02 ஜூலை 2019

“ஒரு கப் காப்பி” – சிறுகதை – இந்திரா பார்த்தசாரதி = வாசிப்பனுபவம் – உஷாதீபன்


ஒரு கப் காப்பி” – சிறுகதை – இந்திரா பார்த்தசாரதி       
வாசிப்பனுபவம் – உஷாதீபன்


வெளியீடு:- இந்திரா பார்த்தசாரதி கதைகள்-தொகுதி-2 (கிழக்கு பதிப்பகம்,சென்னை-17)
       காலையில் எழுந்தவுடனே நம் எல்லோருக்கும் காபி சாப்பிட்டாக வேண்டும். சிலருக்கு பெட் காபி. அதாவது பல் தேய்க்காமலே…! அது உள்ளே இறங்காமல் எந்த வேலையும் ஓடாது. அதற்குப் பின்தான் பொழுது விடிந்ததாகவே அர்த்தப்படும். இது அனுதினமும் எழுந்தவுடன் தவறாமல் காபி சாப்பிடும் அளவுக்கு வசதி உள்ளவனுக்கு.
       அதற்கே தாளம் போடுபவனுக்கு? – தொண்டைக் குழி நனைய ஒரு வாய் ஊற்ற முடியாமல் கதியற்றுக் கிடப்பவனுக்கு?
       ராஜப்பா அப்படியான ஆள்தான். ஏழை பிராம்மணன். வக்கில்லாதவன். பித்ரு காரியங்களுக்குப் போய் வயிற்றை நிரப்பிக் கொண்டு, கிடைப்பதைக் கொண்டு வந்து கொடுக்கிறான். அது போதும் போதாமையாய் இருக்கிறது. ராத்திரிக் கெட்ட சொப்பனத்தில் தன் கைகள் கழன்று விழுவது போல் கண்டு, வியர்த்துப் போய்க் கிடக்கிறான். வி்ழிப்பு வந்தபோது கைகள் தன் உடம்போடேயே ஒட்டி இருப்பதைக் கண்டு மனம் சமாதானமாகிறது. அந்தக் கைகளினால் அவன் என்றும் உழைத்தது கிடையாது. வயிறுதான் உழைக்கிறது. கல்யாணம் எங்கே, கருமாதி எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறான். கடந்த சில நாட்களாக அதற்கும் வழியில்லை.
ஆனால் பொழுது விடிந்ததும் ஒரு கப் காப்பி சாப்பிட்டாக வேண்டியிருக்கிறது. எங்கு போவது…? வீட்டில் எல்லா டப்பாக்களும் காலி. பால் வாங்கப் பணமில்லை. பக்கத்து வீடுகளில் காபிப்பொடி கடன் வாங்கி இன்னும் திருப்பிக்கொடுத்தாகவில்லை. எந்த மூஞ்சியோடு அவன் மனையாள் எங்கு போய் நிற்பாள்? ஆனால் வாய் இழுக்கிறது. ஒரு வாய் காப்பிக்கு. தொண்டைக்குழி நனையாமல் எதிலும் நாட்டம் செல்ல மாட்டேனென்கிறது.
       மேலத் தெரு பாமா பாட்டிக்கு பிராயச்சித்தம் நடக்கிறது என்று கேள்விப்பட்டு போய் நிற்க, குண்டுக்கட்டாக அவள் எழுந்து உட்கார்ந்து விட்டாளே…! கண்களைத் திறந்து மிரள மிரளப் பார்க்கிறாளே! காரியம் ஆச்சு என்றால் பதினைந்து நாள் சாப்பாட்டிற்குக் கவலையில்லை என்று நினைக்கப் போக, தொண்ணூறு வயதுப் பாட்டி மீண்டு விட்டாள். யமன் பயந்து ஓடி விட்டான். பிராயச்சித்தத்திற்குக் கிடைத்த பணம் வெற்றிலை, சீவல் வாங்கத்தான் போதியது.
    வீட்டுத் திண்ணை ஓரத்தில் படுத்துக்கிடைந்த ஆராமுதுவின் பாடுகூடத் தேவலை. எழுந்து கோயிலைக் கவனிக்கப் போய்விட்டான். பிரம்மச்சாரி. சாய்வுநாற்காலி போல் முதுகும் வயிறு ஒட்டி உள்வாங்கி வளைந்து கிடக்கிறது. எந்தப் பெண் அவனைப் பார்த்து சரி என்பாள்? ஆனால் அவன் பாடு கழிகிறதே..!
       ஒழுங்காகப் படித்திருந்தால் இப்படி எமனை நம்பிப் பிழைப்பு நடத்த வேண்டாம். வடக்கே வைதீகர்களுக்கு கிராக்கி அதிகமாம். பிராமணனாய்ப் பிறந்துவிட்டு மந்திரமும் தெரியாது, தந்திரமும் தெரியாது என்று இருந்தால் வயிற்றை எப்படிக் கழுவுவதாம்? வேறு எந்த்த தொழிலுக்கும் லாயக்கில்லை என்பது தெரிகிறது. இதில் கல்யாணம் வேறு. குடும்பத்தில் என்றைக்கும் தாளம்தான். சோற்றுக்குத் தாளம்.
       தம்பி படித்துவிட்டு உள்ளூரிலேயே எல்.ஐ.சியில் இருக்கிறான். அம்மா போன கையோடு நான்கு பெண்கள் உள்ள அவன் சுதாரித்துக் கொண்டான். விட்டுச் சொல்லிவிட்டான். அன்று முதற்கொண்டு ஒரே வீட்டில் ரெண்டு குடித்தனம். உன் மூணு பொண்ணையும், ஆம்படையாளையும் நீதான் காப்பாத்தணும்…!
       ராஜப்பாவைப் போலவே அவன் ரெண்டு பெண்டுகளுக்கும் படிப்பு ஏறவில்லை. அதுதான் துரதிருஷ்டம். படிப்புமில்லை…பணமுமில்லை. எப்படி அவர்களுக்குக் கல்யாணம் பண்ணுவது?
       இப்பொழுது அதெல்லாமுமா பிரச்னை? ஒரு கப் காப்பி குடித்தாக வேண்டும் முதலில். பிறகுதான் எதுவும் ஓடும். ஒரு கப் காப்பிக்கு வழி உண்டா? அதச் சொல்லு….
       காபிப்பொடி இல்லை. காசு கொண்டுவந்தா காப்பி. இல்லன்னா ஜலத்தை மடக் மடக்குன்னு குடிச்சிட்டுக் கிடக்க வேண்டிதான்…..வீடு வீடாப் போய்க் கடன் வாங்க நான் தயாராயில்லை. அவன் மனைவி சொல்லியாயிற்று.
       வீட்டுக்குள் நுழைய அவன் தம்பி கையில் ஆவி பறக்கும் சூடான காபியோடு பெஞ்சில். அண்ணா வந்துவிட்டான். தவிர்த்துவிட்டா குடிக்கப் போகிறான்? உள்ளே போய்ச் சொல்லி ஒரு டம்ளருக்கு ஏற்பாடு பண்ணமாட்டானா என்ன?
       எழுந்து போனவனைக் காணவேயில்லை. வந்து உட்கார்ந்து கொண்டு அதிகாரமாய் மனைவியைக் காபி கொண்டு வரச் சொல்லுவானோ?  ஊறீம்…அந்தக் கதையெல்லாம் இல்லை போனவன் போனவன்தான். உள்ளே போய் ஒண்டிக் கொண்டுவிட்டான். மூஞ்சியில் முழித்தால்தானே பிரச்னை?
       அபிராமி மாமி ஆத்துலே ராஜராஜேஸ்வரி பூஜை…வைதேகி அங்கதான் போயிருக்கு…காய்கறி நறுக்கிக் கொடுக்க….
       சாப்பாடு போடுவாளோ….? – பாடு கழிஞ்சா சரி…..
       காய் அரிஞ்சு கொடுத்தா போட மாட்டாளா? உங்களுக்கு இல்லை. அதுக்கு…..! பிராம்மணார்த்தத்தை நம்பிக் குடும்பம் நடத்த முடியுமா? ஏதாச்சும் கடையிலே கணக்கு எழுதப் போறது…? எரிந்து விழுகிறாள் மனைவி.
       அவமானமாயிருக்கிறது ராஜப்பாவுக்கு.  எவன்டீ வேலை தர்றேங்கிறாள்? நானா கணக்கு எழுத மாட்டேன்னு சொன்னேன்….?
       அம்பது வயசுவரைக்கும் ஆத்துல சும்மா உட்கார்ந்திட்டு, இப்போ வேலை…வேலைன்னா எவன் தருவான்? கூப்பிட்டு வெத்தல பாக்கு வச்சு அழைப்பானா? நம்ம அதிர்ஷ்டம் ஒரு மாசத்துக்கு எந்த அகத்துலயும் சிரார்த்தம் கிடையாது…..
       ராஜப்பாவை பித்ருக்களின் பிரதிநிதியாக ஆக்கி அவன் வயிற்றுப் பிரச்னையைத் தீர்க்க இந்தக் காரியத்திற்கு அழைத்துப் போனவரே குப்பு வாத்தியார்தான். போகுமிடங்களில் வயிறு நிரம்புகிறது. ஏதோ தட்சிணையும் கிடைக்கிறது. விட்டு விட்டு பத்தியும் பத்தாமலும் கழிகிறது. .
       காபி குடிக்காம என்னமோ மாதிரி இருக்குடி…..! தலை சுத்தறது…
       என்னால போய்க் கடன் வாங்க முடியாது. அப்புறம் சக்கரைக்கு இன்னோராத்துக்குப் போகணும்…அதுக்கு நீங்களே யாராத்துலயாவது போய் ஓசிக் காப்பிக்கு நிக்கலாம் ஒண்ணும் கேவலமில்லே. இனிமே புதுசா கேவலம் வர்றதுக்கு என்ன இருக்கு?
       ராஜப்பாவுக்கு காப்பி குடித்தாக வேண்டும் என்கிற ஆவேசமே வந்து விடுகிறது. காலத்தை அனுசரித்து கோயிலில் தினமும் காபிப் பிரசாதம் கொடுத்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்?
       வெளியில்தான் போய்த் தேட வேண்டும். பஸ்-ஸ்டான்டுப் பக்கம் போனால் யாராவது கண்ணில் படக்கூடும். மாணிக்கத்தின் பழக்கடையில் கணவன் மனைவியாய் ரெண்டு பேர். அட…ஆச்சாபுரம் அனந்து?
       பழைய நண்பனைச் சந்திக்கிறான் ராஜப்பா. அவன் தங்கியிருக்கும் அறைக்குப் போய்ப் பேசுவோம் என்று வந்து விடுகிறார்கள். முதல்ல அவரை ஏதாச்சும் சாப்பிடறேளான்னு கேளுங்கோ…காப்பி சாப்பிடச் சொல்லுங்கோ….என்று மனைவி சொல்ல….அட நீ ஒண்ணு…வேத வித்தா நிக்கிறான் அவன்…கண்ட கண்ட ஓட்டல்கள்லாம் சாப்பிடுவானா? எவ்வளவு ஆச்சாரமான விஷயம் அது என்று நண்பன் சொல்ல…ராஜப்பாவுக்கு வாய் அடைத்துப் போகிறது. கௌரவத்தை விட்டுக் கேட்கக் கூச்சம்.
       நண்பன் அவனை வேதம் சொல்லச் சொல்கிறான் ஆர்வமுடன். அதுக்கு ஒரு வேளை, இடமெல்லாம் கிடையாதா என்று மனைவி தடுக்கிறாள். எனக்கு உன் ஆம்படையா, குழந்தைகளைப் பார்க்கணும்…இன்னைக்கு உங்காத்துலதான் எங்களுக்கு சாப்பாடு…புறப்படு என்று நண்பன் சொல்ல…விபரீதமாகிப் போகிறது ராஜப்பாவுக்கு.
       திடுதிப்னு ஒரு வீட்டுக்குச் சாப்பிடுவோம்னு கிளம்பினா…நல்லாவாயிருக்கு. அங்க எப்டி சூழ்நிலையோ….என்னவோ…என்று மனைவி சரோஜா தடுக்கிறாள்.
       கணவனோ இது டில்லியில்லை. இங்கெல்லாம் எப்பவும் ஒரு வீட்டில் ரெண்டு மூணு பேர் கூடச் சாப்பிடுவதுபோல்தான் தயார் பண்ணுவார்கள். எங்க ஊரை என்ன நினைச்ச? இவன் எங்கயிருக்கானோன்னு நினைச்சிட்டிருக்க…அவனே வந்து நிற்கிற பாக்கியம் கிடைச்சிருக்கு. இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா…ன்னு நான் நினைக்கிறேன்…நீ என்ன ஒண்ணொண்ணுக்கும் ஏதாச்சும் சொல்லிட்டேயிருக்க? கிளம்பு…கிளம்பு…. ….புறப்பட்டு விடுகிறான்.
       முதலில் பார்த்தபோது ஊருக்குப் புதியவர்கள் போல் இருந்தார்களே…கோயிலையும் குளத்தையும் சுற்றிக் காண்பித்து, காபிக்கு வழி பண்ணிக் கொள்ளலாம் என்று நினைத்ததுபோக, இப்போது விபரீதமாய் வந்து நிற்கிறதே விஷயம் என்று மனதுக்குள் பதறுகிறான் ராஜப்பா.
தவிக்கும்  மனதில் என்னவெல்லாம் எண்ணங்கள்? தடுமாற்றங்கள்?  புருஷ சூக்தமாம்…சாம வேதமாம்…யாருக்குத் தெரியும் இதெல்லாம்? அது கிடக்கட்டும்…படிப்பது எதற்காக? பணமுள்ளவனிடம் விலையாவதற்கா?
       இவன் சம்பதிக்க தப்புத் தண்டா செய்வான்…அதற்குப் பிராயச்சித்தம் பண்ண ஒரு பிராம்மணன்…? அதானே…! நான் எவ்வளவோ தேவலை இவனைவிட!வேஷத்திலே எது ஒசத்தி, தாழ்த்தி…?
       என்ன ராசப்பா…போவோமா உங்காத்துக்கு…?
       முன்னமே சொல்லாமக் கொள்ளாம திடுதிப்னு சாப்பாட்டுக்குப் போய் நிற்கிறதா? போய் வேணும்னா பார்த்திட்டு வருவோம்…காப்பி சாப்பிடுவோம்… - இது அவன் மனைவி சரோஜா.
       என்னடீ நீ சொல்றே…வேதவித்து…அவாத்துலே வெறுங்காபி குடிப்பாளா?
       ராஜப்பாவால் இதற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சொல்லிடு…சொல்லிடு.படிக்கும் நம் மனதே துடித்துத்தான் போகிறது. உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான்.
       தோ பாரு…அனந்து…! நான் வேத வித்துமில்லே. ஒரு மண்ணாங்கட்டியுமில்லே…வேத வித்து வேணுமின்னா நீ வேதகாலத்துக்குத்தான் போகணும்….முதல்லே நான் கேட்கிறதைக் கொடு…..அப்புறம் எல்லாத்தையும் விவரமாச் சொல்றேன்….
       அதிர்ச்சியடைந்த அனந்து….பலகீனாய்க் கேட்கிறான்.    என்ன வேணும்?
       ஒரு கப் காப்பி….!
       முடிந்து போகிறது கதை.
       இந்தத் தலைப்பிலேயே இவரது ஒரு தொகுதி உண்டு.  பிறகுதான் முழுத் தொகுதி வந்தது. அந்தக் காலத்திலேயே “ஒரு கப் காப்பி” சிறுகதைத் தொகுதி ரொம்பவும் பிரபலம். பேசப்பட்ட தொகுதி அது.
அத்யயனம் என்பது கற்றுக் கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. அப்படி உரமேற்றுவதுதான் வேதம். வேத பாராயணம் என்பது அப்படியான சிரத்தையான, நியமமான முயற்சி. அது எதுவுமே கைவரப்பெறாமல், முயலாமல், வசதி வாய்ப்பில்லாமல், வயிற்றை நிரப்ப, குடும்ப வறுமையைப் போக்க, ஒரு வேளை, இருவேளையாவது சாப்பிட்டு நிறைவு கொள்ள, வைதீகம் பார்ப்போருக்குத்  துணையாய் அலையும்  ஏழை பிராம்மணர்கள் அநேகம். அவர்களின் வறுமை சொல்லி மாளாத துயரம். பொழுது விடிந்தால் ஒரு வாய்க் காபிக்கு வழியின்றி வாடி நிற்கும் அவர்களில் ஒருவரை இராஜப்பா மூலம் இந்திரா பார்த்தசாரதி இந்தக் கதையில் அழுத்தமாய்ப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அதே சமயம் வேத விற்பன்னரகளாய்த் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் அதை எங்ஙனம் காசுக்கு விலையாக்குகிறார்கள் என்பதையும், சம்பாத்தியம் என்று கிளம்பியவர்கள் தங்கள் தொழிலில் எவ்வளவு தவறுகள் செய்கிறார்கள் என்பதையும் அங்கங்கே தொட்டுக் காட்டி, அதற்கு எதையும் கொலை செய்யாமல் பிழைப்பு நடத்தும் தான் எவ்வளவோ மேல் என்று தன்னைத்தானே சமாதானம் செய்தும் கொள்ளும் ராஜப்பாவின் கதாபாத்திரம்….வாடி வதங்கி ஏங்கி நின்று  அதற்குப்பின் அந்த ஒரு கப் காப்பி அவருக்குக் கிடைக்கிற சந்தர்ப்பம் கூடி வரும்போது  நம் மனதையும் நிறைத்து விடுகிறது. ஐயோ பாவம்…என்று பரிதாபம் கொள்ள வைக்கிறது.      
       எடுத்துக்கொண்ட கருவை எப்படிப் படிப்படியாக நகர்த்திக் கொண்டு போனால் அது அழுத்தம் பெறும் என்று சம்பவங்களையும், உரையாடல்களையும் திறம்படக் காட்சிப்படுத்தும்  இந்திரா பார்த்தசாரதி அவர்களின் எழுத்துத் திறமை…நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறது..
              ----------------------------------------------------------------------------------------

      
      
      

கருத்துகள் இல்லை: