மேலாண்மை
பொன்னுச்சாமியின் “நாணயன்“ – சிறுகதை – வாசிப்பனுபவம் – உஷாதீபன் வெளியீடு:- சமீபத்திய தமிழ்ச் சிறுகதைகள் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா. -------------------------------------------------------- வாழ்க்கையில் வறுமையை அனுபவித்தல் என்பது மிகவும் கொடுமையானது.
அதனிலும் இளமையில் வறுமை என்பது மிகவும் வேதனைக்குரியது. தாங்க முடியாதது. இதனைக் கேள்விப்பட்டவர்களை
விட அனுபவித்து உணர்ந்தவருக்குத்தான் தெரியும்
அதன் கொடூரம்.
கிராமத்துக் கூலித் தொழிலாளிகள்
தங்கள் குடும்ப வாழ்க்கையை நடத்த எப்படிக் கர்ணம் போடுகிறார்கள் என்பது அவர்களோடு கலந்த,
கண்கொண்டு பார்த்து உணர்ந்தவர்களால்தான் அந்தச் சங்கடத்தை உணர்ந்து கருணை கொள்ள முடியும்.
அன்றாடம் கூலி வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் உலை வைக்க முடியும். கணவன், மனைவி, குழந்தைகள் என்று நான்கோ ஐந்தோ பேர்கள் இருக்கும்
ஒரு வீட்டில் பசியாற முடியும். அன்றாட வாழ்க்கையே விழுந்து விழுந்து எழுவதுபோலான அனுபவம்.
செத்துச் செத்துப் பிழைக்கும் கொடூரம்.
வழக்கமாகக் கிடைக்கும் கூலி வேலைகளும் தப்பிப் போய்விட்டால்
சோற்றில் மண் விழுந்து விடும். Bread winner என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல ஒரு குடும்பத்திற்கென்று
சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுக்கும் தலைவன் ஒழுக்கமும், நாணயமும், நேர்மையும், பொறுப்பும்
உள்ளவனாக இருப்பின்…கஷ்டமோ நஷ்டமோ அந்தக் குடும்பம் திக்கித் திணறி…தென்னித் தெறித்து
கொஞ்சங் கொஞ்சமாய் மேலெழும்பி ஓரளவுக்கு நிலை பெற்று…வறுமையிலிருந்து மீண்டு….பிறகு
ஒரு கட்டத்தில் பெற்றெடுத்த செல்வங்கள் மூலம் நல்ல நிலையை எய்தும் வாய்ப்பு உண்டு.
வாழ்க்கையில் நாணயஸ்தனாய் இருப்பவனே, நேர்மையும் ஒழுக்கமும்
கொண்டவனே, அப்படி முறையாக வளர்க்கப்பட்டவனே,
தன் உண்மையான உழைப்பின் மூலம் குடும்பத்தை முன்னேற்றி வெற்றியடைகிறான். ஆனால் அந்த
நிலையை அடைவதற்கு முன் அவன் தன் அன்றாட வாழ்வில் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. பொருளாதார
நெருக்கடியினால் குடும்பத்தைச் சீராக நடத்த முடியாமல், கடன் பட்டு, உழன்று, பட்ட கடனை
உரிய காலத்தில் திரும்பச் செலுத்த முடியாமல் மன நிம்மதி இழந்து, பழிக்கு ஆளாகி….எப்படியேனும்
மீண்டால் சரி என்று தன் ஆசைக்குகந்தவைகளைத் தியாகம் செய்து, உடனிருப்போரையும் அதற்கு
உடன்பட வைத்து எதிர் நீச்சலடித்து மீண்டு வர பெரு முயற்சி செய்கிறான். அப்படியான சோதனை
நாட்களில் அவன் மனம் படும் வேதனை, வாதை சொல்லி மாளாததாய் இருக்கிறது. சக மனிதர்களின்
பார்வைக்கும், எண்ணங்களுக்கும், இந்த சமூகத்துக்கும் பயந்து வாழும் ஒழுக்கமுள்ள மனிதன்…பொருளாதாரப்
பற்றாக் குறையினால் படும் அல்லல்கள் அநேகம். எந்நிலையிலும் உண்மையிலிரு்து பிறழக் கூடாது
என்பதில் திடமாய்ய இருப்பவனாயினும், அவன் மனம் படும் வேதனை அவனுக்கே வெளிச்சம்.
அதுதான் இந்தக் கதையின் நாயகனான சின்னச்சாமி. சாதாரண சின்னச்சாமி இல்லை அவன். அரிச்சந்திர சின்னச்சாமி.
அந்த அளவுக்கு நாணயமானவன் அவன். சொன்ன சொல்
தவறாதவன். தலையை அடகு வைத்தாவது சொன்னதைச் செய்து விடுவான். அப்படித்தான் ஊராரிடம்
பேர் வாங்கியிருக்கிறான். அதனால்தான் அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் அங்கே மதிப்பு.
மரம் விலை பேசி, விறகு வெட்டிப் பிழைப்பவன்தான். ஆனால் பெறும்
கூலிக்கும் அதிகமாய்த்தான் இந்நாள்வரை அவன் உழைத்திருக்கிறான். அந்த உழைப்பினில் விளைந்த பயனில்தான் இன்றுவரை அவன் ஒரு கவளம் சோறேனும் சாப்பிட்டிருக்கிறான்.
அவன் குடும்பமும் அவன் சொல் மீறாது, அடிபிறழாது அவனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நாணயஸ்தனுக்குத்தானே சோதனை வரும். நேர்மையாயும், உண்மையாயும்தான்
வாழ வேண்டும் என்று வரித்துக் கொண்டவனுக்குத்தானே எல்லாக் கஷ்டங்களும் கண்ணுக்கு முன்னால்
வந்து ஆடும். அப்படித்தான் சின்னச்சாமிக்கும் வந்துவிட்டது இப்போது.
கிட்டத்தட்ட நெருங்கி வந்து பயம் காட்டுகிறது தைப்பொங்கல்.
வீட்டில் மனைவி, மக்களுக்குப் புதுசு எடுத்துக் கொடுத்தாக வேண்டும். மரங்களை விலை பேசி
விறகாக்கி, செங்கற் சூளையில் எடை போட்டுத் துட்டாக்கித்தான் வயித்து ஜீவனம். விறகுக்குப்
பணம் வருவதில் இந்தத் தடவை பார்த்து இடைஞ்சல்.
எங்கு போய் நிற்பது? யாரிடம் போய் கையேந்துவது? மனசைப் போட்டுப்
புரட்டிப் புண்ணாக்குகிறது யோசனை. ரவ்வும் பகலும் உறக்கமின்றிப் புரண்டும் ஒன்றும்
புலப்படவில்லை.
பக்கத்தூர்ல ஜவுளிக்கடை வச்சிருக்கிற ராமச்சந்திரன்கிட்டப்
போய் நின்னால் என்ன? முடிவாயிற்று.
அண்ணாச்சி…அம்புட்டுத் தொகைக்கெல்லாம் கடன் குடுக்க முடியாதே…..!
நம்ப கடை சின்னது…உங்களுக்குத் தெரியாததல்ல….
நீங்க என்னை நம்பினா உதவணும்……
அண்ணாச்சி…சொன்னாச் சொன்னபடி நடக்குற உங்களை நம்பாம வேற யாரை
நம்பப் போறேன்…
நம்பிக்கை இருந்தாக் கொடுங்க…தை பத்தாந் தேதிக்குள்ள தலையை
அடகு வச்சாச்சும் உங்க ரூபாயக் கொண்டாந்து கொடுத்துப்புடுவேன்….
தைப் பொங்கலை நகர்த்தி விட்டாகணும்ங்கிற வெறி….சின்னச்சாமியின்
தீவிரப் பிடி….
கடைக்காரன் மலைக்கிறான். அரை மனசோடு துணிமணிகளை எடுத்துப்
போடுகிறான்.
ரொம்ப பயம் காட்டிய தைப் பொங்கல் ஒரு மாதிரி சந்தோஷத்தோடு
கழிந்து விடுகிறது. குழந்தைகள் புத்தாடையில் வீட்டுக் வீடு சென்று காட்டி மகிழ்கின்றன.
மனைவி பார்வதி புதுச்சேலையில் அஞ்சு வயசு குறைந்தது
போல்தான் காணப்படுகிறாள்….
அப்படியான சந்தோஷம் நிலைத்து விடுகிறதா என்ன? வந்துவிட்டதே
இடிச்செய்தி….!
சூளைக்காரர் தைத்திருநாளன்னிக்கு திடீரென்று நெஞ்சைப் பிடித்துக்
கொண்டு சாய்ந்து விட்டாராம். சேதி கேட்ட சின்னச்சாமி கதி கலங்கிப் போனான். நாணயஸ்தன்ங்கிற
பேரு நிலைக்காது போல்ருக்கே….
கருமாதி முடிஞ்சு பிள்ளைகளுக்குள் சொத்துச் சண்டை. இந்தச்
சூழலில் அங்கே போய் பணத்திற்கு எப்படி நிற்பது? அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது…சொல்லவோ,
எழுதி வைக்கவோ இல்லை…என்று ஓங்கியடித்தால்?
ராமச்சந்திரனுக்கு கெடு கடந்து விட்டது. பெரிய யோக்கியன்
மாதிரி வந்து பேசி, கடன் வாங்கிட்டுப் போனாரய்யா…ஆளையே காணலை…! சொல்லி விடுவானோ…?
பெரிய மனுஷர்கள் சிலரை அணுகி, விஷயம் சொல்லி, பஞ்சாயத்துப்
பேசி, பங்குனி கடைசியில் பணம் வருது….ரெண்டாயிரத்துச் சொச்சம்…விட்டு விட முடியுமா?
மரத்துக்காரனைப் பார்த்து கெடு சொல்லி…சித்திரை அஞ்சிலே பணம்
தர்றதா தவணை வாங்கியாச்சு….அந்த ராமச்சந்திரனைப் போய் எப்படிப் பார்ப்பது? எந்த மூஞ்சியை
வைத்துக் கொண்டு போய் நிற்பது? நீயும் ஒரு மனுசந்தானா? கேட்டு விடுவானோ?
பார்வதியிடம் கெஞ்சிக் கூத்தாடி, காதுலே கிடந்த கம்மலை அவிழ்த்து,
அடகு வச்சு,….யோசனை வருதே….
கல் பதிச்ச கம்மலை எந்த அடகுக் கடைக்காரன் வாங்குறான்…? மூணு
பைசா வட்டி பேசி அதுவும் நடந்து, இப்போது பணம் கையில்…..ஆனால் விதி யாரை விட்டது?
பார்வதியோட அய்யா போய்ட்டாராம்….!பெண் கொடுத்த மாமனார் சாவு….தள்ளியா
வைக்க முடியும்.துஷ்டியை…? அத்தனை காசும் கரைந்துதான் போனது. மனசுக்குள் நெருஞ்சி முள்ளாக
ராமச்சந்திரன். வீட்லே கட்டிக் கிடக்கும் வெள்ளாட்டை விற்று விட வேண்டியதுதான்.
ஆயிற்று. ஆடு நின்ன இடம் சாண வீச்சமும்,
மூத்திர நாத்தமுமாய் இப்போது. எப்டியும் இந்த ஜவுளி ராமச்சந்திரன் கடனை அடச்சிப்புடணும்….சைக்கிளை
நகர்த்தி பெடலில் கால் வைத்தபோது….திரும்பவும் அந்த காலக்கிரகம். சின்னச்சாமி என்னதான்
செய்வான்….? அலறல் சத்தம் பார்வதியுடையது….! என்னாச்சு?
ஐயைய்யோ…எம்புள்ளையப் பாருங்களேன்…உடம்பெல்லாம்
வெட்டு வெட்டுன்னு வெட்டுதே…என்னவோ ஆயிப் போச்சு அவனுக்கு…யாராவது வந்து காப்பாத்துங்களேன்….உள்ளே
ஓடினான்…அண்டை வீடு…அசல் வீடு.அடுத்த தெருவு…என்று ஓடோடி வந்து என்னென்னவோ கை வைத்தியம்
செய்துதான் பார்க்கிறார்கள். எதுவும் பலனில்லை. ராஜபாளையம் ஆஸ்பத்திரியில் வெள்ளாடு
வித்த பணம் முழுவதும் கரைகிறது. புள்ளைய உசிரோட பார்க்க முடியாதோ…என்று பயந்த பயம்
விலகியது.
இனி என்னதான் செய்வது? இப்படி
அடுத்தடுத்து சோதனை வந்தால்…?
மாசி பொறந்து தேதி பதினஞ்சாச்சு…சின்னச்சாமியின் மனதில் குறுகுறுக்கும்
குரல்….
எதிர்ப்படும் நேரங்களில் என்ணண்ணாச்சி…தை பத்துன்னு தவணை
சொன்னீகளே… - கேட்டு விடுவானோ…
கேட்டாலும் பரவாயில்லையே…இவன் கேட்காமலே கொல்லுகிறானே….வாய்
திறந்து ரெண்டு திட்டுத் திட்டுவானாகில், நிலைமையைச் சொல்லி விளக்கவாவது செய்யலாம்.
இயலாமையைச் சொல்லி அழலாம். இவன் வாயே திறக்காமல் அல்லவா போகிறான்…? மனசுக்குள் மறுகுவானோ?
சின்னச்சாமி நாணயஸ்தன்.எப்படிக் கேட்பது என்று நினைப்பானோ..? அடப் பாவி…கேட்டுத் தொலையேன்….நிலைமையையாவது
சொல்லி அழுவேனல்லவா…? கேட்காமல் என்னைக் கொல்லுகிறாயே…! எவ்வளவு நல்லவன். எத்தனை நல்ல
மனசு அவனுக்கு? அவன் குடும்பம் நல்லாயிருக்கணும்….நின்னு தழைக்கணும்….!
உன்னோட யோக்கியதை இம்புட்டுத்தானா?
நீதான் அரிச்சந்திரனாக்கும்….? இளக்காரமாய் எத்தனை கேள்விகள் மனதைப் போட்டு அறுக்கின்றன?
தைப் பொங்கல் சந்தோஷத்திற்கு இவ்வளவு விலையா கொடுக்க வேண்டும்? அப்படி ஒரு சந்தோஷம்
தேவைதானா? யோசிக்கத் தவறி விட்டேனோ? அதைத் தவிர்த்திருந்தாலும்…அடுத்தடுத்து என்னென்ன
நடந்து விட்டன? அதற்கெல்லாம் பணத்திற்கு அல்லாடித்தானே இருப்பேன்…நாயாய், நரியாய்ச்
சுற்றித்தானே களைத்திருப்பேன்….அவன் கடனை அடைக்கிற முயற்சிகளெல்லாம் படிப்படியாய் தூள்
தூளாகிவிட்டனவே…!
உசுராய் வைத்திருக்கும் சைக்கிளை
விற்று அவன் கடனை அடைத்துவிட வேண்டியதுதான். அதற்கு மேல் என்ன சவாரி…இருக்கும் கால்களை
வீசி நடந்து கழிப்போம்…அது என்ன வெறும் சைக்கிளா? குடும்பத்துக் குல தெய்வம். அது வந்த
பின்னால்தான் அலைந்து அலைந்து வேலை பிடிக்க முடிந்தது. அது வீட்டில் நின்றபின்னால்தான்
கொஞ்சமேனும் பைசா பார்க்க முடிந்தது. கொய்யாப்பழ வியாபாரம் அதில்தான் கொடிகட்டிப் பறந்தது.
சைக்கிள் விலைக்குக் கொடுத்த புண்ணியவானே…ஒரு
வேலையையும் அல்லவா கொடுத்தார்…
நம்ப கருசக்காடு….ஏழு குறுக்கம்…பூராவும் வேலிக் கருவேல….
வெட்டிக் காலி பண்ணித் தர்றியா? விறகைக் காசாக்கிட்டு
வந்து பணத்தைக் குடு…..-யோகமான சைக்கிள். ராமச்சந்திரன் கடனை அடைக்க இதவிட்டா வேறுவழி?
மானம் மரியாதையைக் காப்பாத்திக்கணும்….
வேறு வழி? ரூபா 425 க்கு விலை படிந்தது. அட்வான்ஸ் இருபத்தஞ்சு…நாளை
மறுநாள் முழுப்பணம் கையில். ஆசையாய், குடும்பத்தில் ஒன்றாய் இருந்த சைக்கிள்….போகட்டும்…..நாளையிலிருந்து
இந்தக் குல தெய்வம் இன்னொருத்தன் கையில்…..
பலதையும் நினைச்சு…மனசு மறுக…..எதிர்பாரா அந்தத் தருணம்….ராமச்சந்திரன்
சைக்கிளில் வந்து இறங்குகிறான் திடீரென்று.
வாங்க தம்பி…….
மரியாதைக்குக் கூட பதிலில்லை. ஆமண்ணாச்சி…..! சொல்லவில்லையே…!
ரொம்ப காலம் ஊமையாயிருந்த ராஜா மகன் பேச ஆரம்பித்து, ஏம்மா…எப்போ நீ அத்தையைப்போல தாலியறுப்பே…!
என்று கேட்டானாம். அந்தக் கதை இப்போது இங்கே….
வாங்குன கடனைக் கொடுக்கிறதா நெனப்பிருக்கா…இல்ல நாமம் போடத்
திட்டமா?
என்ன தம்பி இப்டிப் பேசுறீக….உங்களப் பத்தி எத்தனை பெருமையா
நினைச்சிட்டிருந்தேன்…உங்க முதலை…ஒத்தயடியில நாளைக்குக் கொண்ணாந்து தர்றேன்…உங்க முதலுக்கு
நான் பொறக்கல்லே…
யார் முதலுக்கு யார் பொறந்ததுன்னு யாருக்குத் தெரியும்?
என்னவொரு தவறான பேச்சு? சின்னச்சாமிக்கு சுரீரென்கிறது. நெருப்பு
வார்த்தைகள். பிறப்பையே சந்தேகிக்கும், தாயின் கற்பையே தவறாகப் பேசும் பேச்சு.
வார்த்தைகளை அளந்து பேசுப்பா…சிந்தினா அள்ள முடியாது….சின்ன
வயசுக்காரன்கிட்ட கடன் வாங்கினது எந்தப்புன்னு இப்பல்ல புரியுது….எம்புத்திய செருப்பால
அடிக்கணும்….
பெரிய சத்தியவான் இவரு….காறித் துப்புகிறான் ராமச்சந்திரன்.
மரியாதயா வீடு போய்ச் சேரு…நாளை ஒந்துட்டு உன் வீடு தேடி
வரும்….
மரியாதயாப் பேசலன்னா…என்ன செய்வே….அடிச்சிருவியோ…?
·
வார்த்தைகள் தடிக்கின்றன.கூட்டம் கூடி விடுகிறது. வார்த்தைகளின் உரசல்களில் அனலாய் தீப்பொறிகள்.
ராமச்சந்திரன் சண்டைச் சேவலாய்த் தலையைச் சிலுப்பிக் கொள்கிறான். சுத்தியிருந்தவர்கள்
எதை எதையோ சொல்லி….சமனப்படுத்தி, விலக்கிவிட்டு….சத்தம் போட்டு, சத்தத்தைக் குறைத்து…….நழுவிக்
கலைந்தனர்.
·
மீண்டும்
தனிமையில் ஒத்தையாளாய் சின்னச்சாமி. நாணயத்தைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் அத்தனையும்
வீணாப்போச்சே….எல்லா உண்மைகளும் பொய்யாப்போச்சே….ஊர் சிரிக்கிற நெலமையாகிப்போச்சே…..ஏமாத்துற
அயோக்கியன்னு ஊரு நெனைக்க ஆரம்பிச்சிடுச்சே……
ஆம்பளைஅழக்கூடாது என்று இதுநாள் வரை நினைத்த சின்னச்சாமி
வாய்விட்டு உதடுகள் துடிக்க அழுகிறான்…. அங்கே யாருமில்லை.
·
வாழ்க்கை
மட்டுமே மிச்சமாக இருக்கிறது…!!!
மேலாண்மையின் இந்தப் படைப்பு நம்மைப் பிழிந்தெடுக்கிறது.
உலகில் நல்லவனுக்குத்தான் சோதனை அனைத்தும் வருகின்றன. அத்தனை வேதனைகளையும் தாங்கிக்
கொண்டுதான் வாழ்ந்து கழிக்கிறான். ஆனால் மேலும் மேலும் அவன்தான் சோதிக்கப்படுகிறான்.
வாழ்க்கையே அவமானங்களைச் சுமந்து கழிக்கும் விதியாகி விடுகிறது. நாணயன் சின்னச்சாமி
நம் மனதில் நிலைத்து விடுகிறான்.
-----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக