உண்டு.
வேஷம் கட்டினால்
மட்டும் போதுமா? பாஷை வர வேண்டாமா? அட்சர சுத்தமாய் பிராம்மண பாஷையை அதே பாணியில் பேசி
அசத்தும்போதுதானே, அது ராமாராவ் இல்லை, அந்தப் படத்தின் ஒரு ஆசிரியர் கதாபாத்திரம்
என்பது பார்வையாளர்கள் மனதில் நிற்கும்? ஆசிரியர்தான் நின்றாரேயொழிய ராமாராவ் என்கிற
நடிகர் அல்ல.
நின்றதா? நின்றதாவா?
என்னய்யா கேள்வி இது? வாழ்ந்ததைய்யா…வாழ்ந்தது….இந்த ராமாராவை நினைக்கும்போது நமக்கு
நினைவில் வரும் கதாபாத்திரம் தெய்வப்பிறவி படத்தில் ஆரம்ப ஆசிரியன் என்ற வாத்தியார்
வேஷத்தில் வந்து களை கட்டியதுதான். குட்டையான உருவத்தில், பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு
தலையில் நரைத்த கட்டுக் குடுமியோடு ஒரு மூக்குக் கண்ணாடி சகிதம் நெற்றியிலும் கைகளிலும்
விபூதிப்பட்டை பளபளக்க வந்து சர்ர்ர்ரு…..புர்ர்ர்ரு…..என்று அழுத்தம் திருத்தமாய்,
ஒரு ரைமிங்கோடு பேசும் பிராம்மண பாஷை வசனங்கள் அத்தனை கலகலப்பூட்டின அந்தப் படத்தில்.
இப்போதும் இந்தக் காட்சிகளைப் போட்டுப் பார்க்கும் போது ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும்
இது மாதிரி ஒரு காட்சி இன்றுவரை வரவில்லையே என்ற ஏக்கம்தான் நிகழ்கிறது.
இயக்குநர் கே.எஸ்.கோபால
கிருஷ்ணனின் தெய்வப்பிறவி படத்தில் அமைந்திருக்கும் நகைச் சுவைக் காட்சிகளுக்கு ஈடாக
இன்றுவரை வேறு ஒரு திரைப்படம் வரவில்லை என்றே சொல்லலாம். நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு
டணால் தங்கேவேலு சதா சீட்டுக் கட்டு விளையாடுவதும், அதனால் வீட்டில் மனைவியோடு ஏற்படும்
களேபரமும், சண்டையும், சச்சரவும்…சொல்லி முடியாத அரட்டைக் கச்சேரி நகைச்சுவைக் காட்சிகள்.
அறிமுகமாவதே….
ஒரு குறிப்பிட்ட வார்த்தையை, பேச வாய் திறக்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டு ஆரம்பித்தவாறே
வருவார் ராமாராவ். அதுவே அவரின் பட்டப் பெயராகி,
நிலைத்து அவரைப் பிரபலப்படுத்தி வைத்தது. அப்படியானதொரு
சுவையான நகைச்சுவைக் காட்சி ஒன்றைக் கீழே காணுங்கள்.
அது தங்கவேலுவின்
வீடு. நண்பர்களோடு சேர்ந்து வீட்டில் சதா சீட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருப்பது
அவரின் பொழுது போக்கு. பொழுதை இப்படி வெட்டியாய்க் கழிக்கிறீர்களே என்று மனைவியோடு
பெரிய சண்டை வந்து ஒரே அமர்க்களம் ஆகும். அந்தக் காட்சி வேறு. இங்கே நான் சொல்ல வந்தது
ஐந்தாறு வெட்டி ஆபீஸ் நண்பர்களோடு டணால் தங்கவேலு சீட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும்பொழுது
சடேரென்று அங்கு பரபரப்பாய் வந்து மேஜைக்கு நட்ட நடுவில் குறுக்கே விழுவார் அப்ளாச்சாரி.
தெய்வப் பிறவி படத்தின் படு ஸ்வாரஸ்யமான காட்சி இது….
அட…என்னா…யார்றாது
குறுக்க வந்து விழுறதுன்னு எல்லோரும் வாசலைப் பார்க்க மடேரென்று வந்து விழுவார் ராமாராவ்.
….
அய்யா..தெரியாதய்யா…கடன்காரன்
இந்த வழில கரெக்டா வருவான்னு…என்ன பண்றது…வந்துட்டன்…என்னப் பார்த்துட்டன்….தலேல சொடேர்னு
அடிச்சிருவான்னு பயந்து நான் இங்க ஓடியாந்துட்டன்….என்ன பண்றதுஃ
என்ன பண்றது? கொஞ்ச
நேரம் பேசாம இருக்கிறது…இந்தச் சாரல நம்மளால சகிக்க முடியலைய்யா…-சொல்லிக் கொண்டே தெறித்த
எச்சில்துளிகளைத் தங்கவேலு நீளமாய்த் துடைத்து விட்டுக் கொள்வார்.
என்ன பண்றதுாாாா…
எழுதிக் கொடுத்துர்றது….
முடியுமோ…நானோ
ஆரம்ப ஆசிரியன்…சம்பளம் கம்மி…..
வேணும்னா இங்க
உட்கார்ந்து ஆடுறது ஒரு சுத்து ரம்மி….
நன்னாருக்கு போங்கோ…நான்
ஆசிரியன் இங்க ரம்மி ஆடலாமோ….?
நன்னா மூணு சீட்டு
ஆடலாமே….!
பேசாம இருங்கோ…பேசிண்டே
போறேளே…பேசாம இருங்கோன்னா…நீங்க சொல்லுங்கோ…நியாயமா இது…என்னை ரம்மி ஆடச் சொல்றாளே….நியா…!-பேசிக்
கொண்டே கூர்ந்து பார்த்துவிட்டு….யார்றா இவன்? மனோகரனா இது…?
ம்…மனோகரன்…ராயப்பிரியன்,
புருஷோத்தமன்….பத்மாவதி...விஜயா….
பேசாமிருங்கோ…இதென்ன
நாடகமா இது? அந்தண்ட போங்கோ……தள்ளிப் போங்கோன்னா…தள்ளுங்கோ…ஏண்டா மனோகர்…நீயுமாடா இந்தத்
திருதுராஷ்டிரா கூட்டத்துல சேர்ந்து சூதாட ஆரம்பிச்சுட்டே….
யோவ்…கையெல்லாம்
நீட்டாதே…யோவ் ஆடினா என்னய்யா…ஆடினா என்ன? அவங்கப்பன் மாதிரி செவுரு ஏறிக் குதிச்சானா?
திருட்டுத் தனம் பண்ணினா? ஜெயிலுக்குப் போனானா? ஐயா அப்பனுக்குப் பிள்ள தப்பிப் பொறந்திருக்கான்யா…சீட்டாட்டத்தோட
விட்டுட்டான்…
அதுவும் எங்களமாதிரி
பெரிய மனுஷாளோட….
நீங்க பேசாம இருங்கோ…நீங்கபாட்டுக்குப்
பேசிண்டே போறேளே….ஏண்டா மனோகர்…உங்க அண்ணி என்னைப் பார்க்கிறபோதெல்லாம், மனோகரக் கவனிங்கோ..மனோகரக்
கவனிங்கோன்னு கதர்றாடா…..உன்னோட படிச்ச ராமு இன்ஜினீரிங் கோர்ஸ் முடிச்சுட்டான்….அதப்
பார்த்தாவது உனக்குப் புத்தி வர வேண்டாமோ….
யோவ்…எவன் எப்டிப்
போனா எனக்கென்னய்யா…? என்னைப்“ பத்தி ஏதாவது இருந்தாச் சொல்லும்….இல்ல…? – இது கள்ளபார்ட்
நடராஜன்.
சொடேர்னு அடிச்சிருவ….என்ன
பண்றது? காலம் மாறிப் போச்சோல்லியோ…?
மாறிச்சோ, மாறலியோ…யாரைய்யா
கேட்குறீரு….?
நீங்க பேசாமிருங்கோ…நீங்கபாட்டுக்குப்
பேசிண்டே போறேள்….
யோவ்…கடன்காரனுக்கு
பயந்துதான இங்க ஓடியாந்தீரு…
வந்த எடத்துலதான
இந்தக் கண்றாவியப் பார்த்தேன்….
அதிகமாப் பேசாத…கடன்காரன்ட்ட
இந்தப் பணத்தக் கொடுத்திட்டுப் மரியாதையாப் போய்ச் சேரும்…. – பணத்தை நீட்டுகிறார்
ஒருவர்.
பணமா…நானா? வாங்குவேனாடா…?
அதவிட அந்தக் கடன்காரன்ட்ட மாட்டிக்குவன்டா… சொடேர்னு தலைல அடிச்சாலும் பட்டுக்குவன்டா….என்னண்ட
படிச்ச குழந்தைகள் நீங்க சூதாடி ஜெயிச்ச பணத்தை நான் கை நீட்டி வாங்குவனாடா…? அதவிடப்
பட்டினி கிடந்து பிராணனை விட்ருவன்டா…
ம்….சொல்லாதீர்…செய்யும்……ம்ம்ம்…..ஆடுங்க….நீங்க
ஆடுங்க…. –
வெளியேறி விடுகிறார்
ஆசிரியர்.
சிறந்த நீதியைக்
கடைசியாய்ச் சொல்லும் இந்தக் காட்சியில் எஸ்.ராமாராவும், டணால் தங்கவேலும் ஒரு ரைமிங்கோடு
இழுத்து இழுத்து விடாமல் தொடர்ச்சியாக வசனம் பேசும் காட்சி பார்வையாளர்களை விழுந்து
விழுந்து சிரிக்க வைக்கும். பிராம்மண பாஷையை அழுத்தந் திருத்தமாய் ராமாராவ் பேசுவதும்,
அதைக் கேலி செய்வதுபோல் அதே ரைமிங்கோடு தங்கவேலு பதில் சொல்லுவதும், மூச்சு விடாமல்
இருவரும் தொடர்ந்து பேசிக் கொள்ளும் இந்தக் காட்சியை நாம் படத்தில் பார்த்து ரசித்தால்
மட்டும் போதாது. ஒருவருக்கு மற்றொருவர் அதே வசனங்களை அதே பாணியில் பேசிப் பார்த்துச்
சிரித்துக் கொண்டால்தான், இந்தக் கடினமான காட்சியில் எவ்வளவு நகைச்சுவை புதைந்து கிடக்கிறது
என்பது புரியும்.
இந்தப் படத்தில்
நடித்ததிலிருந்து ராமாராவுக்கு இந்தப் பட்டப் பெயர் நிலைத்தது. அதுதான் ”அய்யா தெரியாதைய்யா
ராமாராவ்…..” அவரை நினைவு கூறுபவர்கள் இப்படிச் சொல்லித்தான் அவரை அழைக்க ஆரம்பித்தார்கள்.
அவரது அடுத்தடுத்த படங்களிலும் அவர் பெயரை இப்படியே டைட்டிலாகப் போடவும் ஆரம்பித்தார்கள்.
300 க்கும் மேற்பட்ட
படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்தவர் ராமாராவ்.
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சச்சுவுக்கு அப்பாவாக, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக
அவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் அத்தனை அற்புதமானது. சுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை
ரகசியத்தை உணரும் காட்சிகளில் பெண் கொடுக்க வந்த இடத்தில் கண்ணியம் கருதி நாகையாவோடு
சேர்ந்து அவர் அமைதி காக்கும் காட்சிகள் கண்ணியமானவை.
சர்வர் சுந்தரம்
படத்தில் நாகேஷூக்குப் பி.ஏ.வாக வருவார். இவரின் இன்னொரு நினைவு கூறத் தக்க படம் இருவர்
உள்ளம். இரண்டாம் கல்யாணமாக ஒரு இளம் பெண்ணை மணந்து கொண்டு அவள் அழகுக்கு மயங்கி அந்தப்
பெண்ணின் தகப்பனோடு இவர் சமரசம் செய்து கொள்ளும் காட்சிகள் ரசிக்கத்தக்கவை. அந்தப்
பெண்ணின் தகப்பனாக வருபவர் ஏ. கருணாநிதி. அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் “சோடா சுப்பையா…”
. வெறுமே உட்கார்ந்து தின்னும் அவருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று இரவல் வாங்கி
வந்த நெக்லஸ் திருடு போய்விட்டதென்று சொல்லி, அந்தக் கடனை அடைக்க வீட்டில் மனைவியையும்,
மாமனாரையும் குடிசைத் தொழில் செய்து உழைக்க வைத்துச் சம்பாதிக்கச் செய்து, அந்தக் கடனை
அடைத்து விடுவார். மனைவியை அப்பளம் போடச் செய்து, ராமாராவ் வெளியில் சென்று விற்று
வருவார். மாமனார் கருணாநிதியை தேன் கூடு போடச் செய்து தேனீ வளர்க்க ஏற்பாடு பண்ணி,
தேன் சேகரிக்க வைப்பார். திருட்டுத் தனமாய் அவர் தேன் எடுத்து நக்கும்போது, மறைந்திருந்து
கல்லை விட்டெறிந்து தேன் கூட்டைக் கலைக்கச் செய்து, தேனீக்கள் கருணாநிதியைக் கொட்டி
அதகளப்படுத்த….அந்தக் காட்சியில் வலி பொறுக்க முடியாமல் கருணாநிதி குதி குதி என்று
குதிக்க, அதற்கு ஜதி சொல்லி இவர் தாளம் போட்டு ரசிக்க….தியேட்டரே கலகலக்கும் இந்தக்
காட்சிகளில்.
சின்னச் சின்னக்
காட்சிகள்தான். ஆனாலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதுபோல் நடித்திருப்பார்கள் அந்தக்
கால நகைச் சுவை நடிகர்கள். அவர்களில் முக்கியமானவர் ராமாராவ். பாவ மன்னிப்பு படத்தில்
எம்.ஆர்.ராதாவுக்கு நம்பிக்கையான வேலைக்காரராக வந்து அவருக்குக் கீ கொடுத்து கெடுதலுக்குத்
தூண்டி விடுவார். தில்லானா மோகனாம்பாளில் கூட மனோரமா நாடக ட்ரூப்பில் இருக்கும் ஒருவராக,
வந்து போவார். மனோரமா, சண்முக சுந்தரத்தை அவர் நாயனத்தில் ஒரு பாட்டு வாசிக்கச் சொல்ல…வாசிங்க….என்று
ஆர்வத்தோடு இவர் சொல்லும் அந்தக் காட்சி மறக்க முடியாதது.
300 க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்திருந்தாலும், மூத்த தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்களுக்குத்தான் இவரைத்
தெரியும். இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் இவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும்
நடிப்பு என்கிற கலைக்குள்ளே நுழைந்து கற்றுக் கொள்ள வேண்டுமாயின் அறுபதுகள்….எழுபதுகள்
வரை என்று கூடச் சொல்லலாம்…தமிழ் சினிமாவில் இருந்த அனைத்து நடிகர்களையும், ரசித்து
ரசித்துப் பார்த்து அனுபவித்து உணர்ந்து, ஆழ்ந்து உள்வாங்கினாலே, சிறந்த நடிப்புப்
பயிற்சி கைகூடும் என்று சொல்வேன். அந்த வரிசையில் “அய்யா தெரியாதைய்யா ராமாராவ்…” என்கிற
எஸ்.ராமாராவ் தவிர்க்க முடியாத நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களில் ஒருவராகிறார்.
ராமாவ் 1987 ம் ஆண்டு காலமானார். இறக்கும் வரையில் கூட அவ்வப்போது சில படங்களில் கொஞ்சம்
இடைவெளியோடு என்றுதான் சொல்ல வேண்டும், நடித்துக் கொண்டுதான் இருந்தார் அவர். குறிப்பாக
சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் அவரின் பங்கெடுப்பு குறிப்பிடத்தக்கவையாய் அமைந்திருந்தன
எனலாம்.
-------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக