“ஞானப்பால்” -ந.பிச்சமூர்த்தி
சிறுகதை வாசிப்பனுபவம் --- வெளியீடு=’ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சாகித்ய அகாதெமி
வெளியீடு.
தொகுப்பு – வெங்கட் சாமிநாதன்
தொகுப்பு – வெங்கட் சாமிநாதன்
லௌகீக வாழ்க்கையில் உழல்பவர்கள் ஞானம் பெறுவது எப்போது? எப்படி?
அந்த வாழ்க்கையை முழுவதும் முறையாக வாழ்ந்து கழித்தலே அதற்கான வழிமுறை. மன முதிர்ச்சி
என்பது அந்த அனுபவங்களிலிருந்தே கிட்டுகிறது. எல்லோருக்குமா கிட்டி விடுகிறது? முறையான
நியமங்களோடு, கடமையைச் செய்-பலனை எதிர்பாராதே என்கிற தாத்பர்யத்தேயாடு வாழ்ந்து கழித்தவனுக்கு அது ஓரளவு சாத்தியமாகிறது.
அத்தனை சுலபமாக அந்த முதிர்ச்சி எவருக்கும் கைவந்து விடுவதில்லை.
லௌகீக வாழ்க்கையில் உழன்றவனுக்கு
அப்படியென்றால்….எதுவும் வேண்டாம்…தனக்கு எதுவுமில்லை என்று பண்டாரமாய், சந்நியாசிபோல்
தன்னைத்தானே வரித்துக் கொண்டு சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று திரிபவனுக்கு அது சாத்தியமாகிவிடுமா? என்றால் அவனுக்கும் அது அத்தனை எளிதில் கைகூடுவதில்லை.
இப்படிப் பலரும் அந்த ஞானம் எப்போது
கிட்டும் என்று தங்களைத் தாங்களே பரீட்சித்துப் பார்த்துக் கொண்டும், என்றாவது அது
கைகூடும் என்கிற நம்பிக்கையிலும், இருக்கும் இருப்பே அதன் அடையாளம்தான் என்று திருப்தி
கொள்வதிலும் காலத்தைக் கழிக்கும் போக்கினை நாம் பலரிடம் ஏன் சிலரிடமேனும் இந்த வாழ்க்கையில்
சந்தித்திருக்கக் கூடும்.
அப்படித்தான் லிங்கங்கட்டியும்
அந்த சத்திரத்துக்கு வந்து சேர்ந்தான்.
சத்திரப் பொறுப்பாளரான தவசிப்பிள்ளைக்கு
ஒரே யோசனை. ஆளைப் பார்த்தால் சுமைதாங்கி மாதிரி இருக்கிறான். எந்த வேலை வைத்தாலும்
தாங்குவான். சமையல் பாத்திரம் விளக்குகிற காத்தானோடு தினமும் போராட முடிகிறதா? அஞ்சு
ரூபாய் சம்பளமும், மிச்சம் மீதம் தினம் சோறு கிடைக்கிறதே…அது போதாது என்கிறானே….இவனோ
குனிந்து வளைந்து நின்று ஒரு கவளம் சோறு போதும் என்கிறானே….சுமைதாங்கிதான் வந்திருக்கிறான்…வெறும்
ஒரு கவளம் சோறுதான் செலவு…! ஐந்து ரூபாய் மிச்சம்.
சோற்றுக்காக ஊர் ஊராய் அலைய வேண்டாம்.
பெரிய அதிர்ஷ்டம். லிங்கங்கட்டிக்கு மகிழ்ச்சி. தவசிப்பிள்ளைக்கும் தனக்கு அதிர்ஷ்டம்
அடித்திருப்பதாக சந்தோஷம். ஒரு வேளைக்கு ரெண்டு வேளை, ஒரு கவளத்திற்கு மூன்று கவளம்…மனம்
துள்ளாதா?
வந்து எட்டு மாதங்களுக்குள் புது
விளக்குமாறு தேய ஆரம்பித்து விட்டது. சத்திரத்துக்கு வந்தவர்கள் அதிகமாகச் சாப்பிட்டு
விட்டார்களோ…! சோறு குறைகிறதே…! வயிறு புகார் செய்கிறதே…! ஒரு நாள் ரெண்டு நாள் சமாளிக்கலாம்.
பிறகு? கருமாதி, கல்யாணம், பூஜை புனஸ்காரம் என்று வெளியே கால் பரவ ஆரம்பித்து விட்டது.
போனால் சோறும் கிடைக்கிறது. கூடவே காசும்….
அட…கொஞ்சங் கொஞ்சமாய்க் காசும்
சேருகிறதே…! தவசிப் பிள்ளை கவனிக்காமலில்லை. அரை வயிற்றுச் சோறு போட்டு முழு வேலை வாங்கிக்
கொண்டிருந்தவனிடம் துட்டு சேரலாமா? மனசு கேட்கிறதா என்ன?
என்ன லிங்கங்கட்டி….உனக்குத்தான்
பெண்டாட்டி இல்லியே…?
பண்டாரமாச்சே…
தொடுப்பு…?
அதென்னங்க…நாக்கு அழுகிடாது…?
அப்போ சேர்த்த பணத்த என்ன செய்றே…?
பத்திரமா இருக்குங்க…
நீ நின்னா நெடுஞ்சுவரு…விழுந்தா
குட்டிச்சுவரு…பெண்டாட்டியா…பிள்ளையா… ஒரு யோசனை…
சொல்லுங்க….
கழுத்து லிங்கம் இருக்குல்ல….அதுக்கு
ஒரு செயின் செய்து போட்டுத் தொங்க விட்டுக்க…பாதுகாப்பாவும் இருக்கும்…பார்வையாவும்
கிடக்கும்….அசல் சிவப்பழம்பாங்க….உன்னை…
பார்த்துக்குருவோம்……!தவசிப்பிள்ளையின்
யோசனை சரியென்று தோன்ற லிங்கங்கட்டியின் கைப்பணம் நகையாகி, செயினாய் மாறி கழுத்தில்
தொங்குகிறது. திருக்குளத்தில் நீராடி திறுநீரணிந்து
தங்கச் செயினும், லிங்கமும் துலங்க……பார்க்கவே திவ்யமாயிருந்தான் லிங்கங்கட்டி.
பண்டாரமாய் இருந்தாலும், சந்நியாசியாய்
இருந்தாலும் வயிறு தா…தா….என்று கேட்டு விரட்டுகிறது. ஆசையைத் துறத்தல் என்பது என்ன
அத்தனை சுலபமா? ஒரு கவளம் சோறு குறைந்த வேளையில் வெளியில் தேடிக் கொண்டு வயிறு நிரப்பத்
துடிக்கிறது. வயிறு நிரம்பும் வேளையில் காசு கையில் புரள, அது பத்திரமாய்ப் பதுங்க…எல்லாம்
துறந்தவனுக்கு கழுத்துச் செயினாய் மாறி லிங்கப் பிரதிஷ்டை நடக்க….என்னவொரு தேஜஸ் அந்த
திரேகத்தில்.
திருமுலைப்பால் உத்சவத்துக்குப்
போயிட்டு ஒரு வாரத்திலே வந்திடறேன்….என்று கிளம்பும் லிங்கம்…நான்காம் நாள் வந்து நிற்பதை
அதிசயமாய் தவசிப்பிள்ளை நோக்குகிறார். அது சரி…கழுத்தில் கிடந்த செயின்…?
ஏமாந்து போயிட்டேங்க….
எப்படிப் போச்சு…?
அதாங்க ஞானப்பால்…..
விளக்கமாச் சொன்னால்ல புரியும்…?
திருவிழா பார்த்திட்டு சத்திரத்துல
படுத்திருந்தேன். ஆளுக கூட்டம். பசு,பதி, பாசம்னு பேசிட்டிருந்த ஒருத்தரு திடீர்னு
பாட ஆரம்பிச்சிட்டாரு….தன்ன மறந்து பாடிட்டேயிருக்காரு….மாங்காய்ப் பாலுண்டு…மலைமேலிருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடீ…குதம்பாய்…..
சொக்கிப்போய் தூங்கிட்டன் போல்ருக்கு….போயிடுச்சி.
தேடித்தான் பார்த்தேன்.
சாமி எடுத்துக்கிட்டுப் போயிருக்கும்…ஞானப்பால்
கொடுக்க வேணாம்….? ங்கிறாங்க….
சுருக்கின்னுடுச்சி….லிங்கத்துக்குப்
போயி தங்கச் சங்கிலி செஞ்சனே……நா ஒரு பைத்தியம்….. அப்டீன்னுட்டு ஊருக்குத் திரும்பி
வந்திட்டேன்… ஞானப்பால் கிடைச்சிப்போச்சு….அவ்வளவுதான்…நான்
போறேன்….
போறீரா? அப்புறம் ஏங்காணும் வந்தீரு….?
சம்பளம் கொடுத்து வேறே ஆள் வச்சிக்கிங்கன்னு
சொல்லத்தான்…. – லிங்கங்கட்டியின் பதிலைப் பாருங்கள.
சுருக்கென்கிறது தவசிப்பிள்ளைக்கு. அடப்பாவி…! நெசமாவே ஞானப்பால் கிடைச்சிடுச்சா…?
– வாயைப் பிளக்கிறார்.. லிங்கங்கட்டி தெருவில்
வேகமாய்…..!!!
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும்
ஒரு நிகழ்வு அவனைத் திருப்பி விடும். அது அவரவர் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றமாய் அமையும்.
அந்தப் புள்ளியிலிருந்து மனிதன் தன்னை உணர்கிறான். எதைக் கொண்டு வந்தோம்…கொண்டு செல்ல….!
என்பது புலனாகிறது.
ந.பிச்சமூர்த்தியின் அடர்ந்த
தாடிக்குள் புதைந்திருக்கும் முகத்தின் தத்துவார்த்தங்கள்….சின்னச் சின்ன வார்த்தை
விளையாட்டில்…. தாண்டிச் செல்லும் சிறு சிறு உணர்வு வெளிப்பாடுகளில் நமக்குப் பெரும்
அர்த்தங்களை வழங்கும் வல்லமை கொண்டவை.. ஞானப்பால் சிறுகதை ஞானச் சேரியில் மோன வேள்வியாக
நம்மை அதிர வைக்கிறது. --------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக