“சிறுகதை”
“பொதுச் சொத்து”
குழாயை
அழுத்தி மூடினான் சுப்பிரமணி. தண்ணீர் நிற்கவில்லை. அடியில் உள்ள நட்டு கழன்றிருக்குமோ
என்று சந்தேகித்து இடது கையால் அடிப்பகுதி நட்டை நன்றாக டைட் செய்தான். திருகிக் கொண்டேயிருந்தது.
கையால் அதைப் பிடித்துக் கொண்டே குழாயைச் சரி செய்ய முயற்சித்தான். கீழேயும் இறுக்கி,
மேலேயும் இறுக்கினாலும் தண்ணீர் ஒழுகத்தான் செய்தது. வாஷர் மாற்ற வேண்டும். தண்ணீர்
ஒழுகி அருகிலுள்ள துளை வழியே மூடிய சாக்கடையில் வீணாய் இறங்கிக் கெண்டிருந்தது.
வாரத்தில் இரண்டு நாள் அந்தத் தொட்டிக்குத் தண்ணீர்
நிரப்புவார்கள். தண்ணீர் லாரிக்காரர்கள் ஒழுகுவதைப்
பார்த்துக் கொண்டே போய்விடுகிறார்கள். குழாய் ரிப்பேர் எங்கள் வேலையில்லை என்று. சற்றுத்
தள்ளி இருக்கும் அடுக்ககத்தின் இரண்டாவது மாடியில் இவன் குடியிருக்கிறான். அங்கிருந்து
பார்க்கும்போதெல்லாம் தண்ணீர் தரையில் வீணாய்ப் போய்க் கொண்டிருப்பது மனதைச் சங்கடப்படுத்திக்
கொண்டேயிருக்கிறது. பாதித் தொட்டித் தண்ணீர்தான் பிடிக்கப்படுகிறது, மீதிப் பாதி விரயம்தான்.
அருகிலேயே
ஒரு வீடு. தனி கீழ் வீடுதான். அவர்களாவது ஏதேனும்
ஒரு பிளாஸ்டிக் குடத்தைக் கொண்டு வந்து வைத்து, அதில் ஒழுகட்டும் என்று தண்ணீர் வீணாகாமல் தடுக்கலாம். வணையமாய்த் தண்ணீர்
பிடித்துக் கொள்ள மட்டும் தெரிகிறது. சுயதேவைப் பூர்த்தி…அல்ல…அல்ல…சுயநல தேவைப் பூர்த்தி. ஒரு நாள்
இரவு பத்து மணிக்கு மேல் தற்செயலாய் இவன் கண்ணில் பட்டது அது. குழாய்க்கும், ஒரு பிளாஸ்டிக்
தொட்டிக்கும் ட்யூப் இழுத்திருந்தார்கள். என்ன அநியாயம்? அந்தப் பொதுத் தொட்டியில்
தண்ணீர் நிரப்புவது அந்தப் பகுதிப் பொது மக்களின் பயன்பாட்டிற்குத்தானே….! எல்லாத்
தண்ணியையும் இவர்களே பிடித்துக் கொண்டால் மற்றவர்களின் உபயோகத்திற்கு வேண்டாமா? மனசாட்சி
என்ற ஒன்று உண்டா இல்லையா?
.இன்னிக்குத்தானே
தண்ணி விட்டிருக்காங்க…நாளைக் காலைல பிடிப்போம்…என்றிருக்கலாம்.
ஆபீஸ்
போயிட்டு வந்து சாயங்காலமாப் பிடிப்போம்…என்று போகலாம்…
வீட்டு
வேலையெல்லாம் முடிச்சிட்டுப் பிடிப்போம் என்று விடலாம்.
வீட்டு
வேலைக்காரம்மா வந்தபின்பு பிடிக்கச் சொல்லலாம் என்றிருக்கலாம்.
அவரவருக்கு
வசதிப்படும் நேரம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? வீட்டுக்கு வீடு அடிபிடியான வேலைகள்.
இப்படி மொத்தத் தண்ணீரையும் காலி செய்தால்?
தங்கள் பாடு கழிந்தால் சரி என்று எத்தனை சுயநலம்?
ஏங்க…உங்க ஒரு குடும்பத்துக்காகவா இந்தத் தொட்டில தண்ணி நிரப்புறாங்க…?
ஒரே நாள் ராத்திரில நீங்களே அவ்வளவையும் பிடிச்சித் தொட்டியைக் காலி பண்ணிட்டீங்கன்னா,
மத்தவங்களுக்கு வேண்டாமா? பக்கத்துல உங்க வீடு இருக்குதுங்கிறதுக்காக இப்டியா அநியாயம்
பண்றது? உங்கள மாதிரித்தானே மத்தவங்களும்?
யாரு
மத்தவங்களப் பிடிக்க வேண்டாம்னு சொன்னது…? அவுகளா வந்து பிடிச்சிக்கிட வேண்டிதான…?
யாரு தடுத்தாக…? கார்ப்பரேஷன்ல தண்ணி நிரப்புறது எங்களுக்கும்தானே? எங்க நேரத்துக்குத்
தகுந்த மாதிரி நாங்க பிடிச்சிக்கிறோம்… கேட்க வந்துட்டாரு…..!
உங்களுக்கும்தான்…ஆனா
உங்களுக்கு மட்டுமே இல்லையே?
என்ன
சார் பேசுறீங்க? நாங்களேவா அம்புட்டையும் பிடிக்கிறோம்…? அவ்வளவு தண்ணி எங்களுக்கெதுக்கு?
பின்னே…?
எத்தனை பேர் வந்து வந்து ஏமாந்து போறாங்க…?
பாதித் தொட்டியாவது விட்டு வைக்கலாமில்ல…?
சாவகாசமால்லாம்
பிடிக்க முடியாது சார்….தண்ணி வர்றதப் பார்த்து, உடனுக்குடனே பிடிச்சிக்கிடணும்….தண்ணி
கிடைக்கிறது அத்தனை கஷ்டமாயிருக்குது…நாங்க அலெர்ட்டா இருந்து பிடிக்கிறோம்….அவுங்களும்
வந்து பிடிச்சா, நாங்க என்ன வேண்டாம்னா சொல்லப் போறோம்….
அதான் மொத்தத் தண்ணியையும் இறக்கி, தொட்டியக் காலி
பண்ணிடுறீங்களே…அப்புறம் எங்கேயிருந்து பிடிக்கிறது….?
யாரு
சார் காலி பண்ணினா…? தண்ணி கெடக்கு சார் தொட்டில…..என்னவோ உள்ள பூந்து பார்த்த மாதிரிச்
சொல்றீங்க…?
நீங்க
ரெண்டு மருமகளோட இருக்கீங்க…அவுங்க பிடிச்சிக் கொண்டாந்து நெரப்பிடுறாங்க….போதாக்
குறைக்கு ட்யூப் போட்டு இறக்குறீங்க….பொதுக் குழாய்ல இப்டி ட்யூப் மாட்டி தனி வீட்டுக்கு
இழுக்கலாமா? தப்பில்லயா…?
யார்
சார் இழுத்தா? என்னவோ பார்த்தா மாதிரிச் சொல்றீக….ஏதாச்சும் தண்ணி கெடந்தா வருதா பார்ப்போம்னு
மாட்டிப் பார்த்தோம்… ….
இவ்வளவும் இவனாக நினைத்துக் கொண்டதே தவிர அவர்களிடம் இன்றுவரை
ஒரு வார்த்தை பேசியதில்லை. இவனோ ஊருக்குப் புதுசு. இதெல்லாம் கேட்க விருப்பம்தான்.
எதற்கு வம்பு? என்று மனது தயங்குகிறது.
யாராவது
பாதிக்கப்படுபவர்கள் கேட்பார்கள் என்று பார்த்தால் ஒரு ஆள் வாயைத் திறப்பதாய் இல்லை. தண்ணீர் இல்லாமல் வெறுங்குடத்தோடு திரும்புகிறார்களேயொழிய,
காலைலதான் தண்ணி விட்டிருக்கான்…அக்குள்ளேயுமா காலியாகும்? இதென்ன உங்க வீட்டுக்குன்னு
எழுதி வச்ச தொட்டியா இப்டிப் பிடிக்கிறீக…? பொதுக் குழாய்மா….எல்லாரும் பிடிக்கணும்…பயன்பெறணும்…நீங்க
பண்றது நல்லால்லே….என்று யாராவது சொல்ல வேண்டுமே…! ஊறீம்….அத்தனை அப்பாவிகளா இப் பகுதி
மக்கள்?
ஒரு
நாள் ஒரு வீட்டுப் பெண்மணி தன் பெண்ணோடு வந்து நாலைந்து குடங்கள் பிடித்த போது அந்த
எதிர்வீட்டம்மாள் சொல்லியது…
பார்த்துப்
பிடிங்க…எல்லாருக்கும் தண்ணி வேணும்….இதோட நிறுத்திக்குங்க…நாங்களும் பிடிக்கணும்…..சும்மாச்
சும்மா வரக் கூடாது…..
இந்த
தைரியத்தை யார் கொடுத்தது இவர்களுக்கு? இதற்குப்
பெயர் தைரியமா அல்லது அடாவடியா?
அந்தப்
பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு மேல் மூடி இல்லாமல் எத்தனை நாள் கிடந்தது. செத்தை குப்பைகள்…ஏதேனும்
பறவைகள் விழுந்து இறந்தால்…? யாரோ ஒரு புண்ணியவான்…யாருக்கு ஃபோன் செய்தானோ. என்ன சொன்னானோ….ஒரு
நாள் ரெண்டு பேர் வந்து அதற்கு ஒரு மூடியைப் போட்டு விட்டுப் போனார்கள். அது காற்றில்
பறந்து விடாமல் இருக்க ஒரு கல்லையும் பாரமாக வைத்தார்கள். நம்மாட்களின் மூளையே மூளை…!
விடுங்க…நமக்கென்ன வந்தது…? என்ற விமலாவின் பேச்சு இவன் வாயை
அடைத்திருந்தது. இவன் வீட்டுக்குத் தேவை ரெண்டு குடம். மற்றப்படி காசுக்கு வாங்கும்
கேன் தண்ணீர்தான் வீட்டில். அதையே கொதிக்க
வைத்துக் குடித்துக் கொள்கிறார்கள்.
அடுக்கக
இரண்டாம் மாடியில் இவன் அறை அந்தத் தண்ணீர்த் தொட்டியைப் பார்த்தே இருக்கும். குழாய்க்குக்
கீழே படிந்திருக்கும் ஈரம் காட்டிக் கொடுத்து விடும். தண்ணீர் விட்டுட்டான் போல்ருக்கே….என்று
குடத்தோடு கிளம்பிப் போய்ச் சட்டென்று பிடித்துக் கொண்டு வந்து விடுவான்.
கடைக்குப்
போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கையில் பக்கத்துத் தெருவில் இருக்கும் அந்த இன்னொரு
தண்ணீர்த் தொட்டி இவன் கண்ணில் பட்டது அங்கேயும்
இதே மாதிரி ஜமாபந்தி நடந்து கொண்டிருந்தது
இவர்கள்
ரெண்டு இடத்திலும் வீடு கட்டிய பிறகு அங்கு தண்ணீர்த் தொட்டி வந்ததா? அல்லது தண்ணீர்த் தொட்டி கட்டிய இடம் பார்த்து நிலம்
வாங்கி அங்கு வீடு கட்டினார்களா?
அவன்
சொந்த ஊரில் இருக்கையில் சாலை சரியில்லை, தெரு விளக்கு எரியவில்லை சாக்கடை ஓடவில்லை,
குப்பைத் தொட்டி இல்லை…தெருக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்று பலவற்றிற்கும் அஞ்சலட்டை
எழுதிப் போட்டுக் கொண்டேயிருப்பான். பொது விஷயங்கள் அவன் கண்ணில் படும்போது என்னமாவது
செய்தேயாக வேண்டும் என்கிற உறுத்தல் அவனுக்கு சிறுவயது முதற்கொண்டே உண்டு. எத்தனையோ
செய்திருக்கிறான். யாரிடமும் எதுவும் சொல்லிக் கொண்டதில்லை. மணி ஆர்டர் பாரம் பூர்த்தி
செய்து கொடுப்பது, கடிதம், முகவரி எழுதிக் கொடுப்பது, ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பம்
தயார் செய்து கொடுப்பது, பிறப்பு இறப்புச் சான்று பெற உதவுவது, வாரிசுச் சான்றிதழ்
பெற அலைவது…என்று எத்தனையோ….உண்டுதான். அவனின் இலவச உதவிகளைப் பயன்படுத்திக் கொண்டோர்
பலர். எதற்கும் பிரதி உபகாரம் எதிர்பார்த்ததில்லை.
இந்த
சென்னைக்கு வந்த பின்புதான் அதெல்லாம் நின்று போயிற்று. இன்னும் ஊரே மனதில் படியவில்லை...
கடந்த ஓராண்டில் கண்ணில் பட்டு உறுத்திய விஷயம் இது ஒன்றுதான். பொறுமைக்கும் ஒரு எல்லை
உண்டுதான். அநியாயத்தைத் தினமும் கண்கொண்டு கண்டுவிட்டுப் பேசாமல் வாய்மூடி மௌனியாகக்
கோழையாக எப்படிப் போய்க் கொண்டிருப்பது? இருக்கவும் முடியவில்லை. மென்று முழுங்கவும்
மறுக்கிறது மனம். நாட்களும் வீணே கடந்து கொண்டுதான் இருக்கிறது.
சுப்பிரமணி என்ன செய்வது என்று யோசித்தான். தண்ணீர் நிற்காது
ஒழுகிக் கொண்டேயிருந்தது. ஒன்று அதற்கு வாஷர் மாற்ற வேண்டும். அல்லது குழாயையே மாற்ற
வேண்டும். கார்ப்பரேஷன் குழாய்…நம் இஷ்டத்திற்குத் தொட முடியாது.. வெயிலில் மாசக் கணக்காய்
காயும் ப்ளாஸ்டிக் தொட்டி டப்பென்று விரிந்தாலும் போச்சு….
சரி…என்று முடிவுக்கு வந்து ஃபோன் நம்பர் இருக்கிறதா
என்று தேடினான். கவுன்சிலர் பெயர் எழுதப்பட்டிருந்தது. கீழே குறிக்கப்பட்டிருந்த ஃபோன்
நம்பரை மறைத்து ஏதோவோர் போஸ்டரை ஒட்டியிருந்தார்கள். ரிப்பேர் ஆனால் அது அரசாங்கப்
பொறுப்பு. தண்ணீர் பிடிப்பது மட்டும்தான் எங்கள் பொறுப்பு. இதென்ன நியாயம்? பொதுச்
சொத்தைப் பாதுகாப்பதும் அதை உபயோகிக்கும் நம்மின் கடமைதானே?
சுப்ரமணி
ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் ஃபோன் எண்களில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடினான்.
கவுன்சிலர் எண் இல்லை. ஒரு முறை வெள்ள நிவாரணம் பெற வேண்டி விண்ணப்பம் எழுதிக் கொண்டு
அவரிடம் போய் நின்றது நினைவுக்கு வந்தது.அடுக்ககத்தில் அத்தனை பேரிடமும் வி்ண்ணப்பம்
சேகரித்திருந்தான். யாரோ கொஞ்சப் பேருக்கு
ஆரம்பத்தில் கொடுத்ததோடு சரி…மற்றதெல்லாம் ஸ்வாகாதான். பழியாய்க் காத்துக் கிடந்த மக்கள்,
நாள் தவறாமல் அலைந்த மக்கள் கடைசியில் ஏமாந்துதான் போனார்கள். நேரடியாகவே சொல்லிப்
பார்ப்போமே என்று தோன்றியது. - போய் நின்றவனுக்கு அதிர்ச்சி. கவுன்சிலரின் ஆபீஸ் பூட்டியிருந்தது.
வாசலில் போட்டிருந்த நீள பெஞ்சில் ஒருத்தர் உட்கார்ந்திருந்தார்.
நீங்க
எந்தக் காலத்துல சார் இருக்கீங்க….? இப்பத்தான் கவுன்சிலரெல்லாம் கிடையாதுல்ல….பீரியடு
முடிஞ்சி போச்சில்ல சார்….கார்ப்பரேஷன் ஆபீசுக்குப் போய்த்தான் சொல்லணும்.இப்டி அலையுறதுக்கு
நீங்களே போனாப் போவுதுன்னு ஒண்ணு வாங்கி மாட்டிடுங்க சார்….யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க….ஒரு
ப்ளம்பரக் கூட்டிட்டுப் போங்க….அவன் பைப் லைனப் பார்த்திட்டு எத்தனை இஞ்ச் கொழா வாங்கணும்னு
சொல்லுவான்…வாங்கிக் கொடுங்க…அவன் கேட்குற கூலியக் கொடுங்க…செய்திட்டுப் போயிடுவான்….தெருக்கள்லெல்லாம்
அவுங்களேதான்செய்துக்கிறாங்க.உங்க நகருக்குன்னு
நலச் சங்கம் இருக்குமில்ல சார்…அவுங்ககிட்டக் கூடச் சொல்லுங்க…செய்திருவாங்க….
சுப்ரமணிக்கு
அது நல்ல யோசனையாய்த் தோன்றியது. இத்தனை நாள் அப்படி ஒன்று தனக்குத் தோன்றவில்லையே? …தினமும் காலையில் வாக்கிங் போகும்போது ஒரு இடுக்கு
மாதிரி சின்ன இடத்தில் ஒரு போர்டு இருந்ததைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அங்கு போய்
அவர்களிடம் சொல்லி- விடுவோம்…முடிவுக்கு வந்தான் சுப்ரமணி.
பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. அங்கங்கே சாலை விளக்குகள் ஒளி விட ஆரம்பித்திருந்தன. நெடுகப்
பார்வையைச் செலுத்திய போது வரிசையாக விளக்குகள் இடை விடாமல் எரிவது அந்த நீண்ட வீதிக்கு
அழகைக் கூட்டியது. திட்டமிட்டு நகரை வடிவமைத்திருக்கிறார்கள்தான்…
தெரு நாய்கள் சில
அங்கங்கே நின்று முன்னும் பின்னுமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தன. வீதி நாய்கள் அதிகம்
இருப்பதை நினைத்துக் கொண்டான். வழக்கமாய் அவன் வீடு நெருங்குகையில் இரண்டு நாய்கள்
வாலாட்டிக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து வரும்.., அருகிலுள்ள கடைக்குள் நுழைந்து ஒரு
பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டான். தினமும் வாக்கிங் போய்விட்டு வரும்போதெல்லாம்
அவைகளுக்குப் போட்டுவிட்டுத்தான் வீட்டுக்குள் நுழைவான். அந்தப் பழக்கத்தில் ஓடி ஓடி
வந்து கால்களைத் தூக்கி இவன் மேல் வைத்து நிற்கும். அந்தக் கண்கள்தான் என்னமாய்ப் பேசுகின்றன?
ஒண்ணும் பிரச்னையில்ல சார்...நீங்களே
ஒரு பிளம்பரப் பார்த்து , புதுக் குழாய் ஒண்ணை மாட்டி விட்டிடுங்க...அவ்வளவுதான்.. - இயல்பாய்ச் சொன்னார் செக்ரட்டரி.
எடுத்த
எடுப்புல புகாரோட நுழைஞ்ச முதல் மெம்பர் நீங்கதான்...-சொல்லிவிட்டு சிரித்துக்
கொண்டார்.
ரெண்டு
ப்ளாட்டுக்கெடைல வெறும் மூணு சென்ட்ல அவுங்க மாட்டிக் கிட்டாங்களே...அதைக்
கவனிச்சீங்களா...?
சட்டென்று
புரியாமல் விழித்தான் இவன்.
அதான்
சார்...தண்ணியப்
பூராவும் அவுங்க வீட்டுக்கே பம்ப் போட்டு இழுத்திடுறாங்கன்னு சொன்னீங்களே... அந்தப்
பிரச்னை இனி இல்லைங்கிறேன்..
எப்டி..சொல்றீங்க...?
வலது
இடது ரெண்டு சைடுமே பெரிய்ய்யய பில்டர்ஸ்...நடுவுல இவுங்க...நிக்குமா...இல்ல
நிலைக்குமா...?
வித்துட்டாங்களா...?
விற்கல....விரட்டிட்டாங்க...! அது
பெரிய்ய்ய கை சார்.. நிக்க முடியுமா எதுத்து?
அப்டீன்னா...?
அப்டீன்னா
அப்டித்தான்......இந்த வாரத்துல அவுங்க போயிடுவாங்க...அந்தச் ஓட்டு வீட்ட
ப்ளாட்டுக்காரன் தூக்கிடுவான்......மொத்த இடமும் பெரிய அபார்ட்மென்ட்டா ஆகுது...அதனால
தண்ணித் தொட்டிக்கு எந்த பாதகமும் இனி இருக்காது இப்போதைக்குப் பிரச்னை
தீர்ந்ததுல்ல... அவ்வளவுதான்...பேச்சை முடித்துக் கொண்டார் செக்ரட்டரி.
செய்தி
இவனுக்குள் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருப்பதை உணர்ந்தான். அவர்கள் எங்கே போவார்கள்?
அந்த இன்னொரு வீட்டுக்குப் போய் விடுவார்களோ...? பாவம்...!
தொட்டிக்கும்
தண்ணீர்ப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு ஏற்பட்டிருந்தாலும், அவர்கள் அங்கிருந்து
விரட்டப்படுவதான செய்தியை மனசு ஏனோ ஏற்க மறுத்தது.
பொழுது
விடிந்த வேளையில் அந்த வீட்டின் முன்னால் லாரி ஒன்று நின்று கொண்டிருக்க, விரைசலாக
சாமான்கள் அதில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த காட்சி இவன் மனதை மேலும் சங்கடம் கொள்ள
வைத்தது.
----------
-------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக